நீங்கள் மறுபிறப்பை நம்புகிறீர்களா?
“நீஇங்கே இந்தியாவில் வளர்ந்துவந்த சமயத்தில் காதலித்த அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணை உனக்கு நினைவிருக்கிறதா?” என்பதாக ஐக்கிய மாகாணங்களில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த தன்னுடைய மகனுக்கு முக்கான்பய் எழுதினார். “இன்னும் சில வாரங்களில் அவளுக்கு திருமணம் நடக்கப்போகிறது. இதை நீ தெரிந்துகொள்ளவேண்டும் என்று நான் நினைத்தேன்.”
இந்தச் செய்தியைப் போய் ஏன் அப்பா மகனிடம் சொல்லவேண்டும்? பல வருடங்களுக்கு முன்பாக அந்தப் பருவவயது காதலைத் தீவிரமாக எதிர்த்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததே இந்த முக்கான்பய்தானே. அதோடு, மகன் ஆறு வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறான். இப்போது அந்தப் பெண்ணோடு எந்தத் தொடர்பும் அவனுக்கு இல்லை என்பதும் முக்கான்பய்க்குத் தெரியும்.
பிறகு ஏன் இந்த அக்கறை? முக்கான்பய் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருந்ததன் காரணமாக இதில் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார்.a முற்பிறவியில் இருவரும் மணமான தம்பதிகளாக இருந்ததால், தற்செயலாக இருவருக்குமிடையே அந்தப் பருவவயது காதல் ஏற்பட்டிருக்குமேயானால், இப்பொழுது திருமணம் செய்துகொள்ளக்கூடிய வயதில் இருக்கும் அவர்களைப் பிரித்து வைப்பது கொடூரமான செயலாக இருக்கும். அந்தப் பெண் இந்த வாழ்க்கையில் மற்றொருவரின் மனைவியாவதற்கு முன்பாக நடக்கவிருந்த திருமணத்தைப்பற்றி முக்கான்பய் வெறுமனே மகனுக்குத் தெரியப்படுத்த விரும்பினார்.
மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நான்கு வயது சிறுமி, பலமுறை வேதனை அனுபவித்ததினால், இந்தியாவில் மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனையில் அநேக தடவை தங்கியிருக்கிறாள். இருதய வால்வு கோளாறு அவளுக்கு பிரச்சினையாக இருந்தது. அந்தப்பிள்ளை வேதனைப்படுவதை அவளுடைய பணக்கார பெற்றோரால் தாங்கிக்கொள்ள முயவில்லை. ஆனால் அவர்கள் இவ்வாறு யோசித்தார்கள்: “இதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இப்படி கஷ்டப்படுவதற்கு காரணம் முற்பிறவியில் இவள் ஏதோவொன்றைச் செய்திருக்க வேண்டும்.”
மறுபிறப்பில் நம்பிக்கை, இந்து மதம், புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் மற்றும் இந்தியாவில் தோன்றின மற்ற மதங்களில் உள்ள கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள்—காதல் விவகாரங்களிலிருந்து கடுமையான வேதனை வரையாக—முற்பிறவியில் அல்லது பிறவிகளில் செய்யப்பட்ட வினைகளின் விளைவுகளாக கருதப்படுகின்றன.
மறுபிறப்பு கோட்பாடு மேற்கத்திய தேசங்களிலுள்ள அநேகருக்கும்கூட கவர்ச்சியாக உள்ளது. அமெரிக்க நடிகை ஷர்லி மெக்லீன் அதை நம்புவதாக காட்டிக்கொள்கிறார். கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரிலுள்ள எழுத்தாளர் லாரல் ஃபெலன் தன்னுடைய 50 மறுபிறப்புகளைப் பற்றிய நினைவு தனக்கிருப்பதாக சொல்கிறார். 1994-ல் சிஎன்என்/யூஎஸ்ஏ டுடேவுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பேட்டி காணப்பட்ட 1,016 பெரியவர்களில் 270-க்கும் மேலானவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்கள். மறுபிறப்பில் நம்பிக்கை என்பது புதிய சகாப்த இயக்கத்திலும்கூட ஒரு பாகமாக இருக்கிறது. ஆனால் இந்த நம்பிக்கையை எந்த அத்தாட்சி ஆதரிக்கிறது?
“முன்பு வாழ்ந்ததைப்பற்றிய நினைவுகள்!” என்பதாக மறுபிறப்பை நம்புகிறவர்கள் சொல்கிறார்கள். இதன் காரணமாக, பாங்காக்கில் மூன்று வயதிலிருந்த ரத்னாவுக்கு “60-களில் இறந்துபோன பக்தியுள்ள ஒரு பெண்ணாக இருந்த முந்தைய வாழ்க்கையின் நினைவுகள்” வர ஆரம்பித்த போது, பெரும்பாலானவர்கள் அவளுடைய காரியத்தை மறுபிறப்பின் நம்பிக்கைக்கு நியாயமான ஆதாரமாக ஏற்றுக்கொண்டனர்.
இருந்தபோதிலும் இதைப்பற்றி ஏராளமான சந்தேகங்களும் உண்டு. மேலும் முந்தைய வாழ்க்கையைப் பற்றிய ஞாபகங்கள் என்பதாக சொல்லப்படுகிறவற்றிற்கு வேறு விளக்கங்களும் சாத்தியமாக இருக்கின்றன.b இந்து மதம்: ஆன்மாவின் விடுதலைக்கு அதன் பொருள் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில், இந்து மத தத்துவஞானி நிக்கிலானந்தா, ‘இறப்புக்குப் பின் ஏற்படும் அனுபவங்களை காரணத்தோடு நிரூபிக்கமுடியாது’ என்பதாக சொல்கிறார். இருந்தபோதிலும், “மறுபிறப்பு பற்றிய கோட்பாடு சாத்தியமற்றதாக இருப்பதைவிட அதிக சாத்தியமானதே” என்பதாக அவர் உறுதியாகச் சொல்கிறார்.
ஆனால் பைபிள் இந்தப் போதனையை ஆதரிக்கிறதா? கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது?
[அடிக்குறிப்புகள்]
a “மறுபிறப்பு” என்பது “அடுத்தடுத்துவரும் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான வாழ்க்கையில் ஆன்மாவின் மறுபிறப்பே ஆகும்; இது மனிதனாக, மிருகமாக அல்லது சில சந்தர்ப்பங்களில் தாவரமாக இருக்கலாம்” என்பதாக த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. பல்வேறு இந்திய மொழி அகராதிகள், மறுபிறப்பு மற்றும் மறு அவதாரத்தை மாற்றி மாற்றி பயன்படுத்துகின்றன.
b 1994, ஜூன் 8, விழித்தெழு! பக்கங்கள் 5-7-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 4-ன் படங்கள்]
முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக இவள் தண்டிக்கப்படுகிறாளா?