தத்தெடுத்தல்—அதை நான் எப்படி கருத வேண்டும்?
தத்தெடுத்த பெற்றோர்கள் மணவிலக்கு செய்கையிலோ, அல்லது துணைகளில் ஒருவர் மரிக்கையிலோ பிரச்சினைகள் எழும்புவதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்தத் தத்துப்பிள்ளைதானே மிகப் பெரிய இறுக்கத்தை உணருவதாய் இருக்கலாம். ஏன்?
நம்மைப் பெற்றவர் எவரென்று நம்மில் பெரும்பான்மையோருக்குத் தெரியும். இளம்பருவத்தில் நாம் அவர்களை இழந்திருந்தாலும்கூட, அந்த இணைப்பை நிறைவு செய்வதற்காக நமக்கு அவர்களைப் பற்றிய நினைவுகள் இருக்கின்றன, அல்லது ஒருவேளை சில புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனாலும், பிறந்தவுடன் தத்தாகக் கொடுக்கப்படும் ஒரு குழந்தையைப் பற்றியதென்ன? தத்தெடுப்பு நிறுவனம் அந்தத் தாயைப் பற்றிய விவரங்களை வைத்துக் கொள்கிறது, ஆனால் அந்தத் தகவல் பொதுவாக வயதுவருவதற்கு முன் அக் குழந்தைக்குக் காண்பிக்கப்படுவதில்லை. பிற சந்தர்ப்பங்களில், அந்தத் தாய் தன் சொந்த பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்கிறாள், ஆனால் தந்தையின் பெயரைப் பதிவு செய்வதில்லை. சில குழந்தைகள் கண்டெடுக்கப்படுபவர்கள்—தாங்கள் அறிந்திராத பெற்றோர் அவர்களைக் கைவிட்டுவிட்டிருக்கையில் கண்டெடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உள்ள குழந்தைகள் பந்தம் ஏதும் இல்லாதிருக்கின்றனர்—தங்கள் பின்னணியிலிருந்து அல்லது பூர்வத்திலிருந்து தாங்கள் வெட்டிவிடப்பட்டதாக உணரலாம்.
எந்தளவுக்கு நிலையானது?
மரங்கள் நிலைத்து நிற்பதற்கு நல்ல வேர் அமைப்பு அவசியம். ஒரு முதிர்ந்த அடிமரத்தோடு ஒட்டுப் போடப்பட்ட ஒரு குருத்து செழிப்பாக வளரலாம், ஆனால் அது காய்ந்துபோய், கனிகொடுக்கவுங்கூட தவறலாம். அதேபோன்று, தத்தெடுக்கும் பெற்றோர்கள் தங்களால் முடிந்தளவு நல்ல கவனிப்பையும் ஆர்வப்பற்றுடன்கூடிய அன்பையும் காட்டினாலும், சில பிள்ளைகள் தங்களின் ஆரம்ப வேர்களைவிட்டுத் துண்டிக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து ஒருபோதும் மீண்டு வருவதில்லை.
கேட் என்பவளின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். a மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த அவள், குழந்தையாய் இருந்தபோது, ஓர் அன்பான, அக்கறையுள்ள வெள்ளை இனத்தவரான தம்பதியால் தத்தெடுக்கப்பட்டாள், ஆனால் புதிய சூழ்நிலை அவளுக்குப் பிடிபடவில்லை. 16-வது வயதில், அவள் திரும்பி வராதவளாய் வீட்டை விட்டு வெளியேறினாள். அந்தச் சமயத்தில் இருந்திருந்த கசப்புணர்ச்சியானது நியாயமற்ற வெறுப்புணர்ச்சியாக மாறியது. “என் அம்மா ஏன் உங்களிடம் என்னைக் கொடுத்தாள்?” என்று அவள் அதிகாரத்துடன் கேட்டாள். விசனகரமாக, இந்தக் குடும்பம் அப் பிளவை இணைக்க முடியாமல் போனது.
மெர்வின் பிறப்பிலேயே அரசாங்கத்தால் கவனிக்கப்படும் இல்லத்தில் சேர்க்கப்பட்டு அதன் பிறகு வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவன் ஒன்பதுமாத வயதானபோது, தத்தெடுக்கப்பட்டான். ஆரம்பத்தில் அவனுக்கிருந்த பாதுகாப்பற்ற பின்னணியும் அதோடுகூட ஒரு கலப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஏற்பட்ட தீவிர மனக்கசப்பும் ஒரு கலகத்தனமான மனப்பான்மையாக உருவெடுத்து, அவனுக்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்திக் கொண்டதோடு, அவனைத் தத்தெடுத்து, அவனுக்கென்று மிக அதிகத்தைச் செய்த பெற்றோருக்கு ஆழ்ந்த துக்கத்தையும் வருவித்துக் கொண்டான். “தத்தெடுத்தல் பற்றி எவரேனும் என்னிடம் ஆலோசனை கேட்டால், இப்போது நான் சொல்வேன், ‘அதைப்பற்றி நன்கு யோசியுங்கள்’ என்பதாக” என்று அவனது தாய் கூறினார்.
அதற்கு முரணாக, ராபர்ட் மற்றும் சில்வியாவின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான், அவர்கள் இன்னும் வேறு குழந்தைகளைப் பெற முடியாதவர்களாய் இருந்தனர். “வேறு தேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதைப் பற்றி எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?” என்பதாக அவர்கள் கேட்கப்பட்டனர். சீக்கிரத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த மக்-சி என்ற ஒன்பது மாத பெண்குழந்தையை அவர்கள் தத்தெடுப்பவர்களாய் இருந்தனர். “நான் ஏன் கைவிடப்பட்டேன் என்றும், எனக்கு வேறு சகோதர சகோதரிகள் எவராகிலும் உள்ளனரா என்றும் எப்போதுமே நான் கேட்பதுண்டு. ஆனால், இயற்கையாகவே பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் உள்ள நெருக்கத்தைவிட நான் என்னைத் தத்தெடுத்த அம்மாவிடமும் அப்பாவிடமும் அதிக நெருக்கமாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என்னைப் பெற்றவர்கள் யார் என்று நான் அறிந்திருந்தால், என் பண்பியல்புகளைப் பற்றி இன்னும் சற்று கூடுதலாக புரிந்திருப்பேனேயன்றி, அதுவொன்றும் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்காது” என்று மக்-சி கூறுகிறாள். அவளது வளர்ப்புப் பெற்றோர் தத்தெடுத்தலை சிபாரிசு செய்கின்றனரா? “ஆம்” என்று அவர்கள் கூறுகின்றனர், “ஏனெனில் எங்களுக்கு அது ஓர் அற்புதமான அனுபவமாய் இருந்திருக்கிறது!”
எச்சரிப்புக்கான காரணங்கள்
கிரஹாமும் ரூத்தும் தங்கள் சொந்த மகனோடும் மகளோடும் சேர்ந்திருக்கும்படியாக ஒரு பையன், ஒரு பெண்பிள்ளை ஆகிய இரு பிள்ளைகளைக் குழந்தைப் பருவத்திலேயே தத்தெடுத்திருந்தனர். நான்கு பிள்ளைகளுமே ஓர் ஐக்கியப்பட்ட குடும்பமாக ஒரு மகிழ்ச்சியான சூழலில் வளர்க்கப்பட்டனர். “பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பிள்ளைகள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ள வீட்டைவிட்டுச் சென்றனர். அவர்கள் அனைவரோடும் ஒழுங்கான ரீதியில் தொடர்பு வைத்துக்கொள்வதுடன், அவர்கள் அனைவரையுமே நாங்கள் நேசிக்கிறோம்” என்று ரூத் சொல்கிறார். ஆனால் விசனகரமாக, தத்தெடுக்கப்பட்ட இரு பிள்ளைகளுக்குமே கடும் பிரச்சினைகள் இருந்தன. ஏன்?
“ஒரு குழந்தைக்கு, மற்ற எல்லாவற்றையும்விட அது வளர்க்கப்படும் சூழல் மிக முக்கியமானது என்பதாக எங்கள் மருத்துவர் எங்களிடம் கூறினார்” என்று கிரஹாம் கூறுகிறார், சுதந்தரிக்கப்பட்ட இயற்போக்குகள் ஒரு பெரும் காரணியாய் இருக்கின்றன என்பதாக அவர் இப்போது உணருகிறார். அவர் மேலும் சொல்லுகிறார்: “அதோடு, அந்தத் தாய் அவளது குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கையில் அவளது ஆரோக்கியத்தைப் பற்றியென்ன? போதைப்பொருள்கள், மதுபானம், புகையிலை ஆகியவை பிறவாத குழந்தையை பாதிக்கக்கூடும் என்று இப்போது நாம் அறிகிறோம். தத்தெடுப்பதற்கு முன்பு, பெற்றோர் இருவரையும், அப்படியே முடிந்தால் தாத்தாபாட்டிமாரையும்கூட முற்றிலும் சோதனை செய்வதை நான் சிபாரிசு செய்கிறேன்.”
பீட்டரின் தாய் மறுமணம் செய்தார், வளர்ப்புத் தந்தையால் பீட்டர் சரீர மற்றும் மனதின் பிரகாரமாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டார். மூன்றாவது வயதில், அவர் தத்துப்பிள்ளையாக கொடுக்கப்பட்டார். “நீதிமன்றத்திலிருந்து வெளியேறின அந்தக் கணத்திலிருந்தே என் வளர்ப்புப் பெற்றோரை நான் நிராகரித்தேன்” என்று பீட்டர் கூறினார். அவர் தொடர்ந்து சொன்னார்: “என் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் நாசமாக்கினேன். நான் தூங்கினபோது, பயங்கரமான கொடுங்கனவுகளைக் கண்டேன். இப்போது நினைத்துப் பார்க்கையில், நான் எவ்வளவு அதிகமாக அமைதி இழந்திருந்தேன் என்று காண முடிகிறது. என் வளர்ப்புப் பெற்றோரும் மணவிலக்கு செய்துகொண்ட பிறகு—போதைப்பொருள்கள், திருடுதல், பொருள்களை நாசமாக்குதல், தினந்தோறும் வெறியாட்டம் செய்தல் என்று—காரியங்கள் மோசமான நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்குச் சென்றன.
“27-வது வயதில், தொடர்ந்து வாழ்வதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் காணமுடியவில்லை, ஆகவே தற்கொலை செய்வதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒருநாள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர், விரைவில் இப்பூமி ஒரு பரதீஸாக மாறும் என்று குறிப்பிடப்பட்டிருந்த பைபிள் சார்ந்த துண்டுப்பிரதி ஒன்றை என்னிடம் கொடுத்தார். அச்செய்தி என்னைக் கவர்ந்தது. சத்தியத்தின் தொனி அதில் இருந்தது. பைபிளை வாசிக்கவும் படிக்கவும் ஆரம்பித்ததோடு, என் வாழ்க்கையிலும் நடத்தையிலும் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தேன், ஆனாலும் திரும்பத்திரும்ப என் பழைய வழிகளுக்கே வழுவிச் சென்றேன். அதிக உற்சாகத்திற்குப் பிறகும், உதவியாய் இருந்த கிறிஸ்தவ கூட்டுறவுக்குப் பிறகும், ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு நான் கற்பனை செய்து பார்த்திருந்ததைவிட அதிகமாய், இப்போது கடவுளைச் சேவிப்பதில் முன்பைவிட சந்தோஷமாயும், வெகு பாதுகாப்பாயும் உணருகிறேன். என் தாயோடு பாசமிக்க உறவையும் என்னால் புதுப்பிக்க முடிந்திருக்கிறது, அது இன்பகரமானது.”
நிஜத்தை எதிர்ப்படுதல்
தத்தெடுத்தலைப் பொறுத்தவரை, உணர்ச்சிகள் ஆழமாகின்றன. அன்பு மற்றும் நன்றியுணர்வு ஒருபுறம் காட்டப்படும் அதே சமயத்தில் கசப்புணர்ச்சி மற்றும் நன்றியில்லாமை மறுபுறம் காட்டப்படுகின்றன. உதாரணமாக, எட்கர் வாலஸ் தன்னைப் புறக்கணித்த தனது அம்மாவை ஒருபோதும் மன்னிக்கவில்லை, அவளது செயல்களை அவ்விதமாகத்தான் அவர் மதிப்பிட்டார். தயக்கத்தோடு பொருளாதார உதவியை நாடி, அவளது வாழ்நாளின் கடைசி ஆண்டில் அவரைப் பார்ப்பதற்காக அவள் சென்றாள், ஆனால் எட்கரோ, அச்சமயத்தில் செல்வந்தராயிருந்தபோதிலும், அவளுக்கு உதவிசெய்வதற்கு மறுத்துவிட்டார். வெகு சீக்கிரத்தில், அவரது தாய், நண்பர்கள் காட்டிய தயவால் நல்லடக்கம் செய்யப்பட்டதையும், அல்லாவிடில், ஒரு பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்திருப்பாள் என்பதையும் அறியவந்தபோது, உணர்ச்சியற்ற விதத்தில் தான் நடந்துகொண்டதை எண்ணி மனம் வருந்தினார்.
தத்தெடுத்தல் பற்றி எண்ணிக்கொண்டிருப்போர், எழக்கூடிய பிரச்சினைகளையும் சவால்களையும் உண்மையாகவே எதிர்ப்படத் தயாராய் இருக்க வேண்டும். பிள்ளைகள் எப்போதுமே தங்கள் பெற்றோர்—தத்தெடுத்தவர்கள் அல்லது பெற்றவர்கள்—செய்யும் காரியங்களுக்காக மிகச் சிறந்த சூழ்நிலையில் வளர்க்கப்பட்டாலும்கூட நன்றியுள்ளவர்களாய் இருப்பதில்லை. உண்மையில், பைபிள் நம் நாளில் உள்ள ஆட்களைப்பற்றி, ‘சுபாவ அன்பில்லாதவர்கள்’ என்றும், ‘நன்றியறியாதவர்கள்’ என்றும் ‘உண்மைத்தன்மையில்லாதவர்கள்,’ (NW) என்றும் பேசுகிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
மறுபட்சத்தில், உங்கள் வீட்டை—மற்றும் உங்கள் இருதயத்தை—பெற்றோர் தேவையாய் இருக்கும் ஒரு பிள்ளைக்குத் திறப்பது சாதகமானதாயும், பயனுள்ளதாயும் இருக்கக்கூடும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ வீட்டை அளித்ததற்காகவும், தனது சரீரப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்தினதற்காகவும் கேத்தி தன் வளர்ப்புப் பெற்றோருக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறாள்.—“அது எங்கள் விஷயத்தில் வெற்றிகரமாய் இருந்தது” என்ற பெட்டியைப் பக்கம் 8-ல் காண்க.
தத்தெடுக்கப்பட்ட மகன்களையும் மகள்களையும் பற்றி தாங்கள் உணர்ந்த விதத்தை விவரிக்கையில், அத்தகைய பிள்ளைகளின் பெற்றோர் சங்கீதக்காரனின் வார்த்தைகளை நன்றாகவே நினைத்துப் பார்க்கலாம்: “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், அவர்கள் ஒரு மெய்யான ஆசீர்வாதம்.”—சங்கீதம் 127:3, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
[அடிக்குறிப்பு]
a பெயர் அறிவிக்கப்பட விருப்பமில்லாமையால் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.