நம்பிக்கை மீண்டும் துளிர்விடும்!
தற்பொழுது காணப்படும் அவநம்பிக்கை ‘கடைசி நாட்களுக்கான’ ஓர் அடையாளமாக இருக்கிறபோதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவநம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துவிட்டது. (2 தீமோத்தேயு 3:1) அது நடக்கக்கூடாத இடத்தில், அதாவது பரதீஸில் முதலில் துளிர்விட்டது. அந்த இடத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.”—ஆதியாகமம் 2:8, 9.
நவீனகால அவநம்பிக்கையோடு இதற்குள்ள சம்பந்தத்தை அதைப் பின்தொடரும் வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. நாம் வாசிக்கிறோம்: “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:16, 17) யெகோவா சொன்னதைப் பற்றி சந்தேகப்பட ஆதாமுக்கு ஏதாவது காரணம் இருந்ததா?
நாம் தொடர்ந்து வாசிக்கிறோம்: “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.”—ஆதியாகமம் 3:1-6.
கடவுள் கொடுத்த தெளிவான எச்சரிக்கையை அசட்டை செய்ததன் மூலம், ஆதாமும் ஏவாளும் யெகோவாமீது அவநம்பிக்கையை வெளிக்காட்டினார்கள். நிஜமான பாம்பின் மூலம் ஏவாளிடம் பேசிய தீயோனாகிய சாத்தானை அவர்கள் அப்படியே பிரதிபலித்தார்கள். யெகோவா ஆளும் முறையில் சாத்தான் அவநம்பிக்கை கொண்டிருந்தான். இதன் நிமித்தமும் பெருமையும் பேராசையும் கொண்ட இருதயத்தின் நிமித்தமும், கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்து அதையே மனிதர்களும் பின்பற்றும்படி அவர்களைத் தவறாக வழிநடத்தினான். கடவுளை நம்ப முடியாது என்று நினைக்கத் தூண்டினான்.
அதன் விளைவு? முறிந்த உறவுகள்
மற்றவர்களை நம்பாதவர்கள் பிறரிடம் நட்பு வைத்துக்கொள்வதை கடினமாய் காண்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த முதல் நூற்றாண்டு லத்தீன் எழுத்தாளர் பியூப்ளிளியுஸ் சியூருஸ் இவ்வாறு எழுதினார்: “நம்பிக்கையே நட்புக்கு பாலம்.” ஆதாமும் ஏவாளும் கலகம் செய்ததால் தாங்கள் கடவுளை நம்பவில்லை என்பதைக் காண்பித்தார்கள். ஆகையால், கடவுளும் அவர்களை நம்பவில்லை. நம்பிக்கை முறிந்துபோனதால், முதல் மானிடர்கள் கடவுளுடைய நட்பை இழந்தனர். அவர்களுடைய கலகத்திற்காக யெகோவா அவர்களை கண்டனம் செய்தபின்பு அவர்களுடன் பேசினதாக எந்த அத்தாட்சியுமே இல்லை.
ஆதாம் ஏவாளுக்கு இடையிலான உறவும் விரிசலடைந்தது. யெகோவா ஏவாளை இவ்வாறு எச்சரித்தார்: ‘கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.’ (ஆதியாகமம் 3:16) கடவுளுடைய விருப்பத்தின்படி தன் மனைவிமீது அன்பான தலைமைவகிப்பு செலுத்துவதற்குப் பதிலாக, ஆதாம் இப்பொழுது அவளுடைய எஜமானாக, அவளை ஆளுபவனாக மாறினான்.
அவர்கள் பாவம் செய்தப்பின்பு, ஆதாம் குற்றத்தை தன் மனைவிமீது சுமத்த முயன்றான். அவனுடைய கருத்தின்படி, பரிபூரண தோட்டத்திலிருந்து பண்படுத்தப்படாத நிலத்திற்கு அவர்கள் துரத்தப்பட்டதும் மண்ணுக்குள் போவதற்கு முன்பு மோசமான சூழ்நிலைமையின்கீழ் அடிமைபோல் வாழும்படி விதிக்கப்பட்டதும் அவள் செய்த காரியத்தால்தான் ஏற்பட்டது. (ஆதியாகமம் 3:17-19) இருவருக்குமிடையே முறிந்த உறவுக்கு இதுவே அடிப்படையாக அமைந்தது என்பதை நம்மால் நன்கு கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. ஆதாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாய் இனி ஒருபோதும் ஏவாள் சொல்வதை கேட்கப் போவதில்லை என சொல்லியிருக்கலாம். ‘இனிமேல் நான்தான் உன்னுடைய எஜமான்!’ என்று சொல்வதை ஒருவேளை அவன் நியாயமாக நினைத்திருக்கலாம். மறுபட்சத்தில், குடும்பத் தலைவன் என்ற ஸ்தானத்தில் ஆதாம் தோல்வியடைந்து, அவனிடம் அவநம்பிக்கை ஏற்படும்படி நடந்துகொண்டுவிட்டான் என ஏவாள் நினைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும், கடவுள்மீது நம்பிக்கை இல்லாததால் மனிதர்கள் அவருடைய நட்பையும் இழந்தார்கள், அதனால் தங்கள் இருவருக்குமிடையே இருந்த உறவையும் கெடுத்துக்கொண்டார்கள்.
நாம் யாரை நம்பலாம்?
ஆதாம் ஏவாளின் உதாரணம் காட்டுகிறபடி, எல்லாரும் நம்முடைய நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல. நம்முடைய நம்பிக்கைக்கு தகுதியானவர்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?
சங்கீதம் 146:3 நமக்கு இவ்வாறு புத்திமதி கூறுகிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” எரேமியா 17:5-7-ல் வாசிக்கிறோம்: “மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்.” மாறாக, “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”
மனிதர்களை நம்புவது சரியில்லைதான், ஆனால் எப்பொழுதுமே அப்படியல்ல. கடவுள்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது, ஆனால் அபூரண மனிதர்களை நம்புவது சிலசமயங்களில் பேராபத்திற்கு வழிநடத்தலாம் என்பதையே அந்த வசனங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, இரட்சிப்பு மற்றும் பாதுகாப்புடன்கூடிய முழு சமாதானத்தைக் கடவுளால் மாத்திரமே கொண்டுவர முடியும். மாறாக, அதை மனிதர்கள் சாதிப்பார்கள் என நம்புவோருக்கு அது ஏமாற்றத்தையே அளிக்கும்.—சங்கீதம் 46:9; 1 தெசலோனிக்கேயர் 5:3.
சொல்லப்போனால், மனிதர்களும் மனித ஸ்தாபனங்களும் கடவுளுடைய நோக்கங்களுக்கு இசைவாக செயல்பட்டு, தெய்வீக நியமங்களை கடைப்பிடிக்கும் பட்சத்தில் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள். எனவே, மற்றவர்கள் நம்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமாகில், நாம் சத்தியத்தையே பேச வேண்டும், நேர்மையானவர்களாயும் நம்பத்தக்கவர்களாயும் இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 12:19; எபேசியர் 4:25; எபிரெயர் 13:18) நாம் பைபிள் நியமங்களுக்கு இசைவாக நடந்தால் மாத்திரமே மற்றவர்கள் நம்மீது நம்பிக்கை வைப்பதை சரியானதென காண்பார்கள்; அந்த நம்பிக்கையே பரஸ்பர பலத்தையும் உற்சாகத்தையும் பெற்றுக்கொள்வதற்குரிய ஊற்றாய் திகழும்.
நம்பிக்கை மீண்டும் துளிர்விடுதல்
கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்கும் மற்றவர்கள் அவர்மீது நம்பிக்கை வைக்கும்படி ஊக்கப்படுத்துவதற்கும் யெகோவாவின் சாட்சிகளிடம் ஆணித்தரமான ஆதாரம் இருக்கிறது. யெகோவா உண்மையானவராகவும் பற்றுறுதியுள்ளவராகவும் சொன்னதை செய்வதில் எப்பொழுதும் நம்பத்தக்கவராகவும் இருக்கிறார்; ஏனெனில் ‘தேவன் பொய்சொல்லக்கூடாதவர்.’ அன்பின் கடவுளில் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது.—எபிரெயர் 6:18, NW; சங்கீதம் 94:14; ஏசாயா 46:9-11; 1 யோவான் 4:8.
யெகோவாமீது நம்பிக்கை வைப்பதில் ஒன்றுபட்டு அவருடைய நியமங்களுக்கேற்ப வாழும் மக்கள் ஒருவரையொருவர் நம்புவதற்கு பலமாக தூண்டப்படுகிறார்கள். அவநம்பிக்கை நிறைந்த ஓர் உலகில், நம்பத்தக்க மக்களைக் காண்பது என்னே மகிழ்ச்சி! மற்றவர்கள் சொல்வதையோ செய்வதையோ முழுக்க முழுக்க நம்ப முடிந்தால், இந்த உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்! கடவுள் வாக்குறுதி அளித்துள்ள வரவிருக்கும் புதிய உலகில் இதுவே உண்மையாக இருக்கும். இனி ஒருபோதும் அவநம்பிக்கையே இருக்காது!
நீங்கள் அங்கு வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால், கடவுள் எதிர்பார்க்கும் காரியங்களைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் கடவுளிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். கடவுள் இருக்கிறார், மனிதவர்க்கத்தின் நலனில் அக்கறையுள்ளவராக இருக்கிறார், தம்முடைய ராஜ்யத்தின் மூலம் உலகப் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு விரைவில் செயல்படுவார் என்பதற்குரிய அத்தாட்சியை பைபிளைப் படிப்பதன் மூலம் பெறலாம். கடவுளிலும் அவருடைய வார்த்தையாகிய பைபிளிலும் நம்பிக்கை வைக்க லட்சக்கணக்கானோர் கற்றிருக்கிறார்கள். உங்கள் வீட்டிலேயே இலவசமாக பைபிளைப் படிக்கும் ஓர் ஏற்பாட்டைப் பற்றி உங்களுக்கு சொல்லித்தர யெகோவாவின் சாட்சிகள் ஆவலுடன் இருக்கிறார்கள். அல்லது, கூடுதலான தகவலைப் பெற இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
கடவுளில் அவநம்பிக்கை, மனித உறவுகள் முறிந்துபோவதற்கு வழிநடத்துகிறது
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
மனிதர்கள் தெய்வீக நியமங்களுக்கு இசைவாக செயல்படும் பட்சத்தில் நம்பிக்கைக்குரியவர்கள்