தத்தெடுத்தல்—அது உங்களுக்குரியதா?
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
“தத்தெடுத்தல் பிள்ளைகளுக்கான ஒரு சேவையாகும், பிள்ளையற்ற தம்பதிகளுக்கு ஒரு குழந்தையை அளிப்பதன் மூலம் செய்யப்படும் ஒரு சேவையல்ல” என்பதாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு சமூக சேவகி கூறுகிறார். அப்படியிருந்தாலும், தத்தெடுக்கப்பட்ட ஒரு பிள்ளை என்ன உரிமையை உடையதாயிருக்கிறது?
ஒரு பிள்ளையைத் தத்தெடுப்பதைப் பற்றி நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உணர்ச்சிப்பூர்வமானது மட்டுமல்லாமல், மாற்ற முடியாததுமான ஒரு தீர்மானத்தை நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள். அந்தக் குழந்தை உங்கள் குடும்பத்தோடு எவ்வளவு வெற்றிகரமாய் இணையும்?
நீங்கள் தத்தெடுக்கப்பட்ட ஒரு பிள்ளையாய் இருந்தால், உங்களைப் பெற்றவர்கள் யார் என்பதை அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அவர்களைப் பற்றி அறிந்திருப்பது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்கள் பிள்ளையைத் தத்துப்பிள்ளையாகக் கொடுப்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தாயாக நீங்கள் இருக்கிறீர்களா? உங்கள் பிள்ளையின் நலனைக் கருத்தில்கொள்கையில் தத்தாகக் கொடுப்பது மட்டுமே ஒரே தீர்வாக உள்ளதா?
1995-ல், 50,000-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் ஐக்கிய மாகாணங்களில் தத்தெடுக்கப்பட்டனர், அவர்களில் சுமார் 8,000 பேர் அயல்நாட்டில் பிறந்தவர்களாயிருந்தனர். மக்கள் அயல்நாட்டிலிருந்து பிள்ளைகளைத் தத்தெடுப்பது அதிகரித்து வருகிறது. டைம் பத்திரிகையின்படி, கடந்த 25 ஆண்டுகளில், ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த குடும்பங்கள் அயல்நாட்டில் பிறந்த 1,40,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளன. இதோடு ஒப்பிட, ஐரோப்பாவுக்கான எண்ணிக்கைகள் ஸ்வீடனில் 32,000, ஹாலந்தில் 18,000, ஜெர்மனியில் 15,000, டென்மார்க்கில் 11,000 ஆகும்.
இங்குக் கூறப்பட்ட ஏதாவது சூழ்நிலை உங்களுக்குப் பொருந்துகிறதா? தத்தெடுப்பதானது, உங்கள் வாழ்க்கை—வெறுமனே அக் குழந்தையின் வாழ்க்கை மட்டுமல்ல—மீண்டும் அதேபோன்று ஒருபோதும் இராது என்பதை அர்த்தப்படுத்துகிறது. தத்தெடுக்கும் பெற்றோர்கள் பல இன்பங்களை எதிர்பார்ப்பது நியாயமாக இருந்தாலும், பல பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் எதிர்ப்படுவதற்கும் அவர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். அதைப் போலவே, தன் பிள்ளையைத் தத்தாகக் கொடுத்துவிடும் அனுபவத்தைப் பெறும் ஒரு தாயும் முற்றிலுமாய் மனம் ஆறாமலும் இருக்கலாம்.
ஓர் இளம் வாழ்வை அன்பினால் கட்டியமைக்கும் அல்லது திரும்பவுமாய்க் கட்டும் சவாலை ஒவ்வொரு நிலையும் முன்வைக்கிறது. பின்வரும் கட்டுரைகள் பிள்ளையைத் தத்தெடுப்பதில் உள்ள இன்பங்கள் சிலவற்றை—மற்றும் சவால்களை—தெரிவிக்கும்.