உயிர்—மதிப்புள்ளதா மதிப்பற்றதா?
“மனிதன் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், மனித உயிரைப் பறிப்பது என்பது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க ஒன்றை, புனிதமான ஒன்றை அழிப்பதற்குச் சமம்.”—த ப்ளெய்ன் மேன்ஸ் கைடு டூ எதிக்ஸ், வில்லியம் பார்க்லே.
‘உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கது.’ நீங்களும் உயிரை அப்படித்தான் கருதுகிறீர்களா? மக்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால், அந்த எழுத்தாளருடைய கருத்தை அநேகர் ஆமோதிப்பதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சக மனிதரின் நலனை எண்ணிப் பார்க்காமல், மூர்க்கவெறி பிடித்த ஆட்கள் தங்களுடைய சுயநலத்திற்காக கோடிக்கணக்கான உயிர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்திருக்கிறார்கள்.—பிரசங்கி 8:9.
கழித்துக்கட்ட வேண்டிய குப்பைகள்
இதற்கு முதல் உலகப் போர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தப் படுபயங்கர போரில், “காரணமே இல்லாமல் அநேகருடைய உயிர் பலி கொடுக்கப்பட்டது” என்று சரித்திராசிரியர் ஏ.ஜே.பி. டேலர் கூறுகிறார். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்ட இராணுவத் தலைவர்கள் தங்களுடைய படை வீரர்களை வெறும் குப்பை போலவும் கழித்துக்கட்ட வேண்டியவர்கள் போலவுமே நடத்தினார்கள். வெர்டன் என்ற இடத்தைக் கைப்பற்றுவதற்கு பிரான்சில் நடந்த போரில் மட்டுமே ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள். அது, “மனித உயிர்களைப் பலியாக்கி புகழ் பெறுவதற்கே நடத்தப்பட்டது. வேறெந்த [போர் சம்பந்தப்பட்ட] லாப நஷ்டத்திற்காகவும் இல்லை” என்று டேலர் குறிப்பிடுகிறார்.—முதல் உலகப் போர் (ஆங்கிலம்).
இவ்வாறு உயிர் துச்சமாய் மதிக்கப்படுவதை இன்றும் பரவலாக காணலாம். சமீப காலங்களில், “மக்கள்தொகை பெருக்கத்தால் லட்சோபலட்ச ஏழைகளும் அப்பாவிகளும் உலகம் முழுவதுமுள்ள வேலை வாய்ப்பு சந்தைகளுக்குள் வெள்ளம்போல் பெருக்கெடுத்து வருகிறார்கள்” என்று அறிஞர் கெவின் பேல்ஸ் சுட்டிக் காட்டுகிறார். “உயிரை மதிக்காத” கொடிய வியாபார உலகில் காலம் தள்ளுவதற்கே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. அவர்களைச் சுரண்டி பிழைக்கிறவர்கள் அவர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். “பணம் சம்பாதிப்பதற்காக அவர்களைப் பயன்படுத்திவிட்டு,
தூக்கியெறியப்படும் ‘டிஸ்போஸிபிள்’ பொருட்களைப் போல” அவர்களை கருதுகிறார்கள் என்றும் பேல்ஸ் சொல்கிறார்.—ஒன்றுக்கும் உதவாதவர்கள் (ஆங்கிலம்).
‘காற்றைப் பிடிக்க முயல்வது’
லட்சக்கணக்கானோர் லாயக்கற்றவர்களாகவும் நம்பிக்கை இழந்தவர்களாகவும் உணருவதற்கு—தாங்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என யார் கவலைப்படப் போகிறார்கள் என நினைப்பதற்கு—இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. போரும் அநீதியும் கோரமுகம் காட்டுவதோடு, வறட்சியும் பஞ்சமும் நோயும் இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளும் முழு மனிதவர்க்கத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவையெல்லாம், வாழ்ந்தென்ன லாபம் என்ற எண்ணத்தைத்தான் மக்களின் மனதில் விதைத்திருக்கின்றன.—பிரசங்கி 1:8, 14.
உண்மைதான், இதுபோன்ற பேரிழப்பையும் கடுந்துயரத்தையும் எல்லாருமே அனுபவிப்பதில்லை. ஆனால் இத்தகைய கொடும் ஒடுக்குதலை அனுபவித்திராதவர்களும்கூட, பூர்வ இஸ்ரவேல் அரசரான சாலொமோனின் வார்த்தைகளை அடிக்கடி எதிரொலித்திருக்கிறார்கள்: “மனுஷன் சூரியனுக்குக் கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?” இதைப் பற்றி சிந்திக்கையில், தங்களுடைய செயல்கள் பெரும்பாலும் ‘வீணாகவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு’ ஒப்பாகவும் இருப்பதை பலர் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.—பிரசங்கி [சபை உரையாளர்] 2:22, 26; பொது மொழிபெயர்ப்பு.
அநேகர் தங்கள் வாழ்க்கை புத்தகத்தைப் பின்னோக்கிப் புரட்டிப் பார்க்கும்போது, “இதுதான் வாழ்க்கையா?” என்று கேட்கிறார்கள். முற்பிதாவான ஆபிரகாமைப் போல ‘நிறைந்த வாழ்நாள்களைக் கடந்தவர்கள்’ இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? (ஆதியாகமம் [தொடக்க நூல்] 25:8, பொ.மொ.) உயிரோடு இருப்பதே வீண் என்ற எண்ணம்தான் அநேகருடைய மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் வாழ்க்கை பயனற்றதாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மனித உயிரையும் மதிப்புள்ளதாக கடவுள் கருதுகிறார். நாம் ஒவ்வொருவரும் திருப்திகரமான வாழ்க்கையை, நிறைவான வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது எப்படி சாத்தியமாகும்? இதைப் பற்றி அடுத்த கட்டுரை என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.