‘உண்மையான சர்ச்’ ஒன்று மட்டுமே உள்ளதா?
“கிறிஸ்து ஒருவரே, அதைப்போல கிறிஸ்துவின் சரீரம் ஒன்றே, கிறிஸ்துவின் மணவாட்டி ஒன்றே: அதுதான் ‘ஒரே கத்தோலிக்க, அப்போஸ்தல சர்ச்.’”—டோமினூஸ் ஏசுஸ்.
ரோமன் கத்தோலிக்க கார்டினலான யோஸெஃப் ராட்சிங்கர், ஓர் உண்மையான சர்ச் மட்டுமே இருக்க முடியும் என தனது சர்ச் போதித்ததை மேற்கண்டவாறு அறிவித்தார். அந்த சர்ச், “கிறிஸ்துவின் ஒரே சர்ச், அதாவது கத்தோலிக்க சர்ச்” என்று அவர் கூறினார்.
“முழுமையான கருத்தில் சர்ச்சுகளே அல்ல”
டோமினூஸ் ஏசுஸ் என்ற ஆவணம் மற்ற மதங்களைப் பற்றி “தாழ்வாகவோ, தரக்குறைவாகவோ எதுவும் குறிப்பிடவில்லை” என இரண்டாம் போப் ஜான் பால் வலியுறுத்தி கூறியபோதிலும் புராட்டஸ்டன்ட் சர்ச் தலைவர்கள் அதைக் கடுமையாக விமர்சித்தனர். உதாரணமாக, “இரண்டாம் வத்திகன் குழு அறிமுகப்படுத்திய பரந்த மனப்பான்மையை கண்டு நடுங்கிப்போன . . . ரோமன் கத்தோலிக்க சர்ச்சிலுள்ள செல்வாக்கு மிக்க பிரிவு” இந்த ஆவணத்தை தயாரித்தது என வட அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்டில் ஜூன் 2001-ல் நடந்த பிரிஸ்பிடேரியன் பொதுக் கூட்டத்தில் ஒரு ஊழியர் கூறினார்.
இந்த ஆவணம், “இரண்டாம் வத்திகன் குழுவிற்கு முன் நிலவிய மனப்பான்மையையே திரும்ப கொண்டுவந்தால் அது [தனக்கு] மிகுந்த ஏமாற்றம்” தரும் என சர்ச் ஆஃப் அயர்லாந்தின் தலைமை பிஷப்பான ராபன் ஈம்ஸ் கூறினார். கத்தோலிக்க கோட்பாடுகள் சிலவற்றை ஒதுக்கித்தள்ளும் சர்ச்சுகள் “முழுமையான கருத்தில் சர்ச்சுகளே அல்ல” என வத்திகன் உரிமைப்பாராட்டுவதைப் பற்றி குறிப்பிடுகையில், “என்னைப் பொருத்தவரை அது அவமதிக்கும் கூற்றாகும்” என்றார் ஈம்ஸ்.
டோமினூஸ் ஏசுஸ் தயாரிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? மதம் தனி நபரின் விருப்பம் என்ற கோட்பாட்டைக் கண்டு ரோமன் கத்தோலிக்க சபைகளின் தொகுதி பயந்து போனது போல தோன்றுகிறது. “எம்மதமும் சம்மதம், அதாவது அனைத்து மதங்களும் நல்லவையே என்ற பன்மைவாத கோட்பாடு வளர்ந்து வந்தது . . . கார்டினல் ராட்சிங்கரை அதிகமாய் அலைக்கழித்தது” என தி ஐரிஷ் டைம்ஸ் கூறுகிறது. இதுவே, ஓர் உண்மையான சர்ச்சைப் பற்றி பேச அவரை தூண்டியிருக்கலாம்.
நீங்கள் எந்த சர்ச்சை சேர்ந்தவர் என்பது முக்கியமா?
ஓர் உண்மையான சர்ச் மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்தைவிட, ‘மதம் தனி நபரின் விருப்பம்’ அல்லது ‘எம்மதமும் சம்மதம்’ என்பதே சிலருக்கு அதிக நியாயமானதாகவும் ஏற்கத்தகுந்ததாகவும் தோன்றக்கூடும். அவர்களைப் பொறுத்த வரை மதம் என்பது தனி நபரின் விருப்பமாகவே இருக்க வேண்டும். ‘மொத்தத்தில், நீங்கள் எந்தச் சர்ச்சை சேர்ந்தவர் என்பது முக்கியமே இல்லை’ என அவர்கள் கூறுகிறார்கள்.
அதுவே அதிக பரந்த மனப்பான்மை போல தோன்றலாம்; என்றாலும், அதன் பின்விளைவுகளில் ஒன்றாகத்தான் மதம் நூற்றுக்கணக்கான பிரிவுகளாக பிளவுபட்டிருக்கிறது. ‘இத்தனை அநேக மதங்கள் இருப்பது தனி நபரின் சுதந்திர சிந்தையையே சுட்டிக்காட்டுகிறது’ என அநேகர் நினைக்கிறார்கள். என்றபோதிலும், இத்தகைய “மத சகிப்புத்தன்மை” உண்மையில் “மத புறக்கணிப்பு” என்றே எழுத்தாளர் ஸ்டீவ் புரூஸ் கூறுகிறார்.—பிளவுபட்ட வீடு: புராட்டஸ்டன்ட் மதம், பிளவு, மதசார்பின்மை. (ஆங்கிலம்)
அப்படியென்றால், எந்தக் கருத்து சரியானது? ஓர் உண்மையான சர்ச் மட்டுமே உள்ளதா? அது ரோமன் கத்தோலிக்க சர்ச் தானா? மற்ற சர்ச்சுகளையும் கடவுள் அதேபோல ஏற்றுக்கொள்வாரா? இந்தக் கேள்விகள், நம் சிருஷ்டிகரோடு நமக்குள்ள உறவுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இதைப் பற்றி அவருடைய கருத்தை அறிந்துகொள்வது மிக முக்கியம். அதை எப்படி அறிவது? கடவுளால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளை ஆராய்ந்தால் அறிந்துகொள்ளலாம். (அப்போஸ்தலர் 17:11; 2 தீமோத்தேயு 3:16, 17) ஒரே உண்மையான சர்ச் பற்றி அது என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.