செங்குத்தான மலைக்குன்றுகளின் கழைக்கூத்தாடிகள்
சவக்கடலின் மேற்கு கரையோரமாக ஒரு பண்டைய நகரம் இருந்தது, அதைச் சுற்றியிருந்த வனாந்தரம் என்கேதி என்றழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியின் பாறைகள் நிறைந்த கணவாய்களும் செங்குத்தான சரிவுகளும் இங்கே காணப்படுவதுபோன்ற, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மலை ஆடுகளுக்கு நேர்த்தியான வீடாக அமைகிறது.
தடுமாற்றமின்றி நடக்கும் இந்த உயிரினம் விலங்கு படைப்பின் அதிசயங்களில் இடம்பெறுகிறது. நாம் பைபிளைத் திறந்து மனதைக் கவரும் இந்த விலங்கினை சற்று கூர்ந்து கவனிப்போம்.
“உயர்ந்த மலைகள் மலை ஆடுகளுக்கு”
இவ்வாறு சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 103:18, கத்.பை.) மலை ஆடுகள் உயர்ந்த இடங்களில் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் பெற்றிருக்கின்றன! அவை மிகவும் சுறுசுறுப்பாய் இருந்து, மிகுதியான தன்னம்பிக்கையோடும் வேகமாகவும் கரடுமுரடான நிலப்பரப்பின்மீது நடமாடுகின்றன. இதற்கு அவற்றின் குளம்பின் அமைப்பு ஓரளவு காரணமாயுள்ளது. குளம்பின் முன்புறம் ஆட்டின் பளுவினால் விரிவடைகிறது; இதனால் குறுகலான பாறைத் திட்டுகளின்மீது நிற்கும்போது அல்லது நடமாடும்போது உறுதியான பிடிப்பு இதற்கு கிடைக்கிறது.
மலை ஆடுகள் அசாதாரணமான ஸ்திரத்தன்மையையும்கூட பெற்றிருக்கின்றன. அவற்றால் நீண்ட தூரங்கள் தாண்டி குதித்து, நான்கு பாதங்களைகூட வைக்க முடியாதிருக்கும் பாறை விளிம்பின்மீது ஊன்றிக்கொண்டு நிற்க முடியும். அறிவியலர் டக்லஸ் சாட்விக் ஒரு சமயம் மற்றொரு வகையான மலை ஆடு ஒன்றை கவனித்தார்; அது திரும்புவதற்கு மிகவும் குறுகலாக இருந்த பாறை விளிம்பின்மீது மாட்டிக்கொள்ளாமலிருப்பதற்காக அதனுடைய ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்துவதை அவர் கவனித்தார். அவர் சொல்கிறார்: “சுமார் 120 மீட்டர்கள் கீழே இருந்த அடுத்த பாறை விளிம்பை ஒரு கணம் பார்வையிட்ட பிறகு ஆடு தன் முன்பாதத்தை ஊன்றிக்கொண்டு பக்கவாட்டில் ஒரு குட்டிக்கரணம் போடுவது போல பாறை முகப்பின் ஓரமாக அதனுடைய பின்பகுதியை அதன் தலைக்கு மேலாக மெதுவாக தள்ளிக்கொண்டு சென்றது. நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தபோது, அது எந்தத் திசையிலிருந்து வந்ததோ அதைப் பார்த்துக்கொண்டு நிற்கும்படியாக பின்பாதம் கீழே வரும்வரையில் ஆடு அப்படியே செய்துகொண்டிருந்தது.” (நேஷனல் ஜியாகரஃபிக்) மலை ஆடுகள் “செங்குத்தான மலை குன்றுகளின் கழைக்கூத்தாடிகள்” என்று அழைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாயில்லை.
‘மலை ஆடுகள் ஈனும் காலத்தை நீ அறிவாயோ?’
மலை ஆடுகள் மிகவும் சாதுவான உயிரினங்கள். அவை மனிதனிடமிருந்து விலகி வாழவே விரும்புகின்றன. ஆம், அவற்றின் வாழிடத்தில் அவைகளைக் கூர்ந்து கவனிக்க அவைகளை நெருங்குவது மனிதர்களுக்கு கடினம். இதன் காரணமாகவே “பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்”களுக்குச் சொந்தக்காரர், யோபு என்ற மனிதனிடம் சரியாகவே பின்வருமாறு கேட்க முடிந்தது: “மலை ஆடுகள் ஈனும் காலத்தை நீ அறிவாயோ?”—சங்கீதம் 50:10; யோபு 39:1, கத்.பை.
கடவுள் கொடுத்த இயல்புணர்ச்சி, குட்டியை ஈனும் காலம் எப்போது என்பதைப் பெண் மலை ஆட்டுக்குத் தெரிவிக்கிறது. அவள் பாதுகாப்பான ஓரிடத்தைத் தேடி ஓரிரண்டு குட்டிகளைப் பொதுவாக மே அல்லது ஜூன் மாத கடைசியில் ஈன்றெடுக்கிறாள். புதிதாக பிறக்கும் குட்டிகள் ஒருசில நாட்களுக்குள் தடுமாற்றமின்றி நடக்கும் திறமையைக் கற்றுக்கொள்கின்றன.
‘நேசிக்கப்படத்தக்க பெண்மானும் அழகான மலை ஆடும்’
ஞானியான சாலொமோன் ராஜா கணவன்மாரை பின்வருமாறு துரிதப்படுத்தினார்: “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் [“மலை ஆடும்,” NW] போலிருப்பாளாக.” (நீதிமொழிகள் 5:18, 19) இது பெண்களைச் சிறுமைப்படுத்துவதற்காக சொல்லப்படவில்லை. சாலொமோன் இந்த விலங்குகளின் அழகையும் நளினத்தையும் மற்ற முக்கியமான பண்புகளையும் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார் என்று தெரிகிறது.
படைப்பாளரின் ஞானத்தை மிகுதியாக பறைசாற்றும் எண்ணற்ற “உயிரினங்களில்” மலை ஆடு ஒன்றாக இருக்கிறது. (ஆதியாகமம் 1:24, 25, கத்.பை.) மனதைக் கவரும் இத்தனை அநேக உயிரினங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும்படியாக கடவுள் செய்திருப்பதற்கு நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இல்லையா?
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Athens University