அகோரா—ஆதன்ஸ் நகரின் உயிர்நாடி
ஆதன்ஸின் அறிவுஜீவிகளிடையே திடீரென ஒரே அமளி! கிரீஸைச் சேர்ந்த இந்நகரில் அகோரா எனப்பட்ட சந்தைவெளிக்கு எப்போது சென்றாலும் சரி, புதுப் புது கருத்துக்களை கேட்கலாம். ஆனால் இந்த முறையோ விசித்திரமான ஏதோவொன்று நடந்தது. ஒரு யூதன் நகருக்குள் நுழைந்ததும் நுழையாததுமாய், தான் ‘சந்தித்த’ மக்கள் எல்லாரிடமும் விசேஷமாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தான்; ‘வேற்று தெய்வங்களை அறிவிப்பவன் போலத்’ தோன்றினான். “இவன் என்னதான் பிதற்றுகிறான்?” என கர்வம்பிடித்த எப்பிக்கூரியர்களும் கடுகடுப்பான ஸ்தோயிக்கர்களும் கேட்டார்கள். உலகில் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பட்டிமன்றம் நடத்த தலைசிறந்த இடமாய் அகோரா சந்தைவெளி திகழ்ந்தது என்னவோ உண்மைதான். அதற்காக அந்நிய தெய்வங்களை அறிமுகம் செய்வதா, பொறுத்துக்கொள்ளவே முடியாது!—அப்போஸ்தலர் 17:17, 18, பொது மொழிபெயர்ப்பு.
அகோராவில் முதன்முறையாக அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்தபோது ஆதன்ஸ் நகரத்தார் இப்படித்தான் சந்தேகித்தார்கள். பவுல் இயேசு கிறிஸ்துவையும் உயிர்த்தெழுதலையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆதன்ஸைச் சேர்ந்தோர் பரந்த மனப்பான்மை உடையோராய் அல்லவா தோன்றினார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் புதிய கருத்துக்கள் மட்டும் ஏன் விநோதமாகத் தோன்றின?
ஆதன்ஸில் பொது சதுக்கம் உருவாகிறது
அகோரா அதன் சிறப்புத்தன்மையால் தன்னிகரற்று விளங்கியது. அதோடு ஆதன்ஸ் மக்களது ஆன்மீக வாழ்விலும் பொது வாழ்விலும் விசேஷ பங்கு வகித்தது. அகோரா சந்தைவெளி, அக்ராபாலிஸின் வடமேற்கே, சற்று சரிவான பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆதன்ஸின் அரசியல் அறிஞரும் சட்டப் பிரமாணிகருமான சோலொனின் காலத்தில், இந்த நிலப்பகுதி அப்பட்டணத்தின் பொது சதுக்கத்துக்குரிய இடமாக ஒதுக்கப்பட்டதாய் தெரிகிறது. ஆதன்ஸில் குடியாட்சி ஸ்தாபிக்கப்பட்டு, சமூக வாழ்க்கைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதால், அதை அடுத்துவந்த நூற்றாண்டின் ஆரம்பங்களில் எக்கச்சக்கமான கட்டிடங்கள் முளைத்தன. இதனால் அகோரா புதுப்பொலிவு பெற்றது; முக்கியத்துவத்திலும் ஒரு படி மேலே சென்றது.
அகோரா என்ற இந்தக் கிரேக்க பதம், “கூட்டங்கூடு, ஒன்றுகூடு” என்ற வினைச்சொல்லிலிருந்து வந்தது. இப்பெயருக்கு பொருத்தமாகவே, நகர மக்கள் கூடிவரும் முக்கிய இடமாக அகோரா விளங்கிற்று. சமூக வாழ்விலும் பொது வாழ்விலும் அகோரா மையமாக ஆனது. அரசியல் நிர்வாகத்திற்கும், நீதி விசாரணைக்குமான அமைப்பிடம்; வியாபாரத்திற்கும் வணிகத்திற்கும் முக்கிய இடம்; கிரேக்க நாடகம் அரங்கேறிய இடம்; விளையாட்டு போட்டிகளுக்கான மைதானம்; அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதிப்பதற்கு உகந்த இடம்; இவை அனைத்தின் கதம்பம்தான் அகோரா!
ஆதன்ஸிலுள்ள அகோராவில் இப்போது பாழடைந்திருக்கும் கோயில்கள், தூண் மண்டபங்கள், சிலைகள், நினைவுச் சின்னங்கள், பொது கட்டிடங்கள் ஆகியவற்றைச் சென்று பார்வையிட உங்களுக்கு விருப்பமா? அகோராவின் கடந்தகாலத்தை ஆராய்வதற்காக, தற்கால பட்டணத்தின் சந்தடியையும் இரைச்சலையும் விட்டு, ஜல்லிப்போட்ட பாதைகள் வழியாக சற்று செல்வோம். மயான அமைதியில் உறைந்திருக்கும் பளிங்குக்கல் பாழிடங்கள், கற்சிலைகள், சிதிலடைந்த வாசல்களும், அவற்றின் விரிசல்களில் மண்டிக்கிடக்கும் செடி கொடிகளும் என அப்பப்பா எத்தனை காட்சிகள்!
கோயில்களும், புனித ஸ்தலங்களும், விசேஷ தெய்வங்களும்
பல்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களையும், புனித ஸ்தலங்களையும், வழிபாட்டு இடங்களையும் கண்டு பார்வையாளர்கள் வாயடைத்துப் போகிறார்கள். அக்ராபாலிஸுக்கு அடுத்ததாக, வழிபாட்டுக்குரிய முதன்மையான இடங்களில் அகோரா இருந்ததில் ஆச்சரியமேதும் இல்லையே! பண்டைய ஆதன்ஸின் பொற்காலத்தின்போது மதம் பொது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவிப் பரவினது. இதன் காரணமாக, அரசாங்கத் துறைகளின் மற்றும் நிர்வாகச் சேவைகளின் ‘விசேஷ தெய்வங்களாக’ கருதப்பட்ட பல்வேறு தெய்வங்களுக்கு அகோராவில் கோவில்கள் அர்ப்பணிக்கப்பட வேண்டியிருந்தது.
இந்தக் கட்டிடங்களில் முதன்மை வாய்ந்தது ஹிஃபெஸ்டாஸ் கோவில் ஆகும். அத்தேனா தேவதைக்கும் ஹிஃபெஸ்டாஸ் தெய்வத்துக்கும் தொடர்பு இருந்ததாக கருதப்பட்டது. இந்த இரண்டு தெய்வங்களும், கலைக்கும் கைவினைக்கும் தெய்வங்களாய் வணங்கப்பட்டன. உலோகத் தொழிலுக்கும் மண்பாண்டத் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டவை இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கண்டெடுக்கப்பட்டன. இவை ஹிஃபெஸ்டாஸ் அக்கினித் தெய்வமாக வணங்கப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தின. நன்றாய்ப் பாதுகாத்து வைக்கப்பட்ட இந்தக் கோவில், பெரும்பாலும் பொ.ச. ஏழாவது நூற்றாண்டில், செயின்ட் ஜார்ஜ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சாக மாற்றப்பட்டிருக்கலாம்; எனினும் இன்று அது அவ்வாறு இல்லை.
நிச்சயமாகவே அகோராவுக்கென்றே ஒரு விசேஷ தெய்வம் தேவைப்பட்டது. அதுதான் சொற்பொழிவு திறனுக்கான தெய்வமாய் கருதப்பட்ட ஜூயஸ் ஆகரேயஸ். மதிப்புமிகுந்த பென்டெலிக் பளிங்குக்கல்லால் செதுக்கி அழகுபடுத்தப்பட்ட ஒரு பீடம் அத்தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 14:11, 12, NW) அருகிலிருந்த தாய் தெய்வத்தினுடைய பீடத்தின்மீது, வீரர்களின் சிலைகள் இருபுறமும் வரிசையாக கண்கவரும் விதத்தில் செதுக்கப்பட்டிருந்தன.
அதற்குச் சற்று அப்பால் ஒரு சிறிய அயோனிய கோவிலை நாம் காண்கிறோம். நில இயல் நிபுணரான பாஸானியாஸ் அதை, தந்தை தெய்வமாகிய அப்பொல்லோவின் கோவில் என்பதாக அடையாளம் காட்டினார். ஏன்? ஏனெனில், பூர்வ கிரேக்க புராணக் கதை ஒன்றின்படி, அப்பொல்லோ அயோனிய இனத்தை ஸ்தாபித்த அயோனியின் தந்தை. இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அத்தேனியர்கள், அதாவது ஆதன்ஸ் நகரத்தார்.a இவ்வாறு அப்பொல்லோ, அரசாங்க நிர்வாக அமைப்பின்—முக்கியமாய், அப்பட்டணத்தைச் சேர்ந்த பல்வேறு மதக் குழுக்களின் நிர்வாக அமைப்பின்—விசேஷ தெய்வம்.
இதற்கு வடக்கே, பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டின் மத்திப காலத்தைச் சேர்ந்த சிறிய சுண்ணாம்புக்கல் கோவிலின் எஞ்சிய பகுதிகளைக் காண்கிறோம். இங்கே, மதக் குழுக்களின் பரம்பரை தெய்வங்களான ஜூயஸும் அத்தேனாவும் முக்கியமாக வணங்கப்பட்டன. இந்த மதக் குழுக்களில் சேர்ந்தால் மட்டும்தான் ஆதன்ஸில் குடியேற முடியும். அந்த வீதியின் எதிர்ப்புறத்திற்கு கடந்துசெல்கையில் பன்னிரண்டு தெய்வங்களுக்குரிய பீடத்தின் எஞ்சிய பாகத்தை நாம் காண்கிறோம்.
அருகில் இருப்பது ஜூயஸ் எலூத்தெரியாஸின் மண்டபம். இதுவும் பிரதான கிரேக்க தெய்வமாகிய ஜூயஸுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது என்றாலும் இங்கே சுதந்திரத்திற்கும் விடுதலைக்குமுரிய தெய்வமாக அதனை வணங்கினார்கள். இந்தத் தூண் மண்டபம், உலாவுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் கூட்டம் நடத்துவதற்கும் பிரபலமானதாக இருந்தது. புகழ்பெற்ற தத்துவஞானியாகிய சாக்ரடீஸ், இந்த மண்டபத்தில் தன் நண்பர்களுடன் கூடிவந்ததாகச் சொல்லப்படுகிறது; அங்கு அவர்கள் உட்கார்ந்து அளவளாவினர் அல்லது உலாவினர். ஆதன்ஸுக்காக உயிர்நீத்த வீரர்களின் கேடகங்கள் போன்றவை இம்மண்டபத்தை அலங்கரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. இவை அந்நகரம் பகைவர்களிடமிருந்து மீண்டதையோ அதன் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டதையோ நினைவுபடுத்தின.
பெனெத்தீனியன் வழி
பெனெத்தீனியன் வழி என்று அழைக்கப்படும் விசாலமான ஜல்லிப்போடப்பட்ட பாதை, அகோராவின் குறுக்கே செல்கிறது. இதன் பெயரும் விசேஷத் தன்மையும் பெனெத்தீனேயா என்ற ஆதன்ஸ் தேசிய பண்டிகையோடு சம்பந்தப்பட்டிருந்தது. இந்தப் பண்டிகையின்போது அத்தேனா தேவதையின் முகத்திரை, (பட்டண வாசலுக்கு அடுத்தாற்போல் இருந்த) ஊர்வல ஸ்தலத்திலிருந்து அக்ராபாலிஸுக்கு இந்தப் பாதை வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் பகட்டாரவாரத்தையும் சிறப்பையும் கற்பனைசெய்து பார்க்க வேண்டுமா? பார்த்தனான் கோவிலின் வெளிச்சுவரில் செதுக்கப்பட்ட ஒரு காட்சி நமக்கு உதவும்: குதிரைப்படை, விரைந்தோடும் இரதங்கள், பலிக்குரிய பசுக்களும் செம்மறியாடுகளும், பலிக்கான பொருட்களைச் சுமந்துசெல்லும் வாலிபரும் இளம் பெண்களும் சித்தரிக்கப்பட்ட கோலாகல ஊர்வலம். ஆதன்ஸ் குடிமக்களும் அவர்களது விருந்தாளிகளும் இந்த ஊர்வலத்தை கண்டுகழித்தனர். இவர்களுடைய வசதிக்கு ஏற்றவாறே அகோராவின் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, தூண் மண்டபங்களின் வாசல் மேடைகளும் படிகளும் ஊர்வலத்தை நன்கு கண்டுகழிக்கும் விதத்தில் திறம்பட அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான வாசற்படிகள் அமைக்கப்பட்டிருந்ததால் அநேக பார்வையாளர்கள் அங்கிருந்து ஊர்வலத்தைக் காண முடிந்தது.
‘திரும்பிய பக்கமெல்லாம் விக்கிரகங்கள்’
இத்தனை பல கோவில்களும், சிலைகளும், நினைவுச் சின்னங்களும் குவிந்திருந்ததால், அப்போஸ்தலன் பவுல், ‘அப்பட்டணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் விக்கிரகங்கள் நிறைந்திருக்கிறதைக் கண்டு எரிச்சலடைந்ததில்’ ஆச்சரியமேதுமில்லையே! (அப்போஸ்தலர் 17:16, NW) அகோராவுக்குள் நுழைந்தவுடன் தான் கண்ட காட்சியால் பவுல் திடுக்கிட்டு போயிருக்க வேண்டும். ஹெர்மீஸ் தெய்வத்தின் ஆண்குறி உருவச் சிலைகள் அவ்வளவு ஏராளமாய் இருந்ததால், அவற்றை வைப்பதற்கு ஒரு முழு மண்டபமே தேவைப்பட்டது. அதுதான் ஹெர்மீஸ் தூண் மண்டபம். வண்ணம் தீட்டப்பட்ட ஹெர்மீஸ் உருவச்சிலைகளும் இருந்தன; அவற்றின் ஆடைகளில் கருவளத்தையும் உயிரையும் குறித்த ஸ்வஸ்திக் சின்னங்கள் இருந்தன. காம தேவதையாகிய வீனஸ் ஜெனிட்ரிக்ஸின் உருவச்சிலையும் ஏராளமான ஆண்குறி அடையாளங்களையுடைய டயோனிஸஸ் உருவச்சிலையும் அங்கிருந்தன. அகோராவின் “புனிதத் தன்மையை” எடுத்துக்காட்டுவதாய், நுழைவாயிலில் ஒரு கல்லும் அதன்மீது ஒரு பாத்திரமும் வைக்கப்பட்டிருந்தது; உள்ளே நுழைவோர் அனைவரும் ஆசார முறையில் சுத்திகரித்துக்கொள்வதற்கு அந்தப் பாத்திரத்தில் “புனிதத்” தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட மத வைராக்கியம் நிறைந்த ஒரு சூழலைக் கவனிக்கையில், பவுல் ஏன் பெரும் ஆபத்தில் இருந்தார் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர் ‘வேற்று தெய்வங்களை அறிவிக்கிறவரென’ சந்தேகிக்கப்பட்டார்; ‘ஒருவனும் தனக்கு இஷ்டமான தெய்வங்களையோ புதிய தெய்வங்களையோ வைத்திருக்கக்கூடாது. பொது இடத்தில் வணங்குவதற்கு அனுமதி இருந்தாலேயொழிய எந்த அந்நிய தெய்வங்களையும் ஒருவன் தனிப்பட்ட முறையில் வணங்கக்கூடாது’ என்று அக்காலத்து சட்டம் அழுத்தம்திருத்தமாக சொன்னது. ஆகவே பவுலை விசாரணைக்காக ஆரியோப்பாகஸுக்கு அழைத்துச் சென்றதில் ஆச்சரியமேதுமில்லை.—அப்போஸ்தலர் 17:18, 19, தி.மொ.
நிர்வாக மையம்
தோலோஸ் எனப்பட்ட ஒரு வட்டவடிவ கட்டிடத்தில் ஆதன்ஸ் அரசின் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அந்நகரின் அநேக தலைவர்கள் இரவில் இங்கேதான் தூங்கினார்கள், ஆகவே பொறுப்புள்ள அதிகாரிகளை எச்சமயத்திலும் சந்திக்க முடிந்தது. வரையறுக்கப்பட்ட எடை கற்களும் அளவைகளும் தொலோஸில் வைக்கப்பட்டன. நிர்வாகத்தின் பல்வேறு இலாகாக்களுக்குத் தேவைப்பட்ட கட்டிடங்கள் அருகில் அமைக்கப்பட்டிருந்தன. தொலோஸின் வடமேற்கே அமைந்த குன்றின் ஒருபக்கம் வெட்டி தளமாக்கப்பட்டு அவைக்கூடம் அமைக்கப்பட்டது. அங்கு 500 அவை அங்கத்தினர்கள் கூட்டம் நடத்தினார்கள். அக்கூட்டங்களில் அவர்கள் கமிட்டி வேலைகளைக் கையாண்டார்கள், அவைக்கான சட்டங்களையும் இயற்றினார்கள்.
மற்றொரு முக்கிய அரசாங்க கட்டிடம் ராயல் மண்டபம் ஆகும். அது ஆதன்ஸின் ராயல் ஆர்க்கன், அதாவது நகரின் மூன்று முக்கிய மாஜிஸ்ட்ரேட்டுகளில் ஒருவரின் அலுவலகமாக இருந்தது. அங்கிருந்து அவர் மத மற்றும் சட்ட சம்பந்தமான அநேக பொறுப்புகளை நிர்வகித்தார். சாக்ரடீஸ், மதத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது, ஒருவேளை இந்த மண்டபத்திற்கே வரும்படி கட்டளையிடப்பட்டிருக்கலாம். இதற்கு எதிர்புற கட்டிடம் ஒன்றின் சுவர்களில் ஆதன்ஸின் பரம்பரை சட்டங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதே மாபெரும் கட்டிடத்திற்கு எதிரே வைக்கப்பட்ட ஒரு கல்லின்மீது, ஒவ்வொரு ஆண்டும் ஆர்க்கன்கள் அல்லது முக்கிய மாஜிஸ்ட்ரேட்டுகள் பதவிப் பிரமாணம் எடுப்பதற்காக நின்றார்கள்.
அட்டலஸ் மண்டபம்
அகோராவின் கட்டிடங்களிலேயே மிக அருமையாய் பாதுகாக்கப்பட்டிருப்பது அட்டலஸ் மண்டபம்தான். பெர்கமுவின் அரசரான அட்டலஸ் இளைஞராக இருந்தபோது (பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில்), ஆதன்ஸின் பள்ளிக்கூடங்களில் படித்தார்; மத்தியதரைக் கடல் பகுதிகளைச் சேர்ந்த அரச குடும்பத்தினர் பலரும் அங்கேயே படித்திருந்தனர். அவர் அரசரானபோது, இந்த சிறப்புவாய்ந்த அட்டலஸ் மண்டபத்தை தான் கல்வி பயின்ற நகருக்கே பரிசளித்தார்.
எழில்மிகுந்த அட்டலஸ் மண்டபம் முக்கியமாய் மக்கள் ஒன்றுகூடி அளவளாவுவதற்கும் பண்டமாற்றத்திற்கும் சௌகரியமாய் இருந்தது. அதன் தளங்களும் பால்கனியும், ஊர்வலங்களைப் பார்வையிட சிறந்த இடங்களாய் அமைந்தன; அதுமட்டுமா, இது புகழ்பெற்ற உலாவும் இடமாக இருந்தமையால் ஷாப்பிங் சென்டராகவும் கொடிகட்டிப் பறந்தது. வருவாய்க்காக அரசு அங்கிருந்த கடைகளை வணிகருக்கு வாடகைக்கு விட்டிருக்கலாம்.
பூர்வ அழகு குன்றாதபடி புதுப்பிக்கப்பட்டிருக்கும் அட்டலஸ் மண்டபம், ஜாமட்ரிக் வடிவமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அதன் வடிவமைப்பிலுள்ள இசைவுப்பொருத்தமும், மேல் தளத்திலும் கீழ் தளத்திலும் அமைந்த தூண்களின் பருமனில் காணப்படும் மெச்சத்தகுந்த வேறுபாடுகளும், ஒளியும் நிழலும் கண்ணாமூச்சி விளையாடுவதும், கட்டிட பொருட்களின் உயர்தரமும் பேரழகும், அம்மண்டபத்தை நிகரற்றதாக்குகின்றன. கண்ணுக்கு அலுப்பு தட்டாமலிருக்க பல உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன. முக்கியமாய் தூண்களின் தலைப்பாகத்திற்கு, டோரிக், அயோனியன், எகிப்தியன் என்ற மூன்று வகை டிசைன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
கலை நிகழ்ச்சிகளுக்கான இடம்
அநேக கலை நிகழ்ச்சிகளுக்காக அங்கே ஒரு கலையரங்கும் இருந்தது. அது, ரோமப் பேரரசனாகிய அகஸ்டஸின் மருமகனாகிய விப்சேனியஸ் அக்ரிப்பா அளித்த பரிசாகும். அதன் முகப்பு பல வர்ண சலவைக் கற்களால் எழிலூட்டப்பட்டிருந்தது. அந்த அரங்கு 80 அடி பரப்பளவுள்ளதாய் ஏறக்குறைய 1,000 பேர் உட்காருவதற்கான இடவசதியுடையதாக இருந்தது; தொடக்கத்தில், அந்த அரங்கின் மண்டபத்தினுடைய உட்புறத்தில் தூண்கள் இல்லை. அக்காலத்தில் இப்படியொரு கூரை அமைத்தது மாபெரும் சாதனைதான்! எனினும், அங்கு நடைபெற்ற பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடித்த உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு லாயக்கற்றவையாகவே இருந்தன.—எபேசியர் 5:3-5.
அறிவுப் பசிமிக்கவர்கள் பான்டேனாஸ் நூல்நிலையத்தை நாடியிருப்பார்கள். அதன் சுவர்களில் ஏராளமான டிராயர்கள் பொருத்தப்பட்டிருந்தன, அவற்றில் கையெழுத்து பப்பைரஸ் சுருள்களும், தோல் சுருள்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த நூலகத்தின் முக்கிய அறை மேற்கே அமைந்திருந்தது. அங்கிருந்து ஒருவர், தூண்களின் வரிசை வழியாக நோட்டமிட்டால் தெரிவதோ தூண் மண்டப முற்றம். சாந்தமயமான அவ்விடம் உலாவுவதற்கும் வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும் ஏற்றதாய் இருந்தது. நூலகத்தில் பின்பற்றவேண்டிய இரு விதிகள் அங்கு பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது: “எந்தப் புத்தகத்தையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை,” “[நூலக] நேரம் ஒரு மணியிலிருந்து ஆறு மணிவரையே.”
இன்றைய அகோரா
சமீப ஆண்டுகளில், பண்டைய கிரேக்கக் கலைகளுக்கான அமெரிக்க கல்லூரி அகோரா முழுவதையும் தோண்டி ஆய்வு செய்திருக்கிறது. ஓங்கி உயர்ந்திருக்கும் அக்ராபாலிஸின் நிழலில் ஹாயாக ஓய்வெடுத்திருக்கும் அகோரா, பூர்வ ஆதன்ஸின் சரித்திரத்தைச் சற்று பார்வையிட விரும்புகிற சுற்றுப்பயணிகளின் விருப்பத்திற்குகந்த ஓர் இடமாகிவிட்டிருக்கிறது.
அகோராவிலிருந்தும் அக்ராபாலிஸிலிருந்தும் பொடி நடை தூரத்திலுள்ள மொனாஸ்டிராக்கி மார்க்கெட்டில் பழைய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மற்றொரு கண்கவர் உலகம் எனலாம். அங்குள்ள கிரேக்க கலைப் பொருட்களும் மத்தியக் கிழக்கத்திய சந்தைவெளி சூழலும் பேரப் பேச்சுக்களும் பார்வையாளரை மலைக்கவைக்கின்றன, அதேசமயத்தில் அவர்களை மகிழ்விக்கவும் செய்கின்றன. அதுமட்டுமல்ல, பார்வையாளர்கள் அங்கு யெகோவாவின் சாட்சிகளையும் காணலாம். அவர்கள் 1,900 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போஸ்தலனாகிய பவுல் செய்த அதையே செய்துவருகின்றனர்; அதாவது, தாங்கள் ‘சந்திக்கும்’ நபர்களுக்கு ராஜ்ய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் பிரசங்கித்துவருகின்றனர்.
[அடிக்குறிப்புகள்]
a அயோனியன் என்ற பெயர், நோவாவின் பேரனும், யாப்பேத்தின் மகனுமாகிய யாவானின் பெயரிலிருந்து தோன்றியது.—ஆதியாகமம் 10:1, 2, 4, 5.
[பக்கம் 28-ன் பெட்டி]
ஆதன்ஸில் வணிகம்
அகோரா, அறிவாற்றலுக்கும் நகராட்சிக்குமுரிய உகந்த இடம் மட்டுமல்ல, அப்பட்டணத்தின் முதன்மையான சந்தைவெளியும்கூட. அதிகமான பண புழக்கத்திற்கும் மாஜிஸ்ட்ரேட்டுகளின் நீதி வழுவாத குணத்திற்கும் பெயர்போன ஆதன்ஸ், பிரபல வணிக மையமாயிற்று. அந்த ஆர்க்கன்கள் எல்லா வணிக நடவடிக்கைகளும் நேர்மையாகவும் நியாயமாகவும் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள அதிகாரம் பெற்றிருந்தார்கள்.
திராட்ச மதுபானம், ஒலிவ எண்ணெய், தேன், சலவைக்கல் ஆகியவற்றையும், மண்பாண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட உலோகங்கள் போன்றவற்றையும் ஆதன்ஸ் ஏற்றுமதி செய்தது. பண்டமாற்றாக, முக்கியமாய் கோதுமையை அது இறக்குமதி செய்தது. ஆட்டிக்கா (ஆதன்ஸைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு) அதன் குடியிருப்பாளர்களுக்கு தேவையான போதிய சரக்குகளை உற்பத்தி செய்யாததால், வணிகப் பண்டமாற்று விதிகள் கண்டிப்பானவையாக இருந்தன. பிரேயஸில் (ஆதன்ஸின் துறைமுகப்பட்டிணத்தில்) இருந்த சந்தை, அந்தப் பட்டணத்திற்கும் படைக்கும் அளிப்பதற்கு போதுமான புது சரக்குகளை எப்போதும் வைத்திருக்க வேண்டியிருந்தது. உணவு தட்டுப்பாட்டின்போது கொள்ளை லாபம் ஈட்டும்படி பண்டங்களை பதுக்கி வைத்து பின் விலையை உயர்த்தி விற்பதற்கு வியாபாரிகள் அனுமதிக்கப்படவில்லை.