‘உன் இருதயம் என்னுடன் செம்மையாயிருக்கிறதா?’
“நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக [“யெகோவாவுக்காக,” NW] எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார்.”—2 இராஜாக்கள் 10:16.
1, 2. (அ) இஸ்ரவேலின் மத நிலைமை எவ்வாறு படிப்படியாய் மோசமானது? (ஆ) பொ.ச.மு. 905-ல் என்ன திடீர் மாற்றங்கள் ஏற்படவிருந்தன?
இஸ்ரவேலில் பெரும் மாற்றத்திற்குரிய ஆண்டாக பொ.ச.மு. 905 இருந்தது. அதற்கு ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால், இஸ்ரவேலின் அந்த ஒன்றுபட்ட ராஜ்யம், சாலொமோனின் விசுவாச துரோகத்தின் காரணமாகப் பிரிவுறும்படி யெகோவா செய்திருந்தார். (1 இராஜாக்கள் 11:9-13) அப்போது தென் ராஜ்யமாகிய யூதா, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமால் ஆளப்பட்டது; வட ராஜ்யமாகிய இஸ்ரவேல், எப்பிராயீமியனான, அரசன் யெரொபெயாமின் ஆட்சியின்கீழ் வந்தது. வருந்தத்தக்கதாக, வட ராஜ்யம் அவலமான ஒரு தொடக்கத்தை உடையதாக இருந்தது. வணக்கத்திற்காக தென் ராஜ்யத்திலிருந்த ஆலயத்திற்கு தன் பிரஜைகள் பயணப்பட்டு செல்வதை யெரொபெயாம் விரும்பவில்லை. அவ்வாறு சென்றால், தாவீதின் குடும்பத்தாரினிடமாகத் திரும்பிசெல்வதன் எண்ணம் அவர்களுக்கு உண்டாகும் என்று அவர் பயந்தார். ஆகையால் இஸ்ரவேலில் கன்றுக்குட்டி வணக்கத்தை அவர் ஏற்படுத்தி வைத்தார். இவ்வாறு ஓர் உருவ வணக்க மாதிரியை ஸ்தாபித்தார்; இது வட ராஜ்யத்தின் சரித்திர காலமெல்லாம் ஓரளவுக்கு தொடர்ந்திருந்தது—1 இராஜாக்கள் 12:26-33.
2 உம்ரியின் குமாரனாகிய ஆகாப் அரசனானபோது நிலைமைகள் வெகு மோசமாயின. அவருடைய அன்னிய நாட்டு மனைவியாகிய யேசபேல், பாகால் வணக்கத்தைப் பெருகச் செய்து, யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொன்றாள். தீர்க்கதரிசியாகிய எலியா தெளிவாக எச்சரிக்கைகள் கொடுத்தபோதிலும், அவளைத் தடுத்துநிறுத்த ஆகாப் ஒன்றும் செய்யவில்லை. எனினும், பொ.ச.மு. 905-ல் ஆகாப் இறந்துவிட்டார், அவருடைய குமாரனாகிய யோராம் ஆட்சி செய்தார். இப்போது தேசம் சுத்திகரிக்கப்படுவதற்கு காலமாக இருந்தது. எலியாவுக்குப்பின் வந்தவரான எலிசா, இராணுவ தலைவரான யெகூவிடம், அவர் இஸ்ரவேலின் அடுத்த அரசனாக இருக்கும்படி யெகோவா அவரை அபிஷேகம் செய்வதாகத் தெரிவித்தார். அவருக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையைப் பற்றியதென்ன? பாவம் நிறைந்த ஆகாபின் குடும்பத்தை அழித்தொழிப்பதும், யேசபேல் சிந்தின தீர்க்கதரிசிகளின் இரத்தத்திற்காகப் பழிவாங்குவதுமாகும்!—2 இராஜாக்கள் 9:1-10.
3, 4. தன்னுடைய இருதயம் ‘யெகூவின் இருதயத்தோடு செம்மையாய்’ இருந்ததென்று யோனதாப் எவ்வாறு காட்டினார்?
3 கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிபவராக யெகூ, பொல்லாத யேசபேலை கொல்லப்படும்படி செய்து, அதன்பின் ஆகாபின் குடும்பத்தாரைக் கொன்று இஸ்ரவேலைச் சுத்திகரிப்பதில் ஈடுபட்டார். (2 இராஜாக்கள் 9:15–10:14, 17) அப்போது ஓர் ஆதரவாளனை எதிர்ப்பட்டார். “தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி, நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக [“யெகோவாவுக்காக,” NW] எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.”—2 இராஜாக்கள் 10:15, 16.
4 யோனதாப் ஓர் இஸ்ரவேலராக இல்லை. எனினும், (“யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார்,” “யெகோவா பெருந்தன்மையுள்ளவர்,” அல்லது “யெகோவா தயாளர்” என்று அர்த்தப்படுகிற) அவருடைய பெயருக்கு இசைவாக, அவர் யெகோவாவை வணங்கினவராக இருந்தார். (எரேமியா 35:6) ‘யெகோவாவுக்காக யெகூவுக்கு இருந்த வைராக்கியத்தைக்’ காண்பதில் நிச்சயமாகவே, அவருக்கு அசாதாரணமான அக்கறை இருந்தது. இது நமக்கு எப்படி தெரியும்? இஸ்ரவேலின் அபிஷேகம் செய்யப்பட்ட அரசரை அவர் சந்தித்தது தற்செயலாய் ஏற்பட்டதல்ல. யோனதாப் அவரைச் ‘சந்திக்க வந்துகொண்டிருந்தார்.’ (NW) மேலும், யேசபேலையும் ஆகாபின் குடும்பத்தாரான மற்றவர்களையும் யெகூ ஏற்கெனவே கொன்றிருந்த சமயத்தில் அவ்வாறு சந்திக்க வந்தார். இரதத்தினுள் ஏறிக்கொள்ளும்படியான யெகூவின் அழைப்பை அவர் ஏற்றபோது சம்பவித்துக்கொண்டிருந்ததை யோனதாப் அறிந்திருந்தார். பொய் வணக்கத்திற்கும் உண்மையான வணக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட இந்தப் போராட்டத்தில் அவர், சந்தேகமில்லாமல் யெகூவின்—மற்றும் யெகோவாவின்—சார்பில் இருந்தார்.
தற்கால யெகூவும் தற்கால யோனதாபும்
5. (அ) மனிதவர்க்கம் முழுவதற்கும் என்ன மாற்றங்கள் சீக்கிரத்தில் ஏற்படவுள்ளது? (ஆ) பெரிய யெகூ யார், பூமியில் அவரை பிரதிநிதித்துவம் செய்வோர் யார்?
5 முன்னே பொ.ச.மு. 905-ல் காரியங்கள் இஸ்ரவேலுக்கு மாறினதுபோல், இன்று மனிதவர்க்கம் முழுவதற்கும் காரியங்கள் சீக்கிரத்தில் முற்றிலுமாக மாறும். பொய்மதம் உட்பட, சாத்தானின் செல்வாக்கினால் உண்டான எல்லா தீய விளைவுகளையும் நீக்கி, இந்தப் பூமியை யெகோவா சுத்திகரிக்கப்போகிற காலம் இப்போது அருகில் இருக்கிறது. தற்கால யெகூ யார்? இயேசு கிறிஸ்துவேயல்லாமல் வேறு எவரும் அல்ல, அவரை நோக்கியே பின்வரும் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் சொல்லப்படுகின்றன: “பராக்கிரம புருஷனே, உமக்கு மகிமையும் மகத்துவமுமாக உமது பட்டயத்தை உமது அரையிலே கட்டிக்கொள்ளும். சத்தியத்தினிமித்தமும் நீதியுடன்கூடிய சாந்தத்தினிமித்தமும் உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்.” (சங்கீதம் 45:3, 4) “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய,” அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான ‘தேவனுடைய இஸ்ரவேலால்’ இயேசு, பூமியில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார். (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 12:17) இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்தச் சகோதரர்கள், 1922-ல் இருந்து, யெகோவாவின் வரவிருக்கிற நியாயத்தீர்ப்பு நடவடிக்கைகளைக் குறித்து தைரியமாய்ப் பிரசங்கித்திருக்கிறார்கள்.—ஏசாயா 61:1, 2; வெளிப்படுத்துதல் 8:7–9:21; 16:2-21.
6. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை ஆதரிப்பதற்கு தேசங்களிலிருந்து யார் வெளிவந்தனர், எவ்வாறு இவர்கள் அடையாளக் குறிப்பான வகையில், பெரிய யெகூவின் இரதத்தில் ஏறியிருக்கிறார்கள்?
6 அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தனியாக இருக்கவில்லை. யெகூவைச் சந்திக்க யோனதாப் வந்ததுபோல், பெரிய யெகூவான இயேசுவையும், உண்மையான வணக்கத்திற்குரிய அவர்களுடைய நிலைநிற்கையில் அவருடைய பூமிக்குரிய பிரதிநிதிகளையும், ஆதரிப்பதற்காக, தேசங்களிலிருந்து பலர் வெளிவந்திருக்கிறார்கள். (சகரியா 8:23) தம்முடைய “மற்ற செம்மறியாடுகள்” என்று இயேசுவால் அழைக்கப்பட்ட இவர்கள், 1932-ல் பூர்வ யோனதாபுக்கு தற்கால ஒப்புமையானவர்களாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, தற்கால யெகூவின் ‘இரதத்திற்குள் ஏறிக்கொள்ளும்படி’ அழைக்கப்பட்டனர். (யோவான் 10:16) எவ்வாறு? ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு,’ ‘இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சி’ பகரும் ஊழியத்தில், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களோடு பங்குகொள்வதன் மூலமேயாகும். தற்காலங்களில் இது, இயேசு அரசராக, அவருடைய அதிகாரத்தின்கீழுள்ள, கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதை உள்ளடக்குகிறது. (மாற்கு 13:10) 1935-ல் இந்த “யோனதாபுகள்,” வெளிப்படுத்துதல் 7:9-17-ல் (தி.மொ.) குறிப்பிட்டுள்ள ‘திரள் கூட்டத்தாரென’ அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர்.
7. இயேசுவின் இருதயத்துடன் தங்கள் ‘இருதயம் செம்மையாயிருக்கிறது’ என இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு காட்டியிருக்கின்றனர்?
7 1930-ன் பத்தாண்டுகளிலிருந்து, இந்தத் திரள் கூட்டத்தாரும் அபிஷேகஞ்செய்யப்பட்ட அவர்களுடைய சகோதரரும், உண்மையான வணக்கத்தைத் தாங்கள் ஆதரிப்பதை தைரியத்துடன் நிரூபித்திருக்கின்றனர். கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், தூர கிழக்கிலும், ஆப்பிரிக்காவிலும், தங்கள் விசுவாசத்தின் காரணமாக பலர் இறந்திருக்கின்றனர். (லூக்கா 9:23, 24) மற்ற நாடுகளில், அவர்கள் சிறைப்படுத்தப்பட்டும், கலகக்கூட்டங்களால் தாக்கப்பட்டும், அல்லது மற்ற வழிகளில் துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:12) எத்தகைய விசுவாச பதிவை அவர்கள் உண்டாக்கியிருக்கின்றனர்! என்ன நேரிட்டாலும் பொருட்படுத்தாமல், கடவுளைச் சேவிப்பதற்கு அவர்கள் இன்னும் தீர்மானமாய் இருக்கிறார்கள் என்று 1997-ன் ஊழிய ஆண்டு அறிக்கை காட்டுகிறது. இயேசுவின் இருதயத்தோடு, அவர்களுடைய ‘இருதயம் இன்னும் செம்மையாயிருக்கிறது.’ 1997-ன் போது இது மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. அப்போது 55,99,931 ராஜ்ய பிரஸ்தாபிகள்—கிட்டத்தட்ட அனைவரும் ‘யோனதாப்புகள்’—இயேசுவுக்குச் சாட்சி பகரும் ஊழியத்தில் மொத்தம் 117,97,35,841 மணிநேரங்கள் செலவிட்டனர்.
ஆர்வ வைராக்கியத்துடன் இப்போதுவரையிலும் பிரசங்கிக்கின்றனர்
8. உண்மை வணக்கத்திற்கான தங்கள் ஆர்வ வைராக்கியத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு காட்டுகிறார்கள்?
8 யெகூ தன் இரதத்தை அதிவேகமாய் ஓட்டுபவராகப் பெயர்பெற்றிருந்தார்—தன்னுடைய வேலையை நிறைவேற்றுவதற்கான அவருடைய வைராக்கியத்தின் ஓர் அத்தாட்சி. (2 இராஜாக்கள் 9:20) பக்திவைராக்கியத்தால் ‘பட்சிக்கப்பட்டதாக’ பெரிய யெகூவாகிய இயேசு, விவரிக்கப்படுகிறார். (சங்கீதம் 69:9) அப்படியானால், இன்று உண்மையான கிறிஸ்தவர்கள், தங்கள் ஆர்வ வைராக்கியத்திற்குப் பெயர்பெற்றவர்களாக இருப்பது ஆச்சரியமில்லை. சபைக்குள்ளும், பொதுமக்களுக்கும், அவர்கள், ‘வார்த்தையைப் பிரசங்கிக்கிறார்கள். . . . ஆதரவான காலத்திலும் தொந்தரவான காலத்திலும் அவசரமாய்’ ஈடுபடுகிறார்கள். (2 தீமோத்தேயு 4:2, NW) எத்தனை பேரால் முடியுமோ அத்தனைபேரும் துணைப் பயனியர் சேவையில் பங்குகொள்ளும்படி நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த ஒரு கட்டுரை 1997-ன் தொடக்கத்தில் ஊக்கமூட்டியது. அதன் பின்பு முக்கியமாய் அவர்களுடைய ஆர்வ வைராக்கியம் வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் துணைப் பயனியர் எண்ணிக்கைக்குரிய ஓர் இலக்கு குறிக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? அபாரமாக இருந்தது! கிளை அலுவலகங்கள் பலவற்றில் பயனியர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டிவிட்டது. ஈக்வடாரில் வைத்த இலக்கு 4,000, ஆனால் மார்ச்சில் 6,936 துணைப் பயனியர்கள் அறிக்கை செய்தனர். அந்த மூன்று மாதங்களின்போது, ஜப்பான் மொத்தம் 1,04,215 பேர் என அறிக்கை செய்தது. ஜாம்பியாவில், குறிக்கப்பட்ட இலக்கு 6,000, ஆனால் அறிக்கை செய்த துணைப் பயனியர் எண்ணிக்கை, மார்ச்சில் 6,414; ஏப்ரலில் 6,532; மே மாதத்தில் 7,695. உலகமுழுவதும், துணைப் பயனியர்களும் ஒழுங்கான பயனியர்களும் சேர்ந்து உச்ச எண்ணிக்கை 11,10,251; 1996-ஐ விட 34.2 சதவீத அதிகரிப்பு!
9. ஆட்களுக்கு நற்செய்தியைச் சொல்வதற்கு, வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தோடுகூட, வேறு என்ன வழிகளிலும் யெகோவாவின் சாட்சிகள் அவர்களைக் காண்கிறார்கள்?
9 எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல் பகிரங்கமாகவும் வீடுவீடாகவும் உங்களுக்கு உபதேசித்து அறிவித்தேன்.” (அப்போஸ்தலர் 20:20, தி.மொ.) இன்று யெகோவாவின் சாட்சிகள், பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி, வீடுவீடாக நற்செய்தியை ஆர்வ வைராக்கியத்துடன் பிரசங்கிக்கிறார்கள். எனினும், ஆட்களை அவர்களுடைய வீடுகளில் காண்பது ஒருவேளை எளிதாக இராது. ஆகையால் ஆட்களை, அவர்களுடைய வேலை செய்யும் இடங்களில், வீதிகளில், கடற்கரைகளில், பொது பூங்காக்களில்—ஆட்கள் காணப்படுகிற இடங்களில் எல்லாம்—அணுகி பேசும்படி, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் ஊக்கப்படுத்துகின்றனர். (மத்தேயு 24:45-47, NW) இதன் பலன்கள் மிகச் சிறந்தவையாக இருந்திருக்கின்றன.
10, 11. ஆட்களை பொதுவாக வீட்டில் காணமுடியாத இரண்டு நாடுகளில், அக்கறையுள்ளோரைக் கண்டுபிடிப்பதற்கு பிரஸ்தாபிகள் எவ்வாறு சிறந்த முன்முயற்சி எடுத்திருக்கின்றனர்?
10 டென்மார்க்கிலுள்ள கோபன்ஹாகனில், ரயில் நிலையங்களுக்கு வெளியிலுள்ள வீதிகளில் ஒரு சிறிய தொகுதியான பிரஸ்தாபிகள் சாட்சி பகர்ந்து வந்தனர். ஜனவரியிலிருந்து ஜூன் வரையாக, 4,733 பத்திரிகைகளை அளித்தனர், நல்ல உரையாடல்கள் கிடைத்தன, பல மறு சந்திப்புகளைச் செய்தனர். அந்த நாட்டிலுள்ள பிரஸ்தாபிகள் பலர், வியாபார பகுதிகளில் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஒரு நகரத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தை கூடுகிறது, அதற்கு ஆயிரக்கணக்கான ஆட்கள் வெளியிலிருந்து வருகின்றனர். ஆகையால் ஒழுங்கான சந்தை சாட்சிபகருவதற்கு சபை ஏற்பாடு செய்திருக்கிறது. ஒரு பகுதியில், பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கியமாய்ப் பொருத்தமாயிருக்கிற பிரசுரங்கள் அடங்கிய தகவல் கட்டுகளுடன் பள்ளிகள் சந்திக்கப்படுகின்றன.
11 ஹவாயிலும், வீட்டில் காண முடியாதவர்களை எட்டும்படி முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பொது இடங்கள் (வீதிகள், பூங்காக்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பஸ் நிறுத்தங்கள்), தொழில்பேட்டை, கடை பகுதிகள், விமான நிலையங்கள், டெலிபோனில் சாட்சி பகர்தல், பொதுவாகனங்கள் (பஸ்களில் பிரசங்கித்தல்), கல்லூரியை சுற்றிலுமுள்ள இடங்கள் ஆகியவை விசேஷ பிராந்தியங்களில் அடங்குகின்றன. இத்தகைய பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் ஊழியம் செய்ய, சரியான எண்ணிக்கையில் சாட்சிகளை நியமிக்கவும், அவ்வாறு நியமிக்கப்படுவோர் சரியானபடி பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்படியும் சபை நிச்சயப்படுத்திக்கொள்ளும். இவற்றைப்போன்ற நல்ல ஒழுங்கமைந்த முயற்சிகளை, பல நாடுகள் அறிக்கை செய்கின்றன. இதன் பலனாக, வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் ஒருபோதும் கண்டிருக்க முடியாத அக்கறையுள்ள ஆட்கள் சந்திக்கப்படுகின்றனர்.
உறுதியாக நிலைநிற்றல்
12, 13. (அ) 1997-ன் போது, யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக சாத்தான் என்ன தந்திரமான சூழ்ச்சியைப் பயன்படுத்தினான்? (ஆ) ஒரு நாட்டில் எவ்வாறு பொய்ப் பிரச்சாரம் எதிர்மாறாக நன்மையில் முடிவடைந்தது?
12 1997-ல் பல நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள், கொடிய தீய பிரச்சாரத்திற்கு ஆளாகியிருந்தனர். அவர்களுக்கு விரோதமாய்ச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடன், இது செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் பயந்து பின்வாங்காமல் உறுதியாக நின்றனர்! (சங்கீதம் 112:7, 8) சங்கீதக்காரனின் இந்த ஜெபத்தை அவர்கள் நினைவுபடுத்திக்கொண்டனர்: “அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.” (சங்கீதம் 119:69) இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தபடி, உண்மையான கிறிஸ்தவர்கள் பகைக்கப்படுவதன் ஒரு அத்தாட்சியாக மாத்திரமே அத்தகைய பொய்ப் பிரச்சாரம் இருக்கிறது. (மத்தேயு 24:9) சிலசமயங்களில் அது அவற்றிற்குக் காரணமானவர்களையே திருப்பித் தாக்கியிருக்கிறது. பெல்ஜியத்தில், பிரசித்திப்பெற்ற அன்றாட செய்தித்தாள் ஒன்றில், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இழித்துரைக்கும் ஒரு கட்டுரையை ஒரு மனிதர் வாசித்தார். அந்த அவதூறான குறிப்புரைகளால் திடுக்கிட்டவராய், அதைப் பின்தொடர்ந்த ஞாயிற்றுக் கிழமையின்போது ராஜ்ய மன்றத்தில் ஒரு கூட்டத்திற்கு வந்தார். சாட்சிகளுடன் பைபிள் படிப்பதற்கு ஏற்பாடு செய்து, படிப்படியாக விரைவில் முன்னேறினார். முன்னால், இந்த மனிதர், சட்டவிரோத கும்பல் ஒன்றில் இருந்தார். அவர் தன் வாழ்க்கையைச் சுத்தப்படுத்திக்கொள்ளும்படி அவருடைய பைபிள் படிப்பு அவருக்கு உதவிசெய்தது. அவரைச் சுற்றியிருந்த ஜனங்கள் அதைக் கவனித்தனர். இழித்துரைத்த அந்தக் கட்டுரையை எழுதினவர், நிச்சயமாகவே இத்தகைய நற்பலனை மனதில் வைத்திருக்கவில்லை!
13 பெல்ஜியத்தில் இருக்கும் நேர்மை இருதயமுள்ள ஆட்கள் சிலர், அந்த வஞ்சனையான பிரச்சாரத்திற்கு எதிராக வெளிப்படையாய்ப் பேசியிருக்கின்றனர். முன்னாள் பிரதம மந்திரி அவர்களில் ஒருவராக இருந்தார். யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றி இருந்தவற்றை மிகவும் மெச்சி போற்றுதலை தெரிவித்தார். ஒரு எம்.எல்.ஏ. அதிகாரி இவ்வாறு எழுதினார்: “சில சந்தர்ப்பங்களில் பரவச் செய்யும் இழிவானக் கூற்றுகளுக்கு எதிர்மாறாக [யெகோவாவின் சாட்சிகள்] அரசாங்க ஸ்தாபனங்களுக்கு சற்றேனும் ஆபத்தாக இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறதில்லை. அவர்கள், சமாதானத்தை நாடுவோரும், மனச்சாட்சிக்குப் பயந்து வேலைசெய்வோரும், அதிகாரிகளிடமாக மரியாதையுள்ளோருமான பிரஜைகளாக இருக்கிறார்கள்.” அப்போஸ்தலன் பேதுருவின் இவ்வார்த்தைகள் நிச்சயமாகவே ஞானமானவை: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 2:12.
குறிப்பிடத்தக்க சிறப்பான ஒரு நினைவு ஆசரிப்பு
14. 1997-ல் நினைவு ஆசரிப்பைப் பற்றிய ஊக்கமூட்டும் அறிக்கைகளில் சில யாவை?
14 இயேசுவைக் குறித்து சாட்சி பகர்வோர், அவருடைய மரண நினைவு ஆசரிப்பை அந்த வருடத்திலேயே மிக முக்கிய நாளாகக் கருத வேண்டியது தகுதியானதே. 1997-ன் மார்ச் 23-ல் இந்தச் சம்பவத்தை ஆசரிப்பதற்கு, 1,43,22,226 பேர் வந்தனர். அது, 1996-ஐ விட 14,00,000-க்கும் மேலாகும். (லூக்கா 2:14-20) பல நாடுகளில், நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் எண்ணிக்கை, ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமாய் இருந்து, எதிர்கால அதிகரிப்புக்கான சிறந்த வாய்ப்புகள் இருப்பதைத் தெரிவித்தது. உதாரணமாக, ஹைட்டியில், 1997-ன் உச்ச எண்ணிக்கை 10,621 பிரஸ்தாபிகள், 67,259 பேர் நினைவு ஆசரிப்புக்கு வந்தனர். பக்கங்கள் 18-லிருந்து 21 வரையில் உள்ள வருடாந்தர அறிக்கையை நீங்கள் கவனித்து, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட, இவற்றைப்போன்ற உயர்ந்தளவான வருகை எண்ணிக்கை வேறு எத்தனை நாடுகளில் இருந்தன என்பதைக் காணலாம்.
15. சில நாடுகளில் நினைவு ஆசரிப்பைக் கொண்டாடுவதற்கு, வினைமையான பிரச்சினைகளை நம் சகோதரர் எவ்வாறு சமாளித்திருக்கின்றனர்?
15 நினைவு ஆசரிப்புக்கு ஆஜரானது சிலருக்கு எளிதாக இல்லை. அல்பேனியாவில், உள்நாட்டு கலகத்தின் காரணமாக, மாலை 7 மணிக்கு அப்பால் ஊரடங்கு உத்தரவு இருந்தது. நாடு முழுவதிலும் 115 சிறிய தொகுதிகளில், மாலை 5:45 மணிக்கு நினைவு ஆசரிப்பு தொடங்கினது. மாலை 6:08-க்கு சூரியன் அஸ்தமனமாகி நிசான் 14-ன் தொடக்கத்தைக் குறித்தது. மாலை ஏறக்குறைய 6:15-க்கு சின்னங்கள் சுற்றி அனுப்பப்பட்டன. பெரும்பான்மையான தொகுதிகளில் மாலை 6:30-க்கு முடிவு ஜெபம் செய்யப்பட்டது. ஆஜராகியிருந்தவர்கள், ஊரடங்கு உத்தரவு நேரத்திற்கு முன்பாக வீடுசேர விரைந்தனர். இருப்பினும், பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கையான 1,090 பேரோடு ஒப்பிட, நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்கள் 3,154 ஆக இருந்தார்கள். ஆப்பிரிக்க நாடு ஒன்றில், சமுதாய கலகத்தினால், ராஜ்ய மன்றத்துக்குச் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது; ஆகையால், சிறு சிறு தொகுதிகளில் ஆசரிப்புக்கு ஏற்பாடு செய்வதற்காக இரண்டு மூப்பர்கள், மூன்றாவது மூப்பரின் வீட்டில் சந்திக்கும்படி தீர்மானித்தனர். அந்த வீட்டுக்குச் செல்ல, ஒரு பெரிய கால்வாயை இந்த இரண்டு மூப்பர்களும் கடக்க வேண்டியதாக இருந்தது. அந்தப் பகுதியில் சண்டை நடந்துகொண்டிருந்தது. பதுங்கி சுடுபவர்கள், அந்தக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்வோர் எவரையும் சுட்டனர். ஒரு மூப்பர் கடக்கும்போது, குண்டடிப்படாமல் தப்பிவிட்டார். இரண்டாவது மூப்பர் கடக்கும்போது, துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்ட உடனேயே தரையில் படுத்துக்கொண்டார்; குண்டுகள் விர்ரென்று அவர் தலைக்கு மேலாக பறந்து செல்ல, அவர் மெல்ல ஊர்ந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டார். அந்த மூப்பர்கூட்டம் வெற்றிகரமாய் நடத்தப்பட்டது, சபையின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.
“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் . . . பாஷைக்காரரிலுமிருந்து”
16. சிறு தொகுதிகள் பேசும் மொழிகளில் நற்செய்தியைப் பரவச் செய்யும்படி உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் எவ்வாறு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்?
16 இந்தத் திரள் கூட்டத்தார், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வருவார்கள் என அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (வெளிப்படுத்துதல் 7:9) ஆகையால், பிரசுரங்கள்—பெரும் தொலைவில் ஒதுக்கமாயுள்ள கோத்திரங்களாலும் சிறு ஜனத் தொகுதிகளாலும் பேசப்படும் மொழிகள் உட்பட—மேலும் மேலும் அதிகமான மொழிகளில் கிடைக்கக்கூடும்படி செய்வதற்கு ஆளும் குழு ஏற்பாடு செய்கிறது. உதாரணமாக, மொஸாம்பிக்கில், சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற இந்தத் துண்டுப்பிரதி, கூடுதலான மேலும் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. நிகரகுவாவில், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேடு, மிஸ்கிட்டோ மொழியில்—இந்த மொழியில் உவாட்ச் டவர் சங்கத்தின் முதல் பிரசுரம்—கிடைக்கும்படி செய்யப்பட்டது. மிஸ்கிட்டோ இந்தியர்கள் பலர், தங்கள் சொந்த மொழியில் ஒரு பிரசுரம் இருப்பதைக் கண்டதன்பேரில், மகிழ்ச்சியுடன் இந்தச் சிற்றேட்டை ஏற்றனர். 1997-ல், கூடுதலான 25 மொழிகளில் பிரசுரங்களை பிரசுரிக்க சங்கம் அங்கீகாரம் அளித்தது; அதோடு 100 கோடிக்கும் அதிகமான பத்திரிகைகள் அச்சிடப்பட்டன.
17. கொரியாவின் எந்த மொழித் தொகுதி உதவி செய்யப்பட்டது, ஜனத்தொகையின் இந்தப் பகுதியாருக்கு வீடியோ டேப்புகள் எவ்வாறு பெருமளவில் உதவி செய்திருக்கின்றன?
17 கொரியாவில் மற்றொரு மொழித் தொகுதியினர் உதவி செய்யப்பட்டனர். 1997-ம் ஆண்டில் கொரிய சைகை மொழியில் முதன்முதலில் மாநாடு நடத்தப்பட்டது. கொரியாவில், மொத்தம் 543 பிரஸ்தாபிகள் அடங்கிய 15 சைகை மொழி சபைகள் உள்ளன, ஆனால், 1,174 பேர் மாநாட்டுக்கு ஆஜராயினர், 21 பேர் முழுக்காட்டப்பட்டனர். பேசப்படும் அல்லது எழுதப்படும் மொழியை எளிதில் புரிந்துகொள்ள முடியாத செவிடர்களுக்கு உதவி செய்ய, வீடியோடேப்பில், வெவ்வேறுபட்ட 13 சைகைமொழிகளில் பிரசுரங்கள் உண்டாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு செவிடர்கள், நற்செய்தியை ‘வாசிக்கும்படியும்,’ படிக்கும்படியும்கூட உதவிசெய்யப்பட்டு வருகின்றனர், அதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில், காதுகேளாத ஒருவர் முழுக்காட்டப்படும் நிலைக்குப் படிப்படியாய் முன்னேற முன்பெல்லாம் ஐந்து ஆண்டுகள் எடுத்தது. இப்போதோ, அமெரிக்க சைகை மொழியில் பல எண்ணிக்கையான வீடியோக்கள் கிடைப்பதால், காதுகேளாத சிலருக்கு அது ஏறக்குறைய ஒரே ஆண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
‘இரதத்தில் நிலைத்திருத்தல்’
18. யோனதாபைச் சந்தித்த பின்பு, யெகூ என்ன செய்வதில் ஈடுபட்டார்?
18 முன்பு பொ.ச.மு. 905-ல், யோனதாப் தன்னோடு வந்துசேர்ந்த பின்பு பொய்வணக்கத்தை அழிப்பதில் யெகூ ஈடுபட்டார். பாகால் வணக்கத்தார் எல்லாருக்கும் இந்த ஓர் அழைப்பை அவர் வெளியிட்டார்: “பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள்.” பின்பு, பாகால் வணக்கத்தாரில் ஒருவரும் விடப்படாதபடி நிச்சயப்படுத்திக்கொள்ள தேசம் முழுவதும் அனுப்பினார். அந்தப் பொய்த் தெய்வத்தின் பெரிய ஆலயத்துக்குள் ஜனக்கூட்டங்கள் வந்து நிறைந்தபோது, யெகோவாவின் வணக்கத்தார் ஒருவரும் அங்கிராதபடி நிச்சயப்படுத்திக்கொள்ளப்பட்டது. கடைசியாக, யெகூவும் அவருடைய சேனையும் பாகால் வணக்கத்தாரை வெட்டிப்போட்டார்கள். ‘இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.’—2 இராஜாக்கள் 10:20-28.
19. மனிதவர்க்கத்திற்கு சீக்கிரத்தில் சம்பவிக்கவிருப்பதைக் கவனிக்கையில், என்ன மனப்பான்மையை நாம் காண்பிக்கவேண்டும், எந்த வேலையில் நாம் தளரா ஊக்கத்துடன் ஈடுபடவேண்டும்?
19 இன்று, பொய்மதம் முழுவதற்கும் கடைசி ஆக்கினைத் தீர்ப்பு வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிறது. தேவதூதரின் வழிநடத்துதலின்கீழ் கிறிஸ்தவர்கள், நற்செய்தியை மனிதவர்க்கம் முழுவதற்கும் அறிவித்து, கடவுளுக்குப் பயப்படும்படியும் பொய்மதத்திலிருந்து தங்களை விலக்கிக்கொள்ளும்படியும் ஊக்கப்படுத்துகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6-8; 18:2, 4) மனத்தாழ்மையுள்ளவர்கள், சிங்காசனத்தில் ஏற்றப்பட்ட யெகோவாவின் அரசராகிய, இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய ராஜ்யத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்தும்படி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:10) கிளர்ச்சியூட்டும் இந்தக் காலத்தில், உண்மையான வணக்கத்தின் சார்பாக நாம் உறுதியாக நிலைநிற்கையில், நம்முடைய ஆர்வ வைராக்கியம் தணிவதற்கு நாம் இடம்கொடுக்கக்கூடாது.
20. 1998-ன் ஊழிய ஆண்டில் நீங்கள் என்ன செய்ய தீர்மானிப்பீர்கள்?
20 ஒரு சமயத்தில், அரசனாகிய தாவீது பெரும் நெருக்கடியின்கீழ் இருந்தபோது, அவர் இவ்வாறு ஜெபித்தார்: ‘என் இருதயம் ஸ்திரமாயிருக்கிறது; கடவுளே என் இருதயம் ஸ்திரமே, நான் பாடுவேன், துதித்துப் பாடுவேன். ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உமக்கு நன்றிசெலுத்துவேன்.’ (சங்கீதம் 57:7, 9, தி.மொ.) நாமும்கூட ஸ்திரமாய் இருப்போமாக. 1997-ன் ஊழிய ஆண்டின்போது, பல இக்கட்டுகள் இருந்தபோதிலும், துதியின் உரத்த ஆர்ப்பரிப்பு, யெகோவா தேவனுக்கு மகிமையுண்டாக ஏறெடுக்கப்பட்டது. அதைப்போன்ற, அதைவிடவும்கூட அதிக ஆர்ப்பரிப்பு, தற்போது நடப்பிலுள்ள ஊழிய ஆண்டில் கேட்கப்படுவதாக. நம்மை ஊக்கமிழக்கச் செய்ய அல்லது எதிர்க்க சாத்தான் என்ன முயற்சி செய்தாலும் இடங்கொடாமல், தொடர்ந்து துதிப்போமாக. இவ்வாறு, பெரிய யெகூவாகிய இயேசு கிறிஸ்துவின் இருதயத்தோடு நம் இருதயம் செம்மையாக நிலைத்திருக்கிறதென்று காண்பித்து, தேவாவியால் ஏவப்பட்ட இந்த அறிவுரைக்கு நம் முழு ஆத்துமாவோடும் பிரதிபலிப்போம்: “நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.”—சங்கீதம் 32:11.
நீங்கள் விளக்கம் சொல்ல முடியுமா?
◻ இஸ்ரவேலில் என்ன மாற்றங்கள் பொ.ச.மு. 905-ல் ஏற்பட்டன?
◻ தற்கால யெகூ யார், அவருடைய இருதயத்தோடு தங்கள் ‘இருதயம் செம்மையாக இருக்கிறது’ என்று ‘திரள் கூட்டத்தார்’ எவ்வாறு காண்பித்திருக்கின்றனர்?
◻ வருடாந்தர அறிக்கையிலுள்ள என்ன புள்ளிவிவரங்கள். 1997-ன் ஊழிய ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் காட்டின ஆர்வ வைராக்கியத்திற்கு விளக்கமளிக்கின்றன?
◻ 1998-ன் ஊழிய ஆண்டில் சாத்தான் நமக்கு விரோதமாக என்ன செய்தாலும் கவலையில்லாமல், நாம் என்ன மனப்பான்மையை காண்பிப்போம்?
[பக்கம் 18-21-ன் அட்டவணை]
உலகலாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய 1997 ஊழிய அறிக்கை
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
[பக்கம் 15-ன் படம்]
நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கை எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருப்பதை காட்டுகிறது
[பக்கம் 16-ன் படம்]
யெகூவை யோனதாப் ஆதரித்ததைப் போல், பெரிய யெகூ இயேசு கிறிஸ்துவையும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களையும் ‘திரள்கூட்டத்தார்’ ஆதரிக்கின்றனர்