உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்?
நீங்கள் உங்கள் பிள்ளைகளை பெரும் மதிப்புள்ள சுதந்தரமாக கருதுகிறீர்களா? (சங்கீதம் 127:4) அல்லது வெற்றிக்கான எந்த உத்தரவாதமுமில்லாத பொருளாதார சுமை என பிள்ளை வளர்ப்பை நீங்கள் கருதுகிறீர்களா? பிள்ளைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும்வரை, எவ்வித வரவுமின்றி செலவுதான் தொடருகிறது. மூதாதையர் சேர்த்துவைத்த சொத்தை நிர்வகிப்பதற்கு நல்ல திட்டமிடுதல் தேவைப்படுவது போல் பிள்ளைகளை வெற்றிகரமாய் வளர்ப்பதற்கும்கூட நல்ல திட்டமிடுதல் தேவைப்படுகிறது.
அக்கறையுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்புகின்றனர். இவ்வுலகில் தீய மற்றும் மிகவும் வருந்தத்தக்க காரியங்கள் ஒருவேளை நேரிட்டாலும்கூட, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கென அதிகத்தைச் செய்யக்கூடும். முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த வெர்னர், ஈவா என்பவர்களுடைய விஷயத்தை சிந்தித்துப் பாருங்கள்.a
பெற்றோர் உண்மையில் அக்கறை காட்டும்போது
தன் பெற்றோர் பள்ளியில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி அலட்சியமாய் இருந்துவிடாமல் உண்மையான அக்கறை காண்பித்தனர் என்று வெர்னர் அறிக்கை செய்கிறார். “அவர்கள் எனக்கு அளித்த நடைமுறையான ஆலோசனைகளை நான் மிகவும் மதித்தேன். அவர்கள் என்மீது அக்கறை காண்பித்து எனக்கு ஆதரவு தருவதாக உணர்ந்தேன். பெற்றோராக அவர்கள் மிகவும் கண்டிப்பாக இருந்தனர், ஆனால் அவர்கள் எனக்கு உண்மையான நண்பர்களாய் இருப்பதை நான் அறிந்தேன்.” ஈவா தன் பள்ளிப் பாடத்தைக் குறித்து மிகவும் அமைதியிழந்து மனசோர்வடைந்து தூக்கமின்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய பெற்றோர் பிரான்சிஸ்கோவும் இனெஸும் அவளோடு பேசுவதற்கு அதிகமான நேரத்தைச் செலவழித்து அவளுடைய மனோரீதியிலான மற்றும் ஆவிக்குரிய சமநிலையை மீண்டும் பெறுவதற்கு உதவி செய்தனர்.
பிரான்சிஸ்கோவும் இனெஸும் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதற்காகவும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் தயாரித்தனர்? பிள்ளைகள் சிசுப்பருவத்தில் இருந்தபோதே, இந்த அன்பான பெற்றோர் அவர்களை எப்போதும் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சேர்த்துக் கொண்டனர். இனெஸும் பிரான்சிஸ்கோவும் தங்கள் வயதுவந்த நண்பர்களோடு மட்டும் தோழமை கொள்ளாமல், எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பிள்ளைகளை தங்களோடு அழைத்துச் சென்றனர். அன்புள்ள பெற்றோராக, அவர்கள் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் சரியான வழிநடத்துதலையும்கூட அளித்தனர். இனெஸ் இவ்வாறு சொல்கிறார்: “வீட்டை பராமரித்தல், சிக்கனமாய் இருத்தல், தங்கள் சொந்த ஆடைகளை நன்றாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தோம். ஒரு தொழிலை தேர்ந்தெடுப்பதற்கும், தங்களுடைய பொறுப்புகளை ஆவிக்குரிய அக்கறைகளோடு சமநிலைப்படுத்துவதற்கும் நாங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்தோம்.”
உங்கள் பிள்ளைகளைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு, பெற்றோருக்குரிய வழிநடத்துதலை அளிப்பது எவ்வளவு இன்றியமையாதது! நீங்கள் இதை எப்படி செய்யலாம் என்பதை பின்வரும் மூன்று அம்சங்களை ஆராய்வதன் மூலம் நாம் காணலாம்: (1) ஒரு பொருத்தமான உலகப்பிரகாரமான வேலையை தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்; (2) பள்ளியிலும் வேலை செய்யும் இடத்திலும் உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்தை சமாளிப்பதற்கு அவர்களை தயார் செய்யுங்கள்; (3) தங்கள் ஆவிக்குரிய தேவைகளை எப்படி திருப்தி செய்வது என்று அவர்களுக்கு காண்பியுங்கள்.
பொருத்தமான வேலையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உதவுங்கள்
ஒரு நபரின் உலகப்பிரகாரமான வேலை அவருடைய பொருளாதார நிலையை பாதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய நேரத்தையும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு பிள்ளைக்கும் எதில் ஆர்வம் இருக்கிறது எனவும் எவ்வளவு திறமை இருக்கிறது எனவும் சிந்தித்துப் பார்ப்பது பிள்ளை வளர்ப்பில் உட்பட்டிருக்கிறது. மனசாட்சிக்கு கட்டுப்பட்ட எந்தவொரு தனி நபரும் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்புவதில்லை. ஆகையால் தன்னையும் தன் குடும்பத்தையும் ஆதரித்துக்கொள்வதற்கு தன் பிள்ளையை எப்படி தயாரிக்கலாம் என்பதைக் குறித்து பெற்றோர் ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். உங்கள் மகனாவது மகளாவது திருப்திகரமாய் வாழ்வதற்கென ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? நீங்கள் உண்மையாகவே அக்கறை காண்பிக்கும் பெற்றோராக இருந்து, கடுமையாய் உழைப்பது, கற்றுக்கொள்ள விரும்புவது, மற்றவர்களோடு சேர்ந்து இருக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது போன்ற பண்புகளை உங்கள் பிள்ளை வளர்த்துக்கொள்வதற்கு ஒழுங்காக விடாமல் முயற்சி செய்து வாருங்கள்.
நிக்கோல் என்ற பெண்ணை சிந்தித்துப் பாருங்கள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என் பெற்றோர் சுத்தம் செய்யும் தொழிலில் தங்களோடு சேர்ந்து வேலை செய்யும்படி கூறினர். நான் சம்பாதித்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வீட்டு செலவுகளுக்காக கொடுக்கும்படியும் மீதி பணத்தை என் சொந்த செலவுக்கு அல்லது சேமிப்புக்கு வைத்துக்கொள்ளும்படியும் ஆலோசனை கூறினர். இது என் பொறுப்புணர்ச்சியை அதிகமாக்கியது, இது பின்னால் என் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக நிரூபித்தது.”
ஒரு நபர் என்ன வகையான உலகப்பிரகாரமான வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் திட்டவட்டமாய் குறிப்பிடுவதில்லை. ஆனால் அது நியாயமான வழிகாட்டு குறிப்புகளை அளிக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.” தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் அவர் இவ்வாறும் சொன்னார்: “உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலை செய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே அவர்களுக்கு கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.”—2 தெசலோனிக்கேயர் 3:10-12.
இருப்பினும், ஒரு வேலை கிடைத்து, பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையல்ல. கடைசியில், பதவி, புகழ், அந்தஸ்து ஆகியவற்றைப் பெற வேண்டும் என துடிப்பவர்கள் திருப்தியற்றவர்களாய் ஆகிவிடும் சாத்தியம் உள்ளது, அப்படிப்பட்டவர்கள் தாங்கள் ‘காற்றைப் பிடிக்க வேட்டையாடிக்கொண்டிருப்பதை’ அறிந்துகொள்ளக்கூடும். (பிரசங்கி 1:14) பிள்ளைகள் வாழ்க்கையில் அங்கீகாரமும், வளமும் பெற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அப்போஸ்தலனாகிய யோவானுடைய வார்த்தைகளின் ஞானத்தை காண்பதற்கு பெற்றோர் அவர்களுக்கு உதவி செய்வது நல்லது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:15-17.
பிள்ளைகளின் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளை நீங்கள் எவ்வாறு திருப்தி செய்யலாம்?
ஒரு பெற்றோராக, நீங்கள் விளையாட்டு வீரருக்கு பயிற்சி அளிப்பவரைப் போல் ஏன் இருக்கக்கூடாது? தன் கவனிப்பிலுள்ள வீரர்கள் வேகமாக ஓடுவதற்காக அல்லது நெடுந்தூரம் தாண்டுவதற்காக உடல் சம்பந்தமான சக்தியை அதிகரிப்பதில் மட்டுமே அவர் தன் கவனத்தை ஒருமுகப்படுத்துவதில்லை. அநேகமாக, எப்படிப்பட்ட நம்பிக்கையற்ற மனநிலையை பெற்றிருந்தாலும் அதை மேற்கொள்வதற்கும்கூட அவர்களுக்கு உதவி செய்ய முயற்சி எடுக்கிறார், இவ்வாறு அவர்களுடைய உணர்ச்சிப்பூர்வமான பலத்தை வலுவடையச் செய்கிறார். உங்களுடைய விஷயத்தில், நீங்கள் எவ்வாறு உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி, கட்டியெழுப்பி, உந்துவிக்கக்கூடும்?
ரோஸார்யோ என்ற 13 வயது வாலிபனின் விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள். உடலில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக மனக்குழப்பம் அடைந்தான். அதுமட்டுமல்லாமல், அவனுடைய பெற்றோருக்கு இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் கவனிப்பு குறைவுபட்டதாலும் உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்தையும் அனுபவித்தான். அவனைப் போன்ற இளம் நபர்களுக்கு என்ன செய்யப்படலாம்? எல்லா கவலைகளிலிருந்தும் கெட்ட செல்வாக்குகளிலிருந்தும் உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது கூடாதகாரியமாக இருந்தாலும், ஒரு பெற்றோராக உங்கள் பங்கை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். அளவுக்கு மீறி பாதுகாப்பவர்களாய் இராமல், புரிந்துகொள்ளுதலோடு உங்கள் பிள்ளைகளுக்கு சிட்சை அளியுங்கள், ஒவ்வொரு பிள்ளையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள். அன்பையும், தயவையும் காண்பிப்பதன் மூலம் ஒரு இளம் நபர் பாதுகாப்பாய் உணருவதற்கு நீங்கள் அதிகத்தைச் செய்யலாம். இது அவன் நம்பிக்கையும் சுய-மரியாதையும் இல்லாமல் வளருவதையும்கூட தவிர்க்கும்.
உங்கள் சொந்த பெற்றோர் உங்கள் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளை திருப்தி செய்வதில் எவ்வளவு வெற்றிகரமாய் இருந்தனர் என்பதைவிட, உண்மையிலேயே உதவியளிக்கும் பெற்றோராக நீங்கள் வெற்றி காண்பதற்கு மூன்று காரியங்கள் உங்களுக்கு உதவும்: (1) உங்கள் பிள்ளைகளின் சிறு பிரச்சினைகள் போல் தோன்றுபவற்றை அசட்டை செய்து உங்கள் சொந்த பிரச்சினைகளிலேயே மூழ்கிவிடுவதைத் தவிருங்கள்; (2) இனிமையான, அர்த்தமுள்ள உரையாடலை அவர்களோடு வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்; (3) பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது, ஜனங்களோடு தொடர்புகொள்வது என்பதைப் பற்றி ஒரு உடன்பாடான மனநிலையை முன்னேற்றுவியுங்கள்.
ஒரு பருவ வயது பெண்ணாக கழித்த வருடங்களை சிந்தித்துப் பார்க்கையில் பிர்ஜிட் இவ்வாறு சொல்கிறாள்: “நீங்கள் எவ்வாறு மற்றவர்கள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவ்வாறு இருக்க அவர்களை மாற்ற முடியாது என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. நான் விரும்பாத சில பண்புகளை மற்றவர்களிடம் பார்த்தால், அவர்களைப் போல் இல்லாமல் இருப்பதை தவிர்ப்பதே நான் செய்யக்கூடிய காரியம் என்று என் அம்மா காரணம் காண்பித்து விளக்கினார்கள். என் சொந்த வழிகளை மாற்றிக்கொள்வதற்கான சிறந்த சமயம், நான் இன்னும் சிறியவளாய் இருந்தபோதே என்றும்கூட சொன்னார்கள்.”
இருப்பினும், உங்கள் பிள்ளைகளுக்கு வேலை, உணர்ச்சி சம்பந்தமான உறுதிநிலை மட்டுமின்றி அதிகம் தேவைப்படுகிறது. ‘பிள்ளை வளர்ப்பை கடவுள் கொடுத்த பொறுப்பாக நான் கருதுகிறேனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அவ்வாறு கருதினால், உங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்த விரும்புவீர்கள்.
ஆவிக்குரிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கான வழிகள்
இயேசு கிறிஸ்து தம் மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு சொன்னார்: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், ஏனெனில் பரலோகராஜ்யம் அவர்களுடையது.” (மத்தேயு 5:3, NW) ஆவிக்குரிய தேவைகளை திருப்தி செய்வதில் என்ன உட்பட்டிருக்கிறது? யெகோவா தேவன் மீது விசுவாசம் காண்பிப்பதில் பெற்றோர் மிகச்சிறந்த முன்மாதிரியை வைக்கையில் பிள்ளைகள் பெருமளவில் பயனடைகின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) இருப்பினும், விசுவாசத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்க வேண்டுமென்றால், ஜெபம் அவசியம். (ரோமர் 12:12) உங்கள் சொந்த ஆவிக்குரிய தேவையை நீங்கள் உணர்ந்தால், இஸ்ரவேலின் பிரபலமான நியாயாதிபதியாக ஆன சிம்சோனின் தகப்பன் செய்தது போல் கடவுளுடைய வழிநடத்துதலை நாடுவீர்கள். (நியாயாதிபதிகள் 13:8) நீங்கள் ஜெபம் மட்டும் செய்யாமல், கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளிடமும் உதவிக்காக செல்வீர்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17.b
பிள்ளை வளர்ப்பு, சரியான வழிநடத்துதல், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு, ஆவிக்குரிய உதவி ஆகியவற்றை கொடுக்கவேண்டிய கடினமான உழைப்பை உட்படுத்தினாலும் அதில் நல்ல பலன்களும் உண்டு. பிரேஸிலில் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாய் இருப்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என் பிள்ளைகள் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நாங்கள் அவர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடிய நல்ல காரியங்கள் அநேகம் இருக்கின்றன.” பிள்ளைகள் ஏன் நன்றாக இருக்கின்றனர் என்பதை விளக்குகையில், தாய் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்கள்: “நாங்கள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தே இருக்கிறோம், குடும்பம் சந்தோஷமாயும் இன்பமயமாயும் இருக்க முயற்சி செய்கிறோம். அதிமுக்கியமாய், நாங்கள் எப்போதும் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறோம்.”
பிரச்சினை இருந்தபோதெல்லாம் தன் பெற்றோர் வெளிக்காட்டிய அன்பையும் பொறுமையையும் பிரிஸ்ஸில்லா நினைவுபடுத்தி சொல்கிறாள். “அவர்கள் எனக்கு உண்மையான நண்பர்களாய் இருந்தனர், எல்லா காரியங்களிலும் எனக்கு உதவி செய்தனர்” என்று அவள் சொல்கிறாள். “ஒரு பிள்ளையாக, ‘யெகோவாவிடமிருந்து வந்த சுதந்தரமாக’ நடத்தப்பட்டதை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்.” (சங்கீதம் 127:4) அநேக பெற்றோர் செய்வதைப் போல், நீங்களும் ஏன் பிள்ளைகளோடு சேர்ந்து பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் வாசிப்பதற்காக நேரம் ஒதுக்கக்கூடாது? பைபிள் பதிவுகளையும் நியமங்களையும் நல்ல அமைதியான சூழ்நிலையில் சிந்தித்துப் பார்ப்பது, உங்கள் பிள்ளைகள் நம்பிக்கையோடிருப்பதற்கும் உண்மையான எதிர்கால நம்பிக்கையை பெற்றிருப்பதற்கும் உதவக்கூடும்.
எல்லா பிள்ளைகளும் பாதுகாப்புடன் இருக்கையில்
இன்று அநேக பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருண்டதாய் தோன்றுகிறபோதிலும், இந்த பூமி விரைவில் மனிதவர்க்கத்துக்கு ஒரு பாதுகாப்பான வீடாய் இருக்கும் என கடவுளுடைய வார்த்தை உத்தரவாதமளிக்கிறது. கடவுள் வாக்குறுதியளிக்கும் புதிய உலகில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பைக் குறித்து கவலைப்பட அவசியமே இராத காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்! (2 பேதுரு 3:13) இந்த தீர்க்கதரிசனத்தின் மகத்தான நிறைவேற்றத்தை கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்யுங்கள்: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.” (ஏசாயா 11:6) இன்றும்கூட, இந்த வார்த்தைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் ஆவிக்குரிய பாதுகாப்பு யெகோவாவை சேவிப்போர் மத்தியில் அடையாளப்பூர்வமாக நிறைவேறி வருகிறது. அவர்கள் மத்தியில் நீங்கள் கடவுளுடைய அன்பான கவனிப்பை உணருவீர்கள். நீங்கள் கடவுள் பேரில் அன்பை வெளிப்படுத்திக் காண்பித்தால், ஒரு பெற்றோராக உங்கள் உணர்ச்சிகளை அவர் புரிந்துகொள்கிறார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் வரும் கவலைகளையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு உதவி செய்வார். அவருடைய வார்த்தையை படித்து, அவருடைய ராஜ்யத்தின்மீது உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.
ஒரு சிறந்த முன்மாதிரியை வைப்பதன் மூலம் நித்திய ஜீவனுக்கு செல்லும் பாதையில் நடக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நீங்கள் யெகோவா தேவனில் அடைக்கலம் புகுந்தால், உங்கள் எதிர்காலமும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சிவிடக்கூடும். பின்வரும் பாட்டை பாடிய சங்கீதக்காரனின் அதே நம்பிக்கையே உங்களுக்கும் இருக்கலாம்: “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”—சங்கீதம் 37:4.
[அடிக்குறிப்புகள்]
a இக்கட்டுரையில் வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தில் அதிகாரங்கள் 5 முதல் 7-ஐக் காண்க.