பிளட்டியா போர்—“கரடி” அடித்த கரணம்
கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
அந்தக் கோயிலின் அழிபாடுகள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம். கைவிடப்பட்ட கற்சிலைகளும் ஜல்லியினால் அமைக்கப்பட்ட பாதைகளும் மயான அமைதியில் கேட்பாரில்லாமல் கிடக்கின்றன. கிரீஸிலுள்ள ஆதன்ஸுக்கு வடமேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசோபோஸ் நதியின் கரையோரத்திற்கும் மலையடிவாரத்திற்கும் இடையே அந்த வெறுமையாக்கப்பட்ட சமவெளி பரம்பியிருக்கிறது.
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இடத்தில்தான், பெர்சியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையே மூண்ட கடைசி யுத்தங்களில் ஒரு யுத்தம் நடைபெற்றது. ‘இந்த இடத்திலா யுத்தம் நடந்தது?’ என்பதாக கேள்வி கேட்குமளவுக்கு மாறிப்போன இடத்தில் நாம் தற்போது நிற்கிறோம். பெர்சியர்களின் யுத்த சரித்திரத்திலேயே மிகப்பெரிய தரைப்படை யுத்தம் இதுவே—பிளட்டியா போர்.
நேருக்கு நேர் மோதுவதற்கான அறிகுறிகள்
நாடகங்களில் கச்சிதமாக வசனம் எழுதுவதைப்போல, பைபிளில் இவற்றைப் பற்றி அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள், நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே உலக வல்லரசுகளின் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் முன்னறிவித்தன. தீர்க்கதரிசனத்தில் மேதிய-பெர்சிய வல்லரசு ஒரு கரடியாகவும், ஒரு ஆட்டுக்கடாவாகவும் அடையாளப்படுத்திச் சொல்லப்பட்டது. அதற்கு இசைவாக புதிய பிராந்தியங்களுக்கான தனது தாகத்தை தணிப்பதற்காக, முக்கியமாக மேற்கத்திய பகுதிகளை இவ்வல்லரசு ஆக்கிரமிப்பு செய்தது. (தானியேல் 7:5; 8:4) அரசனாகிய முதலாம் தரியுவின் தலைமையின் கீழ் பெர்சிய படைகள், கிரீஸுக்கு எதிராக பொ.ச.மு. 490-ல் யுத்தம் தொடுத்தன. மாரத்தானில் நடைபெற்ற இந்த யுத்தத்தில், பெர்சிய படைகள் படுதோல்வி அடைந்தன. நான்கு வருடங்கள் கழித்து தரியுவும் மரணமடைந்தார்.
தானியேல் தீர்க்கதரிசனத்தில் “மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் “கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடு[ம்]” பெர்சியாவின் நாலாம் இராஜாவை பற்றியும் அத்தீர்க்கதரிசனம் கூடுதலாக சொன்னது. அத்தாட்சிகளின்படி தரியுவின் குமாரனாகிய ஸெர்க்ஸெஸ்தான் அந்த இராஜாவாக நிரூபித்தார். (தானியேல் 11:2) மாரத்தானில் பெர்சியர்களுக்கு ஏற்பட்ட படுதோல்வியை மனதில் கொண்டவராக, இந்த ஸெர்க்ஸெஸ் பழிக்குப்பழி வாங்கத் துடித்தார். ஆகவே, கிரேக்க நாட்டிற்கு எதிராக பொ.ச.மு. 480-ல் மிகப்பெரிய படையை திரட்டினார். தெர்மோபைலியில் நடந்த கடுமையான யுத்தத்தில் இவருடைய படை அதிகமான இழப்பிற்குபின் வெற்றிவாகை சூடியது. ஆனால் அதைத் தொடர்ந்து இறுதியாக சாலமியில் நடந்த யுத்தத்தில் மகாமோசமான தோல்வியைத் தழுவியது. a
மார்டோனீயட்ஸ்—தயங்கிய தளபதியா?
தோல்வியினால் திகைத்துப்போனார் ஸெர்க்ஸெஸ். கிரீஸில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை நிர்வகிப்பதற்காக, தனது 3,00,000 படை வீரர்களை, அனுபவசாலியான மார்டோனீயட்ஸின் வசம் ஒப்படைத்துவிட்டு, உடனடியாக லிடியாவிற்கு திரும்பினார். குளிர்காலத்தை தெஸ்ஸலேயில் கழித்த மார்டோனீயட்ஸ், ஆத்தன்ஸுக்கு ஒரு தூதரை அனுப்பினார். முழுமையான மன்னிப்பை ஆத்தன்ஸுக்கு வழங்கி, எரித்தழிக்கப்பட்ட கோயில்களை மீண்டுமாக கட்டிக்கொள்ளவும், நிலப்பரப்புகளை மறுபடியும் சீரமைக்கவும் தன்னாட்சி உரிமையுடைய சுதந்திரமான நகரமாக சரிசமமான கூட்டுறவையும் வாக்களிக்கும் செய்தியை அந்த தூதர் எடுத்துச்சென்றார். இருப்பினும் ஆத்தன்ஸ் நகரத்தினர் அந்த திட்டத்தை நிராகரித்தவர்களாக, இராணுவ உதவிக்காக ஸ்பார்டாவினிடத்தில் திரும்பினார்கள்.
மார்டோனீயட்ஸுக்கு பரிவு காண்பித்த கிரேக்க அதிருப்தியாளர்கள், அவருக்கு ஒரு ஆலோசனையை வழங்கினார்கள். முரண்டுபிடிக்கும் கிரேக்கர்களை வெற்றி கொள்வதற்கு, அவர்களுடைய தலைவர்களுக்கு லஞ்சம் கொடுக்குமாறு சொன்னார்கள். ஆனால் மார்டோனீயட்ஸ் இந்த ஆலோசனையை புறக்கணித்தார். இருந்தபோதிலும் கிரேக்கர்களோடு நேரடியான மோதலை தவிர்ப்பதற்கு அவர் இன்னமும் முயற்சித்தார். அதன்காரணமாக சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில், ஆத்தன்ஸ் நகரத்தார் சரணடைவதற்கு மீண்டுமாக வாய்ப்பளித்தார். இருப்பினும் ஆத்தன்ஸ் நகரத்தார் இந்த எல்லா திட்டங்களையும் நிராகரிப்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
இறுதி நடவடிக்கை
இதன் விளைவாக பெர்சியாவிற்கும் கிரீஸுக்கும் இடையேயான தகராறு முற்றிக்கொண்டே போனது. இதன் இறுதியான காட்சி பொ.ச.மு. 479-ல் ஆகஸ்ட் மாதத்தில் பிளட்டியாவில் அரங்கேறியது. ஆத்தேனியர்கள், ஸ்பார்டாவினர் மற்றும் கிரேக்க நகரங்களைச் சேர்ந்த படைகள் அடங்கிய 40,000 கிரேக்க காலாட்படையினர் ஸ்பார்டாவின் ஜெனரல் பாசானியாஸ் தலைமையில் அணிவகுத்தனர். இந்தப்படை மார்டோனீயட்ஸின் வலிமையான 1,00,000 வீரர்களடங்கிய படையினரை எதிர்படுவதற்கு தயாரானது.
அசோபோஸ் ஆற்றங்கரைக்கு அப்பால், அந்த இரண்டு படைகளும் பூசலில் ஈடுபட்டன. நேரடியாக மோதுவதற்கு இரண்டு படைகளுமே பயந்தபடியால் மூன்று வாரங்கள் எந்த இலக்கும் இல்லாமல் கடந்தன. இருநாடுகளிலும் இருந்த குறிசொல்பவர்கள், முதலில் தாக்காமல் தற்காப்பு நிலையில் இருக்கும் படைக்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியளித்ததாக புராணக் கதைகள் சொல்லுகின்றன. இருப்பினும் பெர்சியர்களின் குதிரைப்படைகள் கிரேக்கர்களுக்கு தொடர்ந்து தொல்லையளித்தன. தேவையான உணவுப்பண்டங்களை எடுத்துச்செல்லும் ஊர்திகளை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், தண்ணீருக்காக கிரேக்கர்கள் நம்பியிருந்த கிணறுகளில் விஷத்தையும் கலந்தனர்.
யுத்தம் சீக்கிரத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்பதாக மார்டோனீயட்ஸ் நினைத்தார். ஆனால் இந்த பெர்சிய தளபதி எதிரிகளின் போர்புரியும் திறமைகளை குறைவாக எடைபோட்டுவிட்டார். மகத்தான வெற்றி உடனடியான கிடைத்துவிடும் என்பதாக இந்த தளபதி பகற்கனவு கண்டார். இதன்காரணமாக தனது படைகள் ஆற்றை சீக்கிரமாக கடந்து சென்று தாக்குவதற்கு உத்தரவிட்டார்.
பெர்சியர்கள் பிரம்பு கேடயத்தை பயன்படுத்தினர், இவற்றிற்கு பின்னால் இருந்து தங்களது எதிரிகள்மீது அம்புகளை மழையாய் பொழிந்தனர். பெர்சியர்களுக்கு ஆதரவாயிருந்த கிரேக்க அதிருப்தியாளர்கள் 8,000 பேர் அத்தேனியர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். அதேசமயம் மார்டோனீயட்ஸின் பலமான படைகள் 11,500 ஸ்பார்டாவினரை தாக்கின. அம்பு மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்கள் தங்களது கேடயங்களுக்குப் பின்னால் குனிந்துகொண்டனர். இருப்பினும் கிரேக்கருடைய காலாட்படையினர் நன்கு திட்டமிட்ட எதிர்தாக்குதலை செய்தனர். தங்களது நீண்ட வேல்களோடும் கனமான உடற்கவசத்தோடும் பெர்சியர்களுக்கு எதிராக தைரியமாக முன்னேறினார்கள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பெர்சியர்கள் பின்வாங்கினர். இதற்கிடையில் ஆத்தேனியர்கள் தங்களுக்கு எதிராக வந்த படையை தாக்கி வெற்றிகண்டனர். குதிரைப் படையின் பாதுகாப்பில் மார்டோனீயட்ஸின் படைகள் அவசரமாக ஆற்றைக் திரும்பக் கடந்து வந்தன. மார்டோனீயட்ஸ் குதிரையிலிருந்து கீழே தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தன்னுடைய தலைவனை இழந்து, தவித்த பெர்சிய படைகள் நாலாபக்கமும் சிதறி புறமுதுகை காட்டி ஓடின.
மறுபுறம் ஐயோனிய கடற்கரையில் அமைந்திருந்த மைகேல் என்ற இடத்தில் பெர்சியர்களின் கடற்படையின்மீது கிரேக்க கடற்படைகள் மாபெரும் வெற்றியை ஈட்டின. சாலமியில் ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் இவர்கள் தோல்வியடைந்தனர்; அதிலிருந்து மீள்வதற்கு முன்பாக இப்போது படுதோல்வியை தழுவினர். பெர்சியர்களின் ஒட்டுமொத்தமான வலிமையான படைகள், மகா மோசமான தோல்வியை இறுதியில் சந்தித்தன.
கரணமடித்த அந்த “கரடி”
பெர்சியர்களின் இராணுவப் படைகள் ஐரோப்பிய மண்ணில் மறுபடியும் யுத்தம் செய்யவேயில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட படையாக இருப்பதிலிருந்து பெர்சிய படைகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டன. அதற்குபிறகு, “ஸெர்க்ஸெஸ் தன்னுடைய தலைநகரங்களிலும் அந்தப்புரத்திலும் மட்டுமே தன் கவனத்தை திருப்பினார். அதற்கு பிறகு, தனது தந்தையின் கட்டிடத் திட்டங்களாகிய அரண்மனைகளையும் பெர்சியர்களின் புகழ்வாய்ந்த பெர்சோபோலிஸ் என்ற தலைநகரத்தில் நினைவு மாளிகைகளையும் எழுப்புவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது. இவற்றைத்தவிர சொல்லும்படியாக அவர் ஒன்றும் சாதிக்கவில்லை” என்பதாக எ சோவரிங் ஸ்பிரிட் என்ற புத்தகம் சொல்கிறது.
ஒருசமயம் பேராவலுள்ள வெற்றிவீரராக திகழ்ந்த இவரது செல்வாக்கு, அரண்மனை வளாகத்தின் பாதுகாப்பில் பெட்டிப் பாம்பைபோல அடங்கிப்போனது. அரசியல் சூழ்ச்சிகளிலும் அரண்மனையில் எழும்பும் கிசுக்கிசுக்களின் பேரில் நடவடிக்கை எடுப்பதிலும் இவரது நேரம்போனது. இங்கேயும்கூட அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பொ.ச.மு. 465-ல், ஒரு சதிகார கொலைக்கூட்டம் அவருடைய சொந்த படுக்கையையே பாடையாக மாற்றியது. ஆம், இறுதியில் அவர் தனது படுக்கையிலேயே படுகொலை செய்யப்பட்டார்.
எ சோவரிங் ஸ்பிரிட் புத்தகம் சொல்கிறது: “அதற்கு பின் வந்த பெர்சிய அரசர்களில் யாரும் சைரஸைப் போலவோ அல்லது தரியுவைப் போலவோ சக்தி வாய்ந்தவர்களாகவோ அல்லது பிரபலமானவர்களாகவோ இருக்கவேயில்லை. இந்தச் சமயத்தில் இருந்த பேரரசுகளைப் பற்றிய முக்கியமான தகவல்களை எழுதிய கிரேக்க எழுத்தாளர்கள்கூட இந்த அரசர்களைப் பற்றி சாதாரணமாகவே குறிப்பிடுகின்றனர். ஸெர்க்ஸெஸ்ஸின் குமாரனாகிய முதலாம் அர்தசஷ்டாவின் ஆட்சி காலத்தில் பெர்சிய பேரரசின் முக்கியமான கருவியாக பணம்தான் செயல்பட்டதே தவிர இராணுவ நடவடிக்கைகள் அல்ல. கிரேக்கர்களின் மத்தியில் பிரச்சினைகளை கிளப்பி விடுவதற்காக தன் ராஜ்யத்தின் நாணயங்களை இவர் பயன்படுத்தினார். மேலும் கிரேக்கர்களின் ஒரு நகர நாட்டிற்கு லஞ்சம் கொடுத்து அவர்களை மற்ற நகரத்துக்கு எதிராக தூண்டிவிட்டார். பின்பு மற்ற நகர நாட்டுக்கு அதேவிதமாக லஞ்சம் கொடுத்து அவர்களுக்குள் பிரச்சினைகளை கிளப்பிவிட்டார். கையில் வில்லை ஏந்தி அம்புக்கூடையுடன் காட்சியளிக்கும் தரியுவின் உருவம் நாணயங்களிலும் தங்க காசுகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. அதனால்தான், கிரேக்கர்கள் அவற்றை கிண்டலாக “பெர்சியனின் வில்லாளர்கள்,” என அழைத்தனர்.”
முடிவாக அழிக்கப்படும் வரையாக, சதித்திட்டமும் கொலைவெறியும் பெர்சிய பேரரசின் அரண்மனையின் இராஜவம்சத்தை இரத்தத்தால் கறைபடுத்தியது. பேரரசின் படுமோசமான வீழ்ச்சி தொடர்ந்தது. ஆட்சி செலுத்துவதற்கான தனது வல்லமையையும் திறமையையும் பெர்சிய அரசர்குலம் இழக்க ஆரம்பித்தது.
இராஜ்யத்தை மீண்டுமாக பலப்படுத்த எடுக்கப்பட்ட கடைசியான நடவடிக்கைகள் மத்தியிலும், மகா அலெக்ஸாந்தரால் அந்த பெர்சிய அரசகுலம் நிர்மூலமாக்கப்பட்டது. சைரஸுக்கு இணையான பேரரசின் கண்ணோட்டத்தையும் குறிக்கோளையும் கொண்டிருந்த அலெக்ஸாந்தர், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் தனது பேரரசை விரிவாக்கத் தொடங்கினார். மீண்டுமாக, பைபிள் தீர்க்கதரிசனத்தின் கடைசியான நுட்ப விபரம் உட்பட எல்லாமே நிறைவேறும்.
[அடிக்குறிப்புகள்]
a இன்னும் கூடுதலான தகவல்களுக்கு விழித்தெழு! மே 8, 1995, இதழில் “மாரத்தான் யுத்தம்—ஒரு உலக வல்லரசின் தலைகுனிவு” என்ற கட்டுரையையும் விழித்தெழு! ஏப்ரல் 8, 1999, இதழில் “ஸெர்க்ஸெஸ்—‘அடிசறுக்கிய யானை’ ” என்ற கட்டுரையையும் காண்க.
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
மேதிய-பெர்சியா மற்றும் கிரீஸ்—இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ந்த சண்டைகள்
பொ.ச.மு.539 மேதிய-பெர்சியா நான்காவது உலகப் பேரரசாக மாறுகிறது. முக்கியமான மூன்று திசைகளில் இருந்த பகுதிகளை இது ஆக்கிரமிப்பு செய்தது: வடக்கு (அசீரியா), மேற்கு (ஐயோனியா) மற்றும் தெற்கு (எகிப்து) (தானியேல் 7:5; 8:1-4, 20)
பொ.ச.மு.500 ஐயோனியாவிலிருந்த கிரேக்கர்கள் (ஆசியா மைனர்) பெர்சிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் செய்தனர்
பொ.ச.மு.490 ஆத்தேனியர்கள் மாரத்தானில் பெர்சியர்களை எதிர்த்து போராடி துரத்தினர்
பொ.ச.மு.482 ஸெர்க்ஸெஸ் “கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்” (தானியேல் 11:2)
பொ.ச.மு.480 தெர்மோபைலியில் நடந்த கடுமையான யுத்தத்தில் பெர்சியர்கள் பலத்த இழப்பிற்குபின் வெற்றிவாகை சூடினர்; ஆனால் சாலமியில் நடந்த யுத்தத்தில் மகாமோசமான தோல்வியைத் தழுவினர்
பொ.ச.மு.479 பிளட்டியாவில் ஆத்தேனியரும் ஸ்பார்டாவினரும் பெர்சியர்களை வென்றனர்
பொ.ச.மு.336 மக்கெதோனியாவின் அரசராக அலெக்ஸாந்தர் பதவி ஏற்கிறார்
பொ.ச.மு331 காக்கமேலாவில் பெர்சிய இராணுவம் மகா அலெக்ஸாந்தரால் தோற்கடிக்கப்பட்டது; கிரீஸ் ஐந்தாவது உலக வல்லரசானது (தானியேல் 8:3-8, 20-22)
[படம்]
பெர்சிய வில்லாளர்
கிரேக்க குதிரைப் படையின் அணிவகுப்பு
[படத்திற்கான நன்றி]
Musée du Louvre, Paris
புகைப்படத்திற்கு நன்றி: British Museum
[பக்கம் 26-ன் பெட்டி]
எல்லா மனித சக்திகளுக்கிடையேயான போராட்டங்களின் இறுதியான விளைவு
“அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” —தானியேல் 2:44
[பக்கம் 25-ன் படம்]
வலிமை மிக்க பெர்சிய படை அழிக்கப்பட்ட பிளட்டியாவின் யுத்தக்களம்