உங்கள் ஊழியத்திற்குப் பக்கபலம் யெகோவாவின் அமைப்பே
‘வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் . . . நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான்.’—வெளிப்படுத்துதல் 14:6.
1. யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு சோதிக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களால் எவ்வாறு அவற்றை தாங்க முடிந்திருக்கிறது?
கிறிஸ்தவ ஊழியத்தை ஆதரிப்பதில் யெகோவாவின் பரலோக அமைப்பு வகிக்கும் பங்கைப் புரிந்துகொள்வது ஏன் அவ்வளவு முக்கியம்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: யெகோவாவின் சாட்சிகள், கடவுளது பரலோக சேனையின் ஆதரவில்லாமல், பகைமை நிறைந்த இந்த உலகெங்கும் கடவுளது ராஜ்ய நற்செய்தியை அறிவித்திருக்க முடியுமா? மிதமீறிய தேசப்பற்றும், சர்வாதிகார ஆட்சிகளும், உலகப் போர்களும், அவற்றோடு பலவித இன்னல்களும் நிறைந்த ஒரு நூற்றாண்டில் சாட்சிகள் அப்படிப்பட்ட பிரசங்க ஊழியத்தைச் செய்திருக்கின்றனர். உலகெங்கும் சரமாரியாக எய்யப்பட்ட கணைகளாகிய, தப்பெண்ணங்கள், பேதங்கள், வன்முறைத் தாக்குதல்கள் ஆகியவற்றை யெகோவாவின் உதவியில்லாமல் சாட்சிகள் தாங்கியிருக்க முடியுமா?—சங்கீதம் 34:7.
உலகளாவிய எதிர்ப்பின் மத்தியிலும் நிலைத்திருத்தல்
2. முதல் நூற்றாண்டு உண்மை கிறிஸ்தவர்களுக்கும் இன்றுள்ள உண்மை கிறிஸ்தவர்களுக்கும் என்ன ஒற்றுமை?
2 இந்த 20-ஆம் நூற்றாண்டில், மத எதிரிகளும் அரசியல் எதிரிகளும் யெகோவாவின் ஊழியத்தைத் தடுக்க அல்லது அடக்க, முடிந்தளவு எல்லாவித இடையூறுகளையும்—சட்டப்பூர்வமாகவும் மற்றவிதத்திலும்—ஏற்படுத்தியிருக்கின்றனர். பெரும்பாலும் மகா பாபிலோனைச் சேர்ந்த குருவர்க்கத்தின் தூண்டுதலால், கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர், தவறாக அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றனர், பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றனர், அவதூறாக பேசப்பட்டிருக்கின்றனர், சொல்லப்போனால் அநேகர் கொலையும் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் பற்றி சொல்லப்பட்டது போலவே இப்போதும் சொல்லலாம்: ‘எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.’ கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூத குருமார், அவரது ஊழியத்தை நிறுத்த முழுமூச்சாக செயல்பட்டனர். அவர்களைப் போன்றே, இக்காலத்து குருமார்களும் பொய்ப் போதகர்களும் தங்கள் அரசியல் கள்ளக் கூட்டாளிகளோடு சேர்ந்துகொண்டு, யெகோவாவின் மக்களுடைய மாபெரும் கல்விபுகட்டும் வேலையைத் தடுக்க முயன்றிருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 28:22; மத்தேயு 26:59, 65-67.
3. ஹென்றிக்கா ஸூரின் உத்தமத்தன்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
3 உதாரணத்திற்கு, போலாந்தில் மார்ச் 1, 1946 அன்று என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். கெல்முக்கு அருகே வசித்த யெகோவாவின் சாட்சியாகிய ஹென்றிக்கா ஸூர் என்ற 15 வயது பெண்ணும் சாட்சியாக இருந்த மற்றொரு சகோதரரும், ஆர்வமுள்ளோரை சந்திக்க அருகிலிருந்த கிராமத்திற்குச் சென்றனர். அப்போது நாரோடோவே ஷீவி ப்ரோனே என்ற கத்தோலிக்க ராணுவ கூட்டத்தினரால் (தேசிய ஆயுதப் படை) அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தச் சகோதரர் குரூரமாய் அடிக்கப்பட்டார், ஆனாலும் உயிர் தப்பினார். ஹென்றிக்காவுக்கு நடந்ததோ வேறு. அவள் சிலுவையிடும்படி வற்புறுத்தப்பட்டு, பல மணிநேரங்களாய் பயங்கரமாக துன்புறுத்தப்பட்டாள். சித்திரவதைக்காரர்களில் ஒருவன் சொன்னான்: “மனசில் நீ என்ன வேண்டுமானாலும் நம்பிக்கொள், ஆனால் சிலுவையிடு. இல்லையென்றால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம்!” அவள் பயந்து அடிபணிந்துவிட்டாளா? இல்லை. அந்த மதக் கோழைகள் அவளை அருகிலிருந்த காட்டிற்கு இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றனர். ஆனாலும் அவள்தான் ஜெயித்தாள்! அவளது உத்தமத்தன்மையை அவர்களால் முறிக்க முடியவில்லையே. a—ரோமர் 8:35-39.
4. ராஜ்ய பிரசங்க வேலையை எவ்வாறு அரசியல் மற்றும் மத அமைப்புகள் நிறுத்த முயன்றிருக்கின்றன?
4 நூறு வருடங்களுக்கும் மேலாக கடவுளது நவீன-நாளைய ஊழியக்காரர்கள் கொடூரமாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டிருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் சாத்தானது முக்கிய மதங்களின் பாகமாக இல்லை, அவ்வாறிருக்க விரும்புவதும் இல்லை. ஆகவே எவ்விதத்திலாவது பகைமைக்காரர்களுக்கோ மதவெறியர்களுக்கோ இரையாவதற்கு அவர்கள் லாயக்கானவர்கள் என கருதப்படுகின்றனர். அவர்கள் அரசியல் அமைப்புகளால் குரூரமாய் தாக்கப்பட்டிருக்கின்றனர். அநேக சாட்சிகள் தங்கள் விசுவாசத்திற்காக உயிரையே தியாகம் செய்திருக்கின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் செயல்படுபவையும்கூட, நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை தடுக்க முயன்றிருக்கின்றன. 1917-ம் ஆண்டிலேயே கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும், அரசுக்கு எதிராக சதிசெய்வதாய், பைபிள் மாணாக்கர்கள் என அப்போது அழைக்கப்பட்ட சாட்சிகள்மீது குருமார் குற்றஞ்சுமத்தினர். உவாட்ச் டவர் சொஸைட்டியின் அதிகாரிகள் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர், ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.—வெளிப்படுத்துதல் 11:7-9; 12:17.
5. யெகோவாவின் ஊழியக்காரர்களை எந்த வார்த்தைகள் உற்சாகப்படுத்தியிருக்கின்றன?
5 கிறிஸ்துவின் சகோதரர்களும் அவர்களுடைய உண்மையுள்ள தோழர்களும் செய்யும் சாட்சிகொடுக்கும் வேலையை நிறுத்த சாத்தான் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துவந்திருக்கிறான். ஆனாலும் அச்சுறுத்துதல்களும் பயமுறுத்துதல்களும் வன்முறையும் சிறைச்சாலையும் சித்திரவதை முகாம்களும், ஏன் மரணமும்கூட யெகோவாவின் சாட்சிகளது வாயை அடைக்க முடியவில்லை என்பதை அநேக அனுபவங்கள் காட்டுகின்றன. இதுதான் இவ்வளவு காலமாக நடந்திருக்கிறது. மீண்டும்மீண்டும் உற்சாகமளித்திருப்பது, எலிசாவின் இவ்வார்த்தைகளே: “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” ஒரு காரணம் என்னவென்றால் உண்மையுள்ள தேவதூதர்கள் பிசாசின் சேனையை எண்ணிக்கையில் விஞ்சிவிடுகிறார்கள்!—2 இராஜாக்கள் 6:16; அப்போஸ்தலர் 5:27-32, 41, 42.
வைராக்கியமான பிரசங்க வேலையை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
6, 7. (அ) நற்செய்தியை பிரசங்கிக்க என்ன ஆரம்பகால முயற்சிகள் எடுக்கப்பட்டன? (ஆ) 1943 முதற்கொண்டு என்ன நன்மைக்கேதுவான மாற்றம் நிகழ்ந்தது?
6 முடிவுக்கு முன் இந்த மாபெரும் வேலையை விஸ்தரிப்பதற்கும் விரைவுபடுத்துவதற்கும், யெகோவாவின் சாட்சிகள் 20-ம் நூற்றாண்டில் அநேக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 1914-ம் ஆண்டிலேயே, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் முதல் தலைவரான பாஸ்டர் ரஸல், ஸ்லைடுகளையும் அசையும் திரைப்படங்களையும், ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவுசெய்யப்பட்ட பைபிள் விளக்கவுரையோடு இணைத்து, “சிருஷ்டிப்பைப் பற்றிய புகைப்பட-நாடகம்” என்ற எட்டு மணிநேர பைபிள் படத்தை வெளியிட்டார். அந்தச் சமயத்தில் அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதைப் பார்த்து வியந்துபோயினர். அதன்பின் 1930-களிலும் 1940-களிலும், ஒலிப்பதிவு கருவிகளை வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்று பிரசங்கம் செய்வோராய் சாட்சிகள் பிரபலமானார்கள்; அதற்காக சங்கத்தின் இரண்டாவது தலைவரான ஜே. எஃப். ரதர்ஃபோர்டின் பைபிள் பேச்சுப் பதிவுகளைப் பயன்படுத்தினார்கள்.
7 1943-ல் சங்கத்தின் மூன்றாவது தலைவரான நேதன் எச். நாரின் தலைமையில் ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, ஊழியர்களுக்காக ஒவ்வொரு சபையிலும் ஒரு பள்ளியை நிறுவ தீர்மானம் எடுக்கப்பட்டது. ஒலிப்பதிவுக் கருவிகளைப் பயன்படுத்தாமல் வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் சாட்சிகள் பயிற்றுவிக்கப்படவிருந்தனர். அப்போதிருந்து, மிஷனரிகள், முழுநேர பயனியர்கள், சபை மூப்பர்கள், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைக் காரியாலயங்களைச் சேர்ந்த பொறுப்புள்ள கண்காணிகள் ஆகியோரை பயிற்றுவிக்க மற்ற பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பலன் என்ன?
8. 1943-ல் சாட்சிகள் எவ்வாறு பலமான விசுவாசத்தைக் காட்டினர்?
8 1943-ல், இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 54 நாடுகளில் வெறுமனே 1,29,000 சாட்சிகள் மாத்திரம்தான் இருந்தனர். ஆனாலும் முடிவு வருவதற்குமுன் மத்தேயு 24:14 நிறைவேறும் என அவர்கள் உறுதியாய் நம்பினர். இந்தச் சீர்கெட்ட ஒழுங்குமுறையை முடிவிற்குக் கொண்டுவரும் சம்பவங்கள் வரிசையாக நடந்தேறுவதற்கு முன், முக்கியமான எச்சரிப்பு செய்தி முதலில் பிரசங்கிக்கப்படும்படி யெகோவா பார்த்துக்கொள்வார் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. (மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 16:16; 19:11-16; 19-21; 20:1-3) அவர்களது முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளதா?
9. சாட்சி கொடுக்கும் வேலை முன்னேறியிருக்கிறது என்பதை என்ன உண்மைகள் காட்டுகின்றன?
9 இப்போது குறைந்தபட்சம் 13 நாடுகளில், ஒவ்வொன்றிலும் 1,00,000-க்கும் அதிகமான சாட்சிகள் சுறுசுறுப்பாய் செயல்பட்டு வருகின்றனர். இவற்றில் பல நாடுகள் கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. ஆனாலும் நிலைமை என்ன தெரியுமா? பிரேஸிலில் சுமார் 4,50,000 பிரஸ்தாபிகள் நற்செய்தியை அறிவிக்கின்றனர்; 1997-ல் இயேசுவின் மரண நினைவு ஆசரிப்புக்கு 12,00,000-க்கும் அதிகமானோர் ஆஜராயிருந்தனர். மற்றொரு உதாரணம் மெக்ஸிகோ; இங்கே கிட்டத்தட்ட 5,00,000 சாட்சிகள் இருக்கின்றனர், 16,00,000-க்கும் அதிகமானோர் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தனர். இந்த வரிசையில் வரும் மற்ற கத்தோலிக்க நாடுகள்: இத்தாலி (சுமார் 2,25,000 சாட்சிகள்), பிரான்ஸ் (கிட்டத்தட்ட 1,25,000), ஸ்பெய்ன் (1,05,000-க்கும் அதிகமானோர்), அர்ஜன்டினா (1,15,000-க்கும் மேலானோர்). புராட்டஸ்டன்ட், கத்தோலிக்க மற்றும் யூத மதங்கள் மேலோங்கியிருக்கும் நாடாகிய ஐக்கிய மாகாணங்களில் சுமார் 9,75,000 சாட்சிகள் இருக்கின்றனர், 20,00,000-க்கும் அதிகமானோர் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தனர். நிச்சயமாகவே திரளான கூட்டத்தினர் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனிலிருந்தும் புரிந்துகொள்ளமுடியாத அதன் போதகங்களிலிருந்தும் வெளியே வந்துகொண்டிருக்கின்றனர்; அதுமட்டுமின்றி, ‘புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியைப்’ பற்றிய கடவுளது எளிய, நம்பத்தக்க வாக்குறுதிகளினிடமாக அவர்கள் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.—2 பேதுரு 3:13; ஏசாயா 2:3, 4; 65:17; வெளிப்படுத்துதல் 18:4, 5; 21:1-4.
மக்களது தேவைகளுக்கேற்ப மாறுதல்
10. சில பகுதிகளில் எவ்வாறு நிலைமைகள் மாறியிருக்கின்றன?
10 இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவிடம் திரும்பியிருக்கும் அநேகர் வீட்டுக்கு வீடு ஊழியத்தின் மூலம் சந்திக்கப்பட்டவர்களே. (யோவான் 3:16; அப்போஸ்தலர் 20:20) ஆனால் மற்ற வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நிலைமைகள் மாறிவிட்டன; பொருளாதார சூழ்நிலையின் காரணமாய் அநேக பெண்கள் இப்போது வேலைக்குச் செல்கின்றனர். வாரநாட்களில் பெரும்பாலும் ஒருசிலரையே வீடுகளில் சந்திக்க முடிகிறது. ஆகவே யெகோவாவின் சாட்சிகள் இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இயேசுவையும் அவரது ஆரம்பகால சீஷர்களையும் போலவே, எந்த நேரத்தில் எங்கு மக்களை காணமுடியுமோ அந்த நேரத்தில் அங்கு சென்று அவர்களை சந்திக்கின்றனர்.—மத்தேயு 5:1, 2; 9:35; மாற்கு 6:34; 10:1; அப்போஸ்தலர் 2:14; 17:16, 17.
11. இன்று யெகோவாவின் சாட்சிகள் எங்கெல்லாம் பிரசங்கிக்கின்றனர், அதன் பலன் என்ன?
11 சாட்சிகள் வாகன நிறுத்துமிடங்களிலும், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், வியாபார இடங்களிலும், பள்ளிகளிலும், காவல் நிலையங்களிலும், பெட்ரோல் பங்க்குகளிலும், ஹோட்டல்களிலும், ரெஸ்டாரென்ட்டுகளிலும், தெருக்களிலும் தாங்களாகவே மக்களை அணுகி, விவேகமாய் பிரசங்கிக்கின்றனர். சொல்லப்போனால், மக்களை எங்கெல்லாம் பார்க்க முடியுமோ அங்கெல்லாம் சென்று பிரசங்கிக்கின்றனர். வீட்டில் இருப்பார்களேயானால், அங்கும் சென்று அவர்களை தவறாமல் சந்திக்கின்றனர். இவ்வாறு மாற்றியமைக்கத்தக்க, நடைமுறையான இந்த அணுகுமுறையின் காரணமாக அதிகமதிகமான பைபிள் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. செம்மறியாடு போன்ற மக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. மனித சரித்திரத்திலேயே மிகப் பெரிய கல்விபுகட்டும் வேலையை ஐம்பத்தி ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாலண்டியர் ஊழியர்கள் வைராக்கியமாய் செய்துவருகின்றனர்! அவர்களில் ஒருவராய் இருக்கும் சிலாக்கியம் உங்களுக்கு இருக்கிறதா?—2 கொரிந்தியர் 2:14-17; 3:5, 6.
யெகோவாவின் சாட்சிகளுக்கு தூண்டுகோல் எது?
12. (அ) யெகோவா எவ்வாறு தமது மக்களுக்கு போதிக்கிறார்? (ஆ) இந்தப் போதனையின் விளைவு என்ன?
12 இவை எல்லாவற்றிலும் பரலோக அமைப்பின் பங்கு என்ன? ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்ததாவது: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” (ஏசாயா 54:13) யெகோவா, ஐக்கியப்பட்ட இந்த உலகளாவிய சகோதரத்துவத்திற்கு, பூமிக்குரிய தமது காணக்கூடிய அமைப்பின் மூலம்—ராஜ்ய மன்றங்களிலும் அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும்—கற்பித்து வருகிறார். அதனால் ஐக்கியமும் சமாதானமும் விளைவடைகிறது. யெகோவாவின் போதனை தனிச்சிறப்பு வாய்ந்த மக்களை உருவாக்கியிருக்கிறது; அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கவும், தங்களை நேசிப்பதைப் போலவே அயலாரை நேசிக்கவும் கற்பிக்கப்பட்ட மக்கள்; பகைமை நிறைந்த, பிளவுபட்ட இவ்வுலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் அயலாரை வெறுப்பதில்லை.—மத்தேயு 22:36-40.
13. பிரசங்க வேலையில் தேவதூதர்களின் வழிநடத்துதல் இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு நம்பலாம்?
13 அசட்டை செய்யப்பட்டாலும் துன்புறுத்தப்பட்டாலும் தொடர்ந்து பிரசங்கிக்கும்படி யெகோவாவின் சாட்சிகளை தூண்டுவிப்பது அன்பே. (1 கொரிந்தியர் 13:1-8) தாங்கள் செய்யும் உயிர்காக்கும் வேலைக்கான வழிநடத்துதல், வெளிப்படுத்துதல் 14:6-ன்படி பரலோகத்திலிருந்து வருகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தேவதூதரின் வழிநடத்துதலோடு அறிவிக்கப்படும் செய்தி என்ன? “தேவனுக்குப்பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பது யெகோவாவின் நாமத்தை மகிமைப்படுத்துகிறது. சிருஷ்டிகளுக்கும் குருட்டுத்தனமான பரிணாமத்திற்கும் அல்ல, ஆனால் சிருஷ்டிகராகிய கடவுளுக்கே மகிமை செலுத்தும்படி மக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்தப் பிரசங்க வேலை ஏன் அவ்வளவு அவசரமானது? ஏனெனில் மகா பாபிலோனுக்கும் சாத்தானது காணக்கூடிய அமைப்பின் மற்ற எல்லா பாகங்களுக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது.—வெளிப்படுத்துதல் 14:7; 18:8-10.
14. இந்த மாபெரும் போதனைத் திட்டத்தில் யார் பங்குகொள்கிறார்கள்?
14 ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் பிரசங்க வேலை செய்கின்றனர், எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆவிக்குரிய மூப்பர்கள் பிரசங்க வேலையை சபையில் முன்நின்று நடத்துகின்றனர். பயிற்றுவிக்கப்பட்ட பயனியர்கள் இந்த வேலையை முழுநேரமாய் செய்கின்றனர். ராஜ்ய செய்தியின் வைராக்கியமான பிரஸ்தாபிகள், மாதத்தில் சில மணிநேரம் மட்டுமே பிரசங்கித்தாலும் சரி, அதிக மணிநேரம் பிரசங்கித்தாலும் சரி, பூமியின் மூலைமுடுக்கெல்லாம் செய்தியைப் பரப்புகின்றனர்.—மத்தேயு 28:19, 20; எபிரெயர் 13:7, 17.
15. யெகோவாவின் சாட்சிகளது பிரசங்கத்தின் பலனைக் காட்டும் ஒரு நிரூபணம் என்ன?
15 இந்த எல்லா முயற்சிகளும் உலகத்தார்மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றனவா? ஏற்படுத்தியிருக்கின்றன என்பதற்கு ஒரு சின்ன நிரூபணம், டிவி நிகழ்ச்சிகளிலும் செய்திக் குறிப்புகளிலும் யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுகிறார்கள் என்பதே. பெரும்பாலும் இவை, அனைவரையும் சந்திப்பதற்கான நமது விடாமுயற்சியையும் தீர்மானத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. ஆம், பெரும்பாலான மக்கள் செய்தியையும் செய்தியை கொண்டு செல்வோரையும் புறக்கணித்தாலும், நாம் வைராக்கியத்தோடு விடாது சந்திக்கும்போது அவர்கள்மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது!
சாட்சிகொடுத்து முடிப்பதில் நம் வைராக்கியம்
16. மீந்திருக்கும் கொஞ்ச காலத்தில் என்ன மனப்பான்மையை நாம் காட்டவேண்டும்?
16 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்று நமக்குத் தெரியாது, தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை; யெகோவாவை சேவிப்பதில் நம் நோக்கம் தூய்மையானதாய் இருந்தால் போதும். (மத்தேயு 24:36; 1 கொரிந்தியர் 13:1-3) ஆனால் யெகோவாவின் அன்பும் வல்லமையும் நீதியும் வெளிக்காட்டப்பட வேண்டுமென்றால் நற்செய்தி “முந்திப்” பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். (மாற்கு 13:10) ஆகவே, இந்தப் பொல்லாத, அநீதியான, வன்முறை நிறைந்த உலகின் முடிவிற்காக நாம் எவ்வளவு வருடங்கள் ஆவலோடு காத்திருந்தாலும், நம் சூழ்நிலைக்கு ஏற்ப நமது ஒப்புக்கொடுத்தலை வைராக்கியத்தோடு நிறைவேற்ற வேண்டும். நமக்கு வயதாகியிருக்கலாம் அல்லது சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் இளமைப் பருவத்தில் அல்லது ஆரோக்கியமான நாட்களில் நமக்கிருந்த அதே வைராக்கியத்தோடு யெகோவாவை சேவிக்க முடியும். ஒருவேளை முன்னர் செலவிட்ட அதே மணிநேரங்களை இப்போது ஊழியத்தில் செலவிட முடியாதிருக்கலாம், ஆனால் யெகோவாவிற்கு நாம் செலுத்தும் ஸ்தோத்திர பலியினுடைய தரத்தை நிச்சயமாகவே காத்துக்கொள்ள முடியும்.—எபிரெயர் 13:15.
17. நம் அனைவருக்கும் உதவும், உற்சாகமளிக்கும் ஓர் அனுபவத்தை விவரியுங்கள்.
17 ஆகவே இளையோராய் இருந்தாலும் சரி, முதியோராய் இருந்தாலும் சரி, வைராக்கியத்தைக் காண்பிப்போமாக; புதிய உலகைப் பற்றிய நம்பிக்கைவாய்ந்த செய்தியை நாம் சந்திக்கும் அனைவரோடும் பகிர்ந்துகொள்வோமாக. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியைப் போல் நாம் இருக்கவேண்டும். கூச்ச சுபாவமுள்ள அவள், அவளது அம்மாவோடு கடைக்கு சென்றிருந்தாள். எல்லாரும் பிரசங்கிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் ராஜ்ய மன்றத்தில் கேட்டிருந்தாள், ஆகவே இரண்டு பைபிள் சிற்றேடுகளை தன் பையில் போட்டுக்கொண்டாள். இந்தச் சிறுமியின் அம்மா கவுன்டர் பக்கம் பிஸியாக இருந்தார், திடீரென பார்த்தால் மகளைக் காணவில்லை. தேடிச்சென்றபோது, இவள் ஒரு பெண்ணிடம் சிற்றேட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தாள்! அம்மா அங்கே சென்று, தன் மகள் ஏதாவது தொந்தரவு கொடுத்திருந்தால் மன்னிக்குமாறு அந்தப் பெண்ணிடம் சொன்னார். ஆனால் அந்தப் பெண்மணியோ அன்பாகப் பேசி சிற்றேட்டை ஏற்றுக்கொண்டார். அதன்பின் அங்கிருந்து சென்றவுடன், முன்பின் தெரியாதவரிடம் பேச அவளுக்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்தது என்று அம்மா மகளிடம் கேட்டார். “ஒன்னு, இரண்டு, மூணுன்னு சொல்லி, டாண்னு கிளம்பிட்டேன்!” என்றாள் அவள்.
18. நாம் எவ்வாறு நல்ல மனப்பான்மையைக் காட்டலாம்?
18 அந்த ஆஸ்திரேலிய சிறுமியைப் போன்ற அதே மனப்பான்மை நமக்கும் வேண்டும்; முக்கியமாய், நற்செய்தியை முன்பின் தெரியாதவர்களிடமோ அதிகாரிகளிடமோகூட பகிர்ந்துகொள்வதற்கு அம்மனப்பான்மை அவசியம். எங்கே நாம் சொல்வதை மறுத்துவிடுவார்களோ என நாம் பயப்படலாம். இயேசு சொன்னதை மறக்கவேண்டாம்: “அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார்.”—லூக்கா 12:11, 12.
19. உங்கள் ஊழியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
19 ஆகவே நற்செய்தியை பகிர்ந்துகொள்ள மக்களை நீங்கள் அன்பாக அணுகும்போது கடவுளது ஆவி உதவும் என உறுதியாய் நம்புங்கள். அற்ப ஆயுசுள்ள லாயக்கற்ற ஆண்கள்மீதும் பெண்கள்மீதும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். நாமோ, என்றென்றும் வாழும் யெகோவாவின் மீதும் அவரது பரலோக அமைப்பின்மீதும்—இயேசு கிறிஸ்து, பரிசுத்த தேவதூதர்கள், உயிர்த்தெழுந்திருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆகியோர்மீதும்—நம்பிக்கை வைக்கிறோம்! ஆகவே ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்”!—2 இராஜாக்கள் 6:16.
[அடிக்குறிப்பு]
a கூடுதலான உதாரணங்களுக்கு, 1994 யெகோவாவின் சாட்சிகளது வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 217-20-ஐக் காண்க.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் மக்கள் இன்னும் நிலைத்திருப்பதில் கடவுளது பரலோக அமைப்பு என்ன பாகம் வகித்திருக்கிறது?
◻ 20-ஆம் நூற்றாண்டில் எந்த அரசியல் மற்றும் மத அமைப்புகள் யெகோவாவின் சாட்சிகளை தாக்கியிருக்கின்றன?
◻ காலத்தின் தேவைகளுக்கேற்ப எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தை மாற்றியமைத்திருக்கின்றனர்?
◻ பிரசங்கிக்கும்படி உங்களைத் தூண்டுவிப்பது எது?
[பக்கம் 17-ன் படம்]
ஹென்றிக்கா ஸூர்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜப்பான்
மார்ட்டினிக்
ஐக்கிய மாகாணங்கள்
கென்யா
ஐக்கிய மாகாணங்கள்
மக்கள் எங்கு, எப்போது இருக்கிறார்களோ, அங்கு, அப்போது யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிறார்கள்
[பக்கம் 20-ன் படம்]
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதில் ஒலிப்பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன