அற்புதமான சுகப்படுத்துதல்கள் இன்னும் நடக்கின்றனவா?
“இயேசுவை விசுவாசித்து சுகமடையுங்கள்!” இதுபோன்ற கோஷங்களில் ஒன்று வியாதிக்கு மருந்து சாப்பிடுவது விசுவாசக்குறைவுக்கு அறிகுறியாக இருக்கிறது என்பதாக நம்புவதற்கு இவான்ஜலிக்கல் சர்ச்சில் ஒரு உறுப்பினராக இருக்கும் ஆலிஷாண்டிராவை வழிநடத்தியது. அவருக்குத் தேவையான சுகப்படுத்துதலை அவருடைய விசுவாசத்தால் மட்டுமே கொண்டுவர முடியும் என்பதாக அவர் உறுதியாக நம்பினார். பிரேஸிலில் உள்ள சாவோ பாலோ நகரில் அப்பார்சிடா டி நார்டி என்ற புனித ஸ்தலத்தில் நடைபெறும் அற்புதமான சுகப்படுத்துதல்களைப் பற்றி கேள்விப்பட்டபோது பெனிடிட்டா என்ற கத்தோலிக்க மதப்பற்றுள்ள பெண் மிகவும் நெகிழ்ந்துபோனாள். தன்னுடைய பெரியம்மா கற்றுக்கொடுத்திருந்த மந்திர சக்தியுள்ள சில வார்த்தைகளைப் பயன்படுத்தி, அப்பார்சிடா மாதாவிடமும், புனித அந்தோனியாரிடமும் மற்ற “புனிதர்களிடமும்” வியாதிப்பட்டவர்களைச் சுகப்படுத்துவதற்கு வல்லமையை தரும்படியாக பிராத்தனை செய்தாள்.
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்கூட அநேக ஆட்கள் இன்னும் அற்புதமான சுகப்படுத்துதல்களை நம்புகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது—ஆனால் ஏன்? ஒருவேளை வியாதியையும் வலியையும் தங்கள் அன்பானவர்களின், விசேஷமாக தங்கள் பிள்ளைகளின் துன்பத்தையும் போக்க மருத்துவர்களால் அதிகமாக எதையும் செய்ய முடியாமல்போகும்போது, சிலர் விரக்தியடைந்துவிடுகிறார்கள். தீராத நோயினால் துன்புறுகிறவர்கள் நவீன மருத்துவத்திற்கு ஆகும் அதிகமான செலவை நினைத்துப்பார்க்கையில், விசுவாச சுகப்படுத்துதலை நாடுவதில் எந்த இழப்பும் இல்லை என்பதாக நினைக்கிறார்கள். எய்ட்ஸ், மனச்சோர்வு, புற்றுநோய், மனக்கோளாறு, உயர் இரத்த அழுத்தம், இன்னும் மற்ற நோய்களுக்கும் பல்வேறு சர்ச்சுகளும் தனிநபர்களும் சுகப்படுத்துதல்களை செய்வதை சிலர் டிவி-யில் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கடைசி போக்கிடமாக அவற்றினிடமே அவர்கள் திரும்பக்கூடும். தங்களுடைய வியாதிக்கு அசுத்த ஆவிகளே காரணம் என்பதாக நம்பும் இன்னும் மற்றவர்கள் வழக்கமாக கொடுக்கப்படும் மருந்துகளினால் தங்களுக்கு பயனிருக்காது என்பதாக நினைக்கலாம்.
மறுபட்சத்தில், இறந்துபோன “புனிதர்கள்” அல்லது உயிரோடிருக்கும் சுகமளிப்பவர்கள் ஆகியோர் செய்யும் அற்புதமான சுகப்படுத்துதல்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களும், அதைக் கண்டனம் செய்பவர்களும்கூட இருக்கிறார்கள். ஜர்னல் டா டார்டி-ன் பிரகாரம், இந்த நம்பிக்கை “விழிப்பாயிராதவர்களின் மற்றும் மனமுறிந்தவர்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிடுகிறது” என்பதாக டிராசியோ வரிலா என்ற நோய்த்தடுப்பியல் மருத்துவர் நினைக்கிறார். அவர் மேலுமாகச் சொல்கிறார்: “அற்புதங்களில் நம்பிக்கை வைத்து, இந்த வஞ்சகர்களின் காரணமாக அநேகர் இன்றியமையாத மருத்துவ சிகிச்சையை புறக்கணித்துவிடலாம்.” த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது: “கடந்த காலத்தில் வழக்கத்துக்கு மாறான சுகப்படுத்துதல்கள் புனித ஸ்தலங்களோடும் மத சம்பந்தமான சடங்குகளோடும் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றன, இப்படிப்பட்ட எல்லா சுகப்படுத்துதல்களுக்கும் சாதகமான சூழ்நிலைமைகளில் செயல்படும் இயல்பான உளத்தூண்டுதலே காரணம் என்று மருத்துவ விஞ்ஞானம் கற்பிக்கிறது.” இருந்தபோதிலும், தாங்கள் ஒரு அற்புதத்தால் உண்மையில் சுகப்படுத்தப்பட்டதாக நம்புகிற அநேகர் இருக்கின்றனர். அவர்களுக்கு சுகப்படுத்துதல் பலனளித்திருக்கிறது!
பைபிளோடு பழக்கப்பட்டவர்கள், இயேசு கிறிஸ்து அநேக சந்தர்ப்பங்களில் நோயாளிகளை, “தேவனுடைய வல்லமையினால்” சுகப்படுத்தியதை அறிந்திருக்கிறார்கள். (லூக்கா 9:42, 43) இதன் காரணமாக, ‘கடவுளுடைய வல்லமை இன்னும் செயல்பட்டுக்கொண்டு, இன்று அற்புதமான சுகமளித்தல்களைச் செய்துகொண்டிருக்கிறதா?’ என்பதாக அவர்கள் யோசிக்கலாம். அப்படியானால், சுகமளிப்பதற்காக செய்யப்படும் முயற்சிகள் வாக்களிக்கப்படும் பலன்களை கொண்டுவர தவறுவது ஏன்? நோயாளிக்கு போதுமான விசுவாசம் இல்லாமல் இருக்கிறதா அல்லது அவருடைய நன்கொடையின் தொகை பெரியதாக இல்லையா? வேதனையான அல்லது ஒருவேளை குணப்படுத்த முடியாத ஒரு நோயினால் துன்புறும்போது ஒரு கிறிஸ்தவன் அற்புத சுகப்படுத்துதலை நாடுவது சரியா? இயேசு செய்தது போன்ற, தவறாத அற்புதமான சுகப்படுத்துதல்கள் மறுபடியும் எப்போதாவது நிகழுமா? அடுத்தக் கட்டுரையில் இன்றியமையாத இந்தக் கேள்விகளுக்குப் பதில்களை நீங்கள் காணலாம்.