“மிகுந்த ஆவலோடே” காத்திருத்தல்
“தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.”—ரோமர் 8:19.
1. இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன?
இன்று மெய் கிறிஸ்தவர்களுடைய நிலைமை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுடைய நிலைமைக்கு ஒத்திருக்கிறது. எப்பொழுது மேசியா தோன்றுவார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள அந்நாட்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களுக்கு ஒரு தீர்க்கதரிசனம் உதவியது. (தானியேல் 9:24-26) அதே தீர்க்கதரிசனம் எருசலேமின் அழிவைப் பற்றியும் முன்னுரைத்தது; ஆனால் அந்நகரம் எப்பொழுது அழிக்கப்படும் என்பதை கிறிஸ்தவர்கள் முன்னதாகவே அறிந்துகொள்ள உதவும் எந்தவொரு அம்சமும் அதில் இல்லை. (தானியேல் 9:26ஆ, 27) அதைப்போலவே, தெய்வாதீனமாக ஒரு தீர்க்கதரிசனம் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உண்மை மனமுள்ள பைபிள் மாணாக்கர்களை எதிர்பார்ப்புடன் இருக்கும்படி செய்தது. தானியேல் 4:25-ல் உள்ள ‘ஏழு காலங்களை’ ‘புறஜாதிகளின் காலங்களோடு’ இணைப்பதன் மூலம், 1914-ல் கிறிஸ்துவானவர் ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்த்தார்கள். (லூக்கா 21:24; எசேக்கியேல் 21:25-27) தானியேல் புத்தகத்தில் அநேக தீர்க்கதரிசனங்கள் இருக்கிறபோதிலும், சாத்தானுடைய முழு காரிய ஒழுங்குமுறையும் எப்பொழுது அழியும் என்பதை துல்லியமாக கணிப்பதற்கு தற்கால பைபிள் மாணாக்கர்களுக்கு இவை எவ்விதத்திலும் உதவி செய்வதில்லை. (தானியேல் 2:31-44; 8:23-25; 11:36, 44, 45) என்றபோதிலும், இது விரைவில் சம்பவிக்கும், ஏனெனில் நாம் ‘முடிவு காலத்தில்’ வாழ்ந்துவருகிறோம்.—தானியேல் 12:4.a
கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது விழிப்புடன் இருத்தல்
2, 3. (அ) கிறிஸ்து ராஜ்ய வல்லமையில் வந்திருக்கும் காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு பலமான அத்தாட்சி என்ன? (ஆ) கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது கிறிஸ்தவர்கள் தொடர்ந்து விழிப்புடனிருக்க வேண்டும் என்பதை எது காட்டுகிறது?
2 கிறிஸ்து 1914-ல் ராஜ்ய வல்லமையில் அமர்த்தப்படுவதற்கு முன்பே ஒரு தீர்க்கதரிசனம் கிறிஸ்தவர்களை எதிர்பார்ப்புமிக்க நிலையில் வைத்தது என்பது உண்மைதான். ஆனால், தம்முடைய வந்திருத்தல் மற்றும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சம்பந்தமாக கிறிஸ்து கொடுத்த ‘அடையாளம்,’ சம்பவங்களையே சிறப்பித்துக் காட்டியது. இவற்றில் பெரும்பாலானவற்றை அவருடைய வந்திருத்தல் ஆரம்பித்த பிறகே காண முடியும். போர்கள், உணவுப் பற்றாக்குறைகள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள், அக்கிரமம் பெருகுதல், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுதல், ராஜ்யத்தின் நற்செய்தி உலகமுழுவதும் பிரசங்கிக்கப்படுதல் போன்ற சம்பவங்கள், கிறிஸ்து தம்முடைய ராஜ்ய வல்லமையில் வந்திருக்கும் காலப்பகுதியில் நாம் இன்று வாழ்கிறோம் என்பதற்கு பலமான அத்தாட்சிகளாய் விளங்குகின்றன.—மத்தேயு 24:3-14; லூக்கா 21:10, 11.
3 என்றபோதிலும், இயேசு பிரிந்துசெல்கையில் தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த அறிவுரையின் முழு சாராம்சமும் இதுவே: “தொடர்ந்து எச்சரிக்கையாயிருங்கள், தொடர்ந்து விழித்திருங்கள் . . . தொடர்ந்து கவனமாயிருங்கள்.” (மாற்கு 13:33, 37, NW; லூக்கா 21:36) விழிப்புடன் இருக்கும்படி கொடுக்கப்பட்ட இந்த அறிவுரைகளின் சூழமைவை கவனமாக வாசித்துப் பார்ப்பதானது, தம்முடைய வந்திருத்தலின் ஆரம்பத்திற்குரிய அடையாளத்தை உற்று கவனித்திருப்பதைக் குறித்து கிறிஸ்து முக்கியமாக பேசிக்கொண்டில்லை என்பதை காண்பிக்கிறது. அதற்குப் பதிலாக, தமது வந்திருக்கும் காலப்பகுதியில் விழிப்புடன் இருக்கும்படியே தம்முடைய உண்மையான சீஷர்களுக்கு கட்டளையிட்டார். உண்மை கிறிஸ்தவர்கள் எதற்கு விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது?
4. இயேசு கொடுத்த அடையாளம் எதற்கு உதவும்?
4 “இவை [யூத காரிய ஒழுங்குமுறையின் அழிவுக்கு வழிநடத்தும் சம்பவங்கள்] எப்பொழுது சம்பவிக்கும், உம்முடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இயேசு தம்முடைய முக்கிய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார். (மத்தேயு 24:3, NW) முன்னறிவிக்கப்பட்ட இந்த அடையாளம், கிறிஸ்துவின் வந்திருத்தலை மட்டுமல்ல, தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு வழிநடத்தும் சம்பவங்களையும் அடையாளம் காண உதவும்.
5. இயேசு ஆவிக்குரிய விதத்தில் ஏற்கெனவே வந்திருக்கிறபோதிலும், தாம் மீண்டும் ‘வருவார்’ என்பதை எவ்வாறு காண்பித்தார்?
5 இயேசு தம்முடைய ‘வந்திருத்தலின்’ ([Presence] கிரேக்கில், பரோஸியா) காலப்பகுதியில் வல்லமையோடும் மகிமையோடும் வரப்போவதாக காண்பித்தார். இப்படிப்பட்ட ‘வருகை’ ([coming] கிரேக்க வார்த்தை எர்கோமை என்ற வடிவங்களில் குறிக்கப்படுகிறது) சம்பந்தமாக அவர் இவ்வாறு அறிவித்தார்: ‘அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். . . . அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் [கிறிஸ்து] சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். . . . உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். . . . நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.’—மத்தேயு 24:30, 32, 33, 42, 44.
இயேசு ஏன் வருகிறார்?
6. ‘மகா பாபிலோனின்’ அழிவு எப்படி ஏற்படும்?
6 ஏற்கெனவே 1914 முதற்கொண்டு இயேசு ராஜாவாக வந்திருக்கிறபோதிலும், அவர் அமைப்புகளையும் ஆட்களையும் நியாயந்தீர்க்கப்போவது இனிமேல்தான். அவ்வாறு நியாயந்தீர்த்தப் பின்னரே பொல்லாதவர்களை அழிப்பார். (2 கொரிந்தியர் 5:10-ஐ ஒப்பிடுக.) யெகோவா, அரசியல் ஆட்சியாளர்களின் மனங்களில் பொய் மத உலகப் பேரரசாகிய ‘மகா பாபிலோனை’ அழிக்கும் எண்ணத்தை விரைவில் போடுவார். (வெளிப்படுத்துதல் 17:4, 5, 16, 17) ‘பாவமனுஷனை’—அதாவது, ‘மகா பாபிலோனின்’ முக்கிய பாகமான விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டல குருமாரை—இயேசு கிறிஸ்து அழிப்பார் என்பதை அப்போஸ்தலன் பவுல் திட்டவட்டமாக குறிப்பிட்டார். பவுல் இவ்வாறு எழுதினார்: “அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.”—2 தெசலோனிக்கேயர் 2:3, 8.
7. மனுஷகுமாரன் மகிமைபொருந்தினவராய் வரும்போது, என்ன நியாயத்தீர்ப்பை வழங்குவார்?
7 வெகு விரைவில் கிறிஸ்து எல்லா தேசத்து மக்களையும் நியாயந்தீர்ப்பார்; இன்னும் பூமியிலுள்ள தம்முடைய சகோதரர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அவர் நியாயந்தீர்ப்பார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். . . . அதற்கு ராஜா [செம்மறியாடுகளிடம்] பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். . . . அந்தப்படி, இவர்கள் [வெள்ளாடுகள்] நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடையவும் போவார்கள்.”—மத்தேயு 25:31-46.
8. தேவபக்தியற்றவர்கள்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற கிறிஸ்து வருவதை பவுல் எவ்வாறு விவரிக்கிறார்?
8 செம்மறியாடுகள், வெள்ளாடுகள் பற்றிய உவமையில் காண்பிக்கப்பட்டபடி, தேவபக்தியற்ற அனைவர்மீதும் இயேசு இறுதியான நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். துன்பப்படும் உடன் விசுவாசிகளுக்கு பவுல் இவ்வாறு உறுதியளித்தார்: ‘உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலை பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராய் . . . அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.’ (2 தெசலோனிக்கேயர் 1:7-10) கிளர்ச்சியூட்டும் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு முன்பாக நடக்கப்போவதால், நாம் விசுவாசத்தோடு கிறிஸ்துவின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்க வேண்டுமல்லவா?
கிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்திருத்தல்
9, 10. இன்னும் பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஏன் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்?
9 ‘கர்த்தராகிய இயேசு . . . வானத்திலிருந்து வெளிப்படுவது’ பொல்லாதவர்கள்மீது அழிவை கொண்டுவருவதற்கு மட்டுமல்ல, நீதிமான்களுக்கு பலனளிப்பதற்காகவும்தான். கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களில் மீதியானவர்கள் இன்னும் பூமியில் இருக்கின்றனர்; இவர்கள் கிறிஸ்து வெளிப்படுவதற்கு முன்பு இன்னும் துன்பப்படலாம், ஆனால் தங்களுடைய மகிமையான பரலோக நம்பிக்கையில் சந்தோஷப்படுகின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.”—1 பேதுரு 4:13.
10 கிறிஸ்து தங்களை ‘அவரிடத்திலே சேர்த்துக்கொள்ளும்’ வரைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றனர். இதன்மூலம் அவர்களுடைய விசுவாசத்தின் ‘சோதிக்கப்பட்ட தரம்,’ ‘இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாவதற்கு ஏதுவாகும்.’ (2 தெசலோனிக்கேயர் 2:1; 1 பேதுரு 1:7, NW) ஆவியால் பிறப்பிக்கப்பட்ட இத்தகைய உண்மையுள்ள கிறிஸ்தவர்களைக் குறித்து இவ்வாறு சொல்லலாம்: “கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, . . . நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் [“ஆவலுடன்,” NW] காத்திருக்கிறீர்கள்.”—1 கொரிந்தியர் 1:4, 7.
11. இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்காக காத்திருக்கையில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள்?
11 பவுலுக்கு இருந்த உணர்ச்சிகளே அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருக்கும் உள்ளது; அவர் எழுதினார்: “இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.” (உரோமையர் 8:18, பொ.மொ.) நேரத்தை கணக்கிடுவதன்மூலம் அவர்களுடைய விசுவாசத்தை காத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தொடர்ந்து யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். தங்களுடைய தோழர்களுக்கு, அதாவது ‘வேறே ஆடுகளுக்கு’ சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்கள். (யோவான் 10:16) இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு அருகிலிருக்கிறது என்பதை அபிஷேகம் செய்யப்பட்டவர்களாகிய இவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால் பேதுருவின் இந்தப் புத்திமதிக்கு செவிகொடுக்கிறார்கள்: “உங்கள் மனம் செயலாற்றத் தயாராயிருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள்.”—1 பேதுரு 1:13, பொ.மொ.
‘சிருஷ்டியின் மிகுந்த ஆவல்’
12, 13. எவ்வாறு மனித சிருஷ்டி ‘மாயைக்கு கீழ்ப்பட்டது,’ வேறே ஆடுகள் எதற்காக ஏங்குகிறார்கள்?
12 வேறே ஆடுகளும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? நிச்சயமாகவே இருக்கிறது. ஆவியால் பிறப்பிக்கப்பட்ட தம்முடைய ‘புத்திரராகவும்’ பரலோக ராஜ்யத்தில் ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராகவும்’ யெகோவா சுவீகாரம் செய்துகொள்ளும் மகிமையான நம்பிக்கையைப் பற்றி பேசிய பிறகு, பவுல் இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.”—ரோமர் 8:14-21; 2 தீமோத்தேயு 2:10-12.
13 ஆதாமின் பாவத்தின்மூலம், அவனுடைய சந்ததி முழுவதும் “மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” அதாவது பாவம், மரணம் என்ற அடிமைத்தனத்திற்குள் பிறந்திருக்கிறது. இப்படிப்பட்ட அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. (சங்கீதம் 49:7அ, 8; ரோமர் 5:12, 21) ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்படுவதற்கு’ வேறே ஆடுகள், ஆ எவ்வளவு ஆவலோடு இருக்கின்றனர்! ஆனால் அதற்கு முன்பு, யெகோவாவின் நேரங்கள் மற்றும் காலங்களின்படி சில காரியங்கள் நடக்க வேண்டும்.
14. ‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதில்’ என்ன உட்பட்டுள்ளது, இது எவ்வாறு மனிதவர்க்கம் ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்படுவதில்’ விளைவடையும்?
14 அபிஷேகம் செய்யப்பட்டவர்களாகிய ‘தேவனுடைய புத்திரரில்’ மீதியானோர் முதலாவதாக ‘வெளிப்பட’ வேண்டும். இது எதை உட்படுத்துகிறது? கடவுளுடைய சரியான நேரத்தில், அபிஷேகம் செய்யப்பட்டோர் இறுதியாக ‘முத்திரையிடப்பட்டு’ கிறிஸ்துவுடன் ஆளுவதற்கு மகிமைப்படுத்தப்பட்டிருப்பது வேறே ஆடுகளுக்கு தெளிவாக தெரியவரும். (வெளிப்படுத்துதல் 7:2-4) உயிர்த்தெழுப்பப்பட்ட ‘தேவனுடைய புத்திரரும்,’ சாத்தானுடைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையை அழிப்பதில் கிறிஸ்துவுடன் பங்குகொள்கையில் ‘வெளிப்படுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 2:26, 27; 19:14, 15) அதன்பின்பு, கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின்போது, ஆசாரியர்களாய் சேவித்து இயேசுவினுடைய கிரயபலியின் நன்மைகளை மனித ‘சிருஷ்டிக்கு’ கொடுக்கையில் மேலும் ‘வெளிப்படுவார்கள்.’ இது, மனிதவர்க்கம் ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு’ இறுதியில் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்”வதில் விளைவடையும். (ரோமர் 8:20; வெளிப்படுத்துதல் 20:5; 22:1, 2) இப்படிப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு இருப்பதால், வேறே ஆடுகள் ‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதில்’ ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா?—ரோமர் 8:19.
யெகோவாவின் பொறுமை இரட்சிப்பை அர்த்தப்படுத்துகிறது
15. சம்பவங்களுக்கான யெகோவாவின் நேரத்தைக் குறித்ததில் நாம் எதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது?
15 யெகோவா தமது கால அட்டவணையை ஒரு நொடி தவறாமல் பின்பற்றுபவர். சம்பவங்கள் நடப்பதற்கு அவர் குறிக்கும் நேரம் எப்பொழுதுமே பரிபூரணமாக இருக்கும். நாம் தனிப்பட்ட விதமாக எதிர்பார்த்தபடி காரியங்கள் நடக்காததுபோல் தோன்றலாம். இருப்பினும், கடவுளுடைய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் என்ற முழு விசுவாசத்தோடு இருக்கலாம். (யோசுவா 23:14) காரியங்கள் தொடர்ந்து நடப்பதற்கு, அநேகர் எதிர்பார்க்கும் காலத்தைவிட அதிக காலம் அவர் அனுமதிக்கலாம். ஆனால் நாம் அவருடைய வழிகளைப் புரிந்துகொள்ளவும் அவருடைய ஞானத்தை மெச்சவும் முயற்சி செய்வோமாக. பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?”—ரோமர் 11:33, 34.
16. யெகோவாவின் பொறுமையிலிருந்து பயனடைவோர் யார்?
16 பேதுரு இவ்வாறு எழுதினார்: “பிரியமானவர்களே, இவைகள் [பழைய ‘வானங்களும்’ ‘பூமியும்’ அழிந்து அதனிடத்தில் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட ‘புதிய வானங்களும்’ ‘புதிய பூமியும்’] வரக் காத்திருக்கிற நீங்கள் [“கடைசியில்,” NW] கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்.” யெகோவாவின் பொறுமையால், ‘திருடனைப்போல’ எதிர்பாராமல் வரும் ‘யெகோவாவின் நாளில்’ (NW) கோடிக்கும் அதிகமானோர் இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றனர். (2 பேதுரு 3:9-15) நாம் ஒவ்வொருவரும் ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவதற்கும்’ அவருடைய பொறுமை அனுமதிக்கிறது. (பிலிப்பியர் 2:12) நியாயத்தீர்ப்பு செய்ய வரும் சமயத்தில் ‘மனுஷகுமாரனுக்கு முன்பு நிற்கும்படிக்கு,’ ‘நாம் எச்சரிக்கையாய் இருக்க’ வேண்டும் என்றும் ‘விழித்திருக்க’ வேண்டும் என்றும் இயேசு சொன்னார்.—லூக்கா 21:34-36; மத்தேயு 25:31-33.
சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து காத்திருங்கள்
17. அப்போஸ்தலன் பவுலின் எந்த வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்?
17 ‘காணப்படுகிறவைகளில் அல்ல, காணப்படாதவைகளில்’ நோக்கியிருக்கும்படி பவுல் தன்னுடைய ஆவிக்குரிய சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். (2 கொரிந்தியர் 4:16-18) தங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பரலோக பரிசை எதுவும் மறைத்துவிடாதபடிக்கு அவர்கள் கவனமாயிருக்க வேண்டுமென பவுல் விரும்பினார். நாம் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி வேறே ஆடுகளாக இருந்தாலும்சரி, நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள மகத்தான நம்பிக்கையை எப்போதும் மனதிற்கொண்டு, நிலைத்திருப்போமாக. நாம் ‘பொறுமையோடே காத்திருந்து,’ ‘கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருப்பதை’ நிரூபிப்போமாக.—ரோமர் 8:25; எபிரெயர் 10:39.
18. நேரங்களையும் காலங்களையும் யெகோவாவின் கையில் நாம் ஏன் நம்பிக்கையுடன் விட்டுவிடலாம்?
18 நேரங்களையும் காலங்களையும் நம்பிக்கையுடன் யெகோவாவின் கையில் நாம் விட்டுவிடலாம். அவருடைய கால-அட்டவணையின்படி, அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றம் ‘தாமதிக்காது.’ (ஆபகூக் 2:3) இதற்கிடையில், தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த புத்திமதி நமக்கு கூடுதலான அர்த்தத்தைக் கொடுக்கிறது. அவர் சொன்னார்: “நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; . . . சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை [“முழுமையாக,” NW] நிறைவேற்று.”—2 தீமோத்தேயு 4:1-5.
19. யெகோவாவின் மக்கள் என்ன செய்வதற்கான காலம் இன்னும் முடியவில்லை, ஏன்?
19 நம்முடைய உயிரும் அயலகத்தாருடைய உயிரும் ஆபத்தில் உள்ளன. பவுல் இவ்வாறு எழுதினார்: “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16) இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கு காலம் மிகவும் குறுகியதாய் இருக்கிறது. சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்காக நாம் மிகுந்த ஆவலோடு காத்திருக்கையில், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை தம்முடைய மக்கள் பிரசங்கிப்பதற்கான யெகோவாவின் நேரமும் காலமும் இன்னும் முடிவடையவில்லை என்பதை எப்பொழுதும் அறிந்திருப்போமாக. அவர் திருப்தியடையும் வரை அந்த வேலையை செய்ய வேண்டும். இயேசு சொன்னபடி, “அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 10 மற்றும் 11-ம் அதிகாரங்களைக் காண்க.
மறுபார்வை
◻ காலக்கணக்குகள் சம்பந்தமாக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் சூழ்நிலைமையோடு எவ்வாறு நம்முடைய சூழ்நிலைமை ஒத்திருக்கிறது?
◻ கிறிஸ்துவின் வந்திருத்தலின்போதுகூட கிறிஸ்தவர்கள் ஏன் ‘தொடர்ந்து விழிப்புடன்’ இருக்க வேண்டும்?
◻ ‘தேவ புத்திரர் வெளிப்படுவதற்காக’ ஏன் மனித சிருஷ்டி ஆவலோடு காத்திருக்கிறது?
◻ ‘நேரங்களையும் காலங்களையும்’ நாம் ஏன் நம்பிக்கையுடன் யெகோவாவின் கையில் விட்டுவிடலாம்?
[பக்கம் 17-ன் படம்]
கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து கிறிஸ்தவர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்
[பக்கம் 18-ன் படம்]
அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் தங்களுடைய விசுவாசத்தை காலக்கணக்குகளின் பேரில் வைக்காமல், யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள்