ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
யெகோவாவின் தேவராஜ்ய அமைப்புக்குள் ஓடி அடைக்கலம் புகுதல்
வெகுகாலத்திற்கு முன்பாக, தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு எழுதும்படி ஏவப்பட்டார்: ‘சமுத்திர தீவுகளில் யெகோவாவை அவர்கள் மகிமைப்படுத்த வேண்டும்.’ (ஏசாயா 24:15, தி.மொ.) ‘இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்’ என்று இயேசு சொன்ன ‘குடியிருக்கப்பட்ட பூமியின்’ பாகமாக, சமுத்திர தீவுகளை யெகோவாவின் சாட்சிகள் கருதுகிறார்கள்.—மத்தேயு 24:14; மாற்கு 13:10; NW.
டஹிடியின் வடகிழக்கில் ஏறக்குறைய 1,400 கிலோமீட்டர் தூரத்தில் மார்கியூசஸ் தீவுகள் உள்ளன. தென் பசிபிக் பெருங்கடலில், பிரெஞ்சு பாலினீஷியா என்று அழைக்கப்படுகிற, நெடுந்தொலைவிலுள்ள தீவு கூட்டங்களின் பாகமாக அவை இருக்கின்றன. எரிமலை களிம்பைக்கொண்ட வளமான மண்ணுடனும், வெதுவெதுப்பானதும் ஈரக்கசிவுள்ளதுமான தட்பவெப்ப நிலையுடனும், தாவர வளர்ச்சி இந்தத் தீவுகளில் செழித்தோங்குகின்றன. எனினும் மார்கியூசஸ் தீவுகள், மற்றொரு வகையான கனியையும் தந்துகொண்டிருக்கின்றன. ஹீவா ஓவா தீவில் ராஜ்ய செய்தியை ஏற்ற ஒரு குடும்பத்தின் காரியத்தைக் கவனியுங்கள்.
ஜீனும் அவருடைய மனைவி நாடீனும், தாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த மேற்கு ஐரோப்பாவின் நாகரிக சமுதாயம் என்றழைக்கப்பட்ட சமுதாயத்தில் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர். ஆகையால் அந்த ஓயா சந்தடியான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, தங்கள் பிள்ளையுடன் மார்கியூசஸ் தீவுகளுக்கு இடம் மாறிச் செல்லும்படி அவர்கள் தீர்மானித்தார்கள். மூங்கில்களைக்கொண்டு கட்டியமைக்கப்பட்ட அவர்களுடைய புதிய வீடு, நெடுந்தொலைவிலிருந்த தனி ஒதுக்குப்புறமான ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. தங்களுக்கு மிக அருகிலிருந்த அயலாரை எட்டுவதற்கு, கரடுமுரடான மலைப்பாதை ஒன்றின் வழியாக இரண்டு மணிநேரம் நெடுந்தூரம் அவர்கள் நடக்க வேண்டியிருந்தது. ஒரு மருத்துவரையும், பள்ளியையும், பொதுவிற்பனை கடையையும் உடைய மிக அருகிலுள்ள கிராமம், ஜீப்பில் பயணப்பட்டால் மூன்று மணிநேரம் எடுக்கும் தொலைவில் இருந்தது.
ஜீனும் நாடீனும் மதத்தில் அக்கறையுடையோராக இல்லை. எனினும், உயிரின் தொடக்கத்தைப் பற்றி கலந்துபேசுவார்கள். பரிணாமத்தின் சிக்கலான கோட்பாடுகளைப்பற்றி அடிக்கடி விலாவாரியாக பேசுவார்கள். ஆனால், அந்தக் கோட்பாடுகளில் ஒன்றும் அவர்களுக்கு மனத் திருப்தியைக் கொண்டுவரவில்லை.
ஆறு ஆண்டுகள் ஒதுக்குப்புறத்தின் தனிமையில் வாழ்ந்த பின்பு, யெகோவாவின் சாட்சிகள் இருவர் வந்து சந்திக்கையில் ஆச்சரியமடைந்தனர். அருகிலிருந்த கிராமத்தாரிடமிருந்து இந்தச் சாட்சிகள், ஜீனையும் நாடீனையும் பற்றி கேள்விப்பட்டிருந்தனர். இயல்பாய், பரிணாமக் கோட்பாட்டின்பேரில் கலந்துரையாடுவதற்கு அவர்கள் பேச்சு வழிநடத்தினது. அந்தத் தம்பதிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியுண்டாக, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, உயிர்—எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை அவர்கள் கொண்டுவந்திருந்தனர். உயிர் எப்படி இங்கு வந்தது என்பதைப் பற்றி முழு விவரமான ஆராய்ச்சியை அளித்த ஒரு புத்தகத்தை ஏற்பதில் ஜீனும் நாடீனும் மகிழ்ச்சியடைந்தனர்.
சிறிது காலத்திற்குப் பின், அவர்களுடன் பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகாலமாக, ஜீனும் நாடீனும் படிப்படியாக முன்னேறிக்கொண்டே வந்தார்கள். சீக்கிரத்தில், இந்தப் பூமி முழுவதும் ஒரு பரதீஸாக்கப்படும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய குடும்பம் மூன்று பிள்ளைகளை உடையதாகப் பெருகின பின்பு, ராஜ்ய மன்றத்தில் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராகும்படி நான்கு மணிநேரங்கள் பயணப்படுவது மிகக் கடினமாகியது. எனினும், ஆஜராவதிலிருந்து அது அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை. முடிவில் ஜீனும் நாடீனும், யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதலினால் அடையாளப்படுத்தினர். தலைமை கிராமத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் அவர்கள் இதைச் செய்தனர். அங்கே ஆஜரானோரின் உச்ச எண்ணிக்கை 38!
ராஜ்ய பிரஸ்தாபிகளின் ஒரு சிறிய தொகுதிக்கு உதவிசெய்வதற்காக, இந்தக் குடும்பத்தினர், தனியே ஒதுக்கமாயிருந்த தங்கள் வீட்டை விட்டு வேறிடம் மாறிச்செல்லும்படி தீர்மானித்தனர். ஏறக்குறைய ஆயிரம் குடியிருப்பாளர்கள் அடங்கிய ஒரு கிராமத்துக்கு இடம் மாறிச் சென்றனர். அங்கே, யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில் ஓர் உதவி ஊழியராக ஜீன் இப்போது சேவிக்கிறார். முன்பு, நாகரிக சமுதாயத்தின் பிடியிலிருந்து தப்பிக்கொள்ளும்படி தீவுகளுக்கு ஓடின இந்தக் குடும்பத்தினர், ஒரே உண்மையான புகலிடமாகிய யெகோவாவின் தேவராஜ்ய அமைப்பைக் கண்டடைந்ததை ஒரு சிலாக்கியமாகக் கருதுகின்றனர்.