உங்கள் பிள்ளைச் செல்வங்களை எப்படி கட்டிக்காக்கலாம்?
வெர்னர்,a அருகிலிருந்த பள்ளிக்கு பல வருடங்களாக சென்றுவந்த பின்பு, மேல்படிப்புக்காக சுமார் 3,000 பேர் பயிலும் பிரேஸிலைச் சேர்ந்த சாவோ பாலோவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். அவன் தன்னுடன் படித்த மாணவர்கள் போதைப்பொருட்கள் விற்பதையும் பயன்படுத்துவதையும் முதல் முறையாக கவனித்தான். அவனுடைய உருவம் சிறியதாக இருந்ததால், அவனைவிட பெரியவர்களாயிருந்த மாணவர்களின் இழிவுபடுத்தும் ஆபத்தான சமயச் சடங்குகளுக்கு விரைவில் ஆளானான்.
வெர்னரின் சகோதரி ஈவாவுக்கும்கூட பிரச்சினைகள் இருந்தன. அவள் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்பியதால் மும்முரமாக படித்தாள், அதன் காரணமாக உடல் மற்றும் உணர்ச்சி சம்பந்தமாக பாதிக்கப்பட்டாள், மனக்குழப்பமும் அடைந்தாள். மற்ற இளம் பருவத்தினரைப் போலவே, வெர்னருக்கும் ஈவாவுக்கும் உடல் மற்றும் உணர்ச்சி சம்பந்தமான பாதுகாப்பு தேவைப்பட்டது. உங்கள் பிள்ளைகளுக்கு என்ன வகையான உதவி தேவைப்படுகிறது? நீங்கள் எவ்வாறு எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களைத் தயாராக்கலாம்? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?
உணவைக் காட்டிலும் அதிகம் தேவை!
இன்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக எதிர்ப்படும் சவாலைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். குடும்ப வாழ்க்கையின் தரம் குறைந்து வருவதாலும், வறுமை அதிகரித்து வருவதாலும், தெருக்களில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை அநேக தேசங்களில் அதிகரித்து வருகிறது. குழந்தைகளை சுயநலத்துக்காக பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்க தவறியதன் விளைவே குழந்தைத் தொழில். போதைப்பொருட்களை தவறாக பயன்படுத்துவதும்கூட அநேக இள வயதினரை பாழாக்குகிறது. உதாரணமாக, பிரேஸிலைச் சேர்ந்த ஒரு பருவ வயது பையன் போதைப்பொருட்களுக்கு அடிமையானபோது, அவனுடைய வீட்டில் சமாதானம் இல்லாமல் போனது. அவனுடைய பெற்றோருக்கு உணர்ச்சிப்பூர்வமான அழுத்தம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவன் சுகமடைவதற்காக பணம் செலவழிக்க வேண்டிய போராட்டமும் இருந்தது. இரக்கமற்ற போதைப்பொருள் வியாபாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு வந்து, தர வேண்டிய பணத்தைத் தரும்படி வற்புறுத்திக் கேட்டனர்.
அநேக பெற்றோர் வாழ்க்கையின் அழுத்தங்கள் மத்தியிலும், தங்கள் பிள்ளைகளுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை அளிப்பதற்காக தொடர்ந்து போராடுவது மட்டுமல்லாமல், வன்முறை, போதைப்பொருட்களை தவறாகப் பயன்படுத்துதல், மற்ற பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் போராடுகின்றனர். இது ஒரு உயர்நோக்கத்தோடு எடுக்கும் பெருமுயற்சியே, என்றாலும் இது மட்டுமே போதுமானதா? ஆனால் உணர்ச்சிப்பூர்வமான, ஆவிக்குரியப்பிரகாரமான தீங்கிலிருந்து பாதுகாப்பதைப் பற்றியதென்ன? பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைய வேண்டுமென்றால், தங்கள் பிள்ளைகள் எப்படிப்பட்ட நண்பர்களைத் தெரிந்தெடுக்கிறார்கள், எப்படிப்பட்ட பொழுதுபோக்கை விரும்புகிறார்கள் என்பதை உட்படுத்தும் சவால்களை சமாளிப்பதையும் உள்ளடக்குகிறது என அநேகர் உணருகின்றனர். இருப்பினும், அளவுக்குமீறி கண்டிப்பதையோ, எதையுமே கண்டுகொள்ளாமல் விடுவதையோ பெற்றோர் எவ்வாறு தவிர்க்கக்கூடும்? அடுத்து வரும் கட்டுரையில் காணப்படும் பதில்களை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இக்கட்டுரையில் வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.