வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மத்தேயு 17:20-ன்படி, அப்போஸ்தலர்கள், நோயுற்ற ஒரு பையனை, ‘தங்கள் அவிசுவாசத்தினாலேதான்’ சுகப்படுத்த முடியவில்லை. எனினும், மாற்கு 9:29-ல் அவர்களால் முடியாமற்போனது ஜெபத்திற்கான தேவையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு சுவிசேஷ விவரங்களில், ஏன் வெவ்வேறு காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
உண்மையில், இந்த விவரப்பதிவுகள் இரண்டிலும், ஒன்றில் விடுபட்ட விஷயம் மற்றொன்றால் பூர்த்தி செய்யப்படுகிறதே தவிர, ஒன்றுக்கொன்று முரண்படுவதாக இல்லை. முதலாவதாக, மத்தேயு 17:14-20-ஐப் பாருங்கள். ஒருவன், தன் மகன் சந்திரரோகி என்றும் இயேசுவின் சீஷர்களால்கூட அந்த இளைஞனைச் சுகப்படுத்த முடியவில்லை என்றும் அறிவித்தான். பின்பு இயேசு, அந்த இளைஞனை அலைக்கழித்துக்கொண்டிருந்த ஒரு பிசாசைத் துரத்துவதன்மூலம் அவனைச் சுகப்படுத்தினார். அந்தப் பிசாசை, தங்களால் மட்டும் ஏன் துரத்த முடியவில்லை என்று சீஷர்கள் கேட்டார்கள். மத்தேயுவினுடைய விவரத்தின் பிரகாரம், இயேசு இவ்வாறு பதிலளித்தார்: ‘உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம்விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,’
இப்போது மாற்கு 9:14-29-க்குத் திருப்புங்கள், அங்கே மேலுமான நுட்பவிவரங்களைக் காண்கிறோம். உதாரணமாக, இந்தச் சந்தர்ப்பத்தில் வலிப்பு நோய் வகையான அந்தத் தாக்குதல்கள் ஒரு பொல்லாத ஆவியால் உண்டுபண்ணப்பட்டன என்ற நுட்பவிவரத்தை மாற்கு 9:17 அளிக்கிறது. பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் (வலிப்பு நோயுடையோரையும், NW) இயேசு சொஸ்தமாக்கினார் என்று பைபிள் வேறு இடத்தில் சொல்வது கவனிக்கத்தக்கது. (மத்தேயு 4:24) இந்த ஒரேவொரு சந்தர்ப்பத்தில், ‘ஊமையும் செவிடுமான ஆவியால்,’ அதாவது ஒரு பொல்லாத ஆவியால் அந்த வலிப்புகள் ஏற்படும்படி செய்யப்பட்டன; இதை வைத்தியராகிய லூக்கா உறுதிபடுத்துகிறார். (லூக்கா 9:39; கொலோசெயர் 4:14) “அது அவனை எங்கே பிடித்தாலும்” என்ற சொற்றொடரை மாற்கு 9:18-ல் கவனியுங்கள். ஆகையால் அந்தப் பிசாசு அந்த இளைஞனைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டில்லை, எப்போதாவதே தாக்கினது. இருப்பினும், சீஷர்கள் அந்தப் பிசாசைத் துரத்தி, அவ்வாறு அந்தப் பையனைச் சுகப்படுத்த முடியவில்லை. ஏன் முடியவில்லை என்று அவர்கள் கேட்டபோது, இயேசு பதிலளித்து: ‘இவ்வகை பிசாசு ஜெபத்தினாலன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.’
எனினும். மாற்குவின் விவரத்தைக் கவனமாக வாசிப்பது, மத்தேயு பதிவுசெய்த விவரத்தோடு அது முரண்படுகிறதில்லை என்று காட்டுகிறது. அந்தச் சந்ததியின் விசுவாசமின்மையைக் குறித்து இயேசு வருந்தினார் என்று மாற்கு 9:19-ல் நாம் வாசிக்கிறோம். மேலும் 23-ம் வசனத்தில், அந்த இளைஞனின் தகப்பனிடம் அவர்: “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்று சொன்னதாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் மாற்குவும்கூட விசுவாசத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறார். 29-வது வசனத்தில் மாத்திரமே கூடுதலான ஒரு நுட்ப விவரத்தை மாற்கு அளிக்கிறார். ஜெபத்தைப் பற்றி இயேசு சொன்னதை மாற்கு சேர்த்திருக்கிறார், இதை மத்தேயுவோ லூக்காவோ சேர்க்கவில்லை.
அப்படியானால், நாம் என்ன சொல்லலாம்? மற்ற சந்தர்ப்பங்களில், 12 அப்போஸ்தலர்களும் 70 சீஷர்களும் பொல்லாத ஆவிகளைத் துரத்தியிருந்தார்கள். (மாற்கு 3:15; 6:13; லூக்கா 10:17) ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், சீஷர்கள் அந்தப் பிசாசைத் துரத்த முடியவில்லை. ஏன்? பல்வேறு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நுட்பவிவரங்களை நாம் ஒன்றுசேர்த்தால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும். இந்த வகைப் பிசாசின் காரணமாக ஒருவேளை அவ்வாறு இருந்திருக்கலாம்; ஏனெனில் பிசாசுகளுக்கு வெவ்வேறுபட்ட ஆளுமைகளும், அக்கறைகளும், திறமைகளும்கூட இருக்கலாமெனத் தோன்றுகிறது. இந்த வகையைக் குறித்ததில், முக்கியமாய் உறுதியான விசுவாசமும், கடவுளுடைய உதவிக்காக ஊக்கமான ஜெபமும் தேவைப்பட்டன. நிச்சயமாகவே, இயேசுவுக்கு அத்தகைய விசுவாசம் இருந்தது. மேலும், ஜெபத்தைக் கேட்கிறவராகிய தம்முடைய பிதாவின் ஆதரவும் அவருக்கு இருந்தது. (சங்கீதம் 65:2) அந்தப் பிசாசைத் துரத்தி, அதால் பீடிக்கப்பட்ட இளைஞனை இயேசு சுகப்படுத்தக் கூடியவராக இருந்ததுமட்டுமல்லாமல், அவ்வாறு அதைச் செய்தும் முடித்தார்.