நீங்கள் நம்பிக்கைவாதியா சந்தேகவாதியா?
அது மிகச் சிறந்த காலம், அது மிக மோசமான காலம், . . . அது நம்பிக்கை துளிர்விட்ட காலம், அது மனமுறிவால் முடங்கிப்போன காலம், எங்கள் முன்பு எல்லாமே இருந்தன, எங்கள் முன்பு ஒன்றுமே இல்லை.” சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய எ டேல் ஆஃப் டூ சிட்டீஸ் என்ற தலைசிறந்த இலக்கியப் படைப்பின் ஆரம்ப வார்த்தைகளே இவை; நடக்கும் சம்பவங்கள் எப்படி நம் சிந்தனையையும், உணர்வையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கலாம் என்பதை இவை திறம்பட வேறுபடுத்திக் காட்டுகின்றன.
பிரெஞ்சு புரட்சியின்போது அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்த லண்டனும் பாரீஸுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த இரண்டு நகரங்கள். இப்புரட்சியின்போது வெளியிடப்பட்ட மனித உரிமை பிரகடனம் 18-ம் நூற்றாண்டில் பிரான்ஸில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட குடிமக்களின், ‘நம்பிக்கையை’ உண்மையில் ‘துளிர்விடச்’ செய்தது. ஆனால், இப்புரட்சிக்கு முன்பிருந்த பழைய ஆட்சி முறையை (ancien régime) அல்லது கவிழ்க்கப்பட்ட அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு, அது சாவுக்கும் அழிவுக்கும் வழிநடத்திய “மனமுறிவால் முடங்கிப்போன கால[மாக]” இருந்தது.
நம்பிக்கைவாதமா (Optimism) சந்தேகவாதமா (pessimism)? நீங்கள் எந்தப் பக்கத்தில் இருந்தீர்கள் என்பதையே இது சார்ந்திருந்தது. இன்றும் அவ்வாறே இருக்கிறது.
சுயபரிசோதனைக்கான காலம்
நீங்கள் நம்பிக்கைவாதியா? வாழ்க்கையின் அனுகூலமான அம்சத்தைப் பார்க்கிறீர்களா, எப்போதும் நல்லதே நடக்குமென எதிர்பார்க்கிறீர்களா? அல்லது எதிலும் தீமையை காணும் மனோபாவமுள்ளவர்களா; எதிர்காலத்தைப் பற்றி எதிர்மறையான மனநிலையைக் கொண்டிருக்கிறீர்களா, அதாவது நல்லது விளையுமென நம்புகிறபோதிலும் மோசமானதுதான் நடக்குமென்று எதிர்பார்க்கிறீர்களா?
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க நாவலாசிரியர் ஜேம்ஸ் பிரான்ச் கெபல் ஒன்றுக்கொன்று முரண்படும் இந்த இரண்டு தத்துவங்களை இவ்வாறு சுருக்கியுரைத்தார்: “நம்பிக்கைவாதிகள் உள்ளதிலேயே மிகச்சிறந்த சமுதாயத்தில் வாழ்வதாக மார்தட்டிக்கொள்கின்றனர்; ஆனால், அதே சூழ்நிலைகளைக் கண்டு சந்தேகவாதிகள் பயப்படுகின்றனர்.” உங்களுக்கு இத்தகைய கருத்து நம்பிக்கையற்றதாக தோன்றினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள, இன்றைய உலகில் நிலவும் மூன்று அம்சங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் உள்ள காரணிகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய பிரதிபலிப்புகளை அலசிப் பார்த்தபிறகு, உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள், ‘நான் நம்பிக்கைவாதியா சந்தேகவாதியா?’
நிலையான சமாதானம்: உலகில், பதட்டம் நிலவுகிற எத்தனை இடங்களை உங்களால் சொல்லமுடியும்? அயர்லாந்து, முன்னாள் யுகோஸ்லாவியா, மத்திய கிழக்கு, புருண்டி, ருவாண்டா போன்ற இடங்கள் சட்டென்று மனதுக்கு வருகின்றன. இவ்விடங்களில் நடப்பவையும் மற்ற போராட்டங்களும் என்றாவது முடிவுக்கு வருமா? நிலையான, உலகளாவிய சமாதானத்தை உறுதியளிக்குமா? உலகம் சமாதானத்தை நோக்கி வெற்றி நடைபோடுகிறதா?
பொருளாதார ஸ்திரத்தன்மை: 1999-ம் ஆண்டுக்குள்ளாக பொருளாதார அடிப்படையில் ஒன்றுபடவேண்டும் என்ற நம்பிக்கையில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் பணவீக்கம், பொதுமக்களிடம் பத்திரக் கடன்பெறுதல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க கடும் முயற்சி எடுக்கின்றன. அநேக அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் ஊழல் பொருளாதார அமைப்பை அரித்தெடுக்கிறது; அங்கே பணவீக்கம் பெரும்பாலும் தாங்கமுடியாத சுமையை மக்கள்மீது சுமத்துகிறது; அதோடு இனப்பிரச்சினைகளும் மக்களை பிரிக்கின்றன. உலக பொருளாதார ஸ்திரத்தன்மை சாத்தியமா?
வேலையில்லா திண்டாட்டம்: 1997-ம் ஆண்டு தேசியத் தேர்தலின்போது, எல்லாருக்கும் வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை தங்களுடைய வாக்குறுதிப் பட்டியலில் முதன்மையாக வைக்கும்படி அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரிட்டிஷ் சர்ச்சுகளின் கூட்டமைப்பு துரிதப்படுத்தியது. ஆனால், உலகிலுள்ள கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் வேலையில்லா திண்டாட்டத்திலோ சரியான வேலையில்லாத நிலையிலோ அவதியுறுகையில் எல்லாருக்கும் வேலைவாய்ப்பு, நிலையான வேலைவாய்ப்பு, அதிலும் குறிப்பாக வாலிபருக்கு கிடைக்கும் என்பதெல்லாம் சாத்தியமா?
இத்தகைய சூழ்நிலையில் கெட்டதே நடக்குமென்று நினைப்பது எத்தனை எளிது! ஆனாலும் நம்பிக்கையூட்டுகிற அம்சமும் இருக்கிறது; நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதை கலந்தாராய நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 3-ன் படம்]
மபிரெஞ்சு புரட்சி
[படத்திற்கான நன்றி]
பிக்டோரியல் ஹிஸ்டரி ஆஃப் த உவர்ல்ட் என்ற புத்தகத்திலிருந்து