கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவது எப்படி?
மனிதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த கடவுள் உண்மையிலேயே விருப்பமுள்ளவராக இருக்கிறாரா என சிலர் சந்தேகிக்கலாம். அப்படி அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்றால், எப்படி அவர் தம்மை வெளிப்படுத்துகிறார்?
கடவுளே தம்மை வெளிப்படுத்தினால் தவிர மனிதர் தாங்களாகவே அவரை அறிய முடியாது என ஜான் கால்வின் சரியாகச் சொன்னார்; இவர் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஆவார். இருப்பினும், கடவுள் தம்மை மனிதருக்கு வெளிப்படுத்த உண்மையிலேயே விருப்பமுள்ளவராக இருக்கிறாரா என சிலர் சந்தேகிக்கிறார்கள். அப்படி அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்றால், எப்படி அவர் தம்மை வெளிப்படுத்துகிறார்?
மகத்தான ‘சிருஷ்டிகரான’ யெகோவா ஒவ்வொன்றையும் ஒரு காரணத்தோடுதான் செய்கிறார். மேலும், அவர் ‘சர்வவல்லமையுள்ள தேவனாக’ இருப்பதால், தம்முடைய நோக்கங்களை முழுமையாக நிறைவேற்ற முடிந்தவராகவும் இருக்கிறார். (பிரசங்கி 12:1; யாத்திராகமம் 6:3) அவர் தம்முடைய நோக்கங்களை மனிதருக்கு வெளிப்படுத்த விருப்பமுள்ளவராய் இருந்திருக்கிறார் என்பதை நாம் நம்பலாம். ஏனெனில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸை பின்வருமாறு அவர் எழுதச் சொன்னார்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” கடவுள் தம்முடைய நோக்கங்களை தம்முடைய ஊழியக்காரர்களுக்கு மட்டுமே அதாவது, அவரை நெஞ்சார நேசிப்பவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக அவர் சொல்வதைக் கவனியுங்கள். அவர் இப்படிச் செய்வது நியாயமானது, அல்லவா? உங்கள் இரகசியங்களை யாரிடம் சொல்வீர்கள்? யாரிடம் வேண்டுமானாலும் சொல்வீர்களா அல்லது நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே சொல்வீர்களா?—ஆமோஸ் 3:7; ஏசாயா 40:13, 25, 26.
கடவுளுடைய ஞானமும் அறிவும் மனத்தாழ்மை உள்ளவர்களிடம் பயபக்தியை ஏற்படுத்துகிறது; அத்தகைய பயபக்தி ஏற்படுவது சரியானதே. தனி நபர்களாக அவருடைய ஞானத்திலிருந்தும் அறிவிலிருந்தும் பயன் அடைய விரும்பினால் நமக்கு அத்தகைய பயபக்தி இருந்தால் மட்டும் போதாது. அவர் சிந்திக்கும் விதத்தை அறிந்துகொள்ள நமக்கு தாழ்மை உள்ளம் வேண்டுமென பைபிள் பின்வருமாறு வலியுறுத்துகிறது: ‘உன் செவியை ஞானத்திற்குச் சாய். உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப் பண்ணு. . . . என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழை. அதை வெள்ளியைப்போல் நாடு.’—நீதிமொழிகள் 2:1-4.
இத்தகைய முயற்சியை எடுக்கும் மனத்தாழ்மையுள்ள நபர் நிச்சயம் கடவுளை அறிந்துகொள்ள முடியும். மேற்குறிப்பிடப்பட்ட நீதிமொழிகள் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.” ஆம், மனதார சத்தியத்தைத் தேடுகிறவர்கள் ‘நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ள’ முடியும்.—நீதிமொழிகள் 2:6-9.
சத்தியத்தைத் தேடி
மத கலைக்களஞ்சியம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நிஜமானது நிஜமற்றது, பலமானது பலமற்றது, மெய்யானது பொய்யானது, அசலானது போலியானது, கலப்படமற்றது கலப்படமானது, தெளிவானது தெளிவற்றது போன்றவற்றையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாத பிற காரியங்களையும் பகுத்தறிய வேண்டிய தேவை மனிதருக்கு உள்ளது.” இந்தத் தேவையைத் திருப்தி செய்துகொள்ள, மனிதர் நீண்ட காலமாய் சத்தியத்தைத் தேடி வந்திருக்கிறார்கள். ‘சத்தியபரர்’ என சங்கீதக்காரன் அழைக்கும் யெகோவா தேவனை ஒருவர் எந்தளவுக்குத் தேடிச் சென்றிருக்கிறாரோ அந்தளவுக்கு அவரைக் கண்டுபிடிப்பதில் அவர் முன்னேறியிருக்கிறார்.—சங்கீதம் 31:5.
மூல எபிரெய மொழியில் யெகோவா என்ற பெயருக்கு நேர்ப் பொருள், “ஆகும்படி செய்கிறவர்” என்பதாகும். (ஆதியாகமம் 2:4, NW அடிக்குறிப்பு) எனவே, கடவுளுடைய பெயரின் அர்த்தமே, படைப்பாளராக அவரிடமும் அவருடைய நோக்கத்திடமும் நம் கவனத்தைத் திருப்புகிறது. எதார்த்தத்தில், யெகோவா என்ற பெயரை அறிந்து, அதைப் பயன்படுத்துவது மெய் மதத்தை அடையாளங்காட்டும் ஓர் அம்சமாக விளங்குகிறது. இந்த உண்மையை இயேசு நன்கு அறிந்திருந்தார். கடவுளிடம் ஜெபிக்கும்போது தம் சீஷர்களைக் குறித்து பின்வருமாறு அவர் கூறினார்: “நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன்.”—யோவான் 17:26.
பூர்வத்தில் வாழ்ந்த யோசேப்பு என்ற எபிரெயர் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்பட்டார்; கடவுளுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருந்ததால் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவர் இவ்வாறு சொன்னார்: “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?”—ஆதியாகமம் 40:8; 41:15, 16.
பல நூறாண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனை ஆண்ட நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு கனவு கண்டார்; அவரிடமிருந்த ஞானிகள் யாரும் அதன் அர்த்தத்தை அவருக்குச் சொல்ல முடியாமல் போனது. அப்போது தானியேல் தீர்க்கதரிசி ராஜாவிடம் இவ்வாறு சொன்னார்: “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசி நாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்.”—தானியேல் 2:28.
யெகோவா தேவனைப் பற்றிய ஞானமும் அறிவும் அவரைச் சேவிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை யோசேப்பு, தானியேல் ஆகியோரின் உதாரணங்கள் காட்டுகின்றன. கடவுளுடைய தயவைப் பெற விரும்பினால், முன்பு நாம் நம்பி வந்த கருத்துகளை விட்டொதுக்க வேண்டுமென்பது உண்மைதான். முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக ஆனபோது அதைத்தான் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள், யூத சமுதாயம் வகுத்த சட்டங்களுக்கு மரியாதை காட்டும்படியும் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படியும் வளர்க்கப்பட்டிருந்ததால், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இந்த இயேசுவே, ‘வரப்போகிற நன்மைகளின் பொருளாயிருந்த’ நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். (எபிரெயர் 10:1; மத்தேயு 5:17; லூக்கா 24:44, 45) நியாயப்பிரமாணத்தின் இடத்தை ‘கிறிஸ்துவினுடைய பிரமாணம்’ ஏற்றது; இது நியாயப்பிரமாணத்தைவிட மிக மேம்பட்டது.—கலாத்தியர் 6:2; ரோமர் 13:10; யாக்கோபு 2:8.
கடவுளிடமிருந்து விலகியிருக்கிற உலகத்தில் நாம் அனைவரும் பிறந்திருக்கிறோம். முதல் மனித பெற்றோரிடமிருந்து பாவத்தை சொத்தாகப் பெற்றதால் பிறக்கும்போதே நாம் கடவுளுடைய பகைவர்களாக இருக்கிறோம்; அவருடைய நோக்கங்களைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறாதவர்களாய் இருக்கிறோம். அதோடு, வஞ்சிக்கிற இருதயத்தையும் பெற்றிருக்கிறோம். (எரேமியா 17:9; எபேசியர் 2:12; 4:18; கொலோசெயர் 1:21) எனவே, கடவுளுடைய நட்புறவைப் பெறுவதற்கு அவர் சிந்திக்கும் விதத்தில் நாம் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல.
பொய் மத கருத்துகளை அல்லது பழக்கவழக்கங்களை ஒதுக்கித்தள்ளுவது கடினமாய் இருக்கலாம்; அதுவும் சிறுவயதிலிருந்தே அவற்றில் ஊறிப்போயிருந்தால் கடினமாய் இருக்கலாம். ஆனால், அதே போக்கில் போய்க்கொண்டிருப்பது ஞானமான செயலாகுமா? நிச்சயமாய் இல்லை! ஒருவர் தான் சிந்திக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதும், அதன் மூலம் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதும் நிச்சயமாகவே ஞானமான செயலாகும்.
போதிப்பதற்குக் கடவுள் பயன்படுத்துவோரை அடையாளம் கண்டுகொள்ளுதல்
சத்திய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ப வாழ்வதற்கும் உதவியை நாம் எங்கே பெறலாம்? பூர்வ இஸ்ரவேலில் நம்பகமான, உண்மையான நபர்களைப் பொறுப்பான ஸ்தானங்களில் பயன்படுத்துவதன் மூலம் ஜனங்களைக் கடவுள் வழிநடத்தினார். அதேபோல் இன்று கிறிஸ்தவ சபையின் தலைவராகிய கிறிஸ்து, உள்ளப்பூர்வமாய் சத்தியத்தைத் தேடுபவர்களை வழிநடத்துகிறார். தமக்கு நம்பகமான, உண்மையான ஊழியர்கள் அடங்கிய தொகுதியை அவர் பயன்படுத்துகிறார்; இந்தத் தொகுதியில் உள்ளவர்களே சத்தியத்தை ஆர்வத்துடன் தேடுகிறவர்களை வழிநடத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள். (மத்தேயு 24:45-47; கொலோசெயர் 1:18) அப்படியானால், போதிப்பதற்குக் கடவுள் யாரைப் பயன்படுத்துகிறார் என்பதை ஒருவர் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்?
இயேசு கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள் அவர் மனிதராக இருக்கையில் வெளிக்காட்டிய அதே பண்புகளைத் தாங்களும் வெளிக்காட்ட முயற்சி செய்கிறார்கள். துன்மார்க்கம் பெருகி வரும் இந்த உலகில் அத்தகைய ஆன்மீக பண்புகளை இந்த ஊழியர்கள் விசேஷமாக வெளிக்காட்டுவது, இவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது. (பக்கம் 6-ல் உள்ள பெட்டியைக் காண்க.) உங்களுடைய மதத்தில் உள்ளவர்களோ உங்கள் அக்கம்பக்கத்தாருடைய மதங்களில் உள்ளவர்களோ இத்தகைய பண்புகளை வெளிக்காட்டுகிறார்களா? பைபிளின் உதவியோடு இந்த விஷயத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீங்கள் செலவிடும் நேரமும் முயற்சியும் தகுந்ததே.
பைபிள் படிப்பு ஏற்பாட்டின் மூலம் இதைச் செய்யும்படி எங்கள் வாசகராகிய உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கடந்த வருடம், யெகோவாவின் சாட்சிகளுடன் இவ்வாறு பைபிளைப் படிப்பதன் மூலம், 235 நாடுகளில் சராசரியாக 60,00,000 பேர் தனிநபர்களாகவோ குடும்பமாகவோ பயன் அடைந்தார்கள். கடவுள் தரும் ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்வது முடிவில்லா பயணத்தைப் போன்றது; இது திருப்தியையும் பலனையும் தருகிறது. கடவுளைப் பற்றிய ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தை நீங்கள் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? இந்தப் பயணத்தை ஆரம்பித்ததற்காக நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள். ஆம், நாம் கடவுளை உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும்!
[பக்கம் 6-ன் பெட்டி]
கடவுளுக்குப் பிரியமாக நடப்பவர்கள் . . .
அரசியல் சண்டை சச்சரவுகளில் நடுநிலைமை வகிக்கிறார்கள்.—ஏசாயா 2:4.
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் நல்ல கனிகளைப் பிறப்பிக்கிறார்கள்.—மத்தேயு 7:13-23.
தங்கள் மத்தியில் உண்மையான அன்பை வெளிக்காட்டுகிறார்கள். —யோவான் 13:35; 1 யோவான் 4:20.
உலகெங்கிலும் ஒரே விதமாய்ப் பேசுகிறார்கள்.—மீகா 2:12.
அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தாரின் தவறான மனப்பான்மைகளையும் நடத்தையையும் பின்பற்றாதிருக்கிறார்கள்.—யோவான் 17:16.
சத்தியத்தை அறிவித்து, சீஷராக்குகிறார்கள். —மத்தேயு 24:14; 28:19, 20.
ஒருவருக்கொருவர் உற்சாகத்தைப் பெற, தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.—எபிரெயர் 10:25.
சர்வதேச அளவில் ஒற்றுமையுடன் கடவுளைத் துதிக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 10.
[பக்கம் 7-ன் படங்கள்]
தனி நபராக, குடும்பமாக, சபையாக கடவுளைப் பற்றிய அறிவைப் பெற முடிகிறது