‘செய்யவேண்டிய கடமையைத்தான் செய்தோம்’
ஜார்ஜ் கௌச் என்பவர் சொன்னபடி
காலையில் வீட்டுக்குவீடு ஊழியத்தை முடித்த பின்பு, என் பார்ட்னர் இரண்டு சான்ட்விச்களை வெளியே எடுத்தார். நாங்கள் சாப்பிட்டு முடித்த பின்பு, புகைப்பதற்கு ஒரு சிகரெட்டை உருவினேன். “நீ எவ்வளவு காலம் சத்தியத்தில் இருக்கிறாய்?” என்று அவர் என்னிடம் கேட்டார். “நேற்று இராத்திரிதான் கூட்டத்துக்கே நான் முதல் முதலாக வந்திருந்தேன்” என்று அவரிடம் சொன்னேன்.
அமெரிக்காவில், பென்ஸில்வேனியா மாகாணத்திலுள்ள பிட்ஸ்பர்க் நகருக்குக் கிழக்கே ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவன்மூர் என்ற சிறிய பட்டணத்திற்கு அருகில் ஒரு பண்ணையில் மார்ச் 3, 1917-ல் பிறந்தேன். அங்குதான் என் பெற்றோர், என்னையும் என்னுடைய அண்ணன் தம்பிமார் நான்கு பேரையும் ஒரு அக்காவையும் வளர்த்தார்கள்.
எங்களுக்கு மத பயிற்றுவிப்பு அதிகம் இல்லை. ஒரு காலத்தில் என் பெற்றோர் சர்ச்சுக்குச் சென்றார்கள், ஆனால் பிள்ளைகளாகிய நாங்கள் சிறியவர்களாக இருந்தபோதே அங்கு செல்வதை நிறுத்திவிட்டார்கள். எனினும் சிருஷ்டிகரில் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். அத்துடன், எங்கள் குடும்ப வாழ்க்கையில் பைபிளின் அடிப்படை நியமங்களைப் பின்பற்றினோம்.
என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற மிகச் சிறந்த பயிற்றுவிப்பு, அவரவர் பொறுப்பைப் பற்றியது; அதாவது, பொறுப்பை ஏற்று அதை எப்படி நிறைவேற்றுவது என்பதை பயிற்றுவித்தார்கள். பண்ணை வாழ்க்கையில் எதைச் செய்தாலும் பொறுப்புடன் செய்யவேண்டும். ஆனால், வேலைசெய்வதே எங்களுடைய வாழ்க்கை என்பதாக இல்லை. பாஸ்கட்பால், பேஸ்பால் விளையாடுவது, குதிரை சவாரி செய்வது, நீச்சல் அடிப்பது போன்ற ஆரோக்கியமான இன்பப் பொழுதுபோக்குகளையும் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். அந்நாட்களில் பணம் போதியளவு இல்லை, எனினும் பண்ணையில் வாழ்க்கை இன்பமாக இருந்தது. ஆரம்பக் கல்வி பயின்றபோது, ஒரே அறையைக்கொண்ட பள்ளிக்கு நாங்கள் சென்றோம்; உயர்நிலைக் கல்வி படித்த ஆண்டுகளின்போது நகரத்தில் இருந்த பள்ளிக்குச் சென்றோம்.
ஒரு இராத்திரி நேரத்தில் என் நண்பன் ஒருவனுடன் நகரத்தில் நடந்துகொண்டிருந்தேன். என் நண்பனுக்கு ஹலோ சொல்வதற்கு, அழகான ஒரு பெண் தன் வீட்டிலிருந்து வெளியில் வந்தாள். ஃபெர்ன் ப்ரூ என்ற அந்தப் பெண்ணை என் நண்பன் எனக்கு அறிமுகம் செய்தான். உயர்நிலை பள்ளி இருந்த அதே வீதியில் அவள் வசித்துவந்தது வசதியாகிவிட்டது. பெரும்பாலும் அவளுடைய வீட்டை நான் கடந்து செல்லும் போதெல்லாம், அவள் வெளியில் அன்றாட வீட்டுவேலைகளைச் செய்துகொண்டிருப்பாள். அவள் கடின உழைப்பாளி என்பதில் சந்தேகமில்லை, இது என் மனதைக் கவர்ந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகினோம்; எங்கள் இருவருக்கிடையே இருந்த காதல், 1936-ம் ஆண்டு ஏப்ரலில் திருமணமாய் மலர்ந்தது.
பைபிள் சத்தியத்துடன் தொடர்பு
நான் பிறப்பதற்கு முன்பு, அந்த நகரில் வயசான ஓர் அம்மாள் இருந்தார். அவருடைய மதத்தின் காரணமாக அந்நகரத்தார் அவரை மோசமான முறையில் நடத்தினார்கள். என் தாயார் சனிக்கிழமைகளில் பொருட்கள் வாங்கிவர நகரத்திற்குச் செல்லும்போதெல்லாம், அந்த அம்மாளைச் சென்று பார்த்தார்கள். அந்த அம்மாளுடைய வீட்டை என் தாயார் சுத்தம் செய்து, அவருக்கு உதவியாக சிறுசிறு வேலைகளைச் செய்தார். அந்த அம்மாள் சாகும் வரையில் அவ்வாறு செய்துவந்தார்கள். அப்போது யெகோவாவின் சாட்சிகள் அழைக்கப்பட்டபடி, பைபிள் மாணாக்கரில் ஒருவராக இருந்த இந்த அம்மாளுக்கு என் தாயார் அவ்வளவு தயவு செய்ததனால் யெகோவா என் அம்மாவை ஆசீர்வதித்தார் என்று நான் நம்புகிறேன்.
சில நாட்களுக்குப் பின்பு, என் அத்தையின் இளம் மகள் திடீரென்று இறந்துவிட்டாள். சர்ச் என் அத்தைக்கு ஆறுதலை அளிக்கவில்லை, ஆனால் அயலகத்தாராயிருந்த பைபிள் மாணாக்கராகிய ஓர் அம்மாள் ஆறுதல் அளித்தார்கள். அந்த அம்மாள், ஒரு ஆள் மரிக்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி என் அத்தையிடம் விளக்கினார்கள். (யோபு 14:13-15; பிரசங்கி 9:5, 10) இது அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது. என் அத்தை, உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைப் பற்றி தான் கேட்ட விஷயத்தையெல்லாம் என் அம்மாவிடம் சொன்னார். இது என் அம்மாவின் அக்கறையைத் தூண்டினது. அவர் சிறுவராக இருந்தபோது அவருடைய பெற்றோர் மரித்துவிட்டதனால், மரணத்தின்போது ஒருவருக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை அறிய ஆவலுடன் இருந்தார். அந்த அனுபவம், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிடாமல் எப்போதும் பயன்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தை என்னில் ஊன்றச் செய்தது.
1930-ன் பத்தாண்டுகளின்போது, ஞாயிற்றுக்கிழமைகளின் காலை வேளைகளில், ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட, த உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரெஸிடென்ட்டாக அப்போதிருந்த ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்ட்டின் பேச்சுககளை என் அம்மா செவிகொடுத்துக் கேட்க தொடங்கினார். அந்த ஆண்டுகளின்போது சாட்சிகள், நாங்கள் வாழ்ந்த இடத்தில் வீட்டுக்குவீடு ஊழியம் செய்யத் தொடங்கினார்கள். இடம்விட்டு இடம் எடுத்துச்செல்லக்கூடிய ஃபோனொகிராஃபை எங்கள் வீட்டிலிருந்த வெளியிடத்தில் ஒரு மர நிழலில் வைத்து இயக்கி, சகோதரர் ரதர்ஃபர்டின் பதிவுசெய்த பிரசங்கங்களைத் தொனிக்கச் செய்வார்கள். அந்த ஒலிப்பதிவுகளும், உவாட்ச்டவர் மற்றும் கோல்டன் ஏஜ் (இப்போது விழித்தெழு!) பத்திரிகைகளும் என் அம்மாவின் அக்கறையை உயிர்ப்புள்ளதாக ஆக்கின.
சில ஆண்டுகளுக்குப் பின்பு, 1938-ல், ஏறக்குறைய 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒருவரின் வீட்டில் விசேஷித்த ஒரு கூட்டத்திற்கு வரும்படி அழைப்புதரும் ஒரு போஸ்ட் கார்டு, உவாட்ச்டவர் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு செல்ல என் அம்மா விரும்பினார், ஆகவே ஃபெர்னும் நானும் என் சகோதரரில் இருவரும் அவரோடு சென்றோம். அங்கு கூடியிருந்த ஏறக்குறைய பன்னிரண்டு பேர்களான எங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணிகளாக இருந்த ஜான் பூத்தும் சார்ல்ஸ் ஹெஸ்லரும் பேச்சுகள் கொடுத்தார்கள். அது முடிந்த பின்பு, அடுத்த நாள் காலையில் ஊழியத்தில் பங்குகொள்ளும்படி ஒரு தொகுதியை ஒழுங்குபடுத்தத் தொடங்கினார்கள். அவர்களோடு செல்ல ஒருவரும் முன்வரவில்லை, ஆகையால் சகோதரர் ஹெஸ்லர் என்னைத் தெரிந்தெடுத்து, “நீ எங்களுடன்கூட வரலாமே?” என்றார். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது எனக்கு சரியாய் ஒன்றும் தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு உதவிசெய்யாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் நினைக்க முடியவில்லை.
ஏறக்குறைய மதியம் வரை நாங்கள் வீடுவீடாகச் சென்று ஊழியம் செய்தோம், பின்பு சகோதரர் ஹெஸ்லர், இடையில் இறைச்சி வைக்கப்பட்ட இரண்டு சான்ட்விச்சுகளை வெளியே எடுத்தார். சர்ச் படிக்கட்டுகளின்மீது நாங்கள் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினோம். அப்போது அந்தச் சிகரெட்டை உருவினபோதுதான், நான் ஒரே ஒரு கூட்டத்திற்கு மட்டுமே வந்திருந்தது சகோதரர் ஹெஸ்லருக்குத் தெரியவந்தது. அதே சாயங்காலம் எங்கள் வீட்டுக்கு மாலை உணவருந்த அவர் வருவதாகத் தானே சொல்லி, பைபிள் கலந்தாலோசிப்பு ஒன்றுக்காக எங்கள் சுற்றுப்புறத்தாரை எங்கள் வீட்டுக்கு அழைக்கும்படி எங்களைக் கேட்டுக்கொண்டார். மாலை உணவுக்குப் பின்பு, எங்களுடன் ஒரு பைபிள் படிப்பை நடத்தி, அங்கு வந்திருந்த ஏறக்குறைய பத்து பேர் அடங்கிய தொகுதிக்கு ஒரு பேச்சைக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் நாங்கள் பைபிள் படிப்பை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எங்களிடம் சொன்னார். எங்கள் சுற்றுப்புறத்தார் இதற்கு சம்மதிக்காதபோதிலும், ஃபெர்னும் நானும் வாரந்தோறும் வீட்டு பைபிள் படிப்புக்குச் சம்மதித்து அதற்காக ஏற்பாடு செய்தோம்.
சத்தியத்தில் முன்னேற்றம்
அதன்பின் சீக்கிரத்தில், ஃபெர்னும் நானும் வெளி ஊழியத்திற்குச் சென்றோம். நாங்கள் அந்தக் காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்து, சிகரெட்டை அப்போதுதான் பற்றவைத்தோம், என் சகோதரன் திரும்பி எங்களைப் பார்த்து: “சாட்சிகள் புகை பிடிப்பதில்லை என்று இப்போதுதான் கண்டுபிடித்தேன்” என்றார். உடனடியாக ஃபெர்ன் தன் சிகரெட்டை ஜன்னல் வழியாக வெளியில் எறிந்துவிட்டாள், நானும் புகைப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளித்தபோதிலும், அதற்குப்பின் நாங்கள் சிகரெட்டை கையில் தொடவேயில்லை.
1940-ல் எங்கள் முழுக்காட்டுதலுக்குப் பின்பு, ஃபெர்னும் நானும் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே, முழுநேர பிரசங்க ஊழியம் அழைக்கப்பட்டபடி பயனியரிங் செய்வதற்கு ஊக்கப்படுத்தின ஒரு கட்டுரையை நாங்கள் படித்தோம். வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு சகோதரன் கேட்டார்: “நீயும் ஃபெர்னும் பயனியரிங் செய்யலாமல்லவா? உங்களுக்குத் தடையாக எதுவும் இல்லையே.” அவர் சொன்னதை நாங்கள் மறுக்க முடியவில்லை, ஆகையால் அதைச் செய்ய முன்வந்தோம். நான் வேலை செய்த இடத்தில், 30 நாளுக்குப்பின் வேலையை விட்டு நீங்கபோவதான அறிவிப்பைச் செய்துவிட்டு, பயனியர் செய்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம்.
நாங்கள் எங்கு சேவிக்க வேண்டும் என்பதைப் பற்றி உவாட்ச் டவர் சொஸைட்டியிடம் கேட்டு, பால்டிமோர், மேரிலாண்டுக்கு இடம் மாறிச் சென்றோம். அங்கே, பயனியர்களுக்கான ஒரு வீடு பராமரிக்கப்பட்டு வந்தது, அங்கு ஓர் அறைக்கும் உணவு வசதிக்கும் மாதம் 10 டாலர்கள் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருந்தோம், அது அர்மகெதோன் வரையில் போதுமானதாக இருக்குமென நினைத்தோம். (வெளிப்படுத்துதல் 16:14, 16) அர்மகெதோன் வெகு சீக்கிரத்தில் வரவிருந்ததாகவே நாங்கள் எப்போதும் நினைத்தோம். ஆகையால், நாங்கள் பயனியர் செய்ய தொடங்கினபோது, எங்கள் வீட்டை விட்டுவிட்டோம்; மற்ற எல்லா ஈடுபாடுகளையும் நிறுத்திவிட்டோம்.
பால்டிமோரில் 1942-ல் இருந்து 1947 வரையாக நாங்கள் பயனியர் செய்தோம். அந்த ஆண்டுகளின்போது, யெகோவாவின் சாட்சிகளினுடைய ஊழியத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. எங்கள் காரை பைபிள் மாணாக்கர்களின் வீடுகளுக்கு ஒட்டிச் செல்வதற்குப் பதிலாக, வேறு எவராவது எங்களை அங்கு ஒட்டிச் சென்று விடுமாறு செய்தோம். அவ்வாறு எங்கள் காரின் சக்கர டயர்கள் வெட்டப்படாதபடி பாதுகாத்தோம். இத்தகைய எதிர்ப்பை ஒருவரும் விரும்புகிறதில்லை, எனினும் வெளி ஊழியத்தை நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு அனுபவித்தோம் என்று என்னால் சொல்ல முடியும். உண்மையில், கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வதில் சிறிது கிளர்ச்சியூட்டும் பாங்கை நாங்கள் எதிர்பார்த்தோம்.
நாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் விரைவில் செலவழித்துவிட்டோம். எங்கள் கார் டயர்கள் தேய்ந்துவிட்டன, அவ்வாறே எங்கள் உடைகளும் பாதரட்சைகளும் பழசாகிவிட்டன. இரண்டு மூன்று தடவைகளில் நீண்டகாலப் பகுதிகள் நோயுற்றோம். தொடர்ந்து சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை, ஆனால் பயனியரிங் செய்வதை விட்டு விலகிவிடுவதற்கு நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. அதைப்பற்றி நாங்கள் ஒருபோதும் பேசவும் இல்லை. பயனியர் ஊழியத்தில் நாங்கள் நிலைத்திருக்கும்படி, வாழ்க்கையின் மற்ற அதிகப்படியான செலவைக் குறைத்துக்கொண்டோம்.
ஊழிய நியமிப்பின் மாற்றங்கள்
1947-ல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த மாநாட்டுக்கு நாங்கள் சென்றோம். அங்கு இருக்கையில், பயண ஊழியராக சபைகளைச் சந்தித்து அவற்றிற்கு உதவிசெய்யும்படி, என் சகோதரன் வில்லியமுக்கும் எனக்கும், ஒவ்வொரு கடிதம் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் அந்த ஊழியத்திற்கு விசேஷித்தப் பயிற்றுவிப்பு எதையும் நாங்கள் பெறவில்லை. நாங்கள் வெறுமனே ஊழிய நியமிப்பை ஏற்று சென்றோம். அடுத்த ஏழு ஆண்டுகளின்போது, ஃபெர்னும் நானும், ஒஹாயோ, மிச்சிகன், இண்டியானா, இல்லினாய்ஸ், நியூ யார்க், ஆகிய இவ்விடங்களில் சேவித்தோம். 1954-ல், மிஷனரிகளைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகிய கிலியட்டின் 24-வது வகுப்புக்கு வரும்படி நாங்கள் அழைக்கப்பட்டோம். அங்கே இருக்கும்பொழுது ஃபெர்ன் போலியோ நோயால் தாக்கப்பட்டாள். சந்தோஷகரமாக, அவள் நன்றாக குணமடைந்துவிட்டாள்; நியூ யார்க்கிலும் கனெக்டிக்கட்டிலும் பயண ஊழியம் செய்யும்படி நாங்கள் நியமிக்கப்பட்டோம்.
ஸ்டாம்ஃபர்ட், கனெக்டிக்கட்டில் நாங்கள் சேவை செய்துகொண்டிருந்தபோது, உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரெஸிடென்ட்டாக இருந்த நேதன் எச். நார், தன்னுடனும் தன் மனைவி ஆட்ரியுடனும் அந்த வார முடிவைச் செலவிடும்படி எங்களைக் கேட்டார். அவர்கள், மசாலா சேர்த்து தயாரித்திருந்த ருசியான இறைச்சிக்கண்டத்தை எங்களுக்கு மாலை உணவில் அளித்தார்கள். அவர்களோடு நாங்கள் முன்பே பழக்கப்பட்டு இருந்தோம், ஆகவே, எங்கள் கூட்டுறவையும் மாலை உணவையும் தவிர வேறு ஏதோ ஒன்றும் அவருடைய மனதில் இருந்ததென நான் உணர்ந்தேன். பிற்பாடு அந்தச் சாயங்கால வேளையின்போது அவர் என்னிடம், “பெத்தேலுக்கு வர உனக்கு பிரியமா?” என்று கேட்டார்.
“நான் உண்மையில் அவ்வளவு நிச்சயமாக இல்லை; பெத்தேல் வாழ்க்கையைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது” என்றும் பதிலளித்தேன்.
இதைப் பற்றி பல வாரங்கள் சிந்தித்தப் பின்பு, சகோதரர் நாரிடம், நாங்கள் வரும்படி அவர் விரும்பினால் நாங்கள் வருகிறோமெனச் சொன்னோம். அடுத்த வாரம், எங்கள் 21-வது திருமண நிறைவு நாளாகிய ஏப்ரல் 27, 1957-ல், பெத்தேலுக்கு வந்து அறிக்கை செய்யும்படி ஒரு கடிதத்தைப் பெற்றோம்.
பெத்தேலில் அந்த முதல் நாளில், சகோதரர் நார், அங்கு நான் செய்யும்படி எதிர்பார்க்கப்பட்ட காரியத்தின்பேரில் தெளிவான அறிவுரையை எனக்கு அளித்தார். அவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: “நீ இனிமேலும் வட்டார ஊழியனாக இருக்கப்போவதில்லை; நீ பெத்தேலில் வேலை செய்யவேண்டும். இது நீ செய்யவேண்டிய மிக முக்கியமான வேலை; இங்கே பெத்தேலில் நீ பெறும் பயிற்றுவிப்பைப் பொருத்தி பயன்படுத்துவதற்கு உன் நேரத்தையும் சக்தியையும் உபயோகிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீ இங்கு நிலையாக இருக்கும்படி நாங்கள் விரும்புகிறோம்.”
பெத்தேலில் வாழ்க்கை அர்த்தமுடையது
பத்திரிகை மற்றும் அஞ்சல் துறைகளில் வேலை செய்வதே என் முதல் நியமிப்பாக இருந்தது. பின்னால், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சகோதரர் நார், தன்னுடைய அலுவலகத்திற்கு நான் வரும்படி கேட்டுக்கொண்டார். நான் பெத்தேலுக்குக் கொண்டுவரப்பட்ட மெய்யான காரணம் பெத்தேலில் ஹோம் வேலை செய்யவே என்று அவர் அப்போது எனக்குத் தெரிவித்தார். அவருடைய அறிவுரைகள் மிக நேரடியானவையாய் இருந்தன, “பெத்தேல் வீட்டைக் கண்காணித்து நடத்துவதே உன் பொறுப்பு” என்றார்.
பெத்தேல் வீட்டை நடத்துவது, பண்ணையில் நான் வளருகையில் என் பெற்றோர் எனக்குக் கற்பித்த பாடங்களை எனக்கு நினைப்பூட்டினது. பெத்தேல் வீடு, இயல்பான குடும்ப அமைப்பைப்போலவே பெரும்பாலும் உள்ளது. துணிகள் துவைக்க வேண்டும், உணவு தயாரிக்க வேண்டும், பாத்திரங்களைக் கழுவ வேண்டும், படுக்கைகளை ஒழுங்காக விரிக்க வேண்டும், இவற்றைப்போன்ற இன்னும் மற்றவற்றைச் செய்ய வேண்டும். பெத்தேலை தன் வீடு என்று ஒருவர் அழைக்கக்கூடிய வகையில் வாழ்வதற்கு சௌகரியமான ஓர் இடமாக்கும்படி அந்த வீட்டு ஒழுங்கமைப்பு குழு முயற்சி செய்கிறது.
பெத்தேல் செயல்படும் முறையிலிருந்து குடும்பங்கள் மிகுதியான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாமென நான் நம்புகிறேன். நாங்கள் விடியற்காலையிலேயே விழித்தெழுந்து, தின வசனம் ஒன்றை ஆலோசித்து எங்கள் நாளை ஆவிக்குரிய சிந்தனைகளோடு தொடங்குகிறோம். நாங்கள் கடினமாக உழைக்கும்படியும், சமநிலையான ஆனால் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழும்படியும் எங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் ஒருவேளை நினைப்பதுபோல், பெத்தேல் சந்நியாசி மடத்தைப்போல் இல்லை. திட்டமிடப்பட்ட எங்கள் வாழ்க்கை முறையின் காரணமாக நாங்கள் மிகுதியானவற்றை நிறைவேற்றுகிறோம். தாங்கள் இங்கு பெற்ற பயிற்றுவிப்பு, பின்னால் தங்கள் குடும்பங்களிலும் கிறிஸ்தவ சபையிலும் பொறுப்புகளை ஏற்க தங்களுக்கு உதவிசெய்ததென பலர் சொல்லியிருக்கின்றனர்.
பெத்தேலுக்கு வருகிற இளைஞரான ஆண்களும் பெண்களும், சுத்தம் செய்வதற்கு, துணிகளைத் துவைப்பதற்கு அல்லது அச்சு ஆலையில் வேலைசெய்வதற்கு நியமிக்கப்படலாம். அத்தகைய உடலுழைப்பு தாழ்வானது என்றும் நமக்கு மதிப்புக்குறைவானது என்றும் நாம் நம்பும்படி செய்ய இந்த உலகம் விரும்பலாம். எனினும், நம் குடும்பம் சரியாகவும் சந்தோஷமாகவும் செயல்படுவதற்கு அத்தகைய வேலை நியமிப்புகள் அவசியமானவை என்று பெத்தேலில் இருக்கும் இளைஞர்கள் மதித்துணருவோராக இருக்கிறார்கள்.
உண்மையில் சந்தோஷமாக இருப்பதற்கு அந்தஸ்தும் கௌரவமும் உங்களுக்கு தேவை என்ற எண்ணத்தையும் இந்த உலகம் முன்னேற்றுவிக்கலாம். அது தவறு. நாம் செய்யும்படி நியமிக்கப்பட்டதை நாம் செய்கையில், ‘செய்யவேண்டிய கடமையைத்தான் செய்கிறோம்,’ யெகோவாவின் ஆசீர்வாதங்களையும் பெறுகிறோம். (லூக்கா 17:10) நம்முடைய ஊழியத்தின் நோக்கத்தை, அதாவது, யெகோவாவின் சித்தத்தைச் செய்து ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதை, நாம் நினைவுபடுத்திக்கொண்டால் மாத்திரமே நமக்கு உண்மையான மனதிருப்தியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதை நம் மனதில் வைத்திருந்தால், எந்த வேலை நியமிப்பும் இன்பமானதாயும் திருப்தியளிப்பதாயும் இருக்கும்.
விஸ்தரிப்பில் பங்குகொள்ளும் சிலாக்கியம்
நாங்கள் பெத்தேலுக்கு வருவதற்கு பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, கிளீவ்லாண்ட், ஒஹாயோவில் 1942-ல் நடந்த மாநாட்டில், “சமாதானம்—அது நிலைத்திருக்குமா?” என்ற பேச்சை சகோதரர் நார் கொடுத்தார். அப்போது நடந்துகொண்டிருந்த இரண்டாவது உலக மகா யுத்தம் முடிவடையும் என்றும், அதற்குப் பின் சமாதானமான காலம் இருக்கும் என்றும், அது, பரவலான பிரசங்க நடவடிக்கைக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் என்றும் தெளிவாகச் சொன்னார். 1943-ல், மிஷனரிகளைப் பயிற்றுவிப்பதற்கு கிலியட் பள்ளியும், சகோதரரின் பொதுப் பேச்சு திறமைகளை முன்னேற்றுவிப்பதற்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் ஸ்தாபிக்கப்பட்டது. பெரும் மாநாடுகளும் ஒழுங்குசெய்யப்பட்டன. 1950-களில், நியூ யார்க்கிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் நடந்தவை முக்கியமாய் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன. 1950-லும் 1953-லும் நடந்த மாநாடுகளைப் பொறுத்தமட்டில், ட்ரெய்லர் சிட்டி என அழைக்கப்பட்ட பெரிய பட்டணத்தில் நடத்த ஏற்பாடு செய்வதில் உதவிசெய்வதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. அது, அந்த ஒவ்வொரு மாநாட்டின்போதும், பத்தாயிரக்கணக்கானோர் எட்டு நாட்கள் தங்குவதற்கு இடவசதியளித்தது.
1958-ல் நடந்த, எல்லாவற்றிலும் மிகப் பெரிதான மாநாடு உட்பட, அந்த எல்லா மாநாடுகளுக்கும் பின்பு, ராஜ்ய பிரஸ்தாபிகளில் பெரும் அதிகரிப்புகள் உண்டாயின. இது பெத்தேலில் எங்கள் வேலையை நேரடியாகப் பாதித்தது. 1960-களின் முடிவிலும் 1970-களின் தொடக்கத்திலும், பெத்தேல் ஊழியர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி இல்லாமல் தவித்தோம். பெருகிக்கொண்டிருந்த எங்கள் குடும்பம் தங்குவதற்கான இடவசதியளிப்பதற்கு, மேலுமதிகமான படுக்கை அறைகளும், சமையலறைகளும், சாப்பாட்டறைகளும் எங்களுக்குத் தேவைப்பட்டன.
விரிவாக்குவதற்காக பொருத்தமான ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கும்படி சகோதரர் நார், தொழிற்சாலை கண்காணியாகிய சகோதரர் மாக்ஸ் லார்சனிடமும் என்னிடமும் சொன்னார். 1957-ல் நான் பெத்தேலுக்கு வந்தபோது, 500 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு, ஒரு பெரிய குடியிருப்பு கட்டிடத்தில் தங்குவதற்கான வசதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆண்டுகள் கடந்து செல்கையில், அருகே இருந்த, த டவர்ஸ், த ஸ்டான்டிஷ், த போசெர்ட் ஆகிய மூன்று பெரிய ஓட்டல்களை சங்கம் வாங்கி புதுப்பித்தது; அவற்றோடுகூட தனி அறைகளைக் கொண்ட பல சிறிய கட்டிடங்களையும் வாங்கி புதுப்பித்தது. 1986-ல் ஹோட்டல் மார்கரெட் இருந்த நிலத்தையும் சங்கம் வாங்கி, புதியதும் அழகியதுமான அந்தக் கட்டிடத்தை ஏறக்குறைய 250 பேருக்கு வீடாக மாற்றியது. பின்பு, 1990-களின் தொடக்கத்தில், கூடுதலான 1,000 ஊழியருக்கு தங்கும் வசதி அளிக்க, 30-மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இப்போது, புரூக்லின் பெத்தேல், 3,300-க்கு மேற்பட்ட நம் குடும்ப உறுப்பினருக்கு இடவசதி அளித்து போஷிக்க முடியும்.
நியூ யார்க்கிலுள்ள புரூக்லின் பெத்தேலில் இருந்து ஏறக்குறைய 160 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் வால்கில் என்ற இடத்திலும் நிலம் வாங்கப்பட்டது. 1960-ன் பிற்பகுதியிலிருந்து தொடங்கி ஆண்டுகளினூடே, தங்குமிடங்களும் ஒரு பெரிய அச்சு ஆலையும் அங்கு கட்டப்பட்டன. இப்போது, நம் பெத்தேல் குடும்பத்தின் ஏறக்குறைய 1,200 உறுப்பினர்கள் அங்கு வாழ்ந்து வேலை செய்கிறார்கள். 1980-ல், நியூ யார்க் நகரத்திற்கு அருகிலும், வசதியான பெரும்பாதை உடையதாயும் இருக்கும் ஏறக்குறைய 600 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக தேடப்பட்டு வந்தது. அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், “அவ்வளவு பெரிய நிலம் உங்களுக்கு எங்கே கிடைக்கப்போகிறது? அதெல்லாம் நடக்காத விஷயம்” என்று சொல்லி சிரித்தார். ஆனால் அடுத்த நாள் காலையில் அவர் திரும்பிவந்து: “உங்களுக்கு நிலம் பார்த்துவிட்டேன்” என்றார். இன்று அது, நியூ யார்க், பாட்டர்சனில் உவாட்ச்டவர் எஜுகேஷனல் சென்டர் என அழைக்கப்படுகிறது. அங்கே பள்ளிகள் நடத்தப்படுகின்றன, 1,300-க்கு மேற்பட்ட ஊழியர்கள் அடங்கிய ஒரு குடும்பமும் உள்ளது.
நான் கற்ற பாடங்கள்
மற்றவர்களிடமிருந்து மதிப்புமிகுந்த தகவலை வரவழைப்பவர் யாரோ, அவரே நல்ல கண்காணி என்பதை நான் கற்றேன். பெத்தேல் கண்காணியாக இருக்கும்படி எனக்குக் கிடைத்த சிலாக்கியத்தில், நான் அமல்படுத்திய யோசனைகளில் பெரும்பான்மையானவை மற்றவர்களிடமிருந்து வந்தவை.
நான் பெத்தேலுக்கு வந்தபோது, இன்று நான் இருப்பதுபோல், பலர் முதியவர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையர் மரித்துவிட்டார்கள். முதிர்வயதடைந்து மரிப்போரின் இடங்களை நிரப்புவோர் யார்? திறமை மிகுந்தவர்களே எப்போதும் நிரப்புவோராக இல்லை. பயன்படுத்தக்கூடியவர்களாக, வேலையை உண்மையுடன் செய்துகொண்டு இங்கிருப்போரே அவ்வாறு நிரப்புவோராக இருக்கிறார்கள்.
ஒரு நல்ல மனைவியின் பெருமதிப்பு நினைவில் வைப்பதற்கு மற்றொரு முக்கியமான காரியமாக இருக்கிறது, என் அருமை மனைவியாகிய ஃபெர்னினின் பக்கபலம், என் தேவராஜ்ய வேலை நியமிப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. கணவர்கள், தங்கள் மனைவிமார் தங்களது ஊழிய நியமிப்புகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு உடையவர்கள். ஃபெர்னும் நானும் செய்ய விரும்புகிற ஒன்றையே திட்டமிட நான் முயற்சி செய்கிறேன். அதற்கென்று அதிக செலவு செய்யவேண்டிய அவசியமில்லை; வெறுமனே வழக்கமாகச் செய்துவரும் வேலையிலிருந்து ஒரு மாற்றம்தான் தேவை. தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்கான காரியங்களைச் செய்வது கணவனுக்குரியது. அவளோடு அவர் செலவிடும் நேரம் அருமையானதும் விரைவில் பறந்தோடுவதுமாக இருக்கிறது; ஆகையால் அவர் அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
இயேசு குறிப்பிட்டு பேசின கடைசி நாட்களில் வாழ்வதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். மனித சரித்திரம் முழுவதிலும் இதுவே மிக அதிக வியப்பூட்டும் காலமாக இருக்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்தின் வருகைக்கு ஆயத்தம் செய்பவராய், கர்த்தர் தம்முடைய அமைப்பை எவ்வாறு படிப்படியாக முன்னேற்றுவிக்கிறார் என்பதை நம் விசுவாசக் கண்களால் நாம் கூர்ந்து கவனித்துக் காண முடிகிறது. யெகோவாவின் சேவையில் என் வாழ்க்கை காலத்தை நான் பின்னோக்கிக் காண்கையில், இந்த அமைப்பை நடத்துபவர் மனிதரல்ல, யெகோவாதாமே என்பதை என்னால் காண முடிகிறது. நாம் வெறுமனே அவருடைய ஊழியர்களே. அத்தகையோராக, வழிநடத்துதலுக்கு அவரிடமே நாம் எப்பொழுதும் நோக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதை அவர் ஒருமுறை தெளிவாக்கினவுடன், நாம் உடனடியாகக் கீழ்ப்படிந்து அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.
அமைப்புடன் முழுமையாக ஒத்துழையுங்கள்; அப்போது, நிறைவான சந்தோஷத்துடன்கூடிய வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் அமையும். நீங்கள் என்ன செய்தாலும், அது பயனியர் ஊழியமோ, வட்டார ஊழியமோ, ஒரு சபையுடன் பிரஸ்தாபியாக சேவிப்பதோ, பெத்தேல் சேவையோ, மிஷனரி ஊழியமோ, எதுவாயினும், கொடுக்கப்பட்ட திட்டத்தைப் பின்பற்றி, உங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை உயர்வாக மதியுங்கள். யெகோவாவின் சேவையில் ஒவ்வொரு வேலை நியமிப்பையும் ஒவ்வொரு ஊழிய நாளையும் அனுபவித்து மகிழ்வதற்கு உங்களால் ஆனதையெல்லாம் செய்ய பிரயாசப்படுங்கள். சில சமயங்களில் நீங்கள் களைப்படைந்து, மிகுந்த வேலையால் சோர்வுற்றவர்களாக அல்லது ஊக்கம் இழந்தவர்களாக உணருவீர்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்தான், உங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் நோக்கத்தை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். உங்களுடைய விருப்பத்தை அல்ல, அவருடைய சித்தத்தைச் செய்வதற்கே ஒப்புக்கொடுத்தீர்கள்.
நான் வேலை செய்த நாட்களில் ஒருநாள்கூட மகிழ்ச்சியடையாமல் இருந்ததில்லை. ஏன்? ஏனெனில் நாம் நம்மை யெகோவாவுக்கு முழு ஆத்துமாவுடன் ஒப்படைத்து உழைக்கையில், நாம் ‘செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ என்று அறியும் மனதிருப்தி நமக்கு இருக்கிறது.
[பக்கம் 19-ன் படம்]
பத்திரிகை துறை
[பக்கம் 19-ன் படம்]
டிரெய்லர் சிட்டி, 1950
[பக்கம் 19-ன் படம்]
1946-ல் பால்டிமோரில் பயனியர்செய்வது
[பக்கம் 19-ன் படம்]
1950-ல் ஃபெர்னுடன் டிரெய்லர் சிட்டியில்
[பக்கம் 22-ன் படம்]
ஆட்ரி மற்றும் நேதன் நார் சகோதரருடன்
[பக்கம் 23-ன் படம்]
நியூ யார்க்கில் பாட்டர்சனுக்கு அருகிலுள்ள உவாட்ச் டவர் எஜுகேஷனல் சென்டர்
[பக்கம் 24-ன் படம்]
இன்று ஃபெர்னுடன்