பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது—பாகம் மூன்று
பர்மா, 1824—அரச அதிகாரிகள் அப்போது தான் அடனைரம் மற்றும் அன் ஜட்செனின் மிஷனரி இல்லத்தை குடைந்து குடைந்து தேடி மதிப்புள்ளதாக அவர்கள் எண்ணிய அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டிருக்கிறார்கள். ஆனால் அதிக மதிப்புள்ள அரிய பொக்கிஷம்—அதாவது தன் வீட்டின்கீழே அன் இரகசியமாக புதைத்து வைத்திருந்த மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் கையெழுத்துப் பிரதி—அவர்கள் கைக்கு கிடைக்கவில்லை. மொழிபெயர்ப்பாளர் அடனைரம் வேவுபார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கொசு தொல்லை அதிகமாக இருந்த சிறைச்சாலையில் சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கிறார். இப்பொழுதோ கையெழுத்துப் பிரதி ஈரப்பதத்தினால் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. அதை எவ்வாறு பாதுகாக்கமுடியும்? அன் அவற்றை ஒரு தலையணை உறைக்குள் திணித்து அதைத் தைத்து சிறைச்சாலையிலிருக்கும் தன் கணவனிடம் கொடுத்துவிடுகிறாள். தலையணை பத்திரப்படுத்தப்படுகிறது, அதன் உள்ளே இருந்தவை முதல் பர்மிய மொழி பைபிளின் பாகமாக ஆகின்றன.
வரலாற்றினூடாக பைபிள் இப்படிப்பட்ட அநேக இடர்பாடுகளைக் கடந்து வந்துள்ளது. பைபிள் எழுதிமுடிக்கப்பட்டது முதற்கொண்டு 1600-களின் ஆரம்பம் வரையாக அதன் மொழிபெயர்ப்பு மற்றும் விநியோகம் பற்றி முந்தைய இதழ்களில் சிந்தித்தோம். அப்போது முதற்கொண்டு இப்போது வரையாக பைபிள் எப்படி நிலைத்து வந்திருக்கிறது? அது எப்போதாவது எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படிச் செய்யப்படுமா? உவாட்ச் டவர் சொஸைட்டி என்ன பங்கை வகித்துள்ளது?
மிஷனரிகளும் பைபிள் சங்கங்களும்
அநேக தேசங்களில், பைபிள் வாசிப்பதில் திடீரென்று ஏற்பட்ட தீவிரமான ஒரு ஆர்வத்தை 1600 மற்றும் 1700-களில் கவனிக்க முடிந்தது. இந்தக் காலப்பகுதியில் குறிப்பாக இங்கிலாந்தில் பைபிள் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மையில் சொல்லப்போனால், பைபிள் கதைகளும் போதனைகளும் அரசன் முதல் ஆண்டி வரையாக கிட்டத்தட்ட நாட்டிலிருந்த ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் புகுந்து பரவியிருந்தன. ஆனால் பைபிளின் செல்வாக்கு இன்னும் அதிக தூரம் பரவியது. அப்போது இங்கிலாந்து, கடல் பிரயாணத்தில் ஈடுபட்டிருந்த வர்த்தக மற்றும் குடியேற்ற வல்லரசாக இருந்தது; இங்கிலாந்து நாட்டு மக்களில் சிலர் தங்கள் பிரயாணங்களில் பைபிளைத் தங்களோடு எடுத்துச் சென்றனர். விரிவான பைபிள் பிரச்சாரத்துக்கு இது வித்திட்டது.
1700-களின் முடிவில், தொலைதூரம்வரை பரவிக்கிடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்கீழிருந்த தேசங்களில் வாழ்ந்துவந்த சுதேசி மக்களின் ஆன்மீகத் தேவைகளைப் பற்றி சிந்திக்கும்படியாக இங்கிலாந்திலிருந்த சிலரை பைபிள் தூண்டியது. இருப்பினும் இப்படிப்பட்ட ஒரு அக்கறை எல்லாரிடமும் இருக்கவில்லை. சர்ச்சுக்குச் செல்லும் அநேகர் முன்விதிக்கப்படுதலில் நம்பிக்கை வைத்திருந்தனர், ஆகவே சில ஆட்கள் இரட்சிக்கப்படாமல் போவது கடவுளுடைய சித்தம் என்பதாக அவர்கள் கருதினர். மிஷனரியான வில்லியம் கேரி இந்தியாவுக்குச் சென்று மிஷனரி சேவை செய்ய ஆதரவு திரட்டுவதற்காக எழுப்புதலான ஒரு பேச்சை கொடுத்தபோது யாரோ ஒருவர், கடிந்துகொள்ளும் வகையில், “உட்காரப்பா, புறஜனத்தை மதம் மாற்ற கடவுள் விரும்பும்போது உன்னுடைய உதவி இல்லாமலே அதை அவர் செய்வார்” என்பதாக சப்தமாகச் சொன்னார். இருப்பினும் கேரி 1793-ல் இந்தியாவுக்கு கப்பலில் வந்துசேர்ந்தார். ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமாக, அவர் கடைசியில் முழு பைபிளை அல்லது அதன் பகுதிகளை 35 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தார்.
உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட பைபிளே மிகவும் அடிப்படையான ஆயுதம் என்பதை மிஷனரிகள் புரிந்துகொண்டனர். இருப்பினும் யார் பைபிள்களை கொடுப்பார்? வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த 16 வயதுள்ள ஒரு பெண், மேரி ஜோன்ஸ், பைபிளை உலகம் முழுவதிலும் விநியோகம் செய்யவிருந்த ஒரு இயக்கம் தோன்ற தன்னையறியாமலேயே காரணமாயிருந்தது சுவாரசியமான விஷயம். 1800-ல், மேரி ஒரு பாதிரியாரிடமிருந்து வேல்ஸ் மொழியில் பைபிளை வாங்குவதற்காக வெறுங்காலோடு 40 கிலோமீட்டர் நடந்து சென்றாள். ஆறு வருடங்களாக அவள் அதற்காக தன் பணத்தை சேமித்து வைத்திருந்தாள். எல்லா பைபிள்களும் விற்கப்பட்டுப்போயின என்பதை மேரி தெரிந்துகொண்டபோது அவள் மிகுந்த ஏமாற்றத்தினால் கண்ணீர் வடித்தாள். மிகவும் நெகிழ்ந்துபோன பாதிரி, மேரிக்கு தன்னுடைய சொந்த பைபிள்களில் ஒன்றை கொடுத்துவிட்டார்.
அதற்குப்பின்பு, பைபிள்கள் தேவைப்பட்ட மற்ற அநேகரைப்பற்றி அந்தப் பாதிரி சிந்தித்துப்பார்த்து லண்டனில் இருந்த நண்பர்களோடு பிரச்சினையைக் குறித்து கலந்துபேசினார். இதன் விளைவாக 1804-ல் பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி தோன்றியது. அதன் அடிப்படை நோக்கம் எளிய ஒன்றாக இருந்தது: “ஓரக்குறிப்புகள் இல்லாமல்” அவர்களுடைய சொந்த மொழியில் அச்சடிக்கப்பட்ட பைபிள்களை வாங்கக்கூடிய விலையில் மக்களுக்கு அளிப்பது. ஓரங்களில் விளக்கவுரைகளை நீக்கிவிடுவதன் மூலம் சங்கத்தின் ஸ்தாபகர்கள் கோட்பாடு சம்பந்தமான கருத்து வேற்றுமைகள் தவிர்க்கப்படலாம் என்று எண்ணினார்கள். ஆனாலும் பல சமயங்களில், தள்ளுபடியாகமம், முழுக்கு ஞானஸ்நானம் மற்றும் திரித்துவ கோட்பாடு சம்பந்தமாக பைபிள் சங்கம் பிரிவுற்றே இருந்தது.
ஆரம்பகால உற்சாகம் வேகமாக பரவ, 1813-க்குள் துணை சங்கங்கள் ஜெர்மனியிலும் நெதர்லாந்திலும் டென்மார்க்கிலும் ரஷ்யாவிலும் தோன்றியிருந்தன. வருடங்கள் சென்றபோது மற்ற தேசங்களிலும் பைபிள் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. ஆரம்ப கால பைபிள் சங்கங்கள் தங்கள் குறிக்கோள்களை நிர்ணயித்தபோது, உலகின் பெரும்பகுதியான இடங்கள் சில முக்கிய மொழிகளை மட்டுமே பயன்படுத்தின என்பதாக நினைத்துக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தன என்பதை அவை ஒருபோதும் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை! நேரடியாக ஒரு பிராந்திய மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு வெகு சில மொழிபெயர்ப்பாளர்கள் மாத்திரமே எபிரெயுவையும் கிரேக்க மொழியையும் அறிந்தவர்களாக இருந்தனர். ஆகவே, பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி மொழிபெயர்ப்புகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, மொழிபெயர்ப்பாளர்கள் அநேகமாக ஆங்கில மொழி கிங் ஜேம்ஸ் வர்ஷனை ஆதாரமாக வைத்தே தங்கள் மொழிபெயர்ப்புகளைச் செய்தனர்.
ஒரு மொழிபெயர்ப்பாளரின் கஷ்டங்கள்
பைபிளில் பெரும்பகுதி அன்றாட அனுபவத்தை அடிப்படையாக கொண்ட விவரங்களையும் உதாரணங்களையும் கொண்டுள்ளது. இதனால் இதை மொழிபெயர்ப்பது எளிதாக இருக்கிறது. தத்துவ சாஸ்திரத்துக்குரிய தெளிவில்லாத வார்த்தைகளில் பைபிள் எழுதப்பட்டிருந்தால் இது எளிதாக இருந்திருக்காது. இருப்பினும் எதிர்பார்க்கக்கூடிய விதமாகவே, சில சமயங்களில் ஆரம்ப காலங்களில் மிஷனரிகள் எடுத்த முயற்சிகளின் விளைவாக குழப்பிவிடக்கூடிய அல்லது வேடிக்கையான மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டன. உதாரணமாக, ஒரு மொழிபெயர்ப்பு கடவுள் நீல நிறமுடையவர் என்ற எண்ணத்தை இந்தியாவின் குறிப்பிட்ட ஒரு பகுதியிலுள்ள மக்களுக்கு கொடுத்தது. “வானகத்திலுள்ள தந்தாய்” என்ற சொற்றொடரில், “வானகம்” என்பதற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை, “வானத்தின் நிறமுடைய”—சொல்லர்த்தமான வானம்—என்பதை அர்த்தப்படுத்தியது!
மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கும் இடையூறுகளைக் குறித்து அடனைரம் ஜட்சென் 1819-ல் இவ்வாறு எழுதினார்: ‘நாங்கள் உலகின் அடுத்தப் பக்கத்தில் மக்கள் பேசும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்கையில், இவர்களுடைய சொற்றொடர் அமைப்பு முற்றிலும் எங்களுக்கு பழக்கப்பட்டதாக இல்லாதபோது, எழுத்துக்களும் வார்த்தைகளும் நாங்கள் இதுவரை எதிர்ப்பட்ட எந்த ஒரு மொழிக்கும் எவ்வகையிலும் ஒத்தில்லாதவையாக இருக்கும்போது, எங்களுக்கு எந்த அகராதியோ அர்த்தம் சொல்லித்தர எவருமோ இல்லாமல் அவ்விடத்திலுள்ள ஒரு ஆசிரியரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக அந்த மொழியை கொஞ்சம் அறிந்திருப்பது அதிகமான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது!’ ஜட்சென் போன்ற மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சியினால் பைபிள் எளிதில் கிடைப்பது அதிகரித்தது.—பக்கம் 12-ல் உள்ள வரைபடத்தைக் காண்க.
மொழிபெயர்க்கும் கடினமான வேலையில் அன் ஜட்சென் தன் கணவனுக்கு உதவியாக இருந்தார். ஆனால் ஜட்சென் தம்பதியினர் மொழிபெயர்ப்பதில் உட்பட்டுள்ள பிரச்சினைகளைக் காட்டிலும் அதிகத்தை எதிர்ப்பட்டனர். அரச அதிகாரிகள் அடனைரமை சிறைச்சாலைக்கு இழுத்துக்கொண்டு சென்றபோது அன் கர்ப்பமாயிருந்தாள். 21 மாதங்களுக்கு தன் கணவனை சிறையிலிருந்து விடுவிக்குமாறுகோரி கருணையே காட்டாத அதிகாரிகளிடம் மனு செய்துகொண்டே இருந்தார். இந்தக் கடினமான சோதனையும் நோயும் சேர்ந்து அவருடைய உடல் நலத்தை மோசமாக பாதித்தன. அடனைரம் விடுவிக்கப்பட்ட கொஞ்ச காலத்திற்குள், தைரியத்தோடிருந்த அனும் அவர்களுடைய சிறு பெண்ணும் காய்ச்சலில் இறந்துபோனார்கள். அடனைரம் மனமுடைந்துபோனார். இருந்தபோதிலும் பெலனுக்காக கடவுளைச் சார்ந்திருந்து தொடர்ந்து மொழிபெயர்த்து பர்மிய மொழியில் பைபிளை 1835-ல் மொழிபெயர்த்து முடித்தார். இதற்கிடையில், பைபிளைப் பற்றிய மற்ற விவாதங்கள் உருவாகிக்கொண்டு வந்தன.
கருத்துவேறுபாடு பைபிளை சூழ்ந்துகொள்கிறது
1800-களில் பெரும் சமுதாய மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோது பைபிள் சில சமயங்களில் முக்கிய பங்கை வகித்தது. உதாரணமாக ரஷ்யன் பைபிள் சொஸைட்டி, ரஷ்ய பேரரசர் மற்றும் ரஷ்ய ஆத்தடாக்ஸ் சர்ச்சின் ஆதரவோடு துவங்கியபோதிலும், காலப்போக்கில் அவர்கள் சொஸைட்டியை கலைத்து அதை தடைசெய்துவிட்டனர். (ஆயிரக்கணக்கான பைபிள்கள் ஏற்கெனவே சுமார் ஓராண்டுக்கு முன்பாக அந்த சொஸைட்டியின் விரோதிகளால் எரிக்கப்பட்டுப்போயின.) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மிகவும் உற்சாகத்தோடு ஆரம்பித்ததை—பைபிளை எல்லா இடங்களிலும் விநியோகிப்பதை—இப்பொழுது ஆத்தடாக்ஸ் மத குருக்கள் வைராக்கியத்தோடு முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்டனர். சர்ச் மற்றும் அரசின் அதிகாரத்தை பைபிள் ஆபத்திற்குள்ளாக்கும் என்று 19-ஆம் நூற்றாண்டு ஆத்தடாக்ஸ் தலைவர்கள் உறுதியாக கூறினர். முன்னுக்குப் பின் முரணாக இருப்பது என்னவென்றால், அதற்கு பின் தோன்றிய அரசியல் புரட்சி இயக்கம் பைபிளை அதிகாரங்களுக்கு அச்சுறுத்தலாக கருதாமல் பொது மக்களை அடக்கி வைப்பதற்கு சர்ச்சின் மற்றும் அரசின் ஆயுதமாக கருதியது. இரண்டு பக்கங்களிலுமிருந்தும் பைபிள் தாக்கப்பட்டு வந்தது!
அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பைபிள் அதிகமாக, “அறிவுப்பூர்வமாக” தாக்கப்படுவது நிகழ்ந்தது. 1831-ல் சார்ல்ஸ் டார்வின் அவருடைய பரிணாமக் கோட்பாட்டுக்கு வழிநடத்திய ஆய்வுப்பயணத்துக்காக கப்பலேறினார். 1848-ல் மார்க்ஸ் மற்றும் என்கல்ஸ், கிறிஸ்தவத்தை ஒடுக்குகிற ஒரு ஆயுதம் என்று வருணித்த கம்யூனிஸ்ட் பிரகடனத்தை வெளியிட்டனர். மேலும் இந்தக் காலப்பகுதியில் திறனாய்வாளர்கள் வேதாகமத்தின் நம்பகமான தன்மையைக் குறித்தும் பைபிள் கதாபாத்திரங்களின்—இயேசுவினுடையதைக்கூட—வரலாற்று வாய்மையைக் குறித்து சந்தேகமெழுப்பினர்! ஆனால் சிந்திக்கும் திறமையுள்ள ஆட்கள் கடவுளையும் பைபிளையும் தள்ளிவிட்ட கோட்பாடுகளின் தவறான வாதத்தை கண்டுணர்ந்துகொண்டு பைபிளின் நம்பகமான தன்மையை உறுதிப்படுத்தும் அறிவுப்பூர்வமான வழிகளை ஆராய ஆரம்பித்தனர். இவர்களில் ஒருவர் திறமைவாய்ந்த ஜெர்மன் மொழி வல்லுநரான கோன்ஸ்டான்டென் வான் டிஷன்டார்ஃப் ஆவார்.
பைபிள் வாசகத்தை ஸ்தாபிக்க கண்டுபிடிப்புகள் உதவுகின்றன
பைபிளின் மூலவாசகத்தை எந்தவித சந்தேகத்துக்குமிடமின்றி ஸ்தாபிக்கும் நம்பிக்கையில் பண்டைய பைபிள் கையெழுத்துப் பிரதிகளைத் தேடி கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு டிஷன்டார்ஃப் மத்திய கிழக்கு முழுவதிலும் பிரயாணம் செய்தார். 1859-ல், உயிரின தோற்றம் (ஆங்கிலம்) புத்தகத்தை டார்வின் வெளியிட்ட அதே ஆண்டில் டிஷன்டார்ஃப் சீனாய் மலை அடிவாரத்திலிருந்த ஒரு துறவி மடத்தில் மிக பழமையானதாக அறியப்பட்டிருந்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முழு நகல் ஒன்றை கண்டுபிடித்தார். இது கோடெக்ஸ் சினியாட்டிகஸ் என்றழைக்கப்படுகிறது, ஜெரோம் லத்தீன் வல்கேட்-ஐ முடிப்பதற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகும். கோடெக்ஸை துறவி மடத்திலிருந்து இவர் எடுத்தது சரியா என்பது இன்னும் விவாதிக்கப்பட்டு வந்தபோதிலும் டிஷன்டார்ஃப் அதைப் பிரசுரித்து, இவ்விதமாக அதை கல்விமான்களுக்கு கிடைக்கும்படி செய்தார்.a
மூலமொழி கையெழுத்துப் பிரதிகளில் சினியாட்டிகஸ் மிகப் பழமையான ஒன்றாக இருந்த காரணத்தால், இது கிரேக்க வேதாகமத்தின் அடிப்படையில் மாறாமலே இருப்பதை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் பின்னால் வந்த கையெழுத்துப் பிரதிகளில் நுழைந்துவிட்டிருந்த தவறுகளை வெளிப்படுத்துவதற்கும்கூட கல்விமான்களுக்கு உதவிசெய்தது. உதாரணமாக சினியாட்டிகஸில் 1 தீமோத்தேயு 3:16 இயேசுவைப் பற்றி குறிப்பிடுகையில் இவ்வாறு வாசிக்கிறது: ‘அவர் மாம்சத்திலே வெளிப்பட்டார்.’ “அவர்” என்ற இடத்தில் அப்போது அறியப்பட்டிருந்த பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகள் “அவர்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையை சிறிது மாற்றுவதன்மூலம் “கடவுள்” என்பதற்குரிய சுருக்கத்தைக் காண்பித்தன. இருந்தபோதிலும் சினியாட்டிகஸ், “கடவுள்” என்பதாக வாசிக்கும் எந்தக் கிரேக்க கையெழுத்துப் பிரதியும் தோன்றுவதற்கு முன்பாக எழுதப்பட்டது. இதன் காரணமாக, வாசகத்தில் பிற்பட்ட காலங்களில் செய்யப்பட்ட மாற்றம், ஒருவேளை திரித்துவ கோட்பாட்டை ஆதரிப்பதற்காக புகுத்தப்பட்டதென்பது தெரியவந்தது.
டிஷன்டார்ஃப் காலம் முதற்கொண்டு, இன்னுமதிகமான கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று, மொத்தமாக சுமார் 6,000 எபிரெய வேதாகம கையெழுத்துப் பிரதிகளும் 13,000-க்கும் மேற்பட்ட கிரேக்க வேதாகம கையெழுத்துப் பிரதிகளும் இருப்பது தெரிகிறது. இவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்தது, உறுதியாக நம்பத்தக்க மூலமொழி பிரதி கிடைப்பதில் விளைவடைந்துள்ளது. கல்விமான் எஃப். எஃப். பூரூஸ் சொல்லும் விதமாக: “பல்வேறு மொழிபெயர்ப்புகள் . . . எந்த முக்கியமான வரலாற்று உண்மையையும் அல்லது போதனையையும் மாற்றிவிடுவது கிடையாது.” பைபிள் தொடர்ந்து இன்னும் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தபோது, கூடுதலான இந்த அறிவு எவ்விதமாக மக்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்?
உவாட்ச் டவர் சொஸைட்டியும் பைபிளும்
1881-ல் ஒரு சிறிய ஆனால் ஊக்கமுள்ள பைபிள் போதகர்களும் மாணவர்களும் அடங்கிய ஒரு தொகுதியினர், பிற்காலங்களில் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியைத் தோற்றுவித்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் டிஷன்டார்ஃபின் கிரேக்க வேதாகமம் உட்பட மற்ற பைபிள் சங்கங்கள் வெளியிட்ட பைபிள்களை விநியோகம் செய்துவந்தனர். இருப்பினும் 1890-க்குள், பைபிளை தாங்களே வெளியிடுவதில் இறங்கி, அநேக பைபிள் பதிப்புகளில் முதலாவதானதை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். 1926-ல் சங்கம் தனக்கு சொந்தமான அச்சாலைகளில் பைபிளை அச்சுசெய்ய ஆரம்பித்தது. ஆனால் புதிய ஒரு பைபிள் மொழிபெயர்ப்புக்கான தேவை அதிகமதிகமாக உணரப்பட்டு வந்தது. முந்தைய நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் மற்றும் கல்விமான்கள் வாயிலாக அறியவந்த செய்திகளின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவை புரிந்துகொள்ளத்தக்கதாகவும் வாங்க முடிந்ததாகவும் இருக்கும் ஒரு பைபிளில் சேர்த்து இணைத்திட முடியுமா? இந்த நோக்கத்தோடு, இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் 1946-ல் வேதாகமத்தின் ஒரு புதிய மொழிபெயர்ப்பை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றனர்.
ஒரே மொழிபெயர்ப்பு, அநேக மொழிகளில்
ஆங்கிலத்தில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு என்பதைத் தயார் செய்வதற்காக தகுதிபெற்றிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய மொழிபெயர்ப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் துவங்கி 1950 முதல் 1960 வரையாக ஆறு புத்தகத் தொகுதிகளாக வெளியிடப்பட்டது. 1963 முதற்கொண்டு அது கூடுதலாக இன்னும் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கும் வேலை நடைபெற்று வருகிறது. மற்ற மொழிகளுக்கான நோக்கமும் ஆங்கில மொழிபெயர்ப்பினுடையதைப் போன்றே இருந்தது. முதலாவதாக, மொழிபெயர்ப்பு திருத்தமானதாகவும், மூல மொழியிலுள்ள கருத்துக்கு முடிந்தவரையில் நெருக்கமாக தொடர்புடையதாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட ஒரு கோட்பாடு சம்பந்தமான புரிந்துகொள்ளுதலுக்கு இணக்கமாக இருப்பதற்காக அர்த்தமளிப்பதில் ஒரு புறமாக சாய்தல் கூடாது. இரண்டாவதாக, சூழமைவு நியாயமாக அனுமதிக்கும் வரையில் ஒவ்வொரு முக்கியமான வார்த்தைக்கும் மொழிபெயர்ப்பில் ஒரே சொல்லைப் பயன்படுத்தி மாறாது நிலையாக இருத்தல் வேண்டும். இப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை வாசகர்களுக்கு பைபிள் எழுத்தாளர்கள் எவ்வாறு குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தினார்கள் என்பதைக் காண உதவிசெய்கிறது. மூன்றாவதாக, மொழிபெயர்ப்பு முடிந்தவரை சொல்லர்த்தமாக கருத்தை மறைத்துவிடாமல் இருத்தல் வேண்டும். சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு மூல மொழிகளின் சிறப்பியல்பினையும் அதோடு சம்பந்தப்பட்ட சிந்திக்கும் முறைமைகளையும் நெருக்கமாக உணர்ந்துகொள்ளச் செய்கிறது. நான்காவதாக அதை பாமர மக்களும் வாசித்து புரிந்துகொள்ளும்படியாக இருத்தல் வேண்டும்.
ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பின் சொல்லர்த்தமான பாணி மற்ற மொழிகளில் அதை மொழிபெயர்ப்பதை எளிதாக்குகிறது. இந்த நோக்கத்துக்காக சங்கத்தின் மொழிபெயர்ப்பு குழுவினர் தற்போது தங்களுடைய வேலையை துரிதப்படுத்தவும் அதை அதிக திருத்தமாகச் செய்யவும் முன்னேறிய கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு முக்கியமான வார்த்தைக்கும் சமமான பிராந்திய மொழி வார்த்தைகளின் பட்டியல்களை தொகுப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த முறை உதவி செய்கிறது. பைபிளிலுள்ள ஒவ்வொரு எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைக்குரிய ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஆராய்வதற்கும் இது அவர்களுக்கு உதவிசெய்கிறது.
எபிரெயுவிலிருந்தும் கிரேக்குவிலிருந்தும் நேரடியாக மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பதில் முக்கியமான அனுகூலங்கள் உண்டு. மொழிபெயர்ப்பதற்காகும் நேரம் குறைவதோடுகூட, அனைத்து மொழிகளிலும் கருத்து ஒற்றுமையை சாத்தியமாக்குகிறது. ஏன்? ஏனென்றால் ஒரு பண்டைய மொழியிலிருந்து பல்வேறு நவீன மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் ஒரு நவீன மொழியிலிருந்து துல்லியமாக மற்றொன்றுக்கு மொழிபெயர்ப்பது அதிக சுலபமாகும். மேலும் மொழிபெயர்ப்பாளர்கள் நவீன மொழிகளை தங்கள் சொந்த மொழியாக பேசுகிறவர்களிடம் கலந்து பேசமுடியுமேயன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பேசப்பட்ட மொழிகளை மொழிபெயர்த்தவர்களிடம் பேசமுடியாது.
எல்லா தேசத்தாருக்கும் நற்செய்தி
பைபிளை உலகில் எங்கும் கிடைக்கும்படியாக செய்வதற்கு பெரிய அளவில் துணைபுரிந்திருக்கும் உறுதியான மனங்கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும் பற்றி இன்னும் அதிகம் எழுதமுடியும். நூற்றாண்டுகளினூடாக, குறைந்தபட்சம் 400 கோடி பைபிள்களும் பைபிளின் பகுதிகளும் உலகிலுள்ள மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பேசும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொழிகளில் அச்சுசெய்யப்பட்டிருக்கின்றன!
நம்முடைய நாளில் உலகம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்யம் பற்றி அறிவிக்கப்படும் என்பதாக பைபிள் முன்னறிவித்திருக்கிறது. இந்த நோக்கத்துக்காக பைபிள் இப்பொழுது பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படியாக யெகோவா தேவன்தாமே வழிநடத்திவந்திருப்பது தெளிவாக தெரிகிறது. (மத்தேயு 13:47, 48; 24:14) கடந்த காலங்களில் வாழ்ந்துவந்த தைரியமுள்ள பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும் பிரசுரிப்பாளர்களும், ஒழுக்கத்தில் இருண்டுபோன ஒரு உலகத்தில் ஆவிக்குரிய ஒளியின் ஒரே ஊற்றுமூலமாக இருக்கும் கடவுளுடைய வார்த்தையை நமக்கு தருவதற்காக எல்லாவற்றையும் பணயம் வைத்திருக்கின்றனர். அவர்களுடைய முன்மாதிரி அந்த வார்த்தையை வாசிக்கவும், அதன்படி வாழவும், அதை மற்றவர்களோடு அதே நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்ளவும் உங்களைத் தூண்டட்டும். ஆம், ஒவ்வொரு நாளும் உங்கள் கையிலிருக்கும் நம்பத்தகுந்த பைபிளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்!—ஏசாயா 40:6-8.
[அடிக்குறிப்புகள்]
a 1988, அக்டோபர் 5 ஆங்கில காவற்கோபுர பிரதியில் “கோடெக்ஸ் சினியாட்டிகஸ்-ஐ மீட்டல்” என்பதைக் காண்க.
[பக்கம் 12-ன் வரைப்படம்]
பைபிள் மொழிபெயர்ப்பில் அதிகரிப்பு
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1 சுமார் பொ.ச.மு. 280-ல், யூதர்கள் எபிரெய வேதாகமத்தை கிரேக்குவுக்கு
மொழிபெயர்க்க ஆரம்பிக்கின்றனர்
12
ஜெரோம் லத்தீன் வல்கேட்டை சுமார் பொ.ச. 400-ல் எழுதிமுடிக்கிறார்
35
குட்டன்பர்க்கின் முதல் அச்சடிக்கப்பட்ட பைபிள் சுமார் 1455-ல் முடிக்கப்படுகிறது
81
பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி 1804-ல் நிறுவப்பட்டது
ஆண்டுவாரியாக மதிப்பிடப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை
2,400
2,300
2,200
1996
2,123
1970
1,471
1,300
1,200
1,100
1950
1,049
900
800
700
600
1900
522
[படத்திற்கான நன்றி]
ஆதாரங்கள்: Christianity Today, United Bible Society
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.
[பக்கம் 8-ன் படம்]
ஜட்சென் கட்டப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டார்
[படத்திற்கான நன்றி]
Judson the Hero of Burma, by Jesse Page என்ற புத்தகத்திலிருந்து
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
சீனாய் மலை அடிவாரத்தில் இந்தத் துறவிமடத்திலிருந்து டிஷன்டார்ஃப் மதிப்புவாய்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்றை மீட்டார்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.