வாழ்வது இன்றைக்காகவா நித்திய எதிர்காலத்திற்காகவா?
“அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.”—ரோமர் 8:24.
1. எப்பிக்கூரியர்கள் என்ன போதித்தார்கள், அந்த வகையானத் தத்துவம் கிறிஸ்தவர்கள் சிலரை எவ்வாறு பாதித்தது?
கொரிந்துவில் வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?” (1 கொரிந்தியர் 15:12) கிரேக்க சாது எப்பிக்கூரஸின் நச்சுத்தன்மை வாய்ந்த தத்துவம், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குள் ஓரளவு செல்வாக்குச் செலுத்தியிருந்ததாகத் தோன்றுகிறது. ஆகவே பவுல் அந்த எப்பிக்கூரிய போதகத்தைக் குறிப்பிடுகிறார்: “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்.” (1 கொரிந்தியர் 15:32) இந்தத் தத்துவ ஞானியைப் பின்பற்றினவர்கள், மரணத்திற்குப்பின் வாழும் எந்த நம்பிக்கையையும் இகழ்வோராய், மாம்ச இச்சையே வாழ்க்கையில் முக்கிய நன்மை பயக்குகிறது என்று நம்பினர். (அப்போஸ்தலர் 17:18, 32) எப்பிக்கூரிய தத்துவம் தன்னலத்தில் ஊன்றப்பட்டதாகவும், நன்மையில் நம்பிக்கையற்றதாகவும், முடிவில் அவமதிப்பு உண்டாக்குவதாகவும் இருந்தது.
2. (அ) உயிர்த்தெழுதலை மறுதலித்தது ஏன் அவ்வளவு அதிக ஆபத்தாக இருந்தது? (ஆ) கொரிந்திய கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பவுல் எவ்வாறு பலப்படுத்தினார்?
2 உயிர்த்தெழுதலை மறுதலித்த இந்தத் தத்துவமே மிக ஆழ்ந்த பாதிப்புகளை உடையதாக இருந்தது. பவுல் இவ்வாறு நியாயங்காட்டி பேசினார்: “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. . . . இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.” (1 கொரிந்தியர் 15:13-19) ஆம், நித்திய எதிர்கால நம்பிக்கை இல்லாமல், கிறிஸ்தவம் ‘விருதாவாக’ இருக்கும். அது நோக்கமில்லாமல் இருக்கும். ஆகவே, புறமத சிந்தனைக்குரிய பாதிப்பின் கீழ், கொரிந்திய சபை, பிரச்சினைகள் பெருகுவதற்குரிய ஒரு களமாகிவிட்டிருந்தது ஆச்சரியமாயில்லை. (1 கொரிந்தியர் 1:11; 5:1; 6:1; 11:20-22) ஆகையால், உயிர்த்தெழுதலில் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும்படி பவுல் நோக்கம் கொண்டார். உயிர்த்தெழுதலின் நம்பிக்கை கற்பனைக்கதை அல்ல, நிச்சயமாய் நிறைவேறவிருக்கும் மெய்ம்மை என்பதை வலிமைமிக்க விதத்தில் நியாயங்காட்டி, வேதவசன மேற்கோள்களையும் விளக்க உதாரணங்களையும் பயன்படுத்தி, எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அவர் நிரூபித்தார். இந்த ஆதாரத்தின்பேரில், தன் உடன் விசுவாசிகளை அவர் இவ்வாறு ஊக்குவிக்க முடிந்தது: “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீரகளாக.”—1 கொரிந்தியர் 15:20-58.
“விழித்திருங்கள்”
3, 4. (அ) பேதுரு சொல்வதன் பிரகாரம், இந்தக் கடைசி நாட்களின்போது எந்த ஆபத்தான மனப்பான்மையைச் சிலர் ஏற்பர்? (ஆ) எதைக் குறித்து நம்மைநாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும்?
3 இன்று பலர், நம்பிக்கையற்ற, தற்போதைக்காகவே வாழும் மனப்பான்மையை உடையோராக இருக்கிறார்கள். (எபேசியர் 2:2) அப்போஸ்தலன் பேதுரு முன்னறிவித்தபடியே இது உள்ளது. அவர் இவ்வாறு சொன்னார்: “பரியாசக்காரர் வந்து, . . . அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.” (2 பேதுரு 3:3, 4) உண்மையான வணக்கத்தார், இவ்வாறு கருதுவதற்கு உடன்படுவார்களேயானால், “செயலற்றவர்களாக அல்லது கனியற்றவர்களாக” ஆகக்கூடும். (2 பேதுரு 1:8, NW) இன்று கடவுளுடைய ஜனங்களின் பெரும்பான்மையருடைய காரியத்தில் அவ்வாறு இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.
4 தற்போதைய இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு வரவிருக்கும் முடிவில் அக்கறை காட்டுவது தவறல்ல. இயேசுவின் சொந்த அப்போஸ்தலர்கள்தாமே இந்த அக்கறை காட்டினதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.” (அப்போஸ்தலர் 1:6, 7) ஒலிவ மலையின்மேல் இருந்தபோது, அவர் பின்வருமாறு சொன்ன அடிப்படையான செய்தி அந்த வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கி[றீர்கள்] . . . நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்.” (மத்தேயு 24:42, 44) அந்த அறிவுரையை நமக்குநாமே தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டிருக்க வேண்டும்! ‘இனி இவ்வளவு சுறுசுறுப்பாக காரியங்களில் ஈடுபடாமல், கொஞ்சம் நிதானமாகவே செய்யலாம்’ என்ற மனப்பான்மையால் ஒருவேளை வஞ்சிக்கப்படலாம். அது எத்தகைய தவறாயிருக்கும்! ‘இடிமுழக்க மக்கள்’ எனப்பட்ட யாக்கோபையும் யோவானையும் கவனியுங்கள்.—மாற்கு 3:17.
5, 6. யாக்கோபு, யோவான் ஆகிய இவர்களுடைய முன்மாதிரிகளிலிருந்து என்ன பாடங்களை நாம் புரிந்துகொள்ளலாம்?
5 யாக்கோபு மிக அதிகமான ஆர்வமுள்ள ஓர் அப்போஸ்தலனாக இருந்தார் என்று நமக்குத் தெரியும். (லூக்கா 9:51-55) கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டவுடன், அவர் சுறுசுறுப்பாய்ச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாக்கோபு பெரும்பாலும் இன்னும் இளைஞனாக இருந்தபோதே, ஏரோது அகிரிப்பா I அவரைக் கொன்றான். (அப்போஸ்தலர் 12:1-3) எதிர்பாராத முறையில் தன் வாழ்க்கை திடீரென்று முடிவடைவதை யாக்கோபு கண்டபோது, தான் அவ்வளவு அதிக ஆர்வத்துடன் தன் ஊழியத்தில் பிரயாசப்பட்டதற்காக விசனமாய் உணர்ந்தார் என்று நாம் நினைக்கிறோமா? நிச்சயமாகவே இல்லை! குறுகிய தன் வாழ்நாளில் மிகச் சிறந்த ஆண்டுகளை யெகோவாவின் சேவையில் செலவிட்டிருந்ததால் நிச்சயமாகவே அவர் சந்தோஷமாயிருந்தார். இப்போது, நம்முடைய வாழ்க்கையும் எதிர்பாராத முறையில் திடீரென்று முடிவடையுமோ என்று நாம் ஒருவரும் அறிய முடியாது. (பிரசங்கி 9:11; ஒப்பிடுக: லூக்கா 12:20, 21.) ஆகையால், யெகோவாவைச் சேவிப்பதில் மிகுந்த வைராக்கியத்துடனும் அதிக சுறுசுறுப்புடனும் இருக்கும்படி நம்மை வைத்துக்கொள்வது ஞானமாக இருக்கிறதென்பது தெளிவாயுள்ளது. அவ்வகையில் அவரிடமாக நம்முடைய நற்பெயரைக் காத்துக்கொண்டும், நம்முடைய நித்திய எதிர்காலத்தைக் கவனத்தில் வைத்துக்கொண்டும் தொடர்ந்து வாழ்ந்துவருவோம்.—பிரசங்கி 7:1.
6 “விழித்திருங்கள்” என்று கருத்தூன்றிய முறையில் இயேசு ஊக்குவித்தபோது அங்கிருந்த அப்போஸ்தலன் யோவானின் சம்பந்தமாக ஒரு பாடம் இருக்கிறது. (மத்தேயு 25:13; மாற்கு 13:37; லூக்கா 21:34-36) யோவான் அதை இருதயத்தில் ஏற்று, பல பத்தாண்டுகள் உற்சாகத்துடன் சேவித்தார். உண்மையில், மற்ற எல்லா அப்போஸ்தலரும் இறந்தப் பின்பும் அவர் உயிரோடிருந்ததாகத் தெரிகிறது. யோவான் மிகவும் வயது முதிர்ந்தவராகி, தான் பல பத்தாண்டுகள் உண்மையுடன் சேவித்த சேவையைப் பின்நோக்கிப் பார்த்தபோது, அதை ஒரு தவறாகவோ, தவறாக வழிநடத்தப்பட்ட அல்லது சமநிலையற்ற ஒரு வாழ்க்கையாகவோ கருதினாரா? நிச்சயமாகவே இல்லை! அவர் இனிமேலும் செய்யவிருந்த எதிர்கால சேவையை இன்னும் ஆவலோடு நோக்குபவராகவே இருந்தார். “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்று உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சொன்னபோது, யோவான் உடனடியாக, “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று பதிலளித்தார். (வெளிப்படுத்துதல் 22:20) சுறுசுறுப்பில்லாமல் சுகமான ‘இயல்பான வாழ்க்கையை’ விரும்பி, அப்போதைக்காக வாழ்ந்தவராய் யோவான் நிச்சயமாகவே இல்லை. கர்த்தர் எப்போது வந்தாலும் சரி, தன் பங்கில் வாழ்நாட்காலமெல்லாம் முழு பலத்துடன் தொடர்ந்து சேவித்துக்கொண்டிருப்பதென்று அவர் தீர்மானித்திருந்தார். நம்மைப் பற்றியதென்ன?
நித்திய ஜீவனில் நம்பிக்கை வைப்பதற்கு ஆதாரங்கள்
7. (அ) எவ்வாறு நித்திய ஜீவனின் நம்பிக்கை, ‘ஆதிகாலமுதல் வாக்குதத்தம் பண்ணப்பட்டது’? (ஆ) நித்திய ஜீவ நம்பிக்கையை இயேசு எவ்வாறு விளக்கமளித்து புரியவைத்தார்?
7 நித்திய ஜீவனைப் பற்றிய நம்பிக்கை மனிதனால் உண்டாக்கப்பட்ட கனவோ அல்லது கற்பனையோ அல்லவென நிச்சயமாயிருங்கள். தீத்து 1:3-ல் சொல்லியிருப்பதுபோல், ‘பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணின நம்பிக்கையின்மீதே’ நம்முடைய தேவபக்தி ஆதாரங்கொள்ளும்படி செய்யப்பட்டிருக்கிறது. கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் யாவரும் என்றென்றுமாக வாழ்வதே கடவுளுடைய முதல் நோக்கமாகும். (ஆதியாகமம் 1:28) எதுவும், ஆதாம் ஏவாளின் கலகமும்கூட இந்த நோக்கத்தைத் தடைசெய்ய முடியாது. ஆதியாகமம் 3:15-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி, மனிதவர்க்கத்தின்மீது கொண்டுவரப்பட்ட எல்லா தீங்கையும் நீக்குவதற்காக ஒரு ‘வித்துவை’ கடவுள் உடனடியாக வாக்களித்தார். இந்த “வித்து” அல்லது மேசியாவாகிய இயேசு வந்தபோது, அவர் நித்திய ஜீவ நம்பிக்கையை தம்முடைய அடிப்படையான போதகங்களில் ஒன்றாக ஆக்கினார். (யோவான் 3:16; 6:47, 51; 10:28; 17:3) மீட்பின் கிரயமாகத் தம்முடைய பரிபூரண ஜீவனை அளித்ததன்மூலம், மனிதவர்க்கத்திற்கு நித்திய ஜீவனளிக்கும் சட்டப்பூர்வமான உரிமையைக் கிறிஸ்து பெற்றார். (மத்தேயு 20:28) அவருடைய சீஷர்களில் சிலர், மொத்தம் 1,44,000 பேர் பரலோகங்களில் என்றென்றுமாக வாழ்வார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-4) இவ்வாறு ஒருகாலத்தில் சாகும் தன்மையுடைய மனிதராக இருந்த சிலர் ‘சாவாமையைத் தரித்துக்கொள்வார்கள்!’—1 கொரிந்தியர் 15:53.
8. (அ) “சாவாமை” என்பது என்ன, யெகோவா இதை ஏன் 1,44,000 பேருக்கு அளிக்கிறார்? (ஆ) ‘மற்றச் செம்மறியாடுகளுக்கு’ என்ன நம்பிக்கையை இயேசு அளித்தார்?
8 “சாவாமை” என்பது, வெறுமனே ஒருபோதும் சாகாமல் இருப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. ‘அழியாத ஜீவனுக்குரிய வல்லமையை’ இது உட்படுத்துகிறது. (எபிரெயர் 7:17; ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 20:6.) தனிச் சிறப்பு வாய்ந்த இத்தகைய பரிசை அருளுவதில் கடவுள் எதை நிறைவேற்றுகிறார்? கடவுளுடைய சிருஷ்டிகளான ஒருவரையும் நம்பமுடியாது என்ற சாத்தானின் சவாலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (யோபு 1:9-11; 2:4, 5) 1,44,000 பேர்களுக்கு அழியாமையை அருளுவதன்மூலம், சாத்தானின் சவாலுக்கு அவ்வளவு தலைசிறந்த முறையில் விடையளித்திருக்கிற இந்தத் தொகுதியாரில் தம்முடைய உறுதியான முழு நம்பிக்கையைக் கடவுள் காட்டுகிறார். ஆனால் மீதியான மனிதவர்க்கத்தைப் பற்றியதென்ன? ராஜ்ய சுதந்தரவாளிகளான இந்தச் ‘சிறுமந்தையினரில்’ முதன்முதல் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினரிடம், ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:32; 22:30) மற்றவர்கள் அவருடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக, பூமியில் நித்திய ஜீவனடைவார்கள் என்று இது குறிப்பாய்க் காட்டுகிறது. இந்த ‘மற்றச் செம்மறியாடுகளுக்குச்’ சாவாமை அளிக்கப்படுகிறதில்லை; என்றபோதிலும், அவர்கள் நிச்சயமாகவே “நித்திய ஜீவனை” அடைகிறார்கள். (யோவான் 10:16, NW; மத்தேயு 25:46) இவ்வாறு நித்திய ஜீவன் கிறிஸ்தவர்கள் எல்லாரினுடைய நம்பிக்கையாக இருக்கிறது. இது கற்பனைக் கனவு அல்ல, “பொய்யுரையாத தேவன்” மனப்பூர்வமாய் வாக்களித்து, இயேசுவின் விலைமதிக்கமுடியாத இரத்தத்தைக்கொண்டு விலை செலுத்தின ஒன்றாக இருக்கிறது.—தீத்து 1:3.
தொலைவான எதிர்காலத்திலா?
9, 10. நாம் முடிவுக்குச் சமீபமாய் வந்துவிட்டோம் என்பதற்குத் தெளிவான என்ன அறிகுறிகள் இருக்கின்றன?
9 ‘கையாளுவதற்குக் கடினமானக் கொடிய காலங்கள்,’ நாம் ‘கடைசிநாட்களை’ எட்டிவிட்டோம் என்பதை மறுக்க முடியாதபடி காட்டும் என அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தார். நம்மைச் சுற்றியுள்ள மனித சமுதாயம், அன்பற்ற, பேராசையுற்ற, தன்னைத்தானே திருப்திசெய்துகொள்கிற, மற்றும் தேவபக்தியற்ற நிலைக்குள் நொறுங்கி விழுந்துகொண்டிருக்கையில், இந்தப் பொல்லாத உலக ஒழுங்குமுறையின்மீது தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கான யெகோவாவின் நாள் விரைவில் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று நாம் உணருகிறோம் அல்லவா? வன்முறையும் பகையும் பெருகிக்கொண்டிருக்கையில், நம்மைச் சுற்றிலும், “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்ற பவுலின் மேலுமான வார்த்தைகள் நிறைவேறிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம் அல்லவா? (2 தீமோத்தேயு 3:1-5, 13) “சமாதானமும் பாதுகாப்பும்” என்ற கூற்றுகளைச் சிலர் நம்பிக்கைத் தளராமல் வெளியிட்டுச் சொல்லலாம், ஆனால், சமாதானத்தின் எல்லா எதிர்பார்ப்புகளும் மறைந்துபோகும். ஏனெனில், “கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” நம்முடைய காலங்களின் அர்த்தத்தைப் பற்றியதில் நாம் அறியாதபடி இருளில் விடப்பட்டில்லை. ஆகையால், “நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.”—1 தெசலோனிக்கேயர் 5:1-6.
10 மேலும், இந்தக் கடைசி நாட்கள் ‘கொஞ்சக்காலமாத்திரமே’ என பைபிள் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 12:12; ஒப்பிடுக: 17:10.) இந்தக் ‘கொஞ்சக்காலத்தின்’ பெரும்பாகம் கடந்துவிட்டதாகத் தெரிகிறது. உதாரணமாக, இந்த நூற்றாண்டுக்குள்ளும் நீடித்திருந்திருக்கிற, ‘வடதிசை ராஜாவுக்கும்’ ‘தென்றிசை ராஜாவுக்கும்’ இடைப்பட்ட போரை, தானியேலின் தீர்க்கதரிசனம், திருத்தமாய் விவரிக்கிறது. (தானியேல் 11:5, 6) நிறைவேறும்படி மீந்திருக்கிறதெல்லாம், தானியேல் 11:44, 45-ல் விவரிக்கப்பட்ட ‘வடதிசை ராஜாவின்’ முடிவானத் தாக்குதலேயாகும்.—இந்தத் தீர்க்கதரிசனத்தின்பேரில் மேலுமான ஆராய்ச்சிக்கு, காவற்கோபுரம் ஜூலை 1, 1987, (ஆங்கிலம்) இதழையும், நவம்பர் 1, 1993-ஐயும் காண்க.
11. (அ) மத்தேயு 24:14 எந்த அளவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? (ஆ) மத்தேயு 10:23-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் குறிப்பாய் என்ன காட்டுகின்றன?
11 “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்ற இயேசுவின் முன்னறிவிப்பும் உள்ளது. (மத்தேயு 24:14, NW) இன்று, 233 நாடுகளும் தீவுத்தொகுதிகளும், பிராந்தியங்களுமானவற்றில், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார்கள். உண்மைதான், ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்கள் இன்னும் இருக்கின்றன. யெகோவாவின் ஏற்ற காலத்தில் வாய்ப்புக்குரிய கதவு ஒருவேளை திறக்கப்படலாம். (1 கொரிந்தியர் 16:9) இருப்பினும், மத்தேயு 10:23-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிற இயேசுவின் வார்த்தைகள் சிந்திக்க வைக்கின்றன: “மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று . . . சொல்லுகிறேன்.” பூமி முழுவதிலும் நற்செய்தி நிச்சயமாகவே அறிவிக்கப்படும் என்றாலும், தண்டனைத்தீர்ப்பை நிறைவேற்றுபவராய் இயேசு ‘வருவதற்கு’ முன்பாக, பூமியின் எல்லா பாகங்களிலும் நாம் நேர்முகமாக ராஜ்ய நற்செய்தியை அறிவித்திருக்க மாட்டோம்.
12. (அ) வெளிப்படுத்துதல் 7:3-ல் எந்த ‘முத்திரைபோடுதல்’ குறிப்பிடப்படுகிறது? (ஆ) அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பூமியில் குறைந்துகொண்டு வருவதன் உட்கருத்து என்ன?
12 வெளிப்படுத்துதல் 7:1, 3-ல் உள்ள வசனத்தைக் கவனியுங்கள். “நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும்,” அழிவைக் கொண்டுவரும் அந்த ‘நான்குகாற்றுகளும்’ வீசாதபடி பிடித்து வைக்கப்படுகின்றன என்று அது சொல்கிறது. 1,44,000 பேரைச் சேர்ந்தவர்கள் பரலோக அழைப்பைப் பெறுகையில் நடந்தேறுகிற அந்த முதல் முத்திரையிடுதலை இது குறிப்பிடுகிறதில்லை. (எபேசியர் 1:13) ‘நம்முடைய கடவுளின் அடிமைகளாக’ அவர்கள் சோதிக்கப்பட்டு உண்மையுள்ளவர்களாக திட்டவட்டமாக அடையாளங்காட்டப்படுகையில் செய்யப்படும் முடிவான முத்திரையிடுதலை இது குறிக்கிறது. கடவுளுடைய, உண்மையான அபிஷேகஞ்செய்யப்பட்ட குமாரராய், பூமியில் இன்னும் உயிரோடிருக்கிறவர்களின் எண்ணிக்கை பேரளவில் குறைந்துவிட்டது. மேலும், ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம்’ அந்த மிகுந்த உபத்திரவத்தின் தொடக்க நிலை “குறுக்கப்படும்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (மத்தேயு 24:21, 22, தி.மொ.) அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களென தெரிவிப்பவர்களில் பெரும்பான்மையர், மிக வயது முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மறுபடியுமாக முடிவு சமீபமாய் இருக்கிறதென்று இது குறிக்கும் அல்லவா?
உண்மையுள்ள ஒரு காவற்காரன்
13, 14. காவற்கார வகுப்பாரின் பொறுப்பு என்ன?
13 இதற்கிடையில், ‘உண்மையுள்ள ஊழியக்காரன்’ அளிக்கும் வழிநடத்துதலுக்கு நாம் செவிகொடுத்து வருவோம். (மத்தேயு 24:45) நூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, இந்தத் தற்கால “ஊழியக்காரன்,” ‘காவற்காரனாக’ உண்மையுடன் சேவை செய்து வந்திருக்கிறான். (எசேக்கியேல் 3:17-21) ஜனவரி 1, 1984-ன் காவற்கோபுரம், இவ்வாறு விளக்கினது: “பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக பூமியில் எவ்வாறு சம்பவங்கள் படிப்படியாக நிகழ்கின்றன என்பதை இந்தக் காவற்காரன் கூர்ந்து கவனித்து, ‘உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராத பெரிய உபத்திரவம்’ எக்கணமும் வரவிருப்பதைப் பற்றிய எச்சரிக்கையைத் தொனித்து, ‘மேம்பட்ட ஒன்றைப் பற்றிய நற்செய்தியைப்’ பிரஸ்தாபிக்கிறான்.”—மத்தேயு 24:21; ஏசாயா 52:7, NW.
14 இதை நினைவில் வையுங்கள்: “காண்பதை” சத்தமிட்டுத் தெரிவிப்பதே காவற்காரனின் வேலை. (ஏசாயா 21:6-8) பைபிள் காலங்களில் ஒரு காவற்காரன், நிகழக்கூடிய ஆபத்து இன்னதென்று தெளிவாகக் கண்டுகொள்ள முடியாதபடி வெகு தூரத்தில் இருந்தபோதுங்கூட எச்சரிக்கையைத் தொனிப்பான். (2 இராஜாக்கள் 9:17, 18) பொய் எச்சரிக்கைகளும் நிச்சயமாகவே அக்காலத்தில் தொனிக்கப்பட்டன. ஆனால் ஒரு நல்ல காவற்காரன் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவதற்குப் பயந்து பேசாமல் இருந்துவிட மாட்டான். உங்கள் வீடு தீ பற்றி எரிகிறதென்றால், அது பொய் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று தீயணைப்போர் எண்ணிக்கொண்டு வராமல் இருந்துவிட்டால் நீங்கள் எவ்வாறு உணருவீர்கள்? அத்தகைய ஆட்கள் எந்த அபாய அறிகுறிக்கும் உடனடியாக விரைவில் செயல்படும்படி நாம் எதிர்பார்க்கிறோம்! இதைப் போன்றே, சூழ்நிலைமைகள் அவ்வாறு செய்யும்படி தேவைப்படுத்துவதாகத் தோன்றுகையில் காவற்கார வகுப்பார் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்.
15, 16. (அ) தீர்க்கதரிசனத்தை நாம் புரிந்துகொண்டதில் ஏன் சரிப்படுத்துதல்கள் செய்யப்படுகின்றன? (ஆ) சில தீர்க்கதரிசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த கடவுளுடைய உண்மையான ஊழியரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 எனினும், சம்பவங்கள் படிப்படியாக நிகழ்ந்துவருகையில், தீர்க்கதரிசனத்தைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதல் தெளிவாகியிருக்கிறது. கடவுள் அருளிய தீர்க்கதரிசனங்களை, அவற்றின் நிறைவேற்றத்திற்கு முன்பாக, முழுமையாகப் புரிந்துகொள்வது மிக அரிதென சரித்திரம் காட்டுகிறது. ஆபிரகாமின் வித்து, திட்டமாய் எவ்வளவு காலம் “தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருப்”பார்கள் என்று, அதாவது, 400 ஆண்டுகள் என்று கடவுள் ஆபிராமுக்குச் சொன்னார். (ஆதியாகமம் 15:13) எனினும், மோசே, அந்தக் காலத்திற்கு முன்பாகவே விடுவிப்பவராகத் தன்னை முன்வந்து அளித்தார்.—அப்போஸ்தலர் 7:23-30.
16 மேசியானியத் தீர்க்கதரிசனங்களையும் கவனியுங்கள். பின்னாகப் பார்வையைச் செலுத்தினால், மேசியாவின் மரணமும் உயிர்த்தெழுதலும் முன்னறிவிக்கப்பட்டிருந்தன என்பது தெள்ளந்தெளிவாக இருக்கிறது. (ஏசாயா 53:8-10) எனினும், இயேசுவின் சொந்த சீஷர்கள்தாமே இந்த உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறினர். (மத்தேயு 16:21-23) கிறிஸ்துவின் எதிர்கால பரோசியா, அல்லது ‘வந்திருத்தலின்’ போதே, தானியேல் 7:13, 14-ல் சொல்லியிருப்பது நிறைவேறும் என்பதை அவர்கள் காணவில்லை. (மத்தேயு 24:3) ஆகையால், “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று அவர்கள் இயேசுவைக் கேட்டபோது, தங்கள் கணக்கில் ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் பிழையில் இருந்தனர். (அப்போஸ்தலர் 1:6) கிறிஸ்தவ சபை நன்றாய் ஸ்தாபிக்கப்பட்ட பின்பும், தப்பான எண்ணங்களும் தவறான எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து எழும்பிக்கொண்டிருந்தன. (2 தெசலோனிக்கேயர் 2:1, 2) கிறிஸ்தவர்களில் சிலர் எப்போதாவது தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தபோதிலும், அந்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளின் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதை மறுக்கமுடியாது!
17. வேதவசனத்தை நாம் புரிந்துகொண்டதில் சரிப்படுத்துதல்கள் செய்யப்படுவதை நாம் என்ன வகையில் கருதவேண்டும்?
17 இன்று காவற்கார வகுப்பு, அதன் கருத்துக்களை அவ்வப்போது சரிசெய்ய வேண்டியிருந்திருக்கிறது. எனினும் இந்த ‘உண்மையுள்ள ஊழியக்காரனை’ யெகோவா ஆசீர்வதித்திருப்பதை எவராவது சந்தேகிக்க முடியுமா? மேலும், சூழமைவில் கருதுகையில், ஏற்பட்டுள்ள அந்தச் சரிப்படுத்துதல்களில் பெரும்பான்மையானவை சிறியவையே அல்லவா? பைபிளைப் பற்றிய நம்முடைய அடிப்படையான புரிந்துகொள்ளுதல் மாறவில்லை. நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற நம் நம்பிக்கை எப்போதுமில்லாத அளவுக்கு உறுதியாயிருக்கிறது!
ஒரு நித்திய எதிர்காலத்திற்காக வாழ்தல்
18. இன்றைக்காக மாத்திரமே வாழ்வதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
18 “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்று இந்த உலகம் சொல்லலாம், ஆனால் இது நம்முடைய மனப்பான்மையாக இருக்கக்கூடாது. ஒரு நித்திய எதிர்காலத்திற்காக உங்களால் உழைக்க முடியும் என்கிறபோது, இப்போதைய வாழ்க்கையில் அடையக்கூடிய இன்பங்களுக்காக ஏன் வீணாய் உழைக்க வேண்டும்? அந்த நம்பிக்கை, பரலோகத்தில் சாவாமையுடைய ஜீவனாக இருந்தாலும்சரி, பூமியில் நித்திய ஜீவனாக இருந்தாலும்சரி, வெறும் கனவுமல்ல, கற்பனையுமல்ல. “பொய்யுரையாத” கடவுளால் வாக்களிக்கப்பட்ட மெய்ம்மையாக இருக்கிறது. (தீத்து 1:3) நம்முடைய நம்பிக்கை வெகு சீக்கிரத்தில் மெய்ம்மையாகப்போவதற்கான அத்தாட்சி பேரளவில் உள்ளது! ‘மீந்துள்ள காலம் குறுகியதாக இருக்கிறது.’—1 கொரிந்தியர் 7:29, NW.
19, 20. (அ) ராஜ்யத்தினிமித்தமாக நாம் செய்திருக்கிற தியாகங்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? (ஆ) நாம் ஏன் நித்திய ஜீவனை எதிர்நோக்கி வாழ வேண்டும்?
19 உண்மைதான், இந்த ஒழுங்குமுறை, பலர் நினைத்ததைப் பார்க்கிலும் அதிகக் காலம் ஏற்கெனவே நீடித்துவிட்டது. இது முன்னதாகவே தங்களுக்குத் தெரிந்திருந்தால், குறிப்பிட்ட சில தியாகங்களைத் தாங்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதாக ஒருசிலர் இப்போது உணரலாம். ஆனால் அவ்வாறு செய்ததற்காக ஒருவர் மனம் வருந்தக்கூடாது. என்னவாயினும், தியாகங்கள் செய்வது, கிறிஸ்தவராக இருப்பதன் அடிப்படையான பாகமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் ‘தங்களைத்தாங்களே சொந்தம் கைவிடுகிறார்கள்.’ (மத்தேயு 16:24, NW) கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு நாம் எடுத்த முயற்சிகள் வீணாகியதாக நாம் ஒருபோதும் உணரக்கூடாது. இயேசு இவ்வாறு வாக்களித்தார்: ‘என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தாயையாவது, தகப்பனையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது . . . நூறத்தனையாகவும் . . . மறுமையிலே [“வரவிருக்கிற காரிய ஒழுங்குமுறையில்,” NW] நித்திய ஜீவனையும் அடைவான்.’ (மாற்கு 10:29, 30, தி.மொ.) இப்போதிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின், உங்கள் தொழில், வீடு, அல்லது வங்கியிலுள்ள பணம், எந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்ததாகத் தோன்றும்? இருப்பினும், யெகோவாவுக்காக நீங்கள் செய்திருக்கும் தியாகங்கள், இப்போதிருந்து பத்து லட்ச ஆண்டுகளுக்குப் பின்னும்—இப்போதிருந்து நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின்னும் அர்த்தமுள்ளவையாக இருக்கும்! “ஏனென்றால், உங்கள் கிரியையை . . . மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
20 ஆகையால், நாம் நித்திய ஜீவனை எதிர்நோக்குகிறவர்களாக, நம்முடைய கண்களை, ‘காணப்படுகிறவைகளின் மீதல்ல, காணப்படாதவைகளின்மீது’ நோக்கியிருக்கச் செய்வோமாக. “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” (2 கொரிந்தியர் 4:18) தீர்க்கதரிசியாகிய ஆபகூக் இவ்வாறு எழுதினார்: “குறித்தக்காலத்துக்கெனத் தரிசனம் இன்னும் காத்திருக்கிறது, அது ஆவலாய் முடிவை நோக்குகிறது, மோசம் போக்காது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது தவறாமல் வரும், வராமற்போகாது.” (ஆபகூக் 2:3, தி.மொ.) முடிவுக்காகக் ‘காத்திருப்பது’ நம்முடைய தனிப்பட்ட பொறுப்புகளையும் குடும்பப் பொறுப்புகளையும் நிறைவேற்றுகிற முறைகளை எவ்வாறு பாதிக்கிறது? நம்முடைய அடுத்தக் கட்டுரை இந்தக் காரியங்களின்பேரில் விளக்கமளிக்கும்.
மறுபார்வையிடுவதற்கான குறிப்புகள்
◻ இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு தாமதிப்பதுபோல் தோன்றுவதால், இன்று ஒருசிலர் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?
◻ நித்திய ஜீவனைப்பற்றிய நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன?
◻ ராஜ்ய அக்கறைகளின் நிமித்தமாக நாம் செய்திருக்கிற தியாகங்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
முடிவு வருவதற்கு முன்பாக, பூகோள பிரசங்க ஊழியம் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும்