மெய்யான மகிழ்ச்சி—அதன் திறவுகோல் என்ன?
மனிதர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதற்கே படைக்கப்பட்டார்கள். அதைக் குறித்து நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? சரி, மனிதனுடைய ஆரம்பத்தை சிந்தித்துப் பாருங்கள்.
மகிழ்ச்சியை அனுபவிக்கும் திறமையோடு யெகோவா தேவன் முதல் தம்பதியை படைத்தார். ஆதாமும் ஏவாளும் ஒரு பரதீஸில், ஏதேன் என்றழைக்கப்பட்ட இன்பம் பொங்கும் பூங்காவில் வைக்கப்பட்டார்கள். வாழ்க்கைக்கு அத்தியாவசியமாய் தேவைப்படும் பொருள்சம்பந்தமான அனைத்தையும் படைப்பாளர் அவர்களுக்குக் கொடுத்தார். ‘பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும்’ அந்தத் தோட்டத்தில் இருந்தன. (ஆதியாகமம் 2:9) ஆதாமும் ஏவாளும் ஆரோக்கியமாகவும் பலமாகவும் அழகாகவும் இருந்தார்கள்—அவர்கள் பரிபூரணராகவும் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சிக்கு திறவுகோலாக இருந்தது எது? அவர்களுடைய பரதீஸிய வீடா அல்லது அவர்களுடைய பரிபூரண தேகமா? கடவுளிடமிருந்து வந்த இந்தப் பரிசுகள் அவர்களுடைய வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நிச்சயமாகவே உதவியளித்தன. ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி இத்தகைய காணக்கூடிய காரியங்களின்மீது சார்ந்திருக்கவில்லை. ஏதேன் தோட்டம் ஓர் அழகிய பூங்காவைவிட அதிகத்தைக் குறித்தது. அது ஒரு புனித ஸ்தலமாக, கடவுளை வணங்குவதற்கான இடமாக திகழ்ந்தது. படைப்பாளருடன் ஓர் அன்பான உறவை ஏற்படுத்திக்கொண்டு, அதை தொடர்ந்து காத்துவரும் திறமையில்தான் அவர்களுடைய நித்திய மகிழ்ச்சிக்கான திறவுகோல் இருந்தது. மகிழ்ச்சியாய் இருப்பதற்கு, அவர்கள் முதலாவதாக ஆவிக்குரியவர்களாய் இருக்க வேண்டியிருந்தது.—மத்தேயு 5:3-ஐ ஒப்பிடுக.
ஆவிக்குரியத்தன்மை மகிழ்ச்சிக்கு வழிநடத்துகிறது
ஆதாம் ஆரம்பத்தில் கடவுளிடம் ஆவிக்குரிய உறவை வைத்திருந்தான். தகப்பனுடன் ஒரு மகனுக்கு இருக்கும் உறவைப் போல, அது ஓர் அன்பான, கனிவான உறவாக இருந்தது. (லூக்கா 3:38) ஏதேன் தோட்டத்தில், வணங்குவதற்கான தங்களுடைய ஆசையை திருப்திசெய்துகொள்வதற்கு ஏற்ற சூழ்நிலைமைகள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தன. யெகோவாவுக்கான தங்களுடைய மனப்பூர்வமான, அன்பான கீழ்ப்படிதலினால், விலங்கின படைப்பைவிட மிக மேலான கனத்தையும் மகிமையையும் கடவுளுக்கு கொண்டுவருவார்கள். கடவுளுடைய சிறந்த பண்புகளுக்காக அறிவுப்பூர்வமாய் அவரைத் துதிக்கவும் அவருடைய உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்கவும் அவர்களால் முடியும். அவர்கள் யெகோவாவின் அன்பான, கனிவான கவனிப்பை தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.
படைப்பாளருடன் வைத்துக்கொண்ட இந்தப் பேச்சுத்தொடர்பும் அவருடைய சட்டங்களுக்கான கீழ்ப்படிதலும் நம்முடைய முதல் பெற்றோருக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவந்தன. (லூக்கா 11:28) ஆதாமும் ஏவாளும் மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் தப்பும்தவறுமாக முயன்றுபார்த்துக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் படைக்கப்பட்ட நாழிகை முதற்கொண்டே மகிழ்ச்சியாய் இருந்தார்கள். கடவுளுடன் சமாதானமாயும் அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்தும் இருந்தது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
என்றபோதிலும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போன அந்த நொடிப்பொழுதிலேயே அந்த மகிழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. கலகம் செய்ததன் மூலம், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுடன் வைத்திருந்த தங்களுடைய ஆவிக்குரிய உறவைத் துண்டித்துவிட்டார்கள். அவர்கள் இனிமேலும் கடவுளுடைய நண்பர்களாய் இல்லை. (ஆதியாகமம் 3:17-19) அந்தத் தோட்டத்திலிருந்து அவர்கள் துரத்தப்பட்ட நாளிலிருந்தே, யெகோவா அவர்களுடன் வைத்திருந்த தம்முடைய எல்லா தொடர்பையும் நிறுத்திவிட்டார் என தெரிகிறது. அவர்கள் தங்களுடைய பரிபூரணத்தையும் என்றும் வாழும் எதிர்பார்ப்பையும் தங்களுடைய தோட்ட வீட்டையும் இழந்தார்கள். (ஆதியாகமம் 3:23) ஆனால் மிக முக்கியமாக, கடவுளுடன் அவர்கள் வைத்திருந்த உறவை இழந்துவிட்டதால், மகிழ்ச்சிக்கான திறவுகோலை இழந்துவிட்டார்கள்.
தெரிவுசெய்வதற்கான நம் திறமை
இறப்பதற்கு முன்பு, ஆதாமும் ஏவாளும் தங்களுடைய சந்ததிக்கு மனித பண்புகளையும், இயல்பாகவே பெற்ற மனசாட்சியையும், ஆவிக்குரியத்தன்மைக்கான திறமையையும் கடத்தினார்கள். மனித குடும்பம் மிருகங்களின் நிலைக்கு தாழ்ந்துவிடவில்லை. நாம் படைப்பாளருடன் ஒப்புரவாக முடியும். (2 கொரிந்தியர் 5:18) புத்திக்கூர்மையுடைய ஜீவராசிகளாக, கடவுளுக்குக் கீழ்ப்படிவதை அல்லது கீழ்ப்படியாமலிருப்பதை தெரிவுசெய்யும் சக்தி மனிதர்களுக்கு இன்னும் இருக்கிறது. இது அநேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு, அதாவது புதிதாக ஏற்படுத்தப்பட்ட இஸ்ரவேல் ஜனத்திற்குமுன் ஜீவனை அல்லது மரணத்தை தெரிவுசெய்ய யெகோவா வாய்ப்பளித்த சமயத்தில் விளக்கிக் காண்பிக்கப்பட்டது. தம்முடைய பிரதிநிதியாகிய மோசேயின் மூலம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.”—உபாகமம் 30:15-18.
இப்பொழுதும்கூட, ஆதி பரதீஸ் இழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின், மனிதர்களாகிய நமக்கு சரியான தெரிவுசெய்யும் திறமை இன்னும் இருக்கிறது. செயல்படும் மனசாட்சியும் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் அடிப்படைத் திறமையும் நம்மிடம் உள்ளது. ‘உள்ளான மனுஷனையும்’ ‘உள்ளுக்குள்’ இருக்கும் மனிதனையும் பற்றி பைபிள் பேசுகிறது. (2 கொரிந்தியர் 4:16; ரோமர் 7:22, NW) இப்படிப்பட்ட வார்த்தைகள், கடவுளுடைய ஆளுமையைப் பிரதிபலிப்பதற்கும் அவர் சிந்திக்கிற முறையில் சிந்திப்பதற்கும் ஆவிக்குரியவர்களாய் இருப்பதற்கும் நம் அனைவரிடமும் உள்ள இயல்பான திறமையை தெரிவிக்கின்றன.
நம்முடைய ஒழுக்கநெறி இயல்பையும் மனசாட்சியையும் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”—ரோமர் 2:14, 15.
தேவ ஞானமும் கீழ்ப்படிதலுமே அந்தத் திறவுகோல்
என்றபோதிலும் ஒருவர் இவ்வாறு கேட்கலாம், ‘கடவுளை வணங்குவதற்கும், அதன் பலனாக உள்ளார்ந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் இயல்பான மனச்சாய்வு நம் அனைவருக்கும் இருக்கிறதென்றால், ஏன் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியின்மை?’ ஏனென்றால், மகிழ்ச்சியாயிருப்பதற்கு, நாம் ஒவ்வொருவரும் ஆவிக்குரியத்தன்மையை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும். ஆதியில் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டபோதிலும், மனிதன் தன்னுடைய படைப்பாளரிடமிருந்து பிரிந்துசென்றவனாக ஆகிவிட்டான். (எபேசியர் 4:17, 18) எனவே, கடவுளுடன் ஆவிக்குரிய உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கும் அதை காத்துக்கொள்வதற்கும் நாம் ஒவ்வொருவரும் திட்டவட்டமான படிகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட உறவு தானாகவே வந்துவிடாது.
ஆவிக்குரியத்தன்மையை அபிவிருத்தி செய்துகொள்வதில் அடங்கியுள்ள முக்கியமான இரண்டு நியமங்களை இயேசு குறிப்பிட்டார். ஒரு நியமம் என்னவென்றால், கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வது; மற்றொன்று அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதலுடன் அடங்கியிருப்பது. (யோவான் 17:3) கடவுளுடைய வார்த்தையை மேற்கோள் காண்பித்து, இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” (மத்தேயு 4:4) மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசு இவ்விதமாய் குறிப்பிட்டார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) மகிழ்ச்சிக்காக தப்பும்தவறுமாக முயன்று தேடிக்கொண்டிருப்பதில் பல பத்தாண்டுகளை நாம் செலவழிக்க வேண்டியதில்லை. அனுபவம் மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. அதற்கு மாறாக, தேவ ஞானமும் நம் படைப்பாளருக்குக் கீழ்ப்படிவதுமே வாழ்க்கையில் மெய்யான சந்தோஷத்திற்கு வழிநடத்த முடியும்.—சங்கீதம் 19:7, 8; பிரசங்கி 12:13.
தெளிவாகவே, தேவ ஞானத்தைப் பிரயோகிப்பதாலும் கடவுளுக்குமுன் சிறந்த நிலைநிற்கையைக் கொண்டிருப்பதாலும் வரும் மகிழ்ச்சி நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதல்ல. (அப்போஸ்தலர் 17:26, 27) யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய அறிவு எல்லாருக்கும் கிடைக்கிறது. பைபிள் அநேக மொழிகளில் கோடிக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகமாக தொடர்ந்து விளங்குகிறது. கடவுளுடைய நண்பராவதற்கும் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் பைபிள் உங்களுக்கு உதவிசெய்ய முடியும், ஏனெனில் வேதாகமம் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவை கடவுளாக கொண்டுள்ள ஜனம் மகிழ்ச்சியுள்ளது!”—சங்கீதம் 144:15, NW.
[பக்கம் 7-ன் படம்]
“தங்களுடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுடையவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்.”
—மத்தேயு 5:3, NW