உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 6 பக். 12-14
  • பைபிள்​—⁠ஏன் இத்தனை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள்​—⁠ஏன் இத்தனை?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள்
  • கிரேக்க செப்டுவஜன்ட் (Septuagint)
  • லத்தீன் வல்கேட் (Vulgate)
  • பல புதிய மொழிபெயர்ப்புகள்
  • கடவுளுடைய பெயரும்‘புதிய ஏற்பாடும்’
    கடவுளுடைய பெயர் என்றன்றுமாக நிலைத்திருக்கும்
  • “செப்டுவஜின்ட்” அன்றும் இன்றும் பயனுள்ளது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது—பகுதி ஒன்று*
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ஆராய்ச்சி எண் 5—எபிரெய வேதாகம புத்தகங்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 6 பக். 12-14
எழுதப்பட்ட, அச்சடிக்கப்பட்ட மற்றும் எலக்ட்ரானிக் வடிவிலான பல்வேறு பைபிள்கள்

பைபிள் ஏன் இத்தனை?

இன்று ஏன் இத்தனை பைபிள் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன? புதிதாக வந்திருக்கும் மொழிபெயர்ப்புகள், பைபிளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகின்றனவா, அல்லது பைபிளைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்கின்றனவா? இத்தனை பைபிள் மொழிபெயர்ப்புகள் எப்படி வந்தன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது, இவற்றை உங்களால் சரியாக மதிப்பிட முடியும்.

முதன்முதலில் பைபிளை எழுதியது யார், எப்போது?

முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள்

பைபிளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில், மொத்தம் 39 புத்தகங்கள் இருக்கின்றன; அவற்றில் “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகள்” இருக்கின்றன. (ரோமர் 3:2) உண்மையுள்ள மனிதர்கள் சிலருக்கு, கடவுள் தன்னுடைய சக்தியைக் கொடுத்து இந்தப் புத்தகங்களை நீண்ட காலமாக எழுத வைத்தார். கி.மு. 1513 முதல் கி.மு. 443 வரை, சுமார் 1,100 வருஷங்களாக அவர்கள் இந்தப் புத்தகங்களை எழுதினார்கள். பைபிளின் இந்தப் பகுதியை அவர்கள் பெரும்பாலும் எபிரெய மொழியில் எழுதியதால், இதை எபிரெய வேதாகமம் என்று அழைக்கிறோம். அதோடு, இது பழைய ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டாவது பகுதியில், மொத்தம் 27 புத்தகங்கள் இருக்கின்றன; இவையும் ‘கடவுளுடைய வார்த்தைதான்.’ (1 தெசலோனிக்கேயர் 2:13) இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்கள் சிலருக்கு, கடவுள் தன்னுடைய சக்தியைக் கொடுத்து இந்தப் புத்தகங்களைக் கொஞ்சக் காலமாக எழுத வைத்தார். கி.பி. 41 முதல் கி.பி. 98 வரை, சுமார் 60 வருஷங்களாக அவர்கள் இந்தப் புத்தகங்களை எழுதினார்கள். பைபிளின் இந்தப் பகுதியை அவர்கள் பெரும்பாலும் கிரேக்க மொழியில் எழுதியதால், இதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்று அழைக்கிறோம். அதோடு, இது புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த 66 புத்தகங்களும் சேர்ந்ததுதான் முழு பைபிள். இதில், கடவுள் மனிதர்களுக்குச் சொல்ல நினைக்கும் செய்தி இருக்கிறது. ஆனால், இத்தனை பைபிள் மொழிபெயர்ப்புகள் ஏன் வந்தன? இதற்கான 3 காரணங்களைக் கவனியுங்கள்:

  • மக்களால் தங்கள் தாய்மொழியிலேயே பைபிளைப் படிக்க முடியும்.

  • நகலெடுப்பவர்களால் ஏற்பட்ட பிழைகளை நீக்கி, பைபிளின் மூலப் பதிவை அப்படியே கொடுக்க முடியும்.

  • பழங்காலத்து வார்த்தைகளைப் புதுப்பிக்க முடியும்.

இந்த விஷயங்கள், முதல் 2 மொழிபெயர்ப்புகளுக்கு எப்படி உதவியாக இருந்திருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம்.

கிரேக்க செப்டுவஜன்ட் (Septuagint)

இயேசுவின் காலத்துக்குச் சுமார் 300 வருஷங்களுக்கு முன்பு, யூத அறிஞர்கள், எபிரெய வேதாகமத்தை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். அது கிரேக்க செப்டுவஜன்ட் என்று அழைக்கப்பட்டது. இது வந்ததற்கான காரணம் என்ன? அன்றிருந்த யூதர்கள் நிறைய பேர் கிரேக்க மொழி பேசினார்கள். அவர்கள் “பரிசுத்த எழுத்துக்களை” நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இது வந்தது.—2 தீமோத்தேயு 3:15.

செப்டுவஜன்ட், யூதரல்லாத கிரேக்க மொழி பேசிய பல லட்சக்கணக்கான மக்களுக்கும் உதவியாக இருந்தது. பைபிளில் இருக்கிற விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு எப்படி உதவியது? அதைப் பற்றி பேராசிரியர் டபுள்யூ. எஃப். ஹாவர்ட் இப்படிச் சொல்கிறார்: “முதல் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து, அது கிறிஸ்தவ சர்ச்சின் பைபிளாக ஆனது. அந்தச் சர்ச்சுகளில் இருந்த மிஷனரிகள் ஜெபக்கூடங்களுக்குப் போய், ‘இயேசுதான் மேசியா என்று வேதாகமத்திலிருந்து நிரூபித்து வந்தார்கள்.’” (அப்போஸ்தலர் 17:3, 4; 20:20) யூதர்கள் சீக்கிரத்திலேயே “செப்டுவஜன்ட்மேல் இருந்த ஆர்வத்தை இழப்பதற்கு” இது ஒரு காரணமாக இருந்தது என்று பைபிள் அறிஞரான எஃப். எஃப். ப்ரூஸ் சொல்கிறார்.

இயேசுவின் சீஷர்களுக்கு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்க ஆரம்பித்தபோது, அவற்றை எபிரெய வேதாகமத்தின் செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்போடு சேர்த்தார்கள். அதுதான், இன்று நம் கையில் இருக்கிற முழு பைபிள்!

லத்தீன் வல்கேட் (Vulgate)

பைபிள் எழுதி முடிக்கப்பட்டு சுமார் 300 வருஷங்களுக்குப் பிறகு, மத வல்லுநரான ஜெரோம், பைபிளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். அது கடைசியில், லத்தீன் வல்கேட் என்று அழைக்கப்பட்டது. ஏற்கெனவே லத்தீன் மொழியில் நிறைய மொழிபெயர்ப்புகள் இருந்தன. அப்படியென்றால், ஒரு புது மொழிபெயர்ப்பு ஏன் தேவைப்பட்டது? அதைப் பற்றி தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்கோளப்பீடியா இப்படிச் சொல்கிறது: “தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்ததையும், தெளிவாகத் தெரியும் பிழைகளையும், தேவையில்லாமல் சேர்க்கப்பட்டும், விடப்பட்டும் இருந்தவற்றையும்” திருத்த வேண்டும் என்று ஜெரோம் நினைத்தார்.

இந்தப் பிழைகளை எல்லாம் ஜெரோம் திருத்தினார். ஆனால் சீக்கிரத்திலேயே, சர்ச்சில் இருந்த அதிகாரிகள், மக்களுக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார்கள். லத்தீன் வல்கேட் மட்டுமே பைபிளின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்பதாக அறிவித்தார்கள்; இந்த அறிவிப்பைப் பல நூற்றாண்டுகளாகச் செய்துவந்தார்கள். சாதாரண மனிதர்களுக்கு லத்தீன் மொழி தெரியாததால், இந்த மொழிபெயர்ப்பை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பல புதிய மொழிபெயர்ப்புகள்

இதற்கிடையே, சுமார் கி.பி. 5-வது நூற்றாண்டுக்குள், புகழ்பெற்ற சிரியாக் பெஷிட்டா (Syriac Peshitta) போன்ற மொழிபெயர்ப்புகளை மக்கள் தயாரித்திருந்தார்கள். ஆனால், 14-ஆம் நூற்றாண்டுவரை, சாதாரண மக்களுக்கு அவர்களுடைய சொந்த மொழியிலேயே பைபிளைத் தயாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

14-ஆம் நூற்றாண்டின் முடிவில், இங்கிலாந்தில் இருந்த ஜான் வைக்ளிஃப் என்பவர் தன்னுடைய நாட்டில் இருந்த சாதாரண மக்களும் பைபிளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு, யோஹனஸ் கூட்டன்பர்க் என்பவருடைய அச்சடிப்பு முறைகள் வந்தன. ஐரோப்பா முழுவதும், புதிய பைபிள் மொழிபெயர்ப்புகளை வெவ்வேறு மொழிகளில் தயாரித்து, விநியோகிப்பதற்கு இந்த அச்சடிப்பு முறைகள் பைபிள் வல்லுநர்களுக்கு உதவியாக இருந்தன.

நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்தபோது, ஒரே மொழியில் ஏன் இத்தனை மொழிபெயர்ப்புகள் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள். 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜான் லூயில் என்ற குருமார் இப்படி எழுதினார்: “மொழிகள் மாறிக்கொண்டே வருகின்றன, அவைத் தெளிவாகவும் இருப்பதில்லை. அதனால், பழைய மொழிபெயர்ப்புகளை மாற்ற வேண்டும்; இன்றைய தலைமுறை புரிந்துகொள்ளும் விதத்தில் அவற்றை மொழிபெயர்க்க வேண்டும்.”

இன்று, பைபிள் வல்லுநர்களால் என்றும் இல்லாத அளவுக்கு பழைய மொழிபெயர்ப்புகளை நன்றாக ஆராய முடிகிறது. அதுமட்டுமில்லாமல், பழங்காலத்து பைபிள் மொழிகளையும் அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். சமீப காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பைபிளின் கையெழுத்து பிரதிகளும் (Bible manuscripts) அவர்களிடம் இருக்கின்றன. இவற்றை எல்லாம் வைத்து, முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் எப்படி இருக்கும் என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

அதனால், புதிய பைபிள் மொழிபெயர்ப்புகள் விலைமதிக்க முடியாதவை என்று சொல்லலாம்! இருந்தாலும், சில மொழிபெயர்ப்புகளைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய பைபிள் மொழிபெயர்ப்பு ஒன்றைத் தயாரித்தவர்கள், கடவுள்மேல் இருந்த உண்மையான அன்பினால் அதைச் செய்திருக்கிறார்கள் என்றால், அது நமக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்! ▪

பைபிளை உங்கள் சொந்த மொழியில் ஆன்லைனிலோ, உங்கள் மொபைல் ஃபோனிலோ படிக்க விரும்பினால், www.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள். வெளியீடுகள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள் அல்லது கோடை ஸ்கேன் செய்யுங்கள்

பைபிளில் கடவுளுடைய பரிசுத்தமான பெயர்

இயேசுவின் காலத்தில் இருந்த செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பின் மிகப் பழமையான ஒரு துண்டில் கடவுளுடைய பெயர்

இயேசுவின் காலத்தில் இருந்த செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பின் மிகப் பழமையான ஒரு துண்டில் கடவுளுடைய பெயர்

பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு, யெகோவா என்ற பரிசுத்தமான கடவுளுடைய பெயரை எபிரெய வேதாகமத்திலும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் பயன்படுத்துகிறது. நிறைய தமிழ் பைபிள்களில் கடவுளுடைய பெயர் இல்லை. அதற்குப் பதிலாக, “கர்த்தர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தைச் சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் இப்படி விளக்குகிறார்கள்: ‘நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்ட (ய்ஹ்வ்ஹ்) கடவுளுடைய பெயர், எபிரெய வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பில் இல்லவே இல்லை.’ ஆனால், இது உண்மையா?

20-வது நூற்றாண்டின் மத்திபத்தில், இயேசுவின் காலத்தில் இருந்த செப்டுவஜன்ட் மொழிபெயர்ப்பின் மிகப் பழமையான சில துண்டுகள் (fragments) கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில், கடவுளுடைய பரிசுத்தமான பெயர், எபிரெய எழுத்துக்களில் இருக்கிறது. கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, நகலெடுப்பவர்கள் கடவுளுடைய பெயரை நீக்கிவிட்டு, கைரியாஸ் (ஆண்டவர்) என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், கடவுளுடைய பெயரை அந்தந்த இடங்களில் சரியாகப் பயன்படுத்துகிறது.

பைபிள் மாறிவிட்டதா?

சவக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாயாவின் சுருள்

சவக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 வருஷங்கள் பழமையான ஏசாயாவின் சுருள். இன்றிருக்கிற பைபிளோடு இது ஒத்துக்போகிறது.

பைபிளை நகலெடுத்தபோது, சில பிழைகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான்! ஆனால், அந்தப் பிழைகளால் பைபிள் மாறவில்லை. “கிறிஸ்தவ விசுவாசத்தின் எந்தவொரு அடிப்படை போதனையும் சந்தேகத்தின் பேரில் அமைந்தது கிடையாது.”—அவர் பைபிள் அண்ட் தி ஏன்ஷியன்ட் மேனுஸ்க்ரிப்ட்ஸ்.

நகல் எடுத்த யூதர்களால் அதிக பிழைகள் ஏற்படவில்லை. “ஆரம்பக் கால கிறிஸ்தவ நூற்றாண்டுகளைச் சேர்ந்த யூத எழுத்தர்கள் (scribes), எபிரெய பைபிளை மிகத் துல்லியமாகப் பல தடவை நகலெடுத்தார்கள்.” —ஸெக்கண்ட் தாட்ஸ் ஆன் தி டெட் ஸி ஸ்க்ரோல்ஸ்.

உதாரணத்துக்கு, சவக்கடல் சுருள்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாயாவின் சுருள், இதற்கு முன்பு இருக்கிற பிரதிகளைவிட 1,000 வருஷங்கள் பழமையானது. இந்தச் சுருளை இன்றிருக்கிற பிரதியோடு ஒப்பிடும்போது, என்ன தெரிகிறது? “சில சமயங்களில் மட்டுமே, ஒரு வார்த்தை சேர்க்கப்பட்டோ விடப்பட்டோ இருக்கிறது.” —தி புக். எ ஹிஸ்டரி ஆஃப் தி பைபிள்.

எழுத்துக்களை அல்லது வார்த்தைகளை இடம் மாற்றிப்போடுவது போன்ற பிழைகள் நகலெடுத்தவர்களுடைய கவனக்குறைவால் ஏற்பட்டன. இப்போது, அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடிக்கவும், திருத்தவும் முடிகிறது. “உலகத்தில் இருக்கிற வேறெந்த பழங்காலத்து பிரசுரங்களையும்விட, புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கின்றன.”—தி புக்ஸ் அண்ட் தி பார்ச்மென்ட்ஸ்.

“பழமையான பைபிள் பாப்பிரஸ் புல் சுருள்கள் (biblical papyri) எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. நம்மிடம் இருக்கிற பைபிள் பல தடவை கையால் நகலெடுக்கப்பட்டும், பிறகு, ஐரோப்பாவில் பல தடவை அச்சிடப்பட்டும் இருக்கிறது. அந்த பைபிள் பாப்பிரஸ் புல் சுருள்களும், நம் கையில் இருக்கிற பைபிளும் ஒத்துப்போகின்றன. அதனால், பைபிளில் இருக்கிற விஷயங்கள் மாறவில்லை என்பதில் விசுவாசிகள் நம்பிக்கையாக இருக்கலாம்.” —தி புக். எ ஹிஸ்டரி ஆஃப் தி பைபிள்.

அப்படியென்றால், பைபிள் மாறிவிட்டதா? இல்லவே இல்லை!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்