வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் ஏதாவது சத்தத்தைக் கேட்கும்போது அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என அர்த்தமா?
இல்லை. பிசாசுகள் இதுபோல செய்திருப்பதாக அறிக்கை செய்யப்பட்டபோதிலும், குரல்களை கேட்பதாகவோ விவரிக்க முடியாத வேறெதாவது அலைக்கழிக்கும் உணர்ச்சிகளை அனுபவிப்பதாகவோ சொல்லும் அநேகர் தங்களுக்கு உடல்நல பிரச்சினைகள் இருப்பதை பரிசோதனையின் மூலம் அறிந்திருக்கிறார்கள்.
பேய் பிடித்துக் கொள்வதாலும், உடல்நல பிரச்சினைகள் காரணமாகவும் சில சமயங்களில் ஒரேவிதமான பாதிப்புகள் ஏற்படுவதை முதல் நூற்றாண்டு மக்களும் தெளிவாக அறிந்திருந்தனர். மத்தேயு 17:14-18-ல் (NW) ஒரு சிறுவனை இயேசு சுகப்படுத்தியதாக நாம் வாசிக்கிறோம். அந்தச் சிறுவனுக்கு கடுமையான காக்காய் வலிப்பு ஏற்பட்டபோதிலும், உண்மையில் அதற்குக் காரணம் ஒரு பேய்தான். ஆனால், இதற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில், சுகப்படுத்துவதற்காக திரளானோரை இயேசுவிடம் கொண்டுவந்தபோது அவர்களில் “பிசாசு பிடித்தவர்களும் அதோடு காக்காய் வலிப்பு நோயாளிகளும்” சிலர் இருந்தனர். (மத்தேயு 4:24, NW) சில காக்காய் வலிப்பு நோயாளிகளுக்கு பேய் பிடிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அவர்களுக்கு உடல்நிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தன.
பெரும்பாலும் மருந்துகள் மூலம் சுகப்படுத்தக்கூடிய வியாதியான உளச்சிதைவு நோய் உடையவர்கள் குரல்களை கேட்பதாக அல்லது விசித்திரமாக தோன்றுகிற வேறுபல அறிகுறிகளை அனுபவிப்பதாக அறிக்கை செய்யப்படுகிறது.a உடல்நிலை சம்பந்தப்பட்ட வேறு பிரச்சினைகளினாலும் மனக் குழப்பம் ஏற்படலாம்; இதை பேய்த் தொல்லை என சிலர் தவறாக நினைத்து விடலாம். ஆகவே, குரல்களை கேட்பதாக அல்லது அலைக்கழிக்கும் வேறு எவற்றையாவது உணர்வதாக சொல்லும் ஒருவர் அது பேய் தொல்லைதான் என நம்பினாலும் அதற்கு உடல்நிலை காரணமாக இருக்குமா என்பதை கண்டுபிடிக்கும்படி அவரை கண்டிப்பாக உற்சாகப்படுத்த வேண்டும்.
[அடிக்குறிப்பு]
a செப்டம்பர் 8, 1987 விழித்தெழு! பத்திரிகையில் “மனநோயின் மர்மத்தை வெளியாக்குதல்” என்ற கட்டுரையைக் காண்க. இது காவற்கோபுரத்தின் ஒரு துணைப் பத்திரிகை.