மாரத்தான் யுத்தம்—ஒரு உலக வல்லரசின் தலைகுனிவு
கிரீஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
கிரீஸிலுள்ள ஆதன்ஸுக்கு வடகிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மாரத்தான் சமவெளியைச் சுற்றியுள்ள மலை அடிவாரத்திற்கு நவீன சுற்றுப்பயணி ஒருவர் இறங்கி வந்தவுடனே அங்கு நிலவியிருக்கும் நிசப்தத்தினாலும், குலையா அமைதியினாலும் ஆட்கொள்ளப்பட்டவராக உணருகிறார். இந்த இடம் வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு போருக்குக் களமாக பயன்பட்டது என்று ஒருவரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. மெசப்பட்டோமிய உலக வல்லரசு ஐரோப்பாவுக்குள் தானேயும் முன்னேறுவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய போர் இதுவே. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இதை, “மேற்கத்திய நாகரீகத்தின் வரலாற்றிலேயே மிக முக்கியமான போர்களில் ஒன்று” என்றழைக்கிறது. “வரலாற்றின் வியக்கத்தக்க மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று” என்பதாக வரலாற்று ஆசிரியர் உவில் ட்யூரன்ட் விவரிக்கிறார்.
ஒரு உலக வல்லரசுக்குச் சவால் விடப்பட்டது
தானியேல் புத்தகத்தில் உள்ள பைபிள் தீர்க்கதரிசனங்கள் உலக வல்லரசுகளின் ஆதிக்கத்தையும், விரிவாக்கத்தையும், ஒன்றன்பின் ஒன்றான தொடர்ச்சியையும் மிகவும் விவரமாக வர்ணித்துக் காட்டுகின்றன. மேதிய-பெர்சிய உலக வல்லரசைப்பற்றி அடையாள அர்த்தமாக ஆனால் மிகப் பொருத்தமாக எழுதினார் தானியேல்: “கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; . . . எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.”—தானியேல் 7:5.
இது நிஜமாகவே நடந்தேறிற்று. பொ.ச.மு. சுமார் ஆறாவது நூற்றாண்டின் பிற்பகுதியில், மேதிய-பெர்சிய வல்லரசின் ஆட்சி அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. அப்போது தோற்கடிக்கவே முடியாததாக தோன்றிய அதன் படைகள், கோரேசு மற்றும் முதலாம் தரியுவின் தலைமையில் லிடியாவினூடே மேற்கு நோக்கி அடித்து நொறுக்கிக்கொண்டு போயின. கிரீஸின் வடக்கே அமைந்துள்ள த்ரேஸ், மாசிடோனியா ஆகிய இரண்டு பட்டணங்களுமே வலுக்கட்டாயமாக கீழ்ப்படுத்தப்பட்டன. இதனால் கிரேக்க மொழி பேசிய உலகத்தில் பெரும்பாலும் பாதி ஏற்கெனவே பெர்சிய ஆதிக்கத்தின்கீழ் வந்திருந்தது என்பதை அர்த்தப்படுத்தியது. ஏனென்றால் லிடியாவைக் கைப்பற்றியதன் மூலம் லிடிய ஆதிக்க வரம்பிற்குள் இருந்துவந்த ஐயோனிய கடற்கரையில் அமைந்திருந்த கிரேக்க நகரங்களையும் பெர்சியர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டனர்.
படைகளால் சூழப்பட்ட கிரேக்க ஐயோனிய நகரங்களிடமிருந்து உதவிவேண்டி வந்த கூக்குரலுக்கு நகர நாடுகளாகிய ஆதன்ஸும் எரெட்ரேயாவும் மட்டுமே உதவிக்கரம் நீட்டின. ஆயினும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெர்சிய படைகள் உள்ளே புகுந்து, எதிர்த்தெழும்பிய ஐயோனியர்களை அடித்து நொறுக்கி கீழ்ப்படுத்துவதிலிருந்து தடை செய்யவில்லை. மேலும், ஐயோனிய எதிராளிகளுக்கு உதவி செய்ததற்காக கிரேக்க நகர நாடுகளை தண்டிக்கவேண்டும் என்று தரியு தீர்மானித்தான்.
ஆதன்ஸும், ஸ்பார்ட்டாவும், எரெட்ரேயாவும் பெர்சியாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற அசட்டையாக மறுத்தபோது, பெர்சியாவின் வல்லமைவாய்ந்த குதிரைப்படையும் காலாட்படையும் பொ.ச.மு. 490-ன் கோடைகாலத் துவக்கத்தில் கிரீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆகஸ்டில் பெர்சியர்கள் ஆதன்ஸுக்கும் அதன் ஆட்சிப் பகுதியாகிய அட்டிக்காவுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தனர்.
போர்த்திட்டம் வகுத்தலில் பிரச்சினைகள்
பெர்சியர்கள் மாரத்தானைச் சென்றடைந்து, பிறகு ஆதன்ஸிலிருந்து வெறும் 42 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அட்டிக்காவின் கிழக்குக் கடற்கரையின் சதுப்புநில சமவெளியைக் கடந்து சென்றனர். அத்தேனியர்களால் எப்படியோ வெறும் 9,000 காலாட்படை வீரர்களையும் பிளட்டியாவிலிருந்து இன்னும் 1,000 வீரர்களையும் மட்டுமே சமாளித்துத் திரட்ட முடிந்தது. ஆகவே குதிரைப்படையின் அல்லது வில்வீரர்களின் எந்த உதவியுமின்றி ஆதன்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது.a ஸ்பார்ட்டாவின் உதவியை அவர்கள் நாடியிருந்தபோதிலும், அவர்களுடைய கூக்குரல் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று—ஸ்பார்ட்டா மக்கள் அப்பொல்லோ கடவுளைக் கனப்படுத்தும் மத விழாக்களைக் கொண்டாடுவதில் மூழ்கிக்கிடந்தனர். இதன் காரணமாக, தங்களுடைய குறைந்த படைபலத்தை வைத்து அத்தேனியர்கள் ஒத்தையாகவே பெர்சியர்களோடு சண்டையிட வேண்டியிருந்தது.
போர்த்திட்டம் வகுப்பதில் உட்பட்டிருக்கும் விவகாரங்களை வாக்கெடுப்பு முறையில் தீர்மானிக்க, வித்தியாசமான பத்து தளபதிகள் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டனர். இப்போது அவர்கள் உடனடியாக தீர்க்கவேண்டிய இரண்டு விவகாரங்களைத் தீர்மானிக்கும் அவசியம் ஏற்பட்டது. முதலாவதாக, ஆதன்ஸ் நகரத்தைப் பாதுகாக்க தங்களுடைய படைகளை ஆதன்ஸிலேயே அணிவகுத்து நிற்கும்படி செய்யவேண்டுமா, அல்லது பெர்சியர்களைத் திறந்தவெளி பரப்பில் எதிர்கொள்ள வேண்டுமா? ஆதன்ஸ் நகரத்திற்கு பாதுகாப்பிற்காக பலமான அரண்கள் இல்லாததை மனதில்கொண்டு, பெர்சியரை மாரத்தானில் எதிர்த்துப் போராட அந்தக் கமிட்டி பெரும்பான்மையாக வாக்களித்தது.
இரண்டாவதாக, நிலைமைகள் தங்களுக்கு எதிராக இருந்தபோதிலும்—முக்கியமாக பெர்சியர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும்போது—தாங்கள் அவர்களைத் தாக்கவேண்டுமா? அல்லது அவர்கள் பெர்சியர்களின் கடுமையான தாக்குதலை வெற்றிகரமாக எதிர்ப்படுவதற்கு ஸ்பார்ட்டா மக்கள் எப்படியாவது விரைவில் வந்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்கள் காத்திருக்க வேண்டுமா?
தளபதி மில்ட்டையடிஸ் —ஒரு போர்த்திட்ட வல்லுநர்
தலைவர் என்ற பாகத்தை வகிக்க தோன்றிய ஒரு முக்கிய நபர் கிரேக்க தளபதி மில்ட்டையடிஸ் ஆவார். இவர் அனுபவம் மிக்க, புதுமுறைப் புகுத்தும் ஒரு ராணுவ தலைவராக இருந்தார். வடக்கே இதற்குமுன் சண்டைகள் எழுந்தபோது பெர்சிய ராணுவத்தின் தரப்பில் யுத்தம் செய்த தலைவராகவும் இருந்தார். ஆகவே பகைவரைப்பற்றி நேரடியாக அவருக்குத் தெரியும். பெர்சிய ராணுவத்தின் அமைப்பைப்பற்றி மட்டுமல்லாமல், அவர்களுடைய கருவிகளைப் பற்றியும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, அவர்களுடைய போர் சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றியும் மிக நன்றாக அறிந்திருந்தார். கூடுதலாக, போருக்கு முன்னான நாட்களின்போது, போர்க்களத்தின் சுற்றுப்புறங்களை மதிநுட்பத்தோடு மிக கவனமாக ஆராய்ந்தார்.
உடனடியாக செயல்பட வேண்டிய தேவையையும் மில்ட்டையடிஸ் உணர்ந்தார். ஏனென்றால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட அத்தேனிய குடியாட்சியினுள்ளேயே, ஆதன்ஸ் தோல்வியடைவதை வரவேற்கக் காத்திருந்த பெர்சிய ஆதரவாளர்களாலான பிரிவுகள் இருந்தன. யுத்தத்திற்கு முந்தின இரவு, பெர்சிய தேசத்துரோகி ஒருவன் கிரேக்க முகாமுக்குள் ஒளித்து ஓடிவந்து, பெர்சிய குதிரைப்படை தற்காலிகமாக திருப்பி அனுப்பப்பட்டது என்ற செய்தியைக் கொடுத்தான். ஒரு ஊகத்தின் பிரகாரம், மாரத்தானில் கிட்டத்தட்ட நிச்சயமாக அடையும் வெற்றிக்குப் பிறகு உடனடியாக ஆதன்ஸ் நகரைக் கைப்பற்ற முடியும்படி அட்டிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து ஆதன்ஸ் நகரைத் தாக்குவதற்காக பெர்சிய குதிரைப்படை புறப்பட்டது. காரணம் என்னவாக இருந்தாலும், அத்தேனிய காலாட்படை வீரர்களை எதிர்ப்பட்ட மிகப் பெரிய ஆபத்து நீக்கப்பட்டது.
விடியற்காலையில் கிரேக்க காலாட்படை அணிவகுப்புகள் தாக்கின. (பக்கம் 24-ல் உள்ள பெட்டியைக் காண்க.) பிரம்மித்துப்போன பெர்சியர்கள் பின்வாங்கினார்கள். ஆனால் சீக்கிரத்தில் எதிர்த்துத் தாக்கி கிரேக்க யுத்த அணிவகுப்பின் மையத்தை ஊடுருவிச் சென்றனர். இவ்வாறு பெர்சியர்கள் மில்ட்டையடிஸின் சூழ்ச்சிநயத்துடன் விரிக்கப்பட்ட வலையில் தெரியாத்தனமாக சிக்கிக் கொண்டனர்! அவர் கிரேக்க அணியின் பக்கங்களில் வீரர்களின் வரிசைகளை அதிகரிப்பதன்மூலம் பலப்படுத்தி, வேண்டுமென்றே மையத்தை பலமற்றதாக விட்டுவிட்டார். இப்போது பக்கவாட்டில் உள்ள பலம்வாய்ந்த அணியினர் பெர்சியர்களைத் திடீரென்று சுற்றிலும் அடித்து நொறுக்கினர். எஞ்சியவர்கள் எப்படியோ சமாளித்து தாக்குதலைத் தப்பித்து, தலைதப்பினால் போதும் என்று தங்களுடைய கப்பல்களுக்குத் திரும்ப ஓடிப் போகும்வரை பெருவாரியாக வீரர்களைக் கொன்று குவித்தனர். அதன் முடிவு பயங்கரமான படுகொலையாக மாறிற்று. உயிரிழந்த பெர்சிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 6,400-ஐ அடைந்தது, ஆனால் அத்தேனியர்களோ 192 வீரர்களை மட்டுமே இழந்தனர்.
பழங்காலக் கதை கூறுகிறபடி, கிரேக்க வெற்றியின் செய்தி விரைவில் ஒரு தூதுவன் மூலம் ஆதன்ஸுக்குத் திரும்ப அனுப்பப்பட்டது. அவனுடைய பெயர் ஃபைடிப்படிஸ் என்பதாக தவறான ஒரு பாரம்பரியக் கதை சொல்கிறது. ஆனால் உண்மையில், போருக்கு முன்பே உதவி கேட்பதற்காக ஃபைடிப்படிஸ் ஆதன்ஸிலிருந்து ஸ்பார்ட்டாவுக்கு ஓடியிருந்தான். மற்றொரு கிரேக்க இளைஞன் மாரத்தானிலிருந்து ஆதன்ஸுக்கு 42 கிலோமீட்டர் தூரம் ஓடி, சென்றடைந்ததும், “களிகூருங்கள், நாம் வெற்றி வாகை சூடிவிட்டோம்!” என்று உரக்கக் கூறியதும் விழுந்து உயிர்விட்டான் என்பதாகவும் பழங்கால கதை கூறுகிறது. இதுவே முதல் மாரத்தான்—ஆகவே இவ்வார்த்தையின் தொடக்கம்—என்பதாக சொல்லப்படுகிறது. நாம் அறிந்திருக்கும் நவீனகால நீண்டதூர ஓட்டப் பந்தயத்திற்கான முன்னோடியை ஏற்படுத்தியது இதுவே.
பெர்சிய கப்பல்களில் சில தீக்கிரையாக்கப்பட்ட போதிலும், அவர்களுடைய படையின் 600 கப்பல்களில் பெரும்பான்மையானவை அட்டிக்காவின் தென்கோடியில் அமைந்துள்ள காலோனா முனையைச் சுற்றி ஆதன்ஸைச் சென்றடைந்தன. எனினும், வெற்றிவாகை சூடிய அத்தேனிய ராணுவம் அங்கு முதலாவதாகச் சென்றடைந்து அவர்களை மீண்டும் எதிர்த்தது. பெர்சியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சாதகமற்ற அனைத்து சூழ்நிலைமைகளுக்கு மத்தியிலும் அத்தேனியர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்!
முக்கியமாக ஸ்பார்ட்டாவின் எந்த உதவியுமேயின்றி வெற்றியடைந்ததால் ஆதன்ஸ் குதூகலித்தது.
இந்த யுத்தத்தின் முக்கியத்துவம்
மாரத்தானிலும் டெல்ஃபையிலும் சலவைக்கல், வெண்கலம் ஆகியவற்றாலான நினைவுச் சின்னங்கள் அத்தேனியர்களின் வெற்றியை அழியாத ஒன்றாக ஆக்கியிருக்கின்றன. வரலாற்று ஆசிரியர் பாசேனியஸ் சொல்கிறபடி, 650 வருடங்களுக்குப்பின்னும் சுற்றுப் பயணிகள் அந்தப் போர்க்களத்தைக் கடக்கும்போது, யுத்தம் செய்துகொண்டிருக்கும் வீரர்களின் பேய்த்தனமான பேரிரைச்சலைக் கேட்டதாக நம்பினர்.
பைபிளின் நோக்குநிலையில் இந்த மாரத்தான் யுத்தம் ஏன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது? தானியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் கிரேக்க “வெள்ளாட்டுக்கடா” முடிவாக மேதிய-பெர்சிய “இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா” மீது நாளடைவில் செலுத்தப்போகும் ஆதிக்கத்தை வெகு காலத்திற்கு முன்னமே மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக இது இருந்தது.b—தானியேல் 8:5-8.
போர்க்களத்தில் இன்னும் நிற்கும் மாரத்தான் சமாதியை ஒருவர் ஏறெடுத்துப் பார்க்கையில், அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றுக்கான இடைவிடா வேட்கையில் மரணத்திலும் துயரத்திலும் மனிதவர்க்கம் எதிர்ப்பட்டிருக்கும் பேரிழப்பை நினைவுக்குக் கொண்டுவருகிறது. வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்கள், நிசப்தம் நிலவும் போர்க்களங்கள், தனிமையில் நிற்கும் சமாதிகள் ஆகியவை, உலக அரசியலுக்கும் ஆதிக்கத்திற்குமான போராட்டத்திற்கும் பலியான “பெருந்தகைகள்,” “வீரர்கள்,” “தோல்வியுற்றவர்கள்” ஆகியோர்களால் நிரம்பியிருக்கின்றன. இருந்தபோதிலும், அரசியல் ஆதிக்கத்திற்கான அனைத்துப் போராட்டங்களும் ஓய்ந்துபோகிற சமயம் வெகு அண்மையில் உள்ளது. ஏனென்றால், கடவுள் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
[அடிக்குறிப்புகள்]
a மாரத்தான் யுத்த வீரர்களின் எண்ணிக்கைகள் சர்ச்சைக்குள்ளாகி இருப்பதாகத் தெரிகிறது. கிரேக்கர்கள் தரப்பில் “சுமார் இருபதாயிரம் வீரர்களும், பெர்சியர்களின் தரப்பில் ஒருவேளை ஒரு லட்ச வீரர்களும் இருந்தனர்,” என்பதாக உவில் ட்யூரன்ட் கூறுகிறார்.
b தானியேல் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றிய கூடுதலான தகவல்களுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக” ஆங்கில புத்தகத்தில் 190-201 பக்கங்களைப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
காலாட்படை வீரனும் காலாட்படை அணிவகுப்பும்—வெற்றியின் சூத்திரம்
அத்தேனியர்களின் வெற்றிக்குக் காரணமாயிருந்த இரண்டு முக்கிய காரணிகளைப்பற்றி கூறுகையில், எ சோவரிங் ஸ்பிரிட் என்ற புத்தகம் சொல்கிறது: “ஹாப்லைட்கள் என்றழைக்கப்பட்ட கிரேக்க காலாட்படை வீரர்கள், பெர்சிய காலாட்படை வீரர்கள் வைத்திருந்ததைவிட உறுதியான போர்க் கவசங்களையும், கெட்டியான கேடயங்களையும், நீளமான ஈட்டிகளையும் வைத்திருந்தனர். ஆனால் அதைவிட குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவர்கள் அணிவகுத்துப் போரிடுகையில், 12 வரிசைகள்வரை நின்று இயந்திரங்களைப் போன்ற திறமையோடு சண்டையிட்டனர். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள படை வீரர்கள் ஒருவரோடொருவர் மிகவும் நெருங்கி நிற்கையில் அவர்களுடைய கேடயங்கள் கிட்டத்தட்ட தொடர்ச்சியான ஒரு சுவரைப்போல காட்சியளித்தன. அத்தகைய ஒரு காட்சியை எதிர்ப்பட்டதும், பண்டைய உலகில் அறியப்பட்டிருந்த அணிகளிலேயே கிரேக்க காலாட்படை அணிவகுப்பு ஏன் நடுங்கவைக்கும் போர் இயந்திரமாக இருந்தது என்பதை பெர்சியர்கள் புரிந்துகொண்டனர்.”
[படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck
[பக்கம் 23-ன் படம்]
மாரத்தான் சமவெளி. உள்படங்கள்: யுத்தத்தில் மரித்த 192 அத்தேனிய வீரர்களுக்கு நினைவுச் சின்னம்