உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 6/15 பக். 6-8
  • பூமி—ஏன் படைக்கப்பட்டது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி—ஏன் படைக்கப்பட்டது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் சொல்வது என்ன?
  • கடவுளுடைய நோக்கம் தடைப்பட்டது, ஆனால் மாறவில்லை
  • வாழ்க்கைக்கு மகத்தானஒரு நோக்கமுண்டு
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
  • கடவுளுடைய நோக்கம் என்ன?
    விழித்தெழு!—1999
  • பூமியே ஒரு பூங்காவனம் வெகு விரைவில்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 6/15 பக். 6-8

பூமி—ஏன் படைக்கப்பட்டது?

நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது: நமது அழகிய பூமியைப் படைத்த புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர், அதற்கும் அதில் வாழும் மனிதருக்கும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறாரா? அதற்குத் திருப்தியான பதிலைப் பெறுவதன் மூலம் நம் கிரகத்தின் எதிர்காலத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பிரபஞ்சத்தையும் நமது பூமியையும் முழுமையாய் ஆராய்ந்திருக்கும் அநேக அறிவியலாளர்கள், சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான, அதாவது இவை அனைத்தையும் கடவுள் படைத்திருக்கிறார் என்பதற்கான அத்தாட்சிகளைக் கண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

கடவுளின் மனம் என்ற ஆங்கில புத்தகத்தில் பேராசிரியர் பால் டேவிஸ் எழுதுவதாவது: “நிலையான, ஒழுங்கமைக்கப்பட்ட, சிக்கலான அமைப்புகளைக் கொண்ட பிரபஞ்சம் சீராகவும் முரண்பாடில்லாமலும் இயங்கவேண்டுமானால், மிகப் பிரத்தியேகமான சட்டங்களும் நிலைமைகளும் தேவை.”

வான்கோளவியலாளர்களும் (astrophysicists) மற்றவர்களும் கவனித்திருக்கும் அநேக “தற்செயல் நிகழ்ச்சிகளை” பற்றி கலந்தாலோசித்த பிறகு பேராசிரியர் டேவிஸ் மேலும் சொல்கிறார்: “இந்தத் தற்செயல் நிகழ்ச்சிகள் அனைத்தும், உயிரானது இயற்பியல் சட்டங்கள்மீது பெருமளவு சார்ந்திருப்பதற்கான அத்தாட்சியை, கவனத்தைக் கவரும் விதத்தில் அளிக்கின்றன. மேலும், வெவ்வேறு துகள் நிறை (particle mass), விசை செறிவு (force strengths) போன்றவற்றிற்கு இயற்கை தேர்ந்தெடுத்துள்ள குறிப்பிட்ட மதிப்பீடுகளில் (values) எதிர்பாரா மாற்றங்கள் நிகழ்ந்தாலும் உயிருக்கு பெருமளவு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. . . . இதைப் புரிந்துகொள்வதற்கு பின்வரும் உதாரணமே போதும். நாம் கடவுள் ஸ்தானத்திலிருந்து, சில ரெகுலேட்டர்களை ட்யூன் செய்வதன் மூலம் இந்த மதிப்பீடுகளைத் தீர்மானிப்பதாக வைத்துக்கொள்ளலாம். என்ன நடக்கும் தெரியுமா, நாம் எந்த விதத்தில் ரெகுலேட்டர்களைத் திருப்பி ட்யூன் செய்தாலும் இப்பிரபஞ்சம் குடியிருப்பதற்கு லாயக்கற்றதாகவே இருக்கும். பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழவேண்டுமானால், வித்தியாசமான ரெகுலேட்டர்களை வெகு துல்லியமாக அட்ஜஸ்ட் செய்யவேண்டும்போல் தோன்றுகிறது. . . . இயற்கையில் துளி மாற்றம் செய்தாலும்கூட இப்பிரபஞ்சம் பிரபஞ்சமாகவே இருக்காது என்பது நிச்சயமாகவே புறக்கணிக்க முடியாத உண்மை.”

இதிலிருந்து அநேகர் எதைப் புரிந்துகொள்கிறார்கள் என்றால், பூமி உட்பட இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் நோக்கமுள்ள சிருஷ்டிகர் படைத்திருக்கிறார் என்பதையே. அது உண்மையென்றால் கடவுள் ஏன்தான் பூமியைப் படைத்தார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். பூமிக்குரிய அவரது நோக்கம் என்ன என்பதையும் முடிந்தால் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு விசித்திர முரண்பாடு இருப்பதாய் தோன்றுகிறது. உலகெங்கும் நாத்திகம் பிரபலமாக இருந்தாலும், ஆச்சரியத்தக்க எண்ணிக்கையானோர், புத்திக்கூர்மையுள்ள ஒரு சிருஷ்டிகர் இருப்பதை இன்னமும் நம்புகின்றனர். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் பெரும்பாலானவை, நம் பிரபஞ்சத்தை உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள கடவுளைப் பற்றி பெயரளவில் மட்டுமே பேசுகின்றன. ஆனால் இவற்றில் எந்த மதமும், கடவுளுடைய நோக்கத்தில் பூமியின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடும் உறுதியோடும் பேசுவது கிடையாது.

பைபிள் சொல்வது என்ன?

சிருஷ்டிகரிடமிருந்து வந்திருப்பதாய் பரவலாக நம்பப்படும் புத்தகமாகிய பைபிளை ஆராய்ந்து பார்ப்பது நியாயமாய் இருக்குமல்லவா? பூமியின் எதிர்காலத்தைக் குறித்து அது சொல்லும் மிக எளிமையான, மிகத் தெளிவான கூற்றுகளில் ஒன்று பிரசங்கி 1:4-ல் காணப்படுகிறது. அங்கு நாம் வாசிப்பதாவது: “ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.” யெகோவா தேவன் ஏன் பூமியைப் படைத்தார் என்பதை பைபிள் வெளிப்படையாய் சொல்கிறது. அவர் பூமியை இப்பிரபஞ்சத்தில் சரியான இடத்தில், உயிரினங்களைக் காக்கும்படி சூரியனிலிருந்து சரியான தூரத்தில் சிருஷ்டித்தார் என்றும் அது காட்டுகிறது. பூர்வகால தீர்க்கதரிசியாகிய ஏசாயாவை பின்வருமாறு எழுதும்படி சர்வ வல்லமையுள்ள தேவன் ஏவினார்: “வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.”—ஏசாயா 45:18.

ஆனால் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் அழிப்பதற்காக மனிதன் உண்டுபண்ணுபவற்றைப் பற்றியென்ன? கடவுள் தமது ஒப்பிடமுடியாத ஞானத்தினால், இக்கிரகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் மனிதன் முழுமையாய் அழிப்பதற்கு முன்பாக தலையிடப்போவதாய் அறிவிக்கிறார். பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையூட்டும் வாக்குறுதியைக் கவனியுங்கள்: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 11:18.

விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்த விண்வெளி வீரர் ஒருவர் இதை விண்வெளியின் ரத்தினமென அழைத்தார். அப்படிப்பட்ட இந்தப் பூமியை முதன்முதலில் படைத்தது எதற்காக என யெகோவா நமக்கு வெளிப்படுத்துகிறார். அது ஒரு பூகோள பரதீஸாக வேண்டும், அதில் ஆண்களும் பெண்களுமாகிய அனைவரும் சௌகரியமாய் குடியிருந்து, சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும் என்பதே அவரது நோக்கம். முதல் மானிட ஜோடி, பிள்ளைகள் பெறுவதை அனுமதிப்பதன் மூலம் படிப்படியாய் இக்கிரகம் குடியேற்றப்படும்படி அவர் ஏற்பாடு செய்தார். முதல் மனித ஜோடியின் இன்பத்திற்காகவும் சந்தோஷத்திற்காகவும் பூமியின் ஒரு சிறிய பாகத்தை யெகோவா பரதீஸாக்கினார். வருடங்களும் நூற்றாண்டுகளும் செல்லச்செல்ல மனித குடும்பங்கள் விருத்தியாகும், ஏதேன் தோட்டமும் படிப்படியாய் விரிவாகும். இறுதியில் ஆதியாகமம் 1:28 நிறைவேறும். அது சொல்வதாவது: ‘தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்.’

பூமியும் அதன் குடியிருப்பாளர்களும் அடைந்திருக்கும் பரிதாப நிலையைப் பார்க்கும்போது, பூமியைக் குறித்ததில் கடவுளது ஆதி நோக்கம் தோல்வியடைந்துவிட்டது என அர்த்தமா? அல்லது அவர் தமது நோக்கத்தை மாற்றிக்கொண்டு, மனிதன் வழிதவறிவிட்டதால் இக்கிரகத்தை முழுமையாக அழித்து, பின் மறுபடியும் புதிதாய் உருவாக்க தீர்மானித்திருக்கிறாரா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பதே பதில் என உறுதியாய் சொல்லலாம். யெகோவா எதை நோக்கம்கொள்கிறாரோ அதை நிறைவேற்றி முடிப்பார் என பைபிள் சொல்கிறது; அவரது எந்தத் தீர்மானத்தையும் மனிதனோ எதிர்பாராத சம்பவமோகூட முறியடிக்க முடியாது. அவர் நமக்கு உறுதியளிப்பதாவது: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:11.

கடவுளுடைய நோக்கம் தடைப்பட்டது, ஆனால் மாறவில்லை

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, பூமியை பரதீஸாக்கும் கடவுளது நோக்கம் அவர்கள் இல்லாமலேயே நிறைவேறும் என்பது தெளிவாயிற்று. இருந்தபோதிலும், யெகோவா, அவர்களது சந்ததியினரில் சிலர் தாம் முதலில் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுவர் என அப்போதே குறிப்பிட்டார். இதற்கு அதிக காலம் எடுக்கலாம், ஏன் அநேக நூற்றாண்டுகள்கூட எடுக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் ஆதாமும் ஏவாளும் தொடர்ந்து பரிபூரணமாய் வாழ்ந்திருந்தாலும் அந்த முதல் கட்டளையை நிறைவேற்றி முடிக்க எவ்வளவு காலம் எடுத்திருக்கும் என நமக்கு தெரியாது. உண்மை என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின் முடிவில்—இப்போதிருந்து ஆயிரம் வருடங்களுக்கும் சற்று அதிக காலத்தில்—பூமி முழுவதும் ஏதேனைப்போல் மாறியிருக்கும்; கிரகமாகிய இப்பூமியில் முதல் மனித ஜோடியின் சந்ததியினர் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் குடியிருப்பர். உண்மையில், யெகோவா தமது நோக்கத்தை தவறாமல் நிறைவேற்றி முடிக்கும் திறன்கொண்டவரென நிரூபிக்கப்படுவார்!

வெகுகாலத்திற்கு முன்பு கடவுள் ஏவப்பட்டு எழுதிய, பூரிப்புண்டாக்கும் தீர்க்கதரிசனங்கள் அதன்பின் நிறைவேறும். ஏசாயா 11:6-9 போன்ற வசனங்கள் அற்புதமாய் நிறைவேறும்: “ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”

சுகவீனம், ஏன் தீராத வியாதிகளும் மரணமும்கூட மறைந்துவிட்டிருக்கும். பைபிளின் கடைசி புத்தகத்தில் காணப்படும் இந்த எளிய வார்த்தைகளைக் காட்டிலும் வேறு எது தெளிவாயிருக்க முடியும்? “மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

ஆம் நமது அழகிய பூமி நிலைத்திருக்கப்போகிறது, எனவே நாம் திடன்கொள்ளலாம். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கும் பூமியைக் கெடுக்கும் அனைத்து செயல்களுக்கும் வரவிருக்கும் முடிவில் தப்பிப்பிழைக்கிற தனிச்சலுகையை நீங்கள் பெறுவீர்களாக. கடவுள் ஏற்படுத்தவிருக்கும் சுத்தமான புதிய உலகம் வெகு அருகிலிருக்கிறது. உயிர்த்தெழுதல் என்னும் அற்புதத்தின் மூலம் அநேக அன்பானவர்கள் மரணத்திலிருந்து எழுந்து வருவர். (யோவான் 5:28, 29) ஆம், நம் பூமி நிலைத்திருக்கும், நாமும் அதில் நிலைத்திருந்து மகிழலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்