‘விலையுயர்ந்த முத்தை’ இன்று நாடித்தேடுதல்
‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்கும் . . . சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.’ —மத்தேயு 24:14.
1, 2. (அ) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசுவின் நாளில் இருந்த யூதர்கள் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்கள்? (ஆ) ராஜ்யத்தைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்வதற்கு இயேசு என்ன செய்தார், அதன் பலன்கள் யாவை?
கடவுளுடைய ராஜ்யம்—இயேசு பூமிக்கு வந்திருந்த சமயத்தில் யூதருக்குள்ளே மிகுந்த ஆர்வத்திற்குரிய விஷயமாக அது பேசப்பட்டு வந்தது. (மத்தேயு 3:1, 2; 4:23-25; யோவான் 1:49) என்றாலும், அதன் ஆட்சி பரப்பெல்லையையும் அதன் அதிகாரத்தையும் பற்றி ஆரம்பத்தில் பெரும்பாலோர் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை; அது ஒரு பரலோக அரசாங்கமாயிருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. (யோவான் 3:1-5) இயேசுவின் சீஷர்களாக ஆனவர்கள்கூட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியோ கிறிஸ்துவின் உடன் ஆட்சியாளர்களாக ஆவதற்கு செய்ய வேண்டியவற்றைப் பற்றியோ முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.—மத்தேயு 20:20-22; லூக்கா 19:11; அப்போஸ்தலர் 1:6.
2 காலப்போக்கில் இயேசு தம் சீஷர்களுக்குப் பொறுமையாகப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். அதில் ஒன்றுதான் முந்தின கட்டுரையில் கவனித்த விலையுயர்ந்த முத்தைப் பற்றிய உவமை. பரலோக ராஜ்யத்தை நாடித்தேடுவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு இப்பாடங்களின் மூலம் புரிய வைத்தார். (மத்தேயு 6:33; 13:45, 46; லூக்கா 13:23, 24) இது அவர்களுடைய மனதில் ஆழப் பதிந்திருந்ததாலேயே சீக்கிரத்தில் ராஜ்யத்தின் நற்செய்தியை ஊக்கமாயும் தைரியமாயும் அறிவிக்க ஆரம்பித்தார்கள்; தொலைதூரப் பகுதிகளில் அவர்கள் பிரசங்கித்தார்கள்; அதற்கான ஏகப்பட்ட அத்தாட்சிகளை அப்போஸ்தலர் புத்தகத்தில் காணலாம்.—அப்போஸ்தலர் 1:8; கொலோசெயர் 1:23.
3. நம் நாளைப் பற்றி குறிப்பிடுகையில், ராஜ்யம் சம்பந்தமாக இயேசு என்ன சொன்னார்?
3 அப்படியானால், நம்முடைய நாளைப் பற்றி என்ன? அந்த ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமிக்குரிய பரதீஸில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி எண்ணற்றோருக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ‘இந்த உலகத்தின் முடிவைப்’ பற்றிய முக்கிய தீர்க்கதரிசனத்தில் இயேசு திட்டவட்டமாக இவ்வாறு அறிவித்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் [அதாவது, நற்செய்தி] பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:3, 14; மாற்கு 13:10) மலை போன்ற தடைகளும் சவால்களும், ஏன், துன்புறுத்தல்களும் வந்தால்கூட இந்த மாபெரும் வேலையைச் செய்து முடிக்க வேண்டுமென்றும் அவர் சொன்னார். இருந்தாலும், “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” என்ற உறுதியையும் அவர் அளித்தார். (மத்தேயு 24:9-13) இவை எல்லாவற்றிற்கும் இயேசுவின் உவமையில் குறிப்பிட்ட அந்த வியாபாரி காண்பித்த அதே விதமான சுயதியாக மனப்பான்மையையும் கடமையுணர்ச்சியையும் காண்பிக்க வேண்டும். இன்று விசுவாசத்தோடும் ஆர்வத்தோடும் ராஜ்யத்தை நாடித்தேடுகிறவர்கள் இருக்கிறார்களா?
சத்தியத்தைக் கண்டுபிடிப்பதில் சந்தோஷம்
4. ராஜ்யத்தைப் பற்றிய சத்தியம் இன்று ஜனங்களை என்ன செய்யத் தூண்டுகிறது?
4 இயேசுவின் உவமையிலுள்ள அந்த வியாபாரி, தான் தேடிக்கொண்டிருந்த “விலையுயர்ந்த ஒரு முத்தைக்” கண்டுபிடித்ததும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அந்தச் சந்தோஷமே அவரிடமிருந்த எல்லாவற்றையும் விற்று அந்த முத்தை வாங்க அவரைத் தூண்டியது. (எபிரெயர் 12:1) அவ்வாறே இன்று, கடவுளையும் அவரது ராஜ்யத்தையும் பற்றிய சத்தியம் ஆட்களைக் கவர்ந்திழுக்கிறது, செயல்படத் தூண்டுவிக்கிறது. வளர்ந்து வரும் விசுவாசம் என்ற ஆங்கில புத்தகத்தில் கடவுளுக்கான தன்னுடைய தேடலையும் மனிதருக்கான கடவுளுடைய நோக்கத்தையும் பற்றி, சகோதரர் ஏ. எச். மேக்மில்லன் எழுதிய ஒரு குறிப்பை இது நினைவுபடுத்துகிறது. அவர் இவ்வாறு சொன்னார்: “நான் தேடிக் கண்டுபிடித்திருக்கும் ஒன்றை ஆயிரக்கணக்கான ஜனங்கள் இன்னமும் ஆண்டுதோறும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களையும் என்னையும் போன்றவர்களே, ஏனென்றால் அவர்கள் பல்வேறு நாட்டவர்கள், இனத்தவர்கள், வித்தியாசப்பட்ட சமுதாய அந்தஸ்துகளில் உள்ளவர்கள்; அவர்களில் எல்லா வயதினரும் இருக்கிறார்கள். சத்தியம் பாரபட்சம் பார்ப்பதில்லை. மாறாக, எல்லா வகையான ஆட்களையும் கவர்ந்திழுக்கிறது.”
5. என்ன சிறந்த பலன்களை 2004-ஆம் ஊழிய ஆண்டின் அறிக்கை காட்டுகிறது?
5 அந்த வார்த்தைகள் உண்மை என்பதை ஒவ்வொரு வருடமும் காண முடிகிறது; கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியால் தூண்டப்பட்ட நல்மனம் படைத்த லட்சக்கணக்கானோர் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தைச் செய்வதைக் காண முடிகிறது. செப்டம்பர் 2003-ல் தொடங்கி ஆகஸ்ட் 2004-ல் முடிவடைந்த, 2004-ஆம் ஊழிய ஆண்டும் இதற்கு அத்தாட்சி அளிக்கிறது. அந்த 12 மாதங்களில் 2,62,416 பேர் யெகோவாவுக்கு தாங்கள் ஒப்புக்கொடுத்ததைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் வெளிக்காட்டினார்கள். 235 நாடுகளில் இது நடைபெற்றது; இந்நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் வாரா வாரம் 60,85,387 பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார்கள். சமுதாயத்திலுள்ள பல்வேறு வகுப்பைச் சேர்ந்தோரும், பற்பல தேசம், இனம், மொழியைச் சேர்ந்தோரும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள உயிரளிக்கும் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள உதவுவதற்காகவே இப்படிப்புகளை நடத்தி வருகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9.
6. கடந்த சில வருடங்களாகக் காணப்படும் சீரான அதிகரிப்புக்குக் காரணம் என்ன?
6 இந்தப் பலன்களெல்லாம் எப்படிச் சாத்தியமாகி இருக்கின்றன? சரியான மனச்சாய்வுடையவர்களை யெகோவா தம்மிடமாக இழுத்துக்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. (யோவான் 6:65; அப்போஸ்தலர் 13:48, NW) என்றாலும், ராஜ்யத்தை நாடித்தேடுவதில் தங்களையே அர்ப்பணித்திருப்பவர்களுடைய ஊக்கமான முயற்சிகளையும் தன்னலமற்ற மனப்பான்மையையும்கூட நாம் துச்சமாக எண்ணிவிட முடியாது. 79-ம் வயதில் சகோதரர் மேக்மில்லன் இவ்வாறு எழுதினார்: “வியாதிப்பட்டு மரிக்கும் மனிதர்களுக்குக் கடவுள் அளித்துள்ள வாக்குறுதிகளைப் பற்றி பைபிளிலிருந்து முதன்முதலில் தெரிந்துகொண்டபோது எனக்குள் ஏற்றப்பட்ட அந்த நம்பிக்கை ஒளி இன்னமும் துளிகூட மங்கவில்லை. சர்வவல்லமையுள்ள யெகோவா தேவனைப் பற்றியும் மனிதகுலத்திற்கான அவருடைய சிறந்த நோக்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள என்னைப் போல ஆசைப்படுகிறவர்களுக்கு உதவுவதற்காக பைபிளிலிருந்து அதிக விஷயத்தைக் கற்றுக்கொள்ள அப்போதே தீர்மானித்தேன்.”
7. பைபிள் சத்தியத்தைக் கண்டுபிடிப்பவர்களின் சந்தோஷத்தையும் ஆர்வத்தையும் எந்த உதாரணம் படம்பிடித்துக் காட்டுகிறது?
7 அத்தகைய ஆர்வத்தை இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்கள் மத்தியிலும் காண முடிகிறது. உதாரணமாக, ஆஸ்திரியா நாட்டிலுள்ள வியன்னா நகரைச் சேர்ந்த டான்யலா என்ற பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் இவ்வாறு சொன்னாள்: “சிறு வயதிலிருந்தே கடவுள்தான் என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட். ஆனால் வெறுமனே ‘கடவுள்’ என்று சொல்வதில், எனக்கு எந்த ஒட்டுதலும் ஏற்படாததால் அவருடைய பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று எப்போதுமே ஆசைப்பட்டேன். அதற்காக 17 வயதுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது யெகோவாவின் சாட்சிகள் என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். கடவுளைப் பற்றி என்னென்ன தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேனோ அவை எல்லாவற்றையும் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள். கடைசியாக, சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன், அது எத்தனை அருமையாக இருந்தது! தலைகால் புரியாதளவு சந்தோஷம் ஏற்பட்டதால், எல்லாரிடமும் பிரசங்கிக்க ஆரம்பித்தேன்.” இத்தனை ஆர்வமாக அவள் பேசுவதைக் கண்ட பள்ளித் தோழிகள் அவளைக் கேலி செய்யத் தொடங்கினார்கள். “ஆனால், என்னைப் பொறுத்தவரை இது ஒரு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகவே இருந்தது. ஏனென்றால், இயேசுவுடைய பெயரினிமித்தம் அவரது சீஷர்கள் பகைக்கப்படுவார்கள், துன்புறுத்தப்படுவார்கள் என அவர் சொன்னதை அறிந்திருந்தேன். அதனால் எனக்கு ஒரே சந்தோஷமாயும் ஆச்சரியமாயும் இருந்தது.” டான்யலா சீக்கிரத்திலேயே யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றாள்; அதன் பிறகு மிஷனரி ஊழியம் செய்யும் இலக்கை அடைய முயன்றாள். திருமணத்திற்குப் பிறகு டான்யலாவும் அவரது கணவர் ஹெல்மூட்டும் வியன்னாவிலுள்ள ஆப்பிரிக்கர், சீனர், பிலிப்பீன்ஸ் நாட்டவர், இந்தியர் ஆகியோருக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் இப்போது தென்மேற்கு ஆப்பிரிக்காவில் மிஷனரிகளாகச் சேவை செய்கிறார்கள்.
அவர்கள் சோர்ந்துவிடுவதில்லை
8. பலர், கடவுள் மீதுள்ள அன்பையும் அவருடைய ராஜ்யத்தின் மீதுள்ள பற்றுறுதியையும் வெளிக்காட்டியிருக்கும் ஒரு சிறந்த வழி எது?
8 ஆம், இன்று யெகோவாவின் ஜனங்கள் அவர் மீதுள்ள அன்பையும் அவரது ராஜ்யத்தின் மீதுள்ள பற்றுறுதியையும் காட்டுகிற வழிகளில் ஒன்றுதான் மிஷனரி சேவை. இயேசுவின் உவமையிலுள்ள அந்த வியாபாரியைப் போல இந்தச் சேவையில் ஈடுபடுகிறவர்கள் ராஜ்யத்தின் நிமித்தம் தொலைதூர இடங்களுக்குப் பயணிக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உண்மைதான், இந்த மிஷனரிகள் ராஜ்ய நற்செய்தியைக் கண்டுபிடிப்பதற்காக இவ்வாறு பயணிப்பதில்லை. ஆனால் உலகின் மூலைமுடுக்கில் உள்ளோருக்கெல்லாம் இந்த நற்செய்தியை அறிவிக்கவே செல்கிறார்கள்; இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக அவர்களுக்கு உதவுவதற்காகவே அவ்வாறு செல்கிறார்கள். (மத்தேயு 28:19, 20) பல நாடுகளில் இந்த மிஷனரிகள் பயங்கரமான கஷ்டங்களைச் சகிக்க வேண்டியுள்ளது. என்றாலும் அவர்களுடைய சகிப்புத்தன்மைக்கு அமோக பலன் கிடைத்து வருகிறது.
9, 10. மத்திய ஆப்பிரிக்க குடியரசு போன்ற தொலைதூர இடங்களில் மிஷனரிகள் என்ன ஆர்வமூட்டும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள்?
9 உதாரணமாக, மத்திய ஆப்பிரிக்க குடியரசை எடுத்துக்கொள்ளுங்கள். அங்குக் கடந்த ஆண்டு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு 16,184 பேர் வந்திருந்தார்கள், அதாவது அந்த நாட்டிலுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளைவிட சுமார் ஏழு மடங்கு அதிகமானோர் வந்திருந்தார்கள். அங்கு பல பகுதிகளில் மின்வசதி இல்லாததால், மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை வெளியே மரத்தடியில் உட்கார்ந்து செய்கிறார்கள். மிஷனரிகளும் அவ்வாறே மரத்தடியில் உட்கார்ந்து பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். வெளியில் வெளிச்சமாகவும் குளுகுளுவெனவும் இருப்பதோடு, மற்றொரு நன்மையும் உண்டு. இங்குள்ளவர்களுக்கு இயல்பாகவே பைபிள் மீது மதிப்பு இருக்கிறது; அதுமட்டுமல்ல, விளையாட்டு நிகழ்ச்சிகளையும் சீதோஷ்ண நிலையையும் பற்றி மற்றக் கலாச்சாரத்தினர் சர்வசகஜமாகப் பேசிக்கொள்வதைப் போல, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசும் பழக்கமும் இவர்கள் மத்தியில் இருக்கிறது. எனவே, வெளியில் அமர்ந்து பைபிள் படிப்பு நடத்துகையில் போவோர் வருவோர்கூட பெரும்பாலும் படிப்பில் கலந்துகொள்வார்கள்.
10 ஒரு மிஷனரி இப்படி வெளியே உட்கார்ந்து பைபிள் படிப்பு நடத்தியபோது, அத்தெருவின் மறுபுறத்தில் வசிக்கும் ஓர் இளைஞர் தன்னை இதுவரை யாரும் வந்து சந்திக்காததால் தன்னுடைய வீட்டிற்கும் வந்து பைபிள் படிப்பு நடத்த வேண்டுமென்று அவரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த மிஷனரி சந்தோஷமாகச் சம்மதித்தார்; இப்போது அந்த இளைஞர் நன்கு முன்னேறி வருகிறார். அந்த நாட்டில் போலீசார் அடிக்கடி யெகோவாவின் சாட்சிகளை வழிமறிப்பார்களாம்; அவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கு அல்ல, ஆனால் புது காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களை வாங்கிக் கொள்வதற்காக; இல்லையென்றால், அவர்கள் வாசித்து மகிழ்ந்த ஒரு கட்டுரைக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக அப்படி வழிமறிப்பார்களாம்.
11. கஷ்டங்கள் மத்தியிலும், நீண்ட கால மிஷனரிகள் தங்களுடைய ஊழியத்தை எப்படிக் கருதுகிறார்கள்?
11 நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிஷனரிகளாகச் சேவை செய்ய ஆரம்பித்தவர்களில் அநேகர் இன்னமும் உண்மையோடு ஊழியம் செய்து வருகிறார்கள். விசுவாசத்திற்கும் விடாமுயற்சிக்கும் இவர்கள் நமக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரி! ஒரு மிஷனரி தம்பதியர் கடந்த 42 வருடங்களாக மூன்று நாடுகளில் சேவை செய்திருக்கிறார்கள். அந்தச் சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “கஷ்டங்கள் இருக்கத்தான் செய்தன. உதாரணத்திற்கு, மலேரியா காய்ச்சலிலிருந்து தப்பிக்க 35 வருஷம் போராடினோம். ஆனாலும், மிஷனரி சேவையைத் தேர்ந்தெடுத்ததை நினைத்து ஒருபோதும் நாங்கள் வருத்தப்பட்டதே இல்லை.” அவருடைய மனைவி இவ்வாறு சொல்கிறார்: “நன்றி சொல்ல எங்களுக்கு எப்போதுமே நிறைய விஷயங்கள் இருந்திருக்கின்றன. வெளி ஊழியத்தில் ஈடுபடுவதென்றால் அப்படியொரு சந்தோஷம், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதும் எளிதாக இருந்தது. பைபிள் படிக்கிறவர்கள் கூட்டங்களுக்கு வந்து எல்லாருடனும் ஒட்டி உறவாடுவதைப் பார்க்கும்போது குடும்ப அங்கத்தினர்களெல்லாம் ஒன்றுகூடி மகிழ்வதைப் போல் இருக்கும்.”
அவர்கள் ‘எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணுகிறார்கள்’
12. ராஜ்யத்தின் மதிப்பை உண்மையிலேயே உயர்வாகக் கருதுவதை ஒரு நபர் எப்படிக் காட்டுகிறார்?
12 உவமையில் சொல்லப்பட்ட அந்த வியாபாரி விலையுயர்ந்த முத்தைக் கண்டுபிடித்ததும் ‘தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை [வாங்கிக்] கொண்டார்.’ (மத்தேயு 13:46) மதிப்புள்ள ஒன்றைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயாராய் இருப்பதே ராஜ்யத்தின் மதிப்பை உண்மையிலேயே உயர்வாகக் கருதுபவர்களின் விசேஷ பண்பாகும். கடவுளுடைய ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு இருக்கப்போகும் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “என் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையினிமித்தம் எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணி வருகிறேன். அவர் நிமித்தம் எல்லாவற்றையும் நஷ்டமாக இழந்தேன், அவற்றைக் குப்பையாக எண்ணி வருகிறேன். நான் கிறிஸ்துவை லாபமாகக் கருதுவதற்கு . . . இப்படி எண்ணி வருகிறேன்.”—பிலிப்பியர் 3:8, திருத்திய மொழிபெயர்ப்பு.
13. செக் குடியரசிலிருந்த ஒருவர் ராஜ்யத்தின் மீது தனக்கிருந்த அன்பை எப்படிக் காட்டினார்?
13 அதேவிதமாக, இன்று அந்த ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற அநேகர் தங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். உதாரணமாக, 2003, அக்டோபர் மாதம் செக் குடியரசிலுள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற ஒரு பைபிள் பிரசுரம் கிடைத்தது. 60 வயதான அவர் அதைப் படித்த பிறகு, அப்பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தொடர்புகொண்டார்; பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அவர் ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேறினார், எல்லாக் கூட்டங்களுக்கும் வரத் தொடங்கினார். என்றாலும், ஒரு மேயராகவும் பிற்பாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆவதற்கு அவர் திட்டமிட்டிருந்தது என்ன ஆனது? இப்போது அவர் வேறொன்றைச் செய்யத் தீர்மானித்தார், அதாவது ஒரு ராஜ்ய பிரசங்கிப்பாளராக ஆக வேண்டுமெனத் தீர்மானித்தார். “என் பள்ளி மாணவர்களிடம் ஏகப்பட்ட பைபிள் பிரசுரங்களைக் கொடுக்க முடிந்தது” என அவர் சொன்னார். அவர் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து 2004, ஜூலை மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார்.
14. (அ) ராஜ்ய நற்செய்தி லட்சக்கணக்கானோரை என்ன செய்யத் தூண்டியிருக்கிறது? (ஆ) சிந்தையைத் தூண்டும் என்ன கேள்விகளை நாம் எல்லாரும் கேட்டுக்கொள்ளலாம்?
14 இதேவிதமாக, உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கானோர் ராஜ்ய நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொல்லாத ஜனங்களைவிட்டு விலகி, பழைய சுபாவத்தை மாற்றிக்கொண்டு, பழைய சகவாசங்களுக்கு எல்லாம் முழுக்குப் போட்டுவிட்டு, உலகப்பிரகாரமான நாட்டங்களை விட்டொதுக்கி இருக்கிறார்கள். (யோவான் 15:19; எபேசியர் 4:22-24; யாக்கோபு 4:4; 1 யோவான் 2:15-17) அவர்கள் ஏன் இந்த மாற்றங்களையெல்லாம் செய்கிறார்கள்? ஏனென்றால் இன்றைய உலகம் அளிக்கிற எதையும்விட கடவுளுடைய ராஜ்ய ஆசீர்வாதங்களை அவர்கள் மிக மிக உயர்வாய்க் கருதுகிறார்கள். ராஜ்ய நற்செய்தியைப் பற்றி நீங்களும் அப்படித்தான் கருதுகிறீர்களா? இந்த நற்செய்தி உங்களுடைய வாழ்க்கை முறை, மதிப்பீடுகள், லட்சியங்கள் ஆகியவற்றை யெகோவாவின் எதிர்பார்ப்புக்கு இசைய மாற்றியமைக்க உங்களைத் தூண்டுகிறதா? அவ்வாறு மாற்றங்களைச் செய்யும்போது இப்போதும் எப்போதும் அபரிமிதமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெறுவீர்கள்.
அறுவடை முடிவுக்கு வருகிறது
15. கடைசி நாட்களில் கடவுளுடைய மக்கள் என்ன செய்வார்களென தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது?
15 சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “உமது படைக்கு நீர் தலைமை தாங்கும் நாளிலே உம்முடைய ஜனங்கள் தங்களையே மனமுவந்து அளிப்பார்கள்.” அப்படித் தங்களை அளிப்பவர்களில் ‘பனித்துளிகளுக்குச் சமமான இளம் ஆண்களின் கூட்டமும்’ ‘நற்செய்தியைப் பிரசித்தப்படுத்துகிற பெண்களின் ஒரு பெரிய சேனையும்’ இருக்கிறது. (சங்கீதம் 68:11, NW; 110:3, NW) இந்தக் கடைசி நாட்களில், ஆண்கள் பெண்கள், சிறியோர் பெரியோர் என யெகோவாவுடைய மக்கள் அனைவரும் ஊக்கத்தோடும் சுய தியாக மனப்பான்மையோடும் செயல்பட்டிருப்பதால் என்ன பலன் கிடைத்திருக்கிறது?
16. ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்கள் கற்றுக்கொள்வதற்கு கடவுளுடைய ஊழியர்கள் எப்படி உதவி வருகிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
16 இந்தியாவிலுள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான காதுகேளாதோருக்கு, ராஜ்யத்தைப் பற்றி எப்படிக் கற்றுக்கொடுப்பது என அங்குள்ள ஒரு பயனியர் சகோதரி, அதாவது ஒரு முழுநேர ராஜ்ய பிரசங்கிப்பாளர் யோசித்தார். (ஏசாயா 35:5) உடனே ஓர் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து சைகை மொழியைக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். அங்கு வந்த காதுகேளாதோர் பலரிடம் ராஜ்யத்தைப் பற்றிப் “பேசினார்,” அதன் பலனாக பைபிள் படிப்பு தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. சில வாரங்களிலேயே, ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு 12 பேருக்கும் அதிகமானோர் வர ஆரம்பித்தார்கள். பிற்பாடு, ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அந்தப் பயனியர் சகோதரி, கொல்கத்தாவிலிருந்து வந்திருந்த காதுகேளாத ஓர் இளைஞரைச் சந்தித்தார்; அவருக்கு ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன, யெகோவாவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதில் ஒரு பிரச்சினை இருந்தது. அந்த இளைஞர் பள்ளி படிப்பிற்காக, சுமார் 1,600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொல்கத்தாவுக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது; அங்கு சைகை மொழி தெரிந்த யெகோவாவின் சாட்சிகள் யாருமே கிடையாது. ஆகவே பைபிள் படிப்பு தடைபடாதிருக்க, பெங்களூரிலுள்ள பள்ளியிலேயே அவர் படிக்க விரும்பினார்; அதற்காக தன் அப்பாவிடம் ரொம்பவும் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்றார். பிறகு ஆன்மீக ரீதியில் அவர் நன்கு முன்னேறினார், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். பிற்பாடு, தன்னுடைய பாலிய நண்பனுக்கும் காதுகேளாத இன்னும் பலருக்கும் பைபிள் படிப்பு நடத்தினார். பயனியர்கள் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு காதுகேளாதோருக்கு உதவுவதற்காக இந்தியக் கிளை அலுவலகம் தற்போது ஏற்பாடு செய்து வருகிறது.
17. பக்கங்கள் 19-22-ல் உள்ள 2004-ஆம் ஊழிய ஆண்டு அறிக்கையில் உங்களுக்கு உற்சாகமூட்டுவதாய் இருப்பவற்றைக் குறிப்பிடுங்கள்.
17 இப்பத்திரிகையின் 19-22 பக்கங்களில் 2004-ஆம் ஊழிய ஆண்டுக்கான யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய அறிக்கையை நீங்கள் காணலாம். அதை ஆராய சற்று நேரம் செலவிடுங்கள். இன்று உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் மக்கள், ‘விலையுயர்ந்த முத்தை’ நாடித்தேடுவதில் ஒரே குறியாக இருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சிகளை நீங்களே பாருங்கள்.
‘முதலாவது ராஜ்யத்தைத் தேடிக்கொண்டே இருங்கள்’
18. பயணிக்கிற வியாபாரியைப் பற்றிய உவமையில் எதை இயேசு குறிப்பிடவில்லை, ஏன்?
18 மீண்டும் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த வியாபாரியை எடுத்துக்கொள்வோம். அவர் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டதால் இனி தன் வாழ்க்கையை எப்படி ஓட்டப்போகிறார் என்பதைப் பற்றி இயேசு எதுவுமே குறிப்பிடாததைக் கவனியுங்கள். சிலர் நியாயமாகவே இப்படிக் கேட்கலாம்: ‘இப்போது அந்த வியாபாரியிடம்தான் ஒன்றுமே இல்லையே, பிறகு அவர் எப்படி உணவு, உடை, உறைவிடம் ஆகிய தேவைகளையெல்லாம் கவனித்துக்கொள்வார்? அந்த விலையுயர்ந்த முத்தை வெறுமனே வைத்திருப்பதால் அவருக்கென்ன லாபம்?’ உலகப்பிரகாரமான கண்ணோட்டத்தில் அவை யாவும் நியாயமான கேள்விகளே. ஆனால், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொல்லியிருந்தார் அல்லவா? (மத்தேயு 6:31-33) கடவுள் மீது உள்ளப்பூர்வமான பக்தியையும் அவருடைய ராஜ்யத்திடம் வைராக்கியத்தையும் வெளிக்காட்டுவது அவசியம் என்பதே இந்த உவமையின் முக்கிய கருத்தாகும். இதில் நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா?
19. ‘விலையுயர்ந்த முத்தைப்’ பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து நாம் என்ன முக்கிய பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
19 அருமையான நற்செய்தியைப் பற்றி நமக்கு இப்போதுதான் தெரிய வந்திருந்தாலும் சரி, அநேக வருடங்களாகவே ராஜ்யத்தை நாடித்தேடி, அதன் ஆசீர்வாதங்களைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்து வந்திருந்தாலும் சரி, முழுக்க முழுக்க நம்முடைய கவனத்தை எப்போதும் ராஜ்யத்தின் மீதே ஒருமுகப்படுத்த வேண்டும். நாம் வாழ்வது கடினமான காலம்தான், என்றாலும், அந்த வியாபாரி கண்டுபிடித்த முத்தைப் போன்ற நிஜமான, நிகரற்ற ஒன்றையே நாம் நாடித்தேடுகிறோம் என்பதற்கு நம்மிடம் மறுக்க முடியாத காரணங்கள் இருக்கின்றன. நாம் இந்த ‘உலகத்தின் முடிவில்’ வாழ்கிறோம் என்பதற்கு உலகச் சம்பவங்களும் நிறைவேறிய பைபிள் தீர்க்கதரிசனங்களும் நம்பகமான ஆதாரத்தை அளிக்கின்றன. (மத்தேயு 24:3) பயணிக்கிற அந்த வியாபாரியைப் போல நாமும் கடவுளுடைய ராஜ்யத்திடம் உள்ளப்பூர்வமான வைராக்கியத்தைக் வெளிக்காட்டுவோமாக, நற்செய்தியைப் பிரசங்கிக்கிற சிலாக்கியத்திற்காக மகிழ்ந்து களிகூருவோமாக.—சங்கீதம் 9:1, 2.
நினைவிருக்கிறதா?
• கடந்த சில வருடங்களாகவே உண்மை வணக்கத்தாரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதற்குக் காரணம் என்ன?
• மிஷனரிகளிடம் என்ன மனப்பான்மை காணப்படுகிறது?
• ராஜ்ய நற்செய்தியின் நிமித்தம் ஆட்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்?
• ‘விலையுயர்ந்த முத்தைப்’ பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து நாம் என்ன மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 19-22-ன் அட்டவணை]
2004 உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை
(பவுண்டு வால்யூமைப் பார்க்கவும்)
[பக்கம் 14-ன் படம்]
“சத்தியம் . . . எல்லா வகையான ஆட்களையும் கவர்ந்திழுக்கிறது.”—ஏ. எச். மேக்மில்லன்
[பக்கம் 15-ன் படம்]
டான்யலாவும் ஹெல்மூட்டும் வியன்னாவில் பிற மொழி பேசுவோரிடம் பிரசங்கித்தார்கள்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
பயணிக்கிற வியாபாரியைப் போலவே இன்று மிஷனரிகளும் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்
[பக்கம் 17-ன் படம்]
“உம்முடைய ஜனங்கள் தங்களையே மனமுவந்து அளிப்பார்கள்”