தத்தெடுத்தல்—ஏன் மற்றும் எப்படி?
தத்தெடுக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை பிரிட்டனில் கடந்த 20 ஆண்டுகளில் ஏன் தீவிரமாகக் குறைந்துவிட்டது? இரண்டு காரணங்கள் கூறப்பட்டுள்ளன—சட்டப்பூர்வமாக கருச்சிதைவு செய்துகொள்ள முடிவதும், ஒரு தாய் தன் பிள்ளையை கணவனின்றி வளர்ப்பதை ஏற்றுக்கொள்வதில் அதிகரிப்பும். ஓர் ஒற்றைப் பெற்றோர் குடும்பமாய் இருப்பது இப்பொழுது நவீன சமுதாயத்தில் வெற்றிகரமாய் எதிர்ப்படும் ஒரு சவாலாகக் காணப்படுகிறது.
என்றபோதிலும், வெறுமனே 100-க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் காரியங்கள் வித்தியாசமாய் இருந்தன. க்ரைம் நாவல்களின் ஆங்கில எழுத்தாளர் எட்கர் வாலஸின் தாய் போலி, அவளைப் பணிக்கு அமர்த்தியவரின் மகனால் கர்ப்பமானபோது, அவ்விடத்தை விட்டுப் போய்விட்டு, இரகசியமாய் குழந்தை பெற்றாள். லண்டனிலுள்ள பிலிங்ஸ்கேட் மீன் அங்காடியில் போர்ட்டர் தொழில் செய்யும் ஜார்ஜ் ஃப்ரீமேன் என்பவரின் மனைவியிடம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும்படி பேறுகால உதவியாளர் ஏற்பாடு செய்தபோது, எட்கர் ஒன்பது நாள் குழந்தையாய் இருந்தார். ஃப்ரீமேன் குடும்பத்தினர் ஏற்கெனவே தங்களுடைய சொந்தப் பிள்ளைகளாக பத்துக் குழந்தைகளைக் கொண்டிருந்தனர், டிக் ஃப்ரீமேன் என்ற பெயரில் எட்கர் வளர்ந்து வந்தார். தன் குழந்தையை வளர்ப்பதில் உதவி செய்வதற்காக போலி ஒழுங்காக பணம் கொடுத்து வந்தார், ஆனால் குழந்தையின் தந்தைக்கு, தனக்கு மகன் இருப்பதைப் பற்றிய எந்தத் தகவலும் தெரிந்திருக்கவில்லை.
இன்று குழந்தைகள் தேவைப்படாதவர்களாய் இருக்கையில், அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பொதுவாக அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. துர்ப்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதால், அல்லது அவர்கள் சரீர மற்றும் மனக் குறைபாடுள்ளவர்களாய் இருப்பதால், அநேக பிள்ளைகள் அவ்விதம் அரசாங்கத்தால் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். போர்க் கொடுமையால் அனாதைகளாய் ஆனவர்களும் கற்பழிக்கப்படுவதன் விளைவாகப் பிறக்கும் குழந்தைகளும், பெற்றோர் தரும் பாசத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்கின்றனர்—ஒரே வார்த்தையில் கூறுகையில், தத்தெடுத்தல்.
தத்தெடுப்பதா, தத்தெடுக்காமல் இருப்பதா?
ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்பது ஒருபோதும் எளிதானதல்ல, மேலும் அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் அவசரமாக தீர்மானம் செய்வதும் ஒருபோதும் ஞானமானதாய் இராது. உங்கள் குழந்தையை நீங்கள் இழந்திருந்தால், தத்தெடுப்பது பற்றிய முடிவான தீர்மானத்தைச் செய்வதற்கு முன்னதாக அந்த அதிர்ச்சியிலிருந்து அல்லது வருத்தத்திலிருந்து மீளும்வரை காத்திருப்பது மிகச் சிறந்ததாய் இருக்கலாம். மலடாயிருப்பதாய்க் கூறப்பட்டுள்ள ஒரு தம்பதியின் விஷயத்திலும் இது உண்மையாய் இருக்கலாம்.
ஒவ்வொரு பிள்ளையும் ஒரு தனித்தன்மையுள்ள பரம்பரைப் பண்பியல்புகளைப் பெறுகிறது. பெற்றோர் தங்கள் சொந்த பிள்ளைகளின் மனச்சாய்வுகளைக் குறித்து பொதுவாக ஆச்சரியமடைகின்றனர், ஆனால் ஒரு குழந்தையின் வம்ச பரம்பரையைப் பற்றி அறியாதிருக்கையில் அதன் மனதடிப்படையிலான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆற்றலை மதிப்பீடு செய்வது கடினம்.
கல்வித்துறையில் சாதனை படைப்பதை அதிக மதிப்புள்ள ஒன்றாகக் கருதுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் தத்தெடுத்துள்ள பிள்ளை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு இசைவாய் இராதபோது நீங்கள் எப்படி உணருவீர்கள்? மனரீதியில் ஊனமுற்ற, அல்லது சரீரப்பிரகாரமாக அங்கவீனமான ஒரு குழந்தையை சமாளிக்கக்கூடிய ஒரு சவாலாகக் காண்பீர்களா?
நீங்கள் முடிவான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னதாக, தத்தெடுக்கும் ஏஜென்ஸிகளைச் சேர்ந்த, அல்லது அரசாங்க சமூக சேவகராயுள்ள தேர்ச்சிபெற்ற ஆட்கள் இதுபோன்ற கேள்விகளை உங்களிடம் கேட்பார்கள். அவர்களுடைய முக்கிய அக்கறையானது, அந்தப் பிள்ளையின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறித்ததாகவே இருக்க வேண்டும்.
நீங்கள் தத்தெடுக்க தீர்மானித்தால் . . .
தெரிந்துகொள்ளப்பட வேண்டிய, தத்தெடுத்தல் பற்றிய விதிகள் மற்றும் ஒழுங்குகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பிரிட்டனில் நூற்றுக்கணக்கான தத்தெடுப்பு சங்கங்கள் உள்ளன, அவை பொதுவாக உள்நாட்டு அரசாங்க அதிகாரங்களோடு சேர்ந்து செயல்படுகின்றன. எல்லா சங்கங்களும் அவற்றின் சொந்த விதிமுறைகளைக் கொண்டுள்ளன.
பிரிட்டனில் குறிப்பாக பிரபலமாய் இருப்பவை, தத்தெடுப்பு விருந்துகளாகும். அச் சந்தர்ப்பங்களில், ஏராளமான எதிர்கால பெற்றோர்கள் தத்தெடுக்கப்படுவதற்காக இருக்கும் குழந்தைகளோடு கலந்திருந்து, தனியொரு குழந்தையை சந்திக்கையில் ஏற்படக்கூடிய உணர்ச்சி சம்பந்தமான பாதிப்பில்லாமல் சந்திக்க முடியும். எதிர்கால பெற்றோர்கள் குறிப்பிட்ட ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க வேண்டாம் என்று தீர்மானிப்பதை அந்தச் சாவகாசமான சூழல் எளிதாக்குகிறது, மேலும் தனிப்பட்ட வகையில் ஒரு பிள்ளை கவனத்திற்கு உட்படுத்தப்படாததால் பிள்ளைகள் ஏமாற்றப்படுவதைக் குறைந்த சாத்தியமாக்குகிறது.
தத்தெடுப்பவர்களுக்கு பொதுவாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுகிறது, பெரும்பாலும் 35 அல்லது 40 வயதை ஒட்டியிருக்க வேண்டும்—சிறு குழந்தைகளைத் தத்தெடுக்கும்போது இது பொருந்துகிறபோதிலும், வளர்ந்த பிள்ளைகளைத் தத்தெடுக்கும்போது அவ்விதம் இருக்க வேண்டியதில்லை. வயது வரம்புகள் எதிர்கால பெற்றோரின் வாழ்நாள் எதிர்பார்ப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது என்பதாக தத்தெடுப்பு சங்கங்கள் கூறுகின்றன. என்றபோதிலும், வயது அதிகரிக்கையில் மதிப்புமிக்க அனுபவமும் அதிகரிக்கும் என்பதை அவை அறிந்திருக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தத்தெடுப்புகள் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட முடியும். இன்று, திருமணமாகாத ஆட்களும்கூட குறிப்பிட்ட பிள்ளைகளைத் தத்தெடுப்பதற்கு வெற்றிகரமாக மனு செய்ய முடிகிறது. மேலுமாக, வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதோ, அங்கவீனமாய் இருப்பதோ எதிர்கால பெற்றோர்களாக மறுக்கப்படுவதற்குரிய அத்தியாவசியமான காரணங்களாய் இல்லை. அடிப்படைக் கேள்வி என்னவெனில், அந்த ஏற்பாடு அந்தப் பிள்ளைக்கு எதை அளிக்கக்கூடும்?
ஒரு தத்தெடுப்பு காலப்போக்கில் முடிவு செய்யப்படும்போதும்கூட, காரியங்கள் சுமுகமாக நடைபெறுவதை நிச்சயப்படுத்துவதற்காக அந்தப் பெற்றோர் ஒழுங்கான ரீதியில் கண்காணிக்கப்படலாம்.
வேறு இனத்திலிருந்து?
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனைச் சேர்ந்த கறுப்புக் குழந்தைகள் கறுப்பு இனத்தைச் சேர்ந்த குடும்பங்களில் தத்துப்பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படுவது கடினமானதாய் இருந்ததன் விளைவாக, அநேகம் பிள்ளைகள் வெள்ளை இனத்தவரைச் சேர்ந்த பெற்றோரிடம் சென்றனர். 1989 முதல் அதே இனப் பின்னணியைச் சேர்ந்த வளர்ப்புப் பெற்றோரிடம் பிள்ளைகள் ஒப்படைக்கப்படுவது பிரிட்டனில் தேசிய கொள்கையாக இருந்துவருகிறது. இவ்விதத்தில் ஒரு பிள்ளை மிக எளிதில் தன் இனத்தையும் பண்பாட்டையும் பற்றி அடையாளம் கண்டுகொள்ளும் என்று உணரப்பட்டது. என்றபோதிலும், இது சில முரண்பாடான சூழ்நிலைகளுக்கு வழிநடத்தியிருக்கிறது.
கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையைத் தத்தெடுப்பதற்காக சில வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் “ ‘கறுப்பர்கள்’ என்பதாக மறுபகுப்பு” செய்யப்பட்டிருக்கின்றனர் என்று சமீபத்தில் தி சன்டே டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்தது. வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் ஒரு கறுப்பு இனத்தைச் சேர்ந்த குழந்தையை எடுத்து வளர்ப்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல, அவர்கள் தற்காலிகமாக அதைப் பராமரிக்கிறார்கள் என்று அது பொருள்படும். ஆனால் சிலகாலம் கழித்து, அக் குழந்தையை நிரந்தரமாக தத்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுமேயானால், அக் குழந்தை மற்றும் பெற்றோர் ஆகிய இரு சாராருக்குமே மன அதிர்ச்சி ஏற்படும்.
ஆறு ஆண்டுகளாக இரு இந்தியக் குழந்தைகளை எடுத்து வளர்த்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், சமீபத்தில் கலப்பு இன தத்தெடுப்பால் ஏற்படும் பிரச்சினை ஒன்றை எதிர்ப்பட்டனர். அந்தப் பெற்றோர் “அக் குழந்தைகள் தங்களுடைய [இனத்தைப் பற்றிய] அடையாளங்களைக் கண்டுகொள்ளச் செய்யப்பட்டு, தங்கள் இனத்தின் ஆரம்பம் மற்றும் பாரம்பரியங்களைப் புரிந்துகொண்டவர்களாய் வளர்க்கப்பட்டு பாதுகாப்பாய் இருப்பதற்காக தங்களாலான முயற்சிகளையெல்லாம் செய்வர்” என்ற புரிந்துகொள்ளுதலோடுதான் அந்த நீதிமன்றம் தத்தெடுக்க அனுமதித்தது என்று தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. இச் சந்தர்ப்பத்தில், தத்தெடுத்த பெற்றோர்கள் ஏற்கெனவே அவ்விதம் செய்துவந்திருந்தனர். அக் குழந்தைகளுக்கு பஞ்சாபி மொழி கற்பிக்கப்பட்டது, மேலும் சில சமயங்களில் தங்கள் உள்ளூர் பாணியில் உடை உடுத்தப்பட்டனர்.
கலப்பின தத்தெடுத்தல் மிக தாராளமாய் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரிட்டனைச் சேர்ந்த சமூக சேவையின் பிரதிநிதி ஒருவரின் கருத்துக்களைப் பலர் ஒத்துக்கொள்வர். “நாம் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம், எடுத்து வளர்ப்பதும் தத்தெடுப்பதும் அதைப் பிரதிபலிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து?
வெளிநாட்டிலிருந்து சிறு பிள்ளைகளைத் தத்தெடுப்பதானது ஓர் ‘அதிகரித்துவரும் வாணிகம்’ ஆக இருப்பதாய் தி இன்டிபென்டென்ட் செய்தித்தாள் கூறுகிறது. கொடுக்கல்வாங்கல் முறையில் சில சட்டப்பூர்வமானதாய் இராமல் இருக்கலாம் என்பதாய் அறிக்கைகள் குறித்துக்காட்டுகிறபோதிலும், பிரிட்டனுக்கு அதிகத்தை வழங்கும் ஒன்றாக கிழக்கு ஐரோப்பா உள்ளது.
உதாரணமாக, முன்னாள் யுகோஸ்லாவியா பிளவுற்றபோது, கற்பழிக்கப்பட்டதன் விளைவாகப் பிறந்த சில குழந்தைகள் கைவிடப்பட்டிருக்கின்றன. மற்றவை, முழுவளர்ச்சியடைந்தால் அந்தக் குழந்தை தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதியளித்த ‘குழந்தை தரகர்களின்’ தலையீடு இல்லாத பட்சத்தில், கருச்சிதைவு செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகின்றன. என்றபோதிலும், மேலை நாட்டு அரசாங்கங்கள் இத்தகைய தத்தெடுத்தலுக்குத் துணைபுரியும் தரகு வேலைக்காக வழங்கப்படும் ஊதியங்களைக் குறித்து கவலைகொள்கின்றன.
மிகவும் கவலைக்குரிய ஒரு காரணமானது, குழந்தை பிறக்கும் சமயத்தில் வழங்கப்படும் பத்திரத்தில் மருத்துவர்கள் மோசடி செய்வது சம்பந்தப்பட்டதாகும். உக்ரேனிலுள்ள சில தாய்மார்களிடம் தங்களுடைய குழந்தைகள் செத்துப் பிறந்தன என்று சொல்லப்பட்டதாக தி ஈரோப்பியன் பத்திரிகை அறிக்கை செய்தது. இக்குழந்தைகள் அதைத் தொடர்ந்து விற்கப்பட்டன என்றும் சொல்லப்பட்டது. பிற தாய்மார்களிடம் தங்கள் குழந்தைகள் மனரீதியில் ஊனமுற்றிருப்பதாகக் கூறப்பட்டது. அப்பேர்ப்பட்ட அழுத்தத்தின்கீழ், கலக்கமடைந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தத்தெடுப்புக்காக எழுதிக் கொடுத்துவிடும்படியாக மிக எளிதில் தூண்டப்படுகின்றனர். இன்னும் பிற குழந்தைகள் அவர்கள் அனுப்பப்பட்ட இடங்களாகிய அனாதை இல்லங்களைச் சென்றடையாமல் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர்.
வளர்முக நாடுகளில் கோபதாபங்கள் எழுகின்றன. உள்நாட்டுக் குடும்பங்கள், ஓர் அயல்நாட்டுப் பண்பாட்டினர் தங்கள் பிள்ளையைத் தத்தெடுக்கும்படி கொடுப்பதற்கு பதிலாக, அவர்களைத் தங்கள் சொந்த நாட்டின் சூழலில் வளர்ப்பதற்கு செல்வச்செழிப்புள்ள மேலை நாடுகள் தங்களுக்கு அதிக உதவியளிப்பவையாய் இருக்க வேண்டும் என்று அவை வாதிடுகின்றன.
காலாகாலமாக பாரம்பரியமாய் இருந்துவரும் நெருங்கிய உறவினர்களைக் கொண்ட குடும்பங்களே அநேக கலாச்சாரங்களில் சமுதாயத்தின் முதுகெலும்பாய் இருப்பதையும் மேலை நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். சாதிப்பிரிவுகளின்படி வாழ்கையில், பெற்றோர் இறந்துவிட்டாலும், ஒரு குழந்தை பொதுவாக கவனிக்காமல் விட்டுவிடப்படாது. தாத்தாபாட்டிமார் போன்ற தன் நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களைத் தவிர, விரிவடைந்துள்ள குடும்பமாகிய பெற்றோரின் உடன்பிறந்தவர்களும் அந்தக் குழந்தையைத் தங்களுடையதாகவே எண்ணுவர், மேலும் வெளி நபர்களால் தத்தெடுக்கப்படுவது தவறாகக் கருதப்படுவதோடு, ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு குறுக்கீடாகவும் நோக்கப்படலாம். a
தத்தெடுப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வது எளிதல்ல, அப்படியே அது முடிவாகியிருந்தாலும், அதை வெற்றிகரமாக்குவதற்கு கடின உழைப்பு அவசியம். ஆனால், நாம் பார்க்கப்போகிறபடி, அளவற்ற இன்பங்களும் அதில் உள்ளன.
[அடிக்குறிப்பு]
a பிற குடும்ப அங்கத்தினருக்கு குழந்தைகளைக் கொடுக்கும் வழக்கத்தைப் பற்றிய முழுமையான ஒரு கலந்தாலோசிப்புக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட தி உவாட்ச்டவர், செப்டம்பர் 1, 1988, பக்கங்கள் 28-30-ஐ காண்க.
[பக்கம் 5-ன் பெட்டி]
என் மகன் என்னைத் தேடி வருவானா?
நான் 11 வயதாயிருக்கையில் என் பெற்றோர் மணவிலக்கு செய்தனர். நான் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில், ஒரு காதல் உறவில் ஈடுபட நேர்ந்தது; அதுவே நான் பாசத்தைப் பெறும் விதமாக இருந்தது. பிறகு நான் கர்ப்பமானபோது அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது மிகவும் பரிகசிக்கத்தக்கதாய் இருந்தது. நானும் என் உடன் மாணவனும் மிகவும் பக்குவமற்றவர்களாய் இருந்தோம். நான் ஒருபோதும் போதைப்பொருட்களையோ, மதுபானத்தையோ, அல்லது புகையிலையையோ பயன்படுத்தியதில்லை, ஆனால் என் நண்பன் LSD-ஐப் பயன்படுத்தினதன் விளைவாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தான்.
நான் கருச்சிதைவு செய்துகொள்ளும்படியாக ஆலோசனை கூறப்பட்டேன், ஆனால் என் அப்பா என்னிடம் பேசி அதை மறுத்துவிடச் செய்தார். நான் கர்ப்பமாயிருப்பதையும் விரும்பவில்லை, அதே சமயத்தில் ஓர் உயிரைக் கொல்லுவதையும் விரும்பவில்லை. 1978-ல் என் மகன் பிறந்தபொழுது, அவன் அப்பா அவனை அடையும் வாய்ப்பைப் பெறாதபடி நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக அவனது அப்பாவின் பெயரை பிறப்பு சான்றிதழில் சேர்க்க வேண்டாமென்று தீர்மானித்தேன். உண்மையில், பிறப்பிலிருந்தே அக் குழந்தையைத் தத்தெடுப்புக்கு ஒத்துக்கொண்டேன்; ஆகவே அவன் என்னிடமிருந்து நேரடியாக பிரிக்கப்பட்டு தற்காலிக கவனிப்பில் போடப்பட்டான். நான் அவனைப் பார்க்கக்கூட இல்லை. பிறகு நான் என் மனதை மாற்றிக்கொண்டேன். தற்காலிக கவனிப்பிலிருந்து என் குழந்தையை எடுத்து நானே வளர்க்க துணிந்து முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அவ்விதம் வளர்க்க முடியவில்லை, ஆகவே நான் கிட்டத்தட்ட மனநோயாளி ஆகிவிட்டிருந்தேன்.
என் மகன் சுமார் ஆறு மாதக் குழந்தையானபோது, தத்தெடுப்புக்கான சட்டம் அங்கீகரிக்கப்படவே, அவனை நான் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. எவரோ என்னைக் கத்தியால் கீறியதுபோன்ற உணர்வைக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. உணர்ச்சிப்பூர்வமாக நான் மரித்துவிட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உளவியல் ரீதியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகுதான் அர்த்தமுள்ள உறவுகளை நான் கொண்டிருக்க முடிந்துள்ளது. நான் வருத்தப்பட முடியவில்லை—என் மகன் சாகவில்லை. ஆனால் அவனைப் பற்றி நினைக்கவும்கூட முடியவில்லை—அவ்விதம் செய்வதற்கு என்னை அனுமதிக்க நானே மறுத்தேன். அது பயங்கரமாய் இருந்தது.
“தத்தெடுப்புக்காக உன் பிள்ளையை நீ விட்டுவிட்டால், உன் பிள்ளையை நீ நேசிக்கவில்லை” என்று மக்கள் கூறுவதைக் கேட்பதுதான் மிகவும் பாதிக்கிறது. ஆனால் என் விஷயத்தில் அது உண்மையாய் இருக்கவில்லை! நான் என் மகனை நேசித்ததன் காரணமாகவே அவனைக் கொடுத்துவிட்டேன்! கடைசி நிமிடம் வரையில், என்னை நானே கேட்டுக் கொண்டேயிருந்தேன்: ‘இவ்வுலகில் நான் என்ன செய்யப்போகிறேன்? நான் என்ன செய்ய முடியும்?’ வேறு வழியே இல்லை. நான் என் மகனை என்னிடம் வைத்து வளர்க்க முயற்சி செய்தால் எழும் பிரச்சினைகளை என்னால் எளிதில் சமாளிக்க முடியாது என்றும் என் குழந்தை சிரமப்படும் என்றும் அறிந்திருந்தேன்.
இங்கிலாந்தில், ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தை சமுதாயம் இப்போது ஏற்றுக்கொள்கிறது—ஆனால் நான் குழந்தை பெற்ற சமயத்தில் அவ்விதம் இல்லை. என் மகனை நான் வளர்த்திருக்க முடிந்தால் நன்றாய் இருந்திருக்குமென நினைக்கிறேன். சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் ஆலோசனைகள் உதவி செய்திருக்கும் என்று கருதுகிறேன், ஆனால் அது இப்போது வெகு பிந்தியாகிவிட்டது. என் மகன் இன்னும் உயிரோடிருக்கிறானா? எவ்விதமான பையனாக அவன் வளர்ந்திருக்கிறான்? 18 வயதில், தத்துப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் போய்த் தேடுவதற்கு சட்டப்பூர்வமான தகுதி பெறுகின்றனர். என் மகன் என்னைத் தேடி வருவானா என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு.—அளிக்கப்பட்டது.
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
அது எங்கள் விஷயத்தில் வெற்றிகரமாய் இருந்தது
பருவவயது பையன்கள் இருவரை எங்களுக்கென்று சொந்தமாகக் கொண்டிருக்கும் நாங்கள், ஒரு திருப்தியான, ஐக்கியப்பட்ட ஆங்கிலேய குடும்பமாய் இருந்தோம். ஒரு மகளை—அதுவும் வேறுபட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவளை—கொண்டிருக்கும் எண்ணம் எங்கள் மனதில் ஒருபோதும் எழுந்ததுகூட கிடையாது. பின்னர் கேத்தி எங்களுடன் சேர்ந்து கொண்டாள். கேத்தி இங்கிலாந்திலுள்ள லண்டனில் பிறந்தாள். அவள் ஒரு ரோமன் கத்தோலிக்காக வளர்க்கப்பட்டாள், ஆனால் ஓர் இளம் பிள்ளையாக, அவளது அம்மாவோடு சேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் ஒருசில கூட்டங்களுக்குச் சென்றாள். என்றபோதிலும், 10-வது வயதில், குழந்தைகள் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டாள்.
அங்கு அவளுக்குக் காரியங்கள் மிகவும் கடினமாக இருந்தாலும், நாங்கள் அவளைச் சந்தித்த இடமாகிய ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு அவளது சொந்த முயற்சியால் வந்தாள். கேத்தி ஒரு சிந்தனைத்திறமுள்ள பிள்ளை. குழந்தைகள் இல்லத்தில் அவளை நானும் என் மனைவியும் சென்று சந்தித்தபோது, மற்ற பிள்ளைகள் போட்டிருந்த பாப் இசை முன்னிலைப் பாடகர்களின் படங்களைப்போல் அல்லாமல், அவளது படுக்கையை ஒட்டிய சுவர், விலங்குகளின் படம், கிராமியக் காட்சிகள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
சில காலத்திற்குப் பின், ஒரு மதிப்பீட்டுக் குழுவினருக்கு முன்னால் கேத்தி ஆஜராக வேண்டியிருந்தது, அந்த இல்லத்திற்கு பதிலாக ஒரு குடும்பத்தோடு சேர்ந்து வாழ அவள் விரும்புவாளா என்று அவர்கள் கேட்டனர். “யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தோடுமட்டுமே!” என்பதாக அவள் பதிலுரைத்தாள். இதைப் பற்றி எங்களிடம் கேத்தி கூறினதோடுகூட, அவள் கூறியிருந்த பதில், அதைப்பற்றி சற்று சிந்தித்துப் பார்க்கும்படி எங்களைச் செய்வித்தது. நாங்கள் கூடுதலான ஓர் அறையைக் கொண்டிருந்தோம். இவ்விதமான பொறுப்பை நாங்கள் ஏற்க முடியுமா? ஒரு குடும்பமாக, அதைப்பற்றி நாங்கள் பேசினோம், ஜெபித்தோம். இந்த அணுகுமுறை—ஒரு பிள்ளையின் கருத்தைக் கேட்பது—சமூக சேவை நிறுவனங்களின் பங்கில் ஒரு புதிய முயற்சியென்றும், பின்னால் பத்திரத்தில் எழுதப்பெற்ற ஒரு பரிசோதனை என்றும் வெகுகாலம் கழித்துதான் நாங்கள் கண்டுபிடித்தோம்.
சமூக சேவை புரிவோர் போலீஸாருடனும் எங்கள் மருத்துவருடனும் கலந்துபேசி எங்களை சரிபார்த்த பிறகு, எங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை எழுதிப் பெற்றுக்கொண்டனர். விரைவில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கேத்தியை ஒரு சோதனை அடிப்படையில் நாங்கள் வைத்திருக்கலாம் என்றும், அவளை நாங்கள் விரும்பாவிட்டால் திருப்பி அனுப்பிவிடலாம் என்றும் எங்களிடம் கூறப்பட்டது! இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, நாங்களோ, அவ்விதம் ஒருபோதும் செய்யமாட்டோம் என்று கூறுவதில் மிகவும் உறுதியுடன் இருந்தோம். நாங்கள் அதிகாரப்பூர்வமாக கேத்தியைத் தத்தெடுத்தபோது அவள் 13 வயதுடையவளாய் இருந்தாள்.
எங்கள் அனைவருக்குள்ளும் இருக்கிற தனித்தன்மையுள்ள பிணைப்பானது இன்னும் தொடர்ந்து வளருகிறது. கேத்தி இப்போது ஒரு பயனியராக (ஒரு முழுநேர ஊழியராக) லண்டனின் வடபகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பிரெஞ்சு சபையோடு சேர்ந்து சேவை செய்கிறாள். பயனியர் செய்வதற்காக எங்கள் வீட்டைவிட்டுப் பிரிந்த ஆண்டில் ஓர் உருக்கமான குறிப்பை எங்களுக்கு எழுதினாள்: “ ‘உங்களுக்கென்று ஒரு குடும்பத்தை நீங்கள் தெரிவு செய்ய முடியாது’ என்பது ஒரு பழமொழி. என்றபோதிலும், நீங்கள் என்னைத் தெரிவு செய்ததற்காக நான் என் இதயப்பூர்வமான நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.”
கேத்தி எங்கள் குடும்பத்தோடு சேர்ந்துகொண்டதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அவளை எங்கள் குடும்பத்தின் ஒரு பாகமாகச் செய்ததானது எங்கள் வாழ்வை வளமாக்கியுள்ளது. அது எங்கள் விஷயத்தில் வெற்றிகரமாய் இருந்தது!—அளிக்கப்பட்டது.
[படம்]
கேத்தி தன் வளர்ப்பு பெற்றோருடனும் சகோதரர்களுடனும்
[பக்கம் 7-ன் படம்]
அநேக பிள்ளைகள் பெற்றோர் தரும் பாசத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஏங்குகின்றன