பைபிள்—ஒப்பற்ற ஒரு புத்தகம்
உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் ஒரு புத்தகம் என்பதாக அது அழைக்கப்பட்டிருக்கிறது, அது அவ்வாறு அழைக்கப்படுவது பொருத்தமாகவே உள்ளது. வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் பைபிள் அதிகமாக வாசிக்கப்பட்டும் வாஞ்சையோடு போற்றப்பட்டும் வருகிறது. இன்றுவரையாக, அது 2,000-க்கும் மேற்பட்ட மொழிகளில் 400 கோடிக்கும் அதிகமான பிரதிகள் (முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ) விநியோகிக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், விநியோகிக்கப்பட்டிருக்கும் பைபிளின் எண்ணிக்கையைக் காட்டிலும், கடவுளே அதன் ஆசிரியர் என அது உரிமைபாராட்டுவதுதானே அதிகமாக ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. “வேதவசனங்களெல்லாம் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது” (inspired of God) என்பதாக கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:16, NW) இதன் அர்த்தமென்ன? “வேதவசனங்களெல்லாம் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது” (கிரேக்கு, தியோநியூஸ்டாஸ்) என்ற சொற்றொடரின் பொருள், “கடவுள் ஊதினார்” என்பதாகும். இதோடு சம்பந்தப்பட்ட கிரேக்க வார்த்தையாகிய நியூமா என்பதன் பொருள், “ஆவி” என்பதாகும். ஆகவே, கடவுளுடைய பரிசுத்த ஆவி மனித எழுத்தாளர்களை ஏவினது; அடையாள அர்த்தத்தில் சொன்னால் ஊதினது. எனவே முடிவான இந்தப் படைப்பு மனிதனுடையது அல்ல கடவுளுடைய வார்த்தையே என்பதாக உண்மையில் அழைக்கப்படலாம் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. ஆம், பைபிளைப் படித்திருக்கும் பெரும்பாலானோர் அதனுடைய எல்லா புத்தகங்களுக்கிடையிலேயும் இருக்கும் ஒத்திசைவு, அதன் அறிவியல் பூர்வமான திருத்தம், அதன் எழுத்தாளர்களின் நேர்மை மற்றும் ஒளிவுமறைவில்லாமை, அதிக முக்கியமாக, நிறைவேறி முடிந்த அதனுடைய தீர்க்கதரிசனங்கள் ஆகிய அனைத்தும், மனிதனைவிட மேலான ஊற்றுமூலத்திலிருந்து இப்புத்தகம் வந்திருக்கிறது என சிந்திக்கிற கோடிக்கணக்கான வாசகர்களை மேலும் உறுதியாக நம்பும்படிச் செய்திருக்கிறது. a
ஆனால் பைபிளை எழுதுகையில் கடவுள் அதை எவ்வளவு கவனமாக வழிநடத்திவந்தார்? அவர் சொல்ல சொல்ல அப்படியே பைபிள் எழுதப்பட்டது என்பதாக சிலர் சொல்கின்றனர். வார்த்தைகளை அல்ல, பைபிளில் காணப்படும் எண்ணங்களை மாத்திரமே அவர் ஏவினார் என்பதாக மற்றவர்கள் சொல்கின்றனர். ஆனால் உண்மையில், ஒரே ஒரு முறையில் மாத்திரமே அவர் ஏவினார் என்பதாக சொல்ல முடியாது, ஏனென்றால் கடவுள் ‘பற்பல வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களிடம்’ பேசினார். (எபிரெயர் 1:1, திருத்திய மொழிபெயர்ப்பு; 1 கொரிந்தியர் 12:6-ஐ ஒப்பிடுக.) பின்வரும் கட்டுரையில், பைபிளை எழுதின சுமார் 40 மனித எழுத்தாளர்களிடம் கடவுள் பேசின வழிகளைப் பற்றி நாம் ஆராய்வோம்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கங்கள் 53-4-ஐயும் 98-161-ஐயும் பார்க்கவும்.