அவர்கள் ஏன் மன்னிப்பு கேட்கின்றனர்?
சர்ச்சுகள் தங்கள் தவறுகளுக்காக மனம்வருந்தி அவற்றை நீக்கி திருந்த வேண்டும் என்ற கருத்து புதிதான ஒன்றல்ல. பூர்வ சர்ச் உத்தமத்தன்மையுடன் இருப்பதாக காட்டிக்கொண்டது இடைக்காலத்தின்போது ஜனங்களுக்கு ஆச்சரியமளித்தது; அதுவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்படி அநேகரை வழிநடத்தியது என்று ரெலிஜோனி ஏ மீடீ (மதங்களும் கட்டுக்கதைகளும்) என்ற மத அகராதி சொல்கிறது.
1523-ல், மார்ட்டின் லூத்தர் ரோமிலிருந்து பிரிந்துசென்ற பிறகு, நூரெம்பர்க் கலந்தாய்வு மன்றத்துக்கு பின்வரும் செய்தியை அனுப்புவதன் மூலம் ஆறாம் போப் ஏட்ரியன் பிரிவினையை சரிப்படுத்த முயற்சி செய்தார்: “பல வருடங்களாக அருவருக்கத்தக்க காரியங்கள் போப்பின் அதிகாரப் பீடத்தில் குவிந்திருக்கின்றன . . . ஒருவேளை இந்த எல்லா பொல்லாப்பான காரியங்களும் ஆரம்பமான இடமாகிய போப்பின் அதிகாரத்திலிருக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளடங்கிய தொகுதியை முக்கியமாய் சீர்திருத்துவதற்கு நாம் மிகவும் ஊக்கமாய் செயல்படுவோம்.” இருப்பினும், அவ்வாறு ஒப்புக்கொண்டது, பிரிவினையை சரிப்படுத்துவதிலோ போப்பின் ஆதிக்கத்திலிருக்கும் சபைகள் அடங்கிய தொகுதியில் ஊழலை தடைசெய்வதிலோ வெற்றியடையவில்லை.
சர்வநாசத்தைக் குறித்த விஷயத்தில் சர்ச்சுகள் அமைதலாயிருப்பதாக சமீபத்தில் குறைகூறப்பட்டுள்ளது. போர்களில் பங்குகொள்வதிலிருந்து தங்கள் அங்கத்தினர்களை தடைசெய்வதில்லை என்றும்கூட அவை குற்றம்சாட்டப்பட்டுள்ளன. 1941-ல் இரண்டாம் உலகப்போர் தீவிரமாய் நடக்கையில், பிரிமோ மாட்சோலாரி என்ற பாதிரி இவ்வாறு கேட்டார்: “ஆபத்து குறைவான கோட்பாடுகளின் விஷயத்தில் சர்ச் செய்ததைப்போல, இன்றும் செய்துவருவதைப்போல, கத்தோலிக்க போதனைகள் சீர்குலைந்துபோகையில் ரோம் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?” எதைக்காட்டிலும் ஆபத்து குறைவான கோட்பாடுகள்? அச்சமயத்தில் நாகரிகங்களை அழித்துவந்த போரைத் தூண்டிய தேசப்பற்று கொள்கையைப் பற்றியே பாதிரி பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால் உண்மை என்னவெனில், சமீபகாலம் வரை, மதங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வது வழக்கத்துக்கு மாறான ஒன்றாக இருந்ததே தவிர சட்டமாக இருக்கவில்லை. 1832-ல் கத்தோலிக்க சர்ச்சை அதன் ‘முந்தைய நிலைக்கு’ கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்திய சிலருக்கு பதிலளிக்கும் வகையில் பதினாறாம் கிரகெரி இவ்வாறு சொன்னார்: “சர்ச் குறைபாடுகளுக்கு உட்பட்டிருப்பது போல் கருதி [சர்ச்சின்] பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் குறிப்பிட்ட விதத்தில் ‘மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டுவருவது, புதுப்பிப்பது’ என்பது தெளிவாகவே அர்த்தமற்றதும் தீங்கிழைப்பதுமாய் இருக்கிறது.” மிகத்தெளிவாக தெரியும் மறுக்கமுடியாத குறைபாடுகளைப் பற்றியென்ன? அவற்றை மூடிமறைப்பதற்காக பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்பட்டன. உதாரணமாக, சர்ச் பரிசுத்தமாயும் பாவமுள்ளதாயும் இருப்பதாக சில இறையியல் பேராசிரியர்கள் கருதுகின்றனர். சர்ச்சுதானே பரிசுத்தமானதாக—குறைபாடுகள் இல்லாமல் கடவுளால் பாதுகாக்கப்படுவதாக—சொல்லப்படுகிறது. இருப்பினும், அதன் அங்கத்தினர்கள் பாவமுள்ளவர்கள். ஆகையால், சர்ச்சின் பெயரில் அட்டூழியங்கள் செய்யப்படும்போது, சர்ச்சுதானே அதற்கு பொறுப்புள்ளதாக கருதக்கூடாது, ஆனால் சர்ச்சில் உள்ள தனிப்பட்ட நபர்களையே பொறுப்புள்ளவர்களாக கருத வேண்டும். அது நியாயமானதாய் தொனிக்கிறதா? அது, ரோமன் கத்தோலிக்க இறையியல் பேராசிரியர் ஹான்ஸ் க்யூங் என்பவருக்கு நியாயமானதாய் தொனிக்கவில்லை; அவர் எழுதினார்: “அபூரண சர்ச் அங்கத்தினர்களிலிருந்து தனித்து நிற்கும் பரிபூரணமான சர்ச் ஒன்று உள்ளது என்பது உண்மையல்ல.” அவர் விளக்கினார்: “பாவங்களே இல்லாத சர்ச் ஒன்றுகூட இல்லை.”
கிறிஸ்தவ பிரிவுகளின் ஒற்றுமையும் தார்மீக நிலைநிற்கையும்
சர்ச்சுகள் இப்போது மன்னிப்பு கேட்பதற்கு என்ன காரியங்கள் வழிநடத்தியிருக்கின்றன என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். வித்தியாசமான பிரிவுகளுக்கிடையே “கடந்த காலத்தில் பிரிவினைகள்” இருந்ததற்கான பொறுப்பை புராட்டஸ்டன்டுகளும் ஆர்த்தடாக்ஸுகளும் முதலில் ஒப்புக்கொண்டனர். 1927-ல் ஸ்விட்ஸர்லாந்து, லோசானில் நடைபெற்ற “விசுவாசமும் ஒழுங்கும்” என்ற அனைத்து கிறிஸ்தவ திருச்சபை பிரிவுகளும் கலந்துகொண்ட மாநாட்டில் அவர்கள் இதைச் செய்தனர். கடைசியில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் அவர்களைப் பின்பற்றியது. விசேஷமாக இரண்டாம் வத்திகன் a முதற்கொண்டு, கிறிஸ்தவமண்டலத்திற்குள்ளிருக்கும் பிரிவுகளுக்காக போப்புகள் உட்பட உயர் பதவியிலிருக்கும் குருமார்கள் தவறாமல் மன்னிப்பு கேட்பது அதிகரித்திருக்கிறது. என்ன நோக்கத்துக்காக? கிறிஸ்தவமண்டலத்தில் கூடுதலான ஒற்றுமையை அவர்கள் விரும்புகின்றனர் என்பது தெளிவாயிருக்கிறது. இரண்டாம் ஜான் பாலின் “‘மேயா குல்பாக்கள்’ திட்டத்தில் ஒரு சூழ்ச்சிமுறை உள்ளது, அதுவே கிறிஸ்தவ பிரிவுகளுக்கிடையே ஒற்றுமை” என்று கத்தோலிக்க சரித்திர ஆசிரியர் நிக்கோலினோ சாராலே குறிப்பிட்டார்.
இருப்பினும், கிறிஸ்தவ பிரிவுகளின் ஒற்றுமையைக் காட்டிலும் அதிகம் உட்பட்டுள்ளது. இன்று, கிறிஸ்தவமண்டலத்தின் மோசமான சரித்திரம் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. “இந்தச் சரித்திரம் அனைத்தையும் கத்தோலிக்கர் வெறுமனே அசட்டை செய்துவிட முடியாது” என்று இறையியல் பேராசிரியர் ஹான்ஸ் உர்ஸ் ஃபான் பால்ட்டாஸார் சொல்கிறார். “அவர் உறுப்பினராக இருக்கும் சர்ச், இந்நாட்களில் நாம் நிச்சயமாகவே அங்கீகரிக்க முடியாத காரியங்களை செய்திருக்கிறது அல்லது செய்ய அனுமதித்திருக்கிறது.” எனவே, போப், “சர்ச்சின் இருண்ட காலப்பகுதியின்போது நடந்த காரியங்களை விளக்கி . . . அதற்கு மன்னிப்பு கேட்பதற்கு” ஒரு கமிஷனை நியமித்திருக்கிறார். சுயவிமர்சனத்திற்கு உட்படுவதில் சர்ச்சுக்கு இருக்கும் விருப்பத்திற்கான மற்றொரு காரணம், அதன் தார்மீக நிலைநிற்கையை மீண்டும் அடைவதற்கான விருப்பமே என்பதாகத் தோன்றுகிறது.
அதை ஆமோதிக்கும் விதத்தில், சர்ச் மன்னிப்பு கேட்பதைக் குறித்து கருத்து தெரிவிக்கையில் சரித்திர ஆசிரியர் ஆல்பெர்ட்டோ மெலோனி இவ்வாறு எழுதுகிறார்: “உண்மையில், குற்றச்சாட்டிலிருந்து தற்காலிக விடுதலை பெற வேண்டும் என்றே சில சமயங்களில் [மன்னிப்பு] கேட்கப்படுகிறது.” ஆம், கத்தோலிக்க சர்ச், பொதுமக்களின் பார்வையில் அதன் நம்பகத்தன்மையை மறுபடியும் பெறுவதற்காக கடந்தகால பாவச் சுமையை ஒதுக்கித் தள்ளிவிட முயற்சிசெய்வதாக தோன்றுகிறது. இருப்பினும் உண்மையைச் சொன்னால், கடவுளோடு சமாதானம் செய்துகொள்வதைவிட உலகத்தோடு சமாதானம் செய்துகொள்வதிலேயே அது அதிக அக்கறையோடிருக்கிறது.
இப்படிப்பட்ட நடத்தை, இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலை நம் நினைவுக்கு கொண்டுவருகிறது. (1 சாமுவேல் 15:1-12) அவர் ஒரு பெரும் தவறைச் செய்திருந்தார். அது வெளிப்படையாய் தெரிந்தபோது, முதலில் குற்றத்தை நியாயப்படுத்தினார். கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாயிருந்த சாமுவேலிடம் தன் குற்றத்தை மழுப்ப சாக்குப்போக்கு சொன்னார். (1 சாமுவேல் 15:13-21) கடைசியில், ராஜா சாமுவேலிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று: “நான் யெகோவாவின் கட்டளையை . . . மீறிப் பாவஞ்செய்தேன்.” (1 சாமுவேல் 15:24, 25, தி.மொ.) ஆம், அவர் தன் தவறை ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் சாமுவேலிடம் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவர் மனதில் மிகவும் முக்கியமாய் இருந்தவற்றை வெளிப்படுத்திக் காட்டின: “நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்[ணும்].” (1 சாமுவேல் 15:30) கடவுளோடு ஒப்புரவாவதைவிட இஸ்ரவேலில் தன் நிலைநிற்கையைக் குறித்தே சவுல் அதிக கவலைப்பட்டார் என்பது தெளிவாய் தெரிகிறது. இந்த மனநிலை, சவுல் கடவுளிடமிருந்து மன்னிப்பை பெறுவதில் விளைவடையவில்லை. இதைப் போன்ற மனநிலை சர்ச்சுகள் கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதில் விளைவடையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
எல்லாரும் ஒப்புக்கொள்வதில்லை
சர்ச்சுகள் வெளிப்படையாய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை எல்லாரும் ஒப்புக்கொள்வதில்லை. உதாரணமாக, அடிமைத்தனத்துக்காக மன்னிப்பு கேட்பது அல்லது “முரண் கோட்பாட்டாளர்களான” ஹஸ், கால்வின் போன்றவர்களை மறுபடியும் சீரமைப்பது ஆகியவற்றைக் குறித்து தங்கள் போப் பேசுகையில் அநேக ரோமன் கத்தோலிக்கர் விசனப்படுகின்றனர். வத்திகனிலிருந்து வரும் தகவலின்படி, கத்தோலிக்க மதத்தின் கடந்த ஆயிரமாண்டுகால சரித்திரத்தைக் குறித்து “மனச்சாட்சியை பரிசோதித்து பார்க்கும்படி” கார்டினல்களுக்கு அனுப்பப்பட்ட ஆவணம், ஜூன் 1994-ல் போப் தலைமை தாங்கிய கூட்டத்துக்கு ஆஜரான கார்டினல்களால் குறைகூறப்பட்டது. அப்படியிருந்தாலும், அந்தக் கருத்தை போப் ஒரு சுற்றறிக்கையில் சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தபோது, இத்தாலிய கார்டினல் ஜாக்கோமோ பீஃபீ தான் வெளியிட்ட ஒரு கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தினார்: “சர்ச்சுக்கு பாவம் இல்லை.” இருப்பினும், அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “கடந்த நூற்றாண்டுகளில் நடந்த சர்ச் சம்பந்தமான தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பது . . . சர்ச்சைப் பற்றி கத்தோலிக்கருக்கும் பொதுமக்களுக்கும் அதிக சாதகமான எண்ணத்தை ஏற்படுத்தலாம்.”
“பாவங்களை அறிக்கையிடுவது, கத்தோலிக்க சர்ச்சுக்குள் அதிக சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றாக இருந்துவருகிறது” என்று வத்திகன் கருத்துரையாளர் லூயிஜி ஆக்காட்டாலி சொல்கிறார். “மிஷனரிகளின் தவறுகளை போப் ஒப்புக்கொள்கிறார் என்றால், நேர்மையான நோக்கத்துடன் அதைக் குறித்து கோபப்படும் மிஷனரிகளும் இருக்கின்றனர்.” கூடுதலாக, ஒரு ரோமன் கத்தோலிக்க பத்திரிகை ஆசிரியர் இவ்வாறு எழுதினார்: “சர்ச் சரித்திரத்தைக் குறித்து போப்புக்கு உண்மையிலேயே அப்படிப்பட்ட பயம் நிறைந்த கருத்து இருந்ததென்றால் இதே சர்ச்சை அவர் எப்படி இப்போது, ‘மனித உரிமைகளுக்கான’ அருஞ்செயல் வீரனாக, அடுத்த பிரகாசமான ஆயிரமாண்டை நோக்கி மனிதவர்க்கத்தை வழிநடத்தக்கூடிய ‘அன்னையாகவும் ஆசானாகவும்’ காண்பிக்கமுடியும் என்பது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது.”
ஒரு தவறான காரியத்தைச் செய்ததற்காக பிடிபட்டு கஷ்டத்துக்குள்ளாகி விடுவோம் என்பதால் மட்டுமே தூண்டுவிக்கப்பட்டு, வெறுமனே மனந்திரும்பியிருப்பது போல் காட்டிக்கொள்வதற்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது. அந்த விதமான மனந்திரும்புதல், அப்படி மனந்திரும்புபவரின் நடத்தையில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. (2 கொரிந்தியர் 7:8-11-ஐ ஒப்பிடுக.) கடவுளுடைய பார்வையில் மதிப்புடையதாயிருக்கும் மனந்திரும்புதல், “மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளோடு,” அதாவது, உண்மையாய் மனந்திரும்பியிருப்பதற்கான அத்தாட்சியோடு சேர்ந்து வருகிறது.—லூக்கா 3:8.
மனந்திரும்பி பாவங்களை அறிக்கையிடும் ஒரு நபர் தவறான செயல்களை விட்டுவிட வேண்டும், அவற்றை செய்வதை நிறுத்திவிட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 28:13) இது நடந்திருக்கிறதா? ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் மற்ற சர்ச்சுகளும் எல்லா தவறுகளையும் அறிக்கையிட்ட பிறகும்கூட, “கிறிஸ்தவர்கள்” பெருமளவில் வாழ்கிற மத்திய ஆப்பிரிக்காவிலும் கிழக்கத்திய ஐரோப்பாவிலும் ஏற்பட்ட சமீபத்திய உள்நாட்டு போர்களில் என்ன நடந்தது? சர்ச்சுகள் சமாதானத்திற்கான சக்தியாக செயல்பட்டனவா? எல்லா சர்ச் தலைவர்களுமே தங்கள் அங்கத்தினர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஒற்றுமையாய் பேசினார்களா? இல்லை, சில மத ஊழியர்களே இரக்கமின்றி கொலை செய்வதிலும்கூட பங்குகொண்டனர்!
தெய்வீக நியாயத்தீர்ப்பு
போப் திரும்பத் திரும்ப கூறும் மேயா குல்பாக்களைப் பற்றி பேசுகையில், கார்டினல் பீஃபீ வஞ்சப்புகழ்ச்சியாக இவ்வாறு கேட்டார்: “கடந்தகாலத்தில் செய்த பாவங்களுக்காக சர்வலோக நியாயத்தீர்ப்புக்கு நாம் அனைவரும் காத்திருப்பது மேலானதல்லவா?” மனிதவர்க்கத்தினர் அனைவரின் நியாயத்தீர்ப்பும் மிகவும் அண்மையில் இருக்கிறது. மத சரித்திரத்தின் இருண்ட காலப்பகுதியில் நடந்த அனைத்தையும் யெகோவா தேவன் நன்றாகவே அறிந்திருக்கிறார். வெகு சீக்கிரத்தில் அவர் குற்றவாளிகளிடம் கணக்குக் கேட்பார். (வெளிப்படுத்துதல் 18:4-8) இதற்கிடையில், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மன்னிப்பு கேட்கிற, இரத்தப்பழி, சகிப்புத்தன்மையற்று கொலை செய்தல், மற்ற குற்றச்செயல்கள் ஆகியவற்றால் கறைப்படுத்தப்படாத ஒரு வணக்கமுறையை கண்டுபிடிப்பது சாத்தியமா? சாத்தியமே.
நாம் அதை எப்படி கண்டுபிடிக்கலாம்? இயேசு கிறிஸ்து கூறிய விதியை பொருத்துவதன் மூலம்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” “கள்ளத் தீர்க்கதரிசிகள்” என்று இயேசு அழைத்தவர்களை மட்டுமல்ல, “நல்ல கனிகளைக்” கொடுத்தவர்களையும் அடையாளம் கண்டுகொள்ள, சில மதங்கள் மறந்துவிட விரும்பும் சரித்திரப் பதிவு நமக்கு உதவிசெய்கிறது. (மத்தேயு 7:15-20) இவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் நீங்களே அவர்களைக் கண்டுபிடிக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். இவ்வுலகில் செல்வாக்குள்ள ஸ்தானத்தை பாதுகாக்க நாடுவதற்குப் பதிலாக யார் இன்று கடவுளுடைய வார்த்தையை உண்மையிலேயே கடைப்பிடிக்க முயற்சி செய்கின்றனர் என்பதை பாருங்கள்.—அப்போஸ்தலர் 17:11.
[அடிக்குறிப்பு]
a ரோமில் 1962-1965 வரை நான்கு கூட்டத்தொடர்களாக நடைபெற்ற 21-வது கிறிஸ்தவ திருச்சபை பிரிவுகள் மாநாடு.
[பக்கம் 5-ன் படம்]
இதைப் போன்ற அட்டூழியங்களுக்காக சர்ச்சுகள் மன்னிப்பு கேட்கின்றன
[படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck