உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 6/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • “நீங்கள் மும்முரமாக பிரயாசப்படுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • பெரேயாவில் இயேசு ஊழியம் செய்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இரட்சிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • ‘சத்திய ஆவியை’ நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 6/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இயேசு இவ்வாறு ஊக்குவித்தார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்.” (லூக்கா 13:24) அவர் அர்த்தப்படுத்தியது என்ன? இன்று இது எவ்வாறு பொருந்துகிறது?

இதன் சூழமைவைக் கவனிப்பதன்மூலம் இந்த அக்கறையூட்டும் பகுதியை நாம் சிறந்த முறையில் புரிந்துகொள்ளலாம். இயேசு, தம்முடைய மரணத்திற்கு ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன்பாக, ஆலய மறுபிரதிஷ்டை ஆண்டுவிழாவின்போது, எருசலேமில் இருந்தார். கடவுளுடைய செம்மறியாடுகளின் மேய்ப்பராகத் தாம் இருப்பதைப் பற்றி அவர் பேசினார்; எனினும் பொதுவில் யூதர் செவிகொடுக்க மறுத்ததனால், அவர்கள் அத்தகைய செம்மறியாடுகளுக்குள் அடங்கியவர்களாக இல்லை எனக் குறிப்பிட்டார். தம்முடைய பிதாவுடன் தாம் ‘ஒன்றாயிருப்பதாக’ அவர் சொன்னபோது, அவரைக் கல்லெறியும்படி யூதர்கள் கற்களை எடுத்தார்கள். அவர், யோர்தானுக்கு அக்கரையிலுள்ள பெரேயாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.—யோவான் 10:1-40.

அங்கே ஒரு மனிதன்: “ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” என்று கேட்டான். (லூக்கா 13:23) அது அவன் கேட்பதற்கு பொருத்தமானக் கேள்வியாக இருந்தது, ஏனெனில், மட்டுப்பட்ட ஒரு எண்ணிக்கையானவர்களே இரட்சிப்புக்குப் பாத்திரராக இருப்பார்கள் என்று அக்காலத்து யூதர்கள் எண்ணினார்கள். இந்த மனப்பான்மை அவர்களுக்கு இருந்தபடியால் சிலரே என்று சொன்னதில் யாரை மனதில் வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது கடினமாக இல்லை. பின் சம்பவித்தவை காட்டுகிறபடி அவர்கள் நினைத்தது எவ்வளவு தவறாக இருந்தது!

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இயேசு அவர்கள் மத்தியில், போதித்தும், அற்புதங்களை நடப்பித்தும், பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாக ஆவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு அளித்தும் வந்தார். இதன் பலன் என்ன? அவர்களும், முக்கியமாய் அவர்களுடைய தலைவர்களும், ஆபிரகாமின் சந்ததியாராக இருந்ததன்பேரிலும் கடவுளுடைய நியாயப்பிரமாணம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததன்பேரிலும் அகந்தையுள்ளவர்களாக இருந்தார்கள். (மத்தேயு 23:2; யோவான் 8:31-44) ஆனால், அவர்கள் நல்ல மேய்ப்பனின் குரலை அடையாளம் கண்டுகொள்ளவோ அவருக்கு செவிகொடுக்கவோ இல்லை. சொல்லவேண்டுமானால், அவர்களுக்கு முன்பாகத் திறந்த வாசல் இருந்தது; அதன் வழியாக உட்பிரவேசிப்பது ராஜ்யத்தில் உறுப்பினராகும் முதன்மையான நற்பயனைத் தரும்; ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பெரும்பாலும் தாழ்ந்த வகுப்பினரான சிலர் மாத்திரமே சத்தியத்தைப் பற்றிய இயேசுவின் செய்திக்குச் செவிகொடுத்து, அதற்கேற்ப செயல்பட்டு, அவரோடுகூட நிலைத்திருந்தார்கள்.—லூக்கா 22:28-30; யோவான் 7:47-49.

பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில், பின்குறிப்பிடப்பட்ட இவர்களே ஆவியால் அபிஷேகம் செய்யப்படுவதற்குப் பாத்திரராக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 2:1-38) தங்களுக்குக் கிடைக்க இருந்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினதால் அழுது பற்கடிப்பரென இயேசு குறிப்பிட்ட அக்கிரமக்காரராக அவர்கள் இல்லை.—லூக்கா 13:27, 28.

ஆகவே, முதல் நூற்றாண்டில் அந்த “அநேகர்,” பொதுவில் யூதராக, முக்கியமாய் மதத்தலைவர்களாக இருந்தனர். இவர்கள் கடவுளுடைய தயவைப் பெற விரும்பினதாக உரிமை பாராட்டினார்கள்—கடவுள் குறிப்பிட்டதன்படி அல்ல, ஆனால் தங்கள் சொந்த தராதரங்களின்படியும் வழிமுறைகளின்படியுமே அதைப் பெற விரும்பினார்கள். அதற்கு மாறாக, ராஜ்யத்தின் பாகமாக இருப்பதில் உள்ளப்பூர்வமான அக்கறையோடு செயல்பட்ட ‘சிலர்,’ கிறிஸ்தவ சபையின் அபிஷேகம் செய்யப்பட்ட உறுப்பினர் ஆனார்கள்.

இப்போது, நம்முடைய நாளில் நடந்தேறும் இன்னுமதிக விரிவான பொருத்தத்தைக் கவனியுங்கள். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்குச் செல்வோரான எண்ணற்ற நபர்கள், தாங்கள் பரலோகத்திற்குச் செல்வார்களெனக் கற்பிக்கப்படுகின்றனர். எனினும், இந்தப் பேராவல், வேதவசனங்களின் திருத்தமான போதகங்களின்பேரில் ஆதாரமுடையதல்ல. பூர்வ யூதரைப்போல், இவர்கள் தங்கள் சொந்த நிபந்தனைகளின் பேரிலேயே கடவுளுடைய தயவைப் பெற விரும்புகின்றனர்.

எனினும், நம்முடைய காலத்தில், ஒப்பிடுகையில் ஒருசிலர், மனத்தாழ்மையுடன் ராஜ்யத்தைப் பற்றிய செய்திக்குச் சாதகமாகப் பிரதிபலித்து, யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய தயவைப் பெறும் நிலைக்கு வந்திருக்கின்றனர். இது, அவர்கள் “ராஜ்யத்தின் புத்திரர்” ஆகும்படி வழிநடத்தியிருக்கிறது. (மத்தேயு 13:38) இத்தகைய அபிஷேகம் செய்யப்பட்ட “புத்திரர்” பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் இருந்து அழைக்கப்பட தொடங்கினர். கடவுள் தம்முடைய ஜனங்களோடு கொண்டிருக்கும் செயல்தொடர்புகளின் அத்தாட்சி, இந்தப் பரலோக வகுப்பினரின் உறுப்பினர்களுக்கான அழைப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதை குறிப்பிடுவதாக யெகோவாவின் சாட்சிகள் வெகுகாலமாக சொல்லி வந்திருக்கின்றனர். ஆகையால், சமீப ஆண்டுகளில் பைபிள் சத்தியத்தைக் கற்றிருப்போர், பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனுக்குரிய நம்பிக்கை இப்போது தங்களுக்கு அளிக்கப்படுகிறதென்று புரிந்துகொள்கின்றனர். உண்மையில் பரலோகத்திற்குச் செல்லும் எதிர்பார்ப்புடைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான மீதிபேருடைய எண்ணிக்கை குறைந்துவருகையில், இவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. லூக்கா 13:24, பரலோகத்திற்குச் செல்லும் எதிர்பார்ப்பு இல்லாதவர்களுக்கு முக்கியமாய்ப் பொருந்துகிறதில்லை; எனினும் அவர்களுக்கும் ஞானமான அறிவுரை அதில் நிச்சயமாக அடங்கியிருக்கிறது.

நம்மை ஊக்கமான பிரயாசத்திற்கு உட்படும்படி உந்துவிப்பதனால், நமக்குத் தடங்கலாக நம் வழியில் இடையூறுகளை இயேசுவோ அவருடைய பிதாவோ வைப்பதாக இயேசு சொல்லவில்லை. கடவுள் தேவைப்படுத்துபவை, தகுதியற்றவர்களை விட்டுவிடுவதற்கே என்று லூக்கா 13:24-ல் இருந்து நாம் விளங்கிக்கொள்கிறோம். “உங்களை ஊக்கமாய்ப் பிரயாசத்திற்கு உட்படுத்துங்கள்” என்பது நீடித்தக் கடும் முயற்சிக்கு நம்மை உட்படுத்துவதைக் குறிக்கிறது. ஆகவே, ‘நான் என்னை முழுமையான பிரயாசத்திற்கு உட்படுத்துகிறேனா?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம். லூக்கா 13:24-ஐ இவ்வாறு விரித்துரைக்கலாம்: ‘இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க நான் என்னை பிரயாசத்திற்கு உட்படுத்த வேண்டும், ஏனெனில் பலர் உட்பிரவேசிக்க வகைதேடுவார்கள் ஆனால் கூடாமற்போகும். ஆகையால் நான் என்னை உண்மையில் ஊக்கமான பிரயாசத்திற்கு உட்படுத்துகிறேனா? பரிசை பெறுவதற்குத் தன்னால் ஆனதையெல்லாம் செய்த பூர்வ விளையாட்டரங்கத்தில் இருந்த ஒரு விளையாட்டு வீரனைப்போல் நான் இருக்கிறேனா? அத்தகைய விளையாட்டு வீரன் எவனும் அரைமனதோடு, முயற்சி செய்யாமல் சோர்வுற்று சிறிதே பிரயாசப்படுபவனாக இருந்திருக்க மாட்டான். நான் அவ்வாறு இருக்கிறேனா?’

தங்கள் சொந்த வசதியின்படியேயும், தங்களுக்குச் சுலபமாயும் பிரியமாயும் இருக்கும் வேகத்திலும் மாத்திரமே ‘வாசல் வழியாய் உட்பிரவேசிக்க’ சிலர் நாடுவார்கள் என்று இயேசுவின் வார்த்தைகள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன. இத்தகைய மனப்பான்மை தனிப்பட்ட சாட்சிகளைப் பாதிக்கக்கூடும். சிலர் ஒருவேளை இவ்வாறு சிந்தனை செய்யலாம்: ‘பல ஆண்டுகளாக உழைத்து, பல தியாகங்களைச் செய்த பக்தியுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி எனக்குத் தெரியும்; எனினும், அவர்கள் சாகும் வரையில், இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு வரவில்லை. ஆகவே, நான் என்னைச் சற்றுத் தளர்த்தி, மேலுமாக இயல்பான வாழ்க்கை நடத்துவது ஒருவேளை நலமானதாக இருக்கலாம்.’

இவ்வாறு சிந்திப்பது எளிதே, ஆனால் அது உண்மையில் ஞானமானதா? உதாரணமாக, அப்போஸ்தலர்கள் அவ்வகையில் சிந்தித்தார்களா? நிச்சயமாகவே இல்லை. அவர்கள் தங்கள் மரணம் வரையில் தங்களை முழுமையாக உண்மையான வணக்கத்திற்கு அர்ப்பணம் செய்தார்கள். உதாரணமாக பவுல் இவ்வாறு சொல்ல முடிந்தது: “அவரையே [கிறிஸ்து இயேசுவையே] நாங்கள் அறிவித்து, . . . உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.” பின்னால் அவர் எழுதினதாவது: “எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும், இரட்சகராயிருக்கிற ஜீவனுள்ள கடவுள்மேல் நன்னம்பிக்கை வைத்திருக்கிறபடியால் இதற்கென்றே உழைத்தும் போராடியும் வருகிறோம்.”—கொலோசெயர் 1:28, 29; 1 தீமோத்தேயு 4:10, தி.மொ.

பிரயாசப்பட்டு உழைப்பதில் பவுல் தன்னை ஈடுபடுத்தினது முற்றிலும் சரியான காரியம் என்று நாம் அறிந்திருக்கிறோம். பவுல் சொன்னபடி: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால் எவ்வளவு மனதிருப்தியோடு இருப்போம். (2 தீமோத்தேயு 4:7) ஆகையால், லூக்கா 13:24-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்குப் பொருந்த, நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு நம்மைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் தளரா ஊக்கத்துடனும் முழு உழைப்புடனும் என்னை ஈடுபடுத்துகிறேனா? ஆம், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” என்ற இயேசுவின் இந்த அறிவுரையை நான் இருதயத்தில் ஏற்று நடக்கிறேன் என்பதற்குப் போதிய அத்தாட்சியை தொடர்ந்து அளித்துவருகிறேனா?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்