முடிவு சமீபித்து வருகையில் ‘தெளிந்த புத்தியுடன் இருத்தல்’
‘எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.’—1 பேதுரு 4:7, தி.மொ.
1. ‘தெளிந்த புத்தியுடன்’ இருப்பதில் உட்பட்டிருப்பது என்ன?
மேலே குறிப்பிட்டுள்ள அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகள், கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழும் முறையின்மீது மிக ஆழ்ந்த பாதிப்பை உடையதாக இருக்க வேண்டும். எனினும், உலக வாழ்க்கைக்குரிய பொறுப்புகளிலிருந்தும், அக்கறை செலுத்த வேண்டிய காரியங்களிலிருந்தும் தன் வாசகர்கள் பின்வாங்க வேண்டுமென்று பேதுரு சொல்லவில்லை; மேலும், எக்கணமும் வரவிருந்த அழிவின்பேரில் மட்டுக்குமீறிய ஒரு திகில் உணர்ச்சியை அவர் தூண்டிவிடவுமில்லை. மாறாக, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்” என்று அவர் ஊக்குவித்தார். ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாக’ இருப்பது, நல்ல பகுத்தறிவைக் காட்டுதலையும், நம்முடைய பேச்சிலும் செயல்களிலும் நேர்மையாயும், விவேகமாயும், நியாயமாயும் இருத்தலையும் உட்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தை நம் சிந்தனைகளையும் செயல்களையும் ஆட்கொள்ளும்படி அனுமதிப்பதைக் குறிக்கிறது. (ரோமர் 12:2) “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே” நாம் வாழ்வதனால், பிரச்சினைகளையும் இக்கட்டுகளையும் தவிர்ப்பதற்கு தெளிந்த புத்தி தேவைப்படுகிறது.—பிலிப்பியர் 2:15.
2. யெகோவாவின் பொறுமை இன்று கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு நன்மை பயக்குகிறது?
2 நம்மைப் பற்றி அடக்கமுள்ள, உண்மையானக் கருத்தை உடையோராக இருக்கும்படியும் ‘தெளிந்த புத்தி’ நமக்கு உதவி செய்கிறது. (தீத்து 2:12; ரோமர் 12:3) “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [“யெகோவா,” NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் [“அழிந்துபோகாமல்,” NW] எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” என்று 2 பேதுரு 3:9-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இவ்வார்த்தைகளைக் கருதுகையில் இது இன்றியமையாதது. அவிசுவாசிகளிடமாக மட்டுமல்ல, ‘நம்மேலும்’—கிறிஸ்தவ சபையின் உறுப்பினரிடமாகவும்—யெகோவா பொறுமையுள்ளவராயிருக்கிறார். ஏன்? ஏனெனில், ‘ஒருவரும் அழிந்துபோகாமல் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்.’ நித்திய ஜீவ பரிசுக்குத் தகுதிபெற, மாற்றங்களையும் சரிப்படுத்துதல்களையும் சிலர் இன்னும் ஒருவேளை செய்ய வேண்டியிருக்கலாம். ஆகையால் சில சரிப்படுத்துதல்களைச் செய்யத் தேவைப்படுவதாக இருக்கக்கூடிய காரியங்களை நாம் கவனிக்கலாம்.
நம்முடைய தனிப்பட்ட உறவுகளில் “தெளிந்த புத்தி”
3. தங்கள் பிள்ளைகளைக் குறித்ததில், என்ன கேள்விகளை பெற்றோர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம்?
3 சமாதானத்திற்குரிய புகலிடமாக வீடு இருக்க வேண்டும். ஆனால், ‘சண்டையோடுகூடிய வீடாகவே’ அது சிலருக்கு இருக்கிறது. (நீதிமொழிகள் 17:1) உங்கள் குடும்பத்தைப் பற்றியதென்ன? உங்கள் வீடு “மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்” இல்லாமல் இருக்கிறதா? (எபேசியர் 4:31) உங்கள் பிள்ளைகளைப் பற்றியதென்ன? தாங்கள் நேசிக்கவும் பாராட்டவும் படுகிறார்கள் என்று அவர்கள் உணருகிறார்களா? (லூக்கா 3:22-ஐ ஒப்பிடுக.) அவர்களுக்குப் போதனை அளித்து பயிற்றுவிப்பதற்கு நீங்கள் நேரம் செலவிடுகிறீர்களா? அவர்களை, கோபாவேசத்தில் அல்லாமல், ‘நீதியில் சிட்சிக்கிறீர்களா?’ (2 தீமோத்தேயு 3:16, NW) பிள்ளைகள், “யெகோவாவினால் வரும் சுதந்தரம்” என்பதால், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றியதில் அவர் மிக ஆழ்ந்த அக்கறையுடையவராக இருக்கிறார்.—சங்கீதம் 127:3, தி.மொ.
4. (அ) ஒரு கணவர் தன் மனைவியைக் கடுகடுத்த முறையில் நடத்தினால் அதன் விளைவு என்னவாயிருக்கும்? (ஆ) மனைவிமார் எவ்வாறு கடவுளுடன் சமாதானத்தையும் முழு குடும்பத்தில் சந்தோஷத்தையும் பெருகச் செய்யலாம்?
4 நம் மணத்துணையைப் பற்றியதென்ன? “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” (எபேசியர் 5:28, 29) திட்டி, கொடுங்கோன்மையாக அதிகாரம் செலுத்தி நடத்துகிறவன், அல்லது நியாய உணர்வற்ற மனிதன், தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுப்பதுமட்டுமல்லாமல் கடவுளுடன் தன் உறவையும் கெடுத்துக்கொள்கிறான். (1 பேதுரு 3:7) மனைவிமாரைப் பற்றியதென்ன? அவர்களும் அவ்வாறே ‘கர்த்தருக்குக் கீழ்ப்பட்டிருப்பதுபோல் தங்கள் கணவன்மாருக்குக் கீழ்ப்பட்டிருக்க’ வேண்டும். (எபேசியர் 5:22, NW) கடவுளைப் பிரியப்படுத்தும் முறையில் சிந்திப்பது, தன் கணவரின் குறைபாடுகளைக் கருதி மனக்கசப்படையாமல், அவருக்குக் கீழ்ப்பட்டிருக்க ஒரு மனைவிக்கு உதவி செய்யும். சில சமயங்களில், தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்திக் கூறுவதற்குக் கடமைப்பட்டவளாக ஒரு மனைவி உணரலாம். திறமையுள்ள மனைவியைக் குறித்து நீதிமொழிகள் 31:26 இவ்வாறு சொல்கிறது: “தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.” தயவும், மரியாதையுமுள்ள முறையில் அவள் தன் கணவரிடம் நடந்துகொள்வதன் மூலம், கடவுளிடமாக சமாதானத்தைக் காத்து, தன் குடும்பத்தாரின் சந்தோஷத்தையும் பெருகச் செய்கிறாள்.—நீதிமொழிகள் 14:1.
5. பெற்றோரிடம் நடந்துகொள்ளும் முறையில், இளைஞர் ஏன் பைபிளின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்?
5 இளைஞரே, உங்கள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? உலகம் பெரும்பாலும் தடை செய்யாமல் விட்டுக்கொடுக்கிற ஏளனமான, மரியாதையற்ற பேச்சை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அல்லது “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” என்று கூறும் பைபிளின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?—எபேசியர் 6:1-3.
6. உடன் வணக்கத்தாரிடமாக நாம் எவ்வாறு சமாதானத்தை நாடித்தொடரலாம்?
6 உடன் வணக்கத்தாரிடமாக, ‘சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருகையிலும்’ நாம் ‘தெளிந்த புத்தியைக்’ காட்டுகிறோம். (1 பேதுரு 3:11) கருத்துவேறுபாடுகளும் தவறான புரிந்துகொள்ளுதல்களும் அவ்வப்போது எழும்புகின்றன. (யாக்கோபு 3:2) வெறுப்புணர்ச்சிகள் மனதைப் புண்படுத்தும்படி அனுமதித்தால், முழு சபையின் சமாதானமும் ஆபத்துக்கு உட்படுத்தப்படக்கூடும். (கலாத்தியர் 5:15) ஆகையால் கருத்துவேறுபாடுகளை விரைவில் சரிசெய்யுங்கள்; சமாதானமான தீர்வுகளை நாடுங்கள்.—மத்தேயு 5:23-25; எபேசியர் 4:26; கொலோசெயர் 3:13, 14.
‘தெளிந்த புத்தியும்’ குடும்ப பொறுப்புகளும்
7. (அ) உலக வாழ்க்கைக்குரிய காரியங்களிலும் ‘தெளிந்த புத்தியைக்’ காட்டும்படி பவுல் எவ்வாறு ஊக்கமூட்டினார்? (ஆ) குடும்பப் பொறுப்புகளினிடமாக, கிறிஸ்தவ கணவன்மாரும் மனைவிமாரும் என்ன மனப்பான்மையை உடையோராக இருக்க வேண்டும்?
7 ‘தெளிந்த புத்தி உள்ளவர்களாய் ஜீவிக்கும்படி,’ அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (தீத்து 2:12) பெண்கள், ‘தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களுமாய்’ இருக்கும்படி, இந்த வசனத்தின் சூழமைவில் அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு அறிவுரை கொடுப்பது கவனத்தைக் கவருவதாக இருக்கிறது. (தீத்து 2:4, 5) யூதக் காரிய ஒழுங்குமுறை முடிவடைவதற்கு சில ஆண்டுகளே இருந்த சமயமான பொ.ச. 61-64-களில் பவுல் அதை எழுதினார். எனினும், வீட்டுவேலை போன்ற, அன்றாட உலக வாழ்க்கைக்குரிய காரியங்களும் முக்கியமாக இன்னும் இருந்தன. ஆகையால், “கடவுளின் வசனம் தூஷிக்கப்படாதபடி” கணவன்மாரும் மனைவிமாரும், தங்கள் குடும்பப் பொறுப்புகளை, நலமார்ந்த, உடன்பாடான முறையில் கருதி வரவேண்டும். ஒரு குடும்பத் தலைவர், தன் வீட்டுக்கு வந்தவரிடம், தன் வீடு அலங்கோலமாக இருந்ததற்காக மன்னித்துக்கொள்ளும்படி சொன்னார். “தான் பயனியர் செய்வதால்” அது பழுதுபாராமல் மோசமான நிலையில் இருந்ததென விளக்கினார். ராஜ்யத்தினிமித்தமாக நாம் தியாகங்கள் செய்வது போற்றத்தக்கதே; ஆனால், நம் குடும்பங்களின் சுகநலத்திற்குக் கேடுண்டாகத் தியாகம் செய்யாதபடி கவனமாயிருக்க வேண்டும்.
8. எவ்வாறு குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பங்களின் தேவைகளைச் சமநிலையான முறையில் கவனித்து வரலாம்?
8 தன் குடும்பத்திற்குத் தேவையானவற்றை அளித்து பராமரிக்கத் தவறுகிற ஒருவன், “விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” என்று சொல்லி, தங்கள் குடும்பங்களுக்கு முதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கும்படி தகப்பன்மாரை பைபிள் ஊக்குவிக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) வாழ்க்கை தராதரங்கள் உலகம் முழுவதிலுமே வேறுபடுகின்றன; பொருளாதார எதிர்பார்ப்புகளை மட்டுப்பட்ட அளவோடு வைத்துக்கொள்வது நல்லது. “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக” என்று நீதிமொழிகள் 30:8-ஐ எழுதியவர் ஜெபித்தார். எனினும், தங்கள் பிள்ளைகளின் பொருளாதாரத் தேவைகளை, பெற்றோர் கவனியாமல் விடக்கூடாது. உதாரணமாக, தேவராஜ்ய சிலாக்கியங்களை ஏற்று நிறைவேற்றும்படி ஒருவர், தன் குடும்பத்தை, வாழ்க்கைக்குரிய அடிப்படைத் தேவைகள் இல்லாமல் விடுவது ஞானமாக இருக்குமா? அவருடைய பிள்ளைகளுக்கு இது மனக்கசப்பை உண்டாக்குமல்லவா? மறுபட்சத்தில், நீதிமொழிகள் 24:27 (NW) இவ்வாறு சொல்கிறது: “வெளியில் உன் வேலையை ஆயத்தப்படுத்தி, வயலில் அதை உனக்கு தயார் செய். அதன்பின் உன் வீட்டாரையும் நீ கட்டியெழுப்ப வேண்டும்.” ஆம், பொருளாதாரக் காரியங்களுக்கான அக்கறை அதனிடத்தை உடையதாக இருக்கையில், ‘தன் வீட்டாரைக் கட்டியெழுப்புவது’—ஆவிக்குரியப்பிரகாரமும் உணர்ச்சிவசப் பிரகாரமும்—இன்றியமையாதது.
9. தாங்கள் மரணமடைய அல்லது நோயுறக் கூடும் என்பதைக் குடும்பத் தலைவர்கள் கருதுவது ஏன் ஞானமாக இருக்கிறது?
9 திடீரென உங்களுக்கு மரணம் நேரிடுமானால், அந்நிலையில் உங்கள் குடும்பத்தின் பராமரிப்புக்கானவற்றிற்கு முன்னேற்பாடுகள் செய்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 13:22 இவ்வாறு சொல்லுகிறது: “நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்.” யெகோவாவைப் பற்றிய அறிவும் அவருடன் கொண்டிருக்கும் உறவுமாகிய ஒரு சுதந்தரத்தோடுகூட, பொருள் சம்பந்தமாயும் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவைப்படுவதை ஏற்பாடு செய்வதில் பெற்றோர் அக்கறையுடையோராக இருப்பார்கள். பல நாடுகளில், பொறுப்புள்ள குடும்பத் தலைவர்கள், சிறிது பண சேமிப்பையும், சட்டப்பூர்வ உயிலையும், காப்புறுதியையும் தயாரித்து வைத்திருக்க முயற்சி செய்வார்கள். கடவுளுடைய ஜனங்கள், ‘சமயமும் எதிர்பாராத நிகழ்ச்சியுமானவற்றிற்கு’ விதிவிலக்காக இல்லை. (பிரசங்கி 9:11, NW) பணம் ‘பாதுகாப்புக்குரிய’ ஒன்று; கவனமாகத் திட்டமிடுதல் பெரும்பாலும் இக்கட்டைத் தவிர்க்க உதவலாம். (பிரசங்கி 7:12, NW) மருத்துவ கவனிப்புக்கு அரசாங்கம் பணமளிக்காத நாடுகளில், உடல்நலத் தேவைக்கென பணம் ஒதுக்கி வைக்க அல்லது ஏதோ வகையான ஆரோக்கிய காப்புக்குரிய ஏற்பாடு செய்ய சிலர் தெரிந்துகொள்ளலாம்.a
10. எவ்வாறு கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக ‘பணத்தை ஒதுக்கி வைக்கலாம்’?
10 வேத வசனங்கள் இவ்வாறும் சொல்கின்றன: “பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.” (2 கொரிந்தியர் 12:14) பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு, வாழ்க்கையில் வெற்றிகரமான நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும்படி, அவர்களுடைய எதிர்காலக் கல்விக்காகவும் திருமணத்திற்காகவும் பணத்தை ஒதுக்கி வைப்பது இந்த உலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. உங்கள் பிள்ளையின் ஆவிக்குரிய எதிர்காலத்திற்காக ஒதுக்கி வைப்பதற்கு நீங்கள் சிந்தனை செலுத்தியிருக்கிறீர்களா? உதாரணமாக, வளர்ச்சியடைந்த ஒரு பிள்ளை முழுநேர ஊழியம் செய்கிறதென்று வைத்துக்கொள்வோம். முழுநேர ஊழியர்கள் மற்றவர்களிடமிருந்து பண உதவியைக் கேட்கவோ எதிர்பார்க்கவோ கூடாது; என்றபோதிலும், முழுநேர சேவையில் நிலைத்திருக்க அவனுக்கு உதவிசெய்யும்படி, அன்புள்ள பெற்றோர், ‘அவனுடைய தேவைகளுக்கேற்ப அவனோடு பகிர்ந்துகொள்வதற்குத்’ தெரிந்துகொள்ளலாம்.—ரோமர் 12:13, NW; 1 சாமுவேல் 2:18, 19; பிலிப்பியர் 4:14-18.
11. பணத்தை சரியான முறையில் நோக்குவது விசுவாசக் குறைவைக் காட்டுகிறதா? விளக்குங்கள்.
11 பணத்தை சரியான முறையில் நோக்குவது, சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்கியிருக்கிறது என்பதில் விசுவாசக் குறைவை சுட்டிக் காட்டுவதாக இல்லை. அது, ‘நடைமுறையான ஞானத்தையும்’ தெளிவான தீர்ப்பையும் தெரிவிக்கும் ஒரு காரியமாகத்தான் உள்ளது. (நீதிமொழிகள் 2:7; 3:21; NW) பணத்தைப் பயன்படுத்துவதில், “ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் . . . [“நடைமுறையில்,” NW] அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்” என்று இயேசு ஒருமுறை சொன்னார். (லூக்கா 16:8) அப்படியானால், தங்கள் குடும்பங்களின் தேவைகளை, மேலும் நல்ல முறையில் தாங்கள் கவனிக்கக்கூடும்படி, தங்கள் உடைமைகளைத் தாங்கள் பயன்படுத்துவதில் சரிப்படுத்துதல்கள் செய்ய வேண்டியிருப்பதாகச் சிலர் கண்டிருப்பது ஆச்சரியமல்ல.
கல்வியை நாம் கருதும் முறையில் “தெளிந்த புத்தி”
12. புதிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ள இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எவ்வாறு கற்பித்தார்?
12 ‘இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறது.’ மேலும் மிகப் பரந்த பொருளியல் மாற்றங்களும் தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகமாக நடைபெற்றுவருகின்றன. (1 கொரிந்தியர் 7:31) எனினும், நிலைமைக்குத் தக்கவாறு செயல்படும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார். அவர்களைத் தங்கள் முதல் பிரசங்க பயணத்தில் அவர் அனுப்புகையில் இவ்வாறு சொன்னார்: “உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.” (மத்தேயு 10:9, 10) எனினும், பிற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்.” (லூக்கா 22:36) எது மாறியிருந்தது? சூழ்நிலைமைகள். அந்த மத சூழ்நிலை மேலுமதிக பகைமையுள்ளதாக ஆகியிருந்தது, மேலும் இப்போது அவர்கள் தங்களுக்கு உணவு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது.
13. கல்வி அளிப்பதன் முக்கியமான நோக்கம் என்ன, இதைக் குறித்ததில் பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கலாம்?
13 அவ்வாறே இன்று, பெற்றோர், இன்றைய பொருளாதார மெய்ம்மைகளைக் கவனத்தில் ஏற்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, உங்கள் பிள்ளைகள் போதிய பள்ளி பயிற்றுவிப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்யும்படி நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா? யெகோவாவின் திறம்பட்ட ஓர் ஊழியனாக இருக்கும்படி ஓர் இளைஞனைத் தகுதிபெற செய்வதே கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஆவிக்குரிய கல்வியே எல்லாவற்றைப் பார்க்கிலும் மிக முக்கியமான கல்வியாக இருக்கிறது. (ஏசாயா 54:13) பண சம்பந்தமாய்த் தங்களைத் தாங்களே ஆதரித்துக்கொள்ள தங்கள் பிள்ளைகளுக்குத் திறமை இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பெற்றோர் அக்கறையுடையோராக இருக்கின்றனர். ஆகையால் உங்கள் பிள்ளைகளுக்கு வழிநடத்துதலைக் கொடுங்கள்; பொருத்தமான பள்ளி பாட பொருள்களைத் தெரிந்துகொள்ளும்படி அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; கூடுதலாக ஏதாவது துணை கல்வியை ஏற்பது ஞானமாயிருக்குமா இராதாவென அவர்களோடு கலந்து பேசுங்கள். இத்தகைய தீர்மானங்கள் குடும்பப் பொறுப்பாக இருக்கின்றன, ஏற்கப்பட்ட கல்வியை மற்றவர்கள் குற்றங்குறை சொல்லக்கூடாது. (நீதிமொழிகள் 22:6) வீட்டிலேயே தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும்படி தெரிந்துகொள்கிறவர்களைப் பற்றியதென்ன?b போற்றத்தக்க முறையில் பலர் அதை நிறைவேற்றியிருக்கிற போதிலும், சிலர் அதை, தாங்கள் நினைத்ததைப் பார்க்கிலும் அதிகக் கடினமாகக் கண்டிருக்கின்றனர்; அவர்களுடைய பிள்ளைகளும் போதிய கல்வி இல்லாமல் போயிருக்கின்றனர். ஆகையால் பள்ளி படிப்பை வீட்டிலேயே கொடுக்கும்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அதன் விளைவைச் சிந்தித்துப் பார்க்கத் தவறாதீர்கள். அதை முற்றிலுமாய்ச் செய்து முடிக்க திறமைகளும் சுயகட்டுப்பாடும் உங்களுக்கு இருக்கின்றனவாவென மெய்ம்மையாக மதிப்பிட்டுக் காணுங்கள்.—லூக்கா 14:30.
‘பெரிய காரியங்களைத் தேடாதே’
14, 15. (அ) பாரூக் எவ்வாறு தன் ஆவிக்குரிய சமநிலையை இழந்தார்? (ஆ) ‘பெரிய காரியங்களைத் தேடினது’ அவருக்கு ஏன் முட்டாள்தனமாக இருந்தது?
14 இந்த ஒழுங்குமுறையின் முடிவு இன்னும் வராததனால், இந்த உலகம் தர இருப்பவற்றை—பெரு மதிப்புடைய வாழ்க்கை முன்னேற்றங்கள், மிகு வருவாயுள்ள வேலைகள், செல்வம் ஆகியவற்றை—நாடித்தேடுவதற்கு சிலர் மனம் சாயக்கூடும். எரேமியாவின் செயலாளராகிய பாரூக்கைக் கவனியுங்கள். அவர் இவ்வாறு புலம்பினார்: “இப்பொழுது ஐயோ எனக்கு ஆபத்து, யெகோவா என் வாதையோடு சஞ்சலத்தையும் சேர்த்தார்; என் பெருமூச்சினால் இளைத்தேன், இளைப்பாற எனக்கு இடமில்லை.” (எரேமியா 45:3, தி.மொ.) பாரூக் களைத்துப்போயிருந்தார். எரேமியாவின் செயலாளனாகச் சேவிப்பது இக்கட்டான கடின வேலையாக இருந்தது. (எரேமியா 36:14-26) அந்த இக்கட்டுக்கு முடிவு இல்லாததாகத் தோன்றியது. எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பாக இன்னும் 18 ஆண்டுகள் செல்ல வேண்டியதாக இருந்தது.
15 பாரூக்கினிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும். நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே.” பாரூக் தன் சமநிலையை இழந்துவிட்டிருந்தார். அவர் ‘தனக்குப் பெரிய காரியங்களைத் தேட’ தொடங்கிவிட்டிருந்தார். அவை செல்வம், முதன்மை நிலை, பொருளாதார பாதுகாப்பு போன்றதாக இருந்திருக்கலாம். யெகோவா, ‘முழு தேசத்தையுமே வேரோடு பிடுங்கப்’ போவதால், அத்தகைய காரியங்களைத் தேடுவது பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருந்ததா? ஆகையால் இந்த அறிவுத்தெளிவுடைய நினைப்பூட்டுதலை யெகோவா பாரூக்குக்குக் கொடுத்தார்: “மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் . . . ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன்.” எருசலேம் அழிகையில், பொருளுடைமைகள் அழியாமல் மீந்திருக்கப்போவதில்லை! அவனுடைய ‘பிராணன் கொள்ளைப்பொருளாக’ மீட்கப்படுவதற்கு மாத்திரமே யெகோவா உறுதியளித்தார்.—எரேமியா 45:4, 5.
16. இன்று யெகோவாவின் ஜனங்கள் என்ன பாடத்தை பாரூக்கின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்?
16 யெகோவா அளித்த திருத்தத்திற்கு பாரூக் செவிகொடுத்து, யெகோவாவின் வாக்கின்படியே உயிர் தப்பினார். (எரேமியா 43:5-7) இன்று யெகோவாவின் ஜனங்களுக்கு இது எத்தகைய வல்லமைவாய்ந்த ஒரு பாடம்! ‘நமக்கு பெரிய காரியங்களைத் தேடுவதற்கு’ இது காலமல்ல. ஏன்? ஏனெனில், ‘உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகிறது.’—1 யோவான் 2:17.
மீந்திருக்கும் காலத்தை பயன்படுத்தும் மிகச் சிறந்த முறை
17, 18. (அ) நினிவே பட்டணத்து ஜனங்கள் மனந்திரும்பினபோது யோனா எவ்வாறு பிரதிபலித்தார்? (ஆ) என்ன பாடத்தை யெகோவா யோனாவுக்குக் கற்பித்தார்?
17 அப்படியானால், மீந்திருக்கும் காலத்தை நாம் எவ்வாறு மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம்? தீர்க்கதரிசியாகிய யோனாவின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். யோனா “நினிவேக்குப் போனான்; . . . இன்னும் நாற்பதுநாளிலே நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறிவந்தான்.” யோனாவுக்கு ஆச்சரியமுண்டாக, நினிவே பட்டணத்து ஜனங்கள் அவருடைய செய்தியை ஏற்று மனந்திரும்பினார்கள்! யெகோவா அந்தப் பட்டணத்தை அழிக்காமல் விட்டுவிட்டார். யோனாவின் பிரதிபலிப்பு? “யெகோவாவே, என் பிராணனை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருப்பதிலும் சாவது நலம்.”—யோனா 3:3, 4; 4:3, தி.மொ.
18 யெகோவா அப்போது யோனாவுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தார். அவர், “ஒரு ஆமணக்குச்செடி முளைக்கும்படி கட்டளையிட்டு யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாக்க . . . அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கைக் கண்டு யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.” எனினும், அந்தச் செடி விரைவில் காய்ந்துவிட்டதால், யோனாவின் சந்தோஷம் சிறிது நேரமே நீடித்தது. யோனா இந்தச் சங்கடத்தின்பேரில் வெகு கோபமடைந்து ‘தளர்ந்துபோனான்.’ யெகோவா தம்முடைய குறிப்பை அறிவுறுத்தி: “நீ . . . ஆமணக்கைப்பற்றிப் பரிதபிக்கிறாயே, . . . மகா நகரமாகிய நினிவேயைப்பற்றி நான் பரிதபியாமலிருப்பேனோ; வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமானவர்கள் அதில் இருக்கிறார்களே, அநேக மிருக ஜீவன்களும் அதில் உண்டே என்றார்.”—யோனா 4:6, 7, 9-11, தி.மொ.
19. தன்னலமே கருதும் என்ன சிந்தனை போக்கை நாம் தவிர்க்க விரும்புவோம்?
19 யோனாவின் விவாதம் எவ்வளவாய்த் தன்னலமே கருதினதாக இருந்தது! ஒரு செடிக்காக அவர் வருத்தப்பட முடிந்தது, ஆனால் நினிவேயின் ஜனங்களுக்காக—ஆவிக்குரிய பிரகாரமாய், ‘வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாக இருந்த’ அந்த ஜனங்களுக்காக அவர் சிறிதேனும் இரக்கப்படவில்லை. அவ்வாறே நாம், இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவுக்காக ஆவலோடு விரும்பி காத்திருக்கலாம், சரியாகவே அவ்வாறு காத்திருக்கலாம்! (2 தெசலோனிக்கேயர் 1:8) எனினும், இவ்வாறு காத்திருக்கையில், ஆவிக்குரியப் பிரகாரமாய்ப் பேச, ‘வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாக’ இருக்கிற, நேர்மை இருதயமுள்ள ஜனங்களுக்கு உதவிசெய்வதற்கான ஒரு பொறுப்பு நமக்கு இருக்கிறது. (மத்தேயு 9:36; ரோமர் 10:13-15) மீந்திருக்கிற இந்தக் குறுகிய காலத்தை, நம்மால் கூடிய அத்தனை பேருக்கும், யெகோவாவைப் பற்றிய அருமையான அறிவை அடையும்படி உதவி செய்ய நீங்கள் பயன்படுத்துவீர்களா? ஜீவனடைய ஒருவருக்கு உதவிசெய்யும் மகிழ்ச்சிக்குச் சமானமாக எந்த வேலையாவது இருக்க முடியுமா?
தொடர்ந்து ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாக’ வாழுங்கள்
20, 21. (அ) வரவிருக்கும் நாட்களில், ‘தெளிந்த புத்தியை’ நாம் காட்டக்கூடிய வழிகள் சில யாவை? (ஆ) ‘தெளிந்த புத்தியுடன்’ வாழ்வதனால் வரவிருக்கும் ஆசீர்வாதங்கள் யாவை?
20 சாத்தானின் ஒழுங்குமுறை அழிவை நோக்கி தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கையில், புதிய சவால்களை நாம் நிச்சயமாய் எதிர்ப்பட நேரிடும். இரண்டு தீமோத்தேயு 3:13 இவ்வாறு முன்னுரைக்கிறது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” ஆனால், “நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகா[தீர்கள்].” (எபிரெயர் 12:3) பலத்துக்காக யெகோவாவின்மீது சார்ந்திருங்கள். (பிலிப்பியர் 4:13) சென்ற காலத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, மோசமாகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலைமைகளுக்குத் தக்கவாறு இசைந்து பொருத்திக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். (பிரசங்கி 7:10) “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பினர் அளிக்கிற வழிநடத்துதலை விடாது பின்பற்றி, செயல்முறைக்குரிய ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.—மத்தேயு 24:45-47.
21 எவ்வளவு காலம் இன்னும் மீந்திருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. எனினும், ‘எல்லாவற்றின் முடிவும் சமீபித்துவிட்டது’ என்று நாம் திடநம்பிக்கையுடன் சொல்ல முடியும். அந்த முடிவு வரும் வரையில், நாம் ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பிலும், நம்முடைய குடும்பங்களை கவனித்துப் பராமரிக்கும் முறையிலும், உலகப்பிரகாரமான நம் வேலை பொறுப்புகளிலும் ‘தெளிந்த புத்தியுடன்’ வாழ்ந்துவருவோமாக. இவ்வாறு செய்வதன் மூலம், “கறையற்றவர்களும் மாசற்றவர்களுமாய்ச் சமாதானத்தோடே” நாம் எல்லாரும் முடிவில் காணப்படுவோம் என்று நம்பிக்கையுடனிருக்கலாம்!—2 பேதுரு 3:14, தி.மொ.
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், உடல்நல காப்புறுதி, அதிக பணம் செலுத்த வேண்டியதாக இருக்கலாமென்றாலும், பலர் அதைப் பெற்றிருக்கின்றனர். மருத்துவ காப்புறுதி உடையோராக குடும்பங்கள் இருக்கையில், இரத்தமில்லாத மாற்று சிகிச்சைகளைப் பயன்படுத்துவதற்குச் சில மருத்துவர்கள் பெரும்பாலும் மனமுள்ளோராக இருக்கின்றனர் என்று சாட்சிகளின் சில குடும்பங்கள் கண்டிருக்கின்றன. மட்டுப்படுத்தப்பட்ட காப்புறுதி திட்டங்களின்கீழ் அனுமதிக்கப்படுகிற அல்லது அரசாங்கம் அளிக்கிற தொகையை மருத்துவர் பலர் ஏற்றுக்கொள்வர்.
b பள்ளி படிப்பை வீட்டிலேயே தொடருவதா என்பது தனிப்பட்டவருடைய தீர்மானம். ஜூலை 8, 1993, விழித்தெழு! வெளியீட்டில் தோன்றும், “வீட்டுக் கல்வி—அது உங்களுக்கு ஏற்றதா?” என்ற கட்டுரையைக் காண்க.
மறுபார்வையிடுவதற்குக் குறிப்புகள்
◻ நம்முடைய தனிப்பட்ட உறவுகளில் நாம் எவ்வாறு ‘தெளிந்த புத்தியைக்’ காட்டலாம்?
◻ நம்முடைய குடும்ப பொறுப்புகளைக் கவனிப்பதில் நாம் எவ்வாறு சமநிலையைக் காட்டலாம்?
◻ பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் உலகப்பிரகாரமான கல்வி பயிற்றுவிப்பில் ஏன் அக்கறை செலுத்த வேண்டும்?
◻ பாரூக்கினிடமிருந்தும் யோனாவிடமிருந்தும் என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 18-ன் படம்]
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் தவறாக நடத்தினால், யெகோவாவுடன் தங்கள் உறவைக் கெடுத்துக்கொள்கிறார்கள்
[பக்கம் 20-ன் படம்]
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை எடுக்க வேண்டும்