ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
அவர் “விலையுயர்ந்த ஒரு முத்தை” கண்டுபிடித்தார்
“பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” இந்த வார்த்தைகளால் இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் அளவிடமுடியாத மதிப்பை விளக்கிக் காண்பித்தார். (மத்தேயு 13:45, 46) ராஜ்யத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ளுகிறவர்கள் அநேகமாக அதைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகமான தனிப்பட்ட தியாகங்களைச் செய்கின்றனர். தைய்வானில், பின்டன் கன்டியிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் இதை விளக்குகிறது.
1991-ல் திருவாளர் லின்னும் திருமதி லின்னும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். உள்ளூர் பாதிரி ஒருவர் இதைக் கண்டுபிடித்தபோது, தன்னுடைய சர்ச்சில் அவர்களைச் சேர்த்துக்கொள்ள முயற்சிசெய்தார். லின் தம்பதியினர் பன்றி மற்றும் வாத்து இரத்தத்தை உள்ளூர் சந்தையில் வியாபாரம் செய்து வந்ததால், இந்த விஷயத்தின் பேரில் பாதிரியின் கருத்தை தெரிந்துகொள்ள லின் தம்பதியினர் தீர்மானித்தார்கள். “கடவுள் படைத்திருக்கும் எல்லாமே மனிதனுக்கு உணவாக இருக்கலாம்” என்பதாக அவர் பதிலளித்தார். மறுபட்சத்தில் சாட்சிகள், கடவுளுடைய வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதை சிந்தித்துப்பார்க்கும்படியாக அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். “ஒரு உயிரினத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது,” என்பதால் யெகோவா தேவன் இரத்தத்தைப் பரிசுத்தமானதாக கருதுகிறார், என்பதை அவர்கள் கற்றார்கள். (லேவியராகமம் 17:10, 11, த நியூ இங்லிஷ் பைபிள்) ஆகவே உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘இரத்தத்திற்கு . . . விலகியிருக்கவேண்டும்.’ (அப்போஸ்தலர் 15:20) இதுவே அவர்களுடைய முக்கியமான வருமானமாக இருந்தபோதிலும் இந்த விஷயத்தின்பேரில் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததன் விளைவாக, இரத்தம் விற்பதை நிறுத்திவிட அவர்கள் தீர்மானித்தார்கள். இருப்பினும், குறுகிய காலத்திற்குள்ளாகவே, அதைவிட பெரிய ஒரு சோதனையை அவர்கள் எதிர்ப்பட்டார்கள்.
சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பாக லின்ஸ் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் 1,300 வெற்றிலைப் பாக்கு மரங்களை நட்டிருந்தார்கள். மரங்களிலிருந்து லாபம் பெறுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றாலும், அவை முழுமையாக பலன்கொடுக்க ஆரம்பித்துவிட்டால், வருடத்துக்கு அவர்களால் 77,000 டாலர் பணத்தை சம்பாதிக்க முடியும். முதல் அறுவடை காலம் நெருங்கியபோது, லின்ஸ் தம்பதியினர் ஒரு முக்கியமான தீர்மானத்தைச் செய்யவேண்டியதாக இருந்தது. புகையிலைப் புகைப்பது, போதைப்பொருளைத் துர்ப்பிரயோகிப்பது, பாக்கு மெல்லுவது போன்ற அசுத்தமான பழக்கங்களில் ஈடுபடுவதை அல்லது ஊக்குவிப்பதைத் தவிர்ப்பதன் மூலமாக கிறிஸ்தவர்கள் “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க” தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பைபிள் படிப்பின் வாயிலாக அவர்கள் கற்றிருந்தார்கள். (2 கொரிந்தியர் 7:1) அவர்கள் என்ன செய்வார்கள்?
தொந்தரவு செய்த மனசாட்சியினால் ஏற்பட்ட அழுத்தத்தின் கீழ், திருவாளர் லின் பைபிளைப் படிப்பதை நிறுத்திவிட தீர்மானித்தார். இதற்கிடையில், திருமதி லின் தங்களுடைய பழைய மரங்கள் சிலவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட வெற்றிலைப் பாக்கை விற்று 3,000 டாலருக்கும் அதிகமான லாபத்தைச் சம்பாதித்தாள். அவர்கள் தங்களுடைய மரத்தை வெட்டாமல் இருந்தால் சீக்கிரத்தில் அவர்களுக்கு கிடைக்கவிருந்தவற்றின் ஒரு சிறிய முன் அனுபவமாக இது இருந்தது. இருந்தபோதிலும், திருவாளர் லின்னின் மனசாட்சி தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்தது.
ஒரு நாள் உள்ளூர் சாட்சிகளிடம் தனக்காக தன்னுடைய வெற்றிலைப் பாக்கு மரங்களை வெட்டும்படியாக கேட்டுகொள்ளும்வரை அந்த விஷயத்தைக் குறித்து அவர் ஒரு போராட்டத்தைக் கொண்டிருந்தார். இது அவர் செய்யவேண்டிய தீர்மானமாக இருப்பதால், அவர்தானே ‘தன் பாரத்தைச் சுமந்து’ தானே மரங்களை வெட்டவேண்டும் என்பதாக சாட்சிகள் விளக்கினார்கள். (கலாத்தியர் 6:4, 5) 1 கொரிந்தியர் 10:13-ல் காணப்படும் வாக்குறுதியை நினைவில் வைக்கும்படியாக அவர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். அது சொல்வதாவது: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” “நாங்கள் உங்களுக்காக மரங்களை வெட்டினால், நீங்கள் ஒருவேளை அதைக் குறித்து வருந்தி நஷ்டத்துக்காக எங்களைக் குற்றஞ்சாட்டலாம்” என்பதாகச் சொல்வதன் மூலமும்கூட சாட்சிகள் அவரோடு நியாயங்காட்டி பேசினார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் சங்கிலி ரம்பத்தின் சப்தம் கேட்டு திருமதி லின் விழித்துக்கொண்டார்கள். அவர்களுடைய கணவரும் பிள்ளைகளும் வெற்றிலை மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார்கள்!
யெகோவா தம்முடைய வாக்குறுதிக்கு உண்மையுள்ளவராக இருப்பதை திருவாளர் லின் கண்டார். யெகோவாவைத் துதிப்பவராவதற்கு உதவிசெய்யும் வகையில் சுத்தமான மனசாட்சியோடு செய்யக்கூடிய வேலை ஒன்று அவருக்குக் கிடைத்தது. 1996 ஏப்ரலில் யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டில் அவர் முழுக்காட்டப்பட்டார்.
ஆம், உண்மையில் திருவாளர் லின், “தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று,” “விலையுயர்ந்த ஒரு முத்தை” வாங்கிக்கொண்டார். யெகோவா தேவனோடு தனிப்பட்ட ஒரு உறவைக் கொண்டிருந்து அவருடைய ராஜ்ய அக்கறைகளைச் சேவிக்கும் மதிப்பிடமுடியாத சிலாக்கியம் இப்பொழுது அவருக்கு இருக்கிறது.