யெகோவா—இரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுள்
‘இரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுள் பரலோகங்களில் இருக்கிறார்.’—தானியேல் 2:28, NW.
1, 2. (அ) யெகோவா எவ்விதமாக தம்முடைய மிகப்பெரிய சத்துருவிலிருந்து வித்தியாசப்பட்டவராக இருக்கிறார்? (ஆ) மனிதர்கள் எவ்விதமாக இந்த வித்தியாசத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள்?
சர்வலோகத்தினுடைய உன்னதமான அன்புள்ள கடவுளும், ஒரே படைப்பாளருமான யெகோவா, ஞானமும் நீதியுமுள்ள கடவுள். அவருடைய அடையாளத்தை, அவருடைய செயல்களை அல்லது அவருடைய நோக்கங்களை மறைத்துவைப்பதற்கு எந்த அவசியமும் அவருக்கு கிடையாது. அவருடைய சொந்த நேரத்திலும் அவருடைய சொந்த தீர்மானத்தின்படியும் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். உண்மையான அடையாளத்தையும் உள்நோக்கங்களையும் மறைக்க முயற்சிசெய்யும் அவருடைய சத்துருவாகிய பிசாசாகிய சாத்தானிலிருந்து அவர் இந்த விதத்தில் வித்தியாசப்பட்டவராக இருக்கிறார்.
2 யெகோவாவும் சாத்தானும் நேர் எதிர்மாறானவர்களாக இருப்பது போலவே, அவர்களுடைய வணக்கத்தாரும் இருக்கிறார்கள். சாத்தானுடைய வழிநடத்துதலை பின்பற்றுகிறவர்களை அவர்களுடைய வஞ்சகத்தினாலும் ஏமாற்றுவேலையினாலும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். தங்களை நல்லவர்களாக காண்பித்துக்கொள்ள அவர்கள் முயற்சிசெய்துகொண்டு, அந்தகாரத்திற்குரிய கிரியைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். இந்த உண்மையைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம் என்பதாக கொரிந்திய கிறிஸ்தவர்கள் சொல்லப்பட்டார்கள். “அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” (2 கொரிந்தியர் 11:13, 14) மறுபட்சத்தில், கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை தங்கள் தலைவராக நோக்கியிருக்கிறார்கள். பூமியிலிருக்கும்போது அவர் தம்முடைய தந்தையாகிய யெகோவா தேவனின் ஆளுமையை பரிபூரணமாக வெளிக்காட்டினார். (எபிரெயர் 1:1-3) இதன் காரணமாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம், சத்தியம், ஒளிவுமறைவில்லாமை மற்றும் ஒளியின் கடவுளாகிய யெகோவாவைக் கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கும்கூட தங்களுடைய அடையாளத்தை, தங்களுடைய செயல்களை அல்லது தங்களுடைய நோக்கங்களை மறைத்துவைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை.—எபேசியர் 4:17-19; 5:1, 2.
3. யெகோவாவின் சாட்சிகளாக மாறும் ஆட்கள் ஒரு “இரகசிய உட்பிரிவைச்” சேர்ந்துகொள்ளும்படியாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நாம் எவ்வாறு தவறென நிரூபிக்கலாம்?
3 மிகச்சிறந்தது என்பதாக தாம் அறிந்திருக்கும் சமயங்களில், யெகோவா தம்முடைய நோக்கங்களையும் மனிதர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிராத எதிர்காலத்தையும் பற்றிய நுணுக்கமான விவரங்களை தெரியப்படுத்துகிறார். இந்தக் கருத்தில் அவர் இரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுளாக இருக்கிறார். இதன் காரணமாக, அவரை சேவிக்க விரும்பும் ஆட்கள் இத்தகைய வெளிப்படுத்தப்பட்ட செய்திகளை கற்றுக்கொள்ளும்படியாக அழைக்கப்படுகிறார்கள்—ஆம் துரிதப்படுத்தப்படுகிறார்கள். 1994-ல் ஒரு ஐரோப்பிய தேசத்தில் 1,45,000-க்கும் அதிகமான சாட்சிகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு, ஒரு சாட்சியாகும்படி தீர்மானம் செய்வதற்கு முன்பாக சராசரியாக ஒவ்வொருவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளை தனிப்பட்ட முறையில் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சிசெய்திருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தியது. எந்தக் கட்டாயமுமின்றி தங்களுடைய சொந்த தெரிவுசெய்யும் சுயாதீனத்தின்படி இந்தத் தெரிவை அவர்கள் செய்தார்கள். விருப்பத்திலும் செயலிலும் அவர்கள் தொடர்ந்து சுயாதீனமுள்ளவர்களாகவே இருந்தார்கள். உதாரணமாக, கிறிஸ்தவர்களுக்குரிய உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப்பற்றிய விஷயத்தை சிலரே ஏற்க மறுத்த காரணத்தால், இவர்கள் பின்னால் தாங்கள் தொடர்ந்து சாட்சிகளாக இருப்பதிலிருந்து விலக தீர்மானித்தார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், இவ்வாறு தீர்மானித்த முன்னாள் சாட்சிகளில் பெரும்பாலானோர் சாட்சிகளாக தங்கள் கூட்டுறவையும் செயல்பாடுகளையும் தொடருவதற்கு நடவடிக்கை எடுத்தது அக்கறைக்குரியதாக உள்ளது.
4. உண்மைக் கிறிஸ்தவர்களை எது நிலைகுலைந்துபோகச் செய்ய வேண்டியதில்லை, ஏன் அப்படி?
4 நிச்சயமாகவே, முன்னாள் சாட்சிகள் அனைவரும் மீண்டும் திரும்பிவருவதில்லை; இவர்களில் ஒரு சமயம் கிறிஸ்தவ சபைக்குள்ளே பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருந்த சிலரும் இருக்கிறார்கள். இது நமக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது, ஏனென்றால் இயேசுவை மிகவும் நெருக்கமாக பின்பற்றிவந்தவர்களில் ஒருவனாக இருந்த அப்போஸ்தலன் யூதாஸ்கூட விலகிப் போய்விட்டான். (மத்தேயு 26:14-16, 20-25) ஆனால் கிறிஸ்தவத்தைக் குறித்தே நிலைகுலைந்துபோவதற்கு இது ஒரு காரணமாய் இருக்கிறதா? யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கல்விசம்பந்தமான வேலையைச் செய்வதில் காணும் வெற்றியை இது பயனற்றதாக ஆக்குகிறதா? இல்லவே இல்லை, யூதாஸ் காரியோத்தின் நம்பிக்கைத்துரோக செயல் கடவுளுடைய நோக்கங்களை முழுவதுமாக தடை செய்யாதது போலவே இதுவும் அப்படிச் செய்வதில்லை.
சர்வவல்லமையுள்ளவராய் இருந்தாலும் அன்புள்ளவர்
5. யெகோவாவும் இயேசுவும் மனிதர்களை நேசிக்கிறார்கள் என்பது நமக்கு எப்படி தெரியும், இந்த அன்பை அவர்கள் எவ்விதமாக காண்பித்திருக்கிறார்கள்?
5 யெகோவா அன்பின் கடவுள். அவர் மனிதர்களைப்பற்றி அக்கறையுள்ளவர். (1 யோவான் 4:7-11) உன்னதமான நிலையில் அவர் இருந்தபோதிலும், மனிதர்களைத் தம்முடைய நண்பர்களாக ஆக்கிக்கொள்வதில் அவர் மகிழ்ச்சியைக் காண்கிறார். அவருடைய பண்டைய ஊழியர்களில் ஒருவரைப்பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது . . . அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.” (யாக்கோபு 2:23; 2 நாளாகமம் 20:7; ஏசாயா 41:8) மனிதர்கள் தங்கள் நண்பர்களோடு அந்தரங்கமான விஷயங்களை அல்லது இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வது போலவே, யெகோவாவும் தம்முடைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த விஷயத்தில் இயேசு தம்முடைய தந்தையைப் பின்பற்றினார், ஏனென்றால் அவர் தம்முடைய சீஷர்களை நண்பர்களாக்கிக்கொண்டு அவர்களோடு இரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார். “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று அவர்களிடம் சொன்னார். (யோவான் 15:15) யெகோவாவும் அவருடைய மகனும் அவர்களுடைய நண்பர்களும் பொதுவாக பகிர்ந்துகொண்டிருக்கும் பிரத்தியேகமான தகவல் அல்லது “இரகசியங்கள்,” அன்பு மற்றும் பக்தி என்ற முறிக்கமுடியாத கட்டினால் அவர்களை ஐக்கியப்படுத்துகிறது.—கொலோசெயர் 3:14.
6. யெகோவா ஏன் தம்முடைய எண்ணங்களை மறைத்துவைக்க வேண்டிய அவசியமில்லை?
6 “ஆகும்படி செய்கிறவர்” என்ற அர்த்தத்தையுடைய யெகோவா என்ற பெயர், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர் என்னவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆவதற்கு அவருக்கிருக்கும் திறமையைக் காட்டுகிறது. மனிதர்களைப் போலில்லாமல், தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றாதபடி மற்றவர்கள் அதை தடைசெய்யக்கூடும் என்ற பயத்தின் காரணமாக தம்முடைய எண்ணங்களை மறைக்கவேண்டிய அவசியம் யெகோவாவுக்கு இல்லை. அவரால் தோல்வியடையமுடியாது, ஆகவே அவர் என்ன செய்ய நோக்கங்கொண்டிருக்கிறார் என்பதை தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் அவர் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். அவர் வாக்களிக்கிறார்: “அப்படியே என் . . . வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.
7. (அ) யெகோவா ஏதேனில் என்ன முன்னுரைத்தார், சாத்தான் எவ்விதமாக கடவுளை உண்மையுள்ளவரென நிரூபித்தான்? (ஆ) 2 கொரிந்தியர் 13:8-லுள்ள நியமம் எவ்விதமாக எப்போதும் உண்மையானதாய் நிரூபிக்கிறது?
7 ஏதேனில் நடந்த கலகத்துக்குப்பின் உடனடியாகவே, யெகோவா தமக்கும் தம்முடைய சத்துருவாகிய சாத்தானுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த விவாதத்தின் இறுதியான முடிவைக்குறித்து சுருக்கமாக வெளிப்படுத்தினார். கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட வித்து, நிரந்தரமாக அல்ல ஆனால் மிகவும் வேதனையான நசுக்கப்படுதலை அனுபவிக்கும்போது, சாத்தானோ இறுதியாக சாவுக்கேதுவான நசுக்கப்படுதலை அனுபவிப்பான். (ஆதியாகமம் 3:15) பொ.ச. 33-ல், பிசாசு, அவர் மரிப்பதற்கு காரணமாக இருப்பதன் மூலம் வித்தாக இருக்கும் கிறிஸ்து இயேசுவை உண்மையில் நசுக்கினான். அவ்விதமாகச் செய்வதன் மூலம், சாத்தான் வேதவாக்கியங்களை நிறைவேற்றினான்; அதே சமயத்தில் யெகோவாவை சத்தியத்தின் கடவுளாக நிரூபித்தான்; இது நிச்சயமாகவே அவனுடைய நோக்கமாக இல்லாவிட்டாலும் அப்படிச் செய்தான். சத்தியம் மற்றும் நீதியின்பால் அவன் கொண்டிருந்த வெறுப்பும், அவனுடைய பெருமையான, மனந்திரும்பாத மனப்பான்மையும் சேர்ந்து, அவன் என்ன செய்வான் என்பதாக கடவுள் முன்னுரைத்திருந்தாரோ சரியாக அதையே செய்வதற்கு அவனை வழிநடத்தியது. ஆம், சத்தியத்தை எதிர்க்கும் அனைவருக்கும், சாத்தானுக்கும்கூட, பின்வரும் இந்த நியமம் உண்மையானதாய் நிரூபிக்கிறது: “சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.”—2 கொரிந்தியர் 13:8.
8, 9. (அ) சாத்தான் எதை அறிந்திருக்கிறான், ஆனால் இந்த அறிவு, யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேற்றமடைவதை ஆபத்திற்குள்ளாக்குகிறதா? (ஆ) யெகோவாவை எதிர்ப்பவர்கள் தெளிவான என்ன எச்சரிப்பை அசட்டை செய்கிறார்கள், ஏன்?
8 கடவுளுடைய ராஜ்யம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு, வெளிப்படுத்துதல் 12:12 பொருத்தமாய் இருந்திருக்கிறது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” அவனுக்கு கொஞ்ச காலம் மாத்திரமே உண்டென்பதை அவன் அறிந்திருப்பதானது, அவனுடைய போக்கை மாற்றிக்கொள்ளும்படி செய்விக்கிறதா? அப்படிச் செய்வது யெகோவாவே சத்தியத்தின் கடவுள் என்பதையும் உன்னத அரசராக அவர் மாத்திரமே வணக்கத்துக்கு பாத்திரமானவர் என்பதையும் சாத்தான் ஒப்புக்கொள்வதை அர்த்தப்படுத்துவதாக இருக்கும். இருந்தபோதிலும், யெகோவாவைப் பற்றிய உண்மைகளை அறிந்திருந்தபோதிலும்கூட பிசாசு தோல்வியை ஒப்புக்கொள்ள விருப்பமுள்ளவனாக இல்லை.
9 சாத்தானுடைய உலக அமைப்பின்மீது கிறிஸ்து நியாயத்தீர்ப்பை கொண்டுவரும்போது என்ன சம்பவிக்கும் என்பதை யெகோவா ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறார். (மத்தேயு 24:29-31; 25:31-46) இதன் சம்பந்தமாக, உலக ஆட்சியாளர்களைக் குறித்து அவருடைய வார்த்தை இவ்விதமாக அறிவிப்பு செய்கிறது: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” (1 தெசலோனிக்கேயர் 5:3) சாத்தானுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்கள் தெளிவான இந்த எச்சரிப்பை அசட்டைசெய்துவிடுகின்றனர். அவர்களுக்குப் பொல்லாத இருதயங்கள் இருக்கிறபடியால் அவர்கள் குருடாக்கப்படுகிறார்கள்; இது பொல்லாத வழியிலிருந்து மனந்திரும்பி, யெகோவாவின் நோக்கங்களை முறியடிக்க முயற்சிசெய்யும் தங்களுடைய திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் மாற்றிக்கொள்வதை தடைசெய்கிறது.
10. (அ) எந்த அளவுக்கு 1 தெசலோனிக்கேயர் 5:3 நிறைவேற்றமடைந்திருக்கலாம், ஆனால் யெகோவாவின் மக்கள் எவ்வாறு செயல்படவேண்டும்? (ஆ) விசுவாசமில்லாத ஆட்கள் ஏன் எதிர்காலத்தில் கடவுளுடைய மக்களை எதிர்ப்பதில் அதிக தைரியமுள்ளவர்களாக ஆகக்கூடும்?
10 குறிப்பாக 1986 முதற்கொண்டு, ஐக்கிய நாடுகள் சர்வதேச சமாதான ஆண்டை அறிவித்த அந்தச் சமயத்திலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் பற்றிய பேச்சு உலகம் முழுவதிலும் அடிபட்டுவருகிறது. உலக சமாதானத்தை அடைவதற்காக திட்டவட்டமான படிகள் எடுக்கப்பட்டு அவை ஓரளவான வெற்றியையும் அடைந்திருக்கின்றன. இதுவே இந்தத் தீர்க்கதரிசனத்தின் முழு நிறைவேற்றமாக இருக்கிறதா அல்லது எதிர்காலத்தில் ஏதோவொரு வகையான திடுக்கிடச் செய்யும் அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாமா? யெகோவா தம்முடைய குறித்த காலத்தில் அந்த விஷயத்தைத் தெளிவாக்குவார். இதற்கிடையில், நாம் ஆவிக்குரியப்பிரகாரமாய் விழிப்புள்ளவர்களாய் இருந்து, “தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திரு”ப்போமாக. (2 பேதுரு 3:12) சமாதானத்தையும் பாதுகாப்பையும் பற்றிய இன்னும் அதிகமான பேச்சுவார்த்தைகளோடு காலம் தொடர்ந்துசெல்லுகையில், இந்த எச்சரிப்பைப் பற்றி அறிந்திருந்து, ஆனால் அதை அசட்டைசெய்ய தெரிவுசெய்யும் சில தனிநபர்கள், யெகோவா தம்முடைய வார்த்தையை நிறைவேற்றமாட்டார் அல்லது நிறைவேற்ற முடியாது என்று ஊகித்துக்கொண்டு இன்னும் அதிகமாக எதிர்க்கிறவர்களாக ஆவார்கள். (ஒப்பிடுக: பிரசங்கி 8:11-13; 2 பேதுரு 3:3, 4.) ஆனால் யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்!
யெகோவா பயன்படுத்தும் வழிமூலங்களுக்கு சரியான மரியாதை
11. தானியேலும் யோசேப்பும் யெகோவாவைப்பற்றி என்ன கற்றிருந்தார்கள்?
11 நியோ பாபிலோனிய ஆட்சியாளனாகிய நேபுகாத்நேச்சார் ராஜா, தன் நினைவுக்கு வராத கலங்கடிக்கும் ஒரு சொப்பனத்தை கண்டபோது, அவர் உதவிக்காக கேட்டார். அவருடைய சாஸ்திரிகளாலும், ஜோசியராலும், சூனியக்காரராலும், அவருடைய சொப்பனம் என்ன என்பதையோ அது எதை அர்த்தப்படுத்தியது என்பதையோ அவருக்கு சொல்லமுடியாமல் போனது. இருந்தபோதிலும், கடவுளுடைய ஊழியனாகிய தானியேலால் அதைச் செய்யமுடிந்தது. ஆனால் சொப்பனத்தையும் அதன் பொருளையும் வெளிப்படுத்தியது தன்னுடைய சொந்த ஞானத்தினால் அல்ல என்பதை அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். தானியேல் இவ்வாறு சொன்னார்: “மறைபொருள்களை [“இரகசியங்களை,” NW] வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்.” (தானியேல் 2:1-30) பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கடவுளுடைய மற்றொரு தீர்க்கதரிசியாகிய யோசேப்பு, அதேவிதமாகவே யெகோவா இரகசியங்களை வெளிப்படுத்துகிறவர் என்பதை அனுபவத்தின் மூலம் கண்டார்.—ஆதியாகமம் 40:8-22; ஆமோஸ் 3:7, 8.
12, 13. (அ) கடவுளுடைய மிகப் பெரிய தீர்க்கதரிசியாக இருந்தது யார், நீங்கள் ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்? (ஆ) இன்று “தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்கார”ராக சேவிப்பது யார், நாம் அவர்களை எவ்விதமாக கருதவேண்டும்?
12 பூமியில் ஊழியஞ்செய்த யெகோவாவின் மிகப் பெரிய தீர்க்கதரிசி இயேசு. (அப்போஸ்தலர் 3:19-24) பவுல் விளக்கினார்: “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.”—எபிரெயர் 1:1, 2.
13 யெகோவா பூர்வ கிறிஸ்தவர்களிடம் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக பேசினார், அவர்களுக்கு தெய்வீக இரகசியங்களை தெரியப்படுத்தினார். இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது.” (லூக்கா 8:10) பவுல் பின்னால் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை “கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும்” குறிப்பிட்டு பேசினார். (1 கொரிந்தியர் 4:1) இன்று அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அத்தகையவர்களாகவே சேவித்துவருகிறார்கள்; இவர்கள் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பை உண்டுபண்ணுகிறார்கள்; இந்த அடிமை வகுப்பு அதனுடைய ஆளும் குழுவின் மூலமாக ஏற்ற வேளையிலே ஆவிக்குரிய உணவை அளித்துவருகிறது. (மத்தேயு 24:45-47) சென்ற காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளையும், குறிப்பாக கடவுளுடைய குமாரனையும் நாம் உயர்வாக மதித்தால், இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய மக்களுக்கு மிகவும் அவசியமான பைபிள் தகவலை வெளிப்படுத்துவதில் இன்று யெகோவா பயன்படுத்திவரும் மனித வழிமூலத்தையும்கூட நாம் மதிக்கவேண்டுமல்லவா?—2 தீமோத்தேயு 3:1-5.
வெளிப்படையாகவா இரகசியமாகவா?
14. கிறிஸ்தவர்கள் எப்பொழுது காரியங்களை இரகசியமாக நடத்துகிறார்கள், இவ்விதமாக யாருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்?
14 காரியங்களை வெளிப்படுத்துவதில் யெகோவாவின் வெளிப்படையானத் தன்மை, கிறிஸ்தவர்கள் எப்போதும் எல்லா சூழ்நிலைமைகளின் கீழும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் எல்லாவற்றையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறதா? கிறிஸ்தவர்கள், “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருக்கும்படியாக இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குக் கொடுத்த ஆலோசனையைப் பின்பற்றுகின்றனர். (மத்தேயு 10:16) அவர்களுடைய மனச்சாட்சி வற்புறுத்துகிறபடி அவர்கள் தங்கள் கடவுளை வணங்க முடியாது என்பதாக சொல்லப்பட்டால், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ‘கடவுளுக்கே கீழ்ப்படிந்திருக்கிறார்கள்’ ஏனென்றால் எந்த மனித வழிமூலத்துக்கும் யெகோவாவின் வணக்கத்தை தடைசெய்வதற்கு உரிமை கிடையாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) இது சரியானதே என்பதை இயேசுதாமே காண்பித்தார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. இயேசு அவர்களை [விசுவாசியாத அவருடைய மாம்சப்பிரகாரமான சகோதரர்களை] நோக்கி: நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார். அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.”—யோவான் 7:1, 2, 6, 8-10.
சொல்வதா சொல்லாமல் இருப்பதா?
15. ஒரு இரகசியத்தைக் காத்துக்கொள்வது சிலசமயங்களில் அன்பான காரியமாக இருப்பதை யோசேப்பு எவ்வாறு காண்பித்தார்?
15 சில சந்தர்ப்பங்களில், ஒரு விஷயத்தை இரகசியமாக வைப்பது ஞானமுள்ளது மட்டுமல்லாமல் அன்பான காரியமாகவும்கூட இருக்கிறது. உதாரணமாக, இயேசுவின் வளர்ப்புத் தகப்பனாகிய யோசேப்பு, தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணாகிய மரியாள் கர்ப்பவதியானாள் என்பதை தெரிந்துகொண்டபோது எவ்விதமாக செயல்பட்டார்? நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.’ (மத்தேயு 1:18, 19) அவளை எல்லாருடைய முன்னிலையிலும் ஒரு காட்சிப்பொருளாக ஆக்குவது எத்தனை தயவற்ற காரியமாக இருக்கும்!
16. மறைவாய் வைக்க வேண்டிய காரியங்களைக் குறித்ததில் மூப்பர்களுக்கும், சபையிலுள்ள மற்ற எல்லா அங்கத்தினர்களுக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?
16 சங்கடத்தை அல்லது வேதனையை உண்டுபண்ணக்கூடிய மறைவாய் வைக்க வேண்டிய விஷயங்களை, அதை அறிந்துகொள்ள தகுதியில்லாத ஆட்களிடம் வெளிப்படுத்தக்கூடாது. கிறிஸ்தவ மூப்பர்கள் உடன் கிறிஸ்தவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனையை அல்லது ஆறுதலைக் கொடுக்க வேண்டியிருக்கையில் அல்லது யெகோவாவுக்கு விரோதமாக வினைமையாக பாவஞ்செய்ததற்காக சிட்சிக்கும்போதுகூட இதை அவர்கள் மனதில் வைக்க வேண்டும். வேதப்பூர்வமான முறையில் இந்தக் காரியங்களைக் கையாளுவது அவசியமாகும்; அதில் சம்பந்தப்படாதவர்களிடம் மறைவாய் வைக்க வேண்டிய விவரங்களை வெளிப்படுத்துவது அவசியமற்றதும் அன்பற்றதுமாக இருக்கிறது. நிச்சயமாகவே, கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள், மூப்பர்களிடமிருந்து மறைவாய் வைக்க வேண்டிய தகவலைப் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்ய மாட்டார்கள்; மாறாக, மறைவாய் வைக்க வேண்டிய காரியங்களை இரகசியமாக காத்துக்கொள்ளவேண்டிய மூப்பர்களின் பொறுப்பை மதிக்கிறவர்களாக இருப்பார்கள். நீதிமொழிகள் 25:9 குறிப்பிடுகிறதாவது: “நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.”
17. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவர்கள் ஏன் மறைவாய் வைக்க வேண்டிய விஷயங்களை இரகசியமாக வைத்துக்கொள்கின்றனர், ஆனால் ஏன் அவர்கள் எப்போதுமே அவ்விதமாகச் செய்யமுடியாது?
17 இந்த நியமம் குடும்ப வட்டாரத்திற்குள்ளும் அல்லது நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும்கூட உண்மையாக இருக்கிறது. தவறாக புரிந்துகொள்வதை அல்லது உறவுகள் முறிந்துவிடுவதைத் தவிர்ப்பதற்கு சில விஷயங்களை மறைவாய் வைப்பது இன்றியமையாததாகும். “வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.” (நீதிமொழிகள் 25:23) நிச்சயமாகவே, யெகோவாவிடமும் அவருடைய நீதியுள்ள நியமங்களிடமும் நமக்கிருக்கும் பற்றுறுதியின் காரணமாகவும், தவறுசெய்கிற தனிநபர்கள்பால் இருக்கும் அன்பின் காரணமாகவும், மறைவாய் வைக்க வேண்டிய விஷயங்களையும்கூட எப்போதாவது பெற்றோரிடம், கிறிஸ்தவ மூப்பர்களிடம் அல்லது உரிமையுள்ள மற்றவர்களிடம் சொல்வது அவசியமாயிருக்கலாம். a ஆனால் பெரும்பாலானவர்களின் விஷயத்தில், கிறிஸ்தவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட இரகசியங்களை, தங்களுடையதைக் காத்துக்கொள்வதைப் போலவே மறைவாகவே வைத்துக்கொள்கின்றனர்.
18. நாம் என்ன சொல்லவேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பதைத் தீர்மானிக்க எந்த மூன்று கிறிஸ்தவ குணங்கள் நமக்கு உதவிசெய்யக்கூடும்?
18 சுருக்கமாக சொன்னால், அவசியமாக இருக்கையில் சில விஷயங்களை மறைவாய் வைப்பதன் மூலமும், பொருத்தமாக இருந்தால் மட்டுமே அவற்றை வெளிப்படுத்துவதன் மூலமும் ஒரு கிறிஸ்தவர் யெகோவாவைப் பின்பற்றுகிறார். அவர் எதைச் சொல்லவேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்பதைத் தீர்மானிக்கையில், மனத்தாழ்மையும் விசுவாசமும் அன்பும் அவரை வழிநடத்துகிறது. மனத்தாழ்மையானது தன்னுடைய சொந்த முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவதிலிருந்து அவரை தடைசெய்கிறது; அவர் தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்லிவிடுவதன் மூலமாக அவர்களை கவர்ந்துகொள்ளவோ அல்லது அவரால் சொல்லமுடியாத இரகசியங்களைப்பற்றி சொல்வதற்கு ஆசைகாட்டி அதை திருப்தி செய்யாமலிருக்கவோ முயற்சிசெய்ய மாட்டார். யெகோவாவின் வார்த்தையிலும் கிறிஸ்தவ சபையிலும் அவருக்கிருக்கும் விசுவாசம், கடவுளால் அருளப்பட்ட பைபிள் தகவலை பிரசங்கிக்கவும் அதே சமயத்தில் மற்றவர்களைப் புண்படுத்தக்கூடிய காரியங்களைச் சொல்வதை ஆரம்பத்திலேயே தவிர்ப்பதற்கு கவனமுள்ளவராக இருக்கவும் அவரைத் தூண்டுகிறது. ஆம், கடவுளை மகிமைப்படுத்துகின்ற காரியங்களையும் ஜீவனை அடைவதற்கு மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய காரியங்களையும் வெளிப்படையாக சொல்வதற்கு அன்பு அவரை தூண்டுகிறது. மறுபட்சத்தில், மறைவாய் வைக்க வேண்டிய தனிப்பட்ட காரியங்களை வெளிப்படுத்துவது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அன்பற்ற காரியமாக இருப்பதை உணர்ந்தவராய் அவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்.
19. எந்தச் செயல் உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளங்கண்டுகொள்ள உதவிசெய்கிறது, அது எதில் விளைவடைகிறது?
19 சமநிலையுள்ள இந்த அணுகுமுறை உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளங்கண்டுகொள்ள உதவிசெய்கிறது. பெயர் எதையும் குறிப்பிடாதிருப்பதன் மூலமாகவோ புரியா புதிரான, விளக்கமுடியாத திரித்துவ கோட்பாடு என்ற ஒரு முகத்திரைக்குப் பின்னாலோ கடவுளுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துவைப்பதில்லை. அறியப்படாத கடவுட்கள் பொய் மதத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கின்றன, உண்மை மதத்திற்கு அல்ல. (அப்போஸ்தலர் 17:22, 23-ஐக் காண்க.) யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகள் “தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்கார”ராக இருக்கும் சிலாக்கியத்தை உண்மையில் போற்றுகிறார்கள். இந்த இரகசியங்களை வெளிப்படையாக மற்றவர்களுக்குத் தெரிவிப்பதன் மூலம், நேர்மையான இருதயமுள்ளவர்கள் யெகோவாவின் நட்பை நாடும்படி அவர்களை கவர்ந்திழுப்பதற்கு உதவிசெய்கிறார்கள்.—1 கொரிந்தியர் 4:1; 14:22-25; சகரியா 8:23; மல்கியா 3:18.
[அடிக்குறிப்புகள்]
a 1986, அக்டோபர் 1 காவற்கோபுரம் பிரதியில், “மற்றவர்களுடைய பாவங்களுக்கு உடன்பட வேண்டாம்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஏன் யெகோவா தம்முடைய எண்ணங்களை மறைத்துவைக்க வேண்டிய அவசியமில்லை?
◻ யெகோவா யாருக்கு தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்?
◻ மறைவாய் வைக்க வேண்டிய விஷயங்களைக் குறித்ததில் கிறிஸ்தவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
◻ என்ன சொல்வது என்ன சொல்லாமலிருப்பது என்பதை அறிந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு எந்த மூன்று குணங்கள் உதவிசெய்யும்?
[பக்கம் 8-ன் படம்]
யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்