புகார் செய்வதெல்லாம் தவறா?
நம்மால் புகார் செய்ய முடியாதவற்றைப் போல வேறெந்தத் தொல்லைகள் அதிக வேதனை தருவதாய் இருக்கமுடியும்?—மார்க்கி டி குயஸ்டன், 1790-1857.
இரண்டு ஆண்டுகளாக உடன் வேலைசெய்பவர் ஒருவரின் பாலின தொல்லைகளை சகித்தாள். அவள் எதிர்த்தபோது கிடைத்த பலன், வார்த்தைகளால் தாக்கப்பட்டாள், வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டாள். உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தது அவளுடைய உடல்நலத்தைப் பாதித்தது, ஆனால் அவளால் என்ன செய்யமுடியும்? அதேவிதமாகவே, தன்னுடைய வகுப்பில் முதல் நிலையில் இருந்த ஒரு மாணவனின் மனச்சாட்சி, பள்ளி கட்டாயப்படுத்திய தற்காப்புக் கலை உடற்பயிற்சியில் பங்குகொள்ள அனுமதிக்காத காரணத்தால் பள்ளியிலிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். இருவருமே தங்களுக்குத் தவறிழைக்கப்பட்டதாக உணர்ந்தார்கள், ஆனால் அவர்கள் புகார் செய்யவேண்டுமா? அவர்கள் அப்படிச் செய்தால் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா அல்லது காரியங்களை அது இன்னும் மோசமாக்கிவிடுமா?
அபூரணமான ஓர் உலகில் அபூரணமான மக்கள் மத்தியில் நாம் வாழ்வதால் இப்படிப்பட்ட புகார்களும் மற்ற புகார்களும் இன்று சர்வசாதாரணம். புகார் செய்வதென்பது, கோபத்தை, துக்கத்தை, வேதனையை வெளிப்படுத்துவது அல்லது ஏதோவொரு நிலைமையைக் குறித்து மனக்கசப்பை வெளிப்படுத்துவது முதல் குறிப்பிட்ட ஒரு நபருக்கு எதிராக முறைப்படி குற்றஞ்சாட்டுவது வரையாக அனைத்தையும் உள்ளடக்குகிறது. பெரும்பாலான ஆட்கள் புகார் செய்வதையும் நேருக்குநேர் எதிர்ப்பதையும் தவிர்த்துவிட விரும்புகிறார்கள்; என்றாலும், ஒருவர் எப்போதுமே மெளனமாக இருந்துவிட வேண்டுமா? பைபிளின் கருத்து என்ன?
தன்மீதும் பிறர்மீதும் வரும் கெட்ட விளைவுகள்
எப்பொழுதும் புகார் செய்துகொண்டே இருக்கும் மனநிலை தீங்குசெய்வதாக இருக்கும், அது பைபிளில் கண்டனம் செய்யப்படுகிறது. புகார் செய்பவர் தனக்கு சரீர மற்றும் ஆவிக்குரிய சேதத்தை வருவித்துக்கொண்டு, தான் யாரைப் பற்றி புகார் செய்கிறாரோ அவரையும் எரிச்சலடையும்படி செய்வார். புகார் சொல்லும் ஒரு மனைவியைக் குறிப்பிட்டு பைபிள் நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.” (நீதிமொழிகள் 27:15) குறிப்பாக, யெகோவாவுக்கு அல்லது அவருடைய ஏற்பாடுகளில் ஒன்றுக்கு எதிராக புகார்செய்வது குற்றமாகும். இஸ்ரவேல் ஜனத்தார் தங்களுடைய 40-ஆண்டு கால வனாந்தர பயணத்தின்போது அளிக்கப்பட்ட அற்புதமான மன்னாவைக்குறித்து புகார் செய்து அதை “அற்பமான உணவு” என்றழைத்தபோது, அவமரியாதை காண்பித்த இந்தப் புகார்பேர்வழிகளை தண்டிக்க விஷப்பாம்புகளை யெகோவா அனுப்பினார், அநேகர் உயிரிழந்தனர்.—எண்ணாகமம் 21:5, 6.
மேலுமாக, இயேசு, நம்முடைய உடன் மானிடரில் காணப்படும் ‘துரும்பாகிய’ குறைகளைப்பற்றி புகார் செய்யாமல் நம்மிடமுள்ள பெரிய ‘உத்திரமாகிய’ குறைகளைக் குறித்து நன்றாக அறிந்திருக்கும்படி தம்மைப் பின்பற்றுவோருக்கு புத்திமதி சொன்னார். (மத்தேயு 7:1-5) அதேவிதமாகவே, தீர்ப்பு செய்வதை (ஒரு வகையான புகார்) ‘சாக்குச் சொல்வதற்கு வழியில்லை’ என்பதாக பவுல் கண்டனம் செய்தார், ஏனென்றால் “தீர்ப்புக்கூறும் நீயே அவற்றைச் செய்கிறாயே.” புகார் செய்வதற்கு எதிரான இந்த எச்சரிக்கைகள் அனாவசியமாக குறைகண்டுபிடிப்பவர்களாக இருப்பதையும் புகார் செய்யும் மனநிலையை வளர்த்துக்கொள்வதையும் தவிர்க்க நம்மைத் தூண்டவேண்டும்.—ரோமர் 2:1, கத்தோலிக்க பைபிள்.
புகார் செய்வதெல்லாம் கண்டனம் செய்யப்படுகிறதா?
அப்படியென்றால் எல்லாவித புகாருமே கண்டனம் செய்யப்படுகிறதென்ற முடிவுக்கு நாம் வந்துவிட வேண்டுமா? இல்லை, அப்படி செய்யக்கூடாது. குறைபாடுகள் நிறைந்த நாம் வாழும் உலகில் நியாயமாகவே திருத்தப்பட வேண்டிய அநீதியான காரியங்கள் அநேகம் இருப்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட ஒரு விதவை தன்னிடம் ‘எப்போதும் [வந்து] உயிரை வாங்காதபடிக்கு’ வேண்டாவெறுப்புடன் அவளுக்கு நியாயம் செய்த அநீதியுள்ள ஒரு நியாயாதிபதியைப் பற்றி இயேசு ஒரு உவமையில் பேசினார். (லூக்கா 18:1-8, தமிழ் கத்தோலிக்க பைபிள்) சில விஷயங்களில், தவறுகள் சரிசெய்யப்படும் வரை புகார் செய்வதில் நாமும்கூட விடாப்பிடியாக இருக்க வேண்டும்.
கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கும்படி நம்மை உற்சாகப்படுத்துவதன்மூலம், இயேசு தற்போதுள்ள இந்த உலகின் குறைபாடுகளைக் கண்டுணர்ந்து இவை சரிசெய்யப்படுவதற்காக கடவுளை நோக்கி ‘கூக்குரலிடும்படியாக’ நம்மை துரிதப்படுத்தவில்லையா? (மத்தேயு 6:10) பண்டைய சோதோம் கொமோராவின் அக்கிரமத்தைப்பற்றிய “கூக்குரல்” யெகோவாவின் காதுகளை எட்டியபோது, “அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறி”வதற்காகவும் அதற்கு பரிகாரத்தைக் கொண்டுவருவதற்காகவும் அவர் தம்முடைய தூதுவர்களை அனுப்பினார். (ஆதியாகமம் 18:20, 21) அதைத் தொடர்ந்து யெகோவா இரண்டு பட்டணங்களையும் அதின் ஒழுக்கங்கெட்ட குடிமக்களையும் அழிப்பதன்மூலம் நிலைமையை சரிசெய்தபோது அவரிடம் புகார் செய்தவர்களுக்கு அது நிம்மதியை அளித்தது.
கிறிஸ்தவ சபை
கிறிஸ்தவ சபையினுள்ளே சகோதரர்கள் மத்தியில் அது வித்தியாசமாக இருக்கவேண்டுமா? அபூரணமான ஆண்களும் பெண்களும் இருந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் கடவுளை சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் சேவிக்க ஊக்கமாக முயற்சி செய்கிறார்கள். இருந்தபோதிலும், ஓரளவு புகார் செய்வதற்கு காரணமாயும் சரிசெய்வதைத் தேவைப்படுத்துவதாயும் இருக்கும் நிலைமைகள் அவர்கள் மத்தியில் உருவாகும். முதல் நூற்றாண்டில், பெந்தெகொஸ்தே நாளிற்குப்பின் விரைவிலேயே அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் சபையில் ஒரு நிலைமை உருவானது. புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களில் அநேகர் கூடுதலாக அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் பெற்றுக்கொள்வதற்காக எருசலேமில் தங்கிவிட்டனர். கைவசம் இருந்த உணவை அவர்கள் பகிர்ந்து உண்டனர். என்றாலும், “கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.” புகார்செய்த இவர்களை, தொந்தரவு செய்பவர்கள் என கண்டனம் செய்வதற்குப் பதிலாக, அப்போஸ்தலர்கள் நிலைமையை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். ஆம், தகுந்த மரியாதையோடும் சரியான மனநிலையோடும் செய்யப்படும் நியாயமான புகார்களுக்கு சபையில் கண்காணிப்பு செய்பவர்கள் தாழ்மையாக செவிகொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள்.—அப்போஸ்தலர் 6:1-6; 1 பேதுரு 5:3.
தகுந்த அதிகாரமுடையவர்களிடம்
புகார்கள் சரியான மனநிலையோடும் தகுந்த அதிகாரமுடையவர்களிடமும் செய்யப்பட வேண்டும் என்பதை மேலே உள்ள உதாரணங்களிலிருந்து நீங்கள் கவனித்தீர்களா? உதாரணமாக, பாரமாக இருக்கும் வரிச்சுமையைக் குறித்து ஒரு போலீஸ்காரரிடமோ அல்லது ஒருவருடைய சரீரப்பிரகாரமான வியாதியைக் குறித்து ஒரு நீதிபதியிடமோ புகார் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். அதேவிதமாகவே, சபைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும் ஏதாவது ஒரு காரியத்தைப்பற்றி அதிகாரமில்லாதவரிடமோ அல்லது உதவிசெய்ய இயலாதவரிடமோ புகார் செய்வது பொருத்தமற்றதாக இருக்கும்.
இன்று பெரும்பாலான தேசங்களில், ஓரளவு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனு செய்வதற்கு நீதிமன்றங்களும் மற்ற பொருத்தமான அதிகாரங்களும் இருக்கின்றன. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மாணவன் தன்னுடைய புகாரை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றபோது, நீதிபதிகள் இவனுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தார்கள், குற்றத்தைப் பள்ளி ஒப்புக்கொண்டது, இவன் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். அதே போலவே, பாலின தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண் தொழிலாளிக்கு பெண்கள் தொழிற்சங்கத்தின் மூலமாக நியாயம் கிடைத்தது, பள்ளி நிர்வாகம் அவளிடம் தவற்றை ஒப்புக்கொண்டது. அவளை வேலைக்கு அமர்த்தியவர்கள் பாலின தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இருந்தபோதிலும் எல்லா புகார்களுக்கும் இதே மாதிரியான முடிவே இருக்கும் என்பதாக எதிர்பார்க்கக்கூடாது. ஞானியான சாலொமோன் ராஜா யதார்த்தமாக இவ்வாறு குறிப்பிட்டார்: “கோணலானதை நேராக்கக்கூடாது.” (பிரசங்கி 1:15) சில விஷயங்களை கடவுள் ஏற்ற சமயத்தில் சரிசெய்வதற்காக நாம் காத்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொள்வது நமக்கு நல்லது.
[பக்கம் 31-ன் படம்]
மூப்பர்கள் நியாயமான புகார்களுக்குச் செவிகொடுத்து நடவடிக்கை எடுக்கின்றனர்