பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது—பகுதி ஒன்று*
*பகுதிகள் 2 மற்றும் 3 முறையே செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 15 இதழ்களில் வெளிவரும்.
ஒரு சிறிய பட்டறையில், அச்சடிப்பவரும் அவரிடம் வேலை பயிலும் பையனும் வெள்ளைத்தாள்களை அச்சுக்கட்டையின்மேல் கவனமாக வைத்து மர ஃபிரேம் கொண்ட தங்கள் அச்சு இயந்திரத்தை ஒரே சீராக இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். தாள்களை வெளியே எடுக்கும்போது அச்சுசெய்யப்பட்ட வாசகத்தை அவர்கள் சரிபார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சுவரிலிருந்து மற்றொரு சுவருக்கு கட்டப்பட்ட கயிறுகளின்மீது, மடித்த தாள்களை ஈரம் காய்வதற்கு தொங்கவிடுகிறார்கள்.
திடீரென்று கதவு பலமாக தட்டப்படும் ஓசை கேட்கிறது. திகிலடைந்தவராய், அச்சடிப்பவர் கதவின் தாழ்ப்பாளை திறக்கிறார்; ஆயுதந்தரித்த போர்வீரர்களின் ஒரு கூட்டம் திபுதிபுவென்று உள்ளே நுழைகிறது. அதிகமாக கண்டனம் செய்யப்பட்ட சட்டவிரோதமான ஒரு இலக்கியத்துக்காக—பொது மக்கள் பேசும் மொழியிலுள்ள பைபிளுக்காக—அவர்கள் சோதனையிட ஆரம்பிக்கிறார்கள்!
அவர்கள் மிகவும் காலந்தாழ்த்தி வந்திருக்கிறார்கள். ஆபத்தைக் குறித்து எச்சரிக்கப்பட்டு, மொழிபெயர்ப்பாளரும் அவருடைய உதவியாளரும் ஏற்கனவே கடைக்கு ஓடிப்போய் கையில் அள்ளமுடிந்தளவுக்கு தாள்களை எடுத்துக்கொண்டு இப்பொழுது ரைன் நதி வழியாக தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியோ, தங்களுடைய வேலையின் ஒரு பகுதியையாவது அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.
இந்த மொழிபெயர்ப்பாளர்தான் வில்லியம் டின்டேல்; 1525-ல் ஜெர்மனியிலுள்ள கொலோனில் தடைசெய்யப்பட்டிருந்த தன்னுடைய ஆங்கிலமொழி “புதிய ஏற்பாட்டை” அவர் பிரசுரிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தார். அவர் பெற்ற அனுபவம் சகஜமான ஒன்றாகவே ஆனது. பைபிள் எழுதிமுடிக்கப்பட்டது முதற்கொண்டு சுமார் 1,900 ஆண்டுகள் முழுவதிலும் அநேக ஆண்களும் பெண்களும் கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்த்து விநியோகம் செய்வதற்காக அனைத்தையும் பணயம் வைத்திருக்கிறார்கள். இன்று நாம் இன்னமும் அவர்களுடைய உழைப்பினால் பயனடைந்து வருகிறோம். அவர்கள் என்ன செய்தார்கள்? நாம் கையில் வைத்திருக்கும் பைபிள்கள் நம்மிடம் எவ்வாறு வந்தன?
ஆரம்ப காலங்களில் பைபிள் நகலெடுப்பும் மொழிபெயர்ப்பும்
கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் அவருடைய வார்த்தையை எப்போதும் மிகவும் உயர்வாகவே மதித்து வந்திருக்கிறார்கள். நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “அவர்களுடைய யூத மூதாதையரைப்போல, பூர்வ கிறிஸ்தவர்கள் பரிசுத்த புத்தகங்களை வாசிப்பதை உயர்வாக மதித்தனர். இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி (மத் 4.4; 5.18; லூக் 24.44; யோவா 5.39), அப்போஸ்தலர்கள் பழைய ஏற்பாட்டில் நன்கு பரிச்சயமானவர்களாக இருந்தனர்; தொடர்ச்சியாக, கவனமாக வாசிப்பதையும் படிப்பதையும் இது அர்த்தப்படுத்தியது, இதையே செய்யும்படியாக இவர்களும் தங்களுடைய சீஷர்களை உற்சாகப்படுத்தினர் (ரோ 15.4; 2 தீ 3.15-17).”
இதன் காரணமாக, பைபிளின் பிரதிகள் நகல் எடுக்கப்பட வேண்டியதாக இருந்தன. கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில், இந்த வேலையில் பெரும்பகுதி மிகவும் தேர்ச்சிபெற்றவர்களாயிருந்த ‘தேறின நகலெடுப்பவர்’களால் செய்யப்பட்டது; இவர்கள் தவறுகள் ஏற்படாதிருப்பதற்காக மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர். (எஸ்றா 7:6, 11, 12, NW) துல்லியமாக இதைச் செய்வதற்கு பாடுபடுகிறவர்களாக, பின்னால் பைபிளின் நகல்களை எடுத்த அனைவருக்கும் உயர்ந்த தராதரத்தை இவர்கள் வைத்தனர்.
இருப்பினும், பொ.ச.மு. நான்காவது நூற்றாண்டின்போது, சவால் ஒன்று எழுந்தது. மகா அலெக்ஸாண்டர் உலகிலுள்ள மக்கள் அனைவரும் கிரேக்க கலாச்சாரத்தில் கல்விபுகட்டப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர் அடைந்த வெற்றிகளின் காரணமாக மத்திய கிழக்கு முழுவதிலும் பொது கிரேக்க மொழி அல்லது கோயினி சர்வதேச மொழியாக ஆனது. இதன் விளைவாக அநேக யூதர்கள் எபிரெய மொழியை வாசிக்க கற்றுக்கொள்ளாதவர்களாகவே வளர்ந்து வந்தனர்; ஆகவே வேதாகமத்தை வாசிக்க இயலவில்லை. ஆகவே, சுமார் பொ.ச.மு. 280-ல் எபிரெய பைபிளை பொது மக்களின் மொழியாகிய கோயினிக்கு மொழிபெயர்க்க எபிரெய கல்விமான்களின் ஒரு தொகுதி எகிப்திலுள்ள அலெக்ஸாண்டிரியாவில் கூடிவரும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுடைய மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என்றழைக்கப்பட்டது; இது “எழுபது” என்பதற்குரிய லத்தீன் வார்த்தையாகும், இதில் உட்பட்டிருந்த மொழிபெயர்ப்பாளர்களின் தோராயமான எண்ணிக்கையை இது குறிப்பிடுவதாய் உள்ளது. இது பொ.ச.மு. சுமார் 150-ல் எழுதி முடிக்கப்பட்டது.
இயேசுவின் காலத்தில், எபிரெய மொழியே இன்னும் பலஸ்தீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அங்கேயும் ரோமர்களின் உலகில் தொலைவில் இருந்த மாகாணங்களிலும் கோயினி மொழியே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே, கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள் தேசங்களின் ஜனங்களை அதிகமதிகமாக சென்றெட்டும் பொருட்டு இந்தப் பொதுவான கிரேக்க மொழியையே பயன்படுத்தினர். மேலுமாக, அவர்கள் செப்டுவஜின்டிலிருந்து தாராளமாக மேற்கோள் காண்பித்து அதனுடைய பல வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.
பூர்வ கிறிஸ்தவர்கள் வைராக்கியமுள்ள மிஷனரிகளாக இருந்த காரணத்தால், இயேசுவே, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த மேசியா என்பதை நிரூபிப்பதற்கு செப்டுவஜின்டை பயன்படுத்துவதில் சீக்கிரமாகவே தேர்ச்சிபெற்றவர்களாக ஆனார்கள். இது யூதர்களைக் கலக்கமடையச் செய்து, கிரேக்க மொழியில் ஒரு சில புதிய மொழிபெயர்ப்புகளை உண்டுபண்ணுவதற்கு அவர்களைத் தூண்டியது; இவை கிறிஸ்தவர்கள் தங்கள் போதனைகளை ஆதரிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு சில பகுதிகளைத் திருத்தி அமைப்பதன் மூலம் கிறிஸ்தவர்களிடமிருந்து அவர்களுடைய நியாயமான வாதங்களை நீக்கிப்போடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன. உதாரணமாக, ஏசாயா 7:14-ல் செப்டுவஜின்ட் “கன்னிகை” என்பதாக பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தி, மேசியாவின் தாய்க்கு அதை தீர்க்கதரிசனமாக குறிப்பிட்டிருந்தது. புதிய மொழிபெயர்ப்புகள் “இளம் பெண்” என்று பொருள்படும் வேறு ஒரு கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தின. கிறிஸ்தவர்கள் தொடர்ந்து செப்டுவஜின்டைப் பயன்படுத்தியபோது, யூதர்கள் தங்களுடைய தந்திரத்தை முழுவதுமாக கைவிட்டுவிட்டு எபிரெயுவுக்கே திரும்புவதை ஊக்குவிக்கும்படி கடைசியாக தூண்டப்பட்டார்கள். இறுதியில், இந்தச் செயல் பின்னால் வந்த பைபிள் மொழிபெயர்ப்புக்கு ஆசீர்வாதமாக அமைந்தது, ஏனென்றால் அது எபிரெய மொழியை அழியாது காக்க உதவியது.
முதல் கிறிஸ்தவ புத்தக பிரசுரிப்போர்
வைராக்கியமுள்ள பூர்வ கிறிஸ்தவர்கள் எத்தனை பைபிள் நகல்களை எடுக்க முடியுமோ அத்தனை நகல்களை எடுக்க ஆரம்பித்தனர், அனைத்துமே கையால் நகலெடுக்கப்பட்டன. தொடர்ந்து சுருள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நவீன நாளில் நாம் வைத்திருக்கும் புத்தகங்களில் இருப்பதைப்போல பக்கங்களைக் கொண்ட கையெழுத்துச்சுவடிகளை (கோடெக்ஸ்) பயன்படுத்துவதில் இவர்களே முன்னோடிகளாக இருந்தனர். வேதவசனங்களை வேகமாக கண்டுபிடிப்பதற்கு அதிக செளகரியமாக இருப்பதைத் தவிர, ஒரு சுருளில் பதிவு செய்ய முடிகிறதைவிட அதிகத்தை ஒரு கையெழுத்துச்சுவடியின் ஒரு தொகுப்பில் கொண்டிருக்கமுடியும்—உதாரணமாக, கிரேக்க வேதாகமம் முழுவதையும் அல்லது முழு பைபிளையும்கூட கொண்டிருக்கமுடியும்.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் சுமார் பொ.ச. 98-ல், கடைசியாக உயிரோடிருந்த அப்போஸ்தலன் யோவானின் புத்தகங்களோடு முற்றுப்பெற்றது. ரைலன்ட்ஸ் பப்பைரஸ் 457 (P52) என்றழைக்கப்படும் யோவான் சுவிசேஷத்தினுடைய ஒரு நகலின் துண்டு இன்னும் இருக்கிறது; இது பொ.ச. 125 ஆண்டைச் சேர்ந்தது. பொ.ச. 150 முதல் 170 வரையான காலப்பகுதியிலேயே ஜஸ்டின் மார்டரின் ஒரு மாணவரான டேஷன், டையட்டெஸரான்-ஐ, அதாவது நம்முடைய நவீன பைபிள்களில் காணப்படும் அதே நான்கு சுவிசேஷங்களிலிருந்து சேகரித்த இயேசுவின் வாழ்க்கையைத் தொகுத்து எழுதினார்.a இந்த சுவிசேஷங்களை மாத்திரமே நம்பத்தக்கதாக அவர் கருதியதையும் அவை ஏற்கனவே உபயோகத்தில் இருந்து வந்ததையும் இது சுட்டிக்காட்டியது. சுமார் பொ.ச. 170-ல், பழமையானதாக அறியப்பட்டிருந்த முயூரட்டோரியன் துண்டு என்றழைக்கப்பட்ட “புதிய ஏற்பாட்டு” புத்தகங்களின் ஒரு பட்டியல் பிரசுரிக்கப்பட்டது. இது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பெரும்பாலான புத்தகங்களை வரிசைப்படுத்தியுள்ளது.
கிறிஸ்தவ நம்பிக்கைகள் பரவியபோது, அது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் எபிரெய வேதாகமமும் மொழிபெயர்க்கப்படுவதற்கான தேவையை உருவாக்கினது. ஆர்மீனியர்களின் மொழி, காப்டிக் மொழி, ஜார்ஜியாப் பகுதியின் மொழி, சிரியா நாட்டு மொழி போன்ற மொழிகளில் அநேக மொழிபெயர்ப்புகள் கடைசியில் செய்யப்பட்டன. அநேக சமயங்களில் அந்த காரணத்துக்காக எழுத்துக்கள் உருவாக்கப்பட வேண்டியதாக இருந்தது. உதாரணமாக, ரோமன் சர்ச்சின் நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த உல்ஃபிலாஸ் என்ற பிஷப் பைபிளை மொழிபெயர்க்க காதிக் எழுத்துவடிவத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் இராஜாக்களின் புத்தகத்தை இதில் சேர்க்காமல் விட்டுவிட்டார், ஏனென்றால் காதிக் மொழிக்காரர்களுக்கு போர் புரிவதில் இருந்த ஆர்வத்தை அது உற்சாகப்படுத்தும் என்பதாக அவர் நம்பினார். இருப்பினும், “கிறிஸ்தவமாக்கப்பட்ட” காதிக் மொழிக்காரர்கள் பொ.ச. 410-ல் ரோமை கொள்ளையிடுவதை இந்த நடவடிக்கை தடைசெய்யவில்லை!
லத்தீன் மற்றும் ஸ்லவோனியா மொழி பைபிள்கள்
இதற்கிடையில், லத்தீன் மொழி அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது, பல்வேறு பழைய லத்தீன் மொழிபெயர்ப்புகள் தோன்றின. ஆனால் பாணியிலும் திருத்தமானத் தன்மையிலும் அவை வித்தியாசப்பட்டிருந்தன. ஆகவே பொ.ச. 382-ல் போப் டெமாசிஸ் தன்னுடைய செயலர் ஜெரோமை ஒரு நம்பத்தகுந்த லத்தீன் பைபிளை தயார்செய்யும்படியாக பணித்தார்.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் லத்தீன் மொழிபெயர்ப்புகளைத் திருத்தி அமைப்பதன் மூலம் ஜெரோம் இந்த வேலையை ஆரம்பித்தார். ஆனால் எபிரெய வேதாகமத்தை பொறுத்ததில் மூல எபிரெய பைபிளிலிருந்து மொழிபெயர்ப்பதை அவர் வற்புறுத்தினார். இதன் காரணமாக, பொ.ச. 386-ல் எபிரெய மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு ரபியின் உதவியை நாடுவதற்கும் அவர் பெத்லகேமுக்கு இடம் மாறிச்சென்றார். இதற்கு சர்ச் வட்டாரங்களிலிருந்து கணிசமான அளவில் எதிர்ப்பு கிளம்பியது. ஜெரோம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரான அகஸ்டீன் உட்பட, சிலர் செப்டுவஜின்ட் ஆவியால் ஏவப்பட்டதென நம்பினதால், “யூதர்களிடம் அவர் உதவிக்குச் சென்றதால்” அவரைக் குறைகூறினார்கள். ஜெரோம் பின்வாங்காமல், இந்த வேலையை சுமார் பொ.ச. 400-ல் செய்து முடித்தார். மூல மொழியினிடமும் ஆவணங்களிடமும் செல்வதன் மூலமாகவும் அந்நாளில் வழக்கில் இருந்து வந்த மொழியில் அதை மொழிபெயர்ப்பதன் மூலமாகவும், ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெரோம் நவீன மொழிபெயர்ப்பு முறைகளைக் கையாண்டுவிட்டார். அவருடைய படைப்பு வல்கேட், அல்லது காமன் வெர்ஷன் என்பதாக அழைக்கப்படலாயிற்று; இது நூற்றாண்டுகளாக மக்களுக்கு பயனுள்ளதாய் இருந்துவந்திருக்கிறது.
ஐரோப்பாவின் கிழக்குப்பகுதியிலுள்ள கிறிஸ்தவமண்டலத்தில் இன்னும் பலரால் செப்டுவஜின்டையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் வாசிக்க முடிந்தது. இருப்பினும், பின்னால், தற்கால ஸ்லாவிக் மொழிகளின் முன்னோடியான பண்டைய ஸ்லவோனியா மொழி ஐரோப்பாவின் வடகிழக்குப் பகுதியில் முக்கியமான மொழியாக ஆனது. பொ.ச. 863-ல், கிரேக்க மொழிபேசும் சிரில் மற்றும் மெத்தோடியஸ் என்ற இரு கிரேக்க சகோதரர்கள் இப்பொழுது செக் குடியரசாக இருக்கும் மொராவியாவுக்குச் சென்றார்கள். அவர்கள் பைபிளை பண்டைய ஸ்லவோனியா மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். அதைச் செய்வதற்காக அவர்கள் க்ளகோலிட்டிக் எழுத்துக்களை உருவாக்கினர்; பின்னர் இந்த எழுத்துக்களுக்குப் பதிலாக, சிரில் என்பவரின் பெயரால் சிரிலாக் எழுத்துக்கள் புழக்கத்திற்கு வந்தன. இதை அடிப்படையாக கொண்டே இன்றுள்ள ரஷ்ய, யூக்ரேனிய, செர்பிய மற்றும் பல்கேரிய மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பல தலைமுறைகளாக ஸ்லவோனிக் பைபிளையே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் மொழிகள் மாறினபோது, சராசரி நபரால் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் போனது.
எபிரெய பைபிள் அழியாதிருக்கிறது
பொ.ச. ஆறாவது நூற்றாண்டிலிருந்து பத்தாவது நூற்றாண்டுவரையான இந்தக் காலப்பகுதியில், மசோரைட்ஸ் என்ற யூத புலவர்களின் ஒரு தொகுதி எபிரெய வேதாகம வாசகத்தைக் கட்டிக்காப்பதற்காக ஒழுங்கான நகலெடுக்கும் ஒரு முறையை உருவாக்கினர். நம்பத்தகுந்த வாசகத்தைக் கட்டிக்காப்பதற்காக அவர்கள் எல்லா வரிகளையும் ஒவ்வொரு தனி எழுத்தையும்கூட எண்ணவும் கையெழுத்துப் பிரதிகளிலுள்ள வேறுபாடுகளை கவனிக்கவும்கூட முற்பட்டனர். இந்த முயற்சி வீணாகிவிடவில்லை. ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டுமானால், நவீன மசோரிட்டிக் வாசகங்களை பொ.ச.மு. 250 மற்றும் பொ.ச. 50-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சவக் கடல் சுருளோடு ஒப்பிடுகையில், 1000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளினூடாக கோட்பாடு சம்பந்தமான எந்த வேறுபாடுகளும் காணப்படுவதில்லை.b
ஐரோப்பாவில் வரலாற்றின் இடைநிலைக் காலம் பொதுவாக இருண்ட காலத்தைப் போன்றே இருந்தது. வாசிப்பதிலும் கற்பதிலும் பொதுமக்கள் ஆர்வமற்றவர்களாக இருந்தனர். கடைசியாக, பாதிரிமாரும்கூட பெரும்பாலும் சர்ச் லத்தீனை வாசிக்க இயலாதவர்களாக, தங்களுடைய சொந்த மொழியைக்கூட வாசிக்க முடியாதவர்களாக இருந்தனர். ஐரோப்பாவில் யூதர்கள் தனி இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த காலமாகவும்கூட அது இருந்தது. இப்படி இவர்கள் தனிப்படுத்தப்பட்டதால் பைபிளின் எபிரெய மொழியின் புலமை ஓரளவு கட்டிகாக்கப்பட்டது. இருப்பினும், தப்பெண்ணத்தினாலும் அவநம்பிக்கையினாலும், யூதர்களின் அறிவு அவர்கள் வாழ்ந்துவந்த குடியிருப்பு பகுதிக்கு வெளியே கிடைக்கப்பெறாமல் போனது. மேற்கு ஐரோப்பாவில், கிரேக்க மொழி அறிவும்கூட குறைந்துகொண்டு வந்தது. மேற்கத்திய சர்ச் ஜெரோமின் லத்தீன் வல்கேட்க்கு உயர்ந்த மதிப்பைக் கொண்டிருந்த காரணத்தால் நிலைமை இன்னும் மோசமாக ஆனது. மசோரிட்டிக் காலப்பகுதியின் முடிவுக்குள் லத்தீன் அன்றாட உபயோகத்தில் மறைந்துவிட்ட மொழியாக ஆகிவிட்டபோதிலும் பொதுவாக அது மாத்திரமே அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பாக கருதப்பட்டது. இவ்விதமாக, பைபிளை அறிந்துகொள்வதற்கான ஆர்வம் மெதுவாக வளர ஆரம்பித்தபோது, அதிகமான மோதல்களுக்கு அடித்தளம் போடப்பட்டது.
பைபிள் மொழிபெயர்ப்புக்கு எதிர்ப்பு
1079-ல், ஏழாவது போப் க்ரிகரி, தாய் மொழியில் பைபிளை தயாரிப்பதையும் சிலசமயங்களில் அவற்றை வைத்திருப்பதையும்கூட தடைசெய்யும் சர்ச்சின் இடைக்கால உத்தரவுகள் பலவற்றில் முதலாவதானதைப் பிறப்பித்தார். பரிசுத்த வேதாகமத்தின் ஒரு சில பகுதிகளை மொழிபெயர்ப்பது அவசியமாயிருக்கும் என்பதற்காக மத ஆராதனை ஸ்லவோனிக் மொழியில் நடத்தப்படுவதற்கு கோரப்பட்ட அனுமதியை அவர் தள்ளுபடி செய்துவிட்டார். பூர்வ கிறிஸ்தவர்கள் எடுத்த நிலைநிற்கைக்கு முற்றிலும் மாறுபட்டவராக அவர் பின்வருமாறு எழுதினார்: “பரிசுத்த வேதாகமம் சில இடங்களில் இரகசியமாய் வைக்கப்படுவது சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு பிரியமாயிருக்கிறது.” இதுவே சர்ச்சின் அதிகாரப்பூர்வமான கொள்கையாக இருந்த காரணத்தால், பைபிள் வாசிப்பை ஊக்குவித்தவர்கள் அதிகமதிகமாக ஆபத்தானவர்களாக கருதப்பட்டார்கள்.
சாதகமற்ற சூழ்நிலைமையே நிலவியபோதிலும், நகலெடுப்பதும் பைபிளை பொது மக்களின் மொழிக்கு மொழிபெயர்ப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. அநேக மொழிகளில் மொழிபெயர்ப்புகள் ஐரோப்பாவில் தொடர்ந்து இரகசியமாக விநியோகம் செய்யப்பட்டுவந்தன. இவை கையால் நகலெடுக்கப்பட்டவையாக இருந்தன; ஏனென்றால் ஐரோப்பாவில் 1400-களின் மத்திப வருடங்கள் வரையாக அச்சுக்கோர்த்து (movable-type) அச்சடிப்பு செய்வது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பிரதிகள் மிகவும் விலையுயர்ந்தவையாகவும் குறைந்த எண்ணிக்கையிலுமே இருந்தபடியால், சாதாரண குடிமகன் பைபிளின் ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியையோ அல்லது வெறுமனே சில பக்கங்களையோகூட வைத்திருப்பதில் சந்தோஷப்படுவான். சிலர் பல பகுதிகளை, முழு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும்கூட மனப்பாடம் செய்தனர்!
இருந்தாலும், காலப்போக்கில், சர்ச்சை சீர்திருத்த பல இயக்கங்கள் பரவலாக தோன்றின. அன்றாட வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை மறுபடியுமாக உணர ஆரம்பித்ததே இதற்கு ஓரளவு காரணமாக இருந்தது. இந்த இயக்கங்களும் அச்சடிப்பின் வளர்ச்சியும் பைபிளை எவ்வாறு பாதிக்கும்? மேலும் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வில்லியம் டின்டேலுக்கும் அவருடைய மொழிபெயர்ப்புக்கும் என்ன ஆனது? நம்முடைய சொந்த காலங்கள் வரையாக வரும் மனதைக் கவரும் இந்தப் பதிவை நாம் வரவிருக்கும் இதழ்களில் வாசித்தறிவோம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டுள்ள எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் நான்கு சுவிசேஷங்களின் ஒத்திசைவுக்கு ஒரு நவீன நாளைய உதாரணமாகும்.
b உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டிருக்கும் வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை என்ற ஆங்கில புத்தகம், தொகுதி 2, பக்கம் 315-ஐக் காண்க.
[பக்கம் 8, 9-ன் வரைப்படம்]
பைபிள் கடந்துவந்த முக்கிய காலக்கணக்கு
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பொது சகாப்தத்துக்கு முன் (பொ.ச.மு.)
சுமார் பொ.ச.மு. 443-ல் முடிக்கப்பட்ட எபிரெய வேதாகமத்தில்
பொ.ச. 400
மகா அலெக்ஸாண்டர் (d. பொ.ச.மு. 323)
பொ.ச. 300
செப்டுவஜின்ட் ஆரம்பம் சுமார் பொ.ச.மு. 280
பொ.ச. 200
பொ.ச. 100 பெரும்பாலான சவக்கடல் சுருள்கள் சுமார் பொ.ச.மு. 100-லிருந்து
பொ.ச. 68 வரை
பொது சகாப்தம் (பொ.ச.)
எருசலேம் அழிக்கப்பட்டது பொ.ச. 70
கிரேக்க வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டது பொ.ச. 98
பொ.ச.மு. 100
யோவானின் ரைலன் பப்பைரஸ் (பொ.ச. 125-க்கு முன்)
பொ.ச.மு. 200
பொ.ச.மு. 300
பொ.ச.மு. 400 ஜெரோமின் லத்தீன் வல்கேட் சுமார் பொ.ச. 400
பொ.ச. 500
பொ.ச. 600
மசோரிட்டிக் வாசகம் தயாரிக்கப்பட்டது
பொ.ச. 700
பொ.ச. 800
பொ.ச. 863-ல் மோராவியாவில் சிரில்
பொ.ச. 900
பொ.ச. 1000
பொ.ச. 1079-ல் பிராந்திய மொழியில்
பைபிளுக்கு எதிரான உத்தரவு
பொ.ச. 1100
பொ.ச. 1200
பொ.ச. 1300
[பக்கம் 9-ன் படம்]
பூர்வ கிறிஸ்தவர்கள் கோடெக்ஸ் உபயோகத்துக்கு முன்னோடிகளாக இருந்தனர்
[பக்கம் 10-ன் படம்]
ஜெரோம் எபிரெய மொழியைக் கற்க பெத்லகேமுக்குச் சென்றார்