‘விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்தல்’
“பரலோக ராஜ்யமே மனிதர் பிரயாசப்படுகிற இலக்காக உள்ளது, தொடர்ந்து பிரயாசப்படுவோர் அதைப் பற்றிக்கொள்கின்றனர்.”—மத்தேயு 11:12, NW.
1, 2. (அ) ராஜ்யத்தைப் பற்றிய ஓர் உவமையில் அரிதான என்ன குணத்தை இயேசு குறிப்பிட்டார்? (ஆ) விலையுயர்ந்த ஒரு முத்தைப் பற்றிய உவமையில் இயேசு என்ன சொன்னார்?
உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் கொடுத்து அல்லது தியாகம் செய்து பெற்றுக்கொள்கிற அளவுக்கு நீங்கள் உயர்வாக மதிக்கும் ஏதாவது ஒன்று உள்ளதா? பணம், புகழ், பதவி போன்ற ஏதேனுமொரு இலக்கை அடைய கருமமே கண்ணாக இருப்பதைப் பற்றி ஆட்கள் பேசுவது உண்மைதான்; ஆனால், மிகவும் விரும்பத்தக்க ஒன்றை அடைவதற்காக ஒரு நபர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் தியாகம் செய்ய முன்வருவது வெகு அரிதே. இப்படிப்பட்ட அரிதான, அதே சமயத்தில் அருமையான குணத்தைப் பற்றி இயேசு குறிப்பிட்டார்; கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சிந்திக்கத் தூண்டும் உவமைகள் ஒன்றில் அதைக் குறிப்பிட்டார்.
2 இயேசு தம் சீஷர்களோடு தனித்திருக்கும்போது, ‘விலையுயர்ந்த ஒரு முத்தைப்’ பற்றிய அந்த உவமையைச் சொன்னார். அதை அவர் இப்படியாக விளக்கினார்: “பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற [அதாவது, தேடிப் பயணிக்கிற] ஒரு வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” (மத்தேயு 13:36, 45, 46) தம் சீஷர்கள் இந்த உவமையிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இயேசு விரும்பினார்? இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
மதிப்புமிக்க முத்துக்கள்
3.பூர்வ காலங்களில் நல்முத்துக்கள் ஏன் அந்தளவு மதிப்புமிக்கவையாய் இருந்தன?
3 பழங்காலத்திலிருந்தே முத்துக்கள் அலங்காரப் பொருள்களாக உயர்வாய் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. “விலைமதிப்புள்ள எல்லாப் பொருட்களுக்கும் மேலாக முதல் இடத்தைப்” பிடித்திருந்தது முத்துக்களே என ரோம எழுத்தாளரான மூத்த பிளைனி குறிப்பிட்டதாக ஒரு புத்தகம் சொல்கிறது. பொன், வெள்ளி, பற்பல இரத்தினக் கற்கள் ஆகியவற்றைப் போல் அல்லாமல் முத்துக்கள் உயிரினங்களால் உருவாக்கப்படுகின்றன. யாவரும் அறிந்தபடி, சில வகை சிப்பிகள் அவற்றின் உடலுக்குள் சென்று உறுத்துகிற பொருட்களை, உதாரணமாக மண் துகள்களை, பளபளக்கும் முத்துக்களாக உருமாற்ற முடியும். எப்படி? உறுத்துகிற அந்த மண் துகள்களை மூடும் விதத்தில் நேக்கர் என்ற ஒருவித திரவத்தை அவை சுரக்கின்றன; அடுக்கடுக்காகப் படிகிற இந்தத் திரவம் பிற்பாடு முத்துக்களாக உருவாகின்றன. பூர்வ காலங்களில், இஸ்ரவேல் தேசத்திற்கு வெகு தொலைவில் உள்ள கடல்களிலிருந்து, முக்கியமாக செங்கடலிலிருந்தும் பெர்சிய வளைகுடாவிலிருந்தும் இந்தியப் பெருங்கடலிலிருந்துமே நல்முத்துக்கள் எடுக்கப்பட்டன. அதனால்தான் ‘நல்ல முத்துக்களைத் தேடிப் பயணிக்கிற ஒரு வியாபாரியைப்’ பற்றி இயேசு குறிப்பிட்டார். ஆம், மிகவும் விலைமதிப்புள்ள முத்துக்களைக் கண்டுபிடிக்க பெருமுயற்சி தேவை.
4.பயணிக்கிற வியாபாரியைப் பற்றிய உவமையில் இயேசு எதைச் சுட்டிக்காட்டினார்?
4 பண்டைய காலம் தொட்டே நல்முத்துக்கள் அதிக விலை போனாலும், அதன் பண மதிப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக இயேசு இந்த உவமையைச் சொல்லவில்லை. இந்த உவமையில் கடவுளுடைய ராஜ்யத்தை விலையுயர்ந்த ஒரு முத்துக்கு ஒப்பிடுவதோடு அவர் நிறுத்திவிடவில்லை; ‘நல்ல முத்துக்களைத் தேடிப் பயணிக்கிற ஒரு வியாபாரியிடம்’ கவனத்தை ஈர்த்தார், அதோடு ஒரு நல்முத்தைக் கண்டுபிடித்ததும் அந்த வியாபாரி என்ன செய்தார் என்பதனிடமும் கவனத்தை ஈர்த்தார். முத்தைத் தேடிப் பயணித்த வியாபாரி ஒரு சாதாரணக் கடைக்காரரைப் போல் இருக்கவில்லை; முத்தைப் பற்றிய சகல விவரங்களையும் கூர்ந்து கவனிப்பவராக, அல்லது அதற்கே உரிய அழகையும் நுணுக்கங்களையும் அறிந்த கலைஞராக அவர் இருந்தார். முத்தைப் பார்த்த மாத்திரத்தில் அது நிஜமானதா என்பதைக் கண்டுபிடித்து விடும் திறமையுள்ளவராக இருந்தார், ஆகவே தரம் குறைந்த முத்தை அல்லது போலி முத்தை வாங்கி ஏமாறாதிருந்தார்.
5, 6. (அ) இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த வியாபாரியைப் பற்றியதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன? (ஆ) நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைப் பற்றிய உவமை பயணிக்கிற வியாபாரியைக் குறித்து எதை வெளிப்படுத்துகிறது?
5 இந்த வியாபாரியைப் பற்றியதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது. ஒரு சாதாரண வியாபாரி, முத்து எத்தனை விலைக்குப் போகும் என்பதை முதலில் கணக்கிடுவார்; அப்போதுதான் எவ்வளவு விலைக்கு அதை வாங்கினால் தனக்கு லாபம் கிடைக்கும் என்பதை அவரால் தீர்மானிக்க முடியும். உடனடியாக விலைபோகும் அளவுக்கு அத்தகைய முத்துக்கு ஜனங்கள் மத்தியில் கிராக்கி இருக்கிறதா என்பதையும் அவர் சிந்தித்துப் பார்ப்பார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அந்த முத்தைச் சொந்தமாய் வைத்துக் கொள்ள விரும்புவதற்குப் பதிலாக, தான் போட்ட முதலுக்கு உடனடியாக லாபம் கிடைக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருப்பார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரிக்கு அப்படிப்பட்ட எண்ணம் இருக்கவில்லை. லாபம் சம்பாதிப்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால், தான் தேடிக்கொண்டிருந்த பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக, “தனக்குண்டான எல்லாவற்றையும்,” ஒருவேளை சொத்துபத்துகள் எல்லாவற்றையுமே விற்றுவிட அவர் தயாராய் இருந்தார்.
6 பெரும்பாலான வியாபாரிகளின் பார்வைக்கு இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த வியாபாரி செய்தது முட்டாள்தனமான ஒரு காரியமாகத் தோன்றலாம். விவரமான ஒரு வியாபாரி, இப்படிப்பட்ட வியாபாரத்தில் துணிந்து இறங்குவதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரிக்கு வித்தியாசப்பட்ட மதிப்பீடுகள் இருந்தன. பொருளாதார ஆதாயத்தை அல்ல, ஆனால் ஒப்பற்ற மதிப்புடைய ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கிற மகிழ்ச்சியையும் திருப்தியையுமே அவர் லாபமாகக் கருதினார். இயேசு சொன்ன இதே போன்ற மற்றொரு உவமையில் இந்தக் குறிப்பு தெளிவுபடுத்தப்படுகிறது. “பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 13:44) ஆம், அந்தப் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்து அதைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனக்குண்டான எல்லாவற்றையும் விற்றுப்போட அந்த வியாபாரியைத் தூண்டியது. இவரைப் போன்ற ஆட்கள் இன்று இருக்கிறார்களா? இப்படியொரு தியாகம் செய்யுமளவுக்கு மதிப்புடைய பொக்கிஷம் ஏதாவது இருக்கிறதா?
விலைமதிப்பை உணர்ந்தவர்கள்
7. ராஜ்யத்தின் உயர் மதிப்பை இயேசு நன்கு உணர்ந்திருந்ததை எப்படிக் காட்டினார்?
7 இயேசு தம் உவமையில் ‘பரலோக ராஜ்யத்தைப்’ பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ராஜ்யத்தின் உயர் மதிப்பை அவர் தாமே உணர்ந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. சுவிசேஷப் பதிவுகள் இதற்கு ஆணித்தரமான ஆதாரங்களை அளிக்கின்றன. பொ.ச. 29-ல் அவர் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” திரளானோருக்கு ராஜ்யத்தைப் பற்றி மூன்றரை ஆண்டுகள் போதித்தார். தேசமெங்கும் சுற்றித் திரிந்து, ‘பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம் பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்தார்.’—மத்தேயு 4:17; லூக்கா 8:1.
8. கடவுளுடைய ராஜ்யம் எதையெல்லாம் சாதிக்கும் என்பதைக் காட்ட இயேசு என்னென்ன செய்தார்?
8 கடவுளுடைய ராஜ்யம் எதையெல்லாம் சாதிக்கும் என்பதைக்கூட இயேசு காட்டினார். சுகவீனரைச் சுகப்படுத்துவது, பசித்தோருக்கு உணவளிப்பது, இயற்கை சக்திகளை அடக்குவது, மரித்தோரை உயிர்த்தெழுப்புவது எனத் தேசம் முழுவதும் எண்ணற்ற அற்புதங்கள் மூலம் அதைச் செய்து காட்டினார். (மத்தேயு 14:14-21; மாற்கு 4:37-39; லூக்கா 7:11-17) கடைசியாக, கழுமரத்தில் ஒரு தியாகியாகத் தம்முடைய உயிரையே கொடுப்பதன் மூலம் கடவுள் மீதும் அவருடைய ராஜ்யத்தின் மீதுமுள்ள தம் பற்றுறுதியை நிரூபித்துக் காட்டினார். உவமையிலுள்ள அந்த வியாபாரி, ‘விலையுயர்ந்த ஒரு முத்துக்காக’ எல்லாவற்றையும் விற்றுவிட்டதைப் போல இயேசுவும் ராஜ்யத்திற்காகவே வாழ்ந்தார், ராஜ்யத்திற்காகவே உயிர்விட்டார்.—யோவான் 18:37.
9. இயேசுவின் முதல் சீஷர்களிடத்தில் என்ன ஓர் அரிய குணம் காணப்பட்டது?
9 கடவுளுடைய ராஜ்யத்தை இயேசு தம் வாழ்க்கையில் மையமாக வைத்தது மட்டுமல்லாமல், சில சீஷர்களையும் கூட்டிச் சேர்த்தார். அவர்களும்கூட ராஜ்யத்தின் உயர் மதிப்பை நன்கு உணர்ந்தவர்களாய் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான அந்திரேயா, முழுக்காட்டுபவரான யோவானின் சீஷனாக ஆரம்பத்தில் இருந்தார். இயேசுவைத் ‘தேவ ஆட்டுக்குட்டி’ என யோவான் குறிப்பிட்டவுடன் அந்திரேயாவும் யோவானின் மற்றொரு சீஷனும் (அநேகமாய் செபெதேயுவின் குமாரன் யோவானாக இருக்கலாம்) அவரிடமாக மனங்கவரப்பட்டு அவரது சீஷரானார்கள். விஷயம் அத்தோடு நின்றுவிடவில்லை. அந்திரேயா உடனடியாகத் தன் சகோதரனான சீமோனிடம் சென்று “மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னார். அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே சீமோனும் (இவர் பிற்பாடு கேபா, அதாவது பேதுரு என அழைக்கப்பட்டார்) பிலிப்புவும் அவருடைய நண்பரான நாத்தான்வேலும் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டார்கள். சொல்லப்போனால், அவரிடம் “நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” எனச் சொல்லும்படி நாத்தான்வேல் தூண்டப்பட்டார்.—யோவான் 1:35-49.
செயல்படத் தூண்டப்படுதல்
10. இயேசு தம் சீஷர்களை முதலில் சந்தித்து கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்து அவர்களை அழைத்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்?
10 மேசியாவைக் கண்டவுடன் அந்திரேயா, பேதுரு, யோவான் ஆகியோரும் இன்னும் அநேகரும் அடைந்த மகிழ்ச்சியை விலையுயர்ந்த முத்தைக் கண்டுபிடித்த அந்த வியாபாரி அடைந்த மகிழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அதன் பிறகு அந்தச் சீஷர்கள் என்ன செய்தார்கள்? அதைப் பற்றி சுவிசேஷப் பதிவுகள் அதிகமாகச் சொல்வதில்லை. அவர்களில் பலர் தங்கள் பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பிவிட்டிருக்கலாம். என்றாலும் சுமார் ஆறிலிருந்து பன்னிரெண்டு மாதத்திற்குப் பிறகு, அந்திரேயா, பேதுரு, யோவான், அவருடைய சகோதரனான யாக்கோபு ஆகியோர் கலிலேயாக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இயேசு மீண்டும் அவர்களைச் சந்தித்தார்.a அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்று சொன்னார். அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்? “உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்” எனப் பேதுருவையும் அந்திரேயாவையும் பற்றி மத்தேயுவின் சுவிசேஷப் பதிவு கூறுகிறது. யாக்கோபும் யோவானுமோ தங்கள் ‘படகையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்’ என அப்பதிவில் நாம் வாசிக்கிறோம். லூக்காவின் சுவிசேஷம் இன்னும் ஒருபடி மேலாக, அவர்கள் “எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்” எனக் குறிப்பிடுகிறது.—மத்தேயு 4:18-22; லூக்கா 5:1-11.
11. இயேசு அழைத்தவுடன் அவருக்குப் பின்செல்ல சீஷர்களை எது தூண்டியிருக்கும்?
11 ஏதோவொரு உணர்ச்சி வேகத்தில்தான் அந்தச் சீஷர்கள் இயேசுவுக்குப் பின்செல்ல முடிவெடுத்தார்களா? இல்லவே இல்லை! இயேசுவை முதன்முறை சந்தித்ததற்குப் பிறகு பழையபடி அவர்கள் மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பிவிட்டிருந்த போதிலும், அந்த முதல் சந்தர்ப்பத்தில் அவர்கள் கண்ட, கேட்ட காரியங்கள் அவர்களுடைய இதயத்திலும் மனதிலும் அழியா முத்திரையைப் பதித்துவிட்டிருந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில், அதாவது சுமார் ஒரு வருட காலத்தில் அந்தக் காரியங்களை அவர்கள் எண்ணிப் பார்ப்பதற்குப் போதுமான சமயம் இருந்தது. இப்போதோ தீர்மானம் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டிருந்தது. இயேசு சொன்ன அந்த வியாபாரி விலையுயர்ந்த முத்தைத் தேடிக் கண்டுபிடிக்க அந்தளவு மனம் தூண்டப்பட்டதால் ‘உடனடியாகப் போய்’ அதை வாங்குவதற்குத் தேவையானவற்றை செய்தார், இயேசுவின் சீஷர்களும் அந்த வியாபாரியைப் போலவே இருந்தார்களா? ஆம், சீஷர்கள் கண்ட, கேட்ட காரியங்கள் அவர்களது இருதயத்தைத் தூண்டின. செயல்படுவதற்கான காலம் வந்துவிட்டதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே, பதிவு சொல்கிறபடி அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவின் சீஷரானார்கள்.
12, 13. (அ) இயேசுவின் அழைப்புக்கு அநேகர் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) தம்முடைய உண்மையுள்ள சீஷர்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார், அவருடைய வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன?
12 சுவிசேஷங்களில் பிற்பாடு குறிப்பிடப்பட்டுள்ள சிலருக்கும் இந்த உண்மையுள்ள சீஷர்களுக்கும் இடையே எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! அநேகருக்கு இயேசு சுகமளித்தார், உணவளித்தார், ஆனாலும் அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில்தான் தொடர்ந்து ஈடுபட்டார்கள். (லூக்கா 17:17, 18; யோவான் 6:26) சீஷராகும்படி இயேசுவால் அழைக்கப்பட்ட இன்னும் சிலரோ சாக்குப்போக்குச் சொல்லி திரும்பிப் போய்விட்டார்கள். (லூக்கா 9:59-62) இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த தம்முடைய உண்மையுள்ள சீஷர்களைப் பற்றி பிற்பாடு இயேசு இவ்வாறு சொன்னார்: “யோவான் ஸ்நானன் கால முதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யமே மனிதர் பிரயாசப்படுகிற இலக்காக உள்ளது, தொடர்ந்து பிரயாசப்படுவோர் அதைப் பற்றிக்கொள்கின்றனர்.”—மத்தேயு 11:12, NW.
13 ‘பிரயாசம்,’ ‘தொடர்ந்து பிரயாசப்படுதல்’ ஆகிய வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன? கிரேக்க வினைச் சொல்லிலிருந்து வந்த இவ்வார்த்தைகளைப் பற்றி வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறது: “இந்த வினைச்சொல் கடும் முயற்சியை அர்த்தப்படுத்துகிறது.” இந்த வசனத்தைக் குறித்து ஹைன்ரிச் மெயர் என்ற பைபிள் கல்விமான் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வரவிருக்கும் மேசியானிய ராஜ்யத்தை அடைவதற்காக தணியா ஆர்வத்துடனும் முழு மூச்சுடனும் முயற்சி செய்து போராடுவதுதான் இவ்விதமாக விவரிக்கப்பட்டுள்ளது. . . . (வெறுமனே அமைதலாகக் காத்திருக்காமல்) அந்தளவு ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் ராஜ்யம் சம்பந்தப்பட்டவற்றில் ஈடுபாடு கொள்வதையே வெளிக்காட்டுகிறது.” வெகு சிலராயிருந்த அந்தச் சீஷர்கள் எது உண்மையில் விலைமதிப்புள்ளது என்பதை அந்த வியாபாரியைப் போலவே அறிந்துகொண்டார்கள்; அதனால் ராஜ்யத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட மனமுள்ளவர்களாய் இருந்தார்கள்.—மத்தேயு 19:27, 28; பிலிப்பியர் 3:8.
தேடும் முயற்சியில் மற்றவர்களும்
14. ராஜ்ய பிரசங்க வேலைக்கு அப்போஸ்தலர்களை இயேசு எப்படித் தயார்படுத்தினார், அதன் பலன் என்ன?
14 இயேசு தம் ஊழியத்தின்போது, ராஜ்யத்திற்காகப் பிரயாசப்பட பிறருக்குப் பயிற்சி அளித்தார், உதவியும் செய்தார். முதலாவதாக, தம் சீஷர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை அப்போஸ்தலர்களாக (அவரால் அனுப்பப்பட்டவர்கள் என்று அர்த்தம்) நியமித்தார். ஊழியம் செய்ய வேண்டிய விதத்தின் பேரில் விளக்கமான அறிவுரைகளை இவர்களுக்குக் கொடுத்தார், எதிர்ப்படவிருந்த சவால்களையும் இன்னல்களையும் பற்றிய எச்சரிப்புகளையும் கொடுத்தார். (மத்தேயு 10:1-42; லூக்கா 6:12-16) இப்படிக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் தேசமெங்கும் பயணித்து இயேசுவோடு சேர்ந்து பிரசங்க வேலை செய்தார்கள்; அச்சமயத்தில் அவருடன் நெருங்கிய உறவையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். அவர் பேசிய விஷயங்களைக் காதாரக் கேட்டார்கள், அவர் செய்த வல்லமையான செயல்களைக் கண்ணாரக் கண்டார்கள், அவர் வைத்த முன்மாதிரியையும் நேரில் பார்த்தார்கள். (மத்தேயு 13:16, 17) இவை யாவும் அவர்களை அந்தளவு நெகிழ வைத்ததால், உவமையிலுள்ள வியாபாரியைப் போல அவர்கள் ஆர்வத்தோடும் முழு மனதோடும் ராஜ்யத்தைத் தேட ஆரம்பித்தார்கள்.
15. தம்மைப் பின்பற்றியவர்கள் உண்மையில் எதற்காகச் சந்தோஷப்பட வேண்டுமென இயேசு சொன்னார்?
15 இந்த 12 அப்போஸ்தலர்களை மட்டுமல்ல, இயேசு “வேறே எழுபது பேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” எதிர்ப்படவிருந்த சோதனைகளையும் இன்னல்களையும் பற்றி அவர்களிடமும்கூட தெரிவித்தார், “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது” என்று ஜனங்களுக்குச் சொல்லும்படியும் கட்டளையிட்டார். (லூக்கா 10:1-12) அந்த 70 பேரும் மிகுந்த சந்தோஷத்தோடு திரும்பி வந்து “உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” என்று அவரிடம் சொன்னார்கள். ஆனால், இதைவிடப் பெரும் சந்தோஷத்தை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று அவர் சொன்னார், அதைக் கேட்டு ஒருவேளை அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.—லூக்கா 10:17, 20.
16, 17. (அ) இயேசு தம் உண்மையுள்ள அப்போஸ்தலர்களோடு பூமியில் செலவிட்ட கடைசி இரவில் அவர்களிடம் என்ன சொன்னார்? (ஆ) இயேசுவின் வார்த்தைகள் அப்போஸ்தலர்களுக்கு எத்தகைய சந்தோஷத்தையும் உறுதியையும் அளித்தன?
16 முடிவாக, பொ.ச. 33, நிசான் 14-ம் தேதியன்று இயேசு தம் அப்போஸ்தலர்களோடு பூமியில் செலவிட்ட கடைசி இரவில், ஓர் ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தார். கர்த்தருடைய இராப்போஜனம் என அழைக்கப்படும் அதை வருடா வருடம் ஆசரிக்கும்படியும் கட்டளையிட்டார். அந்த இரவுப் பொழுதில் தம்மோடிருந்த 11 சீஷர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல், நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்.”—லூக்கா 22:19, 20, 28-30.
17 இயேசு சொன்ன இவ்வார்த்தைகள் அப்போஸ்தலர்களின் இதயத்திற்கு எவ்வளவு சந்தோஷமாகவும் இதமாகவும் இருந்திருக்கும்! கிடைப்பதற்கரிய, கெளரவமான, ஒப்பற்ற சிலாக்கியத்தை அவர்கள் பெற்றார்கள். (மத்தேயு 7:13, 14; 1 பேதுரு 2:9) ராஜ்யத்தைத் தேடுவதில் இயேசுவைப் பின்பற்றுவதற்காக அந்த வியாபாரியைப் போல அவர்கள் சகலத்தையும் விட்டுவிட்டு வந்திருந்தார்கள். ஆகவே, அவர்கள் செய்த தியாகமெல்லாம் வீண்போகவில்லை என்ற உறுதியை அவர்கள் பெற்றார்கள்.
18. அப்போஸ்தலர்கள் 11 பேரைத் தவிர வேறு யாரும்கூட அந்த ராஜ்யத்தின் மூலம் பின்னர் நன்மையடைவார்கள்?
18 அந்த ராஜ்யத்தின் மூலம் நன்மையடைகிறவர்கள் அந்த இரவில் இயேசுவோடு இருந்த அப்போஸ்தலர்கள் மட்டுமே அல்ல. மகத்தான அந்தப் பரலோக ராஜ்யத்தில் இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்வதற்கு 1,44,000 பேரை ராஜ்ய உடன்படிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென்பது யெகோவாவின் சித்தமாக இருந்தது. அவர்களைத் தவிர, ‘ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்றுகொண்டு இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக’ என்று சொல்வதை தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவான் கேட்டார். இவர்கள் அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாவர்.b—வெளிப்படுத்துதல் 7:9, 10; 14:1, 4.
19, 20. (அ) சகல தேசத்தாருக்கும் என்ன வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எந்தக் கேள்விக்கான பதில் ஆராயப்படும்?
19 இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்னர் தம்மை உண்மையோடு பின்பற்றியவர்களிடம் இவ்வாறு கட்டளையிட்டார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20) இதன் விளைவாக, சகல தேசத்தாரும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவார்கள். அந்த வியாபாரி நல்முத்தைப் பெற அந்தளவு ஆர்வமாக இருந்தது போல இவர்களும், பரலோக வெகுமதியைப் பெறுபவர்களாக இருந்தாலும் சரி, பூமிக்குரிய வெகுமதியைப் பெறுபவர்களாக இருந்தாலும் சரி, கடவுளுடைய ராஜ்யத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
20 ‘இந்த உலகத்தின் முடிவு’ வரை சீஷராக்கும் வேலை தொடரும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டின. ஆகவே, நம் நாளில், அந்த வியாபாரியைப் போன்றவர்கள், அதாவது கடவுளுடைய ராஜ்யத்திற்கான தேடலில் சகலத்தையும் தியாகம் செய்ய மனமுள்ளவர்கள் இருக்கிறார்களா? இதற்கான பதில் அடுத்தக் கட்டுரையில் ஆராயப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a செபெதேயுவின் குமாரனான யோவான் முதன்முறையாக இயேசுவைச் சந்தித்தப் பிறகு அவரோடு கூடவே சென்றிருக்கலாம், அவர் செய்த சில காரியங்களையும் பார்த்திருக்கலாம்; அதனால்தான் அவரது சுவிசேஷப் பதிவில் அவற்றை மிகத் தத்ரூபமாக விவரித்து எழுதியிருக்கிறார். (யோவான் 2-5 அதிகாரங்கள்) இருந்தாலும், இயேசு மீண்டும் வந்து அழைப்பதற்கு முன், கொஞ்ச காலத்திற்கு மீன்பிடிக்கும் தொழிலுக்கே அவர் திரும்பிவிட்டிருந்தார்.
b கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 10-ம் அதிகாரத்தைக் காண்க.
விளக்க முடியுமா?
• பயணிக்கிற வியாபாரியைப் பற்றிய உவமையின் முக்கியத்துவம் என்ன?
• ராஜ்யத்தின் உயர் மதிப்பை நன்கு உணர்ந்திருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்?
• இயேசு அழைத்தவுடன் அவரைப் பின்தொடர அந்திரேயா, பேதுரு, யோவான் ஆகியோரையும் மற்றவர்களையும் எது தூண்டியது?
• எல்லாத் தேசத்தாருக்கும் முன் என்ன அருமையான வாய்ப்பு இருக்கிறது?
[பக்கம் 10-ன் படம்]
‘அவர்கள் எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்’
[பக்கம் 12-ன் படம்]
இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன், சீஷர்களை உண்டாக்கும்படி தம்மைப் பின்பற்றியவர்களிடம் கட்டளையிட்டார்