ஒநேசிப்போரு—தைரியமுள்ள ஆறுதலளிப்பவர்
“கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.” (எபிரெயர் 13:3) சுமார் பொ.ச. 61-ல் இந்த வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது, அவர்தாமே ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை சிறைவாசத்தை அனுபவித்தவராகவும் அவருடைய உயிர்த்தியாக மரணத்துக்கு முன்னால் மறுபடியுமாக அதை அனுபவிக்கப்போகிறவராகவும் இருந்தார். (அப்போஸ்தலர் 16:23, 24; 22:24; 23:35; 24:27; 2 கொரிந்தியர் 6:5; 2 தீமோத்தேயு 2:9; பிலேமோன் 1) இப்பொழுது இருப்பதைப் போலவே தங்கள் விசுவாசத்தின் சோதனைகளை அனுபவிக்கும் உடன் விசுவாசிகளை சபைகள் கவனித்துக்கொள்வதற்கான அவசர தேவை அப்போதும் இருந்துவந்தது.
ஒநேசிப்போரு அத்தகைய தேவைக்கு குறிப்பாக கவனம் செலுத்திய முதல் நூற்றாண்டு சீஷரில் ஒருவராக இருந்தார். ரோமில் இரண்டாவது முறையாக பவுல் சிறையிலிருந்தபோது சிறைக்குச் சென்று அவரைப் பார்த்தார். அவரைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்விதமாக எழுதினார்: “ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.” (2 தீமோத்தேயு 1:16, 17) இந்த வார்த்தைகள் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகின்றன என சிந்திப்பதற்கு எப்போதாவது நீங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டதுண்டா? அப்படிச் செய்வது ஒநேசிப்போருவிடமாக உங்கள் போற்றுதலை அதிகரிக்கச் செய்யும். அவர் ஒரு தைரியமுள்ள ஆறுதலளிப்பவராக இருந்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
பவுலின் இரண்டாவது சிறைவாசம்
முதல் சிறைவாசத்திலிருந்து விடுதலை பெற்றப்பின் பவுல் மறுபடியுமாக ரோம சிறையில் இருந்தார், ஆனால் வித்தியாசமான சூழ்நிலைமைகளின்கீழ் இருந்தார். முதல் சிறைவாசத்தின்போது பவுலின் நண்பர்கள் அவர் சொந்தமாக வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கு வந்துபோய் கொண்டிருந்தார்கள்; நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் இருந்ததாக தெரிகிறது. இப்பொழுது பெரும்பாலானவர்களால் கைவிடப்பட்டவராக உயிர்த்தியாக மரணமே அவருக்கு பெரியதாக இருந்தது.—அப்போஸ்தலர் 28:30; 2 தீமோத்தேயு 4:6-8, 16; பிலேமோன் 22.
பவுல் இந்தச் சமயம் சுமார் பொ.ச. 65-ல் சிறையில் இருந்தார். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்னர்—பொ.ச. 64 ஜூலையில்—ரோமாபுரியில் பெரும் தீ பரவி நகரின் 14 பகுதிகளில் 10 பகுதிகளை பெரும் சேதத்திற்குள்ளாக்கியது. ரோம வரலாற்றாசிரியர் டாசிட்டஸின்படி, நீரோ மன்னன் தான் “பிறப்பித்த ஆணையின் விளைவால் தீ வைப்பு என்ற துர்ச்சம்பவம் ஏற்பட்டது என்ற காரணத்தை மறைக்க” இயலாதவனாக இருந்தான். இதன் காரணமாக தன்னைப்பற்றிய இந்த மோசமான பிரச்சாரத்தை போக்க நீரோ இதற்கான பழியை வெறுக்கத்தக்க செயல்களை வெறுத்ததற்காக பகைக்கப்பட்டுவந்த, தொகுதியினர்மீது சுமத்தி அவர்களை அதிகமாக சித்திரவதைச் செய்தான். இவர்களை கிறிஸ்தவர்கள் என்று பொது மக்கள் அழைத்தனர். . . . மிகவும் கேவலமான முறையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மிருகங்களின் தோல்கள் அவர்கள்மீது போர்த்தப்பட்டன, அவர்கள் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்கள், அல்லது அவர்கள் சிலுவைகளில் அறையப்பட்டார்கள், அல்லது பகல் வெளிச்சம் மறைந்தப்பின் இரவு நேரத்தில் ஒளிக்காக அவர்கள் தீக்கு இரையாக்கப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.”
இது போன்ற ஒரு சூழ்நிலையிலும் இதே போன்ற எதிர்பார்ப்புகளோடு பவுல் மறுபடியுமாக சிறையில் இருந்தார். எனவே தன்னுடைய நண்பன் ஒநேசிப்போருவின் சந்திப்புகளுக்காக அவர் இத்தனை நன்றியுள்ளவராக இருந்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆனால் இதே நிலைமையை ஒநேசிப்போருவின் நோக்குநிலையிலிருந்து நாம் காண்போம்.
கைதியாகிய பவுலைச் சந்திப்பது
ஒநேசிப்போருவின் குடும்பத்தினர் எபேசுவில் வாழ்ந்துவந்தனர். (2 தீமோத்தேயு 1:18; 4:19) ஒநேசிப்போரு பேரரசின் தலைநகருக்கு தன்னுடைய சொந்த வேலை விஷயமாக வந்தாரா அல்லது குறிப்பாக பவுலைச் சந்திக்க வந்தாரா என்பது சொல்லப்படவில்லை. எதுவாயிருந்தாலும் அப்போஸ்தலன் பவுல் இவ்விதமாகச் சொன்னார்: ‘ஒநேசிப்போரு ரோமுக்கு வந்திருந்தபோது, அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்.’ (2 தீமோத்தேயு 1:16, 17) எத்தகைய இளைப்பாற்றுதல்? ஒநேசிப்போரு பொருள் சம்பந்தமாக உதவிசெய்திருக்க கூடுமென்றாலும், அவர் நேரில் வந்து பார்த்ததுதானே பவுலைப் பலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் உதவிய ஒரு புத்துயிரூட்டும் மருந்தைப் போல இருந்தது. உண்மையில் சில மொழிபெயர்ப்புகள் இவ்வாறு வாசிக்கின்றன: “அவன் அநேகந்தரம் என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறான்,” அல்லது “அவன் அநேகந்தரம் என்னை ஆறுதல்படுத்தியிருக்கிறான்.”
ரோமிலிருந்த ஒரு கிறிஸ்தவ கைதியை நேரில் சென்று பார்க்கும் ஆசையை நிறைவேற்றுவது அந்தச் சமயத்தில் பெரும் சவாலாக இருந்தது. பவுலின் முதல் சிறைவாச நாட்களைப் போல் இல்லாமல், இந்தச் சமயம் ரோம கிறிஸ்தவர்களால் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரோமாபுரியைப் போன்ற ஒரு பெரிய நகரில், பல்வேறு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையான ஆட்களின் மத்தியில் பிரபலமாக இல்லாத ஒரு கைதியைக் கண்டுப்பிடிப்பது ஒன்றும் சுலபமான வேலை இல்லை. ஆகவே ஊக்கமாக தேடுவது அவசியமாக இருந்தது. கல்விமான் ஜோவானி ராஸ்ட்டானியோ இவ்விதமாக காரியங்களை விவரிக்கிறார்: “பல்வேறு விதமான கஷ்டங்கள் இருந்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தேடும்போது விசேஷமாக ஜாக்கிரதையாய் இருப்பது அவசியமாக இருந்தது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று தகவல் சேகரிப்பதும் பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த வெறிப்பிடித்த வயதான கைதியை சிறைப்படுத்தி இருந்த இடத்தைக் கண்டுப்பிடிப்பதற்காக ஆவலுள்ளவராய் தோன்றுவதும் வீணாக சந்தேகத்தைக் கிளப்பிவிட்டிருக்கலாம்.”
எழுத்தாளர் பி. என். ஹாரிசன் இதே நிலைமையை வர்ணனையுடன் விவரிக்கிறார்: “நகர்ந்துசெல்லும் பாதசாரிகளின் கூட்டத்தில் உறுதிகொண்ட தோற்றமுடைய ஒரு முகம் நம் கண்ணில் பளிச்சிடுவதைப் போலவும், தொலைதூர ஈஜியன் கடலோர பகுதியிலிருந்து வரும் இந்த அந்நியன், பழக்கப்படாத தெருக்களில் குறுக்குமறுக்காக நுழைந்துசென்று அநேக கதவுகளைத் தட்டி, கிடைக்கும் ஒவ்வொரு துப்பையும் வைத்துக்கொண்டு, ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கப்பட்டும் தனது தேடலை கைவிடாமல் உறுதிகொண்ட நெஞ்சுடன் சென்று, இருள் கவிந்திருந்த ஏதோவொரு சிறைவீட்டில் பழக்கப்பட்ட ஒரு குரல் அவரை வாழ்த்திட, ரோம படைவீரனோடு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பவுலை கண்டுபிடிக்கும் வரை கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தோடு பின்தொடருவதைப் போலவும் நாம் உணருகிறோம்.” அந்த இடம் ரோமிலிருந்த மற்ற சிறைகளைப் போல இருந்ததென்றால் அது குளிரான, இருட்டான, அழுக்கடைந்த இடமாகவும் எல்லாவிதமான இக்கட்டுகளும் வேதனைகளும் மிகுந்திருந்த இடமாகவும் இருந்திருக்கும்.
பவுலைப் போன்ற ஒரு கைதியின் நண்பனாக அடையாளம் காட்டிகொள்வது மிகவும் ஆபத்தானது. அவரைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருப்பது அதைவிட ஆபத்தானதாகும். ஒரு கிறிஸ்தவன் என்பதாக ஒருவர் தன்னை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வது, கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்படும் ஆபத்தை முன்வைத்தது. ஆனால் ஒநேசிப்போரு ஓரிரு முறை பவுலை சந்திப்பதோடு திருப்தியாக இருந்துவிடவில்லை. “அநேகந்தரம்” அவ்விதமாகச் செய்வதற்கு அவர் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை. நிச்சயமாகவே ஒநேசிப்போரு “நன்மையைக் கொண்டுசெல்வோன்” என்ற தன் பெயரின் பொருளுக்கேற்ப வாழ்ந்து ஆபத்துக்களின் மத்தியிலும் தைரியமாகவும் அன்பாகவும் உதவியளித்துவந்தார்.
ஒநேசிப்போரு இதை எல்லாம் ஏன் செய்தார்? ப்ரயன் ராப்ஸக்கி இவ்விதமாக குறிப்பிட்டார்: “சிறை என்பது சரீரப்பிரகாரமான துன்பத்துக்குரிய இடமாக மாத்திரம் இல்லாமல் கைதிக்கு அது கொடுத்த அழுத்தங்களின் காரணமாக ஆழ்ந்த கவலைக்குரிய இடமாகவும் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் உதவிசெய்பவர்கள் சரீரப்பிரகாரமாக அவர்களுக்கு முன்னால் இருப்பதும் வார்த்தைகளினால் அவர்களை உற்சாகப்படுத்துவதும் கைதிக்கு உணர்ச்சிப்பூர்வமான பெரும் உதவியாய் இருக்கும்.” ஒநேசிப்போரு இதை தெளிவாக அறிந்திருந்து தைரியமாக தன்னுடைய நண்பனை விடாது பற்றிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட உதவியை பவுல் எவ்வளவாய் போற்றியிருக்க வேண்டும்!
ஒநேசிப்போருக்கு என்ன நடந்தது?
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் ஒநேசிப்போருவின் வீட்டாருக்கு வாழ்த்துதல்களை அனுப்பி அவரைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக.” (2 தீமோத்தேயு 1:18; 4:19) அநேகர், “அந்நாளிலே” என்ற வார்த்தை கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாளைக் குறிப்பதாக எண்ணி, ஒநேசிப்போரு மரித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். அது அப்படியிருக்குமானால், ஒருவேளை “ஒநேசிப்போரு சிறைக்குச் சென்றிருந்த கடைசி முறை அவர் பிடிபட்டிருப்பார், . . . அதற்கான அபராதம் அவருடைய உயிரையேக் கொடுக்க வேண்டியதாய் இருந்திருக்கும்” என்பதாக பி. என். ஹாரிசன் குறிப்பிடுகிறார். அல்லது ஒருவேளை ஒநேசிப்போரு வெறுமனே வீட்டிலிருந்து தொலைவான இடத்துக்கு சென்றிருக்கலாம் அல்லது அவரையும் உட்படுத்தி அவருடைய முழு வீட்டாருக்கும் பவுல் வாழ்த்துதலை அனுப்பியிருக்கலாம்.
“அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக” என்ற கூற்றில் விசேஷமான முக்கியத்துவம் இருப்பதாக சிலர் நம்புகின்றனர். ஏதோ ஒரு ஆவிமண்டலத்துக்கு பிரிந்துபோய் துன்பத்தில் வாழும் ஆத்துமாக்களுக்காக செய்யப்படும் ஜெபங்களை இந்த வார்த்தைகள் நியாயப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மரித்தோர் ஒன்றும் அறியார்கள் என்ற பைபிள் போதனைக்கு இந்தக் கருத்து முரணாக உள்ளது. (பிரசங்கி 9:5, 10) ஒநேசிப்போரு மரித்துவிட்டிருந்தாலும்கூட தன்னுடைய நண்பர் கடவுளிடமிருந்து இரக்கம் பெறவேண்டும் என்பதாக பவுல் தன்னுடைய விருப்பத்தை வெறுமனே வெளிப்படுத்தியிருக்கலாம். “எல்லாருக்கும் அப்படிப்பட்ட வாழ்த்துதலை தெரிவிக்க நமக்கு உரிமை உண்டு” என்பதாக ஆர். எப். ஹார்டன் சொல்லுகிறார். “ஆனால் மரித்தவருக்காக ஜெபம் செய்வதும் அவர்களுக்கு பூசை நடத்துவதும் [அப்போஸ்தலனின்] மனதில் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.”
உண்மைப்பற்றுள்ள ஆறுதலளிப்போராக இருப்போமாக
ஒநேசிப்போரு பவுலுக்கு உதவியாக இருக்கையில் தன் உயிரை உண்மையில் இழந்திருந்தாலும் சரி இழக்காவிட்டாலும் சரி, பவுலைக் கண்டுப்பிடிப்பதற்கும் சிறையில் அவரைச் சென்றுப் பார்ப்பதற்கும் நிச்சயமாகவே தன் உயிரைப் பணயம் வைத்தார். பவுல், ஒநேசிப்போருவிடமிருந்து பெற்றுக்கொண்ட தனக்கு மிகவும் தேவையாக இருந்த ஆதரவையும் உற்சாகத்தையும் போற்றினார் என்பதில் சந்தேகமேதுமில்லை.
உடன் கிறிஸ்தவர்கள் சோதனை, துன்புறுத்தல் அல்லது சிறைவாசத்தை அனுபவிக்கையில் நாம் அவர்களுக்கு ஆறுதலளித்து ஊக்குவிக்கக்கூடிய நிலையில் இருப்போமாக. ஆகவே நாம் அவர்களுக்காக ஜெபம் செய்து அவர்களுக்கு உதவ நம்மால் ஆன அனைத்தையும் அன்போடே செய்வோமாக. (யோவான் 13:35; 1 தெசலோனிக்கேயர் 5:25) ஒநேசிப்போருவைப் போல, தைரியமுள்ள ஆறுதலளிப்போராக நாம் இருப்போமாக.
[பக்கம் 31-ன் படம்]
சிறையிடப்பட்டிருந்த அப்போஸ்தலன் பவுலுக்கு ஒநேசிப்போரு தைரியத்துடன் ஆறுதலளித்தார்