அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
மதிப்புக்குரியோர் முன்பு பவுல் தைரியமாய் சாட்சி கொடுக்கிறார்
அந்த இரண்டு மனிதர்களும் விண்ணும் மண்ணும் போன்று முற்றிலும் வித்தியாசமானவர்கள். ஒருவர் அணிந்திருந்தது கிரீடம். மற்றவர் அணிந்திருந்ததோ விலங்கு. ஒருவர் அரசர், மற்றவரோ கைதி. அப்போஸ்தலன் பவுல், இரண்டு வருடங்களை சிறையில் கழித்தபிறகு யூதர்கள்மீது ஆட்சிசெய்த இரண்டாம் ஏரோது அகிரிப்பா முன்பு நின்றார். அரசனும் அவருடைய துணையாகிய பெர்னீக்கேயாளும் “மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப்பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள்.” (அப்போஸ்தலர் 25:23) “அநேக நூற்றுக்கணக்கான ஆட்கள் அங்கு இருந்திருக்கக்கூடும்” என ஒரு புத்தகம் கூறுகிறது.
இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர், புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநராகிய பெஸ்து. அவருக்கு முன்பிருந்த ஆளுநராகிய பேலிக்ஸுக்கு, பவுல் சிறையில் கிடந்து தவிப்பதைப் பற்றி கவலையே இல்லை. ஆனால் பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையாய் இருக்குமா என்பதில் பெஸ்துவுக்குச் சந்தேகம். பவுலோ, தான் குற்றமற்றவர் என்பதைப் பற்றி நிச்சயமாக அறிந்திருந்ததால் இராயனிடம் தன் வழக்கை அப்பீல் செய்திருந்தார்! பவுலின் வழக்கு அகிரிப்பா ராஜாவின் ஆர்வத்தைத் தூண்டியது. “அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன்” என்று கூறினார். புதுவிதமான இந்தக் கைதியைப் பற்றி ராஜா என்ன நினைப்பாரோ என்று வியந்த பெஸ்து, உடனே தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.—அப்போஸ்தலர் 24:27–25:22.
மறுநாள், மதிப்புக்குரியோர் குழுமியிருந்த ஒரு பெரும் கூட்டத்திற்கு முன்பு பவுல் நின்றார். “நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன்” என அவர் அகிரிப்பாவிடம் கூறினார்.—அப்போஸ்தலர் 26:2, 3.
பவுலின் தைரியமான விவாதம்
கடந்தகாலத்தில் தான் கிறிஸ்தவர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தினார் என்பதைப் பற்றி முதலில் அகிரிப்பாவிடம் சொல்லி பவுல் தன் பேச்சைத் தொடர்ந்தார். “தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன் . . . அந்நிய பட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்” என்றார். பிரமிப்பூட்டும் ஒரு தரிசனத்தில் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தோன்றி தன்னிடம் இவ்வாறு கேட்டதைப் பவுல் விவரித்தார்: “நீ ஏன் என்னை இம்சைப்படுத்துகிறாய்? தாற்றுக்கோலுக்கு எதிர்த்து உதைப்பது உனக்குக் கஷ்டமா[ம்].”a—அப்போஸ்தலர் 26:4-14, தி.மொ.
பிறகு, “நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து” எல்லா தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்கும்படி இயேசு பவுலை நியமித்தார். பவுல், இயேசுவால் தனக்கு கொடுக்கப்பட்ட நியமிப்பை நிறைவேற்ற கடுமையாய் உழைத்து அரும்பாடுபட்டார். ஆனாலும், “இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள்” என அகிரிப்பாவிடம் கூறினார். தான் கொடுத்த சாட்சி, மேசியாவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி ‘தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடி மட்டுமே இருந்தது, வேறொன்றையும் சொல்லவில்லை’ என பவுல் அடித்துக் கூறினார். இதன்மூலம் யூத மதத்தில் அகிரிப்பாவிற்கு இருந்த ஆர்வத்தைத் தூண்டினார்.—அப்போஸ்தலர் 26:15-23.
இத்தருணத்தில் பெஸ்து குறுக்கிட்டு, “அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது” என்று கூறினார். அதற்குப் பவுல், “கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்” என பதிலளித்தார். பிறகு அகிரிப்பாவைத் தன் பேச்சில் இழுத்து, இவ்வாறு பவுல் கூறினார்: “இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.”—அப்போஸ்தலர் 26:24-26.
பிறகு பவுல் நேரடியாக அகிரிப்பாவிடமே கேட்டார், “அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா?” அது அகிரிப்பாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய ஒரு கேள்வி. ஏனென்றால், அவருடைய இமேஜை காத்துக்கொள்ள வேண்டியது ஒரு விஷயம். பவுல் சொன்னதை ஏற்றுக்கொண்டால், ‘பயித்தியம்’ என பெஸ்து கூறியதையே தானும் ஏற்றுக்கொண்டது போலாகும் என்பது மற்றொரு விஷயம். அகிரிப்பா தயங்குவதை உணர்ந்தவராக பவுலே தன் கேள்விக்கு பதிலளிக்கிறார். “விசுவாசிக்கிறீர் என்று அறிவேன்” என்று கூறினார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) அகிரிப்பா இப்போது பதிலளித்தார், ஆனாலும் பட்டும்படாமலே பேசினார். “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என்று பவுலிடம் கூறினார்.—அப்போஸ்தலர் 26:27, 28.
அகிரிப்பா சொன்ன மேலோட்டமான வாக்கியத்தையே திறமையாக உபயோகித்து பவுல் ஒரு முக்கியமான குறிப்பை உணர்த்தினார். “நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறைய மாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப் போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன்” என்றார்.—அப்போஸ்தலர் 26:29.
அகிரிப்பாவும் பெஸ்துவும், பவுலுக்கு மரண தண்டனை அல்லது சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு எந்தக் குற்றத்தையும் அவரில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், இராயனிடம் தன் வழக்கை அப்பீல் செய்யவேண்டும் என்ற பவுலின் வேண்டுகோளை அவர்களால் தள்ளுபடி செய்யமுடியாது. அதனால்தான், “இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலை பண்ணலாகும்” என பெஸ்துவிடம் அகிரிப்பா கூறினார்.—அப்போஸ்தலர் 26:30-32.
நமக்கான பாடம்
மதிப்புக்குரியோர் முன்பாக பவுல் சாட்சி கொடுத்த விதம் நமக்கு சிறந்ததோர் முன்மாதிரியாக இருக்கிறது. அகிரிப்பா ராஜாவிடம் பேசுகையில் பவுல் விவேகத்துடன் நடந்துகொண்டார். அகிரிப்பா, பெர்னீக்கேயாள் தொடர்பான கீழ்த்தரமான செயலை அவர் நன்றாக அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. பெர்னீக்கேயாள் உண்மையில் அகிரிப்பாவின் சகோதரியாக இருந்ததால் அவர்களுடைய உறவு முறைதகாத ஒன்று. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒழுக்க நெறியைப் பற்றி பவுல் சொற்பொழிவாற்றவில்லை. அதற்கு மாறாக, தனக்கும் அகிரிப்பாவிற்கும் பொதுவாக இருந்த விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். கூடுதலாக, கல்விமானாகிய பரிசேயன் கமாலியேலால் பவுல் போதிக்கப்பட்டிருந்தார்; ஆனாலும் யூத சடங்காச்சாரங்களைப் பற்றி அகிரிப்பாவும் நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். (அப்போஸ்தலர் 22:3) அகிரிப்பாவின் தனிப்பட்ட ஒழுக்கம் அவ்வளவு உயர்ந்ததாக இல்லாதபோதிலும் பவுல் அவரிடம் மரியாதையோடு பேசினார்; ஏனென்றால், அகிரிப்பா அதிகாரத்திற்குரிய ஸ்தானத்திலிருந்தார்.—ரோமர் 13:7.
நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி தைரியமாக பிரசங்கிக்கையில், நமக்கு செவிகொடுப்பவர்களின் அசுத்தமான பழக்கங்களை வெளிப்படுத்துவதோ அவற்றை கண்டனம் செய்வதோ நம் நோக்கமல்ல. மாறாக, சத்தியத்தை அவர்கள் சுலபமாய் ஏற்றுக்கொள்வதற்காக நற்செய்தியின் கவர்ச்சிகரமான விஷயங்களையே அழுத்திக்கூற வேண்டும்; பொதுவான நம்பிக்கைகளை உயர்த்திக்கூற வேண்டும். வயதில் மூத்தவர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிடத்தில் பேசும்போது அவர்களுடைய ஸ்தானத்தை நாம் மதிக்க வேண்டும். (லேவியராகமம் 19:32) இப்படி செய்தால், “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” என்று பவுல் சொன்னதுபோலவே நாமும் சொல்லமுடியும்.—1 கொரிந்தியர் 9:22.
[அடிக்குறிப்புகள்]
a மாட்டை ஓட்டுவதற்காக தயாரிக்கப்படும் கூர்மையான ஆணியுடைய குச்சியை அந்த மாடு எதிர்த்து உதைத்தால் அதற்குத்தான் காயம் ஏற்படும். இச்செயலை குறிக்கவே, “தாற்றுக்கோலுக்கு எதிர்த்து உதைப்பது” என்ற சொற்றொடர் உபயோகிக்கப்படுகிறது. அதைப் போலவே, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் சவுல் தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுவார். ஏனென்றால் கடவுளுடைய ஆதரவைப் பெற்றிருந்த மக்களுக்கு எதிராக அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.