“எப்பிக்கூரரைக்” குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
அவர் எவ்வளவு நல்லவர்! உயர்ந்த ஒழுக்க தராதரத்தின்படி வாழ்கிறார். அவர் புகைபிடிப்பதில்லை, போதை வஸ்துக்களை உபயோகிப்பதில்லை, அல்லது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. உண்மையில், கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக்கொள்ளும் சிலரைவிட எவ்வளவோ மேலானவர்!”
சிலர் தாங்கள் வளர்த்துக்கொள்ளும் தகுதியற்ற நட்புகளை நியாயப்படுத்துவதற்கு இந்த விதமாக நியாயவிவாதங்கள் செய்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? வேதாகமத்தை ஆய்வுசெய்யும்போது அது அவ்வாறே இருக்கிறதா? பூர்வ கிறிஸ்தவ சபையிலிருந்த ஒரு உதாரணம் இதற்கு விளக்கமளிக்கிறது.
முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பவுல் கொரிந்திய சபையை பின்வருமாறு எச்சரித்தார்: “மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுக்கும்.” கிறிஸ்தவர்கள் சிலர் எப்பிக்கூரர்கள் உட்பட கிரேக்க தத்துவஞானத்தினால் செல்வாக்கு செலுத்தப்பட்டுவந்த மற்ற தனி நபர்களோடு நெருக்கமாக கூட்டுறவு வைத்திருந்திருக்க வேண்டும். எப்பிக்கூரர்கள் யாராயிருந்தனர்? கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் ஏன் ஆவிக்குரிய விதமாக ஆபத்தாக இருப்பார்கள்? நாம் விழிப்பாயிருக்க வேண்டிய அவர்களைப்போன்ற ஆட்கள் இன்று இருக்கிறார்களா?—1 கொரிந்தியர் 15:33, NW.
எப்பிக்கூரர் யாராயிருந்தார்கள்?
எப்பிக்கூரர் என்பவர்கள் பொ.ச.மு. 341 முதல் 270 வரையாக வாழ்ந்துவந்த எப்பிக்கூரஸ் என்ற கிரேக்க தத்துவஞானியைப் பின்பற்றியவர்கள். வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரே காரியம் அல்லது முக்கியமான காரியம் இன்பமே என்பதாக அவர் கற்பித்தார். எப்பிக்கூரர்கள் எப்போதும் நல்ல நேரத்தை அனுவிக்க முயற்சிசெய்கையில் எந்த கட்டுப்பாடுமின்றி கீழ்த்தரமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றி தகாதவிதத்தில் வாழ்ந்தார்கள் என்பதை அது அர்த்தப்படுத்தியதா? ஆச்சரியமாய் இருப்பது என்னவென்றால், எப்பிக்கூரஸ் தன்னைப் பின்பற்றினோருக்கு அவ்விதமாக வாழும்படி சொல்லவில்லை! மாறாக விவேகத்தோடும் தைரியத்தோடும் தன்னடக்கத்தோடும் நியாயத்தோடும் வாழ்வதே இன்பத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி என்பதாக அவர் கற்பித்தார். உடனடியாக கிடைக்கும், கண நேரம் மாத்திரமே நிலைத்திருக்கக்கூடிய இன்பத்தை அல்ல, ஆனால் வாழ்நாள் முழுவதுமாக நிலைத்திருக்கக்கூடிய இன்பத்தையே அவர் வெளிப்படையாக ஆதரித்து பேசினார். இதன் காரணமாக படுமோசமான பாவத்தைப் பழக்கமாக செய்கிறவர்களோடு ஒப்பிட எப்பிக்கூரர் ஒருவேளை நல்லொழுக்கமுள்ளவர்களாய் தோற்றமளித்திருக்கலாம்.—தீத்து 1:12-ஐ ஒப்பிடுக.
கிறிஸ்தவத்தைப் போன்றே இருந்ததா?
பூர்வ கொரிந்திய சபையில் நீங்கள் ஒரு உறுப்பினராக இருந்திருந்தால், எப்பிக்கூரர்கள் உங்களைக் கவர்ந்திருப்பார்களா? மேலோட்டமாக பார்க்கையில் எப்பிக்கூரரின் உயர்ந்த ஒழுக்கங்கள் அவர்களைக் கிறிஸ்தவர்களுக்கு நம்பகமான தோழர்களாக ஆக்கிற்று என்பதாக சிலர் ஒருவேளை யோசித்திருக்கலாம். இதற்கு மேலும் நியாயங்காட்டி வாதிடுகிறவர்களாக, கொரிந்தியர்கள் எப்பிக்கூரரின் தராதரங்களுக்கும் கடவுளுடைய வார்த்தையின் தராதரங்களுக்கும் இடையில் வெளித்தோற்றத்தில் காணப்பட்ட ஒப்புமைகளைக் கவனித்திருக்கலாம்.
உதாரணமாக, எப்பிக்கூரர் இன்பத்தை அனுபவிக்க நாடுகையில் அதில் நிதானத்தைக் கடைப்பிடித்தார்கள். சரீர இன்பங்களைக் காட்டிலும் மனதின் இன்பங்களையே அவர்கள் உயர்வாக மதித்தனர். ஒரு நபர் என்ன சாப்பிடுகிறார் என்பதைவிட யாரோடு சாப்பிட்டாரோ, அவரோடுள்ள இவருடைய உறவுதானே முக்கியமாக இருந்தது. அரசியல் ஈடுபாட்டிலிருந்தும் இரகசியமாக தவறு செய்வதிலிருந்தும்கூட எப்பிக்கூரர் விலகியிருந்தார்கள். “அவர்கள் அதிகமாக நம்மைப் போலவே இருக்கிறார்கள்!” என்பதாக ஊகித்துக்கொள்வது எத்தனை எளிதாக இருந்திருக்கும்.
இருப்பினும் எப்பிக்கூரர் உண்மையில் பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவே இருந்தனரா? நிச்சயமாக இல்லை. சரியாக பயிற்றுவிக்கப்பட்ட பகுத்தறியும் ஆற்றல் பெற்றவர்களால் முக்கியமான வித்தியாசங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். (எபிரெயர் 5:14) உங்களால் முடியுமா? எப்பிக்கூரரின் போதனைகளை சற்றே கூர்ந்து ஆராயலாம்.
எப்பிக்கூரர் தத்துவத்தின் இருண்ட பக்கம்
தெய்வங்களைப் பற்றிய பயத்தையும் மரணத்தைப் பற்றிய பயத்தையும் மேற்கொள்ள மக்களுக்கு உதவிசெய்வதற்காக, எப்பிக்கூரஸ் மனிதவர்க்கத்தின் பேரில் கடவுட்களுக்கு அக்கறை இல்லை என்றும் அவர்கள் மனித விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும் கற்பித்தார். கடவுட்கள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை, உயிர் தற்செயலாக தோன்றியது என்பதே எப்பிக்கூரஸின் கருத்தாக இருந்தது. படைப்பாளராகிய ‘ஒரே கடவுள்’ இருக்கிறார் என்றும் அவர் தம்முடைய மனித படைப்புகளைக் குறித்து அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்றும் போதிக்கும் பைபிளுக்கு இது தெளிவாக முரண்படுவதில்லையா?—1 கொரிந்தியர் 8:6; எபேசியர் 4:6; 1 பேதுரு 5:6, 7.
மரணத்துக்குப்பின் வாழ்க்கை இல்லை என்பதாகக்கூட எப்பிக்கூரஸ் கற்பித்தார். நிச்சயமாகவே இது உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிளின் போதனைக்கு எதிர்மாறாக உள்ளது. அப்போஸ்தலன் பவுல் மார்ஸ் மேடையில் பேசியபோது, உயிர்த்தெழுதல் கோட்பாட்டைப் பற்றி அவர் சொன்னதை ஒப்புக்கொள்ளாதவர்கள் மத்தியில் எப்பிக்கூரர் இருந்திருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 17:18, 31, 32; 1 கொரிந்தியர் 15:12-14.
எப்பிக்கூரஸின் தத்துவத்திலிருந்த மிகவும் ஆபத்தான அம்சமானது அதிக தந்திரமாகவும்கூட இருந்தது. பிற்கால வாழ்க்கை ஒன்றிருப்பதை அவர் மறுத்ததால் மனிதன் பூமியிலிருக்கும் அந்தக் குறுகிய காலத்தில் முடிந்தவரை மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று முடிவுசெய்ய அவரை வழிநடத்தியது. நாம் பார்த்த விதமாகவே, பாவமுள்ளவர்களாக வாழவேண்டும் என்பது அவருடைய கருத்து அல்ல, ஆனால் இப்பொழுது நமக்கிருப்பதே எல்லாமாக இருப்பதால் தற்போதுள்ள வாழ்க்கையை நன்கு அனுபவித்துவிட வேண்டுமென்பதே அவர் கருத்தாக இருந்தது.
இதன் காரணமாகவே, இரகசியமாக தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தை உண்டாக்கி தற்போதைய மகிழ்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்பதால் அதைத் தவிர்ப்பதற்கு எப்பிக்கூரஸ் தடைசெய்தார். அளவுக்கு அதிகமான ஈடுபாடு தற்போதைய மகிழ்ச்சிக்கு மற்றொரு இடையூறாக இருக்குமென்பதால் நிதானத்தை அவர் உற்சாகப்படுத்தினார். மற்றவர்களோடு நல்ல உறவுகளையும்கூட அவர் ஊக்குவித்தார், ஏனென்றால் அவர்கள் கைம்மாறு செய்கையில் அது பிரயோஜனமாக இருக்கும். நிச்சயமாகவே இரகசியமாக தவறுசெய்தலைத் தவிர்த்தல், நிதானத்தைக் கடைப்பிடித்தல், நட்பான உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவை அவற்றில்தாமே நல்லவையாக இருக்கின்றன. ஆகவே எப்பிக்கூரஸின் தத்துவம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு ஆபத்தாக இருந்தது? ஏனென்றால் அவருடைய புத்திமதி நம்பிக்கையில்லாத மனநிலையின்மீது சார்ந்திருந்தது: “புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்.”—1 கொரிந்தியர் 15:32.
இப்பொழுது எவ்வாறு சந்தோஷமாய் வாழ்வது என்பதை பைபிள் காட்டுகிறது என்பது உண்மையே. இருந்தபோதிலும் அது இவ்வாறு புத்திசொல்லுகிறது: “தேவனுடைய அன்பிலே உங்களைக்காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற காத்திருங்கள்.” (யூதா 21) ஆம், விரைவில் கடந்துபோகும் தற்கால வாழ்க்கையின்மீது அல்ல, நித்திய எதிர்காலத்தின்மீதே பைபிள் அதிகமான முக்கியத்துவத்தை வைக்கிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு கடவுளைச் சேவிப்பதே முக்கிய அக்கறையாக இருக்கிறது; கடவுளை முதலிடத்தில் வைக்கையில் தான் மகிழ்ச்சியாயும் நிறைவாயும் இருப்பதை காண்கிறான். அதேவிதமாகவே, இயேசு தம்முடைய சொந்தத் தனிப்பட்ட அக்கறைகளில் மூழ்கிவிடுவதற்குப் பதிலாக யெகோவாவை சேவிப்பதிலும் மக்களுக்கு உதவிசெய்வதிலும் தன்னலமின்றி தம்முடைய சக்திகளைச் செலவழித்தார். கைம்மாறு எதிர்பார்த்து அல்ல, ஆனால் அவர்களிடமாக உண்மையான அன்பின் காரணமாக மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படியாக அவர் தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்தார். எப்பிக்கூரர் தத்துவத்தின் உள்நோக்கங்களும் கிறிஸ்தவத்தினுடைய உள்நோக்கங்களும் முற்றிலும் வித்தியாசமாயிருப்பது தெளிவாக இருக்கிறது.—மாற்கு 12:28-31; லூக்கா 6:32-36; கலாத்தியர் 5:14; பிலிப்பியர் 2:2-4.
தந்திரமான ஆபத்து
வேடிக்கை என்னவென்றால், மகிழ்ச்சியாயிருப்பதன் பேரில் இப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவத்தை எப்பிக்கூரர்கள் வைத்தபோதிலும் மிகவும் சாதகமான சூழ்நிலைமைகளின்கீழும் அவர்களுடைய மகிழ்ச்சி வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது. ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பது’ என்பது இல்லாத காரணத்தால் எப்பிக்கூரஸ் வாழ்க்கையை “கசப்பான ஒரு பரிசு” என்பதாக அழைத்தார். (நெகேமியா 8:10) ஒப்பிடுகையில் பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தனர்! வாழ்வதற்கு தேவையானதைத் துறந்துவிட்டு மகிழ்ச்சியற்ற ஒரு வாழ்க்கையை இயேசு சிபாரிசு செய்துகொண்டில்லை. உண்மையில் அவருடைய வழியில் செல்வதே மிகுதியான மகிழ்ச்சிக்கு வழியாக இருக்கிறது.—மத்தேயு 5:3-12.
கொரிந்து சபையிலிருந்த சிலர், தங்களுடைய விசுவாசத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமலே எப்பிக்கூரரின் சிந்தனையியால் செல்வாக்கு செலுத்தப்படும் ஆட்களோடு கூட்டுறவு வைத்துக்கொள்ளலாம் என்பதாக நினைத்துக்கொண்டிருந்தால், அவர்கள் நினைப்பு தவறாக இருந்தது. கொரிந்தியருக்கு பவுல் தன்னுடைய முதல் நிருபத்தை எழுதின சமயத்தில் அவர்களில் சிலர் ஏற்கெனவே உயிர்த்தெழுதலில் விசுவாசத்தை இழந்துவிட்டிருந்தார்கள்.—1 கொரிந்தியர் 15:12-19.
இன்று எப்பிக்கூரரின் தத்துவம்
எப்பிக்கூரரின் தத்துவம் பொ.ச. நான்காம் நூற்றாண்டிலேயே மறைந்துவிட்டபோதிலும், இன்றைக்காகவே நீ வாழு என்ற அதேபோன்ற ஒரு நோக்குநிலையை உள்ளவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் நித்திய வாழ்க்கைக்கான கடவுளுடைய வாக்குறுதியில் சிறிதளவோ அல்லது கொஞ்சம்கூட விசுவாசமே இல்லாதவர்களாகவோ இருக்கின்றனர். என்றபோதிலும் இவர்களில் சிலர் நடத்தைக்குரிய உயர்ந்த தராதரங்களை ஓரளவு உடையவர்களாக இருக்கின்றனர்.
ஒரு கிறிஸ்தவன் இப்படிப்பட்டவர்களோடு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளத் தூண்டப்பட்டு அவர்களுடைய கண்ணியமான பண்புகள் நட்புக்கொள்ள நியாயமான காரணமாக இருப்பதாக ஒருவேளை யோசிக்கலாம். இருந்தபோதிலும் நம்மைப்பற்றி நாமே மேலானவர்களாக நினைத்துக்கொள்ளாதபோதிலும் அதிக தந்திரமானவர்களுடைய கூட்டுறவு உட்பட எல்லா ‘கெட்ட கூட்டுறவுகளும் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்’ என்பதை நாம் மனதில் வைக்கவேண்டும்.
இன்றைக்காகவே நீ வாழு என்ற தத்துவம், சில வியாபார மாநாடுகள், சுய உதவி புத்தகங்கள், நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை ஆகியவற்றில் சர்வசாதாரணமாக காணப்படுகிறது. பாவமுள்ள நடத்தையை நேரடியாக ஊக்குவிக்காவிட்டாலும் நம்பிக்கையற்ற இந்த நோக்குநிலை தந்திரமான வழிகளில் நம்மீது செல்வாக்கு செலுத்தமுடியுமா? உதாரணமாக யெகோவாவின் அரசுரிமைப் பற்றிய பிரச்சினை மனதிலிருந்து மறைந்துவிடும் வகையில் நம்மைநாமே திருப்திசெய்துகொள்வதில் நாம் மூழ்கிவிடக்கூடுமா? ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்’ இருப்பதற்கு பதிலாக ஊழியத்தில் குறைவாக செய்து நாம் பக்க பாதையில் சென்றுவிடக்கூடுமா? யெகோவாவின் தராதரங்களிலிருக்கும் நியாயத்தையும் நன்மைகளையும் சந்தேகிக்கும்படி நாம் தவறாக வழிநடத்தப்படுவோமா? நேரடியாக காணமுடிகிற ஒழுக்கயீனம், வன்முறை, ஆவியுலகத் தொடர்பு ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு எதிராகவும் அதே போல உலகப்பிரகாரமான நோக்குநிலையினால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கும் ஆட்களுக்கு எதிராகவும் நாம் எச்சரிக்கையாயிருப்பது அவசியமாகும்!—1 கொரிந்தியர் 15:58; கொலோசெயர் 2:8.
ஆகவே முக்கியமாக முழு இருதயத்தோடு யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றுகிறவர்களோடு நம்முடைய கூட்டுறவை வளர்த்துக்கொள்வோமாக. (ஏசாயா 48:17) இதன் விளைவாக நம்முடைய பயனுள்ள பழக்கங்கள் பலப்படும். நம்முடைய விசுவாசம் வலுவடையும். இப்பொழுது மாத்திரமல்ல, ஆனால் எதிர்காலத்தில், நித்திய ஜீவனை மனதில்கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம்.—சங்கீதம் 26:4, 5; நீதிமொழிகள் 13:20.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
கடவுட்களுக்கு மனிதவர்க்கத்தில் எந்த அக்கறையும் கிடையாது என்பதாக எப்பிக்கூரஸ் கற்பித்தார்
[பக்கம் 24-ன் படம்]
Courtesy of The British Museum