உங்களுடைய உயிர் எவ்வளவு மதிப்புள்ளது?
முதல் உலகப் போரின்போது, ஒருபுறத்தில் எண்ணிலடங்கா உயிர்கள் ஐரோப்பாவில் பலியாகிக் கொண்டிருந்தன. மறுபுறத்தில், சில உயிர்களைக் காப்பாற்ற வியக்கத்தக்க முயற்சி அண்டார்டிகாவில் நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலோ-ஐரிஷ் ஆய்வுப் பயணி எர்னஸ்ட் ஷேக்கல்டனுக்கும் அவருடைய சகாக்களுக்கும் பெரும் விபத்து ஏற்பட்டது. அவர்கள் பயணித்த என்டியுரன்ஸ் என்ற கப்பல் பனிக்கட்டி பாறைகளின் மீது மோதி நொறுங்கி நீரில் மூழ்கியது. ஷேக்கல்டனும் அவரது சகாக்களும் எப்படியோ தப்பித்து, ஓரளவு பாதுகாப்பான தென் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள எலிஃபன்ட் தீவுக்கு போய் சேர்ந்தார்கள். ஆனால் அங்கும் அவர்கள் பேராபத்தில்தான் இருந்தார்கள்.
தங்களில் சிலர் தென் ஜார்ஜியா தீவில் இருந்த திமிங்கல நிலையத்திற்கு சென்று உதவி பெற்றால்தான் எல்லாரும் பிழைக்க முடியும் என்பது ஷேக்கல்டனுக்கு புரிந்தது. அத்தீவு 1,100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஆனால் என்டியுரன்ஸ் கப்பலிலிருந்து எடுத்து வந்திருந்த 22 அடி நீளமுள்ள உயிர்காப்பு படகு மட்டுமே அவரிடம் இருந்தது. நம்பிக்கை இருப்பதாகவே தெரியவில்லை.
17 நாட்கள் பல இன்னல்களை அனுபவித்த பிறகு மே 10, 1916 அன்று ஷேக்கல்டனும் அவரது சகாக்களில் சிலரும் ஒருவழியாக தென் ஜார்ஜியாவை சென்றடைந்தார்கள். ஆனால் சீதோஷ்ண நிலை படுமோசமாக இருந்ததால் தீவின் மறுபக்கத்திற்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு, திட்டவட்டமாக எந்தவொரு வழியும் தெரியாமல் பனி போர்த்திய மலைகள் மீது 30 கிலோமீட்டர் தூரம் நடந்தார்கள். மலை ஏறுவதற்குரிய எந்தக் கருவியுமின்றி, வெடவெடக்கும் அந்தக் குளிரில் அவர்கள் சென்றார்கள். இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் ஷேக்கல்டனும் அவரது சகாக்களும் போய்ச் சேர வேண்டிய இடத்தை ஒருவழியாக அடைந்தார்கள். பிற்பாடு எலிஃபன்ட் தீவில் விட்டு வந்திருந்த மீதிப் பேரையும் ஷேக்கல்டன் போய் மீட்டு வந்தார். அவர் ஏன் இந்தளவு சிரமப்பட்டார்? வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ரோலன்ட் ஹன்ட்ஃபோர்ட் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “அவருடன் பயணித்த ஒவ்வொருவரையும் உயிரோடு மீட்பதே அவருடைய இலட்சியமாக இருந்தது.”
“அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது”
“முப்பது கிலோமீட்டருக்கு வெறும் பாறையும் பனியுமாக இருந்த, எளிதில் சென்றெட்ட முடியாத, கடும் குளிர் நிலவிய பகுதியில் ஷேக்கல்டனின் சகாக்கள் குழப்பத்தோடு காத்திருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் அவர்களது நம்பிக்கை எனும் சுடர் அணையாதிருக்க எது உதவியது? நிச்சயம் காப்பாற்ற வருவதாக தலைவர் கொடுத்த வாக்குறுதியில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையே.
எலிஃபன்ட் தீவில் தனிமையில் விடப்பட்ட அந்த நபர்களின் நிலையில்தான் இன்றைய மனிதவர்க்கமும் இருக்கிறது. இன்றைக்கு அநேகர் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்; உயிர் வாழவே அவர்கள் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கிறது. ஆனாலும், ஒடுக்கப்படுவதிலிருந்தும் கடுந்துன்பத்திலிருந்தும் ‘சிறுமைப்பட்டவர்களை [கடவுள்] நீங்கலாக்குவார்’ என்று அவர்கள் முழுமையாக நம்பலாம். (யோபு 36:15) ஒவ்வொருவருடைய உயிரையும் கடவுள் மதிப்புமிக்கதாக கருதுகிறார் என்ற உறுதியுடன் இருங்கள். “ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்” என்று சிருஷ்டிகரான யெகோவா கூறுகிறார்.—சங்கீதம் 50:15.
உலகில் வாழும் பல கோடி மக்களில் உங்களை தனிப்பட்ட விதத்தில் மதிப்புள்ளவராக சிருஷ்டிகர் கருதுகிறார் என்பதை நம்ப முடியவில்லையா? அப்படியென்றால், நம் அண்டத்திலுள்ள பல கோடி நட்சத்திர மண்டலங்களிலுள்ள கோடானுகோடி நட்சத்திரங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சொல்வதைக் கவனியுங்கள்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.”—ஏசாயா 40:26.
அதன் கருத்து உங்களுக்குப் புரிகிறதா? பால்வீதி மண்டலத்தின் ஒரு சிறிய பாகம்தான் சூரிய மண்டலம். அந்தப் பால்வீதி மண்டலத்தில் மட்டுமே 10,000 கோடி நட்சத்திரங்களாவது இருக்கும். இது போன்ற இன்னும் எத்தனை நட்சத்திர மண்டலங்கள் உள்ளன? அவற்றை யாராலும் திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஆனால் 12,500 கோடி நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக சிலர் கணக்கிட்டுள்ளனர். எத்தனை கோடானுகோடி நட்சத்திரங்கள்! ஆனாலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரையும் இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் அறிந்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.
“உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது”
பல கோடி நட்சத்திரங்களின் பெயரையோ, பல கோடி மக்களின் பெயரையோ அறிந்திருப்பது மட்டுமே தனிப்பட்ட நபராக ஒவ்வொருவர் மீதும் கடவுளுக்கு அக்கறை இருப்பதை அர்த்தப்படுத்துமா என யாராவது கேட்கலாம். போதுமானளவு தகவலை சேமித்து வைக்கும் சக்தி படைத்த ஒரு கம்ப்யூட்டர் பல கோடி மக்களின் பெயரைப் பதிவு செய்யும் திறன்மிக்கது என்பது உண்மைதான். அவர்களில் யார் மீதாவது அதற்கு அக்கறை இருக்கிறதென ஒருவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் யெகோவா தேவன் பல கோடி மக்களின் பெயரை அறிந்திருப்பதோடு, தனிப்பட்ட நபராக அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்பதை பைபிள் காட்டுகிறது. எனவேதான், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்.—1 பேதுரு 5:7.
“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:29-31) குருவிகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன நடந்தது என்பதை கடவுள் அறிந்திருப்பதாக மட்டுமே இயேசு குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். “அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று அவர் சொன்னார். ஏன் நீங்கள் விசேஷித்தவர்கள்? ஏனென்றால் நீங்கள் “தேவசாயலாக” படைக்கப்பட்டிருக்கிறீர்கள், அதாவது கடவுளுடைய உயர்ந்த பண்புகளை பிரதிபலிக்கிற ஒழுக்க உணர்வையும் அறிவுத்திறனையும் ஆன்மீக குணங்களையும் வளர்க்கவும் வெளிக்காட்டவும் ஆற்றல்மிக்கவர்களாக படைக்கப்பட்டிருக்கிறீர்கள்.—ஆதியாகமம் 1:26, 27.
‘புத்திக்கூர்மையால் உருவான கைவண்ணம்’
சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதையே சந்தேகிக்கும் ஜனங்களின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள்! நீங்கள் உணர்வற்ற, இயற்கை சக்திகளால் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் “தேவசாயலாக” படைக்கப்படவில்லை என்று மட்டுமல்ல, குருவிகள் உட்பட இந்தக் கிரகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் உங்களுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
உயிர் இங்கே தற்செயலாக அல்லது குருட்டுத்தனமாக தோன்றியது என்ற கருத்து உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? உயிருக்குத் துணைபோகும் “வியக்க வைக்கும் சிக்கலான உயிர்-வேதியியல் செயல்முறைகளை” கவனத்தில் கொண்டால் அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மூலக்கூறு உயிரியல் நிபுணர் மைக்கேல் ஜே. பீஹீ சொல்கிறார். “பூமியில் வாழும் மிக அடிப்படை நிலையைச் சேர்ந்த உயிரிகூட . . . புத்திக்கூர்மையால் உருவான கைவண்ணமே” என்ற மறுக்க முடியாத முடிவுக்கே உயிர்-வேதியியல் தரும் அத்தாட்சிகள் வழிநடத்துகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.—டார்வினின் விளங்கா கோட்பாடு—பரிணாமத்திற்கு எதிராக உயிர்-வேதியியல் விடுக்கும் சவால் (ஆங்கிலம்).
பூமியிலுள்ள எல்லா வகை உயிரினங்களும் புத்திக்கூர்மையால் உருவான கைவண்ணமே என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான யெகோவா தேவனே இந்தப் புத்திக்கூர்மையான கைவண்ணங்களுக்கெல்லாம் காரணர் என்றும் அது குறிப்பிடுகிறது.—சங்கீதம் 36:9; வெளிப்படுத்துதல் 4:11.
இந்த உலகில் வேதனையையும் துன்பத்தையும் சகித்தே தீர வேண்டும் என்பது உண்மைதான்; அதற்காக, இந்தப் பூமியையும் சகல உயிர்களையும் படைத்த, வடிவமைத்த ஒருவர் இருக்கிறார் என்று நம்பாமல் இருந்துவிடாதீர்கள். இரண்டு அடிப்படை உண்மைகளை எப்போதும் மனதில் வைத்திருங்கள். ஒன்று, இன்றுள்ள அபூரண நிலைமைக்குக் கடவுள் காரணர் அல்ல. மற்றொன்று, அந்த அபூரணத்தை அவர் தற்காலிகமாக அனுமதித்திருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. இந்தப் பத்திரிகை பலமுறை விளக்கியிருக்கிறபடி, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தீமையை யெகோவா தேவன் அனுமதித்திருக்கிறார்; அதாவது மனிதர்கள் முதன்முதலில் கடவுளுடைய பேரரசுரிமையை நிராகரித்துவிட்டபோது எழுந்த தார்மீக விவாதங்களை நிரந்தரமாக, நித்தியத்திற்கும் முடிவுகட்டுவதற்காகவே அனுமதித்திருக்கிறார்.a—ஆதியாகமம் 3:1-7; உபாகமம் 32:4, 5; பிரசங்கி 7:29; 2 பேதுரு 3:8, 9.
‘கூப்பிடுகிற எளியவனை அவர் விடுவிப்பார்’
இன்று மக்கள் துயர்மிகுந்த சூழ்நிலைமைகளில் உயிர் வாழ வேண்டியிருந்தாலும் அந்த உயிர் மிகச் சிறந்த பரிசே. அதைப் பாதுகாக்க நம்மால் முடிந்த சகலத்தையும் செய்கிறோம். கடவுள் நமக்கு எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கையைத் தரப்போவதாக வாக்குறுதி தந்திருக்கிறார். அது, எலிஃபென்ட் தீவில் தஞ்சம் நாடிய ஷேக்கல்டனையும் அவருடைய சகாக்களையும் போல் மோசமான, வேதனைமிக்க சூழ்நிலைமைகளில் போராட வேண்டிய ஒரு வாழ்க்கையாக இருக்காது. தற்போது அனுபவித்து வரும் வேதனையிலிருந்தும் பயனற்ற வாழ்க்கையிலிருந்தும் நம்மை மீட்டு, ‘நித்திய ஜீவனைப் பெற’ உதவ வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம். இப்படிப்பட்ட ஜீவனை மனிதர் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே அவர் கொண்டிருக்கும் நோக்கமாகும்.—1 தீமோத்தேயு 6:19.
இவை எல்லாவற்றையும் யெகோவா நமக்கு நிச்சயம் செய்வார், ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் அவருக்கு மதிப்புமிக்கவர்கள். நம்முடைய ஆதி பெற்றோராகிய ஆதாம் ஏவாளிடமிருந்து ஆஸ்தியாக பெற்ற பாவம், அபூரணம், மரணம் ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்க அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்து தம்முடைய உயிரை கிரய பலியாக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். (மத்தேயு 20:28) “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் . . . நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.—யோவான் 3:16.
வாழ்க்கையில் வேதனையிலும் துன்பத்திலும் அல்லாடுபவர்களுக்கு கடவுள் என்ன செய்வார்? தம்முடைய குமாரனைப் பற்றி கடவுள் இவ்வாறு ஏவி எழுதியிருக்கிறார்: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்.” அவர் ஏன் இதைச் செய்வார்? ஏனென்றால் “அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:12-14.
பாவத்தாலும் அபூரணத்தாலும் பல நூற்றாண்டுகளாக மனிதவர்க்கம் வேதனையினாலும் துன்பத்தினாலும் “ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது.” அதனால் வரும் பாதிப்புகளை தம்மால் போக்க முடியும் என்பதாலேயே அவர் அதை அனுமதித்தார். (ரோமர் 8:18-22) வெகு சீக்கிரத்தில் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தின் மூலம் அவர் ‘எல்லாவற்றையும் திரும்ப நிலைநாட்டுவார்.’—அப்போஸ்தலர் 3:21, NW; மத்தேயு 6:9, 10.
அப்போது, கடந்த காலங்களில் துன்பப்பட்டு மரித்துப் போனவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அவர்களை கடவுள் மறக்க மாட்டார். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) விரைவில் அவர்கள் “பரிபூரண”மான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். அதாவது வேதனைகளும் துன்பங்களும் துடைத்தழிக்கப்பட்ட பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். (யோவான் 10:10; வெளிப்படுத்துதல் 21:3-5) உயிரோடிருக்கிற அனைவரும் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்வார்கள். “தேவசாயலாக” படைக்கப்பட்டிருப்பவர்களுக்கே உரிய நல்ல குணங்களையும் திறமைகளையும் வளர்ப்பார்கள்.
யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவித்து மகிழ நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? அது உங்கள் கையில் இருக்கிறது. அந்த ஆசீர்வாதங்களைப் பெற அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். உங்களுக்கு உதவுவதில் இப்பத்திரிகையை பிரசுரிப்போர் மிக சந்தோஷப்படுவார்கள்.
[அடிக்குறிப்பு]
a இந்த விஷயத்தைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” என்ற தலைப்பிடப்பட்ட 8-வது அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 4, 5-ன் படம்]
இக்கட்டில் சிக்கிய ஷேக்கல்டனின் சகாக்கள், காப்பாற்றுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தார்கள்
[படத்திற்கான நன்றி]
© CORBIS
[பக்கம் 6-ன் படம்]
“அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”