யெகோவாவின் சேவையில் நீண்ட வாழ்வுக்காக நன்றி
ஓட்டலி மிட்லென் சொன்னபடி
காலம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. மேற்கத்திய நார்வேயில் காப்பர்விக் துறைமுகத்தில் பிரயாண கப்பல்கள் அருகருகே நின்றிருந்தன. சிறிய சக்கர வண்டிகளை மனிதர்களும் குதிரைகளும் தெருக்களினூடாக இழுத்துச்சென்ற காலம் அது. வெளிச்சத்துக்காக மக்கள் வெண் மெழுகு விளக்கைப் பயன்படுத்தினர்; வெள்ளை வர்ணமடிக்கப்பட்ட மர வீடுகளில் சூடுண்டாக்க விறகையும் சுடப்பட்ட நிலக்கரியையும் பயன்படுத்தினர். நான் அங்கே 1898 ஜூன் மாதத்தில், ஐந்து பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தேன்.
அப்பா, 1905-ல், வேலை இல்லாமல் இருந்தார், ஆகவே அவர் ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்றுவிட்டார். பெட்டி நிறைய பிள்ளைகளுக்கு கிளர்ச்சியூட்டும் பரிசுப்பொருட்களையும் அம்மாவுக்கு பட்டுத் துணிமணிகளையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் திரும்பிவந்தார். ஆனால் சார்ல்ஸ் டேஸ் ரஸல் எழுதிய வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்) என்று தலைப்பிடப்பட்ட புத்தகங்களே அவருடைய மிக விலையுயர்ந்த உடைமைகளாக இருந்தன.
அப்பா இந்தப் புத்தகங்களிலிருந்து கற்றுக்கொண்ட காரியங்களைப்பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்ல ஆரம்பித்தார். உள்ளூர் சர்ச் சேப்பலில் நடைபெற்ற கூட்டங்களில் எரிநரகம் எதுவும் இல்லை என்பதைக் காண்பிப்பதற்கு பைபிளைப் பயன்படுத்தி பேசினார். (பிரசங்கி 9:5, 10) 1909-ல், ஐக்கிய மாகாணங்களில் இருந்து அப்பா திரும்பிய அடுத்த வருடத்தில், சகோதரர் ரஸல் பெர்கனிலும் இப்பொழுது ஆஸ்லோவாக இருக்கும் கிறிஸ்டியானாவிலும் பேச்சுக்களைக் கொடுத்தார். அவர் பேசுவதைக் கேட்பதற்காக அப்பா பெர்கனுக்குச் சென்றார்.
பெரும்பாலான ஆட்கள் பொய் போதகங்களைப் போதிப்பதாக அப்பாவை குற்றஞ்சாட்டினார்கள். நான் அவருக்காக வருத்தப்பட்டேன், அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு பைபிள் துண்டுப்பிரதிகளைக் கொடுப்பதில் அவருக்கு ஒத்தாசையாக இருந்தேன். 1912-ல், நரகத்தைப் பற்றிய ஒரு துண்டுப்பிரதியை ஒரு பாதிரியாரின் மகளிடம் கொடுத்தேன். அவள் என்னையும் அப்பாவையும் கடுமையாக ஏசினாள். ஒரு பாதிரியாரின் மகள் இத்தனை ஆபாசமான வார்த்தைகளைப் பேசக்கூடுமா என்பதாக நான் அதிர்ந்துபோனேன்!
பைபிள் மாணாக்கர்கள் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் மற்றவர்கள் காப்பர்விக்கில் அவ்வப்போது வந்து எங்களைச் சந்தித்தார்கள்; திறம்பட்ட ஒரு பேச்சாளராக இருந்த தியோடர் சைமன்சனும் வருவார். எங்களுடைய வீட்டில் அவர் கொடுத்த பேச்சுக்களைக் கேட்க நான் மற்றவர்களுக்கு அழைப்புகொடுப்பேன். பேச்சு கொடுப்பதற்கு முன்பாக அவர் கிட்டாரை வாசித்து பாட்டுப் பாடுவார், அவருடைய பேச்சுக்குப் பின்பு முடிவான பாட்டை பாடுவார். அவரிடமாக எங்களுக்கு ஆழ்ந்த மரியாதை இருந்தது.
எங்களுடைய வீட்டுக்கு வந்த மற்றொரு நபர் கால்போச்சராக அல்லது முழுநேர ஊழியராக இருந்த ஆனா ஆன்டர்சன். அவர்கள் நார்வே முழுவதிலும் பட்டணங்கள் தோறும் பெரும்பாலும் சைக்கிளில் பிரயாணம் செய்து மக்களுக்கு பைபிள் இலக்கியங்களை அளித்து வந்தார்கள். அவர்கள் ஒரு சமயம் சால்வேஷன் ஆர்மியில் ஒரு ஊழியராக இருந்திருக்கிறார்கள்; காப்பர்விக்கில் சில சால்வேஷன் ஆர்மி ஊழியர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூடுமிடத்தில் ஒரு பைபிள் பேச்சைக் கொடுக்கும்படியாக அவர்களுக்கு அனுமதி அளித்திருந்தார்கள், அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு நான் மற்றவர்களை அழைத்திருந்தேன்.
காப்பர்விக்கில் எங்களை வந்து சந்தித்த மற்றொரு கால்போச்சர் கார்ல் கன்பெர்க் என்பவர். இந்த மனிதர் அடக்கமான, அமைதியான, ஆனால் நகைச்சுவையுணர்வுள்ளவர். ஆஸ்லோவின் கிளைக்காரியாலயத்தில் அவ்வப்போது ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அதில் சேர்ந்து வேலைசெய்து வந்தோம்.
மத கருத்துக்களின் செல்வாக்கு
அந்தச் சமயத்தில் பெரும்பாலான மக்களுக்கு கடவுளிலும் பைபிளிலும் பலமான விசுவாசம் இருந்தது மட்டுமல்லாமல், எரிநரகம், திருத்துவம் போன்ற நம்பிக்கைகளும் பதிந்துவிட்டிருந்தன. ஆகவே இந்தக் கோட்பாடுகள் பைபிளுக்கு இசைவாக இல்லை என்பதை பைபிள் மாணாக்கர்கள் போதித்தபோது அது பெரிய கிளர்ச்சியை உண்டுபண்ணியது. அப்பா திருச்சபைக்கு முரணான கருத்துடையவர் என்பதாக எங்களுடைய அயலகத்தாரின் கடுமையான குற்றச்சாட்டு என்னை பாதித்தது. ஒரு சமயம் “நீங்கள் கற்பிப்பது உண்மை இல்லை. இது திருச்சபைக்கு எதிரான கருத்து!” என்பதாகக்கூட நான் அவரிடம் சொன்னேன்.
“இங்கே வா, ஓட்டலி, வந்து பைபிள் என்ன சொல்லுகிறதென்று பார்” என்பதாக அவர் என்னை உற்சாகப்படுத்தினார். பின்பு அவர் வேதாகமத்திலிருந்து எனக்கு வாசித்துக்காண்பித்தார். இதன் விளைவாக, அவரிலும் அவர் கற்பித்தவற்றிலும் என்னுடைய நம்பிக்கை வளர்ந்தது. வேதாகமத்தில் படிப்புகள் புத்தகங்களை வாசிக்கும்படியாக அவர் என்னை உற்சாகப்படுத்தினார்; ஆகவே 1914 கோடையில், நகரத்தை நோக்கியிருந்த ஒரு குன்றின்மீது அமர்ந்து நான் அடிக்கடி அவற்றை வாசித்துக்கொண்டிருந்தேன்.
ஆகஸ்ட் 1914-ல் உள்ளூர் செய்தித்தாள் கட்டடத்திற்கு வெளியே ஜனங்கள் கூட்டமாக கூடி முதல் உலகப் போர் ஆரம்பித்திருப்பதைக் குறித்து வாசித்துக்கொண்டிருந்தார்கள். அப்பா அங்கே வந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தார். “கடவுளே உமக்கு நன்றி!” என்பதாக உணர்ச்சிமிகுந்து கூறினார். போரின் ஆரம்பம் அவர் பிரசங்கித்துக்கொண்டிருந்த பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். (மத்தேயு 24:7) அநேக பைபிள் மாணாக்கர்கள் தாங்கள் சீக்கிரத்தில் பரலோகத்துக்கு எடுத்துச்செல்லப்படுவர் என்பதாக அப்போது நம்பினர். இது சம்பவிக்காதபோது, சிலர் ஏமாற்றமடைந்தனர்.
பைபிள் சத்தியத்துக்காக என்னுடைய நிலைநிற்கை
1915-ல் எனக்கு 17 வயதாக இருந்தபோது, நான் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்து ஒரு அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தேன். அப்போது நான் காவற்கோபுர பத்திரிகையை ஒழுங்காக வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் 1918-ல் தான் காப்பர்விக்கில் ஒழுங்காக கூட்டங்கள் நடத்தப்பட ஆரம்பித்தன. ஆரம்பத்தில் நாங்கள் ஐந்து பேர் அதற்கு ஆஜராயிருந்தோம். வேதாகமத்தில் படிப்புகள் போன்ற உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களை நாங்கள் வாசித்து விஷயங்களை கேள்வி பதில் மூலமாக கலந்தாலோசித்தோம். அம்மா பைபிள் மாணாக்கர்களைப் பற்றி உயர்வாக மற்றவர்களிடம் பேசியபோதிலும் அவர்கள் எங்களில் ஒருவராக ஒருபோதும் ஆகவில்லை.
நான் வேலைபார்த்துவந்த அலுவலகத்தில் 1918 முதற்கொண்டு எனக்கும் ஆன்டன் சால்நஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது; ஒரு பைபிள் மாணாக்கராவதற்கு என்னால் அவருக்கு உதவிசெய்ய முடிந்தது. இந்தச் சமயத்தில் நான் ஒரு ஒழுங்கான பிரஸ்தாபியாக ஆனேன், 1921-ல் பெர்கனில் ஒரு அசெம்பிளியில் நான் முழுக்காட்டப்பட்டேன்.
மே 1925-ல் ஸ்காண்டிநேவியா முழுவதற்கும் ஸ்வீடனில் ஆரிப்ரோவில் ஒரு அசெம்பிளி நடத்தப்பட்டது. உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவர் ஜோசஃப் எஃப். ரதர்போர்டு உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராயிருந்தனர். நாங்கள் சுமார் 30 பேர் முன்பதிவுசெய்துகொண்டு ஒரு இரயில் பெட்டியில் ஆஸ்லோவிலிருந்து பயணம்செய்தோம்.
ஸ்காண்டிநேவியா முழுவதிலும் பால்டிக் நாடுகளிலும் பிரசங்க வேலையைக் கவனித்துக்கொள்வதற்காக டென்மார்க்கிலுள்ள கோபன்ஹாகனில் வட ஐரோப்பிய கிளை ஒன்று ஏற்படுத்தப்படும் என்பதாக இந்த அசெம்பிளியில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஸ்காட்லாந்திலிருந்து வந்த வில்லியம் டே என்பவருக்கு பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யும் வேலை நியமிக்கப்பட்டது. எல்லாரும் அவரிடம் மிகவும் பிரியமாயிருந்தார்கள், வெகு சீக்கிரத்தில் பிக் ஸ்காட்ஸ்மேன் என்பதாக அவர் அன்பாக அழைக்கப்படலானார். ஆரம்பத்தில் சகோதரர் டேவுக்கு ஸ்காண்டிநேவிய மொழி எதுவும் தெரிந்திருக்கவில்லை, ஆகவே கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் அவர் பின்பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வார்; அவர்களுடைய பெற்றோர் மேடையிலிருந்து சொல்லப்படும் காரியங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
1925, மார்ச் 1 காவற்கோபுரம் (ஆங்கிலம்) வெளிப்படுத்துதல் அதிகாரம் 12-ஐ கலந்தாலோசித்தது; மேலும், இந்த அதிகாரம் கடவுளுடைய ராஜ்யத்தின் பிறப்போடு தொடர்புடையது என்றும் இந்தப் பிறப்பு 1914-ல் பரலோகத்தில் நடந்தது என்றும் விளக்கியது. அதை புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக இருந்தது, ஆகவே கட்டுரையை நான் மறுபடியும் மறுபடியுமாக படித்தேன். கடைசியாக நான் புரிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
பைபிள் விஷயங்களைப் புரிந்துகொள்ளுவதில் சில சரிப்படுத்துதல்கள் செய்யப்படும்போது, சிலர் இடறலடைந்து கடவுளுடைய மக்களிடமிருந்து விலகிவிட்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சரிப்படுத்துதல் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கும்போது, நான் விஷயத்தை மறுபடியும் மறுபடியுமாக வாசித்து நியாயமான விளக்கத்தைப் புரிந்துகொள்ள எப்போதும் முயற்சிசெய்து வந்திருக்கிறேன். அப்படியும் புதிய விளக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், நான் தெளிவு பெறுவதற்காக காத்திருக்கிறேன். இப்படிப்பட்ட பொறுமைக்கு அடிக்கடி எனக்கு பலன் கிடைத்திருக்கிறது.
பெத்தேலில் சேவை
சில வருடங்கள் நான் கணக்கெழுத்தராக, செயலராக, தணிக்கையராக வேலைசெய்துவந்தேன். 1928-ல் சங்கத்தின் நிதி விவரங்களைக் கவனித்துக்கொண்டிருத்தவர் நோய்வாய்ப்பட்டு பெத்தேலைவிட்டு போக வேண்டியதாயிற்று. இப்படிப்பட்ட வேலையில் எனக்கு அனுபவம் இருந்த காரணத்தால், எனக்கு அந்த வேலை கொடுக்கப்பட்டது. நான் பெத்தேல் சேவையை ஜூன் 1928-ல் ஆரம்பித்தேன். எப்போதாவது சகோதரர் டே வந்து கணக்குகளைத் தணிக்கைசெய்வார். ஆஸ்லோவில் பெத்தேல் குடும்பமே பிரசங்க வேலையைக்கூட முன்நின்று செய்தது; அப்போது நாங்கள் அங்கே ஒரே ஒரு சபையை மாத்திரமே கொண்டிருந்தோம்.
எங்களில் சிலர் பெத்தேலில் ஷிப்பிங் ஊழியராக இருந்த சகோதரர் சாக்ஷமருக்கு பொற்காலம் (இப்பொழுது விழித்தெழு!) பத்திரிகைகளை அடுக்குவதிலும் அனுப்புவதிலும் உதவியாக இருந்தோம். சகோதரர் சைமன்சனும் குன்பெர்க்கும் எங்களுக்கு உதவிசெய்தார்கள். நாங்கள் சந்தோஷமான சமயங்களைக் கொண்டிருந்தோம், நாங்கள் வேலைசெய்துகொண்டிருக்கும்போது அடிக்கடி பாட்டுப் பாடுவோம்.
ராஜ்ய நம்பிக்கையில் விசுவாசம்
1935-ல் “திரள் கூட்டம்” இரண்டாம் பட்சமான பரலோக வகுப்பு அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். மாறாக அது மகா உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்து பூமியின்மீது பரதீஸில் என்றுமாக வாழும் வாய்ப்பைப் பெறும் ஒரு வகுப்பாரை பிரதிநிதித்துவம் செய்வதை நாங்கள் கற்றுக்கொண்டோம். (வெளிப்படுத்துதல் 7:9-14) இந்தப் புதிய புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொண்டபோது, நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்குகொண்டிருந்த சிலர் தங்களுடைய நம்பிக்கை பூமிக்குரியது என்பதை உணர்ந்து அதில் பங்குகொள்வதை நிறுத்திவிட்டனர்.
என்னுடைய பரலோக நம்பிக்கையைப் பற்றி எனக்கு ஒருபோதும் சந்தேகங்கள் இல்லாதிருந்தபோதிலும், ‘கடவுளுக்கு நான் ஏன் தேவை?’ என்பதாக அடிக்கடி நினைப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு பெரிய சிலாக்கியத்துக்கு நான் தகுதியற்றவளாக உணர்ந்தேன். சாதாரணமான, கூச்ச சுபாவமுள்ள, திருமணம் செய்திராத பெண்ணாக இருந்த காரணத்தால், பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ராஜாவாக ஆட்சிசெய்வதைப் பற்றி நினைக்கையில் அது விநோதமாக இருப்பதை நான் கண்டேன். (2 தீமோத்தேயு 2:11, 12; வெளிப்படுத்துதல் 5:10) இருந்தபோதிலும், ‘வல்லவர்கள் அநேகர்’ அழைக்கப்படவில்லை, “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” என்ற அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நான் எண்ணிப்பார்த்தேன்.—1 கொரிந்தியர் 1:26, 27.
இரண்டாம் உலகப் போரின்போது வேலை
1940, ஏப்ரல் 9 அன்று ஜெர்மன் படைகள் நார்வேமீது படையெடுத்தன, சீக்கிரத்தில் அந்த நாடு ஆக்கிரமிக்கப்பட்டது. போரின் விளைவாக, அநேகர் ராஜ்ய செய்திக்கு செவிசாய்ப்பவர்களாக ஆனார்கள். 1940 அக்டோபர் முதல் 1941 ஜூன் வரையாக, நாங்கள் 2,72,000-க்கு அதிகமான புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் அளித்தோம். அப்போது நார்வேயில் இருந்த 470-க்கும் மேற்பட்ட சாட்சிகளில் ஒவ்வொருவரும் சராசரியாக அந்த ஒன்பது மாதங்களில் 570-க்கும் அதிகமான புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் அளித்திருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது!
1941, ஜூலை 8 அன்று ஜெர்மன் இரகசிய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் எல்லா நடத்தும் கண்காணிகளையும் சந்தித்து, பிரசங்க வேலையை நிறுத்தவில்லையென்றால், அவர்கள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என்பதாக அவர்களிடம் சொன்னார்கள். ஐந்து ஜெர்மன் போலீஸ் அதிகாரிகள் பெத்தேலுக்கு வந்து உவாட்ச் டவர் சொஸைட்டிக்குச் சொந்தமான பெருமளவு சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்கள். பெத்தேல் குடும்பம் அங்கிருந்து அழைத்துச்செல்லப்பட்டது, தகவல் பெறுவதற்காக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன, ஆனால் எவருமே கைதுசெய்யப்படவில்லை. கடைசியாக, 1941 ஜூலை 21 அன்று, 28 B இன்காக்நிட்டோ தெருவிலிருந்த சங்கத்தின் கட்டடம் பறிமுதல்செய்யப்பட்டது, எங்களுடைய பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டது. நான் காப்பர்விக்கு திரும்பினேன், பிழைப்பதற்காக உலகப்பிரகாரமான ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன்.
அந்தச் சமயத்தில், அப்பா ஒரு பயனியராக சேவை செய்துகொண்டிருந்தார். ஒருநாள் நாசிக்கள் வந்து அப்பாவின் வீட்டை சோதனை செய்தார்கள். பைபிள்கள் மற்றும் பைபிள் கன்கார்டன்சுகள் உட்பட அவருடைய எல்லா இலக்கியங்களையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். இந்தக் காலப்பகுதியில் எங்களுக்கு மிகவும் குறைந்தளவே ஆவிக்குரிய உணவு கிடைத்தது. ஆவிக்குரிய விதத்தில் பலமாக நிலைத்திருப்பதற்கு, அரசாங்கம் (ஆங்கிலம்) போன்ற பழைய புத்தகங்களை நாங்கள் திரும்பத் திரும்ப படித்தோம், தொடர்ந்து பிரசங்கித்தும் வந்தோம்.
அநேக இடங்களில் சகோதரர்கள் பிரிவுற்றிருந்தது வருத்தத்திற்குரியதாக இருந்தது. நாம் பகிரங்கமாக வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்க வேண்டும் என்பதாக சிலர் கருத்து தெரிவித்தார்கள், மற்றவர்கள் வேறு வழிகளில் ஜனங்களோடு தொடர்புகொண்டு அதிக இரகசியமாக வேலையைச் செய்ய வேண்டும் என்பதாக நினைத்தார்கள். ஆகவே நாங்கள் மிகவும் நேசித்த, முன்பெல்லாம் அதிகமாக ஒத்துழைப்பைக் காட்டிய, முதன்மைவாய்ந்த சகோதரர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாதிருந்தார்கள். அவர்களிடையே ஏற்பட்ட பிரிவினையே எனக்கு அதிகமான மனவேதனையை அளித்தது; என் வாழ்க்கையில் ஒரு சாட்சியாக நான் வேறு எந்த சூழ்நிலைமையிலும் இப்படி உணர்ந்தது கிடையாது.
போருக்குப் பின் புதுப்பிக்கப்பட்ட வேலை
போரைத் தொடர்ந்து, 1945-ன் கோடையில், சகோதரர் டே நார்வேக்கு வந்து ஆஸ்லோ, ஷேயின் மற்றும் பெர்கனில் கூட்டங்களை நடத்தினார். மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ளுமாறு அவர் சகோதரர்களை வேண்டிக் கேட்டுக்கொண்டு அவ்விதமாகச் செய்ய விரும்புகிற அனைவரையும் எழுந்து நிற்கும்படியாகச் சொன்னார். அனைவரும் எழுந்து நின்றனர்! டிசம்பர் 1945-ல் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய தலைவரான நேதன் ஹெச். நாரின் சந்திப்புக்குப் பின் வாக்குவாதங்கள் நிரந்தரமாக தீர்த்துவைக்கப்பட்டன.
இதற்கிடையில், 1945, ஜூலை 17 அன்று, கிளை ஊழியராகிய சகோதரர் ஈனாக்கிடமிருந்து நான் ஒரு தந்தியைப் பெற்றுக்கொண்டேன். அதில், ‘நீங்கள் எப்போது பெத்தேலுக்கு திரும்ப வரமுடியும்?’ என்று கேட்கப்பட்டிருந்தது. சிலர் நான் வீட்டில் இருந்து, 70 வயதைத் தாண்டிவிட்டிருந்த என் அப்பாவை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால் அப்பா பெத்தேல் சேவையை திரும்ப ஆரம்பிக்கும்படியாக என்னை உற்சாகப்படுத்தினார், அதை நான் அப்படியே செய்தேன். 1946-ல் ஐக்கிய மாகாணங்களில் இருந்து வந்த சகோதரர் மார்வின் எஃப். ஆன்டர்சன் எங்களுடைய கிளை கண்காணியாக ஆனார், பிரசங்க வேலை மறுபடியுமாக ஒழுங்கமைக்கப்பட்டது.
கோடை விடுமுறைகளின்போது நான் என்னுடைய குடும்பத்தைப் பார்ப்பதற்காக காப்பர்விக்கு திரும்புவேன். என்னுடைய இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் சாட்சிகளாக ஆகவில்லை, ஆனால் அவர்கள் எப்போதும் அப்பாவிடமும் என்னிடமும் பிரியமாகவே இருந்தார்கள். என்னுடைய ஒரு அண்ணன் துறைமுக அதிகாரியாகவும் கப்பல் மேற்பார்வையாளராகவும் ஆனார், என்னுடைய ஒரு தம்பி ஆசிரியராக இருந்தார். பொருளாதாரத்தில் நான் குறைவுபட்டிருந்தாலும், அப்பா அவர்களிடம், “ஓட்டலி உங்களைவிட பணக்காரி” என்பதாக சொல்வார். அது உண்மையாகவே இருந்தது! அவர்கள் பெற்றிருந்ததை நான் அனுபவித்து மகிழ்ந்த ஆவிக்குரிய ஐசுவரியங்களோடு ஒப்பிடவே முடியாது! அப்பா 78-வது வயதில் 1951-ல் இறந்துபோனார். அம்மா 1928-ல் இறந்துவிட்டிருந்தார்கள்.
1953-ல் நியூ யார்க் நகரில் யெகோவாவின் மக்களுடைய சர்வதேச மாநாட்டில் நான் ஆஜராயிருந்தது என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. உலகில் அந்த வருடம் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 5,00,000 என்ற குறியைத் தாண்டியது, 1,65,000-க்கும் மேற்பட்டவர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்! 1953 மாநாட்டுக்கு முன்பு, பூமியின்மீது யெகோவாவின் அமைப்பினுடைய தலைமைக் காரியாலயமாகிய ப்ரூக்ளின் பெத்தேலில் நான் ஒரு வாரம் வேலைசெய்தேன்.
என்னால் இயன்றதைச் செய்கிறேன்
சமீப ஆண்டுகளில் கண்விழிப்படலத்தின் காரணமாக என்னுடைய பார்வை மங்கிவிட்டது. மூக்குக்கண்ணாடி மற்றும் உருப்பெருக்காடியின் உதவியோடு பெரிய எழுத்துக்களை இன்னும் என்னால் கொஞ்சம் வாசிக்கமுடிகிறது. கிறிஸ்தவ சகோதரிகள் என்னை வாரத்துக்கு இருமுறை வந்து பார்த்து எனக்கு வாசித்துக்காட்டுகிறார்கள். இதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
என்னுடைய பிரசங்க வேலையும் மிகவும் குறைந்துவிட்டது. கோடை காலத்தில், கிறிஸ்தவ சகோதரிகள் எப்போதாவது என்னை சக்கர நாற்காலியில் வைத்து வெளியே கொண்டுவருவார்கள், அப்போது கொஞ்சம் பிரசங்க வேலையை அந்த இடத்தில் செய்வேன். காப்பர்விக்கில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக நான் படித்த தொடக்க பள்ளி உட்பட அங்குள்ள பள்ளிகளுக்கு நான் ஒழுங்காக பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் தபால் மூலம் அனுப்பிவைக்கிறேன். இன்னும் ஒரு ஒழுங்கான பிரஸ்தாபியாக என்னால் இருக்க முடிவதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.
நல்ல வேளையாக சாப்பாட்டு அறையும் ராஜ்ய மன்றமும் பெத்தேலில் என்னுடைய அறை இருக்கும் அதே மாடியில் இருக்கிறது, இது 1983 முதற்கொண்டு ஆஸ்லோவுக்கு வெளியே இட்ரி எனிபாக்கலில் இருந்துவருகிறது. ஆகவே என்னால் ஒரு நடைவண்டியின் உதவியோடு காலை வழிபாட்டுக்கும், உணவருந்தவும் நம்முடைய கூட்டங்களுக்கும் வரமுடிகிறது. இன்னும் என்னால் மாநாடுகளுக்கும் அசெம்பிளிகளுக்கும் வரமுடிவதைக் குறித்து நான் சந்தோஷமாயிருக்கிறேன். பல வருடங்களாக நான் பழகிவந்திருக்கும் நண்பர்களையும், புதிய சகோதர சகோதரிகளையும் அநேக நல்ல பிள்ளைகளையும் சந்திப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
முடிவு வரையாக விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல்
இங்கே பெத்தேலில் சுறுசுறுப்பான, பிரியமான, ஆவிக்குரிய ஆட்களால் சூழப்பட்டிருப்பது ஒரு ஆசீர்வாதமாகும். நான் பெத்தேல் சேவையை ஆரம்பித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தனர். (பிலிப்பியர் 3:14) இப்பொழுது பெத்தேலில் என்னைத் தவிர அனைவரும் பூமியில் என்றுமாக வாழும் நம்பிக்கையுடையவர்களே.
உண்மைதான், இன்னும் சீக்கிரமாகவே யெகோவா நடவடிக்கை எடுப்பார் என்பதாக நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். என்றபோதிலும், திரள் கூட்டம் பெரிதாகிக்கொண்டே போவதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் என்னே அதிகரிப்புகளைப் பார்த்திருக்கிறேன்! நான் முதல்முறையாக ஊழியத்தில் ஈடுபட்டபோது, உலகம் முழுவதிலும் சுமார் 5,000 பேர் இருந்தார்கள். இப்பொழுது 54,00,000-க்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்! ஆம், “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமா”வதை பார்த்திருக்கிறேன். (ஏசாயா 60:22) ஆபகூக் தீர்க்கதரிசி எழுதிய விதமாகவே நாம் யெகோவாவுக்காக காத்திருப்பது அவசியமாகும்: “அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”—ஆபகூக் 2:3.