அநீதியை ஒழித்துக்கட்ட முடியாதா?
“என்னதான் நடந்திருந்தாலும்சரி, ஜனங்கள் உண்மையில் நல்லவர்களாகவே இருக்கின்றனர் என்று நான் இன்னும் நம்புகிறேன். குழப்பம், துன்பம், மரணத்தாலான ஒரு அஸ்திபாரத்தின் மீது என் நம்பிக்கைகளைக் கட்ட முடியாது.”—ஆனா ஃபிராங்க்.
மனதை உருக்கும் இந்த வார்த்தைகளை ஆனா ஃபிராங்க் என்ற 15 வயது இளம் யூத பெண் மரிப்பதற்கு சற்று முன்பு தன் டயரியில் எழுதினாள். ஆம்ஸ்டர்டாமில், மேல் மாடியிலிருந்த ஒரு சிறு அறையில் அவளுடைய குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கும் மேல் ஒளிந்து வாழ்ந்தார்கள். அவர்கள் இருக்குமிடத்தை நாசிக்களுக்கு ஒருவன் காட்டிக்கொடுத்துவிட்டான். அதனால் மேம்பட்ட உலகுக்கான அவளுடைய நம்பிக்கைகள் தவிடுபொடியாயின. அடுத்த ஆண்டு, அதாவது 1945-ல், ஆனா விஷக்காய்ச்சலினால் பெர்கன்-பெல்சன் சித்திரவதை முகாமில் இறந்துபோனாள். மற்ற அறுபது லட்சம் யூதர்களுக்கும் அதே கதிதான்.
முழு இனத்தையும் பூண்டோடு அழித்துப்போடுவதற்கு ஹிட்லர் பேய்த்தனமாக திட்டம் போட்டான். அதுவே நம் நூற்றாண்டில் நடந்த இனசம்பந்தமான அநீதிக்கு படுமோசமான எடுத்துக்காட்டு. ஆனால் நிகழ்ந்தது அந்தவொரு சம்பவம் மட்டுமல்ல. 1994-ல் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட டுட்ஸிக்கள் ருவாண்டாவில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் வெறுமனே “தவறான” இனத்தாராய் இருந்ததே இதற்கு காரணம். முதல் உலகப் போரின்போது, சுமார் பத்து லட்சம் ஆர்மீனியர்கள் இன அழிவு ஒன்றில் மரித்தனர்.
அநீதியின் குரூர முகங்கள்
இன அழிவு மட்டுமே அநீதியின் ஒரு அம்சம் அல்ல. சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனித இனத்தில் சுமார் ஐந்தில் ஒரு பாகத்தினர் வாழ்நாள் முழுவதும் வாட்டி வதைக்கும் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர். அதைக் காட்டிலும் கொடுமை என்னவென்றால், 20,00,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் அடிமைத்தனத்தில் இருப்பதாய் ஆன்டி-ஸ்லேவரி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் பிரிவு கணக்கிடுகிறது. இன்று, சரித்திரத்திலே வேறெந்த காலத்திலும் இருந்திராத அளவுக்கு அதிகமான ஆட்கள் உலகில் அடிமைகளாக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் பொது ஏலத்தில் விற்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் வேலை செய்யும் இடங்களிலுள்ள நிலை முற்காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான அடிமைகளின் நிலையைக் காட்டிலும் படுமோசமாக இருக்கிறது.
சட்டம் இழைக்கும் அநீதி லட்சக்கணக்கானோரின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது. “இவ்வுலகில் மனித உரிமைகளை மீறுகிற அட்டூழியங்கள், ஏதாவது ஒரு இடத்தில் கிட்டத்தட்ட அன்றாடம் நடக்கின்றன” என்று 1996-ம் ஆண்டுக்குரிய அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அறிக்கை குறிப்பிடுகிறது. “இதனால் அவதியுறுவோர் பெரும்பாலும் ஏழைகளும் வசதியற்றவர்களுமே; அதிலும் விசேஷமாக பெண்கள், பிள்ளைகள், முதியோர் மற்றும் அகதிகளே.” அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது: “சில நாடுகளில், தேச அமைப்புகள் கிட்டத்தட்ட அடியோடு நொறுங்கியிருக்கின்றன, பலமானவர்களிடமிருந்து பலவீனரை பாதுகாப்பதற்கு எந்தச் சட்டப்பூர்வமான அதிகாரமும் இல்லை.”
1996-ம் ஆண்டில், நூறுக்கும் மேற்பட்ட தேசங்களில், ஆயிரக்கணக்கானோர் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அதோடு, சமீப ஆண்டுகளில், லட்சக்கணக்கான ஆட்கள் காணாமலே போய்விடுகின்றனர். பாதுகாப்பு படைகளாலோ பயங்கரவாத தொகுதிகளாலோ கடத்திச் செல்லப்படுகின்றனர். அவர்களில் அநேகர் மரித்துவிட்டதாக எண்ணப்படுகிறது.
போர்கள் என்றாலே அநீதிதான். ஆனால் அவை இன்று அதிகரித்து வருகின்றன. நவீன நாளைய போர்களின் குறி, பெண்கள், பிள்ளைகள் என இராணுவத்தைச் சாராத மக்கள் மீதே. இந்த இராணுவத்தினர் நகரங்களின் மீது கண்மூடித்தனமாய் குண்டுகள் வீசுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை. இராணுவ நடவடிக்கைகளின் பாகமாக, வழக்கமாய் பெண்களையும் சிறுமிகளையும் கற்பழிக்கின்றனர். மேலும் பிள்ளைகளுக்கு கொலை செய்ய பயிற்சியளிப்பதற்கென அநேக கலகக்கார கும்பல்கள் அவர்களை வலுக்கட்டாயமாய் அழைத்துச் செல்கின்றன. அப்படிப்பட்ட போக்குகளைப் பற்றி குறிப்பிடுகையில், “பிள்ளைகள் மீது போராயுதப் போரின் விளைவுகள்” என்ற ஐக்கிய நாட்டு சங்கத்தின் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “இந்த உலகம் ஒழுக்கமே இல்லாத வெற்றிடமாய் ஆகிவிட்டது.”
ஒழுக்கரீதியிலான இந்த வெற்றிடம்—இனம், சமூகம், சட்டம், அல்லது இராணுவம் என எதுவாயிருப்பினும்—அநீதியில் ஊறிப்போன ஓர் உலகுக்கு அடிகோலியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இது ஒன்றும் புது விஷயமல்ல. இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே, எபிரெய தீர்க்கதரிசி ஒருவர் இவ்வாறு புலம்பினார்: “சட்டம் பெலனற்றதாகி, பயனற்றுப் போகிறது, நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக்கொள்கிறார்கள், ஆதலால் நீதி புரட்டப்படுகிறது.” (ஆபகூக் 1:4, NW) அநீதி எப்போதுமே கோரத் தாண்டவம் ஆடிவந்திருக்கிறது. ஆனாலும், 20-ஆம் நூற்றாண்டோ, அநீதி புதிய உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் சகாப்தமாக திகழ்கிறது.
அநீதி பொருட்படுத்த வேண்டிய விஷயமா?
நீங்கள் தனிப்பட்ட விதத்தில் அநீதியால் அவதியுறும்போது அது பொருட்படுத்த வேண்டிய விஷயமே. அது, சந்தோஷமாக வாழ வேண்டிய மனித இனத்தின் உரிமையை பறித்துப்போடுவதாலும் முக்கியமாகிறது. ஏனெனில் அநீதி அடிக்கடி கொடூரமான சண்டைகளை மூட்டிவிடுகிறது; அவை மறுபட்சத்தில், அநீதி என்ற ஜூவாலைகள் கொழுந்து விட்டெரியும்படி செய்கின்றன.
சமாதானமும் மகிழ்ச்சியும் பிரிக்க முடியா வண்ணம் நீதியோடு இழைந்திருக்கிறது; ஆனால் அநீதியோ நம்பிக்கையை தகர்த்துப்போட்டு, நல்லதே நினைக்கும் மனநிலையை நொறுக்கிப்போடுகிறது. சோகத்துக்குரிய விதமாக, ஆனா ஃபிராங்க் கண்டுபிடித்தபடி, குழப்பம், துன்பம், மரணத்தாலான அஸ்திவாரத்தின் மீது மக்கள் தங்கள் நம்பிக்கைகளை கட்ட முடியாது. அவளைப் போலவே நாம் அனைவரும் நல்ல நிலைமைகளுக்காக ஏங்குகிறோம்.
இந்த ஆசை, மனித சமுதாயத்துக்கு ஓரளவு நீதி கிடைப்பதற்கு முயற்சி செய்ய உண்மையுள்ள ஆட்களை தூண்டியிருக்கிறது. அதன் காரணமாய், ஐக்கிய நாட்டு சங்கத்தின் பொது மாநாடு 1948-ல் ஏற்றுக்கொண்ட மனித உரிமைகளின் சர்வதேச அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “எல்லா மானிடரும் சுயாதீனத்தோடு பிறந்திருக்கின்றனர், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சரிசமமாய் இருக்கின்றனர். அவர்களுக்கு நியாயத்தன்மையும் மனச்சாட்சியும் இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் ஒருவரோடொருவர் சகோதரர் போல் செயல்பட வேண்டும்.”
இவை நிச்சயமாகவே அருமையான வார்த்தைகள்; ஆனால் பாராட்டத்தக்க இந்த இலக்கை, அதாவது ஒவ்வொருவரும் சம உரிமைகளை அனுபவித்து, ஒவ்வொருவரும் தன் அயலானை சகோதரனைப் போல் நடத்தும் ஒரு நீதியான சமுதாயத்தை படைப்பது மனித இனத்துக்கு ஆகாச கோட்டையாகவே உள்ளது. ஐக்கிய நாட்டு சங்கம் வெளியிட்ட அறிக்கையின் முன்னுரை குறிப்பிடுவது போல் இந்த குறிக்கோளை அடைவது, “உலகில் சுயாதீனம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கு அஸ்திவாரமாய்” அமையும்.
மனித சமுதாயம் என்ற ஆடையில் அநீதி இழையோடுவதால், அதை ஒருபோதும் அடியோடு ஒழித்துக்கட்ட முடியாதா? அல்லது சுயாதீனம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கான ஓர் உறுதியான அஸ்திவாரம் போடப்படுமா? அப்படியென்றால், யார் அப்படிப்பட்ட அஸ்திவாரத்தைப் போட்டு, அனைவரும் பயனடைவதை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
UPI/Corbis-Bettmann