கடவுளின் ஏவப்பட்ட வசனத்தை உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரித்தல்
“வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும் [இருக்கிறோம்].”—2 கொரிந்தியர் 4:2.
1. (அ) மத்தேயு 24:14-லும் 28:19, 20-லும் குறிப்பிடப்பட்டுள்ள வேலையை நிறைவேற்றுவதற்கு எது தேவைப்பட்டுவந்திருக்கிறது? (ஆ) கடைசி நாட்கள் தொடங்கினபோது, பைபிள், எந்த அளவுக்கு ஜனங்களின் மொழிகளில் கிடைக்கக்கூடியதாக இருந்தது?
இயேசு கிறிஸ்து, அரசராக தம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் உரிய காலத்தைக் குறித்து உரைத்த பெரிய தீர்க்கதரிசனத்தில் இவ்வாறு முன்னறிவித்தார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்குமுள்ள சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” தம்முடைய சீஷர்களுக்கு பின்வருமாறும் கட்டளையிட்டார்: “சகல தேசத்தாரின் ஜனங்களையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற எல்லா காரியங்களையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குப் போதியுங்கள்.” (மத்தேயு 24:14; 28:19, 20; NW) இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம், பைபிளை மொழிபெயர்த்து அச்சடிப்பதிலும், அதன் அர்த்தத்தை ஜனங்களுக்குப் போதிப்பதிலும், அதைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதற்கு உதவிசெய்வதிலும் மிகுதியான வேலையை உட்படுத்துகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையில் பங்குகொள்வது எத்தகைய சிலாக்கியம்! ஏற்கெனவே, 1914-க்குள் பைபிள் முழுமையாக அல்லது பகுதியாக 570 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது முதற்கொண்டு கூடுதலாக நூற்றுக்கணக்கான அதிக மொழிகளிலும் கிளைமொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; பல மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பிலும் அது கிடைக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது.a
2. பல்வேறுபட்ட என்ன உள்நோக்கங்கள் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களையும் பிரசுரிப்போரையும் பாதித்திருக்கின்றன?
2 ஒரு மொழியில் எழுதப்பட்டிருப்பதை, மற்றொரு மொழியில் வாசிப்போரும் செவிகொடுத்துக் கேட்போருமான ஆட்களுக்கு புரிந்துகொள்ளத்தக்கதாகச் செய்வது எந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கடினமான ஒரு வேலையாக இருக்கிறது. கடவுளுடைய வசனத்தைத் தாங்கள் மொழிபெயர்க்கிறார்கள் என்ற கூர்ந்த உணர்வுடையோராக பைபிள் மொழிபெயர்ப்பாளர்களில் சிலர் தங்கள் வேலையைச் செய்திருக்கின்றனர். மற்றவர்கள் வெறுமனே அந்த நிபுணத்துவ சவாலை உட்படுத்தும் வேலையால் மனம் கவரப்பட்டவர்களாக இருந்தார்கள். பைபிளில் அடங்கியுள்ளவற்றை, வெறும் மதிப்புக்குரிய பண்பட்ட பரம்பரை பொருளாக அவர்கள் கருதியிருக்கலாம். சிலருக்கு, மதம் அவர்களுடைய வாழ்க்கைத் தொழிலாக உள்ளது; மொழிபெயர்ப்பாளர் அல்லது பிரசுரிப்பவர் என தங்கள் பெயரைக் கொண்ட ஒரு புத்தகத்தைப் பிரசுரிப்பது அவர்களுடைய பிழைப்புக்குரிய ஒன்றாக உள்ளது. தங்கள் வேலையை எவ்வாறு நடப்பிக்கிறார்கள் என்பதை, அவர்களுடைய உள்நோக்கங்கள் பாதிப்பது தெளிவாயுள்ளது.
3. புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு கமிட்டி இந்த வேலையை எவ்வாறு கருதினது?
3 புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு கமிட்டியின் இந்தக் கூற்று கவனிக்கத்தக்கதாக உள்ளது: “பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்ப்பது, யெகோவா தேவனின் எண்ணங்களையும் கூற்றுகளையும் மற்றொரு மொழியில் தெரிவிப்பதைக் குறிக்கிறது . . . அது மிகவும் பயபக்திக்குரிய ஒரு சிந்தனை. பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியராகிய கடவுளுக்குப் பயந்து அவரை நேசிக்கிறவர்களான, இந்த மொழிபெயர்ப்பு வேலைசெய்யும் மொழிபெயர்ப்பாளர்கள், அவருடைய எண்ணங்களையும் அறிவிப்புகளையும் பொருத்தவரையில் திருத்தமாக மொழிபெயர்க்கும்படியான தனிப்பட்ட ஒரு பொறுப்பை உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணருகிறார்கள். மேலும், தங்கள் நித்திய இரட்சிப்புக்காக மகா உன்னத கடவுளுடைய ஏவப்பட்ட வசனத்தின் ஒரு மொழிபெயர்ப்பின்பேரில் சார்ந்திருக்கிற, ஆராய்ந்து தேடும் வாசகர்களிடமாகவும் ஒரு பொறுப்பை உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணருகிறார்கள். ஒப்புக்கொடுத்த மனிதர் அடங்கிய இந்தக் கமிட்டி, இத்தகைய பயபக்தியான ஒரு பொறுப்புணர்ச்சியுடன் பல ஆண்டுகள் உழைத்து, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) என்ற பைபிளை படைத்திருக்கிறது.” தெளிவாகவும் புரிந்துகொள்ளத்தக்கதாகவும் இருப்பதும், மூல எபிரெய மற்றும் கிரேக்குக்கு மிக நெருங்க ஒத்திருப்பதால், திருத்தமான அறிவில் தொடர்ந்து வளருவதற்கு ஓர் அஸ்திபாரத்தை அளிப்பதுமான பைபிள் மொழிபெயர்ப்பு ஒன்றை கொண்டிருக்க வேண்டுமென்பது இந்தக் கமிட்டியின் குறிக்கோளாக இருந்தது.
கடவுளுடைய பெயருக்கு என்ன நேரிட்டது?
4. பைபிளில் கடவுளுடைய பெயர் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
4 உண்மையான கடவுளை அறிந்துகொள்ளும்படி ஆட்களுக்கு உதவிசெய்வது, பைபிளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. (யாத்திராகமம் 20:2-7; 34:1-7; ஏசாயா 52:6) தம்முடைய பிதாவின் பெயர் ‘பரிசுத்தப்படும்படி,’ பரிசுத்தமாகக் கருதப்படும்படி, அல்லது பரிசுத்தமாகப் பயன்படுத்தப்படும்படி ஜெபிக்க, இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:9) தம்முடைய சொந்த பெயர், 7,000-த்திற்கும் மேற்பட்ட தடவை பைபிளில் அடங்கியிருக்கும்படி கடவுள் செய்திருந்தார். அந்தப் பெயரையும், அதை உடையவரான தமது பண்புகளையும் ஆட்கள் அறியும்படி அவர் விரும்புகிறார்.—மல்கியா 1:11, திருத்திய மொழிபெயர்ப்பு.
5. கடவுளுடைய பெயரை பல்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்?
5 பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் பலர், கடவுளுடைய பெயருக்கு உள்ளப்பூர்வமான மதிப்பைக் காண்பித்து, தங்கள் மொழிபெயர்ப்புகளில் அதை நிலையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். சில மொழிபெயர்ப்பாளர்கள் யாவே என்பதை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் சொந்த மொழியில் அமைந்ததும் அதேசமயத்தில் எபிரெய மூலவாக்கியத்தில் தோன்றுகிறதோடு தெளிவாக அடையாளங்காட்டுவதும், ஒருவேளை நீடித்தகால உபயோகத்தால் நன்றாய் அறியப்பட்டதுமான, கடவுளின் பெயர் உருவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு, ஜெஹோவா என்பதை அதன் மூலப்பிரதியில் 7,210 தடவை பயன்படுத்துகிறது.
6. (அ) சமீப ஆண்டுகளில் மொழிபெயர்ப்பாளர்கள், கடவுளுடைய பெயர் தோன்றும் இடங்களில் எல்லாம் என்ன செய்திருக்கிறார்கள்? (ஆ) இந்தப் புத்தகம் எவ்வளவு பரவலாக உள்ளது?
6 சமீப ஆண்டுகளில், பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள், பாகால், மோளேகு போன்ற புறமத தெய்வங்களின் பெயர்களை விலக்காமல் வைத்திருக்கிறபோதிலும், உண்மையான கடவுளின் சொந்த பெயரை, அவருடைய ஏவப்பட்ட வசனத்திலிருந்து அதிகமதிகமாய் அடிக்கடி விலக்கிக்கொண்டே இருக்கிறார்கள். (யாத்திராகமம் 3:15; எரேமியா 32:35) பரவலாக விநியோகிக்கப்பட்ட ஒரு அல்பேனிய மொழிபெயர்ப்பு, “உம்முடைய பெயர்” என்பதற்கான கிரேக்க சொற்றொடரை (அதாவது, கடவுளுடைய பெயரை), மத்தேயு 6:9, யோவான் 17:6, 26 போன்ற வசனங்கள் ஒரு பெயரைக் குறிப்பிடவில்லை என்பதுபோல், வெறுமனே “நீர்” என்று மொழிபெயர்க்கிறது. த நியூ இங்லிஷ் பைபிள், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் ஆகிய இரண்டும், சங்கீதம் 83:18-ல், கடவுளுடைய சொந்த பெயரையும், கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்ற உண்மையைக் குறிப்பிடும் எதையும் நீக்கிவிடுகின்றன. பெரும்பான்மையான மொழிகளில் எபிரெய வேதாகமத்தின் பழங்கால மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் தோன்றினபோதிலும், புதிதாய் வரும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் அதை நீக்கிவிடுகின்றன அல்லது ஓரக்குறிப்பாக மாத்திரமே அதை ஒதுக்கி வைக்கின்றன. ஆங்கிலத்திலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, பசிபிக் தீவுகள் ஆகியவற்றின் பல மொழிகளிலும் இவ்வாறே உள்ளது.
7. (அ) ஆப்பிரிக்க பைபிள்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயரை எவ்வாறு கையாளுகிறார்கள்? (ஆ) அதைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
7 ஆப்பிரிக்க மொழிகள் சிலவற்றில் பைபிளை மொழிபெயர்க்கிறவர்கள் இன்னும் ஒருபடி மேலே செல்கின்றனர். கடவுளுடைய பெயரை, கடவுள் அல்லது கர்த்தர் என்பதைப்போன்ற வேதப்பூர்வ பட்டப் பெயரால் மாற்றியமைப்பதற்குப் பதிலாக, அவ்விடத்து மத நம்பிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட பெயர்களை உட்புகுத்துகிறார்கள். புதிய ஏற்பாடும் சங்கீதமும் ஸூலுவில் (1986-ன் பதிப்பு [ஆங்கிலம்]) என்ற மொழிபெயர்ப்பில், கடவுள் (நுக்குலூன்கூலு) என்ற பட்டப் பெயர், ஒரு சொந்தப் பெயரோடு (யும்விலிங்கான்கி) பரிமாற்றமாக பயன்படுத்தப்பட்டது; ‘மனித முற்பிதாக்கள் மூலமாய் வணங்கப்படுகிற பெரிய முற்பிதாவை’ அந்தப் பெயர் குறிப்பதாக ஸூலுக்கள் கருதுகின்றனர். புக்கு லாய்ரா என்று அழைக்கப்படவிருக்கிற சிச்சேவா பைபிளை தயாரிப்பதில், யெகோவா என்று வருகிற இடங்களில் சாவ்ட்டா என்ற தனிப்பட்ட பெயரை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள் என்று, அக்டோபர் 1992-ன் த பைபிள் டிரான்ஸ்லேட்டர் பத்திரிகையில் ஒரு கட்டுரை அறிவித்தது. சாவ்ட்டா, “அவர்கள் எப்போதும் அறிந்து வணங்கின கடவுள்” என்று அந்தக் கட்டுரை விளக்கினது. எனினும், இறந்தோரின் ஆவிகளாக இருப்பதாய் தாங்கள் நம்புகிறவற்றையும் இந்த ஜனங்களில் பலர் வணங்குகின்றனர். ஒரு ‘தெய்வத்தினிடம்’ ஜனங்கள் விண்ணப்பங்கள் செய்தால், அவர்கள் என்ன பெயரை அந்தத் ‘தெய்வத்துக்குப்’ பயன்படுத்தினாலும், அவர்களுடைய வணக்கம் இன்னும் வேறு எதையும் உட்படுத்தினாலும் கவலையில்லாமல், அது யெகோவாவின் சொந்த பெயருக்குச் சமமான மதிப்புடையதாக இருக்கிறதென்பது உண்மையா? நிச்சயமாகவே இல்லை! (ஏசாயா 42:8; 1 கொரிந்தியர் 10:20) கடவுளுடைய சொந்தப் பெயருக்குப் பதிலாக, தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகள் உண்மையில் சரியானவை என்று ஜனங்களை உணரச்செய்விக்கிற வேறொன்றை அதனிடத்தில் வைப்பது, உண்மையான கடவுளிடம் நெருங்கிவர அவர்களுக்கு உதவிசெய்கிறதில்லை.
8. தம்முடைய பெயரை அறிந்துகொள்ளும்படி செய்யவேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் ஏன் குலைக்கப்பட்டில்லை?
8 இவையெல்லாம், தம்முடைய பெயரை அறிந்துகொள்ளும்படி செய்யவேண்டும் என்ற யெகோவாவின் நோக்கத்தை மாற்றிவிடவோ குலைத்துவிடவோ இல்லை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்க நாடுகள், கீழை நாடுகள், சமுத்திரத் தீவுகள் ஆகியவற்றின் மொழிகளில், கடவுளுடைய பெயர் அடங்கியுள்ள பல பைபிள்கள் பரவலாக இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், உண்மையான கடவுளின் பெயரையும் நோக்கத்தையும் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிவருவதில் ஒவ்வொரு ஆண்டிலும் மொத்தம் நூறு கோடி மணிநேரங்களுக்கும் மேலாகச் செலவிடுவோராய் 54,00,000-திற்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் 233 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இருக்கிறார்கள். கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துகிற பைபிள்களை, ஆங்கிலம், சீனமொழி, ரஷ்யன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ஃபிரெஞ்ச், டச் ஆகியவை உட்பட, பூமியின் ஜனத்தொகையில் ஏறக்குறைய 360,00,00,000 பேரால் பேசப்படுகிற மொழிகளில், அவர்கள் அச்சிட்டு விநியோகிக்கிறார்கள். மேலும், பூமியின் ஜனத்தொகையில் பெரும்பான்மையருக்குத் தெரிந்திருக்கிற மொழிகளில் பைபிள் படிப்பு உதவிப் புத்தகங்களையும் பிரசுரிக்கிறார்கள். தாமே “யெகோவா என்று [தேசங்கள்] அறிந்துகொள்ள வேண்டும்” என்ற தம்முடைய இந்த அறிவிப்பு உறுதியாக நிறைவேறும் வகையில், கடவுள்தாமே சீக்கிரத்தில் நடவடிக்கை எடுப்பார்.—எசேக்கியேல் 38:23, NW.
தனிப்பட்டவரின் நம்பிக்கைகள் மொழிபெயர்ப்பைப் பாதிக்கையில்
9. கடவுளுடைய வசனத்தைக் கையாளுவோரின்மீது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்று பைபிள் எவ்வாறு காட்டுகிறது?
9 கடவுளுடைய வசனத்தை மொழிபெயர்க்கிறவர்களுக்கும் அதைக் கற்பிக்கிறவர்களுக்கும்கூட ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தன்னுடைய மற்றும் தன் உடனுழைப்போருடைய ஊழியத்தைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும் [“கலப்படம் செய்யாமலும்,” NW], சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.” (2 கொரிந்தியர் 4:2) கலப்படம் செய்வதென்றால், புறம்பான அல்லது கீழ்த்தரமான ஒன்றை அதில் கலப்பதால் அதன் தரத்தைக் கெடுப்பதாகும். எரேமியாவின் நாட்களில், கடவுள் சொன்னதை அல்லாமல், அதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த எண்ணங்களைப் பிரசங்கித்ததால், யெகோவா கண்டனம் செய்த இஸ்ரவேலின் உண்மையற்ற மேய்ப்பர்களைப்போல் அப்போஸ்தலன் பவுல் இல்லை. (எரேமியா 23:16, 22) ஆனால், தற்காலங்களில் என்ன நடந்திருக்கிறது?
10. (அ) கடவுளிடமாக உண்மைப்பற்றுறுதியற்ற வேறு உள்நோக்கங்கள், தற்காலங்களிலுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் சிலரை எவ்வாறு பாதித்திருக்கின்றன? (ஆ) என்ன ஸ்தானத்தை தகாதமுறையில் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்?
10 யூதருக்கு ஆதரவாக இருந்த எல்லா வசனங்களையும் இயேசு கிறிஸ்து யூத வம்சத்தைச் சேர்ந்தவரென காட்டும் எல்லா வசனங்களையும் அகற்றி, திருத்திய “புதிய ஏற்பாடு” ஒன்றை உண்டுபண்ணுவதற்கு, வேத நிபுணர்களையும் பாதிரிமார்களையும் கொண்ட ஒரு குழு, இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியில் நாசி அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைத்தது. சமீபத்தில், புதிய ஏற்பாடும் சங்கீதங்களும்: உள்ளடங்கலாயுள்ள ஒரு மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) என்பதை தயாரித்த மொழிபெயர்ப்பாளர்கள், வேறு திசையில் மனம்சாய்ந்து, கிறிஸ்துவின் மரணத்துக்கு யூதர் பொறுப்புள்ளவர்களாக இருந்தார்கள் என்று காட்டும் குறிப்புகள் எல்லாவற்றையும் நீக்கிவிட முயற்சி செய்தார்கள். மேலும், கடவுள், பிதா என்பதாக அல்லாமல், பிதா-மாதா என்று பேசப்பட்டு, இயேசு, கடவுளுடைய குமாரன் என்பதாக அல்லாமல், அவருடைய பிள்ளை என்று சொல்லப்பட்டால், பெண்களாக இருக்கும் வாசகர்கள் சந்தோஷப்படுவர் என்றும் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் உணர்ந்தார்கள். (மத்தேயு 11:27) இதை மனதில்கொண்டு, மனைவிகள் புருஷர்களுக்கு அடங்கியிருக்க வேண்டும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நியமத்தை அவர்கள் நீக்கிவிட்டனர். (கொலோசெயர் 3:18, 20) அந்த மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்கள், ‘தேவ வசனத்தைப் புரட்டாமல்’ இருக்கும்படியான அப்போஸ்தலன் பவுலின் திடதீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. மொழிபெயர்ப்பாளருக்குரிய தங்கள் கடமையை அவர்கள் மறந்து, நூலாசிரியருக்குரிய ஸ்தானத்தை ஏற்று, தங்கள் சொந்த கருத்துக்களை முன்னேற்றுவிக்கும் புத்தகங்களைத் தயாரிப்பதற்கு பைபிளின் புகழை பயன்படுத்தினார்கள்.
11. ஆத்துமாவையும் மரணத்தையும் பற்றி பைபிள் சொல்வதோடு, கிறிஸ்தவமண்டல போதகங்கள் எவ்வாறு முரண்படுகின்றன?
11 மனித ஆத்துமா ஆவியாக இருக்கிறது என்றும், மரணத்தின்போது உடலைவிட்டு அது செல்கிறது என்றும், அழியாமையுடையது என்றும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் பொதுவாகக் கற்பிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, மனிதரே ஆத்துமாக்கள் என்றும், மிருகங்களும் ஆத்துமாக்கள் என்றும், ஆத்துமா சாகிறது என்றும் பெரும்பான்மையான மொழிகளில் உள்ள பழைய பைபிள் மொழிபெயர்ப்புகள் தெளிவாகக் கூறுகின்றன. (ஆதியாகமம் 12:5; 36:6; எண்ணாகமம் 31:28, NW; யாக்கோபு 5:20) அது மதகுருமாரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
12. எவ்வகையில், சமீப மொழிபெயர்ப்புகள் சில, அடிப்படையான பைபிள் சத்தியங்களைத் தெளிவாகப் புலப்படாதபடி செய்கின்றன?
12 இப்போது சில புதிய மொழிபெயர்ப்புகள் இந்தச் சத்தியங்களைத் தெளிவாகப் புலப்படாதபடி செய்கின்றன. எவ்வாறு? நெஃபெஷ் (ஆத்துமா) என்ற இந்த எபிரெய பெயர்ச்சொல்லை, சில வசனங்களில் நேரடியாக மொழிபெயர்ப்பதை அவை வெறுமனே தவிர்க்கின்றன. ஆதியாகமம் 2:7-ல், முதல் மனிதன் (“உயிருள்ள ஆத்துமாவானான்” என்பதற்குப் பதிலாக) “உயிர்வாழத் தொடங்கினான்” என்று அவை சொல்லக்கூடும். அல்லது மிருக ஜீவன்களின் காரியத்தில் “ஆத்துமா” என்பதற்குப் பதிலாக ‘ஜந்து’ என்று அவை குறிப்பிட்டிருக்கலாம். (ஆதியாகமம் 1:21) எசேக்கியேல் 18:4, 20 போன்ற வசனங்களில், (“ஆத்துமா” சாகிறது என்பதற்குப் பதிலாக) “ஆள்” அல்லது “நபர்” சாவதாக குறிப்பிடுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள், அந்த மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டுமென்றால் நியாயமாகத் தோன்றலாம். கிறிஸ்தவமண்டலத்தின் வேதப்பூர்வமற்ற போதகங்களால் தன் சிந்தனை ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்டு, சத்தியத்தை உள்ளப்பூர்வமாய் நாடித்தேடும் ஒரு நபருக்கு எந்த அளவில் இந்த மொழிபெயர்ப்புகள் உதவியளிக்கமுடியும்?b
13. பூமியைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தை, என்ன வழிவகைகளில் பைபிள் மொழிபெயர்ப்புகள் சில மறைத்திருக்கின்றன?
13 நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்திற்குச் செல்கின்றனர் என்ற நம்பிக்கையை ஆதரிக்க முயன்று, மொழிபெயர்ப்பாளர்கள்—அல்லது அவர்களுடைய மொழிபெயர்ப்பை மறுபார்வையிடும் வேத நிபுணர்கள்—பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி பைபிள் சொல்வதை மறைக்கவும் முயற்சி செய்யலாம். சங்கீதம் 37:11-ல், தாழ்மையுள்ளவர்கள் “தேசத்தை” சுதந்தரித்துக்கொள்வார்கள் என்று பல மொழிபெயர்ப்புகளில் உள்ளது. எபிரெய மூலவாக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லை (ஈரெட்ஸ்) “தேசம்” எனவும் மொழிபெயர்க்கலாம். எனினும், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் (மற்ற பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஆதாரமளித்திருக்கிற இது), இன்னும் அதிக மாற்றங்களைச் செய்துள்ளது. கிரேக்கச் சொல்லாகிய கெ (ge) என்பதை “பூமி” என்று, மத்தேயு சுவிசேஷத்தில் 17 தடவை இந்த மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்திருக்கிறபோதிலும், மத்தேயு 5:5-ல், “பூமி” என்பதற்குப் பதிலாக, “கடவுள் வாக்களித்திருப்பதை” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. இந்தச் சொற்றொடர் பரலோகத்தைக் குறிப்பதாகவே சர்ச்சின் உறுப்பினர் இயல்பாய் நினைக்கின்றனர். சாந்தகுணமுள்ளவர்கள், பணிவுள்ளவர்கள், அல்லது மனத்தாழ்மையுள்ளவர்கள் “பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்று இயேசு கிறிஸ்து தம் மலைப் பிரசங்கத்தில் சொன்னாரென, நேர்மையுடன் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை.
14. என்ன தன்னல நோக்கம் சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் வெளிப்படுகிறது?
14 மத போதகர்கள் உயர்ந்த சம்பளம் பெற உதவியாயிருக்கும் நோக்கத்துடன், சில மொழிபெயர்ப்புகள் வேதாகமத்தின் சொற்களை அமைத்திருக்கின்றன என்பது தெளிவாயிருக்கிறது. “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்” என்று பைபிள் சொல்வது உண்மையே. (1 தீமோத்தேயு 5:18) நல்ல முறையில் தலைமைதாங்குகிற மூப்பர்களை, “இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்” என்று, 1 தீமோத்தேயு 5:17 சொல்கிறது; ஆனால் கனம் என்பதை அவர்களில் சிலர் பணம் சம்பந்தமானது மாத்திரமே என்று கருதுகிறார்கள். (ஒப்பிடுக: 1 பேதுரு 5:2.) இதற்கு ஏற்றவாறு, த நியூ இங்லிஷ் பைபிள், இந்த மூப்பர்களை, “இரட்டிப்பான உதவிசம்பளத்திற்குப் பாத்திரராகக் கருதவேண்டும்” என்று சொல்லுகிறது. மேலும், கன்ட்டெம்பொரரி இங்லிஷ் வர்ஷன், அவர்கள் “அதைப்போன்று இரட்டிப்பான சம்பளம் அளிப்பதற்குப் பாத்திரர்” என்று சொல்லுகிறது.
கடவுளுடைய வசனத்தை உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரித்தல்
15. எந்த மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்துவது என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்?
15 பைபிளை வாசிக்கும் தனி நபருக்கும் மற்றவர்களுக்குப் போதிக்கும்படி பைபிளைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது? பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் பெரும்பான்மையானவற்றில், தெரிந்தெடுப்பதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பைபிள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. உங்கள் உபயோகத்திற்காக ஒரு பைபிளைத் தெரிந்தெடுப்பதில் தெளிந்த பகுத்துணர்வைக் காட்டுங்கள். (நீதிமொழிகள் 19:8, NW) கடவுள் யார் என்பதை அடையாளங்காட்டுவதைப் பற்றியதில்தானே ஒரு மொழிபெயர்ப்பு நேர்மையாயிராமல், ஏதோ சாக்குப்போக்கின்பேரில் கடவுளுடைய பெயரைத்தானே அவருடைய ஏவப்பட்ட வசனத்திலிருந்து நீக்கிவிட்டிருந்தால், அந்த பைபிளின் மற்ற பாகங்களையும்கூட அதன் மொழிபெயர்ப்பாளர்கள் இடையிடையே மாற்றம் செய்திருக்கக்கூடுமா? ஒரு மொழிபெயர்ப்பின் நேர்மைத்தன்மையைப் பற்றி சந்தேகம் இருந்தால், அதைவிட பழமையான மொழிபெயர்ப்புகளுடன் அதை ஒப்பிட்டுப்பார்க்க முயற்சி செய்யுங்கள். கடவுளுடைய வசனத்தைப் போதிக்கிற ஒருவராக நீங்கள் இருந்தால், எபிரெய மற்றும் கிரேக்க மூலவாக்கியங்களுக்கு நெருங்க ஒத்திருக்கும் மொழிபெயர்ப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
16. தேவாவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்துவதில் உண்மைப்பற்றுறுதியை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு காட்டலாம்?
16 நாம் எல்லாரும் அவரவர் தனித்தனியே கடவுளுடைய வசனத்தினிடமாக உண்மைப்பற்றுறுதியுடையோராக இருக்க வேண்டும். அதில் அடங்கியுள்ளவற்றைப் பற்றி போதிய அக்கறையுள்ளவர்களாக, கூடுமானால், பைபிளை வாசிப்பதில் ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிட்டு வருவதால் அவ்வாறு இருக்கிறோம். (சங்கீதம் 1:1-3) சரியான தீர்மானங்களைச் செய்வதற்கு ஆதாரமாக, அதன் நியமங்களையும் முன்மாதிரிகளையும் பயன்படுத்துவதற்குக் கற்று, அது சொல்வதை நம்முடைய சொந்த வாழ்க்கையில் முழுமையாகப் பொருத்திப் பயன்படுத்துவதன்மூலம் அதைச் செய்கிறோம். (ரோமர் 12:2; எபிரெயர் 5:14) கடவுளுடைய வசனத்தை ஆர்வத்துடன் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதன்மூலம், அதன் சார்பாக உண்மைப்பற்றுறுதியுடன் வாதாடுவோராக நாம் இருக்கிறோமெனக் காட்டுகிறோம். போதகர்களாக, பைபிளைக் கவனமாய்ப் பயன்படுத்தி, அது சொல்வதை, நம்முடைய சொந்த எண்ணங்களுக்குப் பொருந்துமாறு ஒருபோதும் புரட்டாமல் அல்லது விரிவாக்காமல் இருப்பதனாலும் அதைச் செய்கிறோம். (2 தீமோத்தேயு 2:15) கடவுள் முன்னறிவித்திருப்பது, தவறாமல் நடைபெறும். தம்முடைய வசனத்தை நிறைவேற்றுவதில் அவர் உண்மைப்பற்றுறுதியுள்ளவர். அதை நாம் ஆதரிப்பதில் உண்மைப்பற்றுறுதி உடையோராய் இருப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ பிரசுரிக்கப்பட்டிருக்கிற 2,167 மொழிகளை, 1997-ல் யுனைட்டட் பைபிள் சொஸைட்டிகள் வரிசையாகக் குறிப்பிட்டன. சில மொழிகளின் அநேக கிளைமொழிகள் இதில் அடங்கியுள்ளன.
b இந்த விஷயத்தைத் தெளிவாகக் காட்டுவதற்கு ஆற்றலுடையவையாக மொழிகள் இருந்தும், மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வாறு செய்ய தெரிவுசெய்யாததன் பேரில் இந்த விவாதம் கவனத்தைச் செலுத்துகிறது, சில மொழிகளில் கிடைக்கக்கூடிய சொற்கள், மொழிபெயர்ப்பாளர்கள் செய்யக்கூடியவற்றை பேரளவாக மட்டுப்படுத்துகிறது. ஆகவே, நெஃபெஷ் என்பதற்கு மொழிபெயர்ப்பாளர் பல்வேறு பதங்களைப் பயன்படுத்தினபோதிலும், அல்லது வேதப்பூர்வமற்றதாகத் தொனிக்கிற ஒரு பதத்தைப் பயன்படுத்தினபோதிலும், மூலமொழியின் பதமாகிய நெஃபெஷ், மனிதருக்கும் மிருகங்களுக்கும் பொருத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதென்றும், சுவாசிப்பதும், சாப்பிடுவதும், சாகக்கூடியதுமான ஒன்றைக் குறிக்கிறது என்றும், நேர்மையுள்ள மதப்போதகர்கள் விளக்கிக்கூறுவார்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ தற்காலங்களில் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களின் வேலையை என்ன உள்நோக்கங்கள் பாதித்திருக்கின்றன?
◻ தற்கால மொழிபெயர்ப்பின் போக்குகள், தம்முடைய சொந்த பெயரைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தை ஏன் குலைத்துவிடவில்லை?
◻ ஆத்துமா, மரணம், பூமி ஆகியவற்றைப் பற்றிய பைபிள் சத்தியங்களை, சில மொழிபெயர்ப்புகள் எவ்வாறு தெளிவற்றவையாக்குகின்றன?
◻ கடவுளுடைய வசனத்தை நாம் உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரிக்கிறோம் என்பதை என்ன வழிகளில் நாம் காட்டலாம்?
[பக்கம் 16-ன் படம்]
எந்த பைபிள் மொழிபெயர்ப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும்?