எமதுவாசகரிடமிருந்து
தத்தெடுத்தல் “தத்தெடுத்தல்—இன்பங்கள், சவால்கள்” (மே 8, 1996) என்ற தொடருக்காக நன்றி. நான் தத்தெடுக்கப்பட்ட ஒரு பிள்ளை; தத்தெடுத்த பெற்றோரோடு இந்த விஷயத்தைப் பற்றி எப்படிப் பேசுவதென்றே எனக்கு தெரியவில்லை. ஆகவே இந்த விழித்தெழு! பத்திரிகையை பெற்றுக்கொண்டது உள்ளத்தை சிலிர்க்கச்செய்தது. இவற்றைப்போன்று வேறெந்த கட்டுரைகளும் இந்தளவுக்கு என் இருதயத்தை தொட்டதேயில்லை.
எஃப். ஆர். எம்., பிரேஸில்
நான் தத்தெடுக்கப்பட்டேன். சமீபத்தில் என்னைப் பெற்றவர்களைப் பற்றி முடிந்தவரை தகவல் திரட்ட தீர்மானம் எடுத்தேன். அவர்களைப் பற்றிய முக்கிய விவரங்கள் எனக்குக் கிடைத்தன; அதேசமயம் என்னை தத்துக்கொடுப்பதற்கு முன் என் அம்மா என்னை மூன்று மாதங்களுக்கு வைத்திருந்ததாக தெரியவந்தது. அது என் நெஞ்சைத் துளைத்தது! ‘அவர்களால் அதை எப்படித்தான் செய்யமுடிந்தது?’ என என்னை நானே கேட்டுக்கொண்டேன். “என் மகன் என்னைத் தேடி வருவானா?” என்ற பெட்டி ஒரு தாயின் உணர்ச்சிகளை எனக்கு புரியவைத்தது. அந்தச் சிறிய கட்டுரை எனக்கு எந்தளவுக்கு உதவியது!
சி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
அந்தக் கட்டுரைகள் கசப்பும் இனிப்பும் கலந்தாற்போல் எனக்கு இருந்தன. 23 வருடங்களுக்கு முன்பு நான் என் மகனை தத்துக்கொடுத்துவிட்டேன். அவனை என்னால் வளர்க்க முடியாதென்று மனதுக்குப் பட்டதால் அப்படிச் செய்தேன். ஒவ்வொரு நாளும் நான் இப்படி யோசிப்பேன்: ‘அவன் எப்படி இருக்கிறான்? அவனது வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது? அவனை எப்போதாவது நான் பார்ப்பேனா?’ குற்றவுணர்வு சிலசமயங்களில் அளவுக்கதிகமாகிவிடுகிறது. ஆனால் யெகோவா அன்பையும் இரக்கத்தையும் காண்பிப்பதற்காக உண்மையிலேயே அவருக்கு நன்றி சொல்கிறேன்.
எஸ். எஃப்., ஐக்கிய மாகாணங்கள்
எங்களுக்கு ஒரு சொந்த மகன் இருந்தாலும், ஒரு சிறிய பெண்ணை தத்தெடுப்பதைப் பற்றி என் கணவரும் நானும் யோசித்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரை நல்லது, கெட்டது ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க எனக்கு உதவியது; ஒரு தீர்மானமெடுக்கவும் எங்களுக்கு உதவும்.
ஜே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்
தொல்லைதரும் பிள்ளைகளைத் தத்தெடுப்பதை நீங்கள் சிபாரிசு செய்வதில்லை என்று எனக்கு தெரியவந்தது. ஆனால் அப்படிப்பட்ட பிள்ளைகள் புறக்கணிக்கப்பட்டால் அவர்களது கதி என்ன? தத்தெடுத்திருக்கும் மகனோடு நாங்கள் சில பிரச்சினைகளை இன்று எதிர்ப்படுகிறோம். ஆனால் அப்படிப்பட்ட பிள்ளைகள், குடும்பத்திடமிருந்து அன்பையும் பாதுகாப்பையும் எப்போதுமே பெறவில்லையென்றால் சமூகத்திற்கு எந்த விதமான பிரச்சினைகளை உண்டாக்கலாம்?
டி. எம்., ஜெர்மனி
அன்பான பெற்றோரின் கவனிப்பின்றி வளரும் பிள்ளைகளுக்காக எங்கள் மனம் சாய்கிறது. “தொல்லைதரும்” பிள்ளைகளை தத்தெடுக்கக்கூடாது என்று சொல்வதற்காக இந்தக் கட்டுரைகள் எழுதப்படவில்லை; ஆனால் தம்பதிகள் அவ்வாறு செய்கையில் நியாயமான விதத்தில் ‘செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்க்கும்படி’ உற்சாகப்படுத்துவதற்கே எழுதப்பட்டன. (லூக்கா 14:30-ஐ ஒப்பிடுக.) எதிர்காலத்தில் தத்தெடுக்க தீர்மானித்திருக்கும் பெற்றோர், அப்படிப்பட்ட பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைப்படும் மன, ஆன்மீக மற்றும் பொருள் சம்பந்தமான அனைத்தும் உண்மையிலேயே தங்களிடம் இருக்கின்றனவா என்பதை சிந்திக்க வேண்டும். தற்போது வீட்டிலுள்ள பிள்ளைகளை இந்தத் தத்தெடுத்தல் எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும்கூட அவர்கள் சிந்திக்க வேண்டும்.—ED.
மூன்று சொந்தப் பிள்ளைகளோடுகூட எங்களுக்கு ஐந்து தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் எழுதியிருந்த அளவுக்கதிகமான ஆனந்தத்தையும் அதேசமயத்தில் வேதனையையும் நாங்கள் அனுபவித்திருக்கிறோம். எங்களது மகனைத் தவிர மற்ற பிள்ளைகள் அனைவரும் யெகோவாவைத் துதிப்பவர்கள். 16-வது வயதிலே தத்தெடுக்கப்பட்ட பிறகு, எங்களது மூன்று மகள்களுக்கும் அவன் பாலினத் தொல்லைகொடுத்தான். அவனது பின்னணியைப் பற்றி தத்தெடுப்பு ஏஜென்ஸி எங்களுக்குச் சொல்ல தவறிவிட்டது. ஆகவே தத்தெடுப்பதற்கு முன் பின்னணியைப் பற்றி முடிந்தளவு ஒருவர் தகவல் பெற வேண்டும்—விசேஷமாக வயதில் மூத்த ஒரு பிள்ளையை தத்தெடுக்க தீர்மானிக்கும்போது இவ்வாறு செய்ய வேண்டும். உங்களது கட்டுரைகள் நல்ல விதத்தில் எழுதப்பட்டிருந்தன. இந்தக் காரியத்தின்பேரில் நன்மை, தீமை ஆகிய இரண்டையுமே தெளிவாக எடுத்துக்கூறின.
பி. பி., ஐக்கிய மாகாணங்கள்
தத்தெடுத்த பெற்றோர்களில் சிலர் அப்படிப்பட்ட சோகமான அனுபவங்களை எதிர்ப்பட்டனர் என்பதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். என் கணவரும் நானும் இரு அழகான பிள்ளைகளை தத்தெடுத்தோம். அவர்கள் எங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தால் நிரப்பியிருக்கின்றனர். அவர்களை தத்தெடுத்ததைப் பற்றி நாங்கள் எப்போதுமே வெளிப்படையாக அவர்களோடு பேசியிருக்கிறோம். அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார் அவர்களை ‘வெறுமனே இன்னொருவருக்கு கொடுத்துவிடவில்லை,’ ஆனால் அந்தச் சமயத்தில் அவர்களது வாழ்க்கையில் ஒரு பிள்ளையை வளர்க்க முடியாத சூழ்நிலை இருந்ததால் அவர்களது நலனுக்காக இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள் என்பதை அவர்கள் இருவருமே புரிந்துகொள்ள நாங்கள் உதவினோம். எங்களால் தத்தெடுக்கப்பட்டதற்கு எங்கள் பிள்ளைகள் எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டுமென்று ஆட்கள் அடிக்கடி எங்களிடம் சொல்கின்றனர். எனினும், உண்மையில் கொடுத்துவைத்திருப்பது நாங்கள்தான்.
பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்