உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 4/8 பக். 25-27
  • ஸெர்க்ஸெஸ்—‘அடி சறுக்கிய யானை’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஸெர்க்ஸெஸ்—‘அடி சறுக்கிய யானை’
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வெற்றியடைய வேண்டும் என்ற வெறியில் ஸெர்க்ஸெஸ்
  • தெர்மோஃபைலே​—⁠கடப்பதற்கு கடினமான குறுகிய நிலம்
  • கொடுங்கனவை ஏற்படுத்திய எஃப்யால்டிஸ்
  • சலாமிஸ்​—⁠“மரச் சுவர்கள்” திறமையை காட்டின
  • பயங்கரத் தோல்வி
  • பிளட்டியா போர்—“கரடி” அடித்த கரணம்
    விழித்தெழு!—1999
  • மாரத்தான் யுத்தம்—ஒரு உலக வல்லரசின் தலைகுனிவு
    விழித்தெழு!—1995
  • மேதிய–பெர்சியா பைபிள் சரித்திரத்தின் நான்காவது மகா உலக வல்லரசு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
விழித்தெழு!—1999
g99 4/8 பக். 25-27

ஸெர்க்ஸெஸ்​—⁠‘அடி சறுக்கிய யானை’

கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

வெந்நீர் ஊற்றுகளையும் கந்தக ஆவியை உமிழும் இயற்கை கீசர்களையும் பார்க்கும் எந்த ஒரு சுற்றுலா பயணியும் அசந்து விடுவார். ஆனால் அவ்விடத்தின் சரித்திரமோ அதைவிட ஆச்சரியமானது. அந்தக் கடலோர நிலப்பகுதியை கடப்பது என்பது அந்த காலத்தில் பெரிய சாதனைதான். தெர்மோஃபைலே என்றழைக்கப்பட்ட அந்நிலப்பகுதிக்கு “சூடான வாசல்கள்” என்று பொருள். இந்த இடத்திலும் இதற்கு தெற்கே இருக்கும் சலாமிஸ் என்ற தீவிலும் அநேக விஷயங்கள் நடந்தன. அந்நிகழ்ச்சிகள், பைபிள் தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறின என்பதற்கு அத்தாட்சியாக திகழ்ந்தன என்பதை அந்தச் சுற்றுலா பயணி அறியும்போது அவருக்கு இன்னும் அதிக பிரமிப்பூட்டுவதாக இருக்கும்.

இவ்விடத்து வரலாற்றையும், இந்த இடத்தைப் பற்றி தானியேல் என்ற பைபிள் புத்தகத்தில் முன்னுரைத்த தீர்க்கதரிசனங்களையும், அவை துல்லியமாக நிறைவேறின என்பதையும் அறியும்போது ஆச்சரியம் மேலிடும். பைபிள் கடவுளுடைய வார்த்தைதான் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சிகள் அவை. இதற்கு, தானியேல் 11-ஆம் அதிகாரத்தில் ஓர் அருமையான உதாரணத்தைப் பார்க்கலாம். ‘மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்தில்’ சுமார் பொ.ச.மு. 538-⁠ல் தானியேலுக்கு தீர்க்கதரிசனங்கள் அளிக்கப்பட்டன. (தானியேல் 11:⁠1) பின்னர் அவை படிப்படியாக அநேக நூற்றாண்டுகளாக நிறைவேற்றம் அடைந்தன.

ஒரு குறிப்பிட்ட பெர்சிய ராஜாவைக் குறித்து தானியேல் 11:2 இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தது: “இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதன்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.”

இரண்டாம் சைரஸ், இரண்டாம் கேம்பிஸஸ், முதலாம் தரியு, ஆகியோரைத் தொடர்ந்து நான்காம் ராஜாவானவர்தான் முதலாம் ஸெர்க்ஸெஸ்; இவர்தான் பைபிள் புத்தகமாகிய எஸ்தரில் அகாஸ்வேரு என்று அழைக்கப்பட்டவர் என்பது தெளிவாக இருக்கிறது. அவர் உண்மையில், ‘கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும்’ எழுப்பிவிட்டார் என்பது உண்மையா? அதனால் ஏற்பட்ட விளைவுதான் என்ன?

வெற்றியடைய வேண்டும் என்ற வெறியில் ஸெர்க்ஸெஸ்

தன் தகப்பனாகிய தரியு மன்னனின் காலத்தில் மாரத்தான் என்ற இடத்தில் நடந்த போரின் விளைவை ஸெர்க்ஸெஸ் சமாளித்து எதிர்நீச்சல் போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. aஆகவே அவர் தன்னுடைய ஆட்சியின் ஆரம்பகாலங்களில் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் நிலவிய கலகங்களை சமாளித்து “தன் ஐசுவரியத்தினால்” பலமடைந்தார்.

ஸெர்க்ஸெஸின் அரண்மனையிலிருந்த அலுவலர்கள் அவரிடம் கிரீஸை வெல்ல வேண்டும் என்பதாக தொடர்ந்து தூபம் போட்டனர். அவருக்கும் அந்த எண்ணம் மனதில் உழன்று கொண்டிருந்தது. ஆகவே பொ.ச.மு. 484-⁠ல் தொடங்கி மூன்று ஆண்டுகளில் பெர்சியாவின் ஆட்சியில் இருந்த எல்லா ஆளுநர்களின் பிராந்தியங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ராணுவ வீரர்களை கொண்டு வந்து குவித்தார்; அந்த ராணுவம் உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று என்பதாக அறிக்கை செய்யப்பட்டது. கிரேக்க சரித்திர ஆசிரியன் ஹெரோடெட்டஸின் வார்த்தைகளின்படி ஸெர்க்ஸெஸின் காலாட்படையிலும் கப்பற்படையிலும் மொத்தமாக கிட்டத்தட்ட 26,41,610 வீரர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். b

அதே சமயம் கிரேக்கர்களும் வரிந்துகட்டிக்கொண்டு யுத்தத்திற்கு தயாரானார்கள். கடல் பயணத்தில் அவர்கள் பழக்கப்பட்டவர்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அவர்களது கப்பற்படை அவ்வளவு சக்தி வாய்ந்ததல்ல. இப்போதோ பெர்சியர்களின் படையெடுப்பிற்கு பதிலடி கொடுப்பதற்காக, டெல்பியிலிருந்த கோயிலில் குறிகேட்கையில் அவர்கள் “மரச் சுவர்களை” கட்டவேண்டும் என்று குறி சொல்லப்பட்டது. அதன்படி எதிர்த்து போரிட ஓர் கப்பற்படையை ஆதன்ஸ் தன்பங்குக்கு உருவாக்கியது.

லாரியம் என்ற இடத்தில் இருந்த அந்த நாட்டின் சொத்தாகிய சுரங்கங்களில் வெள்ளி ஏராளமாகக் கிடைத்தது. அதில் கிடைத்த எல்லா லாபத்தையும் வைத்து 200 கப்பல்களைக் கட்டலாம் என்று தெமிஸ்டோக்கிள்ஸ் என்ற ஆதன்ஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதி அப்போதிருந்த அசெம்பிளியை வற்புறுத்தினார். முதலில் இப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தயங்கினாலும் பின்னர் 30 கிரேக்க நகர-நாடுகள் அடங்கிய கிரேக்க தேசிய ஐக்கியத்தை உருவாக்க ஸ்பார்டா முன்னின்றது.

இதே சமயம் ஸெர்க்ஸெஸ் தன்னுடைய வலிமை வாய்ந்த படையை ஐரோப்பாவிற்கு வழி நடத்தினார். இது ஒரு சாதாரண விஷயமல்ல. வழியில் இருந்த நகரங்கள்தான் அந்த ராணுவத்திற்கு உணவு வழங்க வேண்டும். ஒரு நாள் உணவிற்காகும் செலவு 400 தாலந்து தங்கம்; முழு ராணுவத்திற்கும் ஒரு வேளை உணவிற்கே இவ்வளவு செலவிட வேண்டியிருந்தது. இதற்கு பல மாதங்களுக்கு முன்பே அரசனுடைய உணவிற்கென உணவு தானியங்கள், ஆடு மாடுகள், கோழி போன்றவற்றை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். ஸெர்க்ஸெஸுக்கு மட்டுமே கூடாரமிருந்தது; மற்றவர்கள் வானமே கூடாரமென அக்கடா என்று உறங்கினர்.

அந்த மிகப்பெரிய ராணுவம் ஹெலஸ்பான்டை (இப்போது டார்டனெல்ஸ் என்று அழைக்கப்படுகிறது) முதலாவதாகக் கடக்க வேண்டும்; இதுதான் ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் குறுகிய ஜலசந்தி. ஸெர்க்ஸெஸின் படை கடப்பதற்காக, ஹெலஸ்பான்டில் தோணிகளால் இணைத்துக் கட்டப்பட்ட இரண்டு பாலங்கள் ஒரு புயலின்போது உடைந்து விட்டன. ஸெர்க்ஸெஸுக்கு வந்ததே ஆத்திரம், உடனடியாக ஹெலஸ்பான்டின் தண்ணீருக்கு 300 கசையடிகள் கொடுத்து அதை இரும்புச் சங்கிலியால் கட்டி விலங்கு மாட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு அந்தப் பாலத்தைக் கட்டிய பொறியாளர்களை சிரச்சேதம் செய்துவிட்டார். இரண்டாவது முறையாக இரண்டு பாலங்கள் ஹெலஸ்பான்டில் கட்டி முடிக்கப்பட்டபோது அதைக் கடக்க அவரது ராணுவத்திற்கு சரியாக ஒரு வார காலமெடுத்தது.

தெர்மோஃபைலே​—⁠கடப்பதற்கு கடினமான குறுகிய நிலம்

பொ.ச.மு. 480-⁠ன் மத்திபத்தில் பெர்சிய பேரரசின் ராணுவமும் கப்பற்படையும் தெஸ்ஸாலே என்ற கரையோரமாக முன்னேறின. கிரேக்கர்களின் ஐக்கிய ராணுவங்கள் அவர்களை தெர்மோஃபைலில் சந்திப்பது என்று முடிவெடுத்தன. அந்தக் காலத்தில் இந்த நிலம் மிகவும் குறுகலாக இருந்தது; அங்கே இருந்த மலைகள் கடற்கரைக்கு மிக அருகே கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவில் இருந்தன. c

பெர்சியர்கள், இந்தக் குறுகலான பாதையைக் குறைந்த எண்ணிக்கையுள்ள ஆள் தொகுதிகளாகக் கடக்கும்போது பலசாலிகளான ஒருசில கிரேக்க ராணுவத்தினரால் அவர்களை தடுத்துவிட முடியும். ஸ்பார்டாவின் ராஜாவான லியோனிடாஸ் என்பவரது தலைமையில் முதலில் வந்த 7,000 கிரேக்க ராணுவ வீரர்கள் தெர்மோஃபைலுக்கு அருகே இருந்த ஜலசந்தியில் தயாராக காத்திருந்தனர். அதே சமயம் கிரேக்க கப்பற்படையைச் சேர்ந்த 270 கப்பல்கள் ஆர்டமீசியம் என்ற இடத்திற்கு அருகே பெர்சிய கப்பற்படைக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தன.

ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் ஸெர்க்ஸெஸ் தெர்மோஃபைலுக்கு வந்து சேர்ந்தார்; தன்னுடைய கடல் போன்ற படை, கிரேக்கர்களை சின்னாபின்னமாக்கிவிடும் என்று நம்பினார். கிரேக்கர்கள் அச்சமயம் துணிந்து எதிர்த்து நின்றதை கவனித்தவுடன் அவர்களை நிர்மூலமாக்க மீதியர்களையும் சிஸ்ஸியர்களையும் அனுப்பினார். ஆனால் இந்தப் படையும் பெரும் இழப்பை சந்தித்தது. அவருடைய மெய்க்காப்பாளர்கள் அடங்கிய படையை (எதிரிகளை நொறுக்கும் படை) ஆளுனர் ஹைடார்ன்ஸ்ஸின் தலைமையில் அனுப்பினார். அவர்களாலும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

கொடுங்கனவை ஏற்படுத்திய எஃப்யால்டிஸ்

பெர்சியர்கள் கிட்டத்தட்ட விரட்டப்பட்டனர் என்ற நிலை ஏற்பட்டபோது, எஃப்யால்டிஸ் (கிரேக்க மொழியில் “கொடுங்கனவு” ) என்ற பேராசை பிடித்த தெஸலியாவைச் சேர்ந்த ஒரு விவசாயி அவர்களுக்கு உதவுவதாக வாக்குறுதியளித்தான். அவர்களை மலைகள் வழியாக வழி நடத்தி கிரேக்க ராணுவத்தின் பிற்பகுதிக்கு அழைத்துச் செல்ல முன்வந்தான். அடுத்த நாள் காலையில் பெர்சியர்கள் சத்தம்போடாமல் காரியத்தில் இறங்கி கிரேக்க ராணுவத்தினரை பின்பக்கத்திலிருந்து தாக்க தயாரானார்கள். தாங்கள் நிச்சயமாக அழிவோம் என்பதை உணர்ந்த ஸ்பார்ட்டன்கள் மிகக் கடுமையாக போராடினர். அநேக பெர்சியர்களை நேராக போரிட்டு கொன்றனர், மற்றவர்களை காலால் மிதித்தும் கடலில் தள்ளியும் கொலை செய்தனர். கடைசியாக ராஜாவாகிய லியோனிடாஸும் அவரோடு இருந்த சுமார் 1,000 ஆட்களும் கொல்லப்பட்டனர். ஸ்பார்டர்களின் ராணுவத்தின் பிற்பகுதியை ஹைடார்ன்ஸ் தாக்கி அவர்களை முறியடித்தார்.

பெர்சிய ராணுவத்தினரும் பெர்சிய கப்பற்படையில் மீதியானோரும் ஆதன்ஸ் நகரத்தாரின் வீடுகளை சூரையாடினர். ஸெர்க்ஸெஸ் கொள்ளையடித்து தீக்கிரையாக்கிக் கொண்டே அட்டிக்காவை நோக்கி முன்னேறினார். ஆதன்ஸ் நகரத்தார் அருகில் இருந்த சலாமிஸ் தீவிற்கு பட்டணத்தைக் காலிசெய்து விட்டு ஓடிவிட்டனர். கிரேக்க கப்பற்படை சலாமிஸ் தீவிற்கும் ஆதன்ஸ் பட்டணத்திற்கும் நடுவில் நின்றது. ஆதன்ஸ் நகரின் உள்ளரணைக் கைப்பற்ற இரண்டு வாரங்கள் ஆனது. அந்த நகரத்தைக் காத்தவர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்டனர், அவர்களது புனித இடங்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டன.

சலாமிஸ்​—⁠“மரச் சுவர்கள்” திறமையை காட்டின

தெர்மோஃபைலேக்கு அருகே கிரேக்க தேசத்து கப்பற்படை ஏற்கெனவே பெர்சிய கப்பற்படையை எதிர்கொண்டது. ஆனால் போர்புரிவதற்கு பதிலாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. நிலத்தில் அவர்கள் பின்வாங்க நேரிட்டதால் கிரேக்கர்களின் கப்பற்படையும் தெற்கே பின்வாங்கியது. ஆனால் இப்போதோ அது சலாமிஸ் விரிகுடாவில் மறுபடியும் கூட்டப்பட்டது; தெமிஸ்டோக்கிள்ஸ் யுத்த நடவடிக்கைகள் குறித்து திட்டம் தீட்டினார்.

ஃபொனோசியாவைச் சேர்ந்த 300 யுத்த கப்பல்கள் பெர்சியரிடம் இருந்தன. அவைதாம் அவர்களுடைய முக்கிய யுத்த தளவாடங்கள்; அவை கிரேக்கர்களின் கப்பல்களைவிட பெரியவை அவற்றை இயக்குவதும் எளிது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார். பெர்சிய கப்பற்படையில் சுமார் 1,200 கப்பல்கள் இருந்தன, கிரேக்க கப்பற்படையிலோ வெறும் 380 மட்டுமே. பெர்சிய கப்பற்படையின் யுத்த வீரர்களைப்போல் கிரேக்க வீரர்கள் அவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்கள் அல்ல. அட்டிக்காவின் கரையிலிருந்து சலாமிஸுக்குச் செல்லும் கால்வாய் மிகவும் குறுகியது. அதில் ஒரே சமயத்தில் 50 கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். புனல் போல் இயற்கையாக அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு பெர்சியர்களை கிரேக்கர்கள் கவர்ந்திழுத்து விட்டால் பெர்சியர்களிடமுள்ள திரளான எண்ணிக்கையிலான கப்பல்களும் அவற்றை அருமையாக இயக்கும் திறன் ஆகிய இரண்டுமே பூஜ்யம் ஆகிவிடும். இந்தப் பயங்கரப் போரை ஆரம்பித்து வைக்க தெமிஸ்டோக்கிள்ஸ் ஒரு பொய்யான தகவலை ஸெர்க்ஸெஸுக்கு அனுப்பினார் என்று சொல்லப்படுகிறது; அதன்படி கிரேக்க கப்பற்படை தப்பியோடுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்களை தாக்குவது நல்லது என்று ஸெர்க்ஸெஸ் நம்பினார்.

ஆழம் தெரியாமல் காலை விட்ட கதைதான் கடைசியில் நடந்தது. பெர்சிய கப்பற்படையின் ஒவ்வொரு கப்பலும் யுத்தத்திற்கு தயாராக அவர்களின் துடுப்பு வலிக்கும் ஆட்களும், ஈட்டி எரிபவர்களும், வில்லை குறிபார்த்து எய்பவர்களும் அட்டிக்காவின் முனையில் குவிந்து அந்தக் கால்வாயை நோக்கி முன்னேறினார்கள். வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் ஸெர்க்ஸெஸ் ஒரு மலையின் மேல் சிங்காசனத்தை அமைத்து அங்கிருந்து சாவகாசமாக யுத்தத்தைப் பார்ப்பதற்கு அமர்ந்தார்.

பயங்கரத் தோல்வி

அந்தக் குறுகிய கால்வாயில் பெர்சியர்கள் ஏராளமாகக் குவிந்தபோது அங்கு எக்கச்சக்கமான குழப்பமே நிலவியது. திடீரென்று சலாமிஸ் தீவின் கோபுரத்தில் எக்காள சத்தம் கேட்டது; அங்கிருந்து கிரேக்க கப்பல்கள் வரிசையாக சீறிக்கொண்டு வெளிவந்தன. டிரைரிம் என்றழைக்கப்பட்ட கிரேக்க கப்பல்கள் பெர்சிய கப்பல்கள் மீது மோதி அவற்றின் உடற்பகுதியை உடைத்தன, எனவே அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி என்ற நிலை பெர்சியர்களுக்கு ஏற்பட்ட அதே சமயம் கிரேக்க வீரர்கள் சிதையுண்ட கப்பல்களில் தங்கள் வாளுடன் ஏறி பெர்சிய வீரர்களின் தலையை சீவியெறிந்தனர்.

அட்டிக்காவின் மணல் பகுதி முழுவதும் உடைந்த கப்பல்களின் மரத்துண்டுகளாலும் சிதைந்த உடல்களாலும் நிறைந்து கிடந்தது. இவற்றையெல்லாம் கண்ணுற்ற ஸெர்க்ஸெஸ் எஞ்சிய கப்பல்களை சேர்த்துக்கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் தன் நாட்டுக்குத் திரும்பினார். அந்த வருடத்திற்கு அவர் மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் அத்துடன் ஒரு முடிவிற்கு வந்தன. குளிர்காலத்தை கழிப்பதற்கு, தன் மைத்துனரான மார்டோனீயட்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு பெரிய ராணுவத்தை விட்டுவிட்டு வந்தார்.

தீர்க்கதரிசனத்தை உன்னிப்பாக கவனிக்கும் பைபிள் மாணாக்கர்களுக்கு சலாமிஸில் நிகழ்ந்த தோல்வி வெகுகாலத்திற்கு முன்பாகவே ஒன்றை துல்லியமாக சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது, தானியேலின் தீர்க்கதரிசனத்தின்படி கிரேக்க தேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் “வெள்ளாட்டுக்கடா” நிச்சயமாக ‘இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடாவான’ மேதிய பெர்சிய தேசத்தைவிட உயர்ந்த நிலையை எட்டும் என்பதே. (தானியேல் 8:5-8) அதைவிட முக்கியமாக, மற்றவர்களை தங்களுக்கு பணிய வைப்பதற்காக எடுக்கப்படும் எல்லா மனித முயற்சிகளும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் முடிவுக்கு வந்துவிடும் என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் கடவுளுடைய ஜனங்களுக்கு உறுதியளிக்கின்றன.​—⁠ஏசாயா 9:6; தானியேல் 2:⁠44.

[அடிக்குறிப்புகள்]

a  கூடுதல் தகவல்களுக்கு “மாரத்தான் யுத்தம்​—⁠ஒரு உலக வல்லரசின் தலைகுனிவு” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மே 8, 1995 விழித்தெழு! பத்திரிகையில் பார்க்கவும்.

b  பூர்வ காலங்களில் நடந்த அநேக யுத்தங்களில் எத்தனை ராணுவ வீரர்கள் பங்கு பெற்றனர் என்பது சர்ச்சைக்குரிய விஷயமே. அதேபோல பெர்சிய ராணுவத்தில் எத்தனை பேர் பங்கு பெற்றனர் என்பதும் சர்ச்சைக்குரிய விஷயமே. சரித்திர ஆசிரியனாகிய வில் டுரான்ட் ஹெரோடெட்டஸ் குறிப்பிட்ட எண்ணிக்கையை மேற்கோள் காட்டுகிறார். மற்ற குறிப்புரைகள் 2,50,000-⁠த்திலிருந்து 4,00,000 ஆட்கள் வரை என்ற எண்ணிக்கையை அளிக்கின்றன.

c வண்டல் மண் படிந்ததால் அந்தக் கடற்கரை தற்போது மாற்றமடைந்திருக்கிறது. தற்சமயம் அது சுமார் 2.4 முதல் 4.8 கிலோமீட்டர் அகலம் உள்ள அகலமான சதுப்பு நிலமாகக் காணப்படுகிறது.

[பக்கம் 25-ன் படம்/பெட்டி]

டிரைரிம்​—⁠மற்ற கப்பல்களின் சிம்மசொப்பனம்

பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஆகியன் பகுதியில் ஆதன்ஸ் நகரத்தாரின் கப்பற்படையில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தது டிரைரிம் என்ற கப்பலே. இது ஒரு நீளமான கப்பல்; சாதாரணமாக பாய்மரத்தினால் செலுத்தப்படும். ஆனால் யுத்தத்தின்போது மட்டும் துடுப்பு வலித்து செலுத்தப்படும். அவர்களது இலக்கு எதிரியின் கப்பலில் ஏறி சண்டையிட வேண்டும் என்பதல்ல. ஆகவே, ஒவ்வொரு படகிலும் ராணுவ வீரர்கள் சிலரே இருந்தனர். ஆனால், துடுப்பு வலிப்பவர்களின் எண்ணிக்கையோ 170. இவர்கள் படுவேகத்தில் துடுப்பு வலித்து எதிரியின் கப்பலின் நடுப்பகுதியை குறிவைத்து தாக்கும் போது கப்பலின் முகப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும் உலோகத்தால் செய்யப்பட்ட ஆட்டுக்கொம்பு போன்ற கூர்மையான ஆயுதம் எதிரியின் கப்பலை சின்னாபின்னமாக்கிவிடும்.

[படத்திற்கான நன்றி]

Hellenic Maritime Museum/ Photo: P. Stolis

[பக்கம் 26-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஸெர்க்ஸெஸின் படைகள்

ஹெலஸ்பான்ட்

தெஸலி

ஆர்டமீசியம்

தெர்மோஃபைலே

அட்டிக்கா

ஆதன்ஸ்

மாரத்தான்

லாரியம்

சலாமிஸ்

ஸ்பார்டா

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்