யெகோவா நம்முடைய நம்பிக்கையாய் இருக்க வேண்டும்
“உனது நம்பிக்கை யெகோவாவே.”—நீதிமொழிகள் 3:26, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. கடவுளில் நம்பிக்கை வைப்பதாக அநேகர் கூறினபோதிலும், அது எப்போதும் உண்மையல்ல என்பதை எது காண்பிக்கிறது?
அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின் நோட்டுகளில், “நாங்கள் கடவுளை நம்புகிறோம்” என்ற வாசகம் காணப்படுகிறது. ஆனால் அந்த நாட்டிலோ மற்ற இடங்களிலோ இந்த நோட்டைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் உண்மையிலேயே கடவுளில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது அந்த நோட்டின்மீதே அதிக நம்பிக்கை வைக்கிறார்களா? அந்த நாட்டின் பணத்திலோ மற்றெந்த நாட்டின் பணத்திலோ நம்பிக்கை வைப்பது, சர்வ வல்லமையுள்ள அன்பின் கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு இணையாக முடியாது. ஏனென்றால், அவர் தம் வல்லமையை துர்ப்பிரயோகம் செய்பவராகவோ எந்தவிதத்திலும் பேராசை உள்ளவராகவோ ஒருபோதும் இல்லை. சொல்லப்போனால், பேராசையை தெள்ளத்தெளிவாக கண்டனம் செய்கிறார்.—எபேசியர் 5:5.
2. பணத்தின் சக்தியைப் பற்றி உண்மை கிறிஸ்தவர்கள் என்ன மனநிலை உடையவர்களாய் இருக்கின்றனர்?
2 உண்மைக் கிறிஸ்தவர்கள், ‘வஞ்சக சக்திபடைத்த’ ஐசுவரியத்தில் நம்பிக்கை வைப்பதற்கு மாறாக கடவுளை நம்புகின்றனர். (மத்தேயு 13:22, NW) சந்தோஷத்தைக் கொடுக்கவும் உயிரைப் பாதுகாக்கவும் பணத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் குறைவு என அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய சக்தியோ அப்படிப்பட்டது அல்ல. (செப்பனியா 1:18) ஆகவே, “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” என்ற ஆலோசனை எவ்வளவு ஞானமான ஒன்று!—எபிரெயர் 13:5.
3. பவுல், உபாகமம் 31:6-ஐ மேற்கோள் காட்டுவதன் முக்கியத்துவத்தை அதன் சூழமைவு எவ்வாறு காண்பிக்கிறது?
3 மேற்சொன்ன வார்த்தைகளை எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகையில், மோசே தன் மரணத்திற்கு முன்பாக இஸ்ரவேலருக்கு கொடுத்த அறிவுரைகளிலிருந்து மேற்கோள் காட்டினார்: “நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை.” (உபாகமம் 31:6) தங்கள் சரீர தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்வார் என்ற அவர்களுடைய நம்பிக்கையைப் பற்றி மட்டுமல்ல இன்னும் அதிகத்தை குறித்தும் மோசே பேசினார் என்பதை சூழமைவு காண்பிக்கிறது. எப்படி?
4. தம்மை நம்பமுடியும் என இஸ்ரவேலருக்கு கடவுள் எவ்வாறு நிரூபித்தார்?
4 இஸ்ரவேலர் 40 வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்தபோது, அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வதன் மூலம் கடவுள் உண்மையுள்ளவராக நிரூபித்தார். (உபாகமம் 2:7; 29:5) அவர்களுக்கு தலைமை வகிப்பையும் கொடுத்தார். “பாலும் தேனும் ஓடுகிற” தேசத்திற்கு இஸ்ரவேலர்களை வழிநடத்திச் சென்றபோது, பகலில் மேக ஸ்தம்பமும் இரவில் அக்கினி ஸ்தம்பமும் வழிநடத்தியது அதற்கு ஒரு வெளிக்காட்டாக இருந்தது. (யாத்திராகமம் 3:8; 40:36-38) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கான சமயம் வந்தபோது மோசேக்கு பின் இஸ்ரவேலரை வழிநடத்தும்படி யோசுவாவை யெகோவா தெரிவுசெய்தார். தாங்கள் நுழையவிருந்த தேசத்தில் வாழ்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என அவர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அநேக வருடங்களாக யெகோவா அவர்களுடன் நடந்து வந்திருந்ததால், அவர்கள் பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. யெகோவா நம்பத்தகுந்த கடவுள் என்பதற்கு நியாயமான காரணம் இஸ்ரவேலருக்கு இருந்தது!
5. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பிருந்த இஸ்ரவேலரின் நிலைக்கு, இன்றைய கிறிஸ்தவர்களின் நிலை எவ்வாறு ஒத்திருக்கிறது?
5 கடவுளுடைய புதிய உலகத்திற்கு போகும் பாதையில், தற்போதைய துன்மார்க்க உலகம் என்ற பாலைவனத்தின் வழியே கிறிஸ்தவர்கள் நடந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் 40-க்கும் அதிகமான வருடங்களாக இந்தப் பாதையில் சென்றிருக்கின்றனர். இப்போது, கடவுளுடைய புதிய உலகத்தின் எல்லையில் நிற்கின்றனர். இருந்தாலும் அவர்களுடைய வழியில் எதிரிகள் இருக்கின்றனர்; பாலும் தேனும் ஓடிய பூர்வகால வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைவிட அதிக மகிமையான ஒரு தேசத்திற்குள் நுழைவதைத் தடைசெய்ய அவர்கள் முழு மூச்சுடன் முயலுகின்றனர். ஆகவே, பவுல் திரும்ப கூறிய மோசேயின் வார்த்தைகள் இன்று கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை”! விசுவாசம் நிறைந்தவர்களாய், யெகோவாவில் நம்பிக்கை வைத்து திடமாகவும் தைரியமாகவும் நிலைத்திருக்கும் அனைவரும் நிச்சயம் பரிசைப் பெறுவார்கள்.
அறிவிலும் நட்பிலும் ஆதாரங்கொண்ட நம்பிக்கை
6, 7. (அ) யெகோவாமீது ஆபிரகாம் வைத்திருந்த நம்பிக்கையை எது சோதித்தது? (ஆ) ஈசாக்கை பலியிடுவதற்கான இடத்திற்கு பயணம் செய்கையில் ஆபிரகாம் எவ்வாறு உணர்ந்திருக்கக்கூடும்?
6 ஒருசமயம் இஸ்ரவேலரின் முற்பிதாவான ஆபிரகாமிடம் அவருடைய குமாரனான ஈசாக்கை தகனபலியாக செலுத்தும்படி கடவுள் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 22:2) உடனடியாக கீழ்ப்படிய தயாராக இருக்குமளவுக்கு யெகோவாவில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க, அன்புள்ள இந்தத் தகப்பனுக்கு எது உதவியது? எபிரெயர் 11:17-19 இதற்கு பதிலளிக்கிறது: “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான், மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.”
7 பலி செலுத்தவேண்டிய இடத்திற்கு செல்ல ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் மூன்று நாள் எடுத்தது என்பதை நினைவுகூருங்கள். (ஆதியாகமம் 22:4) என்ன செய்யும்படி ஆபிரகாமிடம் கேட்கப்பட்டதோ அதைப் பற்றி திரும்பவும் யோசிக்க அவருக்கு நிறைய அவகாசம் இருந்தது. அவருடைய உணர்ச்சிகளையும் மனக்கிலேசத்தையும் நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? ஈசாக்கின் பிறப்பு கொஞ்சம்கூட எதிர்பாராமல் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு காரணமாக இருந்தது. தெய்வீக தலையிடுதலின் அந்த அத்தாட்சி, ஆபிரகாமுக்கும் முன்பு மலடியாயிருந்த அவர் மனைவி சாராளுக்கும் கடவுளோடு இருந்த பிணைப்பை அதிக பலமாக்கியது. ஈசாக்கிற்கும் அவன் சந்ததிக்கும் எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தங்கள் காலத்தை கழித்திருப்பர் என்பது நிச்சயம். கடவுள் அவர்களிடம் கேட்டிருந்த காரியத்தால் அவர்களுடைய கனவு கலைந்துபோகுமா?
8. கடவுள்மீது ஆபிரகாம் வைத்த நம்பிக்கை, ஈசாக்கை அவரால் உயிர்த்தெழுப்ப முடியும் என நம்புவதைக் காட்டிலும் அதிகத்தை எவ்வாறு உட்படுத்தியது?
8 இருந்தாலும், நெருங்கிய நண்பர்கள் ஒருவரையொருவர் தனிப்பட்ட விதமாக அறிந்திருப்பதைப் போல ஆபிரகாம் கடவுளை அறிந்திருந்தார்; அவருடைய நம்பிக்கை இந்த அறிவில் சார்ந்திருந்தது. ‘யெகோவாவின் சிநேகிதனாகிய’ ஆபிரகாம் “தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.” (யாக்கோபு 2:23, தி.மொ.) யெகோவாவில் ஆபிரகாமுடைய நம்பிக்கை, கடவுளால் ஈசாக்கை உயிர்த்தெழுப்ப முடியும் என்று நம்புவதைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதாவது, ஆபிரகாம் எல்லா உண்மைகளையும் அறிந்திராதபோதிலும் தான் செய்யும்படி யெகோவா கேட்ட காரியம் சரியானதே என்றும் நிச்சயமாக இருந்தார். இவ்வாறு கேட்டதனால் யெகோவா நீதியுள்ளவர் அல்ல என்று சந்தேகிக்க ஆபிரகாமுக்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. பின்னர், ஈசாக்கு பலியாவதைத் தடுக்க யெகோவாவின் தூதன் குறுக்கிட்டபோது ஆபிரகாமின் நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.—ஆதியாகமம் 22:9-14.
9, 10. (அ) ஆபிரகாம் இதற்கு முன் எப்போது யெகோவாவில் நம்பிக்கையை வெளிக்காட்டியிருந்தார்? (ஆ) ஆபிரகாமிடமிருந்து என்ன முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
9 ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் நீதியில் இதேபோன்ற நம்பிக்கையை ஆபிரகாம் காண்பித்திருந்தார். சோதோம் கொமோரா அழிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டபோது, தன் உறவினனான லோத்து உட்பட அங்கு வாழ்ந்துகொண்டிருந்த நீதியுள்ள மக்களின் நன்மையில் அவர் நியாயமாகவே அக்கறை காண்பித்தார். ஆபிரகாம் இந்த வார்த்தைகளில் தேவனிடம் மன்றாடினார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ.”—ஆதியாகமம் 18:25.
10 யெகோவா ஒருபோதும் அநீதியானதைச் செய்யமாட்டார் என்பதில் கோத்திர பிதாவாகிய ஆபிரகாம் நிச்சயமாயிருந்தார். பின்னர் சங்கீதக்காரன் பாடினார்: “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.” (சங்கீதம் 145:17) நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘நான் அனுபவிக்கும்படி யெகோவா அனுமதிக்கும் காரியங்களை, அவருடைய நீதியை சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்கிறேனா? அவர் அனுமதிக்கும் எதுவும் எனக்கும் மற்றவர்களுக்கும் நன்மையிலேயே விளைவடையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேனா?’ ஆம் என்று நம்மால் பதில் சொல்லமுடிந்தால், ஆபிரகாமிடமிருந்து முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
யெகோவா நியமிப்பவர்களில் நம்பிக்கை வைத்தல்
11, 12. (அ) கடவுளுடைய ஊழியர்களுக்கு நம்பிக்கையின் எந்த அம்சம் தேவை? (ஆ) சில சமயங்களில் நமக்கு எது ஒரு பிரச்சினையாக இருக்கலாம்?
11 யெகோவாவை தங்கள் நம்பிக்கையாக கருதுபவர்கள், அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற உபயோகிப்பதற்காக நியமிப்பவர்களிலும் நம்பிக்கை வைக்கின்றனர். இது இஸ்ரவேலருக்கு, மோசேயிலும் பின்னர் யோசுவாவிலும் நம்பிக்கை வைப்பதை அர்த்தப்படுத்தியது. ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு, எருசலேம் சபையின் அப்போஸ்தலரிலும் மூப்பர்களிலும் நம்பிக்கை வைப்பதை இது அர்த்தப்படுத்தியது. இன்று நமக்கு, ‘ஏற்றவேளையிலே ஆவிக்குரிய உணவை’ கொடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மீதும் அவர்களுள் சிலர் அடங்கிய ஆளும் குழுவின் மீதும் நம்பிக்கை வைப்பதை இது அர்த்தப்படுத்துகிறது.—மத்தேயு 24:45.
12 கிறிஸ்தவ சபையில் முன்னின்று வழிநடத்துபவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நம் நன்மைக்கேயாகும். ஏனென்றால் நம்மிடம் இவ்வாறு சொல்லப்படுகிறது: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”—எபிரெயர் 13:17.
யெகோவா நியமிப்பவர்களை சந்தேகிக்காதீர்கள்
13. முன்னின்று வழிநடத்த நியமிக்கப்பட்டிருப்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு என்ன காரணம் இருக்கிறது?
13 யெகோவாவின் மக்களில் முன்னின்று வழிநடத்துபவர்கள் மீது சமநிலையான நம்பிக்கை வைக்க பைபிள் நமக்கு உதவுகிறது. நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘மோசே எப்போதாவது தவறு செய்தாரா? கிறிஸ்துவைப் போன்ற மனப்பான்மையையே அப்போஸ்தலர்கள் வெளிப்படுத்த வேண்டுமென இயேசு விரும்பினார். ஆனால் அவர்கள் எப்போதுமே அவ்வாறு காண்பித்தார்களா?’ அதற்கான பதில்கள் வெளிப்படையானவை. அபூரணராக இருந்தபோதிலும் உண்மையுள்ள, ஒப்புக்கொடுத்த ஆண்களை உபயோகிக்கவே யெகோவா தெரிவு செய்திருக்கிறார். ஆகவே இன்றுள்ள மூப்பர்கள் அபூரணராக இருந்தபோதிலும், ‘தேவனுடைய சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியால் கண்காணிகளாக அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை’ நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்முடைய ஆதரவையும் மதிப்பையும் பெற அவர்கள் தகுதியானவர்களே.—அப்போஸ்தலர் 20:28.
14. வழிநடத்துவதற்காக ஆரோனையோ மிரியாமையோ நியமிப்பதற்கு பதிலாக மோசேயை யெகோவா தெரிவு செய்ததில் என்ன விசேஷம் இருக்கிறது?
14 மோசேயைவிட ஆரோன் மூன்று வயது மூத்தவர். ஆனால் தங்கள் சகோதரியாகிய மிரியாமைவிட இருவருமே இளையவர்கள். (யாத்திராகமம் 2:3, 4; 7:7) மோசேயைவிட ஆரோன் அதிக சரளமாய் பேசுகிறவராக இருந்ததால் தன் சகோதரன் சார்பாக பேசுவதற்கு நியமிக்கப்பட்டார். (யாத்திராகமம் 6:29–7:2) இருந்தாலும், இஸ்ரவேலரை வழிநடத்துவதற்காக மூத்தவளாகிய மிரியாமையோ அதிக சரளமாக பேசும் ஆரோனையோ யெகோவா தெரிவு செய்யவில்லை. அந்தச் சமயத்தின் எல்லா உண்மைகளையும் அறிந்தவராக, அப்போதைய தேவைகளையும் கருத்தில் கொண்டவராக அவர் மோசேயைத் தெரிவுசெய்தார். ஒருசமயம் இந்தத் தெளிவான உட்பார்வை அவர்களுக்கு இல்லாமல் போனபோது ஆரோனும் மிரியாமும், “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ” என்று குறைகூறினர். யெகோவா தெரிவு செய்திருந்தவரிடம் அவமரியாதை காண்பிப்பதை தூண்டிவிட்டதில் மிரியாம் ஒருவேளை பிரதானமானவளாக இருந்ததால் அவள் தண்டிக்கப்பட்டாள்; அவளும் ஆரோனும், மோசே “பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவ[ர்]” என்பதை உணர்ந்திருக்கவேண்டும்.—எண்ணாகமம் 12:1-3, 9-15.
15, 16. யெகோவாவில் நம்பிக்கை இருக்கிறதென காலேப் எவ்வாறு நிரூபித்தார்?
15 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்ப்பதற்கு 12 வேவுகாரர்கள் அனுப்பப்பட்டபோது 10 பேர் கெட்ட அறிக்கையைக் கொடுத்தனர். கானானியர்கள் “மிகவும் பெரிய ஆட்கள்” என்று கூறுவதன் மூலம் இஸ்ரவேலரின் இருதயங்களில் பயத்தை விதைத்தனர். இதன் காரணமாக இஸ்ரவேலர் “மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள்.” ஆனால் வேவுகாரர்களில் அனைவருமே யெகோவாவிலும் மோசேயிலும் நம்பிக்கையற்றவர்களாக இல்லை. “அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்” என்று சொன்னதாக வாசிக்கிறோம். (எண்ணாகமம் 13:2, 25-33; 14:2) காலேபுடன் சென்றிருந்த வேவுகாரனாகிய யோசுவாவும் அவரைப் போலவே உறுதியான நிலைநிற்கை எடுத்தார். “கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். . . . அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை . . . கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்று சொன்னபோது யெகோவாவின் மேல் தங்கள் நம்பிக்கை இருப்பதை அவர்கள் இருவரும் காண்பித்தனர். (எண்ணாகமம் 14:6-9) யெகோவாவில் அவர்கள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தச் சமயம் உயிரோடிருந்த முதிர்ந்த சந்ததியினரில் காலேப், யோசுவா, சில லேவியர்கள் ஆகியோர் மட்டுமே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் சிலாக்கியம் பெற்றனர்.
16 சில வருடங்கள் கழித்து காலேப் கூறினார்: “நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். . . . இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; . . . அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.” (யோசுவா 14:6-11) காலேபின் நம்பிக்கையான மனநிலையையும் அவருடைய உண்மைத்தன்மையையும் சரீர பலத்தையும் கவனியுங்கள். ஆனாலும் மோசேக்கு பிறகு காலேபை யெகோவா தெரிவு செய்யவில்லை. இந்தச் சிலாக்கியம் யோசுவாவுக்கு கொடுக்கப்பட்டது. யெகோவா அவ்வாறு தெரிவு செய்ததற்கு நல்ல காரணங்கள் இருந்தன என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். அதுவே மிகச் சிறந்த தெரிவு.
17. பொறுப்பைப் பெறுவதற்கு பேதுரு தகுதியற்றவர் என ஏன் நினைக்கத் தோன்றியிருக்கும்?
17 அப்போஸ்தலன் பேதுரு தன் எஜமானை மூன்று முறை மறுதலித்தார். மேலும், உணர்ச்சிவசப்பட்டவராய் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு பிரதான ஆசாரியனுடைய அடிமையின் காதை வெட்டினார். (மத்தேயு 26:47-55, 69-75; யோவான் 18:10, 11) பேதுரு பயம் நிறைந்த, சமநிலையற்ற, எந்த விசேஷித்த சிலாக்கியங்களுக்கும் தகுதியற்ற ஒருவர் என சிலர் கூறலாம். ஆனாலும், மூன்று வகுப்பினருக்கு பரலோக நம்பிக்கைக்கான வழியைத் திறக்கும் சிலாக்கியமாகிய ராஜ்யத்தின் திறவுகோல்கள் யாரிடம் கொடுக்கப்பட்டன? பேதுருவிடமே.—அப்போஸ்தலர் 2:1-41; 8:14-17; 10:1-48.
18. யூதா கூறியதைப் போன்ற என்ன தவறை நாம் தவிர்க்க விரும்புகிறோம்?
18 வெளிப்புற தோற்றங்களை வைத்து நாம் நியாயந்தீர்க்க கூடாது என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. நாம் யெகோவாவில் நம்பிக்கை வைத்தால் அவர் நியமிப்பவர்களை சந்தேகிக்க மாட்டோம். அவருடைய பூமிக்குரிய சபை, தவறே செய்யாதவர்கள் என உரிமை பாராட்டாத, அபூரண மனிதர்களால் ஆகியிருந்தும் அவர்களை மிகச் சிறந்த விதத்தில் அவர் உபயோகிக்கிறார். இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனான யூதா, “கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவமானவர்களைத் தூஷிக்கிற”வர்களைப் பற்றி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை எச்சரித்தார். (யூதா 8-10, NW) நாம் ஒருபோதும் அவர்களைப் போல இல்லாதிருப்போமாக.
19. யெகோவா தெரிவு செய்திருப்பவர்களை சந்தேகிக்க நமக்கு ஏன் எந்தக் காரணமும் இல்லை?
19 யெகோவா, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தாம் விரும்பும் வழியில் தம்முடைய மக்களை வழிநடத்துவதற்குத் தேவையான குணங்களுடைய தனிப்பட்டவர்களை சில பொறுப்புகளுக்காக தெரிவுசெய்வதாய் தோன்றுகிறது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள நாம் முயலவேண்டும். கடவுள் தெரிவுசெய்திருப்பவர்களை சந்தேகிப்பதற்கு பதிலாக, தனிப்பட்டவர்களாக நாம் எங்கே சேவிக்கும்படி யெகோவா நியமித்திருக்கிறாரோ அங்கே மனத்தாழ்மையோடு சேவிப்பதில் மனநிறைவுள்ளவர்களாக இருக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் யெகோவாவின் மேல் நாம் நம்பிக்கை வைத்திருப்பதைக் காண்பிக்கிறோம்.—எபேசியர் 4:11-16; பிலிப்பியர் 2:3.
யெகோவாவின் நீதியில் நம்பிக்கை வைத்தல்
20, 21. மோசேயை கடவுள் நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
20 சில சமயங்களில் நம் மீதே நாம் அதிக நம்பிக்கை வைத்து யெகோவா மீது குறைவான நம்பிக்கை வைக்கிறோம் என்றால் மோசேயிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது. அவர் 40 வயதாக இருக்கையில் இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தானாகவே முயற்சி செய்தார். அவர் நல்ல உள்நோக்கத்துடனேயே முயற்சித்தார் என்பதில் சந்தேகமேதுமில்லை. ஆனாலும், இஸ்ரவேலர் உடனடியாக விடுவிக்கப்படவுமில்லை, அவருடைய சொந்த சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவுமில்லை. அவர் தப்பியோட வேண்டியிருந்ததுதான் மிச்சம். வேறொரு தேசத்தில் 40 வருட கடினமான பயிற்சிக்கு பிறகுதான், அவர் ஆரம்பத்தில் நினைத்ததை செய்யும்படி நியமிக்கப்பட தகுதியுள்ளவர் ஆனார். இந்தச் சமயம் யெகோவா தனக்கு பக்கபலமாக இருப்பார் என்பதில் அவர் நிச்சயமாக இருந்தார். ஏனென்றால் இப்போது காரியங்கள் யெகோவாவுடைய வழியிலும் அவருடைய காலக்கணக்கிற்கு இசைவாகவும் நடந்தேறின.—யாத்திராகமம் 2:11–3:10.
21 நம்மில் ஒவ்வொருவரும் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘காரியங்களை வேகமாக செய்வதில் அல்லது என் விருப்பப்படி செய்ய முயற்சிப்பதில், நான் சில சமயங்களில் யெகோவாவையும் சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்களையும் முந்திக்கொள்கிறேனா? எனக்கு சில பொறுப்புகள் கிடைக்கவில்லை என வருத்தப்படுவதற்கு மாறாக இது என்னுடைய பயிற்சி காலம் என முறுமுறுப்பில்லாமல் அதை ஏற்றுக்கொள்கிறேனா?’ சுருக்கமாக சொன்னால், நாம் மோசேயிடமிருந்து முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோமா?
22. மிகப் பெரிய சிலாக்கியத்தை இழந்தபோதிலும், யெகோவாவைப் பற்றி மோசே எவ்வாறு உணர்ந்தார்?
22 அதுமட்டுமல்ல, மோசேயிடமிருந்து நாம் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். அவர் செய்த ஒரு தவறு அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது என எண்ணாகமம் 20:7-13 சொல்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை வழிநடத்தி செல்லும் பெரும் சிலாக்கியத்தை அவர் இழந்தார். அப்போது, இந்த விஷயத்தில் யெகோவாவின் தீர்ப்பு தவறானது என அவர் கூறினாரா? தன்னை நியாயமற்ற விதத்தில் கடவுள் நடத்துகிறார் என அவர் முகம் சுளித்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டாரா? யெகோவாவின் நீதியில் மோசேக்கு நம்பிக்கை இல்லாமல் போனதா? மோசேயுடைய மரணத்திற்கு சற்றுமுன் இஸ்ரவேலரிடம் கூறிய அவருடைய சொந்த வார்த்தைகளிலிருந்தே நாம் இதை அறிந்துகொள்ள முடியும். யெகோவாவைப் பற்றி மோசே கூறினார்: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) யெகோவாவில் நம்பிக்கையை மோசே கடைசிவரை காத்துக்கொண்டார். நம்மைப் பற்றியென்ன? யெகோவாவிலும் அவருடைய நீதியிலும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த தனிப்பட்டவர்களாக முயற்சிக்கிறோமா? அதை எவ்வாறு செய்யலாம்? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு இஸ்ரவேலருக்கு என்ன காரணங்கள் இருந்தன?
◻ நம்பிக்கையைப் பற்றியதில் ஆபிரகாமிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ யெகோவா தெரிவு செய்திருப்பவர்களை நாம் ஏன் சந்தேகிக்கக் கூடாது?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவில் நம்பிக்கை வைப்பது, சபையில் முன்னின்று வழிநடத்துபவர்களுக்கு மதிப்பு காட்டுவதையும் உட்படுத்துகிறது