ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
நற்செய்தியை அறிவிக்கத் தயங்காதீர்
வெனிசுவேலா விரிகுடாவுக்கும் மரகைபோ ஏரிக்கும் ஐரோப்பிய ஆய்வுப்பயணிகள் முதன்முதலில் விஜயம் செய்தபோது ஆழமில்லாத தண்ணீரில் கம்புகளை நாட்டி கட்டப்பட்ட சிறிய கூரை வீடுகள் கரையோரத்தில் கும்பலாக வீற்றிருப்பதைக் கண்டனர். இக்காட்சி இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரை அவர்களுக்கு நினைப்பூட்டியது; அங்கே மக்கள் தண்ணீரின் ஓரங்களில் தங்கள் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். அதன் நினைவாக ஸ்பானிய மொழி பேசிய ஆய்வுப்பயணிகள் இந்த இடத்திற்கு வெனிசுவேலா என்று பெயரிட்டனர்; அதற்கு “குட்டி வெனிஸ்” என்று அர்த்தம்.
இன்று, இந்த அழகிய நாடு மற்றொரு விதமான கட்டட வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது; அது ஒரு ஆவிக்குரிய கட்டட வேலை. அங்கே, யெகோவாவின் சாட்சிகள் பொருத்தமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜ்ய விதையை விதைப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் விளையும் ஆவிக்குரிய அறுவடை, ‘அறுப்புக்கு எஜமானராகிய’ யெகோவா தேவனுக்கு பேரளவு துதியைக் கொண்டு வருகிறது.—மத்தேயு 9:37, 38.
வடமேற்கு வெனிசுவேலாவில் சூல்யா மாநிலத்திலுள்ள ஒரு சபைக்கு வட்டாரக் கண்காணி விஜயம் செய்தார்; அருகிலுள்ள குட்டித்தீவான டாவோஸுக்கு அவரும் அவருடைய மனைவியும் செல்வதற்கு உள்ளூர் சாட்சிகள் ஏற்பாடு செய்தனர். அதிகாலமே படகில் செல்வதற்காக அவர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள்; அப்போது வட்டாரக் கண்காணியின் மனைவி மெரி, படகுத்துறை பணியாளர்களிடம் பேசுவோமா என தன்னோடு ஊழியத்துக்கு வந்த முழுநேர பயனியர் சகோதரியிடம் கேட்டார்; அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார்.
போட் மெக்கானிக் ஒருவரை அணுகி நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை மெரி கொடுத்தார். “கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல்” என்ற அதிகாரத்தை அவரிடம் காண்பித்தார்; அந்தத் தலைப்பு போட் மெக்கானிக்கை மிகவும் ஈர்த்தது. இந்த புத்தகத்தின் மூலம் தன் வீட்டிலேயே பைபிளைப் படிக்கலாம் என்று மெரி அவருக்கு விளக்கினார். அவர் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டார்; அவருடைய வீட்டிற்கு சென்று அவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிறிது காலத்திற்கு பிறகு, அப்பகுதியில் விசேஷ ஒருநாள் மாநாடு நடைபெற்றது. ஸ்பானியரான போட் மெக்கானிக் நாவா, அவருடைய மனைவி, இரண்டு இளம் மகள்கள் ஆகியோரை மெரி பார்த்தபோது பெரும் ஆச்சரியமடைந்தார்! குடும்பமாக பைபிளைப் படிப்பது பிரயோஜனமாக இருக்கிறதா என அவருடைய மனைவியிடம் மெரி கேட்டார். அவளுடைய பதில் இன்னும் ஆச்சரியத்தை தந்தது.
“நாங்க சத்தியத்தை படிக்க வாய்ப்பு கிடைச்சதுக்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்றேன்” என்று அவள் சொன்னாள். பிறகு இவ்வாறு விளக்கினாள்: “நீங்க என் கணவர்கிட்ட பேசின சமயத்தில், அவர் என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு வாழத் தொடங்கியிருந்தாரு. அதோடு பயங்கர குடிகாரராவும் இருந்தாரு. சில சமயம் குடிச்சுட்டு வந்து கத்தி கூச்சல்போட்டு அடிப்பார்; இது தீவிலிருந்த எங்க ஊர்க்காரங்களுக்கு சுத்தமாக பிடிக்காது. அதோட மாயமந்திரத்திலயும் ஈடுபட்டிருந்தாரு. இருந்தாலும் பைபிள் படிப்பிலிருந்து அவருக்கு கிடைச்ச அறிவினால ஆளே அடியோட மாறிட்டாரு. அவரோட கெட்ட பழக்கங்கள் எல்லாத்தையும் இப்ப விட்டுட்டாரு. அவரோட அப்பாம்மா கத்தோலிக்கருங்க. இவர்கிட்ட ஏற்பட்ட மாற்றத்த பாத்து அவங்களே அசந்துட்டாங்க. இவரு இப்ப பொறுப்புள்ள கணவனா, அப்பாவா இருக்கிறது அவங்களுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குது.”
நாவா 1996-ல் முழுக்காட்டப்பட்டார்; இப்போது முழுநேர ஊழியராக சேவை செய்கிறார். அவருடைய மனைவி ஜெனி 1997-ல் முழுக்காட்டுதல் பெற்றார். இந்த போட் மெக்கானிக்கின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களால் கவரப்பட்ட அந்த டவுனின் மேயர் தனக்கும் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டார். படகுக்காக வரிசையில் காத்திருந்த அந்தக் காலை நேரத்தில் நற்செய்தியை அறிவிக்க தயங்காததன் காரணமாக அந்தச் சகோதரிகள் என்னே ஆனந்தம் அடைந்தனர்!
[பக்கம் 7-ன் படங்கள்]
போட் மெக்கானிக்கோடு நற்செய்தியை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி பொங்கும் விளைவை தந்தது