ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
பைபிள் சத்தியங்கள் அயர்லாந்தில் தொடர்ந்து பிரசங்கிக்கப்படுகின்றன
இயற்கை காட்சி நிறைந்த அயர்லாந்து தேசம் சமீப ஆண்டுகளில் மிகுதியான கலவரம் நிகழக்கூடிய இடமாக இருந்திருக்கிறது. அதே சமயத்தில், யெகோவாவின் சாட்சிகள் அவர்களிடம் கொண்டுவந்துள்ள பைபிளின் நம்பிக்கைக்குரிய செய்திக்கு சாதகமாக அயர்லாந்து நாட்டவர் பிரதிபலித்திருக்கின்றனர். அயர்லாந்திலிருந்து வரும் பின்வரும் அனுபவங்கள் இதை உறுதிசெய்கின்றன.
◼ டப்ளினில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரும் அவருடைய இளம் மகளும் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் பங்குகொண்டிருந்தனர். அவர்கள் கேத்தி என்ற பெயருடைய ஒரு பெண்ணை சந்தித்தனர், அவள் தன் அநேக பிள்ளைகளோடு மிகவும் வேலையாய் இருந்தாள். எவ்வாறு பிரசங்கம் செய்வது என்பதைக் கற்றுக்கொண்டிருந்த தன்னுடைய மகள் அவளோடு சுருக்கமான செய்தியை பகிர்ந்துகொள்ளலாமா என்று சாட்சி கேட்டார். கேத்தி ஒப்புக்கொண்டாள், அந்தச் சிறுமி ஒரு தெளிவான, நன்கு சிந்தித்து தயாரிக்கப்பட்டிருந்த பிரசங்கத்தை அளித்தாள். அந்தச் சிறுமி வெளிப்படையாக காண்பித்த உண்மைத்தன்மையையும் மரியாதையையும் பார்த்த கேத்தி மிகவும் கவரப்பட்டாள், பைபிள் துண்டுப்பிரதியை அளித்தபோது அதை அவள் ஏற்றுக்கொண்டாள்.
பின்னர் கேத்தி தன்னைச் சந்தித்த இளம் பெண்ணின் நல்ல தயாரிப்பையும் நன்னடத்தையையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாள். “ஒரு சிறு பெண் அப்படிப்பட்ட ஆர்வத்துக்குரிய செய்தியை தன்மீது கவனத்தை ஈர்த்துக்கொள்ளாமல் பகிர்ந்துகொள்ள முடிந்ததைக் குறித்து நான் மிகவும் கவரப்பட்டேன்,” என்று அவள் கூறினாள். “அடுத்தமுறை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தால் நான் அவர்களுக்கு செவிகொடுத்துக் கேட்பேன் என்று நான் தீர்மானித்தேன்.”
இதற்கிடையில் கேத்தி, கார்க் மற்றும் கெரி மாவட்டங்களின் எல்லைக்கு அருகே தென்மேற்கு அயர்லாந்திலிருந்த சிறிய பட்டணத்துக்கு மாறிச்சென்றாள். அதற்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகள் அவளுடைய வீட்டுக்கு வந்தனர், அவள் அவர்களை உள்ளே அழைத்தாள். அவள் பைபிளை ஒழுங்காக படிப்பதற்கு ஏற்றுக்கொண்டாள், இப்போது தன் பிள்ளைகளில் அநேகரோடு சபைக் கூட்டங்களுக்கு ஆஜராகிறாள். அந்தச் சிறுமி தன்னோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்காக காட்டிய மெய்யான ஆர்வத்தைக் குறித்து கேத்தி நன்றியுள்ளவளாய் இருக்கிறாள்.
◼ டுலமோர் என்ற பிராந்தியத்தில், ஜீன் என்ற பெயருடைய ஒரு பெண்ணோடு ஏழு வருடங்களுக்கு மேல் சாட்சிகள் பைபிள் கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் அவள் ஆர்வம் காண்பித்து பிரசுரங்களை ஏற்றுக்கொண்டாள், ஆனால் மற்ற சமயங்களில் அவளுடைய ஆர்வம் குறைவாய் இருந்தது. ஒருநாள் ஃபிரான்சஸ் என்ற சாட்சியும் அவளுடைய தோழியும் ஜீனை சந்தித்தனர், அப்போது அவள் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. “நாங்கள் எதைப்பற்றி பேசினாலும் அவள் மிகவும் எரிச்சலடைந்தாள். இறுதியில் அவள் மரியாதையற்ற விதத்தில் அவ்விடத்தை விட்டுப்போகும்படி கூறி கதவை படாரென்று மூடினாள்,” என்று அந்தச் சாட்சி சொல்கிறாள்.
அதற்குப் பிறகு மறுபடியும் சென்று சந்தித்தால் அதைப் போன்ற வரவேற்பையே பெற்றுக்கொள்வோமோ என்று ஃபிரான்சஸ் நினைத்தாள். ‘ஒருவேளை அவள் அந்தச் செய்தியில் உண்மையில் அக்கறை காண்பிக்கவில்லையென்றால் அவளைச் சென்று சந்திப்பது இனிமேலும் பிரயோஜனமாயிருக்காது,’ என்று ஃபிரான்சஸ் நினைத்தாள். இருப்பினும், அவள் அந்த விஷயத்தை தன் கணவன் தாமஸோடு கலந்தாலோசித்தாள், அவர் அதிக நம்பிக்கையோடிருந்தார். அடுத்த முறை அவர்கள் அந்தப் பிராந்தியத்துக்குச் சென்றபோது, ஜீனை மறுபடியும் சந்தித்தனர். அவள் சிநேகப்பான்மையாகவும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் இதழ்களையும் பெற்றுக்கொண்டாள். அதற்குப் பிறகு செய்த சந்திப்புகள் அதே போன்று மகிழ்வளிப்பதாய் இருந்தன, தாமஸும் ஃபிரான்சஸும் அவளோடு ஒரு ஒழுங்கான வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பித்தனர்.
அந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? சாட்சிகளோடு அவள் அந்தச் சமயத்தில் மிகவும் மரியாதையற்ற விதத்தில் நடந்துகொண்டாள், ஏனென்றால் அவள் சமீபத்தில் குழந்தைப் பெற்று அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வந்திருந்தாள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியதன் காரணமாகவும் அதைவிட சிறிது பெரிதாயிருந்த குழந்தைக்கு கரண்டியிலூட்டிக் கொண்டிருந்ததாலும் அவள் இரவில் ஒன்றரை மணிநேரம் மட்டுமே உறங்கினாள். “மதத்தைப் பற்றி பேசுவதில் எனக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை,” என்று ஜீன் கூறினாள்.
இரண்டு மாதங்களுக்குள்ளாக ஜீன் எல்லா சபைக் கூட்டங்களுக்கும் ஆஜராகிக்கொண்டிருந்தாள், நான்கு மாதங்களுக்குள்ளாக அவள் வெளி ஊழியத்தில் பங்குகொண்டிருந்தாள். அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்து பத்து மாதங்களுக்குள்ளாக முழுக்காட்டப்பட்டாள். இப்போது ஜீனின் சொந்த அனுபவமே அவளுக்கு ஊழியத்தில் உதவிசெய்கிறது. அவள் சொல்கிறாள்: “மிகவும் கடுகடுப்பாக நடந்துகொள்ளும் ஒருவரை நான் சந்தித்தால், நான் அதிக புரிந்துகொள்ளும் தன்மையோடு இருக்க முயற்சி செய்கிறேன். நான் அதை எப்போதும் குறித்து வைத்துக்கொள்வேன். நான் திரும்பி செல்வதற்குள் அந்தச் சூழ்நிலை ஒருவேளை மாறலாம்; அந்த நபர் ஒருவேளை நலமடைந்து செவிசாய்க்க அதிக மனமுள்ளவராயிருப்பார்.”